ஞாயிறு, 26 ஜூன், 2011

இரத்த பூமி (பகுதி 2)


                                 

அடுத்த நாள் கோவையின் அப்பா ஊரில் இருந்து வந்தார். அலுவலகத்தில் வார்டன்களை சந்தித்தார். சில பாதிக்கப்பட்ட வார்டன்கள் பழைய கதைகளை விளக்கிக்கொண்டிருந்தார்கள். கோவை கையை கட்டிஅமைதியாய் நின்று கொண்டான். இது போன்ற விசாரணை நாட்களில் எப்போதும் தலைக்கு எண்ணெய் வைத்து உச்சியெல்லாம் எடுத்து சீவி விடுவான். எல்லாம் முடிந்து "பிரகாஷ் ஒரு வாரம் வெள்ள உடுப்பு போட்டு "punishment serving" செஞ்சிருப்பா.." என ஒழுங்கு முறை கமிட்டி முடிவு செய்தது. மூன்று வேளைகளும் மெஸ்ஸில் முதல் Batchஇல் சாப்பிடுவோருக்கு வெள்ளை உடை அணிந்து சாப்பாடு பரிமாற வேண்டும். அதுவே தண்டனை. போகும் போது கோவையின் அப்பா எதுவும் பேசாமல் ஐந்நூறு ரூபா பணத்தை எடுத்து ,"இந்தாப்பா..அந்த ஜென்மத்துக்கு கொடுத்துரு.." என நாரையனிடம் கொடுத்து விட்டுப்போனார்.


எல்லோரும் "ElectriCity" கிளாஸ் முடிந்து, நடந்து தமிழ் வகுப்புக்கு போய்க்கொண்டிருந்தார்கள். "நா..என்னென்னமோ எதிர் பாத்தேன் கடைசி சப்புன்னு போயிருச்சுடா சும்பக்" என்றான் பூச்சி.

"ஏன்...அவன அம்மணமா ஓட விடுவாய்ங்கன்னு பாத்தியா"

"இல்லடா போயும் போயும் "Punishment Serving" போட்டு கோவைய அசிங்க படுத்துறாய்ங்க...அதும் அவனோட அப்பா என்னடான்னா நாரையன்லாம் ஒரு நல்லவன்னு அவய்ங்கிட்ட காச கொடுக்கிறாரு..."

"போன தடவ நாரையனோட அப்பா வந்தப்ப நம்ம கோவைகிட்ட தான காச கொடுத்தாரு..உலகம் வட்டம் தான் போல பூச்சி.."

எல்லாத்தையும் கேட்டுக்கிட்டே வந்த நாரையன் முறைத்தான்.இவர்கள் அனைவரும் Bsc Physics படிக்கிறார்கள்.கல்லூரியில் ஒவ்வொரு  Departmentக்கும் ஒரு அடைமொழி உண்டு. "Golden" chemistry, "Excellent" mathematics என ஆளாளுக்கு ஒரு பெயர் வைத்துக்கொள்வார்கள். Physicsல்  படித்த முன்னோர்கள் எந்நேரமும் படித்துக்கொண்டே திரிந்ததாலும்,அதிகம் பேசாததாலும் அவர்களை  கல்லூரியில் எப்போதும் "Psycho" physics என்று கேலி செய்வார்கள்.அந்த களங்கத்தை துடைக்க கோவை,நாரையன் போன்ற பெருந்தலைவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.பத்துமுறை பல் தேய்த்துவிட்டு பேசினாலும் அவன் வாய் நாறும் என்பதால் அவன் நாரையன். இருளுக்கும் அவனுக்கும் இரண்டு வித்யாசம் கண்டுபிடிப்பதே அரிது என்பதால் அவன் கருவாயன். நாலடியில் குழந்தை போல் இருப்பதால் அவன் பூச்சி. கிட்டத்தட்ட எல்லாருக்குமே ஒரு புனைப்பெயர் உண்டு. வார்டன்களுக்கும் ஆடுவெட்டி,நாய்க்கொல்லி,விடாதுகருப்பு என பல பெயர்கள் புழக்கத்தில் இருந்தன.

கங்கா,சும்பக்,கருவாயன் முதல் வரிசையிலும் மற்றவர்கள் எல்லோரும் பின்வரிசையிலும் அமர்ந்து கொண்டார்கள். தமிழ் வகுப்பு ஆரம்பமானது. நெற்றியில் சந்தனத்துடன் வந்திருந்தார் தங்கவேலு அய்யா. எப்போதும் உச்சஸ்தாயில் தான் பேசுவார். வகுப்பை தொடக்கினார்.


"தம்பிகளா..வர்ற மூனாம் தேதி நம்ம "Prayer Hall"ல அந்தர்யோகம் நிகழ்ச்சி இருக்கு.எல்லாரும் மறக்காம கலந்துக்கணும்...சுவாமி ஸ்ரீமத் பரமானந்த மகாராஜ் உங்களோட ஆன்மிக கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுவாங்க. சுவாமிஜியோட அருளுரை கேக்க கொடுத்து வச்சிருக்கனும்....உங்களுக்கு எதாவுது ஆன்மிகக்கேள்விகள் இருந்துச்சுனா இப்பவே ஒரு பேப்பர்ல எழுதி கொடுங்க."

                                                                                                                         

                                                              


மாணவர்கள் பெரிதாய் உற்சாகம் அடைந்ததாய் தெரியவில்லை. சில பேர் கேள்விகளை எழுதிக்கொடுத்தார்கள்.அய்யா வந்த கேள்விதாள்களை இடது ,வலது பக்கமாய் அடுக்கிக்கொண்டார்.திடீரென ஜெகதீசன் கொடுத்த கேள்வியை படித்த அய்யா உற்சாகமானார். 

"டேய் தம்பிகளா.. இந்த கேள்விய கேளுங்கடா...நம்ம ஜகதீசன் கேட்டிருக்கான். இதுக்குப்பின்னாடி அத்வைதம்,த்வைதம் லாம் இருக்கு..ஆனா கேள்வி வேடிக்கையா இருக்கும்..."ஜகதீசன் பெருமையாய் முன்னாடி நின்றிருந்தான்.

அய்யா தொடர்ந்தார். "சுவாமிஜி.. கோடி நமஸ்காரங்கள்.பிள்ளையாரோ கனமானவர். எலியோ சின்ன உயிரினம். எலி எப்படி பிள்ளையாரின் வாகனமாக 
முடியும்??...". கூட்டம் கொல்லென சிரித்தது.

"தம்பிகளா கேள்வி வேடிக்கையா இருக்கும்..இதுக்கு பின்னாடி இந்துமதத்தின் உருவவழிபாட்டு சித்தாந்தங்கள் இருக்கு.." என்றார் அய்யா. கருவாயன் சும்பக் காதில் "டேய் மாப்புள நாமளும் ஒரு கேள்வி எழுதி கொடுக்கணும்டா.." என்றான்.

பின்னாடி இருந்து நாரையன் "முருகனோட மூனாவுது பொண்டாட்டி எங்க இருக்குன்னு கேளு" என்றான் மெதுவாக.

"டேய் நாரையா..வெளாட்டு மயிரா பேசாத ...அவரு உன் சூ%&ல சூலாயுதத்த எறக்க போறாரு.. ஜென்மத்துக்கும் அரியர கிளியர் பண்ண மாட்ட.." .கருவாயன் காட்டமானான்.

சும்பக் கொஞ்சம் யோசித்து விட்டு பேப்பரில் எழுதினான். "சுவாமிஜி... கருணையே கடவுள் என்கிறோம். அன்பே சிவம் என்கிறோம். ஆனால் ஆடுகோழிகளை வெட்டுகிறோம்.அலகு குத்துகிறோம்.தீ மிதிக்கிறோம். நம்மை வருத்தி இறைவனை அடைவதை விட ,நம்மை உயர்த்தி இறைவனை அடையலாமே???" கருவாயன் படித்து பார்த்து விட்டு "மாப்ள சூப்பர்...நா எம்பேர போட்டு கொடுத்திர வா" என்றான். சும்பக் தலையாட்டினான். 

அய்யா படித்து பார்த்தார்.அவர் கண்ணெல்லாம் சிவந்து விட்டது.தாளை இரண்டாக கிழித்தார். "ஏன் ..வேற எந்த மதத்துலயும் இந்த மாதிரி நம்பிக்கை இல்லயா ..அங்க போய் கேளு.............கேளு.... கேக்க மாட்ட..ஏன்னா அவன் கூட்டமா சேர்ந்து விரட்டுவான்...நாம தான இளிச்சவாயங்க...அதான் இங்க வந்து வாலாட்டுற.." கருவாயன் தலை குனிந்து நின்ருந்தான். 

"அதுக்கு நாங்கேட்ட கேள்விய கேட்ருந்தாகூட அந்தாளு இவ்வளவு கோவிச்சிருக்க மாட்டார்" என்று முனு முனுத்தான் நாரையன். "போய் உக்காருடே.." என கருவாயனை அனுப்பினார். எல்லொரும் அமைதியாய் இருந்தார்கள். அய்யா முகம் மூர்க்கமாய் இருந்தது. அதற்கு மேல் வேற எதையும் பேசாமல் புத்தகத்தை எடுத்து செய்யுள் பகுதியை நடத்த ஆரம்பித்தார்.

பாடம் ஆரம்பமானவுடன் அய்யா வழக்கம்போல் பேச ஆரம்பித்தார். ஊடே சித்தர்களை பற்றி பேச்சு போய்,சித்த மருத்துவம் பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். 

"அதுல அளப்பெரிய விசயங்கள் இருக்குடா. ஏன் நம்ம மாட்டுச்சாணம் இருக்கே அது பெரிய மருந்துடா...எல்லா புண்களுக்கும் போடலாம். நெற்றிப்புண்...கைல வர்ற கைப்புண், தலைல வர்ற புண்..."என அய்யா சொல்லிக்கொண்டிருக்கயிலையே சும்பக் குனிந்து "அய்யா வாய்புண்ணுக்கு என்னய்யா செய்றது.." என்றான். மொத்த வகுப்பும் சிரித்தார்கள்.கருவாயன் எதோ வாழைப்பழ நகைச்சுவை பார்த்தவன் போல பயங்கரமாய் சிரித்தான்.அய்யா மீண்டும் காளியானார்.கண்கள் சிவந்தது.சிரித்துக்கொண்டிருந்த கருவாயனை பார்த்ததும் அய்யா கோபம் ஆறாக பெருகியது. சொன்னது அவனாகத்தான் இருக்குமென நினைத்து கையில் இருந்த மர "Duster"ஐ வைத்து கருவாயனை மொத்தி எடுத்தார். 

"அய்யா நா சொல்...." என கருவாயன் வாயை திறக்கையில். "வாய மூடு .." என அய்யா சொல்லி சொல்லி அடித்தார்.அந்த ஆக்சன் சீன் ஒரு நிமிடம் தொடர்ந்தது. அடித்து முடித்து விட்டு அய்யா மூச்சு வாங்கினார். கருவாயனுக்கு மூஞ்சு ஆங்காங்கே வீங்கி இருந்தது அப்பட்டமாய் தெரிந்தது.வகுப்பு முடிந்து அய்யா வெளியேறினார். கருவாயன் கோபத்தை அடக்க முடியாமல் "டேய் சும்பக்கூ& யானே..." என  கத்திக்கொண்டு சும்பக்கை விரட்டினான். இருவரும் மைதானத்தில் ஓடினார்கள்.


                                                                                                                   
                                           இப்படியாக இவர்கள் வாழ்க்கை ஓடியது. காலம் கண்டபடி சுத்த ஓவ்வொரு வரும் ஒவ்வொரு திசைகளில் கிடக்கிறார்கள். எட்டு வருடங்கள் ஓடி விட்டது.கடந்த மே மாதம் கங்காவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது. கருவாயனை தவிர எல்லோரும் வந்திருந்தார்கள்.அவன் மும்பையில் இருந்ததால் வர முடியவில்லை. கோவை தற்சமயம் ஒரு புகழ்பெற்ற ஆங்கில பத்திரிக்கையில் நல்ல பதவியில் இருக்கிறான். திருமணமாகி இரண்டு ஆண்டு ஆகிறது. நாரையன் வாத்தியாராக உள்ளான். "நீ எங்களுக்காகவா படிக்குற..." "ஒழுக்கம் தான் ரொம்ப முக்கியம்" போன்ற வசனங்களை மாணவர் மத்தியில் அடிப்பதாய் கேள்வி. இது தவிர ஒரு குழந்தையின் தகப்பன் என்கிற கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். பூச்சி சென்னையில் வேலை பார்க்கிறான். நிறைய வளர்ந்து விட்டான். கொஞ்சம் மீசையும் வளர்ந்து 
விட்டது. "என்ன பூச்சி..வயசுக்கு வந்துட்டியா " என கேலி செய்தார்கள். சும்பக்கும் பெரிதாய் மாறவில்லை. அவனும் கங்காபோல  கணினியை தட்டுகிறான். பொழுது போகாத நேரங்களில் ப்ளாக் எழுதுகிறானாம்.

இதோ அடுத்தடுத்த நண்பர்களின் கல்யாண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். பழைய அரட்டையை மீண்டும் அடிப்பார்கள்.கதைகள் பேசுவார்கள்.கடந்த காலங்கள் எப்போதும் அழகானதாகவே இருக்கிறது.அடுத்த முறை சந்திக்கையில் கருவாயனிடம் போன் பேசும் அந்தப்பெண் யாரென விசாரிக்க வேண்டும் என முடிவாயிருக்கிறது.                                                                                                                 (தற்சமயம் முற்றுகிறது)வியாழன், 23 ஜூன், 2011

இரத்த பூமி (பகுதி 1)

                                                          
                                                                                                      


சினிமாக்களில் பார்ப்பது போல கல்லூரிகள் நிஜத்தில் இல்லை தான். ஆனால் இந்தக்கல்லூரி நெறிகெட்டுத்தெரியும் சமுதாயத்தால் நினைத்துக்கூட பார்க்க முடியாத கல்லூரி. ராமகிருஷ்ண மடத்தால் நடத்தப்படுகிறது.மாணவர்கள் எல்லோரும் கண்டிப்பாக விடுதியில் தங்கிவிட வேண்டும் (Residential). தினமும் காலையில் 4.45க்கு எழுதல். 5.30 மணிமுதல் Study hour.பிற்பாடு கட்டாய உடற்பயிற்சி. தினமும் மூன்று வேளை கூட்டுப்பிரார்த்தனை. நாடே மறந்துபோன கைக்குத்தல் அரிசியில் தான் சாப்பாடு. திங்கள்,புதன்,சனி களில் வெள்ளை வேஷ்டி சட்டை தான் அணிய வேண்டும்.காலில் செருப்பு அணிதல் கூடாது. இவ்வாறு 'wassup...yo' என அலைவோரை சுளுக்கெடுப்பதற்காகவே ஏகப்பட்ட விதிவகைகள் அந்த கல்லூரியில் உண்டு.இன்றளவும் சோழவந்தானில் இயங்கி வரும் அந்த கல்வி நிலையத்தின் பெயர் விவேகானந்தா கல்லூரி. மதுரை ஏரியாக்களில் சேட்டை செய்யும் பிள்ளைகளை "ஒழுங்கா இருக்கியா..இல்ல சாமியார் காலேஜ்ல சேத்து விடவா" என பெற்றோர்கள் கொலை மிரட்டல் விடுப்பார்கள். ஆக இது ஒரு ஆண்கள் கல்லூரி என்பதை தனியாக வேற சொல்லத்தேவை இல்லை.

சும்பக் அந்தக்கல்லூரியில் ஒரு வருடத்தை தள்ளி இருந்தான். கங்காவும் அவனும் மெஸ் ஹாலில் உட்கார்ந்து மால்ட் குடித்துக்கொண்டிருந்தார்கள். மால்ட் என்பது ஒரு மாதிரியான தானியச்சாறு. விடுதியில் டீ,காபி கிடையாது.அதைத்தான் கொடுப்பார்கள்.கங்கா மாடு ஊரத்தண்ணியை உறிஞ்சி குடிக்கும் காட்சியை ஞாபகப்படுத்தும் வண்ணம் குடித்துகொண்டு இருந்தான்.கொஞ்சம் ஒல்லியாய்,கண்ணாடி அணிந்து இருப்பான். ஒரே வேட்டியை ஒரு வாரம் கட்டுவதை தவிர அவனிடம் வேறு கெட்ட பழக்கங்கள் கிடையாது.பாத்ரூம் போகும் நேரங்கள் தவிர மற்ற நேரமெல்லாம் சும்பக்கும் கங்காவும் ஒன்றாகவே சுற்றுவார்கள்.சும்பக்கின் உண்மையான பெயர் வேற ஏதோ ஒன்று.ஆனால்அவன் அடிக்கடி உபயோகப்படுத்தும் ஒரு கெட்ட வார்த்தையின் முதல் பகுதி அவனுக்கு காலப்போக்கில் பெயராகிப்போனது.திடீரென மெஸ்ஸில் முதலாமாண்டு மாணவர்கள் மத்தியில் ஒரே சலசலப்பு. சில சீனியர் விஷமிகள் "மால்ட் குடித்தால் ஆண்மைக்குறைவு ஏற்பட்டுவிடும்" என முதலாமாண்டு மாணவர்கள் மத்தியில் வதந்தியை பரப்பியுள்ளனர். உச்சியெடுத்து தலை சீவிய ஒரு முதலாமாண்டு சின்னபையன் கங்கா அருகில் வந்து அமர்ந்தான்.

"அண்ணா..மால்ட் குடிச்சா அப்டி ஆயிருமாண்ணா...அதான் சாமிஜிலாம் குடிக்குறாங்களாமே..."

கங்கா டம்ளரை வைத்துவிட்டு அவன் காதருகே சென்று, "அதெல்லாம் சும்மாடா.. இவன்லாம் ஒருவருஷமா குடிக்குறான்...போன மாசம் இவன்பொண்டாட்டி ஒரே பிரசவத்துல பத்துப்பிள்ளை பெத்தா தெரியுமா... " என சும்பக்கை காட்டி சொன்னான். 

"விளையாடாதீங்கண்ணா..."

"ஆமா இவரு எங்க மாமா பொண்ணு..விளையாடுறோம்...ஆளைப்பாரு..ஹார்லிக்ஸ் விளம்பரத்துல வர பப்பா மாறி இருந்திட்டு ஒனக்கு இந்தக்கேள்வி தேவையா??.." என்றான் கங்கா. இருவரும் கொஞ்ச நேரமாய்  சத்தமாய் சிரித்தார்கள். அந்த முதலாமாண்டு பச்சி முறைத்துக்கொண்டே பறந்தது. கொஞ்ச நேரத்தில் சும்பக் கங்காவிடம்," டேய் வென்று..சாயங்காலம் அஞ்சு மணிக்கு நம்ம கோவைக்கு ஹாஸ்டல் office ரூம்ல Enquiry தெரியும்ல..என்னாச்சுன்னு பாப்போம்.." என சொன்னான். இருவரும் எழுந்து Office ரூம் நோக்கி நடந்தனர். பிரகாஷ் இவர்களுடன் ஒன்றாக சேர்ந்து இரண்டாமாண்டு Physics படிக்கும் மற்றொரு மனிதருள் மாணிக்கம். கோயம்பத்தூரில் இருந்து வந்து படித்ததால் அவனை எல்லாருமே கோவை என செல்லமாக கூப்பிடுவார்கள். சாயங்காலம் பிரார்த்தனைக்கூடத்தில் எல்லோரும் இறைவனை துதித்துக்கொண்டிருக்க இந்த கோவை மட்டும் சிம்ரன் ஏடாகூடமாய் குனிந்ததை அட்டைப்படமாய்கொண்ட ஆனந்தவிகடன் புத்தகத்தை ஒளித்து வைத்து படித்துகொண்டிருந்தான். அதை லாவகமாக "கருத்து" காளிமுத்து என்னும் வார்டன் பிடித்து விட்டார். அதற்காகத்தான் சாயங்காலம் கோவைக்கு விசாரணை. ஆபீஸ் ரூம் வெளியிலே நாரையன்,கருவாயன்,பூச்சி எல்லோரும் நின்றிருந்தனர். 

விடுதியில் Remark நோட் எனப்படும் ஒரு புத்தகம் இருந்தது. எல்லா மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய தகவல் புத்தகம் அது. ஏதேனும் குற்றம் செய்தால் அந்தப்புத்தகத்தில் அது பதிவேற்றப்படும். மாணவர்களின் நடத்தையை கண்காணிக்க காலங்காலமாய் விவேகானந்தா கல்லூரியில் பயன்படுத்தும் முறை. " வாடா தம்பி.." என கருத்துக்காளிமுத்து கோவையை அருகில் அழைத்தார். கோவையின் remark புத்தகத்தின் பக்கம் திறக்கப்பட்டது. கோவை சினிமா நடிகர் ராஜ்கிரண் போல் விரைப்பாய் நின்றிருந்தான். தூக்கு மேடையில் பகத்சிங்குக்கு இருந்த அதே பெருமிதம் அவன் முகத்தில் இருந்தது. "வாட்டர் டேங்க்கில் ஏறி குளித்தான். கிச்சனுக்கு வெளியே சிறுநீர் கழித்தான். மாணவர்களுக்கு பீடி சப்ளை செய்தான். டாய்லெட்டில் தவறான படங்கள் வரைந்தான்.." என தேதி வாரியாக Remark நோட் 
கோவையின் வரலாற்றை சொல்லியது. எல்லாத்தையும் படிச்சு முடிச்சிட்டு காளிமுத்து கோவையிடம் "ஓ அது நீ தானா " என்றார். பின்பு ரகசிய விசாரணை என்பதால் கதவுகள் மூடப்பட்டது.

"ஏன்டா இந்த தடவ டிஸ்மிஸ் பண்ணிருவாய்ங்கனு பேசிக்கிறாங்க.. அவ்ளோதானா..' என்றான் கருவாயன்.

"டேய் இது சப்ப மேட்டரு...ஸ்ரீதரு மண்டைய உடைச்சப்பவே தப்பிச்சிட்டான்..' என்றான் சும்பக்.கதவு திறந்தது. கோவை சோகமான முகத்துடன் அவன் அறைக்கு நடந்தான். மொத்த நண்பர் கூட்டமமும் அவன் பின்னால் வந்தது. "டேய் என்னாச்சுடா..." என சும்பக் தான் முதலில் கேட்டான்.கோவை நகத்தை கடித்துக்கொண்டே 'அப்பாவை கூட்டிட்டு வரச் சொல்லிட்டாய்ங்க டா.." என்றான். 

"அடிங்கோ&*&*....நா என்னமோ ஏதோனு பயந்துட்டேன்..இதென்ன ஒனக்கு புதுசாடா வெளக்கெண்ண..." என நாரையன் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். கோவை அவன் பெட்டியில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான். எல்லோரும் குழப்பமாய் பார்க்க, கங்கா அதை வாங்கி சத்தமாய் படித்தான்.

"அன்புள்ள பிரகாசுக்கு...

அப்பா எழுதிக்கொள்வது.நாங்கள் அனைவரும் இங்கு நலம். உன்னுடைய கடிதம் கிடைத்தது. பரீட்சைக்கு Fees கட்ட வேண்டும் என பணம் கேட்டிருந்தாய். இந்த செமஸ்டர்க்கு மட்டும் இதுவரை நாம் ஆறு முறை Fees கட்டிவிட்டோம் என்பதை உனக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். இது வரை நாம் Fees கட்டிய பணத்தையெல்லாம் சேர்த்து வைத்திருந்தால், நாம் ஒரு unversityயே கட்டியிருக்கலாம் என்பதையும் நீ அறிவாய். நாம் சரியாகத்தானே மெஸ் பில் கட்டுகிறோம் அவர்கள் ஏன் சாப்பாட்டில் உப்பு போடுவதில்லை??...போன வருடத்தில் மட்டும் உன்னோட கல்லூரியில் என்னை ஏழு தடவை அழைத்திருந்தார்கள்.என் அலுவலக நண்பர்கள் கூட 'பேசாம மதுரை to கோயம்பத்தூர் பஸ் பாஸ் எடுத்திருங்களேன்' என கேலி செய்தார்கள். உனக்கு ஏழரைச்சனி மார்கழியுடன் முடிந்து விட்டது என தங்கராசண்ணன் சொன்னார். அதனால் தானோ என்னவோ இந்த வருடத்தில் உன் கல்லூரியில் இருந்து ஏதும் அழைப்பு வரவில்லை.இது தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்."

சிரித்தால் கோவையின் வாயில் சூடான வார்த்தைகள் வந்துவிடும் என்பதற்காக எல்லோரும் முட்டிக்கொண்டு நின்ற சிரிப்பை அடக்கிக்கொண்டார்கள். நாரையன் கோவையை தோள் தொட்டு "ஜோசியம் பொய்யின்னு நிருபிக்க நீயும் எவ்வளவு போராடுற..??"என்றான்.  எல்லாம் ஆர்ப்பாட்டமாய் சிரிக்க ஆரம்பிக்க,நாரையனின் மர்ம தேசத்தில் கோவை Football ஆடினான்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                -                                                                                                                                                                ---தொடரும் 
புதன், 15 ஜூன், 2011

Case நம்பர் 4771


(ஒரு எந்திரப் பெண் குரல்) இது ரிஷி Memory Trimmers கார்ப்பரேட் நிறுவனத்திற்கு சொந்தமான ஒலிக்கோப்பு. Case நம்பர் 4771 ல் குறுப்பிடப்பட்ட பங்குதாரர்களை தவிர்த்து வேறு யாரும் இந்த ஒலிப்பேழையை உபயோகிப்பது தெரிந்தால் அவர்கள் மீது "Corporate Neural act:2065" சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மெல்லிய இசை ஐந்து வினாடிகள் தொடர்கிறது.

(குரல் தொடர்கிறது) This is post service feedback of case no:4771. இது கேஸ் நம்பர் 4771 ன் சேவைக்குப்பின் கேட்டறிதல் நிகழ்வு.

ஒரு புல்லாங்குழல் இசையுடன் 'நினைவை வென்று உலகில் நின்று ....' என்று RMTன் (Rishi memory Trimmers) கார்பரேட் பாடல் பாடி முடிந்தது.

டாக்டர் R.V சுதீப் :
நம் ஆனந்தங்கள்,சங்கடங்கள்,பழக்க வழக்கங்கள் என எல்லாமே மூளையின் ஏதோ ஒரு முடிச்சுக்குள் ஒளிஞ்சிருக்கு. உதாரணமா 'அம்மா' னு உள்ளுக்குள் நினைக்கிறோம்னு வச்சுக்கோங்க.அவளுடைய உருவம்.குரல்...incidentsனு எல்லாம் நமக்கு ஞாபகம் வருவதற்கு காரணம் இந்த மூளையின் Cortex பகுதி. அம்பது வருசத்துக்கு முன்னாடி எதோ ஒரு poet 'பிரிவு கொடிது..நினைவுகள் அதனினும் கொடிது'னு சொன்னது எவ்ளோ உண்மை. நமக்கு இந்த ஞாபகங்கள் தருகிற தொல்லைகள் இருக்கே 'its terrible..isnt it'. இந்த 2070 வருசமா மனிதனுக்கு இருக்கிற முக்கிய பிரச்சனை இது.அதுக்கு ஒரு வரப்பிதா...சாரி வரப்பிரசாதம் தான் இந்த Human Memory Clearance (HMC). கடவுளுக்கும் மனுஷனுக்கும் உள்ள தூரத்தை குறைக்கும் அறிவியல் கண்டுபிடிப்புனு சிலர் கிண்டல் பண்றதுலேயும் உண்மை இல்லாமல் இல்லை. விஷயம் என்னனா Cortex ல இருந்து தகவல்களை சுமந்துக்கிட்டு போகிற Neuron ஏற்கனவே இருக்கிற தகவல்களை சரி பார்த்து Associate பண்ணுவதே ஞாபகங்கள். நாங்க இந்த மேப்பை கண்டுபிடிச்சு அதை சில வேதியல் திரவியங்களின் உதவியோடு நிரந்தரமாய் நீக்கி விடுவோம். seems complex right?? but not actually... உதாரணமா செத்துப்போன உங்க நாயை மறக்கனும்னு வச்சுக்கோங்க. நாங்க உங்க தலையில் சென்சொர்களை பொருத்தி,உங்கள் நாயை ஞாபகப்படுத்துகிற அதனுடைய உடமைகளை உங்களிடம் கொடுப்போம். நீங்கள் அதனுடைய நினைவுகளை திரட்டும் போது,எங்களுக்கு அதிர்வலையின் மூலமாய் உங்கள் Neuron,Axon களின் உதவியோடு அந்த "Mapping Mechanism' புலப்பட்டு விடும்.பிற்பாடு அழிக்கப்படும். நீங்கள் விழித்து எழுந்து சந்தோசமாய் வீட்டுக்கு போய்விடலாம்.அது ஒரு மறந்த கனா போல. இந்த கேஸ் நம்பர் 4771, என்னோட பதிமூனாவது Assignment. 'Went Really well'. இப்போ ஆஷிகா ரொம்ப நல்ல இருக்காங்கனு கேள்வி பட்டேன். அவுங்க பிரதர் சொன்னாரு.


ஆஷிகா :
எப்டி இருக்கேனா ... நீங்களே பாத்து சொல்லுங்க ...ஹஹா.. ஒரு சின்ன Europe Tour போய் அங்கவுள்ள சேரிகளையெல்லாம் பாத்துட்டு வரதா பிளான்..பாக்கலாம்... போன வாரம் ரெண்டு பியர் சாப்டிட்டு "Happy Newyear 2070" னு நானும் தன்யாவும் கத்திக்கிட்டு பைக்ல போனோம்... பைக்ல இருநூற்று எழுபது தாண்டுனவுடனே தன்யா கதறிட்டா...She is like a pain in the ass..ஹஹா ..ஆனா அவ ரொம்ப talented..தமிழ் எழுதக்கூடத் தெரியும்னா பாத்துக்கோங்க..


வருண் :
நா ஆஷியோட தம்பி. அக்காவும் பிரபாவும் அப்பிடி ஒரு pair.ரெண்டு பெரும் சேர்ந்து நின்னா எனக்கே அவ்ளோ பொறாமையா இருக்கும். மூணு வருஷமா ஒண்ணா தான் இருந்தாங்க.அடுத்த வருஷம் கொழந்த பெத்துகிறதா கூட முடிவு பண்ணிருந்தாங்க,அதுக்குள்ளேயும் இப்படி ஒரு ஆக்சிடென்ட். அதுவும் பிரபா ரொம்ப ஜோவியல் வேற. எந்நேரமும் ஜோக் பண்ணிட்டே இருப்பான். அவன மார்சுரில பாத்துட்டு ஆஷி வீல்னு கத்தி அழுதப்போ நானும் அழுதிட்டேன். அவனோட சட்டைய வச்சிக்கிட்டு ஒரு மாதிரி யார் கூடயும் பேசாம ஒரு மாசமா இருந்தாள். அவளோட "ஆஸ்மா" Tablets கூட சாப்ட மாட்டேன்டா. எதாவுது பண்ணிப்பாளோனு பயந்தப்போ தான் RMT ad பாத்தோம். சும்மா try பண்ணலாமேனு தான் வந்தோம். ஆனா இது உண்மையிலேயே அற்புதம்..இப்போ எங்க ஆஷி மறுபடியும் பழைய ஆஷி. ரொம்ப ஜாலியா life என்ஜாய் பண்றா. போனவாரம் ரவினு ஒருத்தன் ப்ரபோஸ் பண்ணினானாம்,யோசிச்சு சொல்றேன்னு சொல்லிருக்காளாம். Im Happy...

தன்யா(ஆஷிகாவின் தோழி):

இந்த HMC பத்தி கேள்விப்படிருந்தாலும், நேர்ல பார்க்கிறப்போ ஆச்சர்யப்படாம இருக்க முடியல. ஒரு மாசத்துக்கு முன்னாடி வரையும் என்ன ஆவாளோனு நாங்க பயந்துக்கிட்டிருந்த ஆஷி,இன்னைக்கு ரொம்ப சந்தோசமா வாழ்ந்திட்டிருக்கா. இந்த மூணு வருஷம் பிரபா கூட இருந்த எதுவுமே அவளுக்கு ஞாபகம் இல்லை. போன வாரம் அவ என் வீட்டுக்கு வந்திருந்தப்போ,பழைய ஆல்பம் பார்த்துக்கிட்டு இருந்தாள். பிரபாவோட நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நிக்குற போட்டோவ பார்த்துட்டா. நான் பயந்துட்டேன். அவளாவே " யாருடி இவன் எனக்குத்தெரியாம...உன்னோட பாய் பிரண்டா...Smart..ஆளுக்கு 50/50" னு சொல்லிட்டு கண்ணச்சிமிட்டி சிரிக்கிறா...என்னால கண்ணீரை கட்டுப்படுத்த முடியல தெரியுமா... அப்போ தான் பிரபா முழுசா செத்துப்போனதா உணர்ந்தேன். எது எப்படியோ she is happy
these days... ரொம்ப சந்தோசம்.தாரா (வருணின் காதலி):

ஆஷி திரும்பவும் டென்னிஸ் ஆடுறா. மாசத்துக்கு மூணு தடவ எதாவுது ட்ரிப் அடிக்குறா. எங்ககிட்ட வந்து ஏன் டல்லா இருக்கீங்கனு கேட்டு adviseலாம் பண்றாள். lookslike she is back.நேத்துகாலைல சிரிச்சிக்கிட்டே என்கிட்ட வந்து "நைட் ஒரு கனவு" என்றாள் ... என்னதுனு கேட்டேன். ஏதோ ஒரு உருவம் வந்து விசில் அடிச்சுக்கிட்டே அவள பார்த்து கண்ணடிச்சதாம்... உருவம் சரியா தெரியலேன்னு சொன்னா... 'ஒரு வேளை அந்த ரவியா இருப்பானோ' னு என்கிட்ட வெட்கப்பட்டுகிட்டே கேட்டாள். எனக்கு ஒரே ஷாக். எனக்குத்தெரியும் அது யாருன்னு. அது யாரோட ஸ்டைல்னு... Somehow i believe பிரபா அவளுக்கே தெரியாம அவளுக்குள்ள ஒளிஞ்சிட்டு தான் இருக்கான்னு நினைக்குறேன்..


மீண்டும் புல்லாங்குழல் இசையுடன் 'நினைவை வென்று உலகில் நின்று ....' என்று RMTன் கார்பரேட் பாடல் தொடங்குகிறது.

வெள்ளி, 10 ஜூன், 2011

வாசகர் கேள்வி-பதில்
நம்ம வலைத்தளத்தில் கேள்வி பதில் பகுதிக்கு கேள்வி அனுப்புங்கன்னு சொன்னாலுஞ்சொன்னோம்,தபால் நிலையங்களிளெல்லாம் ஒரே தள்ளு முள்ளு. உலகம்முழுவதும் கேள்விக்கணைகள் ஏவுகணைகள் போல் வந்து இறங்கியிருக்கின்றன. எத்தியோப்பியாவில் இருந்துகூட ஏழு சாக்கில் கேள்விகள் வந்திருக்கின்றன. மூட்டை மூட்டையாய் கடிதங்களை தூக்கிவந்தே அந்த தபால்காரருக்கு 'சிக்ஸ் பேக்' வந்து விட்டது. இந்த மக்களின் அறிவுப்பசிக்கு ஒரு அளவில்லாமல் போய் விட்டது. சிறப்பான கேள்விக்கு வாராவாரம் மெகா பரிசாக ரூபாய் 101 வழங்கப்படும்னு சொன்னதும் கூட காரணமாய் இருக்கலாம். இந்த வார பகுதிக்கு செல்வோம்.

1) கடவுள் இருக்கிறாரா?? இல்லையா ?? (நெடுமுடியான், திருப்பதி)

யோவ் நீ ஸ்டாம்ப் ஓட்டமா அனுப்பின லெட்டருக்கு நான் பதில் சொல்றேனே அப்பவே தெரிய வேணாம்....கடவுள் இருக்கான்யா....


2) தமன்னா அழகா? அனுஷ்கா அழகா ? நீங்களே சொல்லுங்களேன் ...??(அழகப்பன்,காரைக்குடி)

இத மெனக்கெட்டு கேள்வின்னு கேட்ருக்க பாரு நீ தாண்டா செல்லம் அழகு....


3) நான் தங்கள் வலைத்தளத்தை கடந்த முப்பதாண்டுகாளாய் படித்து வருகிறேன்.உங்களை மாதிரி ஒரு Writer தமிழகத்தில் இல்லையென்கிறேன்....சரி தானே?? (திருவள்ளுவர்,மயிலாப்பூர்)

என்ன இப்டி சொல்லிடீங்க..நம்ம R2 ஸ்டேஷன்ல ஒரு Writer இருக்காரு...சும்மா குண்டு குண்டா சூப்பரா எழுதுவாரு...உங்களுக்கு தெரியாதா...

4)கலைஞரும் கேள்விபதில் எழுதுறாரு..நீங்களும் கேள்வி பதில் எழுதுறீங்க...உங்களுக்கும் அவருக்கும் என்ன வித்யாசம்??? (ஜெயா,ஸ்ரீரங்கம்)
60வயது ...மூன்று மனைவிகள்...


5)இவ்வளவு வளங்கள் இருந்தும் இந்தியா முன்னேராததற்கு காரணம் 'கண் திருஷ்டி' தானே ??? (கேது,திருநள்ளாறு)

கரெக்டா கண்டுபுடிச்சீங்க...ஒரு ஹெலிகாப்டர்ல மிளகா அம்பது கிலோ ,எலுமிச்சை இருபது கிலோ...மஞ்சள் முப்பது கிலோனு எடுத்துகிட்டு போய் இந்தியாவையே சுத்திவந்து வங்கக்கடல்ல போட்டு காரித்துப்பீருங்க ..திருஷ்டி கழிஞ்சிரும்...


6)அது ஏன் நூறு ரூபாய் நோட்ல காந்தித்தாத்தா படம் போட்டிருக்கு??? (அருமைநாயகம்,ஆத்தூர்)

அப்புறம்..உங்க அப்புத்தா படமா போடுவாங்க....
7)கௌதம் மேனனின் அடுத்த படம் எப்போ வரும்..??(சத்யஜித்ரே,வட பழனி)

அவர் வீட்ல HBO சேனல் ரெண்டு மாதமாய் வரவில்லையாம்.அதனால் படம் தள்ளிபோகும் என்று தெரிகிறது.


8)நான் குமாரை காதலிக்கிறேன்.குமாரோ மீனாவை காதலிக்கிறான்.மீனா பாபுவை காதலிக்கிறாள்.பாபு நேத்து எனக்கு லவ் லெட்டர் கொடுத்தான். நாங்கள் இப்போ என்ன செய்ய வேண்டும்.(ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி)

ம் ...நீங்க மருந்த குடிச்சி சாக வேண்டும்...


9) நான் மிகப்பெரிய பணக்காரனாக வேண்டும் ...அதற்கு என்ன செய்ய வேண்டும்?? (முலாயம் சிங், மூணாறு)

இந்த மாதிரி வெட்டித்தனமா கேள்வி எழுதிப்போடுவதை விட்டுவிட்டு வேலை மயி&** ஒழுங்காய் பார்க்க வேண்டும்.


10)ஊழலை ஒழிக்க வேண்டும்னு நம்ம ஆ.ராசா சிறையிலேயே உண்ணாவிரதம் இருக்க போறாராமே அப்டியா???(2G.கோபாலன், பெரம்பலூர்)

பிளாஸ்டிக்க ஒழிக்கணும்னு எங்கயாச்சும் பிராய்லர்கோழி போராட்டம் பண்ணி பாத்திருக்கீங்களா???

---தொடரும்.

வெள்ளி, 3 ஜூன், 2011

கிரிக்கெட் தெரிந்தது போல காட்டிக்கொள்ள முத்தான முப்பது வழிகள்
இந்தியா சுதந்திரம் அடைந்த போது இவ்வளவு கொண்டாடினோமோ தெரியாது ஆனால் இந்த முறை உலகக்கோப்பை வென்ற போது மொத்த இந்தியாவும் ஆனந்த கூத்தாடி மகிழ்ந்தது.பள்ளியில்,கல்லூரிகளில்,வேலையிடங்களில்,தொலைப்பேசி உரையாடல்களில் என எப்போதும் கிரிக்கெட், விவாதத்துக்குள் நுழைந்துவிடும்.நம் நாட்டைப்பொருத்தவரை நமக்கு உயிர்வாழ ஆக்சிஜனுடன் கொஞ்சம் கிரிக்கெட்டும் வேண்டும். இந்த சூழலில் கிரிக்கெட் நடப்பு தெரியாமல் இருக்கும் சிலர் படும் பாடு இருக்கிறதே.. அது சொல்லி மாளாது... போன மாதம் இந்திய,மேற்கிந்திய தீவுகள்க்கு இடையிலான உலககோப்பை கிரிக்கெட் போட்டியை நண்பரின் வீட்டில் பார்த்துக்கொண்டிருந்தோம். 260 ஸ்கோரை மேற்கிந்திய தீவுகள் சேஸ் செய்வார்களா என்று நானும் நண்பரும் அலசி ஆராய்ந்து கொண்டு இருந்தோம். திடீரென விவாதத்துக்குள் புகுந்த நண்பரின் மனைவி "லாராவ அவுட் ஆக்கிட்டா முடிஞ்சது..." என்றார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். கிரிக்கெட் தெரியாதவர்கள்,பிடிக்காதவர்கள் ஆகியோரை "யாரு பெத்த பிள்ளையோ" என்று பரிதாபமாய் பார்க்கும் நிலை தான் உள்ளது. அந்த அபாக்கியவான்களுக்கு தான் இந்த கட்டுரை.

யாராவுது கூட்டமாக நின்று பழைய கிரிக்கெட் போட்டிகளை பற்றி பேசிகொண்டு இருந்தால் நடுவில் புகுந்து , "World Cupல சச்சின் அடிச்ச அந்த சிக்சர் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குதுங்க..Chanceless" என அடித்து விடுங்கள். எந்த World Cup, எந்த சிக்சர் என்றெல்லாம் சொல்லத்தேவையில்லை. நீங்கள் சொல்லி முடித்தவுடன் எதோ ஒரு மொக்கைச்சாமி "ஆமாங்க" என சொல்லிவிட்டு "அக்தர் பால்ல அங்க அடிச்சார்,கேடிக் பால்ல இங்க அடிச்சார்"னு வரலாற்றை பிரிச்சு பேன் பார்ப்பான்.இடையிடையே மண்டையை ஆட்டிக்கொண்டே எதோ ஏற்கனவே தெரிந்த விஷயத்தை கேட்பது போல அசால்டாய் கேட்டுக்கொண்டே இருங்கள். அப்டியே "பெங்களுர்ல அடிச்ச செஞ்சுரி தான் அவரோட Best" என எதாவுது ஒரு ஊர் பெயரை சொல்லி ஒரு பிட்டை போடுங்கள். அந்த ஆள் எல்லா ஊர்லயும் செஞ்சுரி அடிச்சு வச்சிருக்கிறார். ஆகையால் மேற்படி பார்ட்டிகள் எதோ ஒன்றை எடுத்து அரை மணிநேரம் பேசி முடிப்பார்கள். அப்புறம் தோனியை "மஹி" என்றும் ஷேவாக்கை "வீரு" என்றும், காம்பீரை "கெளதம்" என்றும் ஏதோ உங்க மாமா பையனை சொல்வதைப்போல் செல்லமாய் குறிப்பிடுங்கள்.அப்புறம் கூட்டமாய் எல்லோரும் உட்கார்ந்து டிவியில் போட்டிகளை பார்த்துக்கொண்டிருக்கும்போது ,"அந்த "Deep square Leg" ல நிக்குறது யாருப்பா...ஓட்டைய விட்டுக்கிட்டே இருக்கான்" என ஒரு போடு போடுங்கள். கொஞ்ச நேரம் பதிலே வராது. ஏன்னா இந்தியாவில் கிரிக்கெட் பார்க்கும் தொண்ணூறு சதவீதம் பேருக்கு 'Fielding Position'களின் பெயர் தெரியாது. நம்ம தோனியே கூட "எப்பா ...போய் சோத்தாங்கைப்பக்கம் நில்லுப்பா" என்று பீல்டர்களை சொல்லுவதாய் கேள்வி. ஆகையால் உங்கள் இமேஜ் எக்குத்தப்பாய் எகிறும். ராகுல் டிராவிடும், லக்ஷ்மனும் எந்த ஷாட் அடித்தாலும் "வாவ்..சூப்பர்...இது ஷாட்..." என உச்சுக்கொட்டுங்கள்.அதிலும் அம்பயரை குறிவைத்து நேராய் அடிக்கும் ஷாட்களுக்கு எழுந்து நின்று கைதட்டி விடுங்கள். இந்த T20 வந்து கிரிக்கெட்டையே குலைச்சிருச்சு...குதறிருச்சு என புலம்பித்தள்ளுங்கள்.உங்களை பாரம்பரிய கிரிக்கெட் ரசிகர் என நினைத்துக்கொள்வார்கள்.

இந்தியா எத்தனை ரன் எடுத்தாலும் 'இன்னும் ஒரு பத்து ரன் ஈசியா எடுத்திருக்கலாம்' என சொல்லுங்கள். அப்புறம் குறிப்பாய் முக்கியமான வெளிநாட்டு வீரர்களின் பெயரை தெரிந்து கொள்ளுதல் அவசியம்.பிரேமானந்தா போல முடி வைத்துக்கொண்டு சைடு வாக்கில் மாங்கா அடிப்பது போல பந்து வீசுபவர் பேர் மலிங்கா. பெயரை நன்றாக படித்துக்கொள்ளுங்கள்.நீங்க பாட்டுக்கு மகாலிங்கம் என்று சொல்லி விடாதீர்கள். பேட்டை காஜா பீடியை பிடிப்பது போல அசால்டாய் பிடித்துக்கொண்டு கருப்பன சாமியாய் நின்று வெளுத்துக்கட்டுபவர் பெயர் கெயில். மேட்ச் முடிஞ்சவுடன் ஓட்டமாய் ஓடி வந்து ஒரு வெள்ளைக்கார புள்ளைக்கு கிஸ் அடிப்பவர் பெயர் வார்னே. பேட் பிடிக்க வந்தவுடனே தலைக்கு மேலே நூறு மீட்டருக்கு தூக்கி அடிச்சு அவுட் ஆகிட்டு போற பாய்க்கு பேர் அப்ரிதி. எந்நேரமும் சிவிங்கியை மென்னுகிட்டே எல்லாருகூடயும் சண்டை கட்டுபவர் பேர் பாண்டிங் (பாண்டி அல்ல)


யாராவுது ஆஷஸ் பாத்தியா என்று கேட்டால்,ஆஷ் ட்ரேயை நோக்கி ஓடாதீர்கள்.அது ஒரு கிரிக்கெட் தொடர். "இல்ல மச்சி..போன தடவ மாதிரி இல்ல" என கூசாமல் சொல்லுங்கள். எந்த ஆஷஸ் தொடரும் அதுக்கு முந்துன தடவை போல இருந்ததில்லை. ஆஷிஸ் நெஹ்ரா,ஸ்ரீசாந்த் போன்றோரில் யாராவுது அணியில் இருந்தால் 'இவய்ங்கள ஏன் தான் சேக்குராங்களோ'னு கோபமாய் கத்துங்கள். அவர்களை பெற்றவர்களை தவிர இந்தியாவில் யாருக்கும் அவர்களை பிடிப்பதில்லை.அதனால் உங்களுக்கு ஆதரவு ஓட்டுக்கள் அதிகமாய் விழுகும். ஐ.சி.சி....பி.சி.சி.ஐ....,ஐ.பி.ல்,.....போன்ற keyword களை ஞாபகமாய் வைத்துக்கொள்ளுங்கள் பின்னாடி உபயோகமாய் இருக்கும்.


மேற்கூறிய எல்லாம் செய்தும் பாச்சா பலிக்கவில்லை, விடாமல் கிரிக்கெட் அரக்கர்கள் ரத்தம் குடிக்கிறார்கள் என்றால் நமக்கு இருக்கவே இருக்கிறது பிரம்மாஸ்திரம் அதை சொல்லி ஆட்டையை முடியுங்கள். " Fraud பசங்கப்பா...எல்லாம் மேட்ச் பிக்சிங் ..ஸ்பாட் பிக்சிங் ....ச்சீ இத பாக்குறதுக்கு........"