வெள்ளி, 21 நவம்பர், 2014

ஐ.டி ஆன்மாக்களின் குரல் (Ver 1.0)

                             


1. நீங்கள் நினைப்பது போல் நாங்கள் நவநாகரீக உடைகள் அணிந்து கொண்டு அலுவலகம் போய், ஆட்டம்,பாட்டம் என கூத்தடித்து, மாலை வரை சரக்கடித்துவிட்டு தள்ளாடிக்கொண்டே வீட்டுக்கு வருவதில்லை. எங்களுக்கும் வேலை என்ற ஒரு வஸ்துவை குடுத்து ,டவுசர் என்ற வஸ்துவை கழட்டத்தான் செய்கிறார்கள்.

2.நாங்கள் தமிழ் நன்றாக பேசுவோம். கோவம் வந்தால் கூட வண்டை வண்டையாய் தமிழில் தான் திட்டுவோம். இன்று பேப்பரில் எழுதப்படும் தமிழை விட இணையத்தில் தான் அதிக தமிழ் எழுதப்படுகிறது. எழுதுறதுல முக்கவாசிப்பய நம்ம பய தான்..நம்ம பய தான்.

3."சென்னையில் தினமும் மழை பெய்யும்" , "இந்தியாவில் எல்லா பெண்களுக்கும் இரட்டைக்குழந்தைகள் பிறக்கின்றன", "ராமேஸ்வரத்தில் பிறந்தவர்கள் எல்லாரும் நாட்டின் ஜனாதிபதி ஆவார்கள்" போன்றவைகளெல்லாம் எவ்வளவு அபத்தமான புரளியோ அதே போல தான் "ஐ.டியில் இருக்குற எல்லாரும் லட்சத்தில் சம்பாதிக்கிறான்" என்பதுவும். எங்கள் மாசத்திலும் கடைசி நாட்கள் இருக்கின்றன.

4.நாங்கள் வெளிநாடுகளுக்கு சாக்லேட்கள் வாங்கவும், லேப்டாப்கள் வாங்கவும் மட்டும் போகவில்லை.அங்கே ஆபிசில் எங்களை வடிவேலுவைப்போல வச்சு அடிப்பார்கள்.வலி தெரியாமல் சிரித்துக்கொண்டே ஃபேஸ்புக்குகளில் போட்டோக்கள் போடுவோம்.

5. ஐ.டி கம்பெனிகளில் ஜாதி வாரியான இட ஒதுக்கீடுகள் கிடையாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக பட்ச தண்டனைகள் உண்டு. இதையே அரசாங்கம் நாட்டில் செய்து முடிக்க பல மாமாங்கம் ஆகும்.

6. ஐ.டி காரர்களை கேலி செய்து படம் எடுக்கும் எந்த சினிமாக்காரனுக்கும்,சமகால அரசியலில் இருக்கும் ஊழல் பற்றியோ, போலி சாமியார்கள் பற்றியோ, ஈழப் போராட்டம் பற்றியோ படம் எடுக்க வக்கில்லை. அதை விடுங்க பல பேர் மானங்கெட்டு உலகப்படங்களை உல்டா தானே அடிக்கிறார்கள்.இந்த லட்சணத்தில் திருட்டி டிவிடிக்கு எதிராக போராட்டம் வேற...ஹாலிவுட்காரர்கள் காப்பிரைட் கேசு போட்டால் இங்கே பல பேருக்கு ஜட்டி கூட மிஞ்சாது.

7. நாங்கள் டேக்ஸ் கட்டிவிடுகிறோம் அல்லது எங்களிடமிருந்து புடுங்கிவிடுவார்கள். ஆகையால் நாங்களும் நாட்டுக்கு ஏதோ ஒரு வகையில் உபயோகமாகத்தான் இருக்கிறோம் மக்களே..

8. நாங்கள் எந்த புண்ணியவானிடமும் போய் "நா வாடகையாய் பதினஞ்சாயிரம் கொடுத்தே தீருவேன்" னு மல்லுக்கு நிற்பதில்லை. பெட்ரோல் விலை கூடுகையில் எப்படி நீங்கள் ஒன்னும் செய்யமுடியாமல் பொறுமிக்கொண்டே கடந்து போகிறீர்களோ அதே மாதிரி தான் நாங்களும் வீட்டு வாடகையை நிர்ணயிக்க முடிவதில்லை. 

9.நாங்கள் வேலையில் எதையாவது கற்றுக்கொண்டே இருக்கே வேண்டும் இல்லையேல் எங்கள் சாப்பாட்டில் எந்த நேரமும் மண் விழலாம். தினமும் ஒன்பது மணி நேரம் வேலை பார்த்ததற்கு கணக்குக்காட்ட வேண்டும்.

10. "என்ன தம்பி டிகிரி முடிஞ்சிச்சா..அப்டியே ஜாலியா ஆபிஸ் வாங்களேன்.." னு எந்த ஐ.டி கம்பெனியும் கூப்பிடுவதில்லை. இந்த வேலை கிடைக்க நாய் படாத பாடு பட வேண்டும். கையில் ஃபைல்கள் வைத்துக்கொண்டு சென்னையில் பல பேண்டுகளும் சுடிதார்களும் தினமும் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

11. நாட்டில் ஆயிரமாயிரம் பாலியல் குற்றங்களும், பெண்களுக்கு எதிராய் எண்ணிலடங்கா வன்முறைகளும் நடந்து கொண்டேயிருக்கிறது. இந்த லட்சணத்தில் நாங்கள் கலாச்சாரத்தை கெடுக்குறோமாம்...டேய் இல்லாத ஒரு விஷயத்த எப்பிடிடா கெடுக்கிறது..

12.நாங்கள் ஸ்ட்ரைக் அடிக்க முடியாது. எங்களுக்கென்று சங்கங்கள் கிடையாது. மூன்று அம்ச கோரிக்கை ,நாலு அம்ச கோரிக்கை என எதுவும் முன் வைக்க முடியாது. மீறினால் ஆப்பு பின் வைக்கப்படும்.

வேட்டியின் முக்கியத்துவத்தை கோட் போட்டுக்கொண்டே அலசுவாறே கோபிநாத், அவர் நடத்தும் நிகழ்ச்சி டி.வியில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தது. ஐ.டி ஊழியர்களுக்கும் மற்றவர்களுக்குமான விவாதம். அதில் எதிர்க்கட்சிக்காரர் "ஐ.டி ல ரிசசன் வந்து நெறய பேர வேலைல இருந்து தூகுனப்போ வெடி போட்டு கொண்டாடினேன்..என்ன ஆட்டம் ஆடுனானுங்க.." என்றார். அவருக்கு ஆதரவாய் நிறைய பேர் கை தட்டினார்கள். அதிர்ச்சியாய் இருந்தது. அப்பிடியென்ன இவய்ங்களுக்கு கோபமென சுர்ரென்று இருந்தது. முடியை கலரிங் செய்து சுவிங்கம் மென்று கொண்டு சுத்தும் இளைஞர்களை பாதி பேருக்கு பிடிப்பதில்லை. ஒரு வேளை இது அது போன்று மாற்றத்தை எதிர் கொள்ள தயங்கும் கோபமா..இல்லை பொருளாதார காழ்ப்புணர்ச்சி தரும் கோபமா.. காரணங்கள் பிடிபடவில்லை.

ஒன்று மட்டும் புரிகிறது. சமுதாயம் எப்போதும் ஒரு கூட்டத்தை கரிச்சுக்கொட்டிக் கொண்டே இருக்கிறது. அது அவர்கள் கையாலாகத்தனத்துக்கு வடிகால். மாடர்ன் உடை அணியும் பெண்கள், அரசு ஊழியர்கள், சினிமாக்காரர்கள், கடவுள் மறுப்பாளர்கள் என எல்லாகூட்டமும் கல்லடிபட்டிருக்கிறது. யாரெல்லாம் திருப்பி அடிக்க மாட்டார்கள் என நினைக்கிறார்களோ அவர்கள் மீது காரி உமிழ்வார்கள். உதாரணமாய் வக்கீல்களை விமர்சித்து படத்திலோ பத்திரிக்கையிலோ எத்தனை முறை வந்திருக்கிறது. அவர்கள் திருப்பி அடிப்பார்கள். எதாவுது பொது இடத்தில் மாறி மாறி கூட்டணி வைக்கும் மானங்கெட்ட கட்சிகளை விமர்சித்து பாருங்களேன்...மாட்டீர்கள்..அவர்கள் ஆசிட் அடிக்கவே வாய்ப்பிருக்கிறது.பெருசாய் கருத்தெல்லாம் சொல்லவில்லை. நாங்க ஒங்க வீட்டுப்பிள்ளைகள் எங்கள எப்ப வேணா அடிச்சுக்கலாம். உங்க கோபத்தை எதாவுது உருப்படியான பிரச்சனையில் காட்டுங்கள். தெருவில் இறங்கி போராடுங்கள். நூற்று இருபது கோடி பேருக்கு மேல் இருக்கும் நாட்டை ஒரு சின்ன கூட்டத்தால் கெடுத்து விட முடியாது.