செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

Y
                                                            
"தலைய தூக்கி பாக்காத டா" ரஞ்சித்தை பார்த்து அந்த பரட்டைத்தலைக்காரர் சொன்னார். முழுவதும் இருட்டி இருந்தது. காஞ்சிவரம் அங்கிருந்து முப்பது கிலோமீட்டர் என்று சிலர் பேசிக்கொண்டார்கள்.பரட்டைத்தலைக்காரர் ரஞ்சித்தின் பக்கத்தில் வந்தார்.

 'சொரிப்பயலா இருப்ப போல...தலைய நீட்டி நீட்டி பாத்துக்கிட்டு கெடக்க.. யாராவுது பாத்துட்டா என்னய்யா செய்யுறது...உள்ள மண்டபத்துக்குள்ள இருக்குற முப்பது பேரு உசுரும்,வாழ்க்கையும் உன்கைல தாண்டா இருக்கு...சூதானமா இரு' என்றார்.

 "இனி கரக்டா இருந்துக்கிறேண்ணே" என்றான். அவன் ஒரு பாறையின் அருகில் மறைந்த படி நின்றிருந்தான். இரண்டு நாள் தூங்காத களைப்பு அவன் முகத்தில் தெரிந்தது. திடீரென தூரத்தில் ஒரு லாரி அருகே வருவது தெரிந்தது. அதன் விளக்குகள் வெளிச்சமாய் இவர்கள் அருகே வருவது போல் இருந்தது. ரஞ்சித் மிரண்டு போய் பின்னால் திரும்பி மெல்லிசாய் விசில் அடித்தான். 


மண்டபத்தின் உள்ளே இருந்த எல்லாரும் மெழுகுவர்த்தியை அணைத்தார்கள். வண்டி இடது பக்கம் திரும்பி மறைந்தது. இரண்டு நிமிடத்தில் உள்ளே இருந்து ஒருவன் ஆந்தை போல் ஒலி எழுப்பினான். முன்னால் இருந்து ரஞ்சித் 'இல்லை' என்பது போல் கை காட்டினான். எல்லோரும் பெருமூச்சி விட்டார்கள். எல்லாருடைய மூஞ்சிலும் மரண பயம் அப்பி இருந்தது.


***********************************************************************************************************

பெரிய கணினி திரைகள், மேசையில் இந்திய அரசின் முத்திரையுடன் கூடிய பதக்கங்கள் எல்லாம் இருந்தது. அலமாரியில் முறையாய் அடிக்க வைக்கப்பட்ட புத்தகங்கள். கணினி திரையையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார் ராம். இளமஞ்சள் நிறத்தில் சேலை அதன் மேல் ஸ்வெட்டர் அணிந்திருந்தாள் நிர்மலா. கையில் பாதி முடிந்திருந்த சிகரெட்.

"ராம்...அந்த பாஸ்டர்ட் நாளைக்கு பார்லிமென்ட்ல என்ன கிளிச்செடுக்கப் போறான்.. "What the Fuck our Honourable Fertility Minister did" னு கேப்பான். நா விரல சப்பிட்டு நிக்கணும்" என்றாள் கடுங்கோபமாக. பேசி விட்டு மூச்சி வாங்கினாள்.

"மேடம்..லேப்ல Foul Language பேசாதீங்க...நாம எவ்வளவு முயற்சி பண்ணோம்னு உங்களுக்கு தெரியாதா.."

"யு.எஸ்ல பண்ணிட்டாங்களாமே...முன்னூறு பேர ரெடி பண்ணிட்டாங்களாம்...காலைலயிருந்து பி.பி.சில போட்டு நாரடிக்குறான்..."

"Thats Absurd.. அந்த முன்னூறு பேருல யாரும் Y ஜெனரேட் பண்ண முடியாது..அவுங்கள வெறும் செக்ஸ்க்கு வச்சிக்கிரலாம். ஆனா நிரந்தர தீர்வு கெடயாது. அவுங்கள விட்டா இன்னும் பெர்டிலிட்டி Ratio மோசமா தான் போகும்.."

"அத விடுங்க.. நம்ம மிசன் லிங்கா எந்தளவுல இருக்கு...நாளைக்கு என்கிட்ட கேட்டா 75% முடிஞ்சிச்சுனு சொல்லிறவா... Fine தான.."

"Politically Correct" என்றார். நிர்மலா சிரித்தாள்.

************************************************************************************************************


"உங்க பேரு என்னங்க"

"ரஞ்சித்"

"பார்த்தா யங்கா இருக்கீங்க...வயசென்னா??"

"முப்பத்திஏழு.. நீங்க??"

"திவாகர்...இன்னைக்கு நான் தான் காவல். இன்னும் எத்தன நாளைக்கு தப்பிக்க முடியும்னு தெரில...சில நேரம் செத்துப்போயிரலாம்னு தோணுது". கண்ணாடியை கழட்டினான்

"சீ..தைரியமா இருங்க...காஞ்சிவரம்...செங்கல்பட்டு ..எச்சூர் கடந்துட்டோம்னு வைங்க..ஈசியா மகாபலிபுரம் போயிரலாம்..அங்க இருந்து கண்டிப்பா போட்ல ஏறி தப்பிச்சிரலாம்..."

திவாகர் உடல் குலுங்கி சத்தமில்லாமல் அழுதான். ரஞ்சித் அவன் தோள் தடவி "குழந்தை இருக்கா...?" என்றான்.

"ஆமா.."

************************************************************************************************************

டெல்லியில் கடுங்குளிரான நாள் அது. பாராளுமன்ற வளாகம் கூட்டமாய் இருந்தது. வெளியே லிப்ஸ்டிக் பெண்கள் மைக்கை பிடித்து நின்று கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே வேன்களும், அதி நவீன கார்களும் இருந்தன. பிரதமர் அஞ்சலிகாந்தியின் கார் வளாகத்துக்குள் வந்தது. வெளியே கூடியிருந்த காங்கிரஸ்காரர்கள் "அஞ்சலி மேடம் ஜிந்தாபாத்" என கோசமிட்டனர். பிரதமருடன் பேசிக்கொண்டே நிர்மலா கட்டிடத்துக்குள் நுழைந்தார். நிறைய காமிராக்கள் வெளிச்சம் காட்டின. உள்ளே அமளிகள் முடிந்து கதிரவன் பேச ஆரம்பித்தார்.

எல்லோரும் காதில் Translator பொருத்திக்கொண்டார்கள். தன் வழுக்கைத்தலையை ஒருமுறை தடவிக்கொண்டு பேசத்தொடங்கினார் கதிரவன்.

"இன்று எல்லோரும் இனிப்பு கொடுத்து கொண்டாடுங்கள். இதே ஜனவரி இருப்பத்தியொன்று ,2012ல் அதாவது சுமார் முப்பத்தைந்து வருடம் முன் உலகின் கடைசி ஆண்குழந்தை பிறந்தது. புவிச்சூடு,கதிர்வீச்சு னு என்னென்னமோ காரணம் சொன்னாங்க. பிறகு ஆண்களால் Y Chromosome உருவாக்க முடியலயாம். அதனால் அப்புறம் நடந்த எல்லா இனப்பெருக்கத்துலயும் பெண்ணே பிறக்கிறாள்...  இப்பிடி பழைய கதைய சொல்லியே அழுதுகிட்டு இருக்கனுமா...இந்த அரசு என்னத்த செஞ்சது..."

"மிசன் லிங்காவில் நாம் தற்சம....." பேச முயன்றார் நிர்மலா.

"எது ஆராய்ச்சின்னு சொல்லிக்கிட்டு DNA ல Chromosome மாத்துறேன்னு மூணு ஆண்கள கொன்றீங்களே அதுவா..பாத்து மேடம் இருக்கிறதே தொண்ணூறு லட்சம் பேரு தான்...."

எல்லோரும் சிரித்தார்கள். சிலர் மேஜையை தட்டினார்கள்.கதிரவன் ஆவேசமாய் மேலும் பேசத்தொடங்கினார்.

"இன்று தினமும் நாட்டில் நடக்கும் வன்முறையை பார்த்தீர்களா...எங்கே போய் கொண்டிருக்கிறது இந்த பூமி....எஞ்சி இருக்கும்......

***********************************************************************************************************

திவாகர் பாறையின் மறைவில் அமர்ந்திருந்தான். மணி காலை மூன்று. பாதி தூக்கத்தில் காவல் இருந்தான். ஒரு லாரி புயல் வேகத்தில் அங்கு வந்தது. அவன் விசில் அடிக்க போவதற்குள் அது மண்டபத்தின் அருகில் போய் விட்டது. திவாகர் பாறையின் இருட்டில் பதுங்கி விட்டான். அவனுக்கு கைகள் நடுங்கியது. சிறுநீர் வருவது போல் இருந்தது. அடக்கிக்கொண்டான். லாரியில் இருந்து சிகப்பு ஜீன்ஸ்,சிகப்பு டாப்ஸ் அணிந்த பெண்கள் இறங்கினார்கள். பிறகு இரண்டு லாரி அங்கு வந்து சேர்ந்து கொண்டது. அனைத்திலும் சிவப்பு உடுப்பில் பெண்கள். 

"உள்ள இருக்குதுக டீ.." என்றாள் கொஞ்சம் குண்டாய் இருந்த ஒருத்தி.

மண்டபத்தில் இருந்தவர்கள் உள்ளே பதற ஆரம்பித்தார்கள். தப்பிக்க வழி தேடினார்கள். ரஞ்சித் ஜன்னல் வழியாய் வெளியே பார்த்து நடுங்கினான். மண்டபத்தின் கதவு உடைக்கப்பட்டது. உள்ளே கர்ஜித்து கொண்டு பெண்கள் நுழைந்தார்கள். சிலர் விரகமாய் சிரித்தார்கள். ரஞ்சித் ஜன்னல் வழியாய் இறங்கி ஒரு புதரை நோக்கி ஓடினான். பின்னால் பத்து பெண்கள் ஓடினார்கள்.

திவாகர் வாயை மூடிக்கொண்டு அழுகையை அடக்கிக்கொண்டான். எதையோ யோசித்து விட்டு,தன் பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் கத்தியை ஒருமுறை தொட்டுப் பார்த்தான்.

*********************************************************************************

"எஞ்சி இருக்கும் ஆண்கள் என்ன செய்வான்.. சொல்லு அரசாங்கமே....ஆண்களின் பாஸ்போர்டை முடக்கி விட்டீர்கள்...இந்த பூமியில் ஆணுக்கு ஏது பாதுகாப்பு...உங்களை பொறுத்தவரை நாங்கள் ஒரு போகப்பொருள். நேற்று செய்தியை கேட்டீர்களா... காஞ்சிவரம் அருகே மறைந்து இருந்த முப்பத்தி நாலு ஆண்கள் கற்பழித்து சாகடிக்கப்பட்டுள்ளனர். உங்கள் ஆராய்ச்சியின் தாமதம் இன்னும் எத்தனை உயிர்களை காவுவாங்க போகிறதோ...."  எல்லோரும் அமைதியாய் இருந்தனர். கதிரவன் தொடர்ந்தார்.

"ஆண்களுக்கான மானியத்தொகை முப்பதாயிரத்தில் இருந்து நாற்பதாயிரமாக மாற்ற வேண்டும். ஆண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். திரைப்படங்களில்,விளம்பரங்களில் ஆண்களை இழிவு படுத்துவது போல் காட்சிகள் இருந்தால் தடை செய்ய வேண்டும்...." கதிரவன் உரத்த குரலில் பேச்சை தொடர்ந்து கொண்டு இருந்தார்.

நேரடி ஒளிபரப்பில் இதை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த ஆண்கள் கண் கலங்கி கை தட்டினார்கள்.

******************************************************************************

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

திருவள்ளுவரின் டைரி


                                                                                   
                                                                    


மணி காலை ஒன்பது ஆகியிருந்தது.கண்ணைத்திறக்க அறப்போராட்டம் நடத்திகொண்டிருந்தேன். சூரிய ஒளி ஜன்னல் வழியாக மூஞ்சில் அடித்தது. இனிமேலும் தூங்கினால் சூரியனே கீழே இறங்கி வந்து அடிக்கும் அபாயம் இருந்ததால் எழுந்தேன். மொபைலை எடுத்தேன். மூன்று மிஸ்டு கால். யாருன்னு பாத்தா சதீஷ். இந்தாளு எதுக்கு கூப்பிட்டார்னு யோசிச்சுகிட்டே பதிலுக்குக் கூப்பிட்டேன்.

"அன்பே..அன்பே...நீ எங்கே..." ன்னு ஒரு அழகான குரல் பாட ஆரம்பிக்க, அதுக்குள்ளேயே ஒரு கட்டைக்குரல் "ஹலோ" என்றது. நான் பேசினேன்.
"யோவ்... எத்தன மிஸ்டு கால்யா...இந்த மிஸ்டு கால் கொடுக்குறவனயெல்லாம் மிட்நைட்ல வித்அவுட்டா ஓட விட்டு சுடணும்"

"Balance இல்லைடா..."

"பக்கத்துல யாராய்ச்சும் பிடிச்சிக்கிட வேண்டியது தான..."

"வெளையாடாதப்பா...ஒரு முக்கியமான மேட்டர்... நாங்க மயிலாப்பூர்ல வீடு கட்டிக்கிட்டு இருக்கோம்ல.."

"ஆமா..பக்கத்துல கூட நெறய பிகர்ங்க இருக்காங்கன்னு சொல்லிட்டிருந்தீங்களே..."

"டேய்..பாத்துப்பேசு..ஸ்பீக்கர்ல போட்டிருக்கேன்..."

"யோவ்..இதென்ன குத்துப்பாட்டா..ஸ்பீக்கர்ல கேக்குறதுக்கு...எடுய்யா அத..."

"வீட்டுக்கு மண்ணைத்தோண்டுறப்போ ஒரு ஓலைச்சுவடி மாதிரி ஏதோ வந்துச்சுப்பா..உள்ள பாத்தா என்னென்னமோ எழுதிருக்கு..நீ வாயேன் இங்க"

"பாஸ்... நீங்க வர வர ராகுல்காந்தி மாதிரி பிரச்சனையக் கெளப்பிக்கிட்டே இருக்கீங்க...நீங்க வேணும்னா உங்க கண்டுபிடிப்ப தூக்கிக்கிட்டு இங்க வாங்க ..."

"சரிடா...வீட்லையே இரு... வந்திடுறேன்..."

வந்தார். கையில் ஒரு அட்டைப்பட்டி வைத்திருந்தார். அறையின் ஜன்னல்களெல்லாம் மூடினார்."இந்தாளு வர வர ஓவர் பில்ட்அப் கொடுக்கிறாரே"னு இருந்தது. அன்னைக்கு இப்படித்தான் ஏதோ ஒரு மொக்க படத்த பாத்துட்டு வந்து "இது ஒரு உலக சினிமா" னு பெனாத்துறார்.

"பாஸ் ..நாம என்ன சீன் படமா பாக்க போறோம். எதுக்கு இப்போ ஜன்னலெல்லாம் அடைக்குறீங்க". 

              

                                                                            


"பொறுடா..." என்றபடியே பைக்குள்ளேயிருந்த அதை எடுத்தார். பழுப்பு நிறத்தில் இருந்தது. முழுக்க மண்ணில் ஊறி இருந்த அடையாளம் தெரிகிறது. அத பார்த்தோனே கொஞ்சம் சீரியஸ்நெஸ் வருது.வேகமா அவர் பக்கத்துல போய் உட்கார்ந்தேன்.முதல் பக்கத்தை திருப்பினோம். "ஆதியானவன் அருட்சோதி என்னுள் எரியட்டும்- வள்ளுவக்கோமகன்" என்றிருந்தது.எழுத்துக்கள் ரொம்பவும் வித்யாசமாய் இருந்தது. அந்தக்காலத்து தமிழ்.

 "ஏங்க ஒருவேளை நம்ம திருவள்ளுவர் எழுதியதா இருக்குமோ" என்றேன். அவர் பேசாமல் அடுத்த பக்கம் திரும்பினார்.

"    ௧௨௨ - 0031
 பத்துவரியில் வெண்பா எழுவதாய் இருந்த முடிவை தற்சமயம் மாற்றி இரண்டுவரியில் எழுதச்சித்தம். வாசவிநறுமுகை கூட வெள்ளாமையை பார்த்துக் கொள்ளுங்கள் என வசைகிறாள்."

"நான் சொல்லல" ன்னேன். தாமதிக்காமல் அடுத்த பக்கத்தை திருப்பினோம்.

" ௧௨௨ - 0037
இன்று நீரிறய்க்கையில் நான் அழைப்பதை கேட்டு கோபம் கொண்டு அந்த தின்னமான குவளையை என் மேல் வாசவி வீசினாள். அவளது சினம் குறைய அந்த சித்தார்த்தனை வேண்டுகிறேன்."

"அடப்பாவிகளா..நம்ம கிட்ட வேற மாதிரி சொன்னாய்ங்களே " என்றார் சதீஷ். அடுத்த பக்கம் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

"௧௨௩ -0027
முன்பே சக்ரவர்த்தி இளமடற்கோ தன் சேந்தனபுற அரண்மனைக்கு அழைத்திருந்தார். முன்னூறு குந்தகை பயணஞ்செய்து வர ஒரு மாமாங்கம் ஆகும் என்பதால் மறுத்து விட்டேன். அரசன் என் உருவம் பார்ப்பதற்காக அரண்மனை ஓவியனை அனுப்பி இருந்தார். இன்று அவன் என்னை வரைந்து கொண்டு சென்றான். பார்ப்பதற்கு வாலிபன் போல் உள்ளீர் "தாடி மயிர்" இருப்பது போல் வரைந்து கொள்கிறேன்.என்றான். சரி என்று சொல்லிவிட்டேன்."

நானும் சதீஷும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டோம். 

" ௧௨௭ -0019
இன்று மெய்யம்மை அவள் வீட்டுக்கு வந்திருந்தாள். முதல் குழந்தையை பிரசவிக்க வந்திருக்கிறாள். அவள் பார்த்தாள். நான் அவளை பார்க்க முடியவில்லை. கண்கள் குளமானது. நான் கொடுத்த மயிலிறகுகளை வைத்திருப்பாளா தெரியவில்லை. குடில் வந்ததும் அதே கண்ணீருடன் அன்புடைமையில் ஒரு பா எழுதினேன்.
 
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும்"

'திருவள்ளுவருக்கும் ஒரு ஜெஸ்ஸி இருந்திருக்கா போல' என்றேன். நான் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை. "கவனிச்சீங்களா "சித்தார்த்தன்" ன்னு நடுவுல சொல்றாரு..அவரு பௌத்தர்னு ஒரு கூட்டம் சொல்றது உண்மையா இருக்குமோ..." என்றேன். "டேய் வாய மூடிட்டு இருடா..திருவள்ளுவர் சிலைக்கும் ஆப்பு வச்சிராதீங்கடா" என்றார் சதீஷ். நியாயம் தான்.

                                                 
"௧௨௭ -001
வானசாஸ்திரம் படிக்க லெமூரிய கண்டம் பயணப்படுகிறானாம் அருள்மடை. இங்கேயே காஞ்சிநாதரிடம் பன்மொழி பயிலலாமே என்றேன். மறுக்கிறான். கனியிருப்ப காய் கவர்ந்திற்று. மழலைகள் வளராமலே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்."

"௧௨௫ -041 
இன்று முழு வெண்பாமாலையும் முடித்து விட்டேன். வாசவி படித்து பார்த்து "பிடிக்கவில்லை" என்றாள். எனக்கு கவலையில்லை. மொத்தம் 1760 எழுதி விட்டேன். முதலில் 1330 பாக்களை அரண்மனைக்கு  அனுப்பி விட்டு, அவர்கள் விருப்பமறிந்து பின் மிச்சத்தை அனுப்ப உத்தேசம். கூட்டுத்தொகை ஏழு நல்லதென பொய்யாமொழி சொன்னார்."

நானும் சதீஷும் ஒருவரை ஒருவர் பார்த்தோம்."அப்போ மிச்சக்குறளும் இருக்குடா" என்றார். "ஒரு வேளை அதுவும் உங்க எடத்துல கெடச்சுதுனா..." என்றேன். சதீஷ் அவர் பைக்கை நோக்கி ஓடினார். நான் அவர் பின்னாலேயே ஓடினேன்.