வெள்ளி, 25 டிசம்பர், 2020

ஒரு ஆரஞ்சுக்காவியம்- 1

லாரம் அடிப்பதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னாடியே பெரும்பாலும் விழித்து விடுவேன். அலார சத்தத்தில் எழுந்திருப்பது, யாரோ அடித்து எழுப்பி விடுவது போல காலையில் எரிச்சலை  ஏற்படுத்தும். அன்றும் அப்படி காலத்தை வென்று, கடிகாரத்தின் தலையில் தட்டிவிட்டு எழுந்தேன். ஜன்னல் வழியே பனி விழுவது ஒன்றும் அழகாய்த்தெரியவில்லை.ஹாலுக்கு வந்து மூலையில் இருந்த ஹீட்டரில் ரெண்டு புள்ளிகள் கூட்டினேன்.  தல்பீர் ரூமிலிருந்து சத்தம் வந்தது.  "சிவா  நீங்க குளிச்ச பிறகு என்னை மறக்காம எழுப்புங்களேன்.."

"டேய்..ட்ரெஸ் பண்ணிட்டு வந்து எழுப்பனுமா..இல்ல அப்பிடியே வந்து எழுப்பனுமா.."

 பதிலேதும் வரவில்லை. குளிர் உடம்பு முழுக்கக்குத்தியது. பல்லை விளக்கிக்கொண்டே ஜன்னல் பக்கம் போனேன். வானத்திலிருந்து மாவை சலித்து விட்டது போல பனி விழுந்துகொண்டிருந்தது.எங்கும் வெள்ளை மயம் ."என்ஸ்கடே" வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. "எஸ்கடே" நெதர்லாந்தின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு டவுன். ஜெர்மனிக்கு மிக அருகாமையில் இருக்கும் ஸ்தலம். சில உள்ளூர்க்காரர்கள்  இங்கிருந்து எச்சில் துப்பினால் ஜெர்மனியில் விழுந்து விடும் என சொல்வார்கள். துப்பி உறுதி செய்தார்களா தெரியவில்லை ஆனால் ஜெர்மனி பதிமூன்று கிலோமீட்டர் தூரம்.நாங்கள் வேலை செய்யும்  கார்ப்பரேட் கம்பெனி சார்பில் அங்குள்ள ஆட்டோ மொபைல் நிறுவனத்தில்  ஐ.டி மராமத்துப்பணிகள் நடந்து வருகின்றன.அந்த தெய்வீகப்பணியில் இந்தியாவிலிருந்து மொத்தம் அறுபது பேர் இடம் பெற்றிருந்தோம். அலுவலகத்திலிருந்து எங்கள் அறுபது பேருக்கும் தங்குவதற்காக ஒரு பெரிய ரெஸார்ட்டை புக் செய்திருந்தார்கள். அது ஊருக்கு வெளியில் ஆங்கில பேய்ப்பட பாணியில் அமைந்திருந்தது.சில வட இந்திய நண்பர்கள் இவ்விடத்தை "காலாப்பாணி" என கேலி செய்வார்கள். அதாவது சிறைச்சாலை. காலையிலிருந்து இரவு வரை கடுமையான வேலை எங்களுக்கு இருந்து வந்தது.

ரெஸார்ட்டிலிருந்து அலுவலுகத்திற்கு ஒரு பேருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். காலை சரியாய் ..இல்லை மிகச்சரியாய்  எட்டு மணிக்கு அது கிளம்பும். அதை விட்டு விட்டால் நாம் கேப் பிடித்தோ அல்லது சைக்கிளை அழுத்தியோ அலுவலகம் போய்ச்சேர வேண்டும். நானும் தல்பீரும்  இறைவனின் அருள் அதிகம் இருக்கிற நாட்களில்  மட்டும் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தோம்.

குளித்துவிட்டு வந்து என் ஈரமான கையை தல்பீர் கன்னத்தில் வைத்து "டைம் அப்" என்றேன். ஷாக் அடித்ததை போல எழுந்து.. கெட்ட வார்த்தையில் திட்டினான். நான் அவனை பார்த்து "டைம் ஆச்சு..இன்னைக்கு அப்புறம் "சன் ரைஸ்" பாக்க முடியாதுடா.." என்றேன்.அவன் சிரித்துக்கொண்டே பாத்ரூமை நோக்கிக்கிளம்பினான். அவன் வந்தவுடன் சில பல அவித்த முட்டைகளையும் ,டீயையும் குடித்து விட்டு வயிற்றை ஆறுதல் படுத்தினோம். பேருந்தை பிடிக்க ரூமை  பூட்டிவிட்டு  வேகமாய் நடக்கத்தொடங்கினோம். மேலே போட்டிருந்த ஜெர்க்கினையும் தாண்டி குளிர் உலுக்கியது. இந்த மாதிரி சூழ்நிலையில் எப்போதும் என்  பாக்கெட்டிலிருக்கும்   உற்ற நண்பன் "மால்ப்ரோ" உதவுவார். எடுத்து பற்ற வைத்தேன். முதல் இழுவையில் உடல் முழுக்க சூடு பரவி இதமாய் உணர்ந்தேன். இரண்டாம் முறைக்கு வாய்க்குப்பக்கத்தில் கொண்டுபோகையில் தல்பீர் பிடுங்கி விட்டான்.


"பாஸ்..விட்டா இழு இழுனு இழுத்திட்டு வெறும் சாம்பல மட்டும் தான் எனக்கு தருவீங்க.."
 
தல்பீரும் நானும் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொள்வோம். அவனுடன்  நெதர்லாந்து வந்து தான் பழக்கம். சீக்கியன் என்பதால் டர்பன் அணிந்திருப்பான். என்னைத்தவிர அலுவலகத்தில் வேறு யாரிடமும் அதிகம் பேசமாட்டான். மொத்த ப்ராஜெக்ட்டுக்கும் உண்டான சர்வர்களை பராமரிக்கும் டீமில் இவன் தான் முக்கிய புள்ளி. இப்போது பேருந்தை அடைந்து விட்டிருந்தோம். அவன் புட்டத்தில் தட்டி "நீ முதலில் போ" என்றேன். அவன் தலையை ஆட்டி "போன தடவை நான் தானே முதல்ல போனேன்..இன்னைக்கு நீ போ"என்றான். சில வினாடிகள் பஸ்ஸின் படிக்கட்டுக்கு முன்னாடி ரெண்டு பேரும்  முரண்டு செய்து கொண்டிருந்தோம். பின்னாலிருந்து லேசாய் கனைக்கும் சத்தம் கேட்டது. ரோஹன் நின்றிருந்தார். அவர் என்னுடைய மேனேஜர்.

"என்னப்பா எதாவது டாஸ் போட்டு பாத்து முடிவு பண்ணப்போறீங்களா.." என்றார்.

நான் உலகமகா ஜோக்கை கேட்டது போல மீட்டருக்கு மேலே சிரித்தேன். மேனேஜர்கள் வாழைப்பழ ஜோக் சொன்னால் கூட பலாப்பழ அளவுக்கு சிரிக்க வேண்டும் என்கிற ஐ.டி விதியை இந்த ஐந்து வருடத்தில்  உள்வாங்கியிருக்கிறேன் .தல்பீர் பஸ்ஸில் ஏறினான்.நாங்கள் எதிர்பார்த்தது போல கடைசி சீட்டின் வலது மூலை காலியாகவே இருந்தது.தல்பீர் ஜன்னல் ஓரத்திலும் நான் அவனுக்கு அடுத்தும் உட்கார்ந்து கொண்டோம். அவன் கோபமாகவே இருந்தான். நான் திரும்பி "சரி நீ  உட்கார்ந்துக்கோ  ..மாறிக்கலாம்..ஆனா கழுத்த ரொம்ப நீட்டி பாக்கக்கூடாது..நானும் "சன்ரைஸ்"  பாக்கணும்ல" என்றேன். அவன் சிரித்துக்கொண்டே மாறி உட்கார்ந்து கொண்டான்.

ரோஹன் எங்களுக்கு ரெண்டு சீட் முன்னாடி ஒரு ஸ்வெட்டர்  போட்ட பெரியவரிடம் உட்கார்ந்திருந்தார். இந்த  ஸ்வெட்டர்  பார்ட்டி எங்கள் கம்பெனியின் பெரிய தலை. மாதத்துக்கு ஒருமுறை இந்தியாவிலிருந்து வந்து எங்கள் ப்ராஜெக்ட்டின்அப்போதைய தலையெழுத்தை வாசித்து விட்டுப்போவார்.ரோஹன் தன் முழுத்திறமையும் காட்டி பிளேடைப்போட அவரும் இடையிடையே தலையாட்டி ஓத்துழைத்தார்.நான் பொறுமையிழந்த நிலையில் தான் அவர்கள் பேருந்தில் ஏறினார்கள்.முதலில் அவள் தான் வந்தாள்.

அவள் பெயர் மான்ஸ்வி. ஸ்கேர்ட்டும் கோர்ட்டும் போட்டுக்கொண்டு தேவதை போல வந்தாள்.இடது பக்கம் கடைசி சீட்டுக்கு முன்னாடி சீட்டில் ஜன்னலோரம் உட்கார்ந்தாள்.அவள் தலையிலிருந்த க்ளிப்பை எடுத்து கூந்தலுக்கு விடுதலை அளித்தாள்.பிற்பாடு அந்த பியூஸ் கடன்காரனும் வந்தான். அவன் அவள் பக்கத்தில் வந்து அமர்வதற்கும் பேருந்து கிளம்புவதற்கும் சரியாய் இருந்தது.முன்னால் பார்த்தேன் ரோஹன் அமைதியாய் உட்கார்ந்திருந்தார். ஸ்வெட்டர் ஆசாமி வலது பக்கம் குடைசாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.ரோஹனின் தாயுள்ளம் பற்றி எனக்கு தெரியுமாதலால் நான் வியக்கவில்லை.

பியூஸ் ஏதோ சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு ,மானஸ்வியின் தலையில் கொட்டினான். பக்கத்தில் தல்பீர் கடுப்பாகி "உச்" என சொல்லிவிட்டு பஞ்சாபியில் ஏதோ சொன்னான்.பழமொழி போல இருந்தது. பெரும்பாலும் "நாகூர் பிரியாணி..உளுந்தூர்பேட்ட நாய் " வகையறா சிலேடையாய் இருக்கும். என்னயிருந்தாலும் இந்த காதல் காட்சிகளை ரசித்து பார்ப்பதே எங்களின் மானங்கெட்ட பொழுது போக்கு அல்லது எங்களின் "சன்ரைஸ்". கொஞ்ச நேரத்தில் அவள் அவனை கிள்ளினாள்..அவன்,அவள் காதுக்குள் ஏதோ சொல்லி சிரித்தான்.

தல்பீர் என் பக்கத்தில் வந்து "என்னா கெமிஸ்ட்ரி..மத்தியானம் கூட அவன் வந்தப்புறம்  தான் அவ சாப்பிடுறா.."

"ஏன்.. அவ லஞ்ச் பேக் அவன் கிட்ட தான் இருக்குமா.."

தல்பீர் பதிலேதும் சொல்லவில்லை. நல்ல ஜோக் தான். நார்மலான நேரத்தில் கேட்டிருந்தால் லேசாவாவது சிரித்திருப்பான். இப்போது வாயைப்பிளந்து காதல் காட்சிகளை ரசிப்பதால் அவனது நகைச்சுவை உணர்வு மழுங்கி இருக்கலாம். இப்போது அவள் அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். அவன் அவளது விரலுக்கு சொடக்கெடுத்தபடி பேசிக்கொண்டிருந்தான்.மானஸ்வி விளம்பரப்பட ஹீரோயின் போல இருப்பாள். அலுவலக பேச்சிலர்களின் டாப் டார்கெட். பியூஷும் மெத்த படித்தவன், ஜிம் பாடி..எந்த நேரத்திலும் கிழிந்து விடலாம் என்கின்ற நிலையில் டைட்டான சட்டை அணிந்திருப்பான். 
 

தல்பீர் என் பக்கத்தில் வந்து "காலை இப்பிடி ஒரு டிராவல்ல தொடங்கிச்சுனா வேலை பாக்க ஆசையிருக்கும்..அதான் பியூஸ் அத்தனை அவார்ட் வாங்குறான்..எந்நிலைமைய பாரு ..உன் மூஞ்சவே எந்நேரமும் பாத்திட்டே  இருக்கேன்.."

சிரித்தேன். "அப்படி ரொம்ப காஞ்சிருந்தேனா என் விரலுக்கு வேணும்னா சொடக்கு எடுத்துக்கோ.." என என் கையை நீட்டினேன்.காலில் எத்தினான்.பேருந்து அலுவலகத்தை அடைந்திருந்தது. எல்லோரும் இறங்கத்தொடங்கினோம். ரோஹன் என்னைத்தேடியபடி காத்திருந்தார். பெரும்பாலும் அவர் அலுவலுகத்துக்குள் வந்தவுடன் என்னிடம் சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிரச்சனை" என்பதாகவேயிருக்கும். நான் என் லேப்டாப்பை திறப்பதற்குள்  கார்ப்பரேஷன் குப்பை லாரி போல எல்லாத்தையும் கொட்டுவார். நானும் முகத்தை சீரியஸாய் வைத்துக்கொண்டு கேட்டுவிட்டு ,"இந்தா ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்திடுறேன்" என சொல்லிவிட்டு தம்மை போட்டுவிட்டு அரைமணி நேரம் கழித்து வந்து தான் வேலையே தொடங்குவேன்.

ரோஹன் என் தோளில் கையை வைத்து ஓரமாய் கூட்டி வந்தார். தல்பீர் டாட்டா சொல்லிவிட்டு அவன் அறையை நோக்கி நடந்தான்.

"சிவா..கம்பளைண்ட் மாட்யூல் டீம்ல ஒரு பிரச்சனையாம்...பெரிய எஸ்கலேசன் ஆகிடுச்சாம்...நம்ம வேணும்னா  உள்ளே புகுந்து ஹெல்ப் பண்ண முடியுதானு பாப்போமா.."

"ஜி..நம்ம மாட்யூலே நட்டுகிட்டு நிக்குது..இதுல இதுவேறயா..போன வாரம் வீகென்ட் வேல பாத்தோமே ஞாபகம் இருக்கா..நீங்க எதுவும் கமிட் பண்ணிடாதீங்க.. "

இந்தாளு மேலிடத்துல ஸ்கோர் பண்ண, நாமெதுக்கு மெனெக்கெடனும்னு இருந்தது. எனக்கு வர வேண்டிய ப்ரமோஷன் வேறு தள்ளிபோய்க்கொண்டே இருந்தது.

"இல்லப்பா க்ளைன்ட்லாம் ரொம்ப அப்செட்டாம்..நம்ம ப்ராஜெக்ட்டுக்கு பெரிய ப்ரெஸ்ஸர்..நாம தானப்ப ஹெல்ப் பண்ணனும்..."

நான் மசிவதாய் இல்லை. "இந்த ப்ரெஸ்ஸர்..சுகரை எல்லாம் நான் நிறைய பார்த்துவிட்டேன் போங்கடா" என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

"யாரும் மூனு நாளா தூங்கலையாம்..துருவ் ..ப்ரியா ..மான்ஸ்வி..பாவம்ப்பா.."என்றார்.  

 நூறு கிலோமீட்டர் வேகத்தில் போய்க்கொண்டிருந்த கார் பிரேக் அடித்து நிற்பது போல மனசு நின்றது. மானஸ்வி  என்ற பெயர் மெதுவாய் காதுக்குள் ஒலித்தது. 

"சரி ரோஹன்..ப்ராஜெக்ட்டுக்கு ஒரு பிரச்சனைனா அது நமக்கும் தான் பிரச்சனை..நாம இறங்குவோம்.."

"எனக்குத்தெரியும்..நீ ஒரு டீம் மேன் யா" என தோளைத்தட்டினார்.

                                          
                                                                                                                        -தொடரும்