வியாழன், 29 ஏப்ரல், 2021

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 10
ரு பருந்து போல ஏர் டாக்சி கட்டிடங்களுக்கு ஊடே தயக்கமின்றி பறந்து கொண்டிருந்தது. மரங்கள் எந்த பகுதியிலும் தென்படவில்லை. வெகுசிலரே ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருந்தனர். கண்களில் பெரிய சைஸ்  கண்ணாடிபோல ஒன்றை  மாட்டியபடி இருந்தனர். எனக்கு இந்த ஆச்சர்யங்களை கவனிக்கிற சிந்தனை  இல்லை. எது சரி? எது தவறு ?  என்பதை ஆராய்வது கடினமாய் இருந்தது. ஈவா என் மனநிலை புரிந்தவள் போல என்னை சிநேகமாய் தோளில் தட்டினாள்.

"ஏங்க ஒரு வேளை பியூஸும் மானஸ்வியும் உண்மையா..தீர்க்கமா காதலிச்சாங்கன்னா..அதை பிரிக்கிறதும் கொலை மாதிரி தானே.."

"இது பொது விஷயம்..இரண்டு பேர் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல .. அந்த  உறவை  தொடரவிடுவது ..தடுப்பது  எதில் நன்மை இருக்கிறதென்று நீயே யோசித்துக்கொள் .. "

மெதுவாய் பேசினாள். வீட்டை நெருங்கியவுடன் "யூ ஆர் க்ளோஸ் டூ யுவர் டெஸ்டினேஷன்" என ஒரு எந்திரபெண் குரல் ஒலித்தது.மெதுவாக பால்கனியை ஒட்டி இறங்கியது. ஈவா கையிலிருந்த ரிமோட்டை அழுத்தினாள். படி போல ஒன்று விரிந்தது. இறங்கினோம். 

"மிஸ்டர்..நாம திரும்பனும்.. ரொம்ப யோசிக்க வேண்டாம்..சில நேரம் துடுப்பு போடத்தேவையில்லை..படகு அதுவே போகும்.."

அவள் பேசிக்கொண்டே அந்த உருண்டைப்பந்தை எடுத்தாள்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

"யோவ் சிவா..."

தொட்டு உலுக்கியவுடன் பதறி எழுந்தேன். தல்பீர் அலுவலகத்துக்கு கிளம்பி தயாராய் பேக்குடன் நின்றிருந்தான்.

"நைட் எப்போயா வந்த..எங்கய்யா போற...  நீ பாட்டுக்கு ஸ்பிரிட்டுவல் எக்ஸ்பிரிமெண்ட் பணறேன்னு எங்கயாவது போய் ஜீவ சமாதி அடைஞ்சுறாத..உங்க வீட்டுக்கு பதில் சொல்ல முடியாது...நா ஆபிஸ் போறேன் ..சீக்கிரம் வந்து சேரு.."

என் பதிலுக்கு காத்திராமல் அவன் நடக்கத்தொடங்கினான். புத்துணர்ச்சியாய் இருந்தது. தூக்கம் எதை செய்கிறதோ இல்லையோ தெளிவு கிடைத்தது போல ஒரு மாயையை மனதுக்கு கொடுத்து விடுகிறது. எழுந்து அலுவலகத்துக்கு கிளம்பத்தயாரானேன். ரொம்ப நாட்களுக்கு பிறகு ரசித்துக்குளித்தேன். மிகக்கடுமையான குளிரில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது ராஜசுகம். என்ன செய்யவேண்டுமென தெளிவாய் இருந்தேன். "சைமனிடம் பேசிப்பார்ப்போம்... ஏதாவது துப்பு கிடைத்தாலொழிய வேறு செயல்களில் ஈடுபடக்கூடாது..நடப்பது நடேசன் செயல் என பொத்திக்கொண்டு இருத்தல் வேண்டும்.." எனக்கு மிகவும் பிடித்த ப்ளூ சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு கிளம்பினேன்.

அலுவலகத்தில் நுழைந்தவுடன் என் இடத்தில் பேக்கை வைத்து விட்டு நேராய் இரண்டாவது மாடிக்கு நடந்தேன். அங்கே தான் இன்வென்ட்டரி டீம் இருந்தது. படிகளில் ஏறும்போது லேசாய்  முட்டி வலித்து,காலையில் சாப்பிடவில்லை என்பதை ஞாபகப்படுத்தியது. சைமன் வலது ஓரத்தில் அமர்ந்திருந்தான். 

"ஹே..சைம்... கேர் பாஃர்  எ  ஸ்மோக் "

"ஷிவ்.. கண்டிப்பா போலாம்"

அவன் லேப்டாப்பை மூடி விட்டு விருட்டென கிளம்பி வந்தான். தம்மடிப்பவர்கள்  சக தம்மர்கள் கூப்பிடுகையில் மறுக்க மாட்டார்கள். அது ஒரு பாரம்பர்யம். தவிர அந்நேரத்தில் மனது  விட்டு பேசலாம். ஆகையால் தான் நிப்பாட்டிய பழக்கத்தை திரும்பவும் கையிலெடுத்திருந்தேன். நடந்து மரத்துக்கு அடியிலிருந்த எங்கள் தம் ஸ்பாட்டிற்கு போனோம். நான் மார்ல்ப்ரோவை எடுக்க அவன் லைட்டரை எடுத்தான். பற்ற வைத்தோம்.பல வாரங்கள் கழித்து இழுப்பதால் ஜிவ்வென இருந்தது. நிக்கோடின் உள்ளுக்குள்  நுழைந்து "பாஸ் மறந்துடீங்களா..சௌக்கியமா" என்றது. கொஞ்ச நேரம் உலக விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம். விஷயத்துக்கு வந்தேன். 

"சைம்..அடுத்த சன்டே நம்ம மான்ஸ் பியூஸ் நிச்சியத்துக்கு வருவேல்ல..சாயங்காலம் டி.ஜே இருக்கு..."

சொல்லிவிட்டு அவன் முகத்தை உன்னிப்பாய் பார்த்தேன். ஒரு சிறு மாற்றம். என்னால் உறுதியாய் சொல்ல முடியவில்லை. அவன் எப்போதும்   உணர்வுகளை முகத்தில் வெளிக்காட்டமாட்டான். அலுவகத்தில் பெரிய போனஸ் தொகை வந்தாலும்..ஸ்டாக்கில் பணம் போனாலும் "அதுக்கென்ன ப்போ"  என்பது போலவே இருப்பான். உண்மைகள் உணர்வுகளுக்கு நடுவே சில நேரம் சிக்கிக்கொள்ளும். அதற்கு அடைப்பெடுத்தல் அவசியம். 

"தெரில..டவுட் தான்" . விடாமல் கொக்கி போட்டேன்.

"எதுவும் வேற பிளான் இருக்கா..கேர்ள் ஃபிரெண்ட் கூட சுத்தப்போறியா.."

பெரும்பாலும் ஐரோப்பியர்கள் தங்கள் சொந்த விஷயங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. என்னைப்போல இந்தியர்கள் அதை நோண்டி தெரிந்துகொள்ளாமல் விடுவதில்லை. அவன் அசௌகர்யமாய் முகத்தை வைத்துக்கொண்டு தன் வலது கை சுண்டு விரல் மோதிரத்தை காட்டினான். எனக்கு புரியாததை உணர்ந்து "இது ஒரு குறியீடு..நான் ஒரு கே..." என்றான்.

அந்த பதிலுக்கு  எப்படி  ரியாக்சன் கொடுக்க வேண்டுமென எனக்குத்தெரியவில்லை. உண்மையில் அவனை கட்டிப்பிடித்து தூக்கி சுத்தவேண்டும் போல இருந்தது.அமைதி காத்து "" வென சொன்னேன்.


"என்ன ஒரு மாதிரியா அதிர்ச்சியாகிற சிவா..ஏன் கேங்கிறது கேவலமா..அது ஏன் உங்க ஊர் ஆட்களுக்கு புரிய மாட்டிங்குது..சமுதாய சந்தோஷத்துக்கு எதிர்பாலரோட கல்யாணம் பண்ணியே ஆகனும்..உணர்வுகள ஏமாத்தி நம்மள கல்யாணம் பண்ணிக்கிறவுங்கள ஏமாத்துறது தான் கேவலம்"

அவன் கண்கலங்கியபடி பேசிக்கொண்டிருந்தான்.

"இங்கெல்லாம் இது உங்க ஊர் போல பாவச்செயல் கிடையாது. ஆப்பிள் சி.ஈ.ஓ டிம் குக் கூட கே தான்..மாவீரன் அலெக்சாண்டர்..டாவின்சி..எத்தனையோ பேர் எங்கள் இனம் தான். இனம்,நிறம், வயது,பொருளாதாரம் தாண்டி காதல் செய்வது போல..இதுவும் ஒரு காதல் ..அவ்வளவே.."  

அவன் என்னைப்பார்க்காமல் கீழே பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தான். நான் அவனிடம் "யாரு பியூஸா??" என்றேன். அவன் என்னை ஆழமாய் பார்த்தான்.

"வீட்ல ஒத்துக்க மாட்டாங்களாம்..அவ.. அந்த குட்டச்சிய கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் எல்லாரும் விரும்புறாங்களாம்..நாங்க சிரித்து சேர்ந்திருந்த தருணங்கள் எல்லாத்தையும் மறந்திரனுமாம்..எல்லாம் பேசிவிட்டு ஏன் அழுதான்.." 

குலுங்கி குலுங்கி அழுதான். என் கைகளை இருக்க பற்றிக்கொண்டான். அவனுக்கு நான் ஏதாவது ஆறுதலாய் சொல்லியே ஆகவேண்டும். என் ஆறுதல்கள் எந்தக்காலத்திலும் ஒர்க்கவுட் ஆனதில்லை. அழுதுகொண்டிருப்பவர்கள் அடுத்த கியரில் அழுகையை உயர்த்துவார்கள்.இருந்தும் முயன்றேன்.

"நீ அந்த குட்டச்சியிடமே பேசலாமே..ஒரு வேளை உங்கள் காதலின் உயரம் அவளுக்கு புரியலாம்.." 

அவனது ஆறரை அடிக்கு பக்கத்தில் எல்லாருமே குட்டையர்கள் தான். அவன் கன்னத்தை துடைத்துக்கொண்டு ஏதோ சொல்ல வந்தான். அதற்குள் "பாபாஜி" என சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப்பார்த்தோம். தல்பீர் சிரித்துக்கொண்டே கையாட்டிய படி வந்து கொண்டிருந்தான். சைமன் "நான் கிளம்புறேன்" என வேகமாய் நடந்தான். இன்னும் கொஞ்ச நேரம் கிடைத்திருந்தால் சைமனை சார்ஜ் ஏற்றி அனுப்பியிருப்பேன். அதற்குள் இந்த டர்பன் அணிந்த வேதாளம் வந்து விட்டது.

"ஜி..என்ன தம்மா...ஒரு மாசத்துல எத்தனை தடவயா நிப்பாட்டுவ..ஆரம்பிப்ப.. சரி அடிக்க போறேன்னு தெரியும்ல..என்னைய கூப்பிடலாம்ல..உங்களுக்கு ஒப்பாரி வைக்குறதுக்கு..பேண்ட்லயே ஒன்னுக்கு போறதுக்கு மட்டும் நாங்க..மத்ததுக்கெல்லாம் அந்த வளந்தாம் பாண்டியனா.."

நான் ஏற்கனவே இருந்த வெறியை அடக்கிக்கொண்டு அமைதியாய் நின்றேன்.இவனிடம் அது பற்றி கேட்டாலென்னவென்று தோன்றியது.

"டேய் தல்பீர்..இந்த கே லவ் பத்தி என்ன நினைக்குற.."

முகத்தை கோணலாக்கி மேலே பார்த்து விட்டு திரும்பி "அதெப்படி சிக்கன் 65 ஐ சிக்கனே திங்கும்.." என்றான். அதற்கு மேல் அவனை பேச விடாமல் சிகரெட் ஒன்றை எடுத்து அவன் வாயில் வைத்து பற்ற வைத்தேன். இருமினான்.

--------------------------------------------------------------------------------------------------------

முன்னமே நானும்  ஈவாவும்  பேசிக்கொண்ட படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த சவுக்கு காட்டிற்கு வந்து மரத்தின் அடியில் தோண்டி எதுவும் கடிதம் இருந்தால் எடுத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். இங்கே ஏற்பட்டிருக்கிற முன்னேற்றங்களையும் அவளுக்கு பதில் கடிதம் எழுதி வந்தேன். ஈவா அதிகம் எழுத மாட்டாள். விடாமல் போராடு..தோய்ந்துவிடாதே.. போன்ற ரீதியில் இருக்கும்.அன்றும் இரவில் அங்கு சென்று கடிதத்தை எடுத்து வந்தேன். இருட்டில் படிக்க முடியாதென்பதால்,ரூமுக்கு வந்து சாவகாசமாய் படிப்பேன்.  ரூமை நெருங்கிய போது சத்தம் அதிகமாக இருந்தது.

கதவைத்திறந்தேன். உள்ளே பெரிய கூட்டம் இருந்தது. யோரீஸும் ரெபெக்காவும் எல்லோருக்கும் ஒயினை சின்ன கிளாஸ்களில் கொடுத்துக்கொண்டிருந்தனர். ரெபெக்கா  என்னை பார்த்தவுடன் "சீக்கிரம் வா..அந்த பார்பிக்யூ அடுப்புகளுக்கு பக்கத்தில் நின்று கொள்..கருகாமல் பார்த்துக்கொள்.."  என்றாள். எனக்கு சில மைக்ரோ நொடிகளில் இது தல்பீர் பிறந்தநாள் கொண்டாட்டம் என ஞாபகம் வந்தது. அடுத்த நாளைய பிறந்தநாளுக்கு முந்தைய இரவு பார்ட்டி. தல்பீரைத்தேடினேன். எங்களது கொல்லைப்புறத்தில் பியர் பாட்டில்களுடன் குழுக்கள் குழுக்களாய் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர்.எல்லோரும் யோரீஸ்-ரெபெக்காவின் நண்பர்கள். அடிக்கடி பார்த்திருக்கிறேன். சிலர் "ஷிவ்" என கை காட்டினர். சிரித்து வரவேற்றேன். தல்பீர் ஓரமாய் சில பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தான். "சிங் இஸ் கிங்"  பாடல் உச்ச சத்தத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது.

"சர்தார்ஜி..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்". அவனை கட்டி அணைத்தேன்.

"சிவா ஜி.. வாங்க நீங்க வராம போய்ருவீங்களோனு பயந்தேன்..நீங்க குடிச்சிட்டு வாந்தியெடுக்காத பிறந்த நாளெல்லாம்..ஒரு பிறந்த நாளா.." 

குஷி மூடில் இருந்தான். பக்கத்தில் போனேன். "த்தா..டே..தள்ளி நின்னு ஆடு.. அப்புறம் காலைல எந்திருச்சு 'வ்வாய்குரு..என்னை மன்னியுங்கள்' னு சாமி போட்டோ முன்னாடி ஒப்பாரி வைக்காத..போன பாக்சிங் டே ஞாபகம் இருக்கா.." 

"ஹா(ன்)ஜி..கண்டிப்பா ஜி..உங்கள மாதிரி ஒருத்தர் எல்லா பார்ட்டிக்கும் தேவ.."

சிரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பி பார்பிக்யூ அடுப்புக்கு அருகில் போனேன். வெந்த சிக்கனையெல்லாம் தட்டில் போட்டுவிட்டு, புதிய ஸ்டிக்குகளை சொருகினேன். குளிருக்கு இதமாய் இருந்தது. ஈவா யாரோ ஒரு பையனுடன் வந்திருந்தாள். அதாவது ஈவா ஜூனியர்.அவர்கள் மிக நெருக்கமாக இருந்தனர். சந்தோசமாய் இருந்து விட்டு போகட்டும் என நினைத்துக்கொண்டேன். சட்டென சீனியர் ஈவா எழுதிய கடிதத்தை படிக்கவில்லை என ஞாபகம் வந்தது. அருகில் யாருமில்லாததால் பாக்கெட்டிலிருந்து மெல்லமாய் எடுத்தேன்.

"ஷிவ்... நமக்கு ஒரு சங்கடம்..என் லேபில் வேலை செய்து வந்த லூகாஸை போன மாதம் வேலையை விட்டு நீக்கியிருந்தேன். அவனுக்கு அதீத போதைப்பழக்கம் இருந்தது. என் கம்ப்யூட்டரை வேறு ஹேக் செய்திருந்தான். என் மீது கோபத்தில் தான் போனான். சுமார் நாலு வாரமாய் அவனை இங்கே காணோம்.என்னிடமும் வந்து விசாரித்தார்கள். அவன் தத்தி தான்.. இருந்தும் நான் உருவாக்கிய டாக்குமென்டுகள் கொஞ்சம் விவரணையாய் இருக்கும். ஒரு வேளை அவன் அங்கு பயணப்பட்டுருப்பானோவென கவலையாய் இருக்கிறது..அவன் ஒரு சைக்கோ..எந்நேரமும் போதை மருந்துகளால் போடப்பட்ட டாட்டூவின் மயக்கத்திலேயே சுற்றுவான். அவன்  பழமைவாத கூட்டமான "ரெட்" டை சேர்ந்தவன் என்கிற புரளியும் உண்டு. பயப்படவேண்டாம்.. எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு..நான் நாளை வருகிறேன்.."


பயப்பட வேண்டாமென்ற பதத்திற்கு முன்னும் பின்னும் சொல்லப்படுபவை பெரும்பாலும் பயப்படும்படியானதாகவே இருக்கும். எங்கள் பிரச்சனைகள் குட்டிபோட்டபடி இருந்தன. இவைகளுக்கு கடவுள் கருத்தடை செய்தாலென்ன என்றிருந்தது. கடிதத்தை மடித்து பாக்கெட்டில் வைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தேன்.ஜூனியர் ஈவா முத்தத்தில் முன்னேறிக்கொண்டிருந்தாள். இருவரின் நெருக்கத்தில் அந்த இடம் கொஞ்சம் சூடானது. பக்கத்தில் இருப்பவர்கள் சிரித்துக்கொண்டார்கள். நான் கூட அவளிடம் "ஏம்மா..அவன வாய் வழியா முழுங்கப்போறியா.. பொறும..பொறும.." என கத்தலாமென நினைத்தேன். அப்போது தான் அவளது ஜோடியை பார்த்தேன். அவன் ஆளே வித்தியாசமாய் இருந்தான். தலை முடி சிவப்பாய் இருந்தது. நான் அதுவரை அவனை எங்கள் கூட்டத்தில் பார்த்ததில்லை. அவன் கை...கழுத்துகளில் நிறைய டாட்டூக்கள் இருந்தது..அவன் லேசாய் என்பக்கம் திரும்பி சிரித்தான்.  

                                                                                                                   ----தொடரும் 

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 9


தல்பீருடைய ஷூக்கள் கால்களுக்குள் சரியாய் பொருந்தவில்லை. கொஞ்சம் வேகமாய் நடந்தால் கழன்று விழுந்து விடும் போல இருந்தது. சாக்ஸை கீழே இறக்கிவிட்டு நிலைமையை சரி செய்ய முயன்றேன். ரோஹன் அதற்குள் அந்த பக்கம் வந்தார். யாரை எந்நேரங்களில் சந்திக்க கூடாதென நினைக்கிறோமோ அவர்களை கனகச்சிதமாய் அந்நேரத்தில் விதி அழைத்து வரும். ஒரு மஞ்சள் கலர் டிராக் பேண்ட்டில் சிரித்த படி என்னை மேலும் கீழும் பார்த்தார்.காதில் ஒரு ஹெட் போன். அது நாலைந்து இடங்களில் ஒட்டு போடப்பட்டு இருந்தது.

"ஷிவ்...யோகா..மெடிடேஷன்..இப்போ ஜாக்கிங்கா... வரீங்களா போலாம்.."

"இல்லங்க ..தல்பீருக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..நீங்க போங்க.."

"ஓ..அவரு வேறயா..இன்னைக்கு மழை..புயல்னு பிச்சுக்க போகுது.."

லேசாய் சிரித்தேன். மற்ற நேரங்களில் நிறைய சிரித்து அவரை மகிழ்வித்திருப்பேன்.இப்போது மூளை அவுட் ஆஃப் ஆர்டரில் இருக்கிறது. அவர் மெதுவாய் ஓடத்தொடங்கினார். மனதிற்குள் திட்டத்தை ஓடவிட்டேன் "அவள் ஆறு மணிக்கு கீழிறங்கி வருவாள்..தனியாகத்தான் வருவாள்..வர வேண்டும் .. நான் ஷூ லேஷை மாட்டுவது போல நடித்துக்கொண்டிருப்பேன்..என்னை பார்ப்பாள்..பேசுவாள்..அப்பிடியே சொருகிக்கொண்டு  கூடவே ஜாக்கிங்  போக  வேண்டும் " . எல்லாத்தையும் சமாளித்து விடலாம் ஆனால் அவள் வேகத்துக்கு ஓடுவது கஷ்டம். என்ன ஒரு மானக்கேடான சங்கடம். யாரோ படியிறங்கும் சத்தம் கேட்டது. அவளாய்த்தான் இருக்க வேண்டும். நான் என் ஷூ லேஸ்களை ஆராயத்தொடங்கினேன். "ஒரு வேளை அவ கண்டுக்கிடாம போய்ட்டா.. இல்ல ..வாய்ப்பில்ல ..கண்டிப்பா பேசுவா...ஆயிரந்தான் பழைய ஐடியாவா இருந்தாலும் இது ப்ரூவன் டெக்னிக் .." 

மானஸ்வி "சிவா" என கூப்பிட்டாள். மூன்று மணியிலிருந்து முழித்திருந்து வேலை செய்தது வீண்போகவில்லை. மெதுவாய் நிமிர்ந்து அவளை பார்த்தேன். ஒரு பொம்மை படம் போட்ட டீ ஷர்ட் ..டைட்டான கருப்பு ட்ராக் அணிந்திருந்தாள். தலை முதல் கால் வரை ஒரு அலை உருவாகி என்னை லேசாய் உலுக்கியது. "சே..அந்த கிழவி மட்டும் சேட்டை பண்ணாம இருந்திருந்தா இந்நேரம் நாங்க எப்படி இருந்திருப்போம்..".மனது பல காதல் காட்சிகளை அந்த பாதி வினாடியில் கற்பனை பண்ணி ரசித்து திரும்பியவுடன் நான் "ம்..சொல்லுங்க" என்றேன். முகத்தை விரைப்பாய் வைத்துக்கொண்டேன்.

"கொஞ்சம் பேசலாமா.."

"அதுக்கா ஷூ..பேண்ட்..டீ ஷர்ட்லாம் போட்டு வந்திருக்கீங்க.."

குறும்பாய் முறைத்து பார்த்துவிட்டு "அப்போ வாங்க..ஜாக் பண்ணிட்டே பேசலாம்" என்றாள்.சரியென்றபடி தலையாட்டினேன். அவள் ஓடினாள். என் கால்கள் அவளை தொடர்ந்தன. குளிர் கொஞ்சம் அதிகமாய் இருந்தது. பேசும் போது இருவரது வாய்களிலும் புகை வந்தது.முதலில் கொஞ்ச தூரம் பேசாமல் ஓடிக்கொண்டிருந்தோம். எதிர்பார்த்தது போல அவளே ஆரம்பித்தாள். 

"நீங்க என் மேல கோபமா இருப்பீங்க..ஆனா என் நிலைமையும் புரிஞ்சிருக்கும்..எனக்கு கல்யாணம் ஆகப்போகுது..தப்பா ரூமர் ஏதாவது 
கிளம்பி பிரச்சனை ஆகிடுமோனு பயம்..அதான் யோசிக்காம அப்பிடி பேசிட்டேன்..பியூஸுக்கு ஷார்ட் டெம்பர்..பார்த்தா தெரியாது..அன்னைக்கு நான் சைமன்ட்ட பேசிட்டு இருந்தப்போ கூட அப்செட் ஆகிட்டான்..சில நேரம்  ஜாலியா பண்றது வேற மாதிரி சங்கடத்த கொடுத்திடும்.."

நான் அமைதியாய் ஓடி வந்துகொண்டிருந்தேன். எதுவும் பேசவில்லை. அவள் என்னை திரும்பி பார்த்த படி ஓடி வந்தாள். ஏ.டி.எம்மில் பின் நம்பர் அடித்து விட்டு காசுக்கு காத்திருக்கும் நபர் போல என்னையே பார்த்தாள். நான் நின்றேன். அவளும் நின்றாள். நான் எதுவும் பேசுவதற்கு யோசித்து வைக்கவில்லை. மனதிலிருப்பதையே சொல்லிவிடுதல் சாலச்சிறந்தது.

"மானஸ்..அது தப்பு தான்..மாற்றுக்கருத்தில்லை..சில நேரம் திருடி மாட்டிக்கிட்டவன்ட்ட கூட "ஏன்டா பண்ணினே" னு கேப்பாங்க...அவன் சொல்ற காரணம் அவன் வாங்கப்போகும் சில உதைகளை குறைக்கும் தகுதியையாவது பெற்றிருக்கும்.."

"ஜி..என்னங்க இவ்வளோ சீரியஸா போறீங்க..நானே உங்கள கூல் பண்ணி பழைய ஜாலி வெர்சனுக்கு கொண்டு வரலாம்னு வந்தா.."

அந்த நிமிடத்தில் டபிள்யூ.டபிள்யூ.எஃப்பில் எதிராளியை அண்டர்டேக்கர் கழுத்தை பிடித்து தூக்கி போடுவது போல அவளை  தூக்கிப் போடவேண்டும் போல இருந்தது. நான் கோர்வையாய் போய்க்கொண்டிருக்கையில் குறுக்கே புகுந்து ட்ராக் மாத்துகிறாள். அந்த ஜெர்ரிப்பழ  உதடுகளை பார்த்து சாந்தமானேன்.தொடர்ந்தேன். அவள் கண்களை குறுக்கி கேட்க தயாரானாள்.

"எப்படி சொல்றது..நா உங்கள தூரமா இருந்தே சைட் அடிச்சிட்டு..இது ஹீரோயின் கணக்கா இருக்கு நமக்கெல்லாம் வாய்ப்பே இல்லனு தள்ளிதா இருந்தேன்... பக்கத்துல பாக்குறப்போ வேற மாதிரி தெரிஞ்சீங்க..அழகா இல்லேன்னாலும் புடிச்சிருக்கும்னு தோணுச்சு.. அன்னைக்கு நைட் மூனு மணி நேரம் தம்மடிச்சிட்டே பேசிட்டிருந்தோம்ல..அப்போயே விழுந்துட்டேன்..யாரோ சொன்னது மாதிரி காதல் ஒரு பாழும் கிணறு..அங்கே யாருக்கும் கண் 
தெரிவதில்லை .. எனக்கு பியூஸ்..நிச்சியதார்த்தம் ..எதுவும் தெரில ... "

அவள் செயற்கையாய் முறைத்தாள். "சீரியஸாவா பேசுறீங்க ..."  

நான் அவளையே பார்த்தேன். "வேணும்னா உங்க நிச்சய பத்திரிக்கை ஒரு காப்பி  கொடுங்க...திங்குறேன்...செரிக்கட்டும்.. அப்புறமாச்சும் மனசுக்கு புரியுதா பாக்கலாம்.. ஒன்னும் சொல் பேச்சு கேட்க மாட்டிங்குது.."
  
"ஆர்.யூ நட்ஸ்??"

"ரொம்ப இழுக்க வேணாம்..எனக்கு உங்கள பிடிச்சிருக்கு..அவளோ தான்..மத்த படி நடக்குறது நடக்கட்டும்.. "

சொல்லி விட்டு பின்னால் திரும்பி வேகமாய் நடக்கத்தொடங்கினேன். அவள் என்னையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

வாவிடம் நடந்ததை ஒப்பித்தேன். அவள் அமைதியாய் கேட்டுக்கொண்டே இருந்தாள். பெரும்பாலும் அவள் மரங்களையும் வானத்தையும் வெறித்தபடியே தான் இருப்பாள். கையில் ஒரு க்ரீம் போல வைத்திருந்தாள் அதை அடிக்கடி முகத்தில் போட்டுக்கொண்டாள். அதை போட்டவுடன் முகத்தின் சுருக்கங்கள் கொஞ்சம் குறைந்தது போல இருந்தது.

"பரவால்ல ..விடாம முயற்சி பண்ணனும்..நமக்கு டைம் வேற இல்ல..அந்த டைரி ஏதாவது உபயோகப்படுமா..."

"ம்ம்ஹீம்..கவிதையா எழுதி கொன்றுக்கா.. "

லேசாய் சிரித்தாள். இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டே "கோஸி" ரெஸ்டாரண்ட் வரை வந்தோம். அவளுக்கு ரொஸ்டேட் ஸ்டீக் சாப்பிட வேண்டும்  போல இருப்பதாய் சொன்னாள். 

"ஈவா..அவளுக்கு பிடிக்குதா பிடிக்கலையாங்கிறதே பாயிண்டுக்கே இப்போ வரல..அதாவது அவ ஏற்கனவே கமிட் ஆன பையன் கூட கல்யாணம் ஆகப்போகுது..அவளை பொறுத்தவரை அந்த கேள்வி தேவையில்லை..ஐ ம்  இரெலெவன்ட்..."

அவள் நான் பேசுவதை கேட்கிறாளா தெரியவில்லை. அவள் கவனமெல்லாம் ஸ்டீக்கை தின்பதிலேயே இருந்தது. மாடு மேய்ந்து பார்த்திருக்கிறேன். மாடையே இப்படி மேய்ந்து அன்று தான் பார்த்தேன். "இந்த டேஸ்ட் அங்க வரல " என்றாள்.  ஏதோ பக்கத்து ஊரை சொல்வது போல சொன்னாள். மனதிற்குள் அப்போது தான் அது தோன்றியது. கேட்டும் விட்டேன்.

"ஏன் ஈவா.. நா வேணும்னா ஒரு தடவ அங்க வந்து பாக்கவா...அதாவது 2050க்கு..பார்த்தா ஒரு ஐடியா கிடைக்கும்ல...வேற ஏதாவது கீ பாயிண்ட் கிடைக்கலாம்.. ஒரு தடவ அந்த மானஸ்வியயும் குடும்பத்தையும் பார்த்தா நல்லா இருக்கும்னு தோணுது.."

"ஒனக்கு இன்னும் நம்பிக்கை வரல??"

"சே சே.. அதுக்கில்ல... ஒரு மோட்டிவேஷனுக்குத்தான்... சாதாரணமா ஓடுறதுக்கும் நாய் துரத்தும்போது ஓடுறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல.."

அவள் கொஞ்சம் யோசித்தபடி  என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். "ஆனா நீ அங்க த்ரீ அவர்ஸுக்கு மேல இருக்க முடியாது..ஐ.டி செக் ரேண்டமா நடக்கும் ..மாட்டுனா வெளிலயே வர முடியாது.. மரண தண்டனை கூட கிடைக்கலாம்.." 

"மூனு மணி நேரம் போதும்.."

"சரி வா"  என்றபடி நடந்து போனாள். நான் அப்படியே பின்னால் நடக்கத்தொடங்கினேன். ரொம்ப தூரம் நடந்து ஒரு ஊசி மர காட்டை அடைந்தோம். எனக்கு வியர்க்கத்தொடங்கியது. "இப்படியே நடந்தேவா முப்பது வருஷம் பின்னால போகப்போறோம்". அவள் வேகமாக நடந்து ஒரு மரத்தின் அடியில் மண்ணை தோண்டினாள். நான் முன்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். உள்ளே புதைந்திருந்த ஒன்றை எடுத்தாள்.உருண்டையாய் தங்க நிறத்தில்  பந்து போல இருந்தது. பாக்கெட்டில் இருந்து ஒரு கண்ணாடிக்குடுவையை எடுத்து அதற்குள் சொருகினாள். 

"இதென்ன"

"சீசியம்"

அதை உள்ளே போட்டவுடன் அந்த தங்கப்பந்துக்குள் ஆங்காங்கே சின்ன விளக்குகள் எரிகிறது. ஏதோ இயந்திர சத்தங்கள் கேட்கிறது. அதில் ஒரு சின்ன பொத்தானை அமுக்கினாள்.உடனே பக்கத்து திரையில் எண்கள் வந்தது. அது முப்பது..இருபத்தி ஒன்பது என்று குறைந்து கொண்டிருந்தது..அந்த பந்தை அவள் கீழே வைத்து விட்டாள்.

"கைய பிடிச்சுக்கோ..நா போகுற திசைலேயே வா..உடம்பு அதிரும்..காது அடைக்கிற மாதிரி இருக்கும் பயப்படாத.."சொன்னவுடன் பயம் வந்தது. திரையில் எண் பூஜ்ஜியம் என வந்ததும். "உஸ்.." என ஒரு சத்தம் வந்தது. பின் புகை போல ஒன்று பந்திலிருந்து கிளம்பி கருப்பாய் ஒரு வட்டத்தை உருவாக்கியது.பார்க்க அது பெரிய மர பொந்து போல இருந்தது. ஈவா என் கையை பிடித்த படி அதனுள் நடக்கத் தொடங்கினாள். முதலில் எதிர்காற்றில் நடப்பது போல தான் இருந்தது. ஆனால் பின்னர் தான் கவனித்தேன் எடையே இல்லாதது போல இருந்தது. முழுக்க இருட்டாய் இருந்தது. சில வினாடிகளில் திடீரென கீழே விழுந்தோம்.
எழுந்து பார்த்தால் ஏதோ வீட்டில் இருக்கிறோம். ஈவா யதேச்சையாய் எழுந்து நடந்து போனாள். அது ஈவாவின் வீடு. இது போன்ற நேரப்பயணங்களுக்கு பிரச்சனை வரக்கூடாதென வாங்கியிருக்கிறாள்.   

ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். வானளாவிய கட்டிடங்கள் இருந்தது. ஒரு கண்ணாடி பெட்டிக்குள் இருவர் உட்கார்ந்தபடி மிககுட்டி விமானம் போல ஒன்று பறந்து கொண்டிருந்தது. நான் வியந்து பார்ப்பதை பார்த்து ஈவா "அது ஏர் டேக்சி..நெதெர்லாந்துல மட்டும் பத்து மில்லியன் இருக்கு..ஸ்மால் அண்ட் ஸ்லீக்..நோ மோர் கார்ஸ் " என்றாள்.    

"ஏங்க அப்போ இந்தியா எப்படி இருக்குங்க..அது இன்னேரம் வல்லரசாயிருக்குமே..அப்பவே புதிய இந்தியா பிறந்திருச்சு.."

"அப்படிலாம் தெரில.. நியூஸ்ல இப்போ தான்  பாத்தேன்..இந்தியால யாரோ பழைய பிரதமருக்கு இருபதாயிரமடில சிலை வக்கிறாங்களாம்..அவரு வெள்ளை தாடி வச்சுக்கிட்டு..கைல தட்டு டம்ளர் வச்சுக்கிட்டு நிக்கிற மாதிரி சிலை இருந்திச்சு..கீழ "கொரோனாவை விரட்டிய நல் வேந்தே" ங்கிற ரீதில   ஏதோ எழுதியிருந்தது."

தலையில் கை வைத்துக்கொண்டேன். ஜீயை அப்புறம் டீல் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து "எப்போ அவுங்கள பாக்கலாம்" என்றேன்.


கொஞ்ச நேரத்தில் டேக்சியில் ஏறினோம். வீட்டின் பால்கனியில் வந்து ஹார்ன் அடிக்கிறார்கள். எல்லார் வீட்டிலும் பால்கனிக்கு பக்கத்தில் படிக்கட்டுகள் இருக்கிறது. எளிதாய் ஏறி அமர்ந்து விடலாம். ஏறியவுடன் திரையில் அட்ரஸ் அடித்தால்,அதுவே பறக்கிறது. ட்ரைவரெல்லாம் கிடையாது. நாங்கள் அந்த வீட்டின் பக்கத்தில் இறங்கிக்கொண்டோம். முதல் முதலாய் என்னைப் பார்த்தேன். நானும் மானஸ்வியும் வாசலில் சேரில் உட்கார்ந்திருந்தோம். முடி முழுக்க நரைத்துப்போயிருந்தது. மானஸ்வி கொஞ்சம் குண்டாய் இருந்தாள். அவளுக்கு முடி குறைந்து போயிருந்தது.  "காலைல கரெக்ட்டா வாக்கிங் வரணும்... அப்புறம் ஏப்பமா வருதுன்னு புலம்பக்கூடாது" என என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். நான் எச்சிலை முழுங்கிக்கொண்டேன். ஒரு பெண் வந்து எங்களுக்கு க்ளாசில் ஏதோ கொடுத்தாள். அவளுக்கு முகம் என் ஜாடையில் இருந்தது. அவளைப்பார்த்ததும் எனக்கு உடல் சிலிர்த்தது. கொஞ்சமாய் நடந்து வீட்டின் மூலையில் உள்ள ரூம் ஜன்னலுக்கு பக்கத்தில் போனோம். ஈவா என் கையில் கிள்ளி "அங்க பார்" என்றாள். அந்த அறையின் சுவற்றில் அந்த படம் மாட்டப்பட்டிருந்தது. நானும் மான்ஸ்வியும் திருமண உடையில் ஒருவர்மீதொருவர் சாய்ந்து கொண்டு புகை பிடித்துக் கொண்டிருக்கிறோம்.மிக இயல்பாய் அந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. எனக்கு கண்ணீர் வந்தது. ஈவா தோளைத்தட்டினாள். "அப்போ பியூஷ் என்ன பண்றான்..நமக்கு அத வச்சு ஒரு ஐடியாகிடைச்சா.."  

"நமக்கு டைம் இல்ல.."

"ப்ளீஸ் "கையிலிருந்த செவ்வக மெஷினில் தட்டி  பியூஷின் அட்ரெஸ்ஸை கண்டுபிடித்தாள். அடுத்த பத்தாவது நிமிஷத்தில் அங்கே இருந்தோம். பியூஸ் பெருசாய் மாறவில்லை. கொஞ்சம் கூன் போட்டிருந்தான். அவன் ஹாலில் கையில் கிளாஸுடன் பேசிக்கொண்டிருப்பது தெளிவாய் கேட்டது. பக்கத்தில் போய் காது கொடுத்தோம்.

"இந்த காதலின் வெற்றியை நாம கொண்டாடணும்..இன்னைக்கோட நாம கல்யாணம் பண்ணி இருபத்தியெட்டு வருஷம் ஆச்சு..எத்தனை சவால்கள்..எத்தனை வலிகள்.."

 அவன் மனைவி அந்த பக்கம் நின்றிருக்க வேண்டும். இவன் அவளை மறைத்த படி பேசிக்கொண்டிருக்கிறான்.வீட்டில் வேறு யாருமில்லை. அவன் யாரை மணந்திருக்கிறான்னு தெரிஞ்சா அது உபயோகமா இருக்கும்.

"எத்தனை வேதனைகள்..அப்போல்லாம் வீடு கூட கொடுக்க மாட்டானுங்க.. எங்க போனாலும் கேலி..இப்போ உலகமே மாறிடுச்சு.. "  என அவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அந்த பக்கத்திலிருந்து சைமன் வந்து பியூஷை கட்டிப்பிடித்து "ஹாப்பி  28த் அனிவெர்சரி டியர் " என்றான்.

                                                                                                             - தொடரும் 

 

வியாழன், 15 ஏப்ரல், 2021

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 8

 


நான் அந்த மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு விழுந்துகிடந்த பூக்களை பார்த்தபடியிருந்தேன்.மூளையால் அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை.நம் முன் நடக்கும் சில சம்பவங்களுக்கு பதிலேதும் கிடைப்பதில்லை . கண்மூடித்தனமான நம்பிக்கை இருக்க வேண்டும் அல்லது அவற்றிடம் சரணடைவதை தவிர வேறு வழியில்லை. நான் ஈவாவின் பக்கம் எந்த நேரமும் சாய்ந்துவிடும் மனநிலையில் இருந்தேன். இருந்தும் அவளின் பேச்சை முழுமையாக நம்புவதிலும் சங்கடங்கள் இருக்கத்தான் செய்தது. அவள் மரத்தின் இடது ஓரத்தில் அமர்ந்திருந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"ஷி..சிவா.. கடந்த காலமும் நிகழ் காலமும் எதிர் காலமும் ஒரே நேரத்தில் நடந்து கொண்டே இருக்கின்றன..திரும்ப.. திரும்ப.. அதாவது இன்று ரெஸ்டாரண்ட்டில் நடந்த சம்பவம் பல முறை நடந்து விட்டது.."

நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் குச்சியால் மண்ணை நோண்டியபடி பேசிக்கொண்டிருந்தாள். முகம் சுருக்கங்களுடன் இருந்தது. நன்றாய் உற்றுப்பார்த்தேன்,கண்டிப்பாய் அது ஈவா தான். ஒற்றை நாடி. ஒடிந்த புருவம்.

"இந்த சங்கிலி நிகழ்வுகளில் ஏதோ ஒன்றை மாற்றிவிட்டால் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்..அந்த தவறை நான் செய்து விட்டேன்.."

நான் அவளை குறுக்கிட்டேன். "மேடம்..நீங்க எப்படி இங்கே வந்தீங்க..அப்பிடி என்ன தப்பு பண்ணீங்க.."

அவள் என்னைப்பார்த்து சிரித்தாள். 

"நீ..எண்ணங்கள் முழுக்க நீ தான் இருந்தாய்..இதோ என் காதல் நிராகரிக்கப்பட்டவுடன் பவுதீக படிப்பில் நேரத்தை செலவிட்டேன். எத்தனையோ ஆண் நண்பர்கள் வந்து போனாலும் யாரும் என்னை ஈர்க்கவில்லை. ஆராய்ச்சிகளும் பட்டங்களும் விருதுகளும் வந்து கொண்டே இருந்தன. நீ உன் காதலில் அடுத்த கட்டங்களுக்கு முன்னேறினாய். திருமணம் செய்தாய்..பிள்ளைகள் பெற்றாய்...என்னையே உன் சொந்த விழாக்களுக்கு அழைத்தாய். அப்படி ஒரு கோபமான நாளில் தான் நான் ராபெர்ட்டை திருமணம் செய்ய முடிவு செய்தேன். அவன் நல்லவன் தான்.ஆனால் என் புகழையும் உயரத்தையும் அவனால் சகித்து கொள்ளமுடியவில்லை. டிபிக்கல் ஆம்பள..நிறைய ஆண்கள் ,பெண்களின் வெற்றியை ரசிக்கிறார்கள் அது அவர்களுக்கு கீழே இருக்கும் வரை.."

அவள் கையில் வச்சிருந்து குச்சியை தூக்கி தூர எறிந்தாள்.

"எனக்குக்கிடைத்த  மிகப்பெரிய ஆசிர்வாதம் "சியா". ராபெர்ட்டுக்கும் அவள் நா உயிர் தான்.எனக்கும் ராபெர்ட்டுக்கும்  மிகப்பெரிய இடைவெளி வந்திருச்சு. சியாவுக்காக தான் விவாகரத்தை தள்ளி வச்சிருந்தோம்..அது ரொம்ப மன அழுத்தம் நிறைந்த நாட்கள்.. அப்போ தான் எனக்கு நோபல் கூட  கிடைச்சது..முனிச் லேப்லயே கிடப்பேன்.. நானும் கேரியும் ஒரு நாள் வார்ம் ஹோல் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்... எப்படி எங்களால் அணுக்கழிவிலிருந்து பிளாக் ஹோல் செய்ய முடிந்ததோ ஏன் அதை வைத்து வார்ம் ஹோல் செய்ய முடியாது என்று பேச்சு போனது..எனக்கு அது  அறிவுத்தேடலின் பல வாசல்களை திறந்தது...வார்ம் ஹோல்  எனப்படுவது  ஒரு டணல் போல..இரண்டு காலத்தையும் இணைக்கும் ஒரு சப்வே.. அதாவது ஒரு பேப்பரை இரண்டாக மடித்து இணைப்பது போல ...ரிலேட்டிவிட்டி தியரி படி  .."

அவள் நிப்பாட்டிவிட்டு  என்னையே பார்த்தாள். இந்த அறிவியல் தாழிப்பு எனக்கு தேவையில்லை என நினைத்திருக்கலாம். கொஞ்சம் கன்னத்தை தொட்டு உதட்டை சுளித்து "ஐன்ஸ்டீன் சொன்னாருல்ல..இந்த அண்டம் ஒழித்து வைத்திருக்கும் ஆயிரமாயிரம் அதிசயங்களில் ஒரு சதவீதத்தை கூட நாம் பார்க்கவில்லைனு ..இந்த வார்ம் ஹோல் அந்த மிச்ச சொச்சத்துல சேர்ந்தது.." .

தலையாட்டினேன்.ஐன்ஸ்டீன் என்னிடம் தனிப்பட்ட முறையில் எதுவும் சொல்லவில்லை. பொதுவெளியில் சொல்லியிருக்கலாம்.

"நானே யாருக்கும் தெரியாமல் வார்ம்ஹோல் ஆராய்ச்சியை தொடர்ந்தேன்..முதலில் வாய்ப்பில்லைனு தான் நினைச்சேன்..ஆனா விட மனசில்லை.. ஒரு தடவ கதிர்வீச்சு கையில பட்டு..பாரு " என கையை காட்டினாள். வலது கை மணிக்கட்டுக்கு கீழே வெட்டுக்காயம் போல இருந்தது. கையே சூம்பிப்போய் ஒல்லியாய் இருப்பது போல இருந்தது.


"நாலு வருசத்துக்கு முன்னாடி முதல் முறையா 2016க்கு வந்தேன்..என்னால் நம்பவே முடியல..முனிச்ல இருந்து ட்ரெயின்ல இங்க வந்து தூரமாய் நின்று ரெபெக்காவை பார்த்தேன்.. இறந்து போன எங்க அப்பாவை பாத்தேன் ..ஏன் என்னையே ஏக்கமாய் பார்த்தேன்..அந்த இருபத்து ரெண்டு வயது ஈவா எத்தனை வெகுளியாய் இருக்கிறாள் என பார்த்துக்கொண்டிருப்பேன்..அப்படித்தான் உன்னைத்தேடினேன்.. என் மனதில் அந்த திட்டம் உருவானது..நீயும் அவளும் பெர்லின் யுனிவர்சிட்டியில் தான் படித்து காதலில் விழுந்தீர்கள்..ஒருவேளை அந்த நிகழ்வை தடுத்து நிறுத்தினால் என் காதல் கை கூட வாய்ப்பிருக்கும் என தோன்றியது..அதனால் நீ எம்.ஸ் படிக்க பெர்லின் யூனிவெர்சிட்டிக்கு அப்பிளை செய்த பார்ம்ஐயே அங்கு சேர விடாமல் தடுத்தேன்...அவள் மட்டும் அங்கே சேர்ந்தாள்..நல்ல வேளையாய் இந்த முறை போட்டி இல்லை என நினைத்து கொண்டிருக்கையில் இங்கயே ஒன்னோட வேலைக்கு வந்துட்டா..நீயும் நாய் மாதிரி..."  

அவளை நிப்பாட்டினேன். சில நேரங்களில் என் மூளைக்கும் விஷயங்கள் சரியான நேரத்தில் புரியும்.

"இருங்க..நீங்க மானஸ்விய பத்தியா பேசுறீங்க.."

"ஆமாங்க சார்..அந்த மேடத்த  பத்தி தான் பேசுறேன்..நீயும் அவளும் காதலிச்சு கல்யாணம் பண்ணி..பிள்ளைகள் பெத்து..பேரன் பேத்தி பாத்துட்ட கெழடுகள்..அதாவது 2050ல "  என சொல்லிக்கொண்டே ஒரு போட்டோவைகாட்டினாள். நானும் மானஸ்வியும் தோட்டத்தில் உட்கார்ந்திருக்க ஒரு இளம்பெண் கையில் குழந்தையுடன் நின்றிந்தாள். பக்கத்தில் ஒரு  இளைஞன் டவுசருடன் என் தோளில் கைப்போட்டபடி சாய்ந்திருந்தான். எனக்கு தலையில் பாதி முடியில்லை.கூன் விழுந்திருந்தது. மானஸ் கொஞ்சம் குண்டாய் இருந்தாள். எனக்கு அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் கைகள் நடுங்கியது. விவரிக்க முடியாத ஒரு உணர்வு உடல் முழுக்க பரவியது.

 ஈவா என் தோளைத்தொட்டு அது "வினோதினி..இவன் பிரபாகர்.." என கை காட்டினாள். மேற்கொண்டு பையிலிருந்து தான் எடுத்து வந்த என் பெர்லின் யூனிவர்சிட்டி அப்ளிகேசனையும் காண்பித்தாள். நான் எப்போதோ ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பியது. என் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை கிழித்து மொத்தத்தையும் மாற்றி இருக்கிறாள்.

"விஷயத்துக்கு வர்றேன்...நான் பண்ணுன தப்பு இப்போ தான் புரிஞ்சது..அது தான் பேரடாக்ஸ்..அதாவது முரண்பாடு... ஒருவேளை இங்க நீயும் மான்ஸ்வியும் சேரலேனா.. வினோவும் பிரபாவும் அங்கே முரண்பாடுகள்..அவர்களின் இருப்பு இயற்கைக்கு எதிரானது.இயற்கை அவற்றை அதுவே சரி செய்ய பார்க்கும்..அவர்கள் ஏதோ ஒரு வழியில் மாண்டு போவார்கள்..அப்படியே தான் சியாவுக்கும்.. நிகழ்காலத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மற்ற காலங்களை பாதிக்கும்...பிறப்பு...இறப்பு..விபத்து என எல்லாமுமே தான்.. "

திடீரென முதலில் சந்திப்பவர்களை எங்கேயோ பார்த்தது போல இருப்பது அதனால் தானோ என்று தோன்றியது. மானஸ்வி மேலே திடீரென பேரன்பு ஒன்று உருவாகி அது என்னை பாதி கிறுக்காக்கியதும் கூட எதிர்காலத்தின் நீட்சியாய் இருக்கலாம்.

"ஷிவ்...நீயும் மானஸ்வியும் சேர்ந்தே ஆகணும்.. நமக்கு வேற வழியே இல்ல.." 

அதாவது நான் என் பிள்ளைகளையும் பேரக்குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டுமானால் என் பொண்டாட்டியை முதலில் காதலித்து கரெக்ட் செய்ய வேண்டும். இப்போது கொஞ்சம் தைரியமாய் இருந்தது. ஆக என்னது பொருந்தாக்காதலோ கள்ளக்காதலோ இல்லை. நடந்தேற வேண்டிய நியாயமான காதல். 

"எனக்கு டைம் ஆகுது நான் மூனு நாளுல திரும்ப வர்றேன்..இந்தா இது அவளோட பழைய டைரிகள்..எடுத்துட்டு வந்துட்டேன்..இத நல்லா  படி.. ஒர்க் பண்ணு..நீ அவளை காதலிக்க வச்சே ஆகணும்....ஒரு சயின்ட்டிஸ்ட்ட என்ன வேலை செய்ய வச்சிருக்கீங்க பாருங்க.. இன்னொரு தடவ சுவாமிஜி கீமிஜி னு போன அவ்ளோ தான்..  "

அவள் எழுந்து கிளம்பினாள். எங்கே போகிறாள். எப்படி போகிறாள் என்றெல்லாம் எனக்கு கேட்க தோன்றவில்லை. அவள் கையில் திணித்த புத்தக மூட்டையுடன் நானும் நடக்கத்தொடங்கினேன்.

------------------------------------------------------------------------------------------------------------------

ரூமிற்குள் நுழைந்த போது உடல் ரொம்ப அசதியாய் இருந்தது. தல்பீர் என்னைப்பார்த்தவுடன் அதிர்ச்சியானான். கையில் வைத்திருந்த பீரை மறைக்க முயன்றான்.

"ஜி..நீங்க லேட்டா வருவீங்கன்னு நினைச்சேன்..அதான் துணைக்கு இருக்கட்டும்னு ஒரு லேகர உள்ள விட்டேன்..நீங்க அறிவுரைய ஆரம்பிச்சீராதீங்க ப்ளீஸ்.."

நான் எதுவும் பேசாமல் போய் ஷோபாவில் உட்கார்ந்தேன்.

"யோவ் சிவா..ஏதாவது பேசுயா.. சில டைம் நீ இருக்கியா இல்ல நானே நீ இருக்குற மாதிரி கற்பனை பண்ணிக்கிறேனானு டவுட்டா இருக்குயா.."

"டேய் ..போய் தூங்குடா.."

"சூப்பர் ஜி..அப்போ இருக்கீங்க..நாளைல இருந்து நானும் உங்க ஸ்பிரிட்டுவல் ட்ராவெல்ல சேந்துக்குறேன்...இப்போதைக்கு மிச்சத்த முடிச்சுறேன்" னு சொல்லியபடி அவன் ரூமுக்குள் போனான்.

நான் கையிலிருந்த பைக்குள் கையை விட்டபடி டைரிகளைத்தேடினேன். மெரூன் கலர் தடிமன் அட்டையில் 2017 என்று போட்டிருக்கின்ற டைரியை எடுத்தேன்.  குத்து மதிப்பாய் திருப்பினேன்.ஜனவரி -4 2017 நாக்பூரிலிருந்து இன்று பெர்லின் வந்திறங்கினேன். ஏர்போர்ட்டில் அவர்கள் பேசும் ஆங்கிலம் புரிய கஷ்டமாய் இருந்தது. நானும் அது போல தங்கு தடையின்றி அழகாய் ஆங்கிலம் பேச பழக வேண்டும். குளிர் அவ்வளவு அதிகம் இல்லை.ஜெர்மானியர்கள் அதிக உயரமாய் இருக்கிறார்கள். நாளை வகுப்புகள் தொடங்குகின்றன. விநாயகரை அடிக்கடி கும்பிட்டுக் கொள்கிறேன் .

பெரும்பாலும் தின நிகழ்வுகள்..கொடுமையான கவிதைகள் என்றபடியே அனேக பக்கங்கள் இருந்தன.அப்போது தான் அந்த பக்கம் கண்ணில் பட்டது.

ஏப்ரல்-14 2017 இன்றும் சிவாவுடன் டின்னருக்கு போனேன். எனக்கு அவன் கண்களை பார்த்தவுடன் தெரிந்து போனது, இன்று அவன்  சொல்லிவிடுவானென.  ஒரு மாதமாய் ஒன்றாகவே சுத்திக்கொண்டே இருக்கிறோம். முதலில் எனக்கு அவன் மீது ஈர்ப்பில்லை. பேச பேசத்தான் பிடித்தது. ஊர்வசி கூட "அவன் ரொம்ப சுமார் ..ஹிந்தி தெரியாது வேற.." என எதிர்மறையாய் சொன்னாள். எனக்கு அவனை ரொம்பவும் பிடித்திருக்கிறது. என் மிச்ச வாழ்க்கையை அவன் தோளில் சாய்ந்து கொண்டு..அந்த அரைவேக்காட்டு நகைச்சுவையை கேட்டுக்கொண்டே ஓட்ட முடிவெடுத்து விட்டேன்.  

                      தூக்கமில்லா என் இரவுகளில் 

                                                மெல்லிசைப்பாடல் நீ 

                      வெளிச்சமில்லா அத்தருணங்களின் 

                                                    விட்டில் பூச்சி நீ...

                       என் சிரிப்பின் சாவியை உன் 

                                                 உதட்டில் வைத்திருக்கிறாய்

                         நீ அருகில் இருக்கையில் மொத்த  

                                        உலகமும் வீணாய்த் தெரிகிறதேன்..


எனக்கு அதற்கு மேல் படிக்க தெம்பில்லை. மானஸ்வி பேசினாலே கவிதை போலத்தான் இருக்கும்.ஆனால் அவள் கவிதைகள் எதுவும் பேசும்படி இல்லை. நான் சில அதிசயங்களை நிகழ்த்தினாலொழிய அவளது வாழ்க்கைக்குள் நுழைய முடியாது என புரிந்து போனது.

                                                                    

                                                                                                           ---தொடரும் 

வியாழன், 8 ஏப்ரல், 2021

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 7

 இதுவரை 

-------------------

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 1

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 2

ஆரஞ்சுக்காவியம்-பகுதி 3

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 4

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 5

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 6ந்த பெண்மணியின் முகம் கொஞ்சம் பரிட்சியமாய் இருந்தது. எவ்வளவு யோசித்தும் யாரென பிடிபடவில்லை. ஏதோ தமிழ்ப்பாடலின் நடுவரியை கேட்டுவிட்டு அது எந்தப்பாடல்னு தேடுவது போல இருந்தது. "நாளைக்கு சாயங்காலம் சரியா ஆறரை மணிக்கு கோஸிக்கு வந்திரு..உன்ன மாதிரி மடையன நம்புனா அவ்வளவு தான்..நீ பாட்டுக்கு தியானம் பன்றேன்னு ரூம்ல உட்காந்துராத" என அந்தம்மா சொல்லிவிட்டுப்போனதை பல முறை திரும்ப மனதிற்குள் ஓடவிட்டேன். புதிர் போல இருந்தது. கோஸி எனப்படுவது என்ஸ்கடேவின் முக்கிய ரெஸ்டாரண்ட். அங்கே  போவதற்கு  முதலில்   தயக்கமாய்த்தான் இருந்தது. கிழவியின் முகமும், அந்த திட்டும், "அவள் என்ன சொல்வாள்?" என்ற ஆர்வத்தை எனக்குத் தூண்டியிருந்தது. கோஸிக்கு உள்ளே போய் கடைசி சீட் தேடி உட்கார்ந்து கொண்டேன். கூட்டம் குறைவாகவே இருந்தது. கொஞ்ச நேரத்தில் அவளும் வந்தாள். 

ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தாள்.மேலே கொஞ்சம் பெட்ஷீட் வகையிலான ஒரு பெரிய டாப். தொப்பி போட்டுக்கொண்டிருந்தாள். நேற்று குப்பைக்காரி போல தெரிந்தவள், இன்று வயதான இங்கிலாந்து அரசி போல இருந்தாள். ஆனால் அந்த முடி மட்டும் இன்னமும் தேங்கா நார் போல தான் இருந்தது. கையிலிருந்த தன் பேக்கை கீழே வைத்து விட்டு எனக்கு எதிர் சீட்டில் அமர்ந்தாள். அவள் மீது  பன்னீர் வாடை வந்தது.

"அவ கிட்ட பேசுனியா..பேசலையா.. இல்ல இந்த மெசேஜ்ஜாவது போட்டியா.." 

"மேடம்..நீங்க முதல்ல யாரு...உங்களுக்கு என்ன வேணும்?  இப்போ தான் இந்த சட்டையை பார்த்தோனே நியாபகம் வருது..நீங்க அன்னைக்கு பார்லயும் இருந்தீங்கள்ல?"

"டேய்..மூனு மாசமா உன் பின்னாடி தாண்டா சுத்திட்டு இருக்கேன்..  பக்கத்துல இருந்து பார்த்தா தானே உன்ன பத்தி தெரியுது..உன்னைப்போய் லவ் பண்ணேன் பாரு.. என்னை சொல்லனும்?"

காதலிப்போருக்கு ஒரு முதிர்ச்சி வேணும்தான் அதுக்காக இவ்வளவு வயசான ப்ரபோசலை நான் எதிர்பார்க்கவில்லை. என் நிலையை நினைத்து எனக்கே பரிதாபமாய் இருந்தது. என் அதிர்ச்சியை அவள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். தன்னுடைய ஆட்காட்டி விரலை தன் நெஞ்சுக்கு முன் வைத்து "இந்த நான்" இல்ல . கைப்பைக்குள் இருந்து எடுத்து ஒரு போட்டோவை காட்டி "இந்த நான்" என்றாள். அதில் ஒரு இளம்பெண் ஆறடியில் ப்ளூ ஜீன்ஸ் வெள்ளை டீ ஷர்ட் போட்டிருந்தாள். சிரித்தபடி கையில் "V" காட்டியபடி நின்றிருந்தாள். 

"ஈவா" என கொஞ்சம் குரலை உயர்த்தி சொன்னேன். அவள் ஆமாம் என்பது போல சிரித்து தலையாட்டினாள். ஈவா ,ரெபெக்காவின் தோழி.நிறைய முறை பார்த்திருக்கிறேன்.

"உங்களுக்கு ஈவா எப்படி தெரியும்??"

அவள் என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு "நான் தான் ஈவா" என்றாள் 

"ஓ..உங்க பேரும் ஈவா வா??"

"டேய்..தத்தீ..நான் தான்டா அந்த ஈவாவே"  என கொஞ்சம் சத்தமாய் சொன்னாள். சிலர் எங்கள் டேபிளை திரும்பி பார்த்தார்கள்.நான் ஒரு முறை மூச்சை இழுத்து விட்டேன். நடந்ததையெல்லாம் யோசித்துப்பார்த்தேன். போனவாரம் கூட ஈவாவை  பார்த்தேன். தல்பீர் கூட அவள் கண் மையை காட்டி "சூனியக்காரி" என கேலி செய்தான். கிழவியின் பேச்சு..நடவடிக்கைகள் வைத்து அவளின் மனநலம் குறித்த என் சந்தேகம் உறுதியானது.

"பாட்டி..நீங்க ஏன் தனியா வெளில வ..." என சொல்லி முடிப்பதற்குள் கன்னத்தில் சப்பென அறைந்தாள். அதிர்ந்து போனேன். கோபம் தலைக்கேறி என்ன கேட்பதென தெரியாமல் பதட்டத்தில் "பைத்தியம்னா என்ன வேணா செய்யலாமா?" . அவள் இடது கையை வைத்து இன்னொரு அறை அறைந்தாள்.இந்த முறை காதுக்குள் "கொய்ங்"கென சத்தம் வந்தது. 

------------------------------------------------------------------------------------------------------------------

 என் உடல் பாதி நடுக்கத்தில் இருந்தது. கிறிஸ்டோபர் நோலன் படங்களை விடுங்கள்..எனக்கு பழைய பாலசந்தர் படங்களே புரியாது. கிழவி கூறியவைகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யவே கஷ்டமாக இருந்தது. யாரோ சம்ஸ்கிருத மந்திரங்களை வேகமாய் சொல்வது போல இருந்தது. நாலாவது முறையாக அவள் சொன்னதையே திரும்ப சொன்னாள். இந்த முறை குரலில் ஒரு எரிச்சல் இருந்தது.

"சிவ்.. மிஸ்டர் சிவ்.. நான் தான் ஈவா..அல்லது நானும் ஈவா தான்.. "

ஆரம்பிச்சிட்டு குழப்புனா பரவால்ல. ஆரம்பமே குழப்பமா இருந்தா என்ன பண்றது?. நான் எதுவும் சொல்லவில்லை. இன்னொரு அறையை தாங்க எனக்கும் என் கன்னத்துக்கும் சக்தியில்லை. தொடர்ந்தாள்.

"நான் அம்பத்தி ஆறு வயசு ஈவா..இங்க இருக்கிறது இருபத்து ஆறு வயசு ஈவா ..இதுவும் நான் தான் .."பழைய நான்" "

"உஃப்" என்றேன். 

 "சிவ்..கவனமா கேளு..கடந்தகாலம்..நிகழ்காலம்..எதிர்காலம் எனப்படுவது அடுத்தடுத்து நடக்கும் வரிசையான  நிகழ்வல்ல. தொடர்ச்சியாய்  முடிவிலி போல நிகழும் தொடர் நிகழ்வு ... நமக்கு நடக்கும் நிகழ்கால சம்பவங்கள் வேறு காலங்களையும் பாதிக்கலாம் ..உதாரணமாய்  ஒரு டீவி திரையின்  நடுவில் கோடு போட்டுக்கொண்டு இடது பக்கம் 2005 என்றும் வலதில் 2015 என்றும் எழுதிக்கொள். ஒரே நேரத்தில் அந்தந்த வருட காட்சிகள் ஓடுகின்றன. 2015 ஜனவரியில்  உன்னுடைய  நெருங்கிய நண்பன்  கனகுவும் நீயும் கோவா பீச்சில் உட்கார்ந்து கொண்டு தண்ணியடித்து சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அப்படியே அதே நேரம் 2005 ஜனவரியில்  முதல் நாள் கல்லூரிக்கு கனகு வருகிறான்..தெரியாத முகங்கள்...எல்லோரயும் பார்க்கிறான்...உன்னை பார்த்தவுடன்  லேசாய் சிரித்து பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிறான் . "ஐ'ம் கனகராஜ் " என கை குலுக்குகிறான்....நீங்கள் அறிமுகமாகுகிறீர்கள் "

நான் கண்ணிமைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"நீயே சொல் இதில் எது முதலில் நடந்தது?? கனகு அத்தனை பேர் இருந்தும் எப்படி உன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். அது எதிர்காலத்து பாதிப்பின் நீட்சி..நான் எதிர்காலத்திலிருந்து வந்திருக்கிறேன்...நான் செய்த ஒரு தவறால் நிறைய பேர் பாதிக்கப்பட போகிறார்கள்..அதைத்தடுக்கவே வந்திருக்கிறேன்.."

ஐரோப்பியர்களுக்கு இந்த டைம் டிராவல் கதைகள் மேல் கொள்ளை பிரியம். "அவுட்லேண்டர்" கதைகளெல்லாம் பல மொழிகளில் பிரதியெடுத்து இன்றும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. கிழவி புத்தகம் படித்து கிறுக்காகியிருக்க வேண்டும். அவள் என் மனத்தை புரிந்தவள் போல என்னை முறைத்துப்பார்த்தாள்.

"சரி..போனவாரம் ரெபெக்கா வீட்டில் வச்சு ஈவாவும் நீயும் பேசுனது நியாபகம் இருக்கா.. குறிப்பா அந்த சோபாவில உட்கார்ந்து பேசுனது.."

யோசித்தேன்.ரொம்ப நிறையவெல்லாம் நாங்கள் பேசவில்லை. நியாபகம் வந்தது.

" 'இப்படியே இருக்கியே..உன்னோட லட்சியம் என்ன' னு கேட்டா..நான் சுவாமிஜி கூட பயணப்பட்டு எப்படியாவது குண்டலினி சக்திய  எழுப்பிரணும்னு சொன்னேன். சிரித்தாள். நான் சீரியஸாய் தான் சொன்னேன். நீ என்ன செய்யப்போறே எனக்கேட்டேன்..அதுக்கு அவ பிசிக்ஸ்ல நோபல் பரிசு வாங்கணும்னு சொன்னா.. நான் சிரிச்சேன் ..அவ கொஞ்சம் அப்செட் ஆனா மாதிரி இருந்துச்சு "


பேச்சைக்கேட்டுக்கொண்டே கிழவி பேக்கிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து என் முன் நீட்டினாள். அதில் "Black Hole Scientists Win Nobel Prize in Physics" எனப்போட்டிருந்தது. மூன்று பேர் சிரித்தபடி போஸ் கொடுத்திருந்தனர். அதில் நம் கிழவியும் ஒன்று. பெயரை நன்றாய் படித்தேன் "ஈவா கோன்சலஸ்". அதே தேங்காய் நார் முடி. எனக்கு இப்போது அவள் பேசும் விஷயமெல்லாம் புரியுமென்ற நம்பிக்கை விட்டுப்போயிருந்தது.  அவளிடம் தாழ்ந்த குரலில் சொன்னேன்.

"கொஞ்சம் ஓப்பனாவே சொல்றேன்..நீங்க சொல்றத புரிஞ்சிக்கிறதுக்கோ ..மறுக்குறதுக்கோ  நல்ல அறிவு தேவை..என்கிட்ட அது சத்தியமா இல்ல..நேரா விஷயத்துக்கு வாங்க..உங்களுக்கு என்னோட எதிர்காலம் தெரியும்..கொஞ்சம் காசு கொடுத்தா சொல்வீங்க.. அதான .."

"டேய்..மட சாம்பிராணி ..நிறைய பேரோட உயிரும் வாழ்க்கையும் உன் கையில இருக்கு..நீ நிலைமை புரியாம இருக்க..சரி உன்னோட லெவலுக்கே வரேன்..நீ எனக்கு முன்னாடியே இங்க வந்திட்ட ..ஒன்னோட ஷூ லேஸ நான் இப்போ பார்த்திருக்க வாய்ப்பிருக்கா?? குறிப்பா என்னோட கண்ணையும் கண்ணாடியும் மனசுல வச்சுக்கோ.." 

முதலில் புரியவில்லை. குனிந்து பார்த்துவிட்டு "இல்லை" என்றேன்.

"வலது பக்கத்தில் கருப்பு லேஸும் இடது பக்கம் மெரூன் லேஸூம் போட்டிருப்பாய். நான் இதை முன்னமே பார்த்திருக்கிறேன்." 

குனிந்து பார்த்தேன். உண்மை தான். நானே அப்போது தான் கவனிக்கிறேன். எனக்கு அவகாசம் கொடுக்காமல் கிழவி தொடர்ந்தாள்.

"உனக்கு அப்புறம் புரியட்டும்..இன்னைக்கு கிங்ஸ் டே.. ஊரே குஷி மூடுல இருக்கு.. இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல ஈவா வருவா..உன்கிட்ட லவ் பண்றேன்னு சொல்லுவா..முகத்தை சீரியஸா வச்சி கிட்டு "நோ" னு சொல்லிரு..இது உலகத்துக்கு நீ செய்யுற கைமாறு...தயவுசெஞ்சு சொதப்பிடாத.." 

"என்னாது ஈவா வந்து என்கிட்ட ப்ரபோஸ் பண்ணுவாளா?? அவ ஆறடில ஏஞ்சலினா ஜோலி மாதிரில இருப்பா.." .என சொல்லி சிரித்தேன்.

"காதல் ஒரு பாழுங்கிணறு அதற்குள் யாருக்கும் கண் தெரியாது" என்றாள்.

"இங்கேயே உட்கார்ந்து கொள். நான் இடது வரிசையில் கடைசியில் உட்கார்ந்து கொள்கிறேன்" என எழுந்து போனாள். நிறைய குழப்பமாய் இருந்தாலும் எனக்கு திடீரென அவள் பேச்சில் ஒரு ஆர்வம் பிறந்திருந்தது.

---------------------------------------------------------------------------------------------------------------

சரியாய் ஏழரை மணிக்கு அந்த கார் வந்து நின்றது. என் இதயம் எந்த நேரமும் என் வாய் வழியாய் வெளியே விழுந்து விடலாம் என்கிற அளவு துடித்தது. ஈவா உள்ளிருந்து இறங்கி நேராய் என்னை நோக்கி வந்தாள்.ஆரஞ்சு நிற சட்டை மற்றும் ஒரு ப்ளூ ஜீன் டவுசர் அணிந்திருந்தாள். அது வரை அவளை பார்த்து கண்டுகொள்ளாத என் ஹார்மோன்கள் தற்சமயம் உள்ளுக்குள் க்ரூப் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது. அவள் கையில் வைத்திருந்த பூவை தெரியாமல் கீழே விட்டாள். பிறகு குனிந்து எடுத்தாள். என் ஷூவை கவனித்தாள். எனக்கு மூளைக்குள் மின்னல் வெட்டியது.

"ஷிவா.."

"முதல்ல உட்காரு". என் பெயரை "ஷிவா" என்றே கூப்பிடுவாள்.அவள் ரொம்பவெல்லாம் தயங்கவில்லை.

"எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு..நீங்க எங்கெல்லாம் போறீங்களோ அங்கெல்லாம் வரணும் போல இருக்கு..எந்நேரமும் உங்க சிந்தனையாவே இருக்கு..ம்.ம்..நா என்னெல்லாமோ பேசணும்னு யோசிச்சிருந்தேன்..உங்கள பாத்தோன்னே மறந்திடுச்சு"

சொல்லி பூ கொடுத்தாள். ஆரஞ்சு நிற பூக்கள்.இதை மட்டும் எங்க தாத்தா ஆத்தூர் சுப்ரமணியின் ஆத்மா கேட்டிருந்தால், இந்நேரம் முக்தி அடைந்திருக்கும். எப்பேர்ப்பட்ட சம்பவம். ஒரு தரமான வெள்ளைக்கார பெண் இந்த கரூர்க்காரனுக்கு பூ கொடுக்கிறாள். ஆனால் பாட்டியம்மா சொன்னவை எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.


"சிவா..இது முக்கியமான தருணம்..நம் சந்ததிகளின் வாழ்க்கையே இதில் தான் முடிவாகிறது..உன்னோட வினோவையும் பிரபாவையும் நீ தான் காப்பாத்தணும்..வேண்டாமென சொல்லிவிடு " 

அவள் அழுவது போல சொன்னதோ ..இல்லை அந்தப்பெயர்களின் அதிர்வோ..எனக்குள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மானஸ்வியின் முகம் அடிக்கடி வந்து போனது. நான் ஈவாவை பார்த்தேன்.

"மன்னிக்கணும் ஈவா ..நான் வேற ஒருத்தவுங்கள லவ் பண்றேன்..சாரி " என சொல்லி அந்த பூக்களை திருப்பிக்கொடுத்தேன்.அவள் கண்கள் கலங்கியிருந்தது. எதுவும் பேசாமல் பூக்களை வாங்கிக்கொண்டு வேகமாய் திரும்பி நடந்தாள்.  அவள் போனவுடன் கிழவி என் பக்கத்தில் வந்து தோளில் தட்டினாள்."வருத்தப்படாத.. நீ செஞ்சது மிகச்சரி"  என்றாள். அவள் பேக்கிலிருந்து ஒரு பழைய டைரியை எடுத்துக்காட்டினாள். அதில் பழைய பூக்கள் ஒரு பக்கத்தில் லேமினேட் செய்யப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. கவனித்துப்பார்த்தேன் அவைகள் ஆரஞ்சு நிறத்தில் இருந்தது.

                                                                                                       ---தொடரும் வியாழன், 1 ஏப்ரல், 2021

ஒரு ஆரஞ்சுக்காவியம் -6


இதுவரை 

-------------------

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 1

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 2

ஆரஞ்சுக்காவியம்-பகுதி 3

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 4

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 5

முழித்து பார்க்கும் போது ஹாலிலிருந்த ஷோபாவில் படுத்திருந்தேன்.  தல்பீரும்,யோரிஸ்ஸும் என்னை பார்த்தபடி பக்கத்து சேரில் உட்கார்ந்திருந்தனர். என்ன தான் நெருங்கிய நண்பர்களானாலும் எழுந்தவுடன் அவர்கள் முகம் பார்ப்பதில் எனக்கு பெரிய உடன்பாடில்லை. முகத்தை அஷ்ட கோணலாக்கி ,இரு கைகளையும் நெட்டி முறித்தேன். முந்தைய நாள் சம்பவங்கள் எனக்கு பெரிய எரிச்சலையும் அவமானத்தையும் கொடுத்தன.   "கோபமான,சோகமான,பதட்டமான சூழ்நிலைகளின் போதுதான்  'நிஜமான நீ'  உனக்கே தென்படுவாய் . அவனை மேம்படுத்து..அவனை உற்சாகப்படுத்து..."  என்ற சுவாமிஜியின் வரிகள் ஞாபகம் வந்து  எனக்கு மேலும் துக்கத்தை கொடுத்தது. 'இனி குடிப்பதில்லை" என ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக முடிவெடுத்தேன். தல்பீர் பக்கத்தில் போய் " ரொம்ப சாரி டா " என்றேன். அவன் எதுவும் சொல்லாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு மொபைலை எடுத்து  என்னிடம் நீட்டினான். வாங்கினேன். "நானும் ரொம்ப சாரி" என்றான். படித்துப்பார்த்தேன். "ஐ  லவ் யு .. ட்ரூலி.. டீப்ளி..மேட்லி " என மானஸ்விக்கு அனுப்பப்பட்டிருந்தது.

என் ரத்த நாளங்கள் கொதிக்கத் தொடங்கின. யோரீஸ் வேகமாய் என் பக்கத்தில் வந்து கீழிருந்த  ஆஷ்ட்ரே..கண்ணாடி க்ளாஸ்கள்... தட்டுகள் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு ஓடினான். அங்கு வன்முறை நடந்தால் சேதாரங்ளை குறைக்க வேண்டுமென எண்ணியிருப்பான். கன்னத்தில் அறைய கையை ஓங்கிய போது தான் சுவாமிஜி நல்ல வேளையாக ஞாபகம் வந்தார்.அமைதியானேன். தலையில் கைவைத்து ஷோபாவில் உட்கார்ந்தேன்.

"யோவ் சிவா..அடிக்கனும்னா கூட அடிச்சுக்கோ..ஆனா திட்டாத..காலங்காத்தால என்னால அத கேக்க முடியாது.." என்ற படி பக்கத்தில் வந்து தோளைத் தொட்டான். எழுந்து அவனை ஒரு முறை கட்டி அணைத்துக்கொண்டேன். "எல்லாம் கர்மா..அனுபவித்தே ஆக வேண்டும்" . எழுந்து நடக்கத்தொடங்கினேன். 

"டேய்..காஃபி குடிச்சிட்டு போடா..." என காபி டம்ளருடன் ரெபெக்கா ஓடி வந்தாள். இல்லை என கை காண்பித்தபடி யோரீஸின் பழைய சைக்கிளை எடுத்தேன். காபி ரொம்ப சுமாராய்த்தான் இருக்கும். 

------------------------------------------------------------------------------------------------------------------------

ங்களின் குடியிருப்பை அடைந்தேன். லேசாய் பனி விழுந்து கொண்டிருந்தது. சைக்கிள் கொஞ்சம் வழுக்கியது. வாசலில் வண்டியை நிப்பாட்டிப்பூட்டினேன். வரும் வழியில் மானஸ்விக்கு   மூன்று முறை போன் செய்தேன்,எடுக்கவில்லை. நேராய் எங்களின் அறைக்குப் போனேன். மனது படபடப்பாய் இருந்தது. என்ன நினைத்திருப்பாள்.அருவருப்பாய் இருந்தது. பாத்ரூமிற்கு போய் சூடு தண்ணீர் ஷவரில் குளித்தேன். இதமாய் இருந்தது. "பயப்படாதே.. மன்னிப்புக்கோரு..நீ சனிக்கிழமை இரவில் எந்த நிலையில் இருப்பாயென அவளுக்குத் தெரியும்.."  

கொஞ்ச நேரத்தில் உடை மாற்றிக்கொண்டு அவளின் அறைக்குப்போக  தீர்மானித்தேன். குழப்பமாய்த்தான் இருந்தது .எனக்கு அவளிடம் பேசியாக வேண்டும். அவள் வலது ஓரமாய் இருந்த பிளாக்கில் இரண்டாவது தளத்தில் இருந்தாள். ஞாயிற்றுகிழமை ரூமில் தான் இருப்பாள். நடக்கத்தொடங்கினேன். அவள் அறையின் கதவில் "ஒண்டெர் வுமன்" ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது.அவளுக்கு டி.சி காமிக்ஸுகள் பிடிக்கும். பெல் அடித்தேன். பதினைந்து  நொடிகள் கடந்திருக்கும். சத்தமேதும் கேட்கவில்லை. திரும்பவும் பெல் அடிக்க கையை தூக்கினேன், சரியாய் கதவை திறந்தாள். ஒரு மஞ்சள் டீ ஷர்ட்டும்..ட்ராக்  பேண்ட்டும்  அணிந்திருந்தாள். முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் என்னை வெறுமையாய் பார்த்தாள். அவள் அதுவரை ஒருமுறை கூட என்னை அப்படி பார்த்ததில்லை. குற்ற உணர்ச்சி என் கண்ணில் தெரிந்திருக்க வேண்டும். எதுவும் சொல்லாமல் உள்ளே போனாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வாக்கிங் போகும் போது காணாமல் போன நாய் போல சில நொடிகள் விழித்தேன்.  பின் தயங்கி உள்ளே சென்றேன்.

பிரியாவும் அவளும் ரூம் மேட்ஸ். பிரியா கடுமையான மேக் அப் சகிதம் ஷோபாவில் உட்கார்ந்திருந்தாள். எங்கோ போகத்தயாராய் இருந்தாள். என்னைப் பார்த்தவுடன் "டேய்..நீ எங்க இங்க.. சன்டே னா சாயங்காலம் தானடா எழுந்திருப்பீங்க..என்ன நூடில்ஸ் கடன் வாங்க வந்தியா?.."  எதிரில் இருப்பவர்கள் நிறைய பேசினால் நமக்கு சாதகமாய் இரண்டொரு பாயிண்டுகள் கிடைக்கும். ஆமாமென தலையாட்டினேன். 

"நான் துருவ் பேமிலி கூட ஆம்ஸ்டர்டாம் போறேன்..ஊர் சுத்திட்டு மதியம் அசோகாவுல  ஃபுல்  கட்டுகட்டிட்டு வரப்போறோம்.."

நான் திரும்பி மானஸ்வியை பார்த்தேன். அவள் ஃப்ரிட்ஜ்ஜில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள். "மான்ஸ் வரல.. டயர்டா இருக்காம்.."


அவளுக்கு போன் வர.. எடுத்து பேசிவிட்டு "சரி நா கிளம்புறேன்"னு எழுந்து ஓடினாள். இப்போது அறையில் நெடிய நிசப்தம் குடிகொண்டது. மானஸ்வி கிச்சனில் இருந்தாள்.அந்த அறை மிக  சுத்தமாக இருந்தது. மற்ற தருணமாய் இருந்திருந்தால் "க்ளீனிங்கு எதுவும் ஆயா  வராங்களா " என கேலி  செய்திருப்பேன். இப்போது என் நிலைமையே கேலிக்கூத்தாய் இருப்பதால் அமைதி காத்தேன். கொஞ்ச நேரத்தில் மானஸ்வி காபி கப்புடன் வந்து எதிரில் அமர்ந்தாள். என்னை பார்க்காமல் கீழே பார்த்த படி காபி குடிக்கத்  தொடங்கினாள். 

 "மான்ஸ்..நேத்து நாங்க வேற நிலைமைல இருந்தோம்..தல்பீர் விளையாட்டுத்தனமா அப்பிடி பண்ணிட்டான்.."

அவள் என்னை ஒருமுறை நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் காபியை தொடர்ந்தாள்.ரத்த வெறியில் இருக்கிறாள் எனத்தோன்றியது.

"இனிமே இந்த மாதிரி எதுவும் நடக்காது..நா ஊரு.."

கப்பை பொத்தென நடுவிலிருந்த டீப்பாயில் வைத்தாள்.

"நீங்கெல்லாம் ஜாலி கேங். விளையாட்டுக்குனு என்ன வேணும்னா பண்ணலாம். அதுவும் போதைல இருந்தா கேக்கவே வேணாம்..நாங்கெல்லாம் கெக்கெ பேக்கே னு சிரிச்சிட்டு  போயிடனும்..தெரியாம தான் கேக்குறேன் உன் வீட்டு பொண்ணுகளுக்கு யாராவது இப்பிடி அனுப்புனா சும்மா இருப்பியா? நீங்கெல்லாம் சினிமா பாத்து லூசா ஆயிட்டீங்க டா..அங்க தான பொறுக்கி பசங்கள ஹீரோவா காட்டுறானுங்க

அவள் எறும்பை கூட அடிக்க யோசிப்பாள். என்னை சோபாவில் எதிரே உட்கார வைத்து இப்பொது "கொத்துக்கறி" போடுகிறாள்.

"நானும் பியூஷும் லவ் பண்றோம்னு தெரிஞ்சும்..இன்னும் ஒரு மாசத்துல நிச்சியம்னு தெரிஞ்சும்... இதைப்பண்றேனா  நீ பொறுக்கிபய தான .."

நான் அவளை அதிர்ச்சியாய் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் பக்கம் நியாயம் இருக்கலாம் தான். வீட்டுப்பாடம் செய்யாதவனை துப்பாக்கி வைத்து சுடுவது போல இருந்தது அவளது தண்டனை. அவள் தொடர்ந்து வசை மாரி பொழிந்து கொண்டிருக்க எழுந்து நடக்கத்தொடங்கினேன். கதவிற்கு பக்கத்தில் போன பின்  திரும்பி "சாரி" எனச்சொல்லி விட்டு தொடர்ந்து நடந்தேன். 

-------------------------------------------------------------------------------------------------------------------------

ரே மாதத்தில் ஆன்மிகத்தில் முத்தெடுத்தவன் போல உணர்ந்தேன்.ஆகாஷ் சுவாமிஜியின் சொற்பொழிவுகளும் வாழ்க்கை பாடங்களும் எனக்கு புது உலகத்தை காட்டியது. காலை ஐந்து மணிக்கு எழுந்து "யோகா-மூச்சுப்பயிற்சி-தியானம்". ஆறு மணிக்கு குளியல். ஆறரைக்கு பழங்கள்..வேக வைத்த காய்கறிகளுடனான காலைச்சாப்பாடு. ஏழு மணிக்கு சைக்கிளில் தனியாய் ஆபிஸ் பயணம். போகும் போது  சுவாமிஜி பரிந்துரைத்த கவிதைகளை பாடிக்கொண்டே போவதில் எத்தனை ஆனந்தம். அதுவும் டக்ளஸ் மலொக்கின் "குட் டிம்பர்" படிப்பதில் எனக்கு பேரார்வம்.


Good timber does not grow with ease,

  The stronger wind, the stronger trees,

The further sky, the greater length,

     The more the storm, the more the strength.

By sun and cold, by rain and snow,

     In trees and men good timbers grow

அன்றும் அப்படி தியானத்தை முடித்து விட்டு குளிக்க எழுகையில்  தல்பீர் கூப்பிட்டான். அவனுடன் முகம் கொடுத்து பேசியே பல நாட்கள் ஆகிவிட்டது. ஊருக்கு திரும்புவதற்கு மெயில் அனுப்பியிருந்தேன். ரெண்டு மாதம் பொறுக்குமாறு சொல்லியிருந்தார்கள்.

"சிவ்..நீ வேற ஆளா மாறிட்ட..பேசக்கூட மாட்டிங்குற..இப்பெல்லாம் உன்கூட இருக்கிறது ஏதோ ஆசிரமத்தில் இருக்கிற மாதிரி இருக்குயா ..காலங்காத்தால என்னய்யா சாப்பிடுற.. இத பாத்திட்டு காபி குடிக்க கூட குற்ற உணர்ச்சியா இருக்கு.."  

சிரித்தேன்.

"பாபா மாதிரி சிரிக்க ஆரம்பிச்சிட்டான்யா ..பாஸ் ரூம்ல தம்மாவது அடிக்க விடுங்க.. டார்ச்சர் பண்ணாதீங்க.."

"முன்னமே சொன்னது தான். நீ  தம் அடிச்சா..நான் காலி பண்ணிட்டு வேற ரூம் போயிடுவேன்.."

"சிவ்வு ..ஒரிஜினல்  சாமி கூட அமைதியா இருக்கும்யா.. இந்த ஒன்ற மாச சுவாமிஜிக தொல்லை தாங்க முடிலயா ..கடந்து வந்த பாதைய மறந்திராத ..நீயெல்லாம் நீராவி எஞ்சின் மாதிரி புகை விட்டுட்டு இருந்த ..நேர காலம் பார் "

சிரித்துக்கொண்டே அலுவலகம் கிளம்பினேன் . இந்த என் புது அவதாரம் ரோஹனை திக்குமுக்காட வைத்தது. "தம்பி..என்ன ரெண்டு வார வேலையை மூனு நாளுல முடிச்சுடுற..கொஞ்சம் பிரேக் எடுத்து பண்ணு " எனச்சொல்ல ஆரம்பித்திருந்தார்.என்னை ஊருக்கு போவதிலிருந்து தடுத்து நிறுத்துவதில் குறியாய் இருந்தார். "ஈரோ..எம்பது போயிருச்சு கவனிச்சியா" என்பார். அன்று அலுவலகத்தில் எல்லோரும் மதியமே கிளம்பி பக்கத்திலிருந்த  டுலிப் மலர் தோட்டத்துக்கு  போவதாக ஏற்பாடாகியிருந்தது. நான் சாக்கு சொல்லி தப்பிக்க நினைக்கையில் தல்பீர் அடம்பிடித்து இழுத்துச்சென்றான்.

"பாஸ் செடி கொடிய பார்த்தா ஒன்னும் ஆகாது..நீங்க கன்னிப்பையனா பத்திரமா போயிட்டு வரதுக்கு நான் பொறுப்பு

என்னை நார்மலாக்க படாத பாடு பட்டுக்கொண்டிருந்தான். ஆனால் எனக்கிந்த நியூ நார்மல் தான் பிடித்திருந்தது. பஸ்ஸில் எல்லோரும் ஏறியிருந்தோம். கிளம்ப தொடங்கியது. பியூஸும் , மானஸ்வியும் இதை பயன்படுத்தி தங்களது நிச்சய பத்திரிக்கையை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். பியூஸ் வலது பக்கமும்..மானஸ்வி எங்கள் பக்கமும் கொடுத்து வந்தார்கள். 

"சிவ்..அவ பக்கத்துல வந்தோனே ஜன்னல் வழியா வெளிய தாவிராத..மனசுக்குள்ளேயே ஏதாவது யோகா..கீகா பண்ணிட்டு இரு .."   

எனக்கேதும் பதட்டமாய் இல்லை. அவள் தான் முழித்தபடி வந்தாள். என் முன் பத்திரிக்கை நீட்டினாள். நான் தல்பீரை காட்டி "அங்க கொடுத்திருங்க ஒன்னு போதும் " என்றேன் அவள் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு அவனுக்கு கொடுத்தாள். தல்பீர் அவள்  பக்கத்தில் போய் என்னைக்காட்டி மெதுவாய் "நீங்க என்ன ட்யூன் பண்ணீங்கன்னு தெரில..இந்த டிவில அதுக்கப்புறம் காமெடி சேனல்..பாட்டு சேனல்..எதுவும் வரதுல்ல..முழுமுழுக்க ஆன்மீக சேனல் தான்.."  அவள் சிரிக்கவில்லை. என் தோளைத்தொட்டாள். நிமிர்ந்து பார்த்தேன். "சாரி" என்றாள். நான் தலையாட்டி விட்டு ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டேன்.


கொஞ்ச நேரத்தில் டுலிப் தோட்டத்தை அடைந்திருந்தோம். அவ்வளவு அழகாய் நான் மலர்களை பார்த்ததில்லை.பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது. மானஸ்வி  என் பக்கத்தில் வந்து ஒரு காகிதத்தை திணித்தாள். அதில் "சாரி..ட்ரூலி..டீப்ளி" என எழுதியிருந்தது. வாசித்து விட்டு கிழித்து தூக்கியெறிந்தேன். அவள் சிவந்த கண்களுடன் அங்கிருந்து நடந்து போனாள். "உன்னை அறத்திலிருந்து புறந்தள்ளும் எந்த சிறு செயலையும் செய்யாதே.. விழித்திரு..விழித்திரு.." சுவாமிஜியின் கனீர் குரல் என் தலை முழுக்க ஒலித்தது. அங்கேயே சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். யாரோ சிவாவென கூப்பிடுவது போல இருந்தது. திரும்பினேன். ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஐரோப்பிய பெண்மணி நின்றுகொண்டிருந்தாள்.  "என்னங்க" வென நான் கேட்பதற்குள் என்னை பார்த்து கத்த தொடங்கினாள். "மாடு..எரும மாடு.. ..அறிவிருக்கா..நீயெல்லாம் மனுஷன் தான..அவ உன்னோட ஆளுடா..விடாத போ...சாணம் மாதிரி இங்கயே நிக்காத..அவ கூட பேசு..அதான் நாம எல்லாத்துக்கும் நல்லது..போ"  

எனக்கு உடல் நடுங்கத்தொடங்கியது. 
       --------தொடரும்