வெள்ளி, 22 ஜூலை, 2011

சொப்பன சுந்தரி (கவிதை(யாம்))                                     

                                

 அன்றும் தற்காலிகச் சாவு வர  
          பன்னிரெண்டாகிவிட்டது..
 இமைகளுக்கும் விழிகளுக்கும் 
       இடைவெளியே இல்லை..

 அத்துனை புலன்களும் நிம்மதியாய் 
                   ஓய்வெடுக்க 
 நாசி மட்டும் கோபத்தில் 
        பெருமூச்சி விட்டுக்கொண்டிருந்தது.
 தூக்கம் என்னைத்தழுவ மீண்டும் 
     நான் தூக்கத்தைத் தழுவினேன்.


விளம்பரமேதும் போடாமல் 
  தரச்சான்று காட்டாமல்  
   யாருக்கும் நன்றி கூட சொல்லாமல் 
   ஒரு கனவுக்காட்சி ஆரம்பமானது.


கன்னிகை ஒருத்தி வந்து 
  புன்னகை பூத்தாள்.
கருத்த கானகம் போல் 
        தலைமயிர் 
எதிராளி இதயத்தை 
   ஊடுருவும் கண்கள்..


பாந்தமான மூக்கு 
 அழகாய் படர்ந்த காதுகள்...
தாமரையே தோல்வியை 
 ஒப்புக்கொள்ளும் இதழ்கள்..
வித்தகன் செதுக்கியது 
        போல் கழுத்து...


கீழ்கொண்டு சொன்னால் என்னை 
   கீழானவன் என்பீர் என்பதால் 
விவரனை விடுத்து 
   விஷயத்தை மேற்கொண்டு சொல்கிறேன்.


அந்த பேரழகி வந்து 
  தன் பிஞ்சிக்கரம் நீட்டி 
   "காதல் கொள்வாயா??" என்றாள்.

சொக்கியிருந்த நான் 
      சுதாரித்தேன்.
கோபம் வந்ததெனக்கு 
  கொடுஞ்சொல் செலவிட்டேன்.

"ம்..காதல் கொல்வேன்" என்றேன் 

அவள் "ல"கரம் தெரியாதவள் போல ...  
  தன் லாவண்யத்தை தொடர்கிறாள்.
"இத்தனை அழகை ஆள 
         ஆசையில்லையா??" என கொஞ்சினாள்.

அவள் சற்று உயரமானவள் 
  அவளை விட உயரம் அவள் கர்வம்.

நான் சிரித்தேன். பின் சொன்னேன்.
 "மன்னிக்கவும்.தற்சமயம்
      ஆட்சியமைக்க எண்ணமில்லை"

"ஏன்??"-- அவள் உதட்டை பிதுக்கி 
  கேள்விக்குறி ஆக்குகிறாள்.
"என் பொருளாதாரம் உன் இடை 
  போல மெலிந்தே இருக்கிறது..." விளக்கினேன்.

"பரவாயில்லை". அடம்பிடிக்கிறாள்.


"என்னவள் ஆனால் நீ 
  தங்கத்தை விளம்பரத்தில் தான் பார்ப்பாய்" என்றேன்.

"சொகமான வாழ்க்கைக்கு சொர்ணம் பொருட்டா??" என்கிறாள் 

கேள்வியில் பதிலை 
 சொல்ல முயல்கிறாளாம்.


தங்கத்தை புறக்கணிக்கும் பெண்ணா??
 செவ்வாயில் பிறந்தவளோ??..
ஆச்சர்யத்தில் அவளை பார்த்தேன் 
  இன்னுமும் அழகாய்த்தெரிகிறாள்.


"நிலபுலன்கள்..." என தொடரப்போனேன் 

"தோளில் சாய்ந்து கொள்கிறேன்" என 
  சொல்லி சொன்னதை செய்தாள்.

பெண்ணின் ஸ்பரிசம்
  போதைகளின் அரசி. 
 தெரிந்தும் மீள முயலவில்லை.


பின் குழந்தைகள் பெற்றோம் 
 பெயரிட்டோம்.செலவிட்டோம்.
இருந்த காசில் 
  எங்கள் உலகம் வாங்கினோம்.


பல நேரங்களில் உதடுகளின் வேலையை 
          கண்களே செய்கிறது.
எங்களுக்கு அழுகையென்ற உணர்ச்சி 
        இருப்பதே தெரியவில்லை.


கவிதையாய் வாழ்கிறோம்.
  கணங்கள் உறைகின்றன.....


ஏதோ சத்தம் கேட்டு 
   உயிர் பெற்று உலகுக்கு திரும்பினேன்.
அலைப்பேசி தும்மி இருக்கிறது.
  எடுத்துப்பார்த்தேன். குறுஞ்செய்தி.


"Fool..kirukkaa..loosu...
   itz 10..im already in PVR"

சுந்தரிகள் கனவில் 
 மட்டுமே சுந்தரமாய் வருகிறார்கள்.....செவ்வாய், 19 ஜூலை, 2011

கேள்வி பதில் (பகுதி 2)


                                                                    


"யாரு பராக்கா..சொல்லுங்க ரொம்ப நாளா Phone பண்ணவே இல்ல..மிச்சல் சௌக்கியமா...ஒயிட் ஹவுஸ் மழை பெஞ்சா ஒழுகுதுனு சொன்னீங்களே சரி பண்ணிடீங்களா??"


" "
"ம்..நா நல்லா இருக்கேன்...வேறென்ன விசேசம்.."
" "


"என்னது..நம்ம ப்ளாக்ல வர்ற கேள்வி பதில ஒங்க ஊர் பாடதிட்டத்துல சேக்கனுமா..அங்கெல்லாம் சமச்சீர் கல்வி கெடையாதா..."
"  "


"ஓ அப்டியா..இருங்க எதுக்கும் நா நம்ம மன்மோகன்ட்ட கேட்டு சொல்றேன்..."
" "


"இல்ல இல்ல ..அவர் பார்லிமென்ட்ல தான் பேச மாட்டாரு ..என்கூடலாம் நல்லா பேசுவாரு..தங்கமான ஆளுங்க..."


***********************************************************************************


மேற்கொண்டு எதுவும் பேசத்தேவையில்லை. நேரா கேள்வி பதிலுக்கு போயிருவோம்.


1) அது ஏன் கைது செய்பவர்கள் எல்லோரையும் திகார் ஜெயிலில் அடைக்கிறார்கள்???     (பாண்டி,பாளையங்கோட்டை) 


  ம்..அங்க புதுசா நூறு போதி மரம் நட்டிருக்காங்கலாம். எல்லா பய புள்ளைகளும் ரிலீஸ் ஆகுரப்போ புத்தராகி வந்திருவாய்ங்களாம். அதான்.
2) கடந்த ஆட்சி காலத்தில் செத்தவர்களின் சாவு செல்லாது என அம்மா அறிவிக்கப்போகிறாராமே???   (சித்தன், உன்னயேநீஎண்ணிபாருபட்டி)


  இதுக்கே இப்டி சொல்றீங்க கண்ணகி சிலைய Hongkongக்கு அனுப்பப் போறதாக் கூட ஒரு நியூஸ் இருக்கு..என்ன செய்றது...
3) உங்கள் ப்ளாக்ஐ தொடர்ச்சியாய் படித்துவந்தால் எயிட்ஸினால் சாவில்லை என விளம்பரம் கொடுத்துள்ளீர்களே இது எந்த வகையில் நியாயம்????  (புள்ளிராஜா ,கில்மாபுரம்)


 யோவ் நம்ம ப்ளாக்க தொடர்ச்சியா படிச்சா ரத்தம் கக்கி அவனே செத்திருவான். அப்புறம் எப்டி எயிட்ஸினால சாவான். கரக்ட் தானே ...
4) என் மகன் எவ்வளவு திட்டினாலும் தலையாட்டிக்கிட்டு ஒரு வார்த்தை கூட பேசாம அப்டியே உட்காந்திருக்கான்..என்ன செய்வது ???  (நல்லதங்காள்,நாராயணபுரம்)


ரொம்ப சந்தோசமான விஷயம்மா இது. உங்க புள்ளைக்கு பிரதமர் ஆகுற எல்லாத்தகுதியும் வந்திருச்சு.ஜமாய்ங்க..
5) அந்த மாதிரி சர்வே ஒன்னு சொல்லுங்களேன்...ப்ளீஸ் ??  (காஞ்சவன்,வேலூர்.)


டேய் ஒன்னத்தாண்டா ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்...எங்கள பாத்தா ஒனக்கு எப்டிடா தெரியுது...இல்ல இதுக்கு முன்னாடி நாங்க அந்த வேல பாத்திட்டு இருந்தோமா...இவரு பெரிய கலெக்டர்... இவருக்கு சர்வே எடுத்து குடுப்பாங்களாம்...

6) அமேசான் காட்டில் வாழும் "அரபகிமோ"ங்கிற இனப்பறவை தன் வாழ் நாள் முழுக்க கக்காவே போகாதாமே??   (அறிவழகன், அணைப்பட்டி.)


இந்த நாத்தம் பிடிச்ச கேள்விய கேட்ட பாரு ஒனக்கும் ஒரு வாரத்துக்கு போகாதுடா... தைரியமான ஆளா இருந்தா அடுத்த தடவ முழு அட்ரஸ் எழுதி இந்தமாதிரி கேள்வி கேளுடா...
7) ச்சே இப்படி விம்பிள்டன் இறுதி போட்டில ரபால் நடால் தோத்துட்டாரே??    (சார்லஸ்,பக்கிங்காம்) 


ஏன் செய்ச்சிருந்தா ஒம்பொண்ண கட்டிக்குடித்திருப்பியா?? அவனே வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்னு போயிட்டான்.ஒனக்கென்ன ஒப்பாரி??
8) ஒரு நாள் டிஸ்கவரி சேனல்ல வர நிகழ்ச்சில கரடிகள் பேசும்னு சொன்னாங்க...இது எந்த அளவு உண்மை??  (வீரப்பன்,சத்தியமங்களம் )


நூறு சதவீதம் உண்மை. டான்செல்லாம் கூட ஆடும். வீராசாமி படம் பாக்கலையா...
9) நம் நாட்டில் ஊழல் தலை விரித்து ஆடுகிறதே இதை கண்டு உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா??? மனோகரன்,பராசக்திபுரம் 


அத விடு. ஒரு நூறு ரூபா தள்ளுனேன்னா இந்த கேள்விய முதல் கேள்வியா போட்டிரலாம்..என்ன சொல்ற ...
10) "தமிழர்களே நான் கடலில் போட்டாலும் கட்டுமரமா மிதப்பேன்"ங்கிற  கலைஞர் டிவி விளம்பரம் எப்படி?    (வீராசாமி, ஆற்காடு)


   அதுல போனா மட்டும் நம்ம தமிழக மீனவன சுடாம இருப்பாய்ங்களா....
                                                           
11) நடந்து முடிந்த தேர்தலில் உங்களுக்கு பிடிபட்ட உண்மை என்ன??      (அரிச்சந்திரன், அரண்மனைப்புதூர் )


  வடிவேலுவின் நகைச்சுவையை மக்கள் வெகுவாக ரசிக்கிறார்கள்.
12) ரசிகர் மன்றங்களை கலைத்த அஜித் பற்றி என்ன சொல்றீங்க ??     (தீனா, அத்திப்பட்டி )


 உங்காத்தாவ முதல்ல பாரு 
  மங்காத்தவ பிறகு பாத்துக்களாம்ங்கிறாரு...நல்ல விஷயம் தானே திங்கள், 18 ஜூலை, 2011

ஹாஸ்யம்

யம் பேரு ராமச்சந்திரன். நல்லா கவனமா கேட்டுக்கிட்டீயளா... 'ச்' பேருக்கு ஊடாப்ல வரணும். பாதிப்பய சந்திப்பெழயோடதா பேசுதாம். கேட்டா நா கம்ப்யூட்டர் வேல பாக்கோம் முழுத்தும் இங்கிலிஷ்ல தேன் பேசணும்பான்.இந்த அகராதி புடிச்சதுகளெல்லாம் எழுவது,எம்பதுல வேலயில்லாம நாண்டுகிட்டு செத்தானுவளே அப்போ பொறந்திருக்கணும். நான்லா தூத்துக்குடி நாச்சியப்பன் ஹைஸ்கூல்ல வேல பாக்கேல முப்பது ரூபாதா ச்சம்பளம். அருள படிக்க வைய்க்கேளே எவ்ளோ கஷ்டம்.. ஷ்..சொல்ல மறந்துட்டனே இப்போ நா உயிரோட இல்ல. போன வாரம்கூட தினமலர்ல மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலினு எம்படத்தோட வெளம்பரம் குடுத்திருந்தாங்களே... "அன்னாரது பிரிவில் வாடும்"னு அன்னம்,அருளு,மாப்ள பேரெல்லாம் கூட போட்டிருந்தாவளே. இந்தப் பொடுசுக ஜீவா,யாழினி பேரும் கூட இருந்துச்சு. மூணு வருசமும் மறக்காம பண்றா அருளு.ஒத்தைக்கு ஒரு புள்ளங்கிறதுனால எனக்கு அவனா உசுரு.அவளுக்கும் அப்டித்தான். சாகுறது அப்டிலாம் ஒன்னும் கஷ்டமான விஷயமில்ல. என்னெல்லாம் மூச்சுத்தெனறுதுனு திருநவேலி அப்பல்லோல சேத்தப்போ மெரண்டு தே போனேன்.

அவிய ஆஸ்பத்ரில பேசுறதும் பயமா தா இருக்கும்.ஒரு செவ்வாக்கெலம காலைல முதுகுல ஒரு ஜிவ்வுன வலி. யாரோ ஐச தூக்கி வக்கிற மாறி இருக்கு.அது அப்பிடியே அந்தாள மேல தல வரைக்கும் போகுது. திருப்பவும் கீழ கால் வரைக்கும் வருது. பேச வாய் வர மாடிங்குது. அன்னம் தூங்கிட்டுக் கெடக்கா. நானு "அடியே பொசமுட்டி எந்திரிடி...நீ அருந்தாளியாக போறே ,உசுரு போகுதுடீ..ஒன்ன ஒரு தடவ பாத்துக்கிடுதேன்.."னு கத்த நெனைக்கேன்.முடில. கை,கால் அசைக்க வர மாட்டேன்னுது.அப்புறம் பொசுக்குனு எதுலையோ குதிச்ச மாதிரி இருந்துச்சு.இந்த ஆறு,குளத்துளயெல்லாம் குதிச்சோனே ஒரு 
மாதிரி தண்ணிக்குள்ள கம்முன்னு இருக்கும்ல அப்டிஇருந்துச்சு.இப்டியா சொகமா தான் எங்கதை முடிஞ்சது. அப்புறம் எல்லாங்காலைல அழுதாவ. அருளு ஏங்கி ஏங்கி அழுவேல எனக்கே பாவமா இருக்கு. அப்பா நல்லாதாம்ல இருக்கேன் சொல்ல ஆசையா இருக்கு.முடியாதே. இந்த கடைசி பத்து வருசத்த நெனச்சு பாக்கேன். எவ்வளவு சீக்கிரமா போயிருச்சு..

                                           


அருளு மாப்ளைக்கு பாங்குல மாத்தலாகி திருநவேலி போயிட்டா. இந்த ஜீவா பயல பாக்காம ச்சங்கடமா போச்சு. தாத்தா தாத்தானு கழுத்துல தொங்கிட்டே கெடப்பான்,இப்டி விட்டுட்டு போயிட்டானேனு இருக்கும். ரெண்டு நாளுக்கு ஒரு தரம் போன்ல பேசிட்டு இருப்பான். அப்புறம் அதுவும் கொறஞ்சு போச்சு.பெறவு யாழு பொறந்தா.ஜீவா "இங்கிலீஷ் மீடியம் படிக்கேன்னு" பெருமையா சொல்லுவான். "சோசியல் சயன்ஸ் நா சொல்லித்தரேம்" டா ம்பேன். சிரிப்பான். அந்தப்பைய சிரிக்கைல கன்னத்துல எடது பக்கம் குழி விழுகுமே..அத பாக்கவே ஆச ஆசயா இருக்கும். அவன் ச்சின்னப் புள்ளைய இருக்கேள அதுக்காகவே அவன் அக்கிள்ள "கிச்சனம்" செய்வேன். சின்னவ யாழுவும் பிடிக்கும் தான். இந்த ஜீவா பய மேல தான் ஒட்டுதல் சாஸ்தி. அப்புறம் வருஷத்துக்கு ஒரு தடவ இதுக முழுப்பரிச்சை லீவுக்கு தான் தூத்துக்குடி வருவாய. அந்த ஒரு மாசமும் அவளவு சந்தோசமா திரிவேன். வீடே ஒரே சத்தகாடா கெடக்கும். நா காலைல டீ கடைக்குக் கூட போறதில்லே.இந்த ஜீவா பய பாதி நேரம் இந்த வீடியோ கேம்ஸ் வெளாண்டுக்கிட்டே கெடப்பான். வளர வளர என்கூட அதிகமா பேச மாட்டிங்குதான். முன்னம்லா அவுகம்மா ஏசுனா எம்ட தான் ஓடி வருவான்.

ஒருக்க அருளு வீட்டுக்கு போயிருந்தப்போ கவனிக்கேன். இந்த ஜீவா பய அவுக சித்தப்பா கால் பின்னாலே சுத்துதான். அந்தாளே அந்த அறவேக்காட்டு பய என்ன சொன்னாலும் சிரிக்கான். "இப்டித்தான் ஒரு வாத்தியார் இருந்தார்..", "இப்டித்தான் ஒரு வக்கீல் இருந்தார்.." னு என்னென்னமோ சொல்லுதான். இந்த ரெண்டு கழுதைகளுக்கும் ஒரே சிரிப்பு.

 "எலே பத்தாப்பு படிக்கவனே..இங்காடே..உங்கூட்டு ஆளுவ கூட தா பேசுவியா..கெளவய்ங்க கூட பேச மாட்டியோ.." ங்கேன். வந்து நின்னு கிட்டு என்ன பாக்கான். மொகரைல கொஞ்சமா பருவெல்லாம் வந்திருக்கு.இந்த பொடுசு யாழுவ தூக்கி ,'ஏம்டி தாத்தா கூட பேச மாட்டியோ' ங்கேன். அவ "போ தாத்தா நீ ஒரே போர்.எப்ப பாரு சயின்ஸ் கேள்வியா கேட்டுக்கிட்டு கெடப்ப..எங்க சேகர் சித்தப்பா எவளோ ஜாலி தெரிமா..எந்நேரமும் எங்களுக்கு ஜோக் சொல்லிட்டே இருப்பாங்க"ன்னுதா. அவெ சொன்னதெல்லாம் சொல்லி சிரிக்காவ ஜீவாவும் இவளும். எனக்கு கெடந்து எரிச்சலா கெடக்கு. இதுகள பாக்க அவளவு தூர போயிருக்கேன்..என்கூட மூஞ்சொடுத்து பேச மாட்டிங்கிறாவ...

ஊரு வந்து சேந்ததும் மனசுக்கு ரொம்ப சங்கடமா கெடந்துச்சு. இதுக இந்த மே க்கு ஊருக்கு வரேலே நாமளும் சிரிக்க சிரிக்க பேசனும்னு வைராக்கியம் வந்துச்சு. நாம்லா பேசுதோம்னா ஆறுமுகநேரி பக்கம் அஞ்சூறு ஒக்காந்து சிரிக்க கேட்டுட்டு இருப்பாய.ஒருக்க எங்கூரு பக்கம் ஒரு பெரியவர் போலி விப்பாரு. அவரு சத்தம் போட்டு "போலி..போலி..." கத்திட்டு வர ,நான் "இவரு தாம்ல உண்மையச்சொல்லி விக்காரு" ஞ்சொன்னேன் பாக்கனும். கூட இருந்த பயகெல்லாம் அப்டி ஒரே சிரிப்பு.ஆனா இப்ப இருக்குறதுகளுக்கு நம்ம பேசுதது பிடிக்க மாடிங்குது போலுக்க.. "சித்திரமும் கைப் பழக்கம்" னுவாய.லைப்ரரில போயி சிரிப்பு புத்தோமா எடுக்க ஆரம்பிச்சேன்.அங்க அங்க எழுதி வச்சிக்கிடுதுவேன். டீவில கூட சிரிப்பு நிகழ்ச்சிலாம் பாக்க ஆரம்பிச்சேன்.அன்னத்துக்கு கூட ஒரே ஆச்சிரியம். ஓரமா சிரிச்சுக்கிடுதா.கழுத..அப்டி ஒரு நா ராத்திரி தான் மூச்சு தெனரல் வந்துச்சு. அதத்தான் முன்னமே சொன்னனே..ஆஸ்பத்திரிக்கு போயி ..போய் ச்சேந்தென்னு...ஆஸ்பத்திரில இருந்து வீட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டாக,ஜீவாவும் குட்டியும் கூட அழுவுதாவ. சாவுற வீட்ல ஏம்ல அழுவுறாகனு இப்பல புரியுது.செத்தவனுக்கு புரிய வைக்க போலுக்க. பெறவு எல்லா முடிஞ்சு போச்சு. ஜீவா என்னோட ரூமுக்கு போயி நோட்டிண்டு கெடந்தான்.கைல அவனுக்கு அந்த பேப்பர் ஆப்டிருச்சு.எடுத்து படிக்கான்.

தொண்டர் 1: தலைவர் ஏன் ஞ்சோகமா இருக்காருல ...

(கொஞ்சம் இடைவெளி விட்டு)

தொண்டர் 2: அவரு கட்சி மாறுனத விளையாட்டுச்செய்திகள்ள சொல்லிட்டாவளாம்...


படிச்சிட்டு அவனுக்கு கண்ணெல்லாம் கலங்கிருச்சு. ஆனா அப்றம் சிரிக்கான். நல்லா சிரிக்கான்.கன்னத்துல குழி தெரிய சிரிக்கான். ரொம்ப சந்தோசமா இருந்துச்சு தெரியுமா...

செவ்வாய், 5 ஜூலை, 2011

விலைமாது(A)


தொலைக்காட்சி,குளிரரூட்டி,நாற்காலி,கணினி 
 என எல்லாமிருந்த அறையில் அவர்களுக்கு 
  கட்டில் மட்டுமே தேவைப்பட்டது....


அவன் முயன்று முன்னேற 
  அவள் முனங்கிப் பின்வாங்கினாள்.
மனிதஇனத்தின் மகரந்த சேர்க்கை அங்கே 
             நடந்துகொண்டிருக்கிறது...
யார் பூ யார் வண்டு ஆராய்தல் 
         அவசியம் இல்லை...


ஆதாம் கண்டுபிடித்த ஆட்டம் 
           நிறைவு பெற்றது.
இளைத்துக் கலைத்தனர்- வியர்வை
   முத்துக்கள் உடல் முழுக்க கோலம் போட்டது.


 அவன் கலைமகன். 
  அவள் விலைமகள்.


கற்பனையை பேனாவுக்குள் ஊற்றி 
    காட்சிகள் படைப்பவன் அவன்.
தன் உடலை பொதுவுடைமை 
   ஆக்கியவள் அவள்.


நாற்பதை தொட்டவன் அவன்.
 இலக்கியம் இறுமாப்பு இரண்டும் 
   இரு கண்கள் அவனுக்கு...
 குடும்பம்,பொறுப்பு போன்ற 
     இமைகள் கிடையாது..


பட்டினத்தாரையும் காதல் பாட்டு எழுத 
  வைக்கும் அழகு அவளது..
இந்த அவசர உலகம் கொடுத்த 
 "ஒரு மணி நேர மனைவி"- இவள்


ஜன்னல்களை திறந்தான். வானத்தை ஆராய்ந்தான்.. 
                           பேனா புத்தி அது 
நிலவு நட்சத்திரங்கள் ஏதுமின்றி வானமும் 
             நிர்வாணமாய் இருந்தது......
                                                


புகைக்க தொடங்கினான்.
  அவள் கோபம் கொண்டாள்.
கூடிய பின் புகைப்பது 
   அவனது நெடுநாள் பந்தம்.
ஆனால் புகைக்கக்கூடாதென்பது அவர்கள் 
  முன்னமே செய்த ஒப்பந்தம்!!!


அவனை ஏசினாள்.
  காற்றை கற்பழிக்காதே என்றாள்.
அவனுக்கு கோபம் பற்றியது.
 "வேசை தானே நீ... பலர் தொடும் பரத்தைக்கு திமிறென்ன??"
தீப்பிழம்பை கக்கினான். 
  அவளோ எரிமலையானாள்.


அவள் கண்கள் சிவப்பானது. 
   அவனை ஏறிட்டு அற்பமாய் பார்த்தாள்.
"ஆம்.வேசை தான் நான்.." என 
              ஆரம்பித்து தொடர்ந்தாள்.


என்னிடம் வறுமைக்கதைகள் இல்லை.
   நியாயப்படுத்தும் காரணங்கள் இல்லை.
உனக்குக் காமம் எப்படியோ 
       எனக்கும் அப்படியே...


துணை இழந்த வயதானவனின் வடிகால் நான்...
  எங்கோ நடக்க இருக்கும் பாலியல் குற்றத்தைத்தடுக்கிறேன்...
உண்மையில் மிருகங்களின் காமங்களைந்து 
  மீண்டும் நாங்கள் தான் மனிதர்களாக்கி அனுப்புகிறோம்.
நாங்களில்லையேல் உன் சமுதாயம் 
              நாறி நாற்றமடிக்கும்.... 


இதுவும் ஒரு வியாபாரமே ....
         ஏமாற்றில்லா...ஊழலில்லா... வியாபாரம்.
நீ அசைவம் கொலை என ஒத்துக்கொள் 
  நான் விபச்சாரம் தவறென ஏற்றுக்கொள்கிறேன்.


கற்பிழப்பவர் வேசை என்பது உன் சித்தாந்தமெனில் 
    நீயும் ஒரு வேசை தானே......


"வேசி" பெண்பால் என 
  எவன் சொன்னது??...


அவனருகே வந்து தாழ்ந்த குரலில் 
         மீண்டும் சொன்னாள்....


"உனக்குக் காமம் எப்படியோ 
   எனக்கும் அப்படியே...."


பேசிவிட்டு அறையிலிருந்து 
    விடைபெற்றாள்....


அவன் கண்ணிமைக்காமல் அவள் 
     சென்ற திசை நோக்கிக்கொண்டிருந்தான்.


தாளில் அடுத்த நாவலுக்குத் தலைப்பிட்டான்.
  விலை(மதிப்பில்லா) மாது!!!!!!!!!!