வியாழன், 25 மார்ச், 2010

மூன்றெழுத்து!!!!!!!!!!!!!

செந்தில்னு நம்ம நண்பர் ஒருத்தர் அவரோட அலுவலக தோழரோட வாழ்க்கைல நடந்த/நடந்து கொண்டிருக்கிற சம்பவங்கள அப்டியே ஒரு உண்மைத்தொடரா இங்கிலிபிஸ்ல எழுதிட்டு இருக்காரு. சரி நம்ம அதையே தமிழுல எழுதுனா நல்லா இருக்குமேன்னு ஒரு அற்ப ஆசை... அதாங்க நம்ம 'ஜெயம்' ரவி, விஜய் லாம் பண்ணுவாங்களே ...அதே தான் ' REMAKE' ... உங்களை நெனச்சா தான் பாவமா இருக்கு ,எவ்வளவோ தாங்கிட்டீங்க இத தாங்க மாட்டீங்களா?? ...

Our Sincere thanks to
செந்தில்........(http://simplytoknow.blogspot.com)

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், டம்ளர்கள் அனைத்தும் உண்மையே!!!!!

மூன்றெழுத்து!!!!!!!!!!!!!
************************************
உண்மைத்தொடர் பகுதி-1

ஒரு வெள்ளிக்கிழமை சாயங்காலம் சென்னையே இங்கு தான் இருக்கோ அப்டின்னு சந்தேகப்படும் அளவுக்கு இருந்தது எக்மோர் ரயில் நிலையம். ' பயணிகளின் கனிவான கவனத்திற்கு ' என்ற அறிவிப்பை கேட்கத்தயாராக இல்லாமல் அங்கும் இங்கும் மனிதர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். கையில் வைத்திருந்த டிக்கெட்டை பார்த்த படி 'பியர்ல் சிட்டி' எக்ஸ்ப்ரஸின் S7 கோச்சில் ஏறிக்கொண்டான் சதீஷ். அதே நீல நிற இருக்கைகள், கொஞ்சூண்டு சிறுநீர் வாடை, அங்கங்க கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் குறிப்புகள், வீட்டையே ரெண்டு கூடைப்பைக்குள் அடைத்து வரும் பெண்கள், ஓடினாலும் பயன்தராத உதவாக்கரை மின்விசிறிகள் என மாதமிருமுறை ரயில்பயணம் செய்வதில் பார்த்து ஒருமாதிரி பழகிப்போயிருந்தது சதீசுக்கு. தன்னோட இருக்கையில் அமர்ந்து லேசாய் சாய்ந்து கொண்டான். அலுவலகத்தில் இருந்து கெளம்பும்போது மேனேஜர் நகர விடாம கேள்வி கேட்டதெல்லாம் ஞாபகம் வந்தது . ரெண்டு, மூணு கெட்டவார்த்தைகளால் உள்ளுக்குள்ளே திட்டினான். பக்கத்திலிருந்த கண்ணாடி பார்த்து தலை வாரிக்கொண்டான். முகத்தில் ரெண்டு நாள் தாடி ஒட்டியிருந்தது. இன்னொரு 'உப்புமா' பயணத்துக்கு தயாராவதாக நினைத்து நொந்து கொண்டான். ஆனால் காலம் அவனைப்பார்த்து கண்டபடி சிரித்தது . அது அவனுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.

அந்த மாலை வேளையிலும் எல்லோருக்கும் வேர்த்து ஊத்திக்கொண்டிருந்தது. 'உச்' கொட்டிக்கொண்டே கைக்குட்டையால் முகத்தை துடைத்துக்கொண்டிருக்கையில் தான் அவளைப்பார்த்தான்.S7 இல் ஏறி நடந்து வந்து அவனது எதிர் இருக்கையின் எண்ணை பார்த்துவிட்டு , 'ம்.. Seat பாத்துட்டேன்' னு யார்கிட்டயோ போன்ல சொல்லிக்கொண்டிருந்தாள்.மீண்டு
மொருமுறை பார்த்துக்கொண்டான் சதீஷ். அவளே தான். அவன் அலுவலகத்தில் புதிதாய் போனமாசம் வேலைக்கு சேர்ந்த புதுமுகத்தில் இவளும் ஒருத்தி. ஆயிரம் பேர் இயங்கும் அந்த IT தளத்தில் தனியாய் தெரியும் வடிவானவள். சுத்த தமிழுல சொல்லனும்னா 'செம்ம figure'. இந்த தொடருக்கு கதாநாயகி ஆகும் எல்லா தகுதியும் உள்ளவள். மஞ்சள் சுடிதார் ,வெள்ளை டாப்ஸ், சிரிக்காத போதுகூட கன்னத்தில் விழும் குழி,ஒரே ஒருவிரலில் மட்டும் வளர்க்கப்பட்ட நகம் அப்டின்னு அவளை பார்த்து ஜொள்ளுவிட ஆயிரம் காரணங்கள் ஆண் இனத்துக்கு உண்டு. கையிலிருந்த ஆனந்த விகடனை யதார்த்தமாய் திருப்புவதுபோல் நடித்துக்கொண்டே அவள் பேர் என்னான்னு யோசித்துக்கொண்டிருந்தான் சதீஷ். ' பேர் என்னமோ சொன்னானே செந்தில் அன்னிக்கு ...' என மனதில் போட்டு குழப்பிகொண்டிருந்தான். அதுக்கெல்லாம் காலபைரவர் வேலைவைக்கவில்லை. அவளே அவனைப்பார்த்து லேசா சிரித்து , 'ஹலோ' என்றாள். ரயில் தன் பயணத்தை ஆரம்பித்தது.


கன்னாபின்னாவென துடித்த இதய ஓட்டத்தை கண்டுகொள்ளாமல் இவனும் அவளைப்பார்த்து 'ஹாய்' சொன்னான்.

அவள் ,' ஐ 'ம் கீர்த்தனா. நீங்க சதீஷ் தானே. பதினொன்னாவுது floor ல இருக்கிற JD Projectla தான் வொர்க் பண்றீங்க' அப்டின்னு புருவத்தை உயர்த்திக்கேட்டாள். அவள் குரல் அந்த அளவு இனிமை இல்லையெனினும் ,எதோ ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது.

' ஓ... உங்களுக்கு ஜோசியம்லாம் தெரியுமா... பொட்டு கொஞ்சம் பெருசா இருக்கிறப்போவே Doubt ஆனேன்' முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் சொன்னான் சதீஷ்.

கீர்த்தனா குறும்பாய் அவனைப்பார்த்து லேசாய் சிரித்தாள் அல்லது இன்னும் அழகானாள். ' என்ன எப்படி தெரியும்னு' கேட்பதற்கு பதில் சதீஷ் போட்ட 'பிட்டு' ஓரளவு 'Work Out' ஆகியது. சந்தடி சாக்கில் அவள் பொட்டை பற்றியும் கமென்ட் சொல்லியாகிவிட்டது. அழகுப்பெண்களிடம் பேசக்கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் ஒலிம்பிக் நொடிகள். கிடைக்கின்ற கனப்பொழுதில் சாதித்தே ஆக வேண்டும், இல்லேயேல் காத்திருக்கும் மைக்கேல் பெல்ப்சோ, ஹுசைன் போல்டோ பதக்கத்தை அள்ளிவிடுவார்கள். இந்த ஞானமெல்லாம் ஏழு கழுதை வயசான நம்ம சதீசுக்கு சொல்லத்தேவையிருக்கவில்லை.

' ஹலோ... உங்க project ல இருக்கிறாளே ரோஷினி....'

' ஆமா'

'அவ என்னோட கஸின்....'

நல்லவேளை 'ஆமா' விற்கு பதிலாக ,'அந்த லூசா'வென கேட்கவிருந்தான். மயிரிழையில் தப்பினான்.

'அவ உங்க எல்லாத்தையும் பத்தி அடிக்கடி சொல்லிட்டிருப்பா... நா Break டைம் ல உங்க floor ல தான் சுத்திட்டு இருப்பேன் ' என்றாள்

' நாங்கூட உங்கள அடிக்கடி பாத்திருக்கேன் ' என தன்னையுமறியாமல் வழிந்தான். அவனுக்குத்தான் அவள் வரும் நேரம் முதற்கொண்டு தெரியுமே...

இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். தங்கள் அலுவலகத்தை பற்றி ,அரசியல் ,சினிமா அது இது வென சிக்கியதெல்லாம் பேசினார்கள். இரவு சாப்பிடுகையில், தான் கொண்டுவந்திருந்த இட்லியை கடப்பாரை கொண்டு வந்து தான் பிளக்க வேண்டும்னு கீர்த்தனா சொன்ன மொக்கை ஜோக்குக்கு சதீஷ் பயங்கரமாய் சிரித்தான். அதுவும் சாப்பாடே பொறை ஏறுவது போல் பண்ணியது தேசிய விருதுக்கான நடிப்பு.இவர்கள் பேசுவதெல்லாம் கொஞ்சமாய் கேட்டுக்கொண்டே வந்த சக பயணிகள் மூஞ்சில் நிறைய எரிச்சல் தெரிந்தது. அதுவும் ஒரு பெரியவர் அஜீரண கோளாறு போல் மூஞ்சை வைத்துகொண்டார். ஒரு வழியாய் 'Lets Sleep' என கீர்த்தனா தான் முற்றுப்புள்ளி வைத்தாள். சதீஷ் சமத்தாய் தலையாட்டினான். வேறென்ன செய்ய முடியும் முடிவெடுக்கும் உரிமை தான் ஆண்களுக்கு எந்த காலத்திலயும் கிடைத்ததில்லையே.. இருவரும் கொஞ்ச நேரத்திலே தூங்கிப்போனார்கள்.

மணி காலை 5 ஐ தொட்டது. திருச்சி நிலையத்தில் வண்டி நின்றுகொண்டிருந்தது. சதீஷ் விழித்து உட்கார்ந்து கொண்டான். இரவில் கீர்த்தனா கூட பேசியதெல்லாம் அழகாய் ஞாபகம் வந்தது. மிச்ச தூக்கத்தை கெடுக்க அதுவே போதுமானதாக இருந்தது. அதுவும் அவள் அந்த ஐஸ் கிரீம் குரலில் ' ஹே..சதீஷ்..' என கூப்பிட்டதை நினைத்துப்பார்த்து ரசித்தான். மேல் பெர்த்தை பார்த்தான்.கீர்த்தனா மூஞ்சு வரை பெட்ஷீட் மூடி படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள். காதில் head phone ஐ செருகி காதல் பாடல்களை தட்டினான். கீர்த்தனா தரிசனத்திற்காக காத்திருந்தான்.

இன்னும் மதுரையை சென்றடைய முப்பது நிமிடம் தான் இருந்தது. சதீஷ் இன்னும் இருப்பதே நிமிடத்தில் சோழவந்தானில் இறங்கி விடுவான். கீர்த்தனா எழுந்திருப்பது போல் தெரிவதில்லை.அவளை எழுப்பலாமா என யோசித்து நாகரீகம் கருதி அந்த முடிவை கை விட்டான் சதீஷ். திடீரென ஒரு ஹார்ன் சத்தத்தில் எழுந்த கீர்த்தனா கீழே குனிந்து ஜன்னல் பக்கம் பார்த்து விட்டு நாம எங்க இருக்கோம்னு சதீசை பார்த்து கேட்டாள்.' ஏன் இவ்வளவு நேரம் கோமா ஸ்டேஜ்லயா இருந்த??... வேமா கீழே இறங்கு இன்னும் கால் மணி நேரத்துல மதுரை வந்திரும் ..'

' oh god ... நீயாவுது என்ன எழுப்பிருக்கலாம்ல' னு சொல்லிக்கொண்டே கீழிறங்கினாள். பாத்ரூம் பக்கம் போய் முகத்தை கழுவிவிட்டு உட்காந்தாள்.

' நான் அடுத்த station ல இறங்கிடுவேன் .... ஹே எதுவும் தண்ணி கிண்ணி அடிச்சிட்டு படுத்திட்டியா?.. இப்படி தூங்குற??'

'ஹி ஹி' என சிணுங்கி விட்டு ' ரொம்ப 'Tired' ஆ இருந்துச்சு அதான். எப்பவும் நான் ஒன்பது மணிவரைக்கும் தூங்குவேன் தெரியுமா' என்றாள்.

' பாவம்'

' யாரு'

'யாரோ'

இருவரும் மெல்லமாய் சிரித்தார்கள். வண்டி சோழவந்தான் நிலையத்தை அடைந்தது. 'Bye' சொல்லிவிட்டு பேக்கை எடுத்தான். ' ஹே உன் மொபைல் நம்பர் சொல்லு' என்றாள்.நல்லவேளை எங்க கேக்காமல் போய் விடுவாளோ என பயந்திருந்தான். இருவரும் பரஸ்பரம் நம்பர்களை பரிமாறிக்கொண்டார்கள். பக்கத்து சீட்டு பெரியவர் முகம் இன்னும் அப்படியே இருந்தது. அஜீரணக்கோளாறு முடிந்ததாய் தெரியவில்லை. கீர்த்தனாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு வேகமாக இறங்கிக்கொண்டான்.

ரயில் மதுரையை நோக்கி புறப்பட ஆரம்பித்தது. சதீஷுக்கு மொபைலில் குறுஞ்செய்தி வந்தது. எடுத்து பார்த்தான். ' Hey Satheesh, happy weekend. Enjoy !!' என கீர்த்தனா தான் அனுப்பியிருந்தாள்.போகிற ரயிலில் அவள் தலை தெரிகிறதா என எட்டிப்பார்த்தான். ர.மு , ர.பி என ரயில் பயணத்திற்கு முன்னும் பின்னும் என பிரிக்கும் அளவிற்கு அவனுக்குள் ஏகப்பட்ட மாற்றங்கள். இன்னும் போகிற ரயிலை பார்த்துக்கொண்டிருந்தான்.
இப்படியே சில நிமிடம் தொடர்ந்தது அவனது
-- தேடல்

---- மூன்றெழுத்து தொடரும்------------

செவ்வாய், 16 மார்ச், 2010

பின்நவீனத்துவம்கலைஞர்கள் எல்லாருக்கும் தான் தனித்து தெரிய வேண்டும் என்ற மோகம் எப்போதும் இருக்கும். அதன் விளைவாக தன்னுடைய படைப்புகளில் வித்தியாசத்தை புகுத்த முயற்ச்சிப்பார்கள். படைப்பென்பது திரைப்படமாகவோ ,நாவலாகவோ அல்லது வேற எந்த வடிவமாகவும் இருக்கலாம்.உலகின் தலைசிறந்த கதை சொல்லிகள் எல்லோரும் ஒத்துக்கொள்ளும் மிகச்சவாலான திரைக்கதை யுக்தி தான் 'Non Linear story Telling'. தமிழில் 'வரிசையில்லா காட்சியமைப்பு' எனச்சொன்னாலும் நமக்கு எதுவும் வரி விலக்கு கிடைக்கபோவதில்லை என்பதால் நாம் 'Non Linear Story Telling' என்றே விளிப்போம். அதாவுது காட்சிகள் ஒழுங்கான வரிசையில் அமைந்திருக்கக்கூடாது . அடுத்தடுத்த காட்சிகளுக்கு சுத்தமாய் தொடர்பே இருக்ககூடாது.இறுதியில் ரசிகர்கள் கதை ஓட்டத்தை புரிந்து கொண்டு 'ஓ' வென சொல்லி ரசிக்கனும். கொஞ்சம் கரணம் தப்பினாலும் குழம்பிப்போய் 'காரி' உமிழும் அபாயமும் உண்டு. நம்மூர் பாசையில் சொல்லணும்னா காட்சிகளை கொத்து பரோட்டா போட வேண்டும். உலக சினிமாக்களில் இன்னமும் இந்த முறையை பயன்படுத்துறாங்க. நம்ம ஊர்ல அஞ்சு பாட்டுக்கும் ,ரெண்டு சண்டைக்கும் நடுவுல யாருக்கும் இந்த மாறி வித்யாசத்த வைக்க தோணல போல.

யாராவுது நான் கதை எழுத போறேன்னு சொன்னா நம்ம சினிமா வல்லுனர்கள் பார்க்கச்சொல்ற முக்கியமான படம் 'Pulp Fiction'. இத்திரைப்படமும் மேலே சொன்னா NLST வகை தான்.முதல் தடவ இந்தப்படத்தை பார்த்தவுடனே ஒருத்தருக்கு புரிஞ்சிட்டா கண்டிப்பா அவர் தெய்வக்குழந்தை. அடியேனுக்கு புரிய மூன்று முறையானது. ஆனா படம் புரிஞ்சவுடனே கிடைக்கிற பரவசம் இருக்கே அதை சொல்லி மாளாது. அதாவுது சிறுவர்கள் புத்தகத்தில் யானையின் படத்திற்கு பதிலா 1,2,3 னு எண்களை குழப்பி கொடுத்திருப்பார்கள் ,வரிசைப்படி அதை இணைச்சா நமக்கு அந்த முழு உருவம் கிடைக்கும்ல... கிட்டத்தட்ட அதே உணர்ச்சி தான் நமக்கு இறுதில கிடைக்கும்.கூடுதலா அழகான வசனங்கள், திறமையான நடிகர்கள் கிடைச்சிட்டா இவ்வகை படைப்புகள் காவியமாகவும் ஆவதுண்டு.அப்புறம் சும்மாவா மேற்படி படத்துக்கு 'Oscar' கொடுத்தாங்க. உலகின் தலைசிறந்த அஞ்சு படங்கள்ல இதுவும் ஒன்று என அடித்துச்சொல்கிறார்கள்.
.MOMENTO, IRREVERSIBLE என இந்த ரக படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வியூகத்தை நம்ம மணிரத்னம் 'ஆயுத எழுத்து' ல கொஞ்சமா முயற்சி பண்ணிருப்பார் ,அதுக்கே நான் கண்கலங்கி பாராட்டுனேன். பிற்பாடு அது Amores Perros ங்கிற ஸ்பானிஷ் படத்தோட அப்பட்டமான காப்பினு தெரிஞ்சப்புறம் என்னை நொந்து கொண்டேன். இதுல என்ன கொடுமைனா
இந்த வகைப்படங்களில் சின்ன சின்ன வசனங்கள், கால நேரங்கள் , சமயத்துல கதா பாத்திரங்கள் கொட்டாவி விடுறது முதற்கொண்டு கவனிச்சுத்தொலையனும்.


சரி ' எலி ஏன் without ஆ ஓடுது..' அப்டின்னு கேக்குறீங்களா?? எதுக்கு இவ்வளவு பெரிய 'Lead' னா. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு நானும் ஒரு NLST (Non linear.....) சிறுகதை முயற்சி பண்ணிருக்கேன். 'படிக்கிறதே இருபது பேரோ ,முப்பது பேரோ... உனக்கு இதெல்லாம் தேவையா னு?? ' சொல்றீங்களா .. மறக்காம படிச்சிட்டு கருத்தச்சொல்லுங்க.........குறை இருந்தா திருத்திக்கிறேன் ... குறை மட்டுமே இருந்தா நிறுத்திக்கிறேன்....

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அந்த உன்னதமான மாலைவேளையில் சென்னைவாசிகள் கொயகொய வென எறும்புகள் போல் அன்றைய பொழுது ஓய்ந்த களைப்பில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
எந்த நேரமும் மழை பெய்யலாமென வானிலையில் ஒரு தயக்கம் இருந்தது. பேருந்துகளில் இந்தியாவின் மக்கள்தொகை தெரிந்தது.

' டிக்கெட் வாங்கதவுங்க வாங்கிக்கோங்க..செக்கர் வந்து மாட்டிக்கினினா ...500 ரூவா அழுவனும் பாத்துக்கோ...ஏம்பா கொஞ்சம் உள்ள போயேம்பா..அங்க என்ன பாம்பா இருக்கு...
வழில நிக்காதே... எம்மா மகராசி அந்த கூடைய எடுத்து ஓரமா வையுமா, ஒனக்கு புண்ணியமா போகும்...' கண்டக்டர் தன்னால் எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசினார்.

' எப்பா ....M.M.D.A காலனி ஆள் இறங்கனும்ப்பா..' என ஒரு பெரியவர் கத்திக்கொண்டே இருக்கையிலிருந்து எழுந்தார்.

' வண்டி நின்னப்ப என்ன தூங்கினிருந்தயா...ஒரு ஸ்டாப்பு முன்னாடியே ரெடியா இருந்துக்கோனு...கால் அவரா கத்தினு இருக்கேன்... வேமா இறங்குய்யா...' எனச்சொல்லிக்கொண்டே

விசில் கொடுத்தார்.

கல்லூரிப்பெண்கள், அலுவலக வாசிகள், வியாபாரிகள், இளைஞர்கள் என பல தரப்பட்ட மக்களும் கலந்திருந்தனர்.

' ரெண்டு அம்பது சில்ற கொடுப்பா... நா என்ன வச்சினா தர மாட்டுறேன் ... அம்பதுருபா நோட்ட நீட்னா என்னப்பா பண்றது..'


பேசிக்கொண்டே வந்து தன் இடத்தில் அமர்ந்து கொண்டு எதோ அட்டையில் எழுத ஆரம்பித்தார். பின்னால் சீட்டில் அத்தனை கூட்டத்திலும் சிலர் IPL பத்தி பேசிக்கொண்டு வந்தனர். அதையெல்லாம் கவனித்துக்கொண்டே வந்த இவர் ,' எய்தி வச்சிக்கோ...இந்த வாட்டி சென்னை டீம் செமி பைனல் கூட போவாது..' என கூட்டத்தில் பொத்தாம் பொதுவாக சொன்னார்.

கொஞ்சம் முன்பக்கம் திரும்பி காட்டமானார். ' டேய்..எவ்வளவோ சொன்னாலும் கேக்க மாட்டிங்களா டா.. அடுத்த பஸ்ல வந்தா கொறஞ்சா போவீங்க ... அங்க பார் ஒரு பரதேசி ஒரு கால வெளிய நீட்டிக்கினு தொங்குது...'


கண்டக்டர் பதட்டமாய் .' டேய் அவன புடிங்கடா... விழுந்திட போறான்....டேய் கருப்பு சட்ட................................' என அவர் கத்துவதற்கும் பின் சக்கரம் எதிலோ ஏறுவதற்கும் சரியாக இருந்தது..
எல்லாம் நொடிப்பொழுதில் நடந்து முடிந்தது... வெளியே ரோட்டில் அலறல் சத்தம் கேட்டது....*******************************************************************************************************
உ page no:3

5) a) The reaction between hydrogen and fluorine is an example of an oxidation-reduction reaction:

H2 + F2 → 2 HF

The overall reaction may be written as two half-reactions:

H2 → 2 H+ + 2 e (the oxidation reaction)

F2 + 2 e → ........

என எழுதிக்கொண்டிருக்கயிலேயே பேனாவை வைத்து நெற்றியில் உரசி ஒருமுறை யோசித்துக்கொண்டான் வினோத். ஆறடி இல்லாவிட்டாலும் கொஞ்சம் அசாத்தியமான உயரமாய் தெரிவான். அதற்கு அவனுது ஒடிசலான தேகம் கூட காரணமாய் இருக்கலாம். கண்ணாடியை ஒருமுறை சரிசெய்து கொண்டு ,வேர்த்திருந்த மூக்கையும் துடைத்து விட்டு மீண்டும் எழுத ஆரம்பித்தான். ஸ்கெட்சயும் பேனாவையும் மாறி மாறி உபயோகித்துக்கொண்டிருந்தான்.

' ஸ்..ஸ்..ஸ் வினோ .. டேய் .. Choose ல மூனாவுதுக்கு என்னடா answer .... ' என ரகசியமான குரல் பின்னாடி இருந்து வந்தது.

வினோத் முன்னால் திருப்பி கேள்வித்தாளை பார்த்து விட்டு பக்கவாட்டில் இரண்டு விரல்களை செய்கையாய் காண்பித்தான்.


கடைசி மணி அடிக்கும் வரை எழுதிக்கொண்டிருந்தான் வினோத். பிற்பாடு வரிசையாய் தான் எழுதிய பேப்பர்களை நூலால் கட்டிகொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.


' தேங்க்ஸ் டா வினோ... நீ மட்டும் 'One Marks' சொல்லாம போயிருந்தேனா ...நா சிங்கிள் டிஜிட்ல தாண்டா மார்க் எடுத்திருப்பேன்...' கேள்வித்தாளை 'ராக்கெட்' ஆக்கிகொண்டே சொன்னான் ஸ்ரீதர்.

'ஸ்ரீ..அப்போ இந்த தடவையும் chemistry ல காலியா... பாஸ் ஆற அளவுக்கு கூட படிக்க முடியாதாடா உன்னால...போன தடவ மாறி பாண்டியன் சார் புளிய மரத்துக்கு கீழ 'நீள் டவுன்' போட விடப்போறாரு பாரு..' வினோத் கண்களில் சின்ன கோபத்துடன் சொல்லிக்கொண்டிருந்தான்.

' விடுறா வினோ பாத்துக்கலாம்...நா எல்லா பாடத்துலயும் பாஸானா எங்கம்மா ரெண்டு வெள்ளிக்கிழமை விரதம் இருக்கேன்னு வேண்டிருக்காங்க. ஏற்கனவே அவுங்களுக்கு அல்சர் வேற இருக்கு. அதுனால தான் அவுங்களுக்கு அந்த கஷ்டத்த கொடுக்க வேண்டாமேன்னு .....' என குசும்பாய் இழுத்தான்.


வினோத் கொஞ்ச நேரம் குலுங்கி குலுங்கி சிரித்தான். ' உனக்கு வர வர கொழுப்பு கூடி போச்சுடா..' . இருவரும் பேசிக்கொண்டே பள்ளியின் வாசலுக்கு வந்து விட்டனர்.


' டேய் நேத்தே சொன்ன மாறி Treat கொடுக்கணும் இப்போ. எல்லாருக்கும் கொடுத்த மாதிரி சாக்லேட் கொடுத்து இந்த பிறந்த நாளுக்கு என்ன எமாத்திராதே...வேணும் நா இன்னொரு தடவ கூட சொல்லிடுறேன் 'Many More Happy Returns of the day'.... இப்பவே மழை வர மாறி வேற இருக்கு, அநேகமா நீ எதாவுது வாங்கிக்கொடுத்திருவேன்னு நெனைக்குறேன்' ஸ்ரீதர் பேசி முடித்துவிட்டு சிரித்துக்கொண்டே வினோத்தை பார்த்தான்.

' ஸ்ரீ.. மத்தியமே சொன்னேன்ல என்ன நடந்ததுன்னு...நீ வேற கிண்டாத...ஏழு மணிக்குள்ள போகலேனா அன்னைக்கு மாறியே வெளிய நிக்க வேண்டியதுதான்...' மூஞ்சில் கொஞ்சம் விரக்தியுடன் சொன்னான் வினோத். இருவரும் பஸ் ஸ்டாப்பை அடைந்திருந்தனர்.


' ஏன்டா வினோ ..எனக்கு 'பான்பராக்' ரவி னு ஒருத்தர தெரியும்...வேணும்னா அவருகிட்ட சொல்லி உங்கப்பாவை தூக்கிருவோமா??' என ஸ்கேலை கழுத்தில் வைத்து நாக்கை துருத்தினான் ஸ்ரீதர்.


' டேய்... ' என சொல்லி ஸ்ரீதரின் பொடனியில் விளையாட்டாய் அடித்தான். ஹோர்ன் சத்தம் கேட்டது...


' ஸ்ரீ நான் கெளம்புறேன் டா ..இந்த பஸ்ஸ புடிச்சாதான் கரெக்டா இருக்கும். இன்னொரு நாள் கண்டிப்பா ட்ரீட் உண்டு ' என கெளம்ப ஆயத்தமானான்.


' டேய் பஸ்ல இவ்வளோ கூட்டமா இருக்கு..இருடா அடுத்த பஸ்ல போலாம்...'


' இல்லைடா ஒன்னும் பிரச்சனை இல்ல ..அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்..' எனச்சொல்லிகொண்டே பேருந்தின் முன்பக்க 'FootBoard' ஐ நோக்கி ஓடினான்.

உள்ளே கண்டக்டர் ,'' டிக்கெட் வாங்கதவுங்க வாங்கிக்கோங்க..செக்கர் வந்து மாட்டிக்கினினா...' என பேசிக்கொண்டிருந்தது கொஞ்சமாய் அவனுக்கு கேட்டது. வண்டி கிளம்பியதும் திரும்பி ஸ்ரீக்கு டாட்டா காட்டினான்.


***************************************************************************************************

' அராமலே....அராமலே....' என்று ஹால் முழுக்க அலறிக்கொண்டு இருந்தது.


' வினோத்..இப்ப T.V ய அமத்தப்போறியா இல்லையா...பரீட்சையும் அதுவுமா காலங்காத்தால என்ன கூத்துன்னு,உங்கப்பா வந்தா என்னத்தான் முதல்ல கத்துவார்...' என வினோதின் அம்மா T.V யை விட உச்சஸ்தாதியில் கத்தினாள். எதுவும் நடக்காததால் நேராக ஹாலுக்கே வந்தாள். 'இப்போ என்ன தாண்டா நெனச்சிக்கிட்டிருக்க???' கோபமாய் வினோத்தை கேட்டாள்.

' மா..ப்ளீஸ்.. நேத்தே சொன்னேன்ல ... ட்வென்டி ருபீஸ் கொடுங்க.. என் Friends கு ஜீவா பேக்கரில பப்ஸ் வாங்கி கொடுக்கனுமா..இன்னைக்கு Birthday ல...ஏழு மணிக்கெல்லாம் வந்துடுவேன்..அதான் பரிட்ச தான் முடிஞ்சிருமே..போன மாசம் ஸ்ரீ அவன் பொறந்த நாளைக்கு ரோஸ் மில்க் லாம் வாங்கிகொடுத்தான் தெரியுமா...' கெஞ்சலாய் கேட்டான்.

வாசல் திறக்கும் சத்தம் கேட்டது. ராஜ மாணிக்கம் சூ வை கழட்டி விட்டு உள்ளே வந்தார். முகமெல்லாம் வேர்த்திருந்தது. வினோ Chemistry புத்தகத்தை திறந்து வைத்து அமர்ந்திருந்தான். T.V கன நேரத்தில் அணைக்கப்பட்டிருந்தது. ' என்ன வினோத் ...வர வர சத்தம் வாசல் வரைக்கும் கேக்குது...திரும்பவும் பெல்டை எடுக்கனுமா...' வினோத்தை முறைத்துக்கொண்டே சொன்னார்.

வினோத் குனிஞ்ச தலை நிமிரவே இல்லை. 'எல்லாத்தையும் அம்மா நேத்தே சொன்னா... Treat அப்டி இப்டினு தான் மொத ஆரம்பிக்கும்..அப்புறம் அந்த ஸ்ரீதர் பய மாறி தான் நீயும் உருப்படாம போவ பாத்துக்கோ...இன்னைக்கு பிளஸ் 2 கோச்சிங் கிளாஸ் ஆரம்பிக்குதுல ..பரீட்ச முடிஞ்சு சரியா ஆறே காலுக்கு வீட்ல இருக்கணும்...ஊரு சுத்திட்டு லேட்டா வந்தேன்னு தெரிஞ்சது அன்னைக்கு மாறி பெல்ட வச்சு உரிச்செடுத்திடுவேன்' என சொல்லிக்கொண்டே மனைவியிடம் காப்பியை வாங்கிகொண்டார்.

வினோத் கண்கள் தெப்பம் போல் கலங்கி இருந்தது. அழுதாலும் அடி விழும் என்பதால்,அழுகையை அடக்கிக்கொண்டான். நேராய் செருப்பை மாட்டிக்கொண்டு பரீட்சைக்கு கெளம்பினான்.


'ஏங்க பிறந்தநாளும் அதுவுமா அவன இப்டி திட்டுறீங்க..'

' அப்புறம்.. இந்த வயசுல தான் ஒழுக்கம் ரொம்ப முக்கியம்... பாரு அவன் இஷ்டத்துக்கு டிரெஸ் எடுக்கச்சொன்னா ,பிறந்த நாளுக்கு என்ன கலர்ல டிரஸ் எடுத்திருக்கான்... எவனாவுது இப்டி பிறந்த நாளன்னைக்கு கருப்பு சட்டை போட்டுட்டு போவானா...??

******************************************************************************************
மணி சரியாக ஆறே கால் ....
ராஜ மாணிக்கத்தின் வீட்டு வாசலில்
ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது.............இவண்
சிவன்

வியாழன், 11 மார்ச், 2010

PEG 2


மணி ரெண்டை தாண்டியிருந்தது. பிரசாத் பின்னாலிருந்த சோபாவில் சாய்ந்து கொண்டே ,ஒரு சிகரட்டை பற்ற வைத்தார். என்னை நோக்கி சிகரெட் பாக்கெட்டை நீட்டினார்.'இந்த தடவ நீ என்ன சொன்னாலும் எம்மூஞ்சுல எந்த Reaction னும் காட்டமாட்டேம்பா' என்றார். நான் சிரித்துக்கொண்டே 'வேணாம்' என்கிற சைகையாய் தலையாட்டினேன்.

'ஏன் சார் ஆள் பாக்க பசு மாறி இருந்துகிட்டு, பேச ஆரம்பிச்சா பொளந்து கட்டுறீங்களே. எந்த ஊரு சார் நீங்க???' என கேட்டேன். உரையாடல்கள் நீள இது போல் எடுத்து கொடுத்தல் அவசியம். நான் அப்பணியை செவ்வனே செய்தேன்.எனகென்னமோ இந்த ஆள் ஒரு சுரங்கமாய் தெரிந்தார்.' சங்கரன்கோயில் தான் சொந்த ஊரு...' எனச்சொல்லி மேல்நோக்கி சிகரெட் புகையை விட்டார்.
' ஓ....' என உதடு குவித்தேன்.
' என்னா ஊர் தெரயுமாயா அது??' என்றார்.

சில கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல தேவை இல்லை. அதுக்குள்ளயே பதிலோ அர்த்தமோ புதைந்து கெடக்கும் . '' நீயெல்லாம் உருப்படுவியா??, மச்சான் அவ எப்டி இருந்தா தெரியுமா??, டேய் வீட்ல சொல்லிட்டு வந்தயா??'' இவையெல்லாம் அந்த வகை. மேலே நம்மாளு சொன்னதும் அதே ரகம் என்பதால் ,பதில் சொல்ல தேவையில்லாமல் அவர் மீண்டும் வாய்திறக்க காத்திருந்தேன்.

'இப்ப நிறைய Mature ஆகிட்டேன். சின்ன வயசுல எல்லாம் திமிர் பிடிச்சு அலைஞ்சேன்.யாரையும் மதிக்க மாட்டேன்.என் கொள்கைய மதிக்காதவுங்கள நானும் மதிக்க மாட்டேன். கோவம் வந்தா எங்கப்பாவையே போயானு சொல்லிருவேன்.எங்க மாமா ஒருத்தரு தி.க ல இருந்தாரு..அவர்கூட இருந்ததாலோ என்னவோ 'நாத்திகம்' எனக்கு பிடிச்சுபோச்சு.ஆனா கட்சி,கூட்டமெல்லாம் பிடிக்காது. வெறித்தனமான நாத்திகனா ஏழாங்கிளாஸ் படிக்கிறப்பவே மாறிட்டேன்.எங்கம்மா சாமி கும்புடுடா னு கெஞ்சுவாங்க. எங்கப்பா ஒரு படி மேலையே போய் எனக்கு பேய் புடிசிருச்சுனு பூசாரிஎல்லாம் கூட்டிட்டு வந்து என்னை கடுப்பாக்கிட்டார். ஊர்ல கூட 'பேய் புடிச்ச பய' னு தான் என்னை பத்தி பேசுவாய்ங்க.... பள்ளிகூட நண்பர்களெல்லாம் செல்லமா 'சாத்தான்' னு தான் கூப்டுவாங்க. எனக்கு அதெல்லாம் ரொம்ப பெருமையா அப்போ இருந்தது.' என சொல்லிக்கொண்டே விஸ்கியை ஒரு மண்டு மண்டினார். பின்னர் அவரே தொடர்ந்தார்.

' இத கேளேன்.நா எட்டாவுது படிக்கிறப்போ, வீம்புக்குனே எவனோ என்னோட Desk மேலே சாமி படத்த ஒட்டி வச்சிட்டானுங்க.நாம தான் சாத்தானாச்சே.. கிளிச்சி தூர எரிஞ்சிட்டோம். அதனால எனக்கும் குமார்னு ஒரு பயலுக்கும் சண்டை ஆகிடுச்சு. அவன் சும்மா இல்லாம,'தைரியமான ஆளா இருந்தா போட்டிக்கு வா. இங்க இருந்து யார் நம்ம மலைக்கோயிலுக்கு வேமா ஓடிப்போய் உச்சியை தொடுராங்களோ அவுங்க தான் ஜெய்ச்சவுங்க. நா ஜெயிச்சுட்டா நீ நம்ம ஸ்கூல் ஆலமரத்து பிள்ளையாருக்கு 50 குடம் தண்ணி ஊத்தணும். நீ ஜெய்ச்சா நீ என்ன சொன்னாலும் நா கேக்குறேன்' அப்டினான். நா யோசிச்சிட்டு சரி னு சொல்லிட்டேன். 'அவன் தோத்துட்டா அஞ்சு நாளைக்கு திருநீறு பூசக்கூடாது, இந்த வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போககூடாது'
அப்டின்னு நானும் அறிவிச்சேன். அவனுக்கு பின்னாடி எங்க கிளாசே இருந்துச்சு. டேய் குமார்..மாரியம்மா நம்ம பக்கம் இருக்காடா எப்டியும் நீ தான் ஜெய்ப்பே னு அவனுக்கு சிலர் கயிறெல்லாம் கட்டி விட்டாங்க. என்ன கொடுமைனா ஜெய்ச்சது நான் தான். நம்ம குமார் அரைமணிநேரமாவுது அழுதிருப்பான்.அப்புறம் வேற வழி இல்லாம திருநீறு பூசாம தான் கிளாசுக்கு வந்தான்' அப்டினார்.

என்ன சார் இப்டி நம்பியார் மாறி இருந்திருக்கீங்க. உண்மையா சொல்லுங்க இப்போ உங்களுக்கு வருத்தமா இருக்குல்ல.இன்னமும் நீங்க நாத்திகர் தானா??..பொதுவா குழந்தை குட்டின்னு வந்தாலே எல்லாரும் அடங்கிருவாங்களே... னு சொல்லி அவர் வாய் பார்த்தேன்.

'நாத்தீகம்லாம் அப்டியே தான் இருக்கு. எதையும் பாசமா சொல்ல பழகிட்டேன்.மாற்று கருத்து உள்ளவுங்கள மதிச்சு பேசுறேன். யாராவுது என்னை கொல்ல வந்தா கூட..வாங்க காப்பி சாப்டுட்டு கொல்லலாம்னு சொல்ற அளவுக்கு ஒரு காந்தித்தனம் வந்திருக்கு.அதுவும் பிரியா வந்ததுக்கப்புறம் இந்த மூணு வருசத்துல ரொம்ப மாறிட்டேன்''.னு சொன்னார்.

''என்ன சார் உங்களுக்கு கல்யாணமாகி மூணு வருசந்தான் ஆகுதா?? நா உங்க புஜுலுவை பாக்குறப்போ அஞ்சு வயசிருக்கும்ணுல நெனெச்சேன்.'' னு எதார்த்தமாய் தான் கேட்டேன்.

அவர் லேசாய் முகம் மாறி , 'ஆமா அவளுக்கு அஞ்சரை வயசாகுது..' அப்டினார். ஏதோ முடிச்சு இருப்பது தெரிந்தது,அவர் முகத்திலும் குழப்பம் தெரிந்ததால் நானும் மௌனமானேன். பாட்டில் எழுபது சதவீதம் முடிந்திருந்தது.

கொஞ்ச நேரம் அவரும் எதுவும் பேசல. மெதுவா தாழ்ந்த குரல்ல அவராகவே ஆரம்பிச்சார்.


' புஜ்லு 'Adopted Child' சிவா.. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி செங்கல்பட்டுல ஒரு orphanage ல இவள பாத்தேன்.. அவுங்க அப்பா,அம்மா ரெண்டு பெரும் HIV ல செத்து போய்ட்டாங்க. Luckily இவளுக்கு எதுவும் இல்ல. ஆனா அங்க இருக்கிற Nurse ங்க கூட இவ பக்கத்துல வர மாட்டாங்களாம். வாரா வாரம் சென்னைல இருந்து இவள பாக்க Sweet பாக்ஸ், புது டிரஸ்னு வாங்கிட்டு போவேன். அப்பெல்லாம் என்னை 'Uncle' னு தான் கூப்பிடுவா. ஒரு வாரம் அவள பாக்க போறேன், குழந்தை அழுது கண்ணெல்லாம் வீங்கிருந்துச்சு. என்னடா செல்லம் என்னாச்சுனு கேட்டேன் ,'எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்திருச்சு' னு சொல்லி ஏங்கி ஏங்கி அழுறா...என்னால தாங்கவே முடில..அப்டியே கொத்தா தூக்கிட்டு வந்துட்டேன்...ப்ரியாவும் இவ தான் நம்ம மூத்த பொண்ணுன்னு சொல்லிட்டாள். இப்போ எங்க வீட்டு தேவதை அவ தான். ரொம்ப புத்திசாலிப்பா எங்க புஜ்லு...' நிதானமாய் முடித்தார்.

' சார் என்ன சொல்றதுனே தெரில சார்...இதெல்லாம் நா சினிமால தான் சார் பாத்துருக்கேன்..சார் கைய பாருங்க அப்டியே முடிலாம் சிலிர்த்து நிக்குது..இந்த விசயத்துல உங்க மனைவியவும் பாராட்டியே ஆகணும்.உங்கள மாறி ஆளுகெல்லாம் இங்க வந்துட்டதால தான் இந்தியால மழை பெய்ய மாட்டேங்குது..' உண்மையாகவே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசினேன்.

' ஏன் டென்ஷன் ஆகுற... இன்னொரு மனுஷன் உலகத்துல இருக்கிறவரைக்கும் உலகத்துல யாரும் தனியாள் இல்ல... குடிச்சிட்டு சொல்றேன்னு நெனைக்காத....வாழ்க்கைல இந்த Second வரைக்கும் நான் நெனச்சபடிதான் வாழ்ந்துட்டு இருக்கேன்..எந்த வித Compromise ம் பண்ணிக்கல..' அவர் குரலில் சத்தியமாய் ஒரு கர்வம் இருந்தது.

' சார் நம்ம புஜ்ளுவோட பேர் என்ன சார்...நானும் கேக்கணும்னு நெனச்சிட்டு இருந்தேன்'

'மீரா '

' Nice Name'

சரி மணி அஞ்சாயிடுச்சு நா கெளம்புறேன்..அடுத்தொரு நாள் பேசுவோம்...' எனச்சொல்லி மெல்ல எழுந்தார்...

' சார் ஒரு சின்ன Request. நா சும்மா ஒரு தமிழ் Blog ஆரம்பிச்சு நேரம் கெடைக்கும் போதெல்லாம் எழுதுவேன். என்னையும் சேத்து அத ஒரு இருபது பேரு தான் படிப்பாங்க, இருந்தாலும் உங்க கூட இன்னைக்கு பேசிட்டு இருந்தத அப்டியே என் 'ப்ளாக்' ல எழுதணும் போல இருக்கு..எழுதலாமா ?? with your permission. ''

' அந்த அளவுக்கு நம்ம என்ன பேசினோம்னு தெரில...தாராளமா எழுதுங்க...' எனச்சொல்லி கதவை திறந்து கெளம்பினார்.

அவர் போனப்புறமும் என் அறை முழுக்க அவர் குரல் கேட்டுகொண்டிருப்பது போலவே இருந்தது.அந்த கணத்தில் அவர் குரலில் ஒரு பாட்டுக்கேட்டது ...ஆனா 'Lyrics' வேற ஆளோடது....

' தேடி சோறு நிதந்தின்று- பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி- மனம்
வாடித் துன்பம் மிக உழன்று -பிறர்
வாழ பல செயல்கள் செய்து -நரை
கூடிக்கிழ பருவம் எய்தி -கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ!!!'
-சுப்பிரமணிய பாரதி

----- முற்றும் --------------

'
திங்கள், 1 மார்ச், 2010

PEG 1

தினமும் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம்,உரையாடுகிறோம் அதில் மிகச்சிலரே நம்மில் பதிகிறார்கள். நம்மால் மறக்க முடியாதவர்களாக மாறிப்போய்கிறார்கள். உண்மையாய்ச்சொன்னால் ஒவ்வொரு மனிதனும் ஒரு அதிசயமே!. இவ்வாறு சித்தாந்தங்கள் பேசிக்கொண்டே சென்றால் கொட்டாவி வரும் அபாயம் இருப்பதால் நேரே விஷயத்துக்கு செல்வோம்.

சில தினங்களுக்கு முன் ஒரு தமிழ்குடும்பம், ஹோட்டலின் இரண்டாம் தளத்தில் குடிவந்தது. அவர்கள் முகத்திலேயே திருக்குறள் தெரிந்ததால், பார்த்தவுடன் நானே வலியச்சென்று 'நீங்கள் தமிழ்நாட்டவரா??' என ஆங்கிலத்தில் கேட்டேன். அவர்களும் புன்முறுவல் பூத்து 'ஆமா..நீங்க??' என என்னையும் நலம் விசாரித்தார்கள். கணவன்,மனைவி, இரண்டு குழந்தைகள். கணவர் பிரசாத் வழக்கம்போல் கணினியை உருட்டுகிறவர்.மனைவி பிரியா ,கணவரை திட்டுவதுடன் வீட்டு வேலைகளையும் கவனத்திக்கொள்ளும் வழக்கமான இல்லத்தரசி. ஐந்து வயது பெண்குழந்தை மற்றும் இரண்டு வயது கைசூப்பும் தம்பிபாப்பா ஒன்றும் இருந்தது.அந்த குட்டிப்பெண் என்னை பார்த்தவுடன் 'ஹாய்..அங்கிள்' என்றாள். மீசையை 'trim' செய்ய வேண்டும் என மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.
அந்த குட்டிப்பெண்ணுக்கு முட்டைகண்கள்,சுருட்டை முடி, கிள்ளவேண்டும் என உறுத்தும் அளவு கன்னம்.,அலுவலகத்துக்கு நேரம் ஆனதால் அவர்களிடம் உத்தரவு வாங்கிகொண்டு கிளம்பினேன்.இந்த சம்பவங்களை பிற்பாடு மறந்தே போயினேன்.

சனிக்கிழமை இரவு ஒன்பது மணி சுமார்க்கு என் அறை தொலை பேசி முழுவீச்சில் அலறியது. எடுத்தேன்.

'ஹாய் சிவா..நான் தான் பிரசாத் பேசுறேன் ' என்றது அந்த ஆண் குரல். என் பாழாய்ப்போன நினைவுகளில் தொலைந்து போன அந்த பெயரை ஒருவாறு நினைவூட்டி ,'சொல்லுங்க சார் என்ன விஷயம் ..' என்றேன்.

' ஒண்ணுமில்ல... Drink பண்ணலாம்னு பாத்தா... புஜ்லு தூங்க மாட்டுரா...குழந்தை முன்னாடி குடிக்கிறது என் wife க்கு பிடிக்காது...if you dont mind.. நா உங்க ரூம்க்கு வரலாமா இப்போ..' என சங்கடமாய் கேட்டார்.

'ஒன்னும் பிரிச்சனை இல்லை...நீங்க இங்க தாராளமா வரலாம்' என்றேன்.சொந்த காசில் சூனியம் வைக்கிறோமோ என்கிற பயம் எனக்குள் வந்தாலும், அப்படி எதுவும் இல்லை என என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன்.
ஒரு அரை டிரவுசர் ,டி ஷர்ட் சகிதம் வந்து சேர்ந்தார் பிரசாத். அவருக்கு சின்ன முன் வழுக்கை,உறுத்தாத தொப்பை,மாநிறம், ஓரமாய் ஒரு சிங்கப்பல்..இதற்குமேல் ஆண்களை வர்ணிப்பதில் எனக்கு உடன் பாடில்லை.கையில் இருந்த பாட்டிலின் முதுகில் 'jim Beam' என எழுதி இருந்தது. சர்வ சந்தோசமாய் அறைக்கு உள்ளே வந்தார். தரையிலேயே உட்காந்து இரண்டு கிளாஸ்களை கீழே வைத்தார்.

'சார் உங்களுக்கு மட்டும் ஊத்துங்க நான் குடிக்கிறதில்லை...' என சொன்னேன். 'இந்தியாவில் சுனாமி..10 ஆயிரம் பேர் பலி' போன்ற செய்திக்கு கொடுக்க வேண்டிய அதிர்ச்சியான reaction ஐ அப்போது கொடுத்தார். 'என்ன சொல்றீங்க சிவா...உங்கள நம்பி வந்துட்டேன்...இன்னைக்கு night fulla உட்காந்து இந்த விஷ்கி பாட்டிலை முடிச்சிரலாம்னு பாத்தேன்...இன்னைக்கு ஏதும் விரதம் கிரதமா ??' .

'அப்டிலாம் ஒன்னும் இல்ல சார்..பொதுவாவே நான் குடிக்க மாட்டேன்.. கூல்டிரிங், ஸ்நாக்ஸ் எல்லாம் எடுத்துக்கிறேன்.கவலைய விடுங்க நைட் full ஆ....... நா உங்களுக்கு கம்பெனி தரேன்' என அவரை சமாதான படுத்தினேன். அந்த பாட்டிலை கோழி கழுத்தை திருகுவது போல் திருகி ,glass ஐ பாதி நிரப்பினார். பிற்பாடு கோக்கை கொஞ்சமாய் கலக்கினார். Style ஆக அருந்த ஆரம்பித்தார் .நான் கடலைகளை கொறிக்க தொடங்கினேன்.

'ஆமா சிவா..நீங்க ஏன் குடிக்கிறதில்ல... '

' நா குடிக்க மாட்டேன்...னு சொன்னதும் உங்க மூஞ்சில ஒரு ஆச்சர்யம் தெரிஞ்சது பாருங்க..அது எனக்கு ரொம்ப சந்தோசத்த தருது..அந்த ஆச்சர்யம் என்னைக்கு எனக்கு 'Bore' அடிக்குதோ அன்னைக்கு நானும் களத்தில இறங்கிடுவேன் ..மத்தபடி நா பெரிய நல்லகுடி நாணயமெல்லாம் இல்லேங்க..' என என் விளக்க உரை முடித்தேன்.

'இது வரைக்கும் ஏன் குடிக்கலேங்கிறதுக்கு இவ்வளவு கேவலமான விளக்கத்த சத்தியமா நா கேட்டதே இல்ல பாஸ்...' என பிரசாத் பதில் உரை அல்லது பதிலடி கொடுத்தார். லேசாய் சிரிப்பு வந்தாலும் எனக்கு கொஞ்சம் ரத்தம் சூடாகத்தான் செய்தது. மது, மனிதன் நினைப்பதை சொல்ல வைக்கிறது!!!. பேச்சை மாற்றி உங்களோடது காதல் கல்யாணமா சார் என தேவையில்லாமல் அந்நேரம் கேட்டுத்தொலைந்தேன்.

' காதல்னு ஒன்னு இல்லவே இல்ல சிவா... அடிப்படையிலேயே ஒரு ஆணுக்கு ஒரு பெண் தேவ..பெண்ணுக்கு ஆண் தேவ...உடலோட அமைப்பு அப்டி. இது நாய் நரிக்கும் பொருந்தும். ஆதி மனுஷன் பெண்ணை விரட்டி மிருகம் மாதிரி உறவு கொண்டான். அவன் ஒன்னும் முரளி மாறி ரோஸ் வச்சிக்கிட்டு அலையல.அப்புறம் மொழி,நாகரிகம்,கண்டுபிடிப்புகளெல்லாம் வந்துட்டதால காதல், கழுத னு நாமலே பேரு வச்சுகிட்டோம். ஆயுத எழுத்து படத்துல நம்ம சுஜாதா சொல்றது மாறி இது Androgen,Estrogen னு ஹாரமோனோட வேல..XXXXXXX,YYYYYYYY அவ்வளவு தான்.

அவர் கடைசியில் சுஜாதாவின் பெயரை சொன்னது கொஞ்சம் சந்தோசத்தை கொடுத்தாலும் ,எனக்கென்னவோ இவர் 'நான் புத்திசாலி' என காட்ட முற்படுகிறார் என்றே பட்டது. கொஞ்சம் சிரித்துக்கொண்டே நான் ' அப்போ அண்ணன்தம்பி, அப்பாம்மா மேல வர்ற அன்புக்கெல்லாம் தனி ஹார்மோன் இருக்கா... எல்லாத்தையும் ஜீன் லயே எழுதி வைக்க அதென்ன நூறுபக்க நோட்டா சார்??உடலியலை தாண்டி உலகியல்னு ஒன்னு இருக்குங்க. எல்லாத்துக்கும் பதில் அறிவியல் புஸ்தகத்துல கெடச்சுராது...' என கொஞ்சம் காரமாய் முடித்தேன்.

ரெண்டு மூணு ஐஸ் கட்டிகளை போட்டு இன்னும் கொஞ்சம் விஸ்கி ஊற்றினார்.'' என்னோட intention காதல்ங்கறது ஒரு உணர்ச்சி ...அத சொல்ல நெனச்சேன்..அவ்வளவு தான் ..மத்தபடி
ஒன்னும் இல்ல''... ரொம்ப இயல்பா அந்த சூட்டை அவராகவே தணித்தார்...

'எனக்கும் எல்லாத்தையும் உணர்வுபூர்மா அணுகுவதில் உடன்பாடில்லை தான்.ஆனா அறிவுபூர்வமா மட்டும் சிந்திக்குரதுல எப்பயும் ஆபத்து இருக்கு. i always listen to my heart rather than my brain...' என்றேன்.

' ஆமா கேக்கவே இல்லையே!!!!! உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...' ன்னார்

' இன்னும் ஒரு தடவ கூட ஆகல சார்...'

'ஹஹஅஹஹா.....' என சிரித்தார். அத்தனை பெரிய சத்தத்தை நான் அப்போ எதிர் பார்க்கவே இல்ல. குடித்துவிட்டால் போதும் மனிதன் கில்லினாலே அழுவான்,கிச்சு கிச்சு என்றாலே சிரித்து விடுவான்.உணர்ச்சியை ஒழித்து வைக்க முடியாதவர்கள் அவர்கள். கொஞ்ச நேரத்தில் ரெண்டு கால்களையும் சம்மணம் போட்டு அமர்ந்து அவராகவே ஆரம்பித்தார்.

' அப்போ சின்ன பையன் தான் நீயும்...உன்கிட்ட கொஞ்சம் இத பத்தி பேசியே ஆகணும்... எனக்கு வயசு முப்பத்து எட்டு , U.S வந்து 2 வருஷம் ஆகுது. அங்க சென்னைல இருந்தப்போ நண்பர்களோட சேந்து ஒரு தொண்டு நிறுவனம் நடத்தினோம்.'Suicide' முயற்சி பண்ணினவுங்கள சந்திச்சு அவுங்களுக்கு இலவசமா 'Counseling' கொடுப்பேன். நா பாத்ததுல 75 சதவீதம் இந்த காதல் கோஷ்டிகள் தான். அதுவும் எல்லாமே ஆண்கள் தான். எத்தனையோ பேரு இப்போ ரொம்ப நல்ல நிலைமைல இருக்காங்க.சில பேரு அவுங்க பசங்களுக்கு ப்ர்சாத்துனு பேர் கூட வச்சிருக்காங்க.ஆனா சில பேர் திரும்பவும் முயற்சிபண்ணி செத்தே போய்ட்டானுங்க...இன்னமும் நல்லா ஞாபகம் இருக்கு. ராஜேஷ்னு அவன் பேரு, மருந்த குடிச்சு சாக முயற்சி பண்ணி காப்பாத்திட்டாங்க..
நான் போய் அவன் கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தேன். 21 வயசு தான் அவனுக்கு இருக்கும். என்ன பேசுனாலும் அவ்வளவு அழகா ரசிக்கிறான்,சிரிக்கிறான். இனிமே அந்த மடத்தனத்தை யோசிச்சு கூட பாக்கமாட்டேன் சார்னு சொன்னான். நா சொன்ன 'மெக்ஸிகோ சலவைக்காரி' ஜோக்குக்கு எப்புடி சிரிச்சான் தெரியுமா....

ஆனா ஒரு வாரம் கழிச்சு மண்ணெண்ணைய ஊத்திகிட்டு செத்து போய்ட்டான்...ஒரு லெட்டர் எழுதி வச்சிருந்தான்.. 'அவள மறக்க முடில... மன்னிச்சிருங்க பிரசாத் சார்'. இந்த மாறி பல சாவ பாத்துட்டேன்.இதாவுது பரவா இல்ல...ஒரு சின்ன பையன் 'ஸ்பெர்ம்' leakage பத்தி விவரம் தெரியாம....எங்கயோ 'சொப்பன ஸ்கலிதம்' னா என்கிட்டே வாங்கனு சொல்ற ஒரு டுபாக்கூர் டாக்டர் கிட்ட போய்ட்டான்..அந்த **********************(கெட்டவார்த்தை) அத ஆண்மை குறைவுனு சொல்லி இவனை பயமுறித்திட்டான்..இந்த பய பாவம் தற்கொலை பண்ணி செத்தே போய்ட்டான் தெரியுமா...வீட்டுக்கு ஒத்த பையன்...இன்னமும் அவுங்க அப்பா கதுறுனது மறக்க முடில... பதினெட்டு வயசு பையனுக்கு அவன் உடம்ப பத்தி விவரம் தெரில...இன்னமும் நாம கலாச்சாரம், வெங்காயம்னு சொல்லிக்கிட்டு ' செக்ஸ் கல்வி' னு சொன்னாலே ,வேண்டாம்னு கொடி தூக்குறோம்.' பேசி முடித்துவிட்டு மேலும் கீழும் மூச்சு வாங்கினார்.

வாய் பிளந்த படி அமர்ந்திருந்தேன். ஏனோ எனக்கு எதுவும் பேச தோணவே இல்லை. என்னை மிரள வைக்கும் எத்தனையோ விசயங்கள் அவர் வசம் இருந்தது. அந்த இரவு இன்னும் தொடர்ந்தது.

--------தொடரும்