புதன், 18 ஆகஸ்ட், 2010

கவித... கவித...

ஒரு மொழியின் ஆளுமை பெரும்பாலும் கவிதைகளில் தான் வெளிக்கொணரும். அதுவும் அடி,தொடை,அணி,பா போன்றவை பற்றியெல்லாம் கவலைப்படாத புதுக்கவிதைகள் அழகுப்பெண்கள் போல. ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி ரசிக்கிறார்கள். எல்லா சாலைகளும் ரோமை அடைகின்றன என்று சொல்வது போல கிட்டத்தட்ட எல்லா கவிதைகளும் காதலுக்காகவே எழுதப்படுகின்றன.அதுவும் காதலியின் கிட்னி தவிர அனைத்தையும் வர்ணிப்பார்கள். நிலவு,வானம்,மேகம்,மின்னல்,பூ,தென்றல் என பெனாத்துவார்கள். ஆனால் சிலவற்றை ரசிக்காமலும் இருக்க முடியாது. எதோ நண்பனின் நோட்டில் படித்ததாய் ஞாபகம்.

ஆம் நிலவு மேடு பள்ளமானது தான்
என்னவள் முகத்தில் முகப்பருக்கள்!!!!

கண்டிப்பாய் இதை சம்பந்தப்பட்ட பெண் கேட்டிருந்தால் வெட்கப்பட்டிருப்பாள். கவிதை தரும் போதையில் இடையிடையே நானும் எழுத முயலுவேன். பன்னிரண்டாம் வகுப்பில் எழுதியதாய் ஞாபகம்.பொதுத்தேர்வில் மட்டமான மதிப்பெண் எடுத்ததால் ஒளித்து வைக்கும்படி ஆகியது.உரைநடையை உடைத்து எழுதி கவிதையாக்குவது இன்னொரு சூத்திரம்.

ஒருமுறை சொன்னதை மறுமுறை சொன்னால்
கவிதையாம்!!!
ஒரு முறை பார்த்தவுடன் மீண்டும் உன்னை பார்க்கத் தோன்றுதே
நீயும் கவிதை தானோ!!!

மறக்காமல் ஆச்சர்யகுறி போட்டு விடுதல் உத்தமம்.இல்லையேல் ஒரு கூட்டம் இதை கவிதை இல்லை என நம்ப மறுக்கும். ஆனால் மெல்லிய சோகங்களையும், தின நிகழ்வுகளையும் கவிதையில் சொல்லுகையில் அந்த பதிவு அழகாகிறது. கிட்டத்தட்ட நாலைந்து வருடங்களுக்கு முன்னாடி எதோ வார இதழில் படித்தது. ஹைக்கூ வகையிரா. இவ்வளவு குறைவான வார்த்தைகளில் வறுமையை பதிவு செய்ய வாய்ப்பே இல்லை.

வயிறு நிறைந்திருக்கிறது
மூன்று நாளாய் பட்டினி
ஏழை கர்ப்பிணி!!!


எதுகை மோனை தேவை இல்லாமல் அந்த நொடியின் வீரியத்தை பதிவு செய்யும் வல்லமை கவிதைகளுக்கு உண்டு. இதுவும் சில ஆண்டுகளுக்கு முன் எதோ வார இதழில் படித்தாய் ஞாபகம். ஒரு சோகமான நெடும்பயணத்தை இப்படி விவரிக்கிறார்.


அப்பாவின் மரணத்திற்கு ஊருக்கு செல்கிறான்.
பேருந்தில் முழுநீள நகைச்சுவை படம்!!!

இந்த கவிதையின் கனம் அதிகம். பூச்சில்லாத வார்த்தைகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.யாராவுது பேனாக்காரர்கள் இதைவைத்து சிறுகதையோ,குறுநாவலோ எழுதி விட முடியும். எளிமையான விவரனை. இந்த கவிதையின் அழகே அந்த 'முழு நீள' என்ற வார்த்தையில் ஒளிந்திருப்பதாய் படுகிறது. அது இல்லாமல் கவிதை படிக்கிற போது அந்த அடர்த்தி இல்லாமல் போவதாய் தோன்றுகிறது. கீழே உள்ள கவிதை ரெண்டு மூன்று வாரங்களுக்கு முன் ஆனந்த விகடனில் படித்தது.அழகான நகைச்சுவை ,கொஞ்சம் எதார்த்தம் கலந்து எழுதி இருக்கிறார். படித்தவுடன் கண்டிப்பாய் 'அட' என மூளைக்குள் ஒரு சத்தம் கேட்கும்.

'இருப்பதிலேயே நல்ல புகைப்படத்தை
பெண் வீட்டிற்கு அனுப்பினேன்.
அவர்கள் வந்ததிலேயே நல்லதை
தேர்வு செய்திருப்பார்கள் போல
பதிலில்லை!!!'
இதோ இந்த பதிவை எழுதிகொண்டிருக்கும் இந்நேரம் பெங்களூரில் மழை பெய்து கொண்டிருக்கிறது. எதிர் வீட்டு வாண்டுப்பெண் பால்கனியில் நின்றபடி நனைந்து கொண்டிருக்கிறாள். அவள் அம்மாவின் 'கத்தல்கள்' அவள் காதில் விழவில்லை. ரொம்ப நேரமாய் ஒரு 'சப்பை' கவிதையுடனாவுது முடித்துவிடலாம் என எண்ணி இல்லாத மூளையை கசக்கி கொண்டிருந்தேன். கடைசியில் தோன்றிவிட்டது.

'அவளை நனைத்து விட்டு
இன்னும் அழகாகிறது
மழை!!!'
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

ஏழாம் உலகம்/ நான் கடவுள்

வாசிப்பு எப்போதும் சுகந்தமானது. அதுவும் ஜெயமோகன் போன்ற 'எழுத்து அரக்கர்களை' வாசித்தால் ரெண்டு நாள் யாரிடமும் பேசத்தோன்றுவதில்லை. 'நான் கடவுள்' படம் வந்து ஓடிக்கொண்டிருந்த சமயம் அது. நான்கு முறை பார்த்து முடித்திருந்தேன். நண்பர்கள் சிலர் என் மனநிலையை சந்தேகித்து கொண்டிருந்தார்கள். அப்போது தான் படத்தின் முக்கியமான பகுதி ஏழாம் உலகம் நாவலின் தழுவல் என்று கேள்விப்பட்டேன். படத்தின் வசனகர்த்தா ஜெ.மோ தான் ஏழாம் உலகத்தின் சிருஷ்டி கர்த்தா என்பதும் தெரிந்தது.மிகச்சமீபத்தில் தான் நாவலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிரண்டு போனேன்.தமிழில் இப்படிக்கூட எழுத ஆள் இருக்கிறார்களா??

சபிக்கப்பட்டவர்களின் உலகமே இந்த ஏழாம் உலகம் என்பது முன்னுரையிலும்,அட்டை விளம்பரங்களிலும் நமக்கு சொல்லப்பட்டுவிடும். நாம் எல்லா கூட்டங்களிலும்,கோவில்களுக்கு வெளியேயும்,வீதிகளிலும் உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களை தினமும் பார்க்கிறோம். என்றாவுது இவர்கள் எங்கே வசிக்கிறார்கள்? எப்படி தூங்குகிறார்கள்?, இவர்களுக்கு காதல் இருக்கிறதா?, குழந்தைகள் உண்டா என்பதெல்லாம் யோசித்ததுண்டா.. இல்லை என்பதே நம்முள் அனேக பேரின் பதிலாய் இருக்கும். இந்த நாவலில் ஜெ.மோ நம்மை இவர்கள்உலகத்துக்கு அழைத்துப்போகிறார்.உண்மையில் இழுத்து போகிறார் என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நாவலை வாசித்து முடிந்தவுடன் எல்லார்மனதிலும் ஒரு குற்றவுணர்வு வருவதை தடுக்க இயலாது. ஆங்காங்கே சில சித்தாந்தங்களையும் தெளிக்கத் தவரவில்லை ஜெ. நான் கடவுளில் ஒரு காட்சி. அகோரியான ருத்ரன் நள்ளிரவில் கோவிலுக்கு வெளியே நிறைய 'சாமிகளுடன்' கஞ்சா இழுத்து கொண்டிருப்பார். சுருட்டை பற்ற வைக்க ,கோவிலில் உள்ள தீபத்தை உபயோகிக்கப்போவார். ஒரு சாமி ,'அது கோயில் தீபம்' என ருத்ரனைபார்த்துப் பதறுவார். உடனே ருத்ரன் 'தீயில என்னடா நல்லது?? கெட்டது??' என கேட்பான். தியேட்டரில் பலத்த கைதட்டல் இந்த காட்சிக்கு. இப்படி அடர்த்தியான அர்த்தங்களை ஒரே வரியில் சொல்வது அரிது.


படத்திலும் நாவலிலும் சிலாகிக்க வேண்டிய இன்னொரு விஷயம் எந்த இடத்திலுமே போதனைகள் இல்லை. புரட்சி வசனங்கள் இல்லை. காட்சிகள் எதார்த்தமாய் அணுகப்படுகிறது. ருத்ரன் என்ற அகோரியை ஏழாம் உலகத்தில் சேர்த்துக் கொண்டுவிட்டார் பாலா.உண்மையில் இந்த படத்திற்கு பாலாவிற்கு தேசிய விருது கிடைக்காமல் போயிருந்தால் தான் ஆச்சர்யமாய் இருந்திருக்கும்.உடல் சவால் நிறைந்தவர்களை படம் முழுக்க நடிக்க வைத்திருப்பதின் பின்னணியில் கண்டிப்பாய் நிறைய உழைப்பு இருந்திருக்க வேண்டும்.

சினிமா என்றாலே அழகியல் சமாச்சாரங்கள், பதுமை பெண்கள், எழிலான காட்சிகள் என்ற கோட்டை தாண்டி ,ரோட்டில் எதெல்லாம் பார்க்க தயங்குகிறோமோ அதையே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பூஜா கடைசியில் பேசும் அந்த வசனம் அவ்வளவு கூர்மையாய் இருக்கும். இவ்வளவு நாள் நாம் கட்டி வைத்திருக்கும் நம்பிக்கைகள் எல்லாத்தையும் 'கட்டுடைத்தல்' செய்யும்.இரவில் படம் பார்க்கும் பட்சத்தில் தூங்க நெடு நேரம் ஆகும்.


விந்தணுவில் இருந்து புறப்பட்டு கருமுட்டையில் இணைந்து உருவாகும் 'உயிர்' , யாராய் பிறக்கும்?, யாருக்கு பிறக்கும்? என்பதெல்லாம் கடவுளின் சித்தம் என்கிறோம். அப்படி பூமியில் உயிராய் ஜீவிப்போர் கொடூரமான வறுமையிலோ, தாங்கொனா உடல் கோளாறிலோ பிறப்பது யாரின் சித்தம். ரோட்டில் அழுக்கு உடையுடன், பரட்டை தலை, ஒழுகும் மூக்குடன் பிச்சை எடுக்கும் சிறுவன் , ஐஸ்க்ரீம் பார்லர்களில் அமர்ந்து 'Chocobar'களை சுவைக்கும் குழந்தையை ஏக்கமாய் பார்க்கும் காட்சி பெரு நகரங்களில் தினமும்பார்க்கலாம். நாவலில் முத்தம்மை என்ற ஊனமுற்ற பெண்ணுக்கு பிரசவ நிகழ்வு தான் முதல் பகுதி. இந்த இடத்திலேயே மிரட்டி விடுகிறார் ஜெ.மோ. ' கதையில் கதா பாத்திரம் பீடி புகைத்தால் அந்த வாடையை வாசகனும் உணரனும்' விளக்கங்கள்,உவமானங்கள் பற்றி ஜெயகாந்தன் ஒருமுறை இப்படி சொன்னார். இங்க நம்ம ஜெ.மோ கிட்டத்தட்ட எல்லா பகுதிகளிலும் நம் மூக்கையும் வேலை செய்ய வைக்கிறார். இது பல இடங்களில் நமக்கு அருவருப்பை தருகிறது. உண்மையாய் சொன்னால் 'ஏழாம் உலகம்' என்ற முரட்டு கள்ளில் நிறைய தண்ணீர் ஊற்றியே பாலா கொடுத்திருக்கிறார். உருப்படிகளை வைத்து தொழில் நடத்தும் போத்திபண்டாரம், சித்தர் பாட்டுகளை பாடும் மாங்காண்டி சாமி, குசும்பு பிடித்த குய்யன், எருக்கு, முத்தம்மை என கதா பாத்திரங்களை வைத்து ஏழாம்
உலகத்தில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார்.எப்போதும் நகைச்சுவையாய் பேசும் குய்யன் கதாபாத்திரம் மறக்க முடியாதது. பழனி அடிவாரத்தில் போத்திபண்டாரம் செய்யும் 'உருப்படி' வியாபாரத்தில் ஒருவன் இந்த குய்யன். இரண்டடியில் கால சூம்பிபோய் இருப்பவன். தன் முதலாளி பெண் கல்யாணத்தில் இலை போட்டு, வெள்ளை சாதம் வைத்து நல்ல குழம்பு ஊற்றி சாப்பிடலாம்.பாயாசம் வேறு கிடைக்கும் என சொல்லிக்கொண்டே இருப்பான்.தான் இதுக்கு முன்னாடி ஒருமுறை அப்பிடி சாப்பிட்டு இருப்பதாகவும் சொல்லுவான். கடைசியில் முதலாளி வீட்டு சாப்பாடு கிடைக்காமல் போக, குய்யன் ஏங்கி அழுவான். அவன் சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு அழுவது கொஞ்சம் நம்மையும் 'அசைத்து' பார்க்கும்.நமக்கு தினம் கிடைக்கும் சாப்பாடு சிலருக்கு இன்னும் கனவாகவே இருக்கிறது என்கிற உண்மை முகத்தில் 'சடார்' எனஅடிக்கும் இடம் இது.


உண்மைகள் அம்மனமானவை. அவைகள் எப்போதும் நம்மை சங்கடப்படுத்தும்.ஏழாம் உலகம் அதே போன்ற அனுபவத்தை தான் நமக்கு கொடுக்கும். படித்து முடித்தவுடன் 'கரண்ட் பாதி நேரம் இருக்கிறதே இல்லை', 'ஆபீஸ்ல உயிர வாங்குரானுங்க', 'இதே தோசையே எத்தன நாளைக்கு சாப்புடுறது' போன்ற புலம்பல்களை எல்லாம் கண்டிப்பாய் குறைத்துக்கொள்வோம். வானத்தை அன்னாந்து பார்த்து ஏங்கிக்கொண்டிருப்பவர்களை ,நமக்கு கீழே நசுங்கிகிடக்கும் உலகத்தை பார்க்க வைக்கிறார்கள்.

புதன், 11 ஆகஸ்ட், 2010

நடுநிசி நாய்கள்'ஹே..உண்மைய சொல்லு .... நீ தான நகட்டுற...'

'உஷா எரும..நீதான் பொய் சொல்ற..நீயே மூவ் பண்ணிட்டு என்னைய சொல்றியா..'

'என்னடி மதி சொல்ற..' எனக் கேட்ட உஷா முகத்தில் வியர்வை துளிகள் படர்ந்திருந்தன. அவர்கள் முன் ஒரு பெரிய அட்டை இருந்தது. அதில் ஆங்கில எழுத்துக்கள், எண்கள் போன்றவை ஒரு வட்டத்திற்குள் எழுதப்பட்டிருந்தன. அந்த அட்டையில் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தில் மதி,உஷா இருவரும் வலது கை ஆள்காட்டி விரலை வைத்துக்கொண்டே எதிரெதிரே அமர்ந்திருக்கிறார்கள். உஷாவும்,மதியும் நாணயத்தையே பார்த்தபடி இருந்தனர்.இருவரும் சகோதரிகள் என பார்த்தவர் சொல்லிவிடும் தோற்றமே பெற்றிருந்தனர். 'ஆவிகளுடன் பேசுவது எப்படி' என்ற திகில் விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தனர். அறையின் அத்தனை ஜன்னல்களும் மூடப்பட்டு இருந்தது. நாம் கேட்கும் கேள்விக்கு ஆவிகள் நாணயத்தை நகர்த்தி கட்டத்தில் உள்ள எழுத்துக்கள் மூலம் பதில் சொல்வது அந்த ஆட்டத்தின் சாராம்சம்.நாணயம் மெல்லமாய் வலப்புரமாய் ஊர்ந்து கொண்டிருந்தது. மதி முகத்தில் பயம் பரவி இருந்தது.

'போடீ..நீ தான் பயமுறுத்துற... நான் வரல..' என சொல்லிக்கொண்டே மதி அறையை விட்டு வெளியே ஓடினாள்.

'நா ஒன்னும் பண்ணலடீ.. 'வழிஅனுப்புதல்' பண்ணனும் மதி.. நில்லுடீ..'

'போடி லூசு'

உஷாவும் கொஞ்சம் பயந்து அந்த அறையிலிருந்து வெளியே வந்தாள்.வீட்டின் முகப்பில் இருந்த கடிகாரத்தில் மணி 7.30 என காட்டிக்கொண்டிருந்தது. அடுப்பறையில் கேட்கும் விசில் சத்தம் தவிர காலை வேளை என்பதற்கான அறிகுறி அந்த வீட்டில் தெரியவில்லை.
கோமதி காபி டம்ளர்களை கையில் வைத்தபடியே அடுப்பறையில் இருந்து வந்தாள். 'காலங்காத்தால பரணி ரூம்ல என்னடி பண்ணிக்கிட்டிருக்கீங்க??' எனகேட்டாள். 'நானும் மதியும் படிச்சிட்டு இருந்தோம்மா' என்றாள் உஷா. மதி கண் சிமிட்டி உஷாவை பார்த்து சிரித்தாள்.

கோமதி ''நீ காலைல உட்காந்து படிச்சேன்னு அந்த ஈஸ்வரன் சொன்னாலும் நா நம்ப மாட்டேன்டீ.. எந்நேரம் பாரு ஒரே டிவி, விளையாட்டு... உங்களை சொல்லி என்ன செய்ய, மூத்தவளே அப்படித்தான் இருக்கா..போய் குளிங்கடீ ஸ்கூல் பஸ் வந்துரப்போகுது...''

மதி சிரித்துக்கொண்டே வந்து அம்மாவை தலையால் முட்டினாள்.கோமதி அவளை விளையாட்டாய் பின்புறம் தட்டினாள். மாடியில் மூத்தவள் பரணியின் அறையில் ஜன்னல் காற்றுக்கு அடிக்கும் சத்தம் கேட்டது. உஷா மேலே ஒருமுறை பார்த்துக்கொண்டு எச்சிலை விழுங்கிக்கொண்டாள். பள்ளிக்கு கிளம்பினாள்.

மாலை பள்ளி முடிந்து அனுவிடம் பேசிக்கொண்டே வந்தாள் உஷா. 'உனக்கு நேத்தே மூனு தடவ சொன்னேன்.. 'வழி அனுப்புதல்' பண்ணலேனா ஆவிகள் போகாது..வீட்டுக்குள்ளேயே தான் இருக்கும்'. உஷாவை பார்த்து அனு ரகசியமான குரலில் சொல்லிக்கொண்டு இருந்தாள். உஷா குழப்பமாய் அவளை பார்த்து ,'அதுக நம்ம வீட்ல இன்னுமும் இருக்கானு நாம எப்டி தெரிஞ்சிக்கிறது' . என்றாள்.'அதுக இருந்ததுனா நாய்களுக்கு தெரியும். கொலச்சிகிட்டே இருக்கும் விடாம..'

உஷா Tution முடித்து வீடு வந்து சேர மணி இரவு ஏழாகியிருந்தது..மேலே பரணி அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மதி ஹாலில் உட்காந்திருந்தாள். பேப்பரில் பென்சிலை வைத்து எதையோ வரைய முற்பட்டுக்கொண்டிருந்தாள். உஷாவை பார்த்தவுடன் ,'உஷாக்கா.. எப்டி இருக்கு 'யானை' ??' என பேப்பரை திருப்பி காண்பித்தாள்.

'ஓ..இது யானையா ??..எதுக்கும் கீழ யானைனு எழுதீறு...'

உஷாவும் மதியும் கொஞ்ச நேரம் தலை மயிரை பிடித்து சண்டை போட்டனர். டிவி,சாப்பாடு முடித்து விட்டு இருவருக்கும் படுக்கைக்கு செல்ல மணி பத்து ஆகியிருந்தது. மேலே பரணியின் அறையில் விளக்கு அணைந்திருந்தது. 'பரணிக்கு எதோ தலைவலியாம்' என அம்மா சொல்லியிருந்தாள். இருவரும் கொஞ்ச நேரத்திலே தூங்கிப்போயினர்.பக்கத்து வீட்டு நாய் குலைக்கும் சத்தம் கேட்டு உஷா விழித்தாள். ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். நாய் இவர்கள் வீட்டை நோக்கித்தான் குலைத்துக்கொண்டிருந்தது. காலையில் அனு சொன்னதெல்லாம் ஞாபகம் வந்தது. வேகமாய் திரும்பவும் படுக்கைக்கு வந்து மூஞ்சு வரை பெட்ஷீட்டை மூடிக்கொண்டு படுத்துவிட்டாள்.அப்போதுதான் அந்த சத்தம் மாடியில் இருந்து வந்தது 'ஆ...' வென காற்றைகிழித்து கொண்டு வந்த அந்த சத்தம் வீடு முழுக்க எதிரொலித்தது..கோமதி எழுந்து விட்டாள். உஷாவும் அறையிலிருந்து வெளியே வந்து விட்டாள்.. 'என்னடி..ஆச்சு இவளுக்கு... கண்ட கண்ட கதை புஸ்தகத்த படிக்க வேண்டியது..அப்புறம் கனா கண்டு கத்துறது' என சொல்லிக்கொண்டே மாடியில் இருக்கும் பரணியின் அறை நோக்கி நடந்தாள். உஷாவும் அம்மாவின் பின்னாலேயே நடந்தாள். அவளுக்கு அடி வயிற்றில் பய உருண்டை உருண்டுகொண்டிருந்தது.கதவை திறந்து கோமதி முதலில் அறைக்குள் சென்றாள்.

அறை முழுக்க இருளாய் இருந்தது. 'டக்..டக்' என கட்டிலில் இருந்து சத்தம் வந்து கொண்டிருந்தது.கோமதி விளக்கை போட்டாள். பரணி உட்கார்ந்து கொண்டு அந்த கட்டிலில் தலையை முட்டிக்கொண்டு இருந்தாள்.கோமதி மிரண்டு போய் ,'பரணிம்மா..என்னடா ஆச்சு ' என சொல்லிக்கொண்டே அவளருகே போய் கையை பிடித்தாள்.பரணி முகத்தை திருப்பினாள். அவளின் அந்த பெரிய கண்ணில் கருவிழியே தெரியவில்லை.கண் முழுக்க வெள்ளையாய் இருந்தது.வாயின் ஒரு பக்கம் உமிழ் நீர் ஒழுகிகொண்டே இருந்தது. கோமதி பயந்து போய் ரெண்டு அடி பின்னே நகர்ந்து விட்டாள். பின்னாலே பார்த்துக்கொண்டே இருந்த உஷாவும் 'வீல்' என கத்திவிட்டாள். பரணியின் முக்கத்தில் நிறைய 'மூர்க்கம்' தெரிந்தது. அவள் லேசாய் உறுமுவது போல் சத்தம் கேட்டது. நைட்டியில்,தலைவிரி கோலத்துடன் அந்த உருவம் யாரையும் மிரட்டிவிடும் என்றே இருந்தது. 'உஷா பக்கத்துக்கு வீட்ல ராதாக்காவை கூப்டு வா...' என கோமதி உஷாவை பார்த்து கத்தினாள்.

கோமதி பரணியின் அருகே சென்று தலையில் கைவைத்தாள். அவள் அதை பொருட்படுத்தாமல் தலையை வைத்து கட்டிலில் மீண்டும் முட்ட முற்பட்டாள். கோமதிக்கு அழுகை பீறிட்டது. 'இவரு வேற இந்த நேரம் பாத்து ஜெய்ப்பூர்க்கு போய் தொலைஞ்சிட்டார்..'
என புலம்பிக்கொண்டே வாசலை எதிர்பார்த்தாள். பரணி 'உர்..உர்' என இப்போது அதிக சத்தத்துடன் கத்திக்கொண்டிருந்தாள்.தன் கூரிய நகங்களால் அவள் கைகளில் அவளே பரண்டினாள். சுண்ணாம்பு சுவற்றில் நகத்தை வைத்து கீறினாள். கோமதியால் அந்த அசுர பலம்கொண்ட கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. நல்லவேளையாய் 'ராதாக்கா' வந்து சேர்ந்தாள். பரணியின் அந்த தோற்றத்தை பார்த்து கொஞ்சம் விக்கித்து நின்றாலும்,சுதாரித்துக்கொண்டு பரணியின் அருகே போனாள். கையில் வைத்திருந்த திருநீறை பரணியின் மேல் எறிந்தாள். உர் என உறுமிய அவளை கன்னத்தில் ரெண்டு முறை பளார் என விளாசினாள் ராதாக்கா. பரணி மயங்கி விழுந்தாள். உஷாவுக்கும் கண்கள் கலங்கியிருந்தது. வேப்பிலை,திருநீர் போன்றவற்றை தண்ணீரில் கலக்கி பரணிக்கு கொடுத்தாள்.

ராதாக்கா கோமதியை பார்த்து 'எதோ கெட்டதுக நடமாட்டமா தெரியுது' எனச்சொன்னாள். வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல்களையும் திறந்தார்கள். வீடு முழுக்க சாம்பிராணி புகை போட்டார்கள். உஷா கவனித்து இருந்தாள். பக்கத்து வீட்டு நாய் இப்போது அமைதி கொண்டிருந்தது. கொஞ்சம் அவளுக்கு நிம்மதியாய் இருந்தது. பரணி லேசாய் முழித்தாள். கண்கள் பழைய நிலைக்கு வந்திருந்தன. ஒரு முறை எல்லாரையும் பார்த்து விட்டு 'ரொம்ப Tiredஆ இருக்கும்மா' எனச்சொல்லிவிட்டு தூங்கிப்போனாள். அன்று இரவு எல்லாரும் ஹாலிலேயே படுத்துக்கொண்டார்கள். உஷாவுக்கும் கோமதிக்கும் நடுவே பரணி படுத்திருந்தாள். மதி கைசூப்பிக்கொண்டே கோமதியை கட்டிக்கொண்டு தூங்கினாள். ' நாளைக்கு முதல் வேளையாய் யாருக்கும் தெரியாம..அந்த 'வழி அனுப்புதல்' ஸ்லோகத்தை சொல்லி அந்த அட்டையை தூக்கி எரிந்திடனும்' என உஷா எண்ணிக்கொண்டாள். எல்லாரும் தூங்கிபோனார்கள். மணி ரெண்டு ஆகியிருந்தது.

பக்கத்துக்கு வீட்டு நாய் மீண்டும் முழு வீரியத்துடன் குலைக்கும் சத்தம் கேட்டது. உஷா விழித்து விட்டாள். உடல் அவளுக்கு நடுங்க தொடங்கியது. மெல்லமாய் இடது பக்கம் திரும்பி பரணியை பார்த்தாள். அவள் முழித்து இருந்தாள். அவளின் அந்த முட்டை கண்கள் மேலே விட்டத்தை பார்த்த படி இருந்தது.

****************************************************************************************
திகில்,அமானுஷ்ய பிரியர்களுக்கு கதை இத்துடன் முடிந்து விட்டது. மற்றவர்களுக்கு இன்னும் ரெண்டு வரி பாக்கி இருக்கிறது.தொடருங்கள்.

********************************************************************************************


அவளின் அந்த முட்டை கண்கள் மேலே விட்டத்தை பார்த்த படி இருந்தது.உதடு லேசாய் சிரிப்பது போல் இருந்தது. உஷா பெட்ஷீட்டால் முகத்தை மூடிக்கொண்டாள்.பலமாய் அடித்த காற்றில் காலண்டரில் நேற்றைய தேதி ஆடிக்கொண்டே இருந்தது. மார்ச் 31.