புதன், 29 டிசம்பர், 2010

புத்தாண்டு தீர்மானங்கள்

அலுவலகத்தில் வேலை பார்ப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கிக்கொண்டிருந்த போது தான் நண்பர் அதை கேட்டார். 'ஏன்டா சிவா.. ஒன்னோட 'Newyear resolutions' என்னாதுடா ??' என்றார். 'ம்ம்.. உங்க Frienshipஐ கட் பண்ணலாம்னு இருக்கேன்' னு எப்போதோ கேட்ட ஒரு சினிமா ஜோக்கை வைத்து அவர் மூக்கை பதம் பார்த்தேன். சிரிப்பதற்காக மட்டுமே அலுவலகம் வரும் நாலு பேர் அருகில் சிரித்தனர். இருந்தாலும் அவர் கேள்வியின் நியாயம் எனக்கு உறைக்கத்தான் செய்தது. Newyear Resolution எடுக்காத பட்சத்தில் நம் மீது சில நாச சக்திகள் 'உதவாக்கரை' பட்டம் சூட்டி விடும் அபாயம் இருப்பது எனக்கு அப்போது தான் புலப்பட்டது. இப்போது புத்தாண்டு வேறு நெருங்கி கொண்டிருப்பதால், இதுசமயம் 'Resolution'களுக்கு செம்ம கிராக்கி ஏற்பட்டு விட்டது போல. 'மாப்ள எதுனா Resolution இருந்தா சொல்லுடா..' என கேட்கும் நண்பர்கள் மூலம் இது உறுதியாகிறது.

எது எப்டியோ நானும் புத்தாண்டு தீர்மானம் எடுத்துவிடுவது என முடிவு செய்து, சிந்தனை கிடங்கை தோண்டினேன். என்ன ஆச்சர்யம் நிறைய விசயங்கள் இருக்கின்றன. பின்பு மிகுந்த வீராப்புடன் எழுத தொடங்கினேன்.

1.இனிமேல் மேனேஜர் சொல்லும் மொக்கையான ஜோக்குக்கு தேவைக்கு அதிகமா சிரிக்கக்கூடாது.

2.மதிய வேளைகளில் தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டை பகிர்ந்து கொண்டு ,'எப்டி இருக்கு' என கேட்கும் தோழிகளிடம் 'கேவலமா இருக்கு' னு உண்மையை சொல்லி விடுதல் வேண்டும்.

3. 'பஜாஜ் எவ்வளவு மைலேஜ் தருது...ஹோண்டா என்ன ரேட் ??' என்று கேட்பதை விட்டுட்டு முதலில் டூ வீலர் லைசென்ஸ் வாங்குதல் வேண்டும்.

4. போடும் ஜீன்ஸ் பேண்டுகளை ஒரு மாதத்திற்கு ஒரு தடவையாவது துவைத்து விட வேண்டும்.


5. 'வித்யாசமா எடுத்திருக்கோம்' ,'அவரே பாத்திட்டு அழுது வடிஞ்சிட்டார்', 'அப்டியே வாழ்ந்திருக்காங்க..' னு வரும் விளம்பரங்களை நம்பி மொக்கை படங்களை பார்க்க தியேட்டர் செல்லுதல் கூடவே கூடாது .

6) 'ஏன்டா தமிழுல 'சீக்கு' ங்றத தான் இங்கிலிஷ்காரன் 'Sick' னு காப்பியடிச்சுடானா டா ??' போன்ற முற்போக்கு சந்தேகங்கள் கேட்க நண்பர்களை இரவு பனிரெண்டு மணிக்கு எழுப்புதல் கூடாது.

7) பெரியவர்கள் உயிரை உருக்கி அறிவுரைகள் சொல்லுகையில் கொட்டாவி விடக்கூடாது.

8) 'நாங்கெல்லாம் காலேஜ் படிக்கிறப்போ..' னு யாராவுது ஆரம்பித்தால், அவர் வாங்கிக்கொடுத்த ஓசி டீயையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து ஓடி விடுதல் வேண்டும்.

9) 'நா இப்போ தலைய சொறிஞ்சிட்டு இருக்கேன்.நீ என்ன பண்ணிட்டு இருக்க??' போன்ற Chat Messageகளை தவிர்க்க வேண்டும்.

10)நண்பர்கள் யாராவுது புகைப்பிடித்தால் ,'உங்கூட எங்கம்மா சேரக்கூடாதுனு சொல்லிருக்காங்க' என சொல்லி அவர் நட்பை முறித்து விட வேண்டும்.


எழுதிய முத்தான பத்து தீர்மானங்களையும் அடுத்த நாள் நம்ம அலுவலக நண்பரிடம் காட்டினேன். வாசித்து பார்த்தார். அவரின் முகம் மாறியது. கண்களிலே நீர் கொட்டியது. 'இருக்காத பின்னே..' என பெருமைபட்டுக்கொண்டே ,'அவ்வளவு நல்லவா இருக்கு' என்றேன். 'சுகாதாரமா இருக்கட்டுமேனு கண்ணாலேயே காரி துப்பினேன்' என்றார். மீண்டும் அந்த நாலு பேர் சிரித்தார்கள்.வியாழன், 23 டிசம்பர், 2010

விக்கி- சில குறிப்புகள்
பெயர்: விக்னேஷ் (அ) விக்கி
நிறம்: மாநிறம்
குணம்:குசும்பு

எல்லா விக்னேஷ்களை போலவும் அவனும் 'விக்கி' என்றே அழைக்கப்பட்டான். விக்கியுடன் நான் அதுவரை அதிகம் பேசியது கிடையாது. பதினொன்றாம் வகுப்பில் எங்கள் பெஞ்சில் வந்து உட்காந்த போது முதலில் நானும் பிரிதிவியும் கொஞ்சம் பீதி ஆனோம். ஏனெனில் அதுவரை அவனை பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள் அப்படி. 'மாப்ள...நா இங்க உட்கார்ந்துக்கவா??' என விக்கி கேட்ட போது, நான் பிரிதிவியை பார்த்தேன். அவன் சாணியை மிதித்தவன் போல் முழித்தான். ஒரு வழியாய் 'ஹி..ஹி..' என இளித்துக்கொண்டே இடம் கொடுத்தோம். 'இனிமே நமக்கு சங்கு தான் டா' என பிரிதிவி என் காதில் மெல்லமாய் சொன்னான். அவன் நம்பிக்கை வீண் போகவில்லை. விக்கி தன் பணியை அன்றே செவ்வனே துவக்கினான். வாத்தியார் 'Computer Science' வகுப்பில் Internet க்கும் Intranet க்கும் என்ன வித்யாசம் என ஒரு கேள்வியை பொத்தாம் பொதுவாய் கேட்டார். வழக்கம் போல் மொத்த வகுப்புமே அமைதி காக்க, விக்கி "ஸ்பெல்லிங் சார்" என குனிந்து கொண்டு சத்தம் போட்டு சொன்னான். எல்லோரும் பயங்கரமாய் சிரித்தார்கள். கொடுமை என்னவெனில், யார் சொன்னதுனு யாருக்கும் தெரில. மொத்த வகுப்பும் எங்கள் பெஞ்சையே வெறித்து பார்த்தது.

வாத்தியார் எங்கள் அருகில் வந்து ,'மூணு பேருல யாருடா??' என்றார். நான் 'நாங்க இல்ல சார்' என்றேன். என் கன்னத்தில் ஜெட் வேகத்தில் ஒரு அறை விழுந்தது.அடுத்து விக்கி கண் கலங்கி 'எனக்கு சத்தியமா தெரியாது சார்'னு என கேட்பதற்கு முன்னே சொன்னான்.அந்த உலக நடிப்பை பார்த்து மிரண்டு போனேன். கடைசியாய் நின்ற ப்ரிதிவியை பார்த்தார். கோழி திருடியவன் போல முழி,கையில் கலர் கலரான கயிறுகள், பாக்கெட்டில் சீப்பு என சந்தர்ப்ப சாட்சிகள் எல்லாமே பிரிதிவிக்கு எதிராக அமைந்தது. அவன் பேச ஆரம்பிக்கும் முன்னாலே வாத்தி அவன் கன்னத்தில் மானாவாரியாய் தூர் வாரினார். அவர் போனப்பிறகு விக்கி ப்ரிதிவியிடம் ,'மாப்ள அப்டி இப்டி அழுது சீன போடுறத விட்டுட்டு ..மலையூர் மம்பட்டியான் மாதிரி வெரப்பா நின்னா இப்டி தான்' என்றான். பிரிதிவி பதிலேதும் பேசவில்லை. அவ்வளவு அடி வாங்கினால் யாரால் தான் பேச முடியும்.

பிடிக்காத பாடம்:வேதியல்

ஆனால் கொஞ்ச நாட்களிலேயே நாங்கள் மூவரும் நெருங்கி விட்டோம். அதுவரை சாம்பார் பெஞ்ச் ஆக இருந்த நாங்கள் சண்டியர் பெஞ்சாக மாறினோம். நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் திரும்பி பார்க்கும் முதல் பெஞ்ச் மாணவர்களுக்கு கெட்ட வார்த்தைகளை பரிசளித்தோம். விக்கி வேதியலை கண்டாலே சிலுவையை கண்ட ரத்த காட்டேரி போல் தெறித்து ஓடுவான். வேதியலில் இரண்டு இலக்க மதிப்பெண்களை அவன் வாங்கியதே இல்லை.இப்படி இருக்க, 'கொடுக்கப்பட்ட உப்பு என்ன வகையை சார்ந்தது' என்று கண்டுபிடிக்கும் ஆய்வுக்கூட சோதனை நடந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு மாணவனுக்கும் கொடுக்கப்பட்ட உப்பு எந்த வகையை சார்ந்தது என்று அவரவர் வேதியல் சோதனை செய்து கண்டு பிடித்து சொல்ல வேண்டும். விக்கி பாராளுமன்றம் சென்ற 'அண்ணன் அஞ்சாநெஞ்சர்'
போல் முழித்து கொண்டிருந்தான். 'டேய் மாப்ஸ்.. இந்த கருமம் என்னா உப்புடா??' என கேட்க, பிரிதிவி விளையாட்டாய் 'ஜாவா டை ஆக்ஸைட்' என்றான். அது கிண்டல் என்பது கூட தெரியாமல் வாத்தியாரிடம் போய் உப்பை காட்டி 'ஜாவா டை ஆக்ஸைட்' என்று பெருமை பொங்க சொல்லித்தொலைந்து விட்டான். அன்று விக்கிக்கு வேதியல் ஆய்வுக்கூடத்தில் சிறப்பு பூஜை நடந்தது. மூஞ்சி வீங்கி வெளியே வந்த விக்கியை பார்த்து நானும் ப்ரித்திவியும் அடக்க முடியாமல் சிரித்தோம்.கடைசியில் ஒரு பப்ஸ் வாங்கி கொடுத்து அவனை சமாதான படுத்தினோம்.


பொழுபோக்கு: நடிகைகளின் புகைப்படங்களை சேகரிப்பது

விக்கியின் maths நோட்டுக்குள் அழகான பாலிவுட் நடிகைகளின் போஸ்டர்களை வைத்திருப்பான். கரீனா கபூரும் ,கரிஷ்மா கபூரும் இருக்கும் படத்தை காட்டி ,'மாப்ள அக்காள நீ கட்டுற..தங்கச்சிய நான் கட்டுறேன்..' என சொல்வான். எதாவுது சுமாரான பெண்ணாக பார்த்து ப்ரித்திவிக்கு ஒதுக்கி விடுவான். என்ன காரணத்தினாலாவோ விக்கிக்கு தென்னிந்திய நடிகைகளை பிடிப்பதில்லை.

பட்ட பெயர்: மாரி

சில நேரங்களில் கட்டுக்கு அடங்காமல் எங்களை கேலி செய்து கொண்டிருப்பான். அப்போது எங்களின் பிரம்மாஸ்த்திரம் 'மாரி' தான். அவனை மாரி என கூப்பிட்டால் வெறியாகி விடுவான். எதற்காக அவனுக்கு அப்படி ஒரு பட்ட பெயர் வந்தது என்பது தெரியவே இல்லை.

பிறந்த நாள்: 25-12-1983

பிறந்த நாளை எப்போதும் சீரும் சிறப்புமாய் கொண்டாடுவான். 'ஆமா..இவர் பெரிய நேரு மாமா..' என நாங்கள் கேலி செய்வதையும் பொருட்படுத்த மாட்டேன். அந்த பிறந்த நாளில் சூராம்பழம்,முட்டைபஜ்ஜி, Fanta என எனக்கும் ப்ரித்திவிக்கும் வாங்கித்தந்தான். பதிலுக்கு நாங்கள் சுமார் ரூபாய் நாலு பெருமானமுள்ள ஒரு Handband பரிசளித்தோம். வாங்கி பார்த்த விக்கி 'பிச்சைக்கார பசங்களா..' என சொல்லிக்கொண்டு எங்களை ரோட்டில் விரட்டி வந்தது இன்னமும் பசுமையாய் இருக்கிறது.

மறைந்த நாள்: 13-03-2003

என் வாழ்வின் சோகமான தருணங்களில் ஒன்று விக்கியின் மரணம். ஒரு பைக் விபத்தில் மரணித்தான். அதீத வேகமாய் மூவர் பயணித்த வண்டி மைல் கல்லில் மோதி ,இருவர் அந்த இடத்திலேயே மடிந்தார்கள். விக்கி மட்டும் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவ மனையில் கோமாவில் ஒரு வாரம் இருந்து ,பின் மீண்டு எல்லோரையும் அழ வைத்து இறந்தான். விக்கியின் எல்லா செயல்களிலும் ஒரு மெத்தனம் இருக்கும். அந்த நேரத்தில் அது எங்களுக்கு சிரிப்பாய் இருக்கும். எத்தனையோ முறை அவனிடம் 'டேய் வெண்ணை.. மெதுவா போ... எங்கயாவுது விழுந்து வைக்கப்போறோம்' என அவன் வண்டி ஓட்டுகையில் சொல்லி இருக்கிறேன். 'மாப்ள மோளாத டா..இது தாண்டா திரில்லே' என்பான். ஹெல்மெட் போட்டிருந்தால்,மித வேகமாய் போயிருந்தால், சாலை விதிகளை மதித்து இருந்தால்..இப்படி எல்லா 'ஆல்களும்' நடந்திருந்தால் எங்கள் விக்கி இன்று எங்களுடன் இருந்திருப்பான்.விக்கியின் அம்மாவின் அழுகையை பார்த்த பிறகு விக்கி மேல் எனக்கு கோபமே மிஞ்சியது. இன்று ரோட்டில் மிக வேகமான பைக்குகளை செலுத்தும் நிறைய 'விக்கிகளை' பார்க்கிறேன். சொன்னால் கேட்பார்களா தெரிய வில்லை??

மெத்தனமாய் வாகனம் செலுத்துவோருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். விக்கியை பார்த்தால் நான் விசாரித்ததாய் சொல்லவும்!!!!ஞாயிறு, 14 நவம்பர், 2010

கமல சாகசன்
நான் குழந்தையாக இருந்த காலத்தில் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் மறக்காமல் சில கேள்விகளை என்னிடம் கேட்பார்கள். " உனக்கு அம்மாவ ரொம்ப பிடிக்குமா அப்பாவ ரொம்ப பிடிக்குமா?? ", "நீ டாக்டர் ஆகபோறியா இல்ல இன்ஜீனியர் ஆக போறியா??",பெரும்பாலும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் 'ஈஈ...' என இளிப்பேன். அடுத்தத்தாய் 'உனக்கு கமல் பிடிக்குமா ,ரஜினி பிடிக்குமா?' என்பார்கள். கொஞ்சமும் தாமதிக்காமல் கமல் என கத்திவிடுவேன். இப்படியாக டவுசர் காலங்களில் இருந்தே இந்தாளை பிடித்துப்போனது. யாரோ ஒரு நடிகரை நமக்கு கொஞ்சம் அதிகமாய் பிடித்துப்போகும். எல்லா நல்ல படங்களை பார்த்தாலும், அவரின் மேல் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும். இன்றுவரை நாயகன் படத்தை முழுமையாய் முப்பது முறையேனும் பார்த்திருப்பேன் இன்னமும் என் பிரமிப்பு அகன்ற பாடில்லை.

அது ஒரு தீபாவளி நாள். இப்போது போல் டி.வி யை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்காமல் உண்மையாய் பண்டிகையை கொண்டாடிய காலம் அது. கமலின் குணாவும் , ரஜினியின் தளபதியும் வெளியாகியிருந்தது. எங்கள் தெருவில் நானும், குரு அண்ணனும் மட்டுமே கமல் ரசிகர்கள். ஒரு பெரும்படையே ரஜினி பக்கம் இருந்தது. நானும்,குரு அண்ணாவும் 'குணா' ,தளபதியை தூக்கி சாப்பிட்டு விடும் என்கிற ரீதியில் கலாய்த்து கொண்டிருந்தோம். " 'கண்மணி அன்போடு ..' பாட்டுக்கே நீங்கெல்லாம் எங்க ஆளு காலுல விழுகணும் டோய் " என்று ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றிகொண்டிருந்தோம். கடைசியில் பார்த்தால் 'குணா' கவிழ்ந்து விட ,தளபதி வெற்றி பெற்று விட்டது. நானும் குரு அண்ணனும் வீட்டுக்குள்ளேயே பதுங்கிவிட்டோம். சில நண்பர்கள் எங்கள் வீட்டு ஜன்னல் வெளியே நின்று ' சிட்டுகுருவி ..சிட்டு குருவி.. ' என குணா கமல் போல் கத்தியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. அதற்கு பின்னரும் தூர்தர்சனில் ரஜினி படம் போட்டால் வெளியே போய் கிரிக்கெட் விளையாடுவது, 'ஒளியும் ஒலியும்' களில் கமல் பாடல் போட்டால் கரைச்சல் கொடுப்பது, என எங்களின் அறப்போராட்டம் தொடர்ந்தது. இன்னொரு தீபாவளி.இந்த முறை தேவர் மகனும்,பாண்டியனும் மோதின.
பழைய அனுபவங்களால் நானும் குரு அண்ணனும் கொஞ்சம் அடக்கி வாசித்தோம். நல்ல வேளையாய் தேவர் மகன் ஜெயித்தது. நாங்க 'சாந்து பொட்டு , சந்தன பொட்டு ' என பாடிக்கொண்டே வெளக்கமாத்து குச்சியால் சிலம்பம் சுற்றி ரஜினி ரசிகர்களை பழிக்கு பழி தீர்த்தோம்.

'மூன்றாம் பிறை' பார்த்த போது தான் வாழ்க்கையிலேயே முதல் முறையாய் ஒரு சினிமா படத்திற்கு கலங்கினேன். அப்போது ஸ்ரீதேவி மேலே செமத்தியான கோபம் வந்தது. அது படம் என புரியாமல் அந்த சோகம் என்னையும் சேர்த்து கவ்வியது. அந்த மாதிரி நடிப்பு நடிக்க இப்போதிருப்பவர்களால் சத்தியமாய் முடியாது. அந்த படத்தில் ஸ்ரீ தேவி நடிப்பதை அந்த படக்குழு மொத்தமும் கைதட்டி ரசிக்குமாம். கமல் சிரித்துக்கொண்டே ஸ்ரீதேவியிடம் 'உங்கள நான் கிளைமாக்ஸ்ல பாத்துக்கிறேன்' என்பாராம். பிறகு நடந்ததெல்லாம் சினிமா சரித்திரம். சொச்சமாய் கமல் கையில் தேசிய விருது. வறுமை நிறம் சிகப்பு, பதினாறு வயதினிலே,நாயகன்,அபூர்வ சகோதரர்கள்,மகாநதி,புன்னகைமன்னன், தேவர்மகன் .... ம்கூம் சொல்லி மாளாது அந்த சொக்கிப்போன படங்களின் பட்டியலை.'அன்பே சிவம்' என்ற படம் ஓடி தொலைந்திருந்தால் இவ்வளவு மொக்கைபடங்கள் தைரியமாய் வெளிவந்திருக்காது. குருதிபுனல் படத்தில் கமல் பேசும் வசனங்கள் அத்தனையும் மனப்பாடம் எனக்கு. 'தைரியம்ங்கிறது பயப்படாத மாறி நடிக்கிறது தான்', ' பத்ரி..மிச்சமிருக்கிறவன்லாம் உன்ன மாறி பொறிக்கிக்கும், போராளிக்கும் கலப்புல பொறந்தவனுங்க ..' இப்படி கமல் படத்தின் எல்லாவற்றிலும் உரையாடல் கவனிக்கப்படும்.

கமலின் மேல் வைக்கப்படும் விமர்சனங்களையும் நானும் ரொம்ப காலமாக கவனித்து வருகிறேன். கண்டிப்பாய் ஆங்கில படங்களின் பாதிப்பு சில கமல் படங்களில் உண்டு என்பதை நான் ஒத்துக்கொள்வேன். பாதிப்புக்கும், சுடுதலுக்கும் உள்ள வேறுபாட்டை சில அதிபுத்திசாலிகள் புரிந்து கொள்வதில்லை. இன்னும் இணையதளங்களில் சிலர் கமல் நிகழாத அற்புதமா?? என பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நம்ம சுஜாதா சொல்வது போல் 'அவர்களை பசித்த புலி தின்னட்டும்...' . அவ்வை சண்முகி , ராபின் வில்லியம்சின் Mrs.Doubtfire படத்தின் காப்பி என எவனாவுது சொன்னால் நான் அகோரியாகி அவனை கடித்து தின்பேன். இதுபோல் இணையத்தில் கமல் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் 'என்னிடமும் கீ போர்டு இருக்கிறது' என்பதற்காகவே எழுதப்பட்டவை. தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்து கமல் முடிந்த வரை நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். நல்ல இயக்குனர்களுடன் சேரும் பட்சத்தில் கமலின் இரண்டாவுது இன்னிங்க்ஸ் நொறுக்களாய் அமையும்.
இதோ இந்த வருட தீபாவளி நாளில் வீட்டில் உட்காந்திருந்தேன். தேசிய விளையாட்டான 'ரிமோட் அமுக்குதல்' விளையாடி கொண்டிருந்தேன்.

'நடுவர் அவர்களே இன்றைய இளைஞர்களுக்கு என்ன குறை.... ' டொபக்

'இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் போத்திஸ்,
கோல்ட்வின்னர்...' டொபக்

'நாங்க பட்ட கஷ்டம் படத்தோட ஒவ்வொரு frameளையும் வந்திருக்கு..' டொபக்

'பக்தியையும் செக்ஸ் மாறி வீட்டுக்குள்ளேயே வச்சிகோங்க..வெளில கொண்டு வராதீங்க...'


உலக நாயகன் கருப்பு உடையில் வழக்கம்போல் தன் கருத்துக்களை தெனாவெட்டாய் பேசிக்கொண்டிருந்தான்.அதற்கு மேல் ரிமோட் என்கிற வஸ்து தேவை இல்லாமல் போகி விட்டது.


ஆமாங்க மன்மதன் அம்பு எப்போ ரிலீஸ் ???

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

எந்திரன் - சன் திரைவிமர்சனம்
வணக்கம். இது உங்கள் சன் திரை விமர்சனம். இந்த வாரம் நாம பார்க்க போற படம் சங்கர் இயக்கி, சூப்பர் ஸ்டார் நடிக்க, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் பெத்த பெருமையுடன் வழங்கும் 'எந்திரன்'. வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நமது சன் டாப்-டென்னில் இந்த படம் முதல் இடத்திலிருந்தது குறுப்பிடத்தக்கது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாகி இந்த படம் தியேட்டர்களை திருவிழா கூட்டங்களாக்கி கொண்டிருக்கிறது. குறிப்பா இது தமிழ் சினிமாவை அடுத்த வட்டத்திற்கு ...மன்னிக்கணும் அடுத்த கட்டத்திற்கு அலேக்கா தூக்கிட்டு போயிருக்குனு சொன்னா அது மிகையாகாது.

வெளியான முதல் வாரத்திலேயே இது வரை வெளியான எல்லா இந்திய படங்களின் வசூல் சாதனையையும் இந்த படம் 'டம்,டும்' னு அடிச்சி உடைச்சிடுச்சு. இந்தியால டிக்கெட் கிடைக்காம சில ரசிகர்கள்
அமெரிக்காவுக்கு பறந்து போய் படம் பார்த்ததா நமது செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. சில ரசிகர்கள் பெட்டி படுக்கையுடன் வந்து தியேட்டரிலேயே தங்கி அனைத்து காட்சியையும் பார்ப்பது இந்திய சரித்திரத்திலேயே இதுவே முதன் முறை. இப்போ நாம படத்தோட விமர்சனத்துக்கு போவோம்.

வசீகரன் ஒரு விஞ்ஞானி. (a+b)^2 க்கு அப்புறம் ஒரு நல்ல formula வரவே இல்லேன்னு தீவிரமா ஆராய்ச்சி பண்றார். தாடியைதவிர வேறேதும் அந்த ஆராய்ச்சியின் போது வளர்ந்ததா தெரியல. இறுதில 'டோகாமா' என்கிற ஒரு டெக்னாலஜிய கண்டுபிடிக்கிறார். அத ஒரு எந்திரத்துக்கு செலுத்துகிறார். அதனுடைய மூளை மனித மூளைய விட மூவாயிரம் மடங்கு வேகமா செயல் படக்கூடியது. அது ரெண்டாயிரம் யானையின் பலம் கொண்டது. ஆனால் சாணி போடாது. அந்த 'எந்திரனுக்கு' சிட்டினு பெயரிடுகிறார் வசீகரன். பின்பு வரிவிலக்குகாக 'அறிவுநிதி' எனப்பெயரை மாற்றுகிறார். சென்னையில்
டாட்டா சுமோவில் கூட்டமாய் போய் வில்லத்தனம் செய்கிறார் மந்திரி 'முண்டக்கலப்பை'. அவர் தன்னுடைய தம்பியை +2 வில் பாஸாக்க எந்திரனை உபயோகிக்க பார்க்கிறார். இதற்கிடையில அது ஒரு இயந்திரம்ங்கிறது தெரியாம 'எந்திரனை' கன்னா பின்னானு காதலிக்கிறார் ஐஸ்வர்யாராய். கடைசியில காதலையும், கலகத்தையும் எப்படி சமாளிக்கிறான்கிறதை அதிரடியா சொல்லிருக்கார் இயக்குனர் சங்கர். Hollywood க்கு சவால் விடுற மாறி அமைஞ்சிருக்கு அந்த கிளைமாக்ஸ் காட்சி. இப்படி ஒரு படம் இனிமே எடுக்கவே முடியாதுன்னு சினிமா வல்லுனர்கள் துண்டைப்போட்டு தாண்டுகிறார்கள்.


இவை எல்லாத்துக்கு மேலாக உலக திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையா ஒரு முயற்சியை சன் குழுமம் செய்திருக்கிறது. திரையரங்குகளில் படத்தின் போது இரண்டு காட்சிகளுக்கு ஒருமுறை, 'இந்த காட்சியை வழங்குவோர்' என விளம்பரங்கள் போடுவது மிகப்புதுமை. இது வர்த்தகத்தின் பல வாசல்களை திறக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் புதுமை கொப்பளிக்கிறது. சூப்பர் ஸ்டார் மிக இளமையாய் காட்சி தருகிறார். இவர் பக்கத்தில் நிற்கையில் ஐஸ்வர்யா கொஞ்சம் வயசானவராய் தெரிவதை மறுக்க முடியவில்லை. 'நா பேசினா டெசிபல்... நீ ராங்கா பேசினா எகிறும் உன்பல்லு' னு
பஞ்ச் பேசுவதாகட்டும், 'ரிங்கா ரிங்கா ரோசஸ்' னு காமெடி பண்ணுவதாகட்டும் , 'எனக்கு ஜுரம்,இருந்தும் 'ஐஸ்' ஸ பிடிக்குது' னு காதல் புரிவதாகட்டும் சூப்பர் ஸ்டார் பின்னியெடுக்கிறார். இறுதில இந்தியாவில் இருந்து கொண்டே இங்கிலாந்து பிரதமர் வீட்டில் இருக்கும் வெடிகுண்டை கண்டுபிடிக்கும் காட்சி மிக அபாரமாய் படமாக்க பட்டிருக்கிறது.ஓவ்வொரு காட்சியிலும் சங்கரின் உழைப்பு தெரிகிறது அதுதானா என்னவோ தியேட்டரில் ஒரே வியர்வை வாடை!!


ரஜினி ஐஸ்வர்யா ஆடும் டூயட் தவிர படத்தில் வேறு இடங்களிலும் நகைச்சுவை இருக்கிறது. அருமையான நகைச்சுவைக்கு சந்தானமும், கருணாசும் உத்தரவாதம் தராங்க. சந்தானம் அடிக்கும் இரட்டைஅர்த்த நகைச்சுவையை குடும்பமாக ரசிகர்கள் ரசிப்பதை காண முடிகிறது. வில்லனாக வரும் 'முண்டக்கலப்பை' கண்ணாலேயே அனைவரையும் மிரட்டிவிடுகிறார். அவர் டாட்டா சுமோவில் கூட்டமாய் வருவது புதுமை. 'அரிமா அரிமா' பாடல் பிரம்மாண்டத்தின் உச்சம். அந்த பாடலில் ஆயிரம் எந்திரன்கள் ஒரே நேரத்தில் ஆடுவது,குதிப்பது, மூச்சா போவது என தொழில்நுட்பத்தில் நாக்கைதுறுத்தி
மிரட்டியுள்ளனர். படம் வேகமாக போகிறது என்பதை காண்பிக்க ஸ்க்ரீனின் ஓரத்தில் '350km/hr' என்று போடுவது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. படத்தை பத்தி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் என்ன சொல்றார்னு கேட்போம்.'அருமை தம்பி ரஜினியின் எந்திரன் ரசிகர்களை எப்போதும் மயக்கும் மந்திரன். இந்த கலைத்தாயின் மூத்த மகனின் படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு 'இலவச பாப்கார்ன்' வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நாளை முதல் அமல்படுத்துகிறது. மேலும் ஏழை எளிய மக்களுக்கு போய் சேரும் வண்ணம் இந்த படத்தின் பாடல் 'ரிங்டோன்'கள் இலவசமாய் வழங்க இருக்கிறது. எனக்கடுத்து தமிழர்களுக்காக தன்னிகரில்லாமல் உழைப்பவர் தம்பி ரஜினி. அவர் அரசியிலுக்கு வராத பட்சத்தில் எனக்கு நிரந்தர தம்பியாக இருப்பார்' இவ்வாறு தன் கர கர குரலில் கராராய் தெரிவித்தார் நம் முதல்வர்.

இப்போ ரசிகர்கள் என்ன சொல்றாங்கன்னு கேப்போம்.

' ஹெ..சூப்பர்ங்க படம் போற வேகமே தெரில அவளோ ஸ்பீடு'

(பாஸ்.. நீங்க பாத்தது ட்ரைலர்..')

'சூப்பர் ஸ்டார் பின்னிட்டார்... இன்னும் நாலு தபா பாப்பேன்'


''இது வரைக்கும் இந்தியால இப்டி ஒரு படம் வந்தில்லங்க..''மொத்தத்தில் எந்திரன் ரசிகர்களின் "முதல்வன்". மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் வணக்கம்.திங்கள், 13 செப்டம்பர், 2010

அய்யம்மாவீடு நிறைய கூட்டம் நிரம்பியிருக்கிறது. 'அய்யம்மா' ரொம்பவும் சுருங்கிப்போய் படுத்திருக்கிறாள். கண்களை மூடியிருக்கிறாள்.கண்டிப்பாய் நினைவு இருப்பதற்கான அறிகுறி இல்லை. மரணத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிறாள், பாவம் அவளுக்கு 'Gate pass'
கிடைப்பதாயில்லை.எல்லோரும் எப்போது 'அது' நிகழும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் ஓரமாய் நின்று கொண்டிருக்கிறேன். எனக்கு யார் இவள்?? . என் அப்பாவை பெற்றவள். அப்பாவின் தாயை நாங்கள் 'அய்யம்மா' என்றே அழைப்போம். வீடு நிறைய இருக்கிற சாமி புகைப்படங்களை ஒரு முறை நோட்டம் விட்டேன். தொண்டைக்குழி தயக்கமாய் நகர்ந்து கொண்டிருந்த அய்யம்மாவை பார்த்து ,'சீக்கிரம் போயிரு அய்யம்மா' என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். அப்படி நான் நினைக்க என் வசம் இரண்டு காரணங்கள் இருந்தன.


1. இத்தனை வயதில் கடுமையான வலி, நினைவு பிறழ்வுகளுடன் அவளைப்பார்க்க சங்கடமாய் இருந்தது.

2. எனக்கு இன்னொருமுறை ஊருக்கு வந்து போக காசில்லை.

நம் மனதில் நினைப்பது அடுத்தவர்க்கு தெரிவதில்லை என்பது கொஞ்சம் வசதியாய் தான் இருக்கிறது.

என் எண்ணத்தில் இடியை இறக்கினாள் அய்யம்மா. ஒரு பெரியப்பா வீட்டுக்குள் வந்தவுடன் ,'ஏன் பிறந்தாய் மகனே...' என்ற பழைய பாடலை பாட ஆரம்பித்துவிட்டாள். அந்த அறையில் ஒரே சிரிப்பலை. அவள் சுருதி சுத்தமாய் பாடியது எனக்கு அடி வயிற்றில் புளியை கரைத்தது. சிலர் 'எப்பா இது பழைய கட்டப்பா..இன்னும் ஒரு மாசம் தாங்கும் பா..' என சொல்லிக்கொண்டே வெளியேறினர். திடீரென அய்யம்மா 'பாயாசம்..பாயசம்' என கேட்டாள். சாக போகிறவர்கள் கேட்பதை மறுக்க கூடாது என்பதற்காக, ஒரு தேக்கரண்டி பாலில் ஒரு ஜவ்வரசி போட்டு அய்யம்மா வாயில் ஊற்றினார்கள். கொஞ்சத்தை விழுங்கினாள். கொடுத்து முடித்தவுடன் சும்மா இல்லாமல், அத்தை அய்யம்மாவை பாயாசம் எப்படி இருந்தது என கேட்டார். அது 'டுபாக்கூர்' பாயாசம் என்பதை அய்யம்மாவால் இந்த சூழ்நிலையில் கண்டு பிடிக்க முடியாது என்று நினைத்துக்கொண்டிருந்தோம்.

' எம்மா...திடீர் பாயாசம் எப்டி இருந்துச்சு..??'

'...............'

'சொல்லுங்கம்மா.. திடீர் பாயாசம் எப்டி இருந்துச்சு??'

'ம்ம்ம்.. திடீர் பாயாசம் மயிறு மாறி இருந்துச்சு!!!'

எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். எனக்கிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிற்று.அய்யம்மாவின் பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தேன். சின்ன வயதில் அவள் சொல்லும் 'ஆதி பராசக்தி' கதைகள் ஞாபகம் வந்தது. பெரும்பாலும் கதைகளில் ஆதிபராசக்தி இறுதியில் அரக்கனை ஈட்டியில் குத்துவார். 'இத முதல்லயே செஞ்சிருக்கலாம்ல' என கேட்க நினைத்து, ஆதிபராசக்திக்கும்,அய்யம்மாவுக்கும் பயந்து அதை கேட்டதில்லை. அய்யம்மா ஒரு உணர்ச்சிப்பிளம்பு .கோபமோ, பாசமோ பொங்கிவிடுவாள். அவளை கண்டு நிறைய பேர் பயப்படுவதை பார்த்திருக்கிறேன்.திரும்பி அய்யம்மாவை பார்த்தேன். கிட்டத்தட்ட எலும்புக்கூடு போல படுத்திருக்கிறாள். கண்கள் முழுமையாய் மூடி இருக்கிறது. அவளைச்சுற்றி ஒருகூட்டம் உட்காந்து பேச்சுக்கொடுத்துகொண்டு இருக்கிறது.

'காசு...காசு...'

'உங்களுக்கு எதுக்கும்மா இப்போ காசு??''

'ம்ம்ம்..நாய் குரைக்கிறப்ப குப்பைல போடுறதுக்கு..'

திரும்பவும் சிரிப்பு. 'நாய் குறைக்கிறப்ப' என்பதை தேவையில்லாமல் சேர்த்து கேட்பவர்களை குழம்ப வைப்பது அந்தக்காலத்து குசும்பு. அய்யம்மா எழுந்து வந்து 'என்ன சிவராஸ்...காபி போடட்டுமா??' என்று கேட்டுவிடுவாள் போலிருந்தது. கடைசி காலங்களில் முதுமையை விட தனிமையே அவளை ரொம்ப வருத்தியது. பேச்சுத்துணைக்கு கூட ஆளில்லாமல் கஷ்டப்பட்டாள். அதான் அவள் சாகும் போதுகூட பேச துடிக்கிறாள்.கைநிறைய பணம், அழகான வாழ்க்கைத்துணை, வீடு, கார், தூரதேச பயணங்கள் என நம் ஆசையின் பட்டியல் எப்போதும் நீண்டு கொண்டே இருக்கும். கடைசியில் '
இன்னைக்கு சரியா நாமளே கஷ்டப்பட்டாவது எழுந்து போய் காலைக்கடனை முடிச்சிட்டு வந்திடனும்' னு மானுடத்தின் இறுதி நிலை வந்திடுது. மரணம் அய்யம்மாவை கவ்வுவதை வேடிக்கையாய் உட்காந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். 'நாளைக்கு நமக்கும் இது தான்' என்கிற சின்ன பயம் கூட யார் கண்ணிலும் இருப்பதாய் தெரியவில்லை.இரண்டு,மூன்று வாரங்கள் அய்யம்மாவின் இந்த நிலை தொடர்ந்தது. உறவுகள் எல்லாம் சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தன. தூரத்து ஊர்களில் இருந்து வந்தவர்கள் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அம்மாவாசைக்கு போய் விடுவாள், பௌர்ணமிக்கு போய் விடுவாள் என்று ஆக்டோபஸ் போல் அருள்வாக்கு சொன்னவர்களை எல்லாம் முறியடித்து முன்னேறிக்கொண்டிருந்தாள். நினைவு முழுமையாய் தப்பியதால் என்னென்னமோ பேசினாள். 'நா எவ்ளோ செகப்பு... கரு கருனு இருக்குற அவருக்கு போய் கொடுத்துட்டாக...தெருவுல போனா எல்லாரும் கேப்பாக...' என சொன்னாள். எல்லாரும் கொஞ்சம் அதிர்ச்சி ஆகிப்போனார்கள். இதுவரை யாரிடமும் அய்யம்மா இந்த விஷயத்தை பேசியதில்லை. கிட்டத்தட்ட அறுபது வருடத்து ரகசியம். நல்லவேளை 'அய்யப்பா' உயிருடன் இல்லை. இன்னும் என்னென்ன ரகசியங்கள் அந்த மூளைக்குள் இருக்கிறதோ என்று எண்ணிக்கொண்டேன். சொந்தங்கள் பொறுமை இழந்து போயினர். ஒருத்தர் ,'இப்படி தான் ஆண்டிபட்டில ஒரு பெருசு இழுத்துக்கிட்டு போகாம கெடந்துச்சு... 'அப்பா' போயிட்டியேனு நடுராத்திரில அவர் மேல விழுந்து மூச்ச அமுக்கி முடிச்சுப்புட்டானுங்க' என சொன்னார். நல்லவேளை அய்யம்மா யாரையும் அப்படி யோசிக்க வைக்கவில்லை. ஒரு காலைவேளையில் இறைவனடி சேர்ந்தாள்.

அய்யம்மா ஐஸ் பெட்டியில் வைக்கபட்டிருக்கிறாள். மருமகள்கள்,மகள்கள்,பேரன்,பேத்திகள் என நெறைய பேர் அழுதுகொண்டிருந்தனர். ஆச்சர்யமாய் இருந்தது.எனக்கு கொஞ்சம் கூட அழுகையே வரவில்லை. மூஞ்சை மட்டும் சோகமாய் வைத்துக்கொண்டேன். அய்யம்மா அமைதியாய் படுத்திருக்கிறாள். அழுகைச்சத்தம் அதிகமானது. மூன்று வீடு தள்ளி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கைக்குழந்தை ஒன்று சிரித்து கொண்டிருந்தது. குழந்தையும் தெய்வமும் ஒன்று தான் போல!!!


புதன், 18 ஆகஸ்ட், 2010

கவித... கவித...

ஒரு மொழியின் ஆளுமை பெரும்பாலும் கவிதைகளில் தான் வெளிக்கொணரும். அதுவும் அடி,தொடை,அணி,பா போன்றவை பற்றியெல்லாம் கவலைப்படாத புதுக்கவிதைகள் அழகுப்பெண்கள் போல. ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி ரசிக்கிறார்கள். எல்லா சாலைகளும் ரோமை அடைகின்றன என்று சொல்வது போல கிட்டத்தட்ட எல்லா கவிதைகளும் காதலுக்காகவே எழுதப்படுகின்றன.அதுவும் காதலியின் கிட்னி தவிர அனைத்தையும் வர்ணிப்பார்கள். நிலவு,வானம்,மேகம்,மின்னல்,பூ,தென்றல் என பெனாத்துவார்கள். ஆனால் சிலவற்றை ரசிக்காமலும் இருக்க முடியாது. எதோ நண்பனின் நோட்டில் படித்ததாய் ஞாபகம்.

ஆம் நிலவு மேடு பள்ளமானது தான்
என்னவள் முகத்தில் முகப்பருக்கள்!!!!

கண்டிப்பாய் இதை சம்பந்தப்பட்ட பெண் கேட்டிருந்தால் வெட்கப்பட்டிருப்பாள். கவிதை தரும் போதையில் இடையிடையே நானும் எழுத முயலுவேன். பன்னிரண்டாம் வகுப்பில் எழுதியதாய் ஞாபகம்.பொதுத்தேர்வில் மட்டமான மதிப்பெண் எடுத்ததால் ஒளித்து வைக்கும்படி ஆகியது.உரைநடையை உடைத்து எழுதி கவிதையாக்குவது இன்னொரு சூத்திரம்.

ஒருமுறை சொன்னதை மறுமுறை சொன்னால்
கவிதையாம்!!!
ஒரு முறை பார்த்தவுடன் மீண்டும் உன்னை பார்க்கத் தோன்றுதே
நீயும் கவிதை தானோ!!!

மறக்காமல் ஆச்சர்யகுறி போட்டு விடுதல் உத்தமம்.இல்லையேல் ஒரு கூட்டம் இதை கவிதை இல்லை என நம்ப மறுக்கும். ஆனால் மெல்லிய சோகங்களையும், தின நிகழ்வுகளையும் கவிதையில் சொல்லுகையில் அந்த பதிவு அழகாகிறது. கிட்டத்தட்ட நாலைந்து வருடங்களுக்கு முன்னாடி எதோ வார இதழில் படித்தது. ஹைக்கூ வகையிரா. இவ்வளவு குறைவான வார்த்தைகளில் வறுமையை பதிவு செய்ய வாய்ப்பே இல்லை.

வயிறு நிறைந்திருக்கிறது
மூன்று நாளாய் பட்டினி
ஏழை கர்ப்பிணி!!!


எதுகை மோனை தேவை இல்லாமல் அந்த நொடியின் வீரியத்தை பதிவு செய்யும் வல்லமை கவிதைகளுக்கு உண்டு. இதுவும் சில ஆண்டுகளுக்கு முன் எதோ வார இதழில் படித்தாய் ஞாபகம். ஒரு சோகமான நெடும்பயணத்தை இப்படி விவரிக்கிறார்.


அப்பாவின் மரணத்திற்கு ஊருக்கு செல்கிறான்.
பேருந்தில் முழுநீள நகைச்சுவை படம்!!!

இந்த கவிதையின் கனம் அதிகம். பூச்சில்லாத வார்த்தைகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.யாராவுது பேனாக்காரர்கள் இதைவைத்து சிறுகதையோ,குறுநாவலோ எழுதி விட முடியும். எளிமையான விவரனை. இந்த கவிதையின் அழகே அந்த 'முழு நீள' என்ற வார்த்தையில் ஒளிந்திருப்பதாய் படுகிறது. அது இல்லாமல் கவிதை படிக்கிற போது அந்த அடர்த்தி இல்லாமல் போவதாய் தோன்றுகிறது. கீழே உள்ள கவிதை ரெண்டு மூன்று வாரங்களுக்கு முன் ஆனந்த விகடனில் படித்தது.அழகான நகைச்சுவை ,கொஞ்சம் எதார்த்தம் கலந்து எழுதி இருக்கிறார். படித்தவுடன் கண்டிப்பாய் 'அட' என மூளைக்குள் ஒரு சத்தம் கேட்கும்.

'இருப்பதிலேயே நல்ல புகைப்படத்தை
பெண் வீட்டிற்கு அனுப்பினேன்.
அவர்கள் வந்ததிலேயே நல்லதை
தேர்வு செய்திருப்பார்கள் போல
பதிலில்லை!!!'
இதோ இந்த பதிவை எழுதிகொண்டிருக்கும் இந்நேரம் பெங்களூரில் மழை பெய்து கொண்டிருக்கிறது. எதிர் வீட்டு வாண்டுப்பெண் பால்கனியில் நின்றபடி நனைந்து கொண்டிருக்கிறாள். அவள் அம்மாவின் 'கத்தல்கள்' அவள் காதில் விழவில்லை. ரொம்ப நேரமாய் ஒரு 'சப்பை' கவிதையுடனாவுது முடித்துவிடலாம் என எண்ணி இல்லாத மூளையை கசக்கி கொண்டிருந்தேன். கடைசியில் தோன்றிவிட்டது.

'அவளை நனைத்து விட்டு
இன்னும் அழகாகிறது
மழை!!!'
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

ஏழாம் உலகம்/ நான் கடவுள்

வாசிப்பு எப்போதும் சுகந்தமானது. அதுவும் ஜெயமோகன் போன்ற 'எழுத்து அரக்கர்களை' வாசித்தால் ரெண்டு நாள் யாரிடமும் பேசத்தோன்றுவதில்லை. 'நான் கடவுள்' படம் வந்து ஓடிக்கொண்டிருந்த சமயம் அது. நான்கு முறை பார்த்து முடித்திருந்தேன். நண்பர்கள் சிலர் என் மனநிலையை சந்தேகித்து கொண்டிருந்தார்கள். அப்போது தான் படத்தின் முக்கியமான பகுதி ஏழாம் உலகம் நாவலின் தழுவல் என்று கேள்விப்பட்டேன். படத்தின் வசனகர்த்தா ஜெ.மோ தான் ஏழாம் உலகத்தின் சிருஷ்டி கர்த்தா என்பதும் தெரிந்தது.மிகச்சமீபத்தில் தான் நாவலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிரண்டு போனேன்.தமிழில் இப்படிக்கூட எழுத ஆள் இருக்கிறார்களா??

சபிக்கப்பட்டவர்களின் உலகமே இந்த ஏழாம் உலகம் என்பது முன்னுரையிலும்,அட்டை விளம்பரங்களிலும் நமக்கு சொல்லப்பட்டுவிடும். நாம் எல்லா கூட்டங்களிலும்,கோவில்களுக்கு வெளியேயும்,வீதிகளிலும் உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களை தினமும் பார்க்கிறோம். என்றாவுது இவர்கள் எங்கே வசிக்கிறார்கள்? எப்படி தூங்குகிறார்கள்?, இவர்களுக்கு காதல் இருக்கிறதா?, குழந்தைகள் உண்டா என்பதெல்லாம் யோசித்ததுண்டா.. இல்லை என்பதே நம்முள் அனேக பேரின் பதிலாய் இருக்கும். இந்த நாவலில் ஜெ.மோ நம்மை இவர்கள்உலகத்துக்கு அழைத்துப்போகிறார்.உண்மையில் இழுத்து போகிறார் என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நாவலை வாசித்து முடிந்தவுடன் எல்லார்மனதிலும் ஒரு குற்றவுணர்வு வருவதை தடுக்க இயலாது. ஆங்காங்கே சில சித்தாந்தங்களையும் தெளிக்கத் தவரவில்லை ஜெ. நான் கடவுளில் ஒரு காட்சி. அகோரியான ருத்ரன் நள்ளிரவில் கோவிலுக்கு வெளியே நிறைய 'சாமிகளுடன்' கஞ்சா இழுத்து கொண்டிருப்பார். சுருட்டை பற்ற வைக்க ,கோவிலில் உள்ள தீபத்தை உபயோகிக்கப்போவார். ஒரு சாமி ,'அது கோயில் தீபம்' என ருத்ரனைபார்த்துப் பதறுவார். உடனே ருத்ரன் 'தீயில என்னடா நல்லது?? கெட்டது??' என கேட்பான். தியேட்டரில் பலத்த கைதட்டல் இந்த காட்சிக்கு. இப்படி அடர்த்தியான அர்த்தங்களை ஒரே வரியில் சொல்வது அரிது.


படத்திலும் நாவலிலும் சிலாகிக்க வேண்டிய இன்னொரு விஷயம் எந்த இடத்திலுமே போதனைகள் இல்லை. புரட்சி வசனங்கள் இல்லை. காட்சிகள் எதார்த்தமாய் அணுகப்படுகிறது. ருத்ரன் என்ற அகோரியை ஏழாம் உலகத்தில் சேர்த்துக் கொண்டுவிட்டார் பாலா.உண்மையில் இந்த படத்திற்கு பாலாவிற்கு தேசிய விருது கிடைக்காமல் போயிருந்தால் தான் ஆச்சர்யமாய் இருந்திருக்கும்.உடல் சவால் நிறைந்தவர்களை படம் முழுக்க நடிக்க வைத்திருப்பதின் பின்னணியில் கண்டிப்பாய் நிறைய உழைப்பு இருந்திருக்க வேண்டும்.

சினிமா என்றாலே அழகியல் சமாச்சாரங்கள், பதுமை பெண்கள், எழிலான காட்சிகள் என்ற கோட்டை தாண்டி ,ரோட்டில் எதெல்லாம் பார்க்க தயங்குகிறோமோ அதையே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பூஜா கடைசியில் பேசும் அந்த வசனம் அவ்வளவு கூர்மையாய் இருக்கும். இவ்வளவு நாள் நாம் கட்டி வைத்திருக்கும் நம்பிக்கைகள் எல்லாத்தையும் 'கட்டுடைத்தல்' செய்யும்.இரவில் படம் பார்க்கும் பட்சத்தில் தூங்க நெடு நேரம் ஆகும்.


விந்தணுவில் இருந்து புறப்பட்டு கருமுட்டையில் இணைந்து உருவாகும் 'உயிர்' , யாராய் பிறக்கும்?, யாருக்கு பிறக்கும்? என்பதெல்லாம் கடவுளின் சித்தம் என்கிறோம். அப்படி பூமியில் உயிராய் ஜீவிப்போர் கொடூரமான வறுமையிலோ, தாங்கொனா உடல் கோளாறிலோ பிறப்பது யாரின் சித்தம். ரோட்டில் அழுக்கு உடையுடன், பரட்டை தலை, ஒழுகும் மூக்குடன் பிச்சை எடுக்கும் சிறுவன் , ஐஸ்க்ரீம் பார்லர்களில் அமர்ந்து 'Chocobar'களை சுவைக்கும் குழந்தையை ஏக்கமாய் பார்க்கும் காட்சி பெரு நகரங்களில் தினமும்பார்க்கலாம். நாவலில் முத்தம்மை என்ற ஊனமுற்ற பெண்ணுக்கு பிரசவ நிகழ்வு தான் முதல் பகுதி. இந்த இடத்திலேயே மிரட்டி விடுகிறார் ஜெ.மோ. ' கதையில் கதா பாத்திரம் பீடி புகைத்தால் அந்த வாடையை வாசகனும் உணரனும்' விளக்கங்கள்,உவமானங்கள் பற்றி ஜெயகாந்தன் ஒருமுறை இப்படி சொன்னார். இங்க நம்ம ஜெ.மோ கிட்டத்தட்ட எல்லா பகுதிகளிலும் நம் மூக்கையும் வேலை செய்ய வைக்கிறார். இது பல இடங்களில் நமக்கு அருவருப்பை தருகிறது. உண்மையாய் சொன்னால் 'ஏழாம் உலகம்' என்ற முரட்டு கள்ளில் நிறைய தண்ணீர் ஊற்றியே பாலா கொடுத்திருக்கிறார். உருப்படிகளை வைத்து தொழில் நடத்தும் போத்திபண்டாரம், சித்தர் பாட்டுகளை பாடும் மாங்காண்டி சாமி, குசும்பு பிடித்த குய்யன், எருக்கு, முத்தம்மை என கதா பாத்திரங்களை வைத்து ஏழாம்
உலகத்தில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார்.எப்போதும் நகைச்சுவையாய் பேசும் குய்யன் கதாபாத்திரம் மறக்க முடியாதது. பழனி அடிவாரத்தில் போத்திபண்டாரம் செய்யும் 'உருப்படி' வியாபாரத்தில் ஒருவன் இந்த குய்யன். இரண்டடியில் கால சூம்பிபோய் இருப்பவன். தன் முதலாளி பெண் கல்யாணத்தில் இலை போட்டு, வெள்ளை சாதம் வைத்து நல்ல குழம்பு ஊற்றி சாப்பிடலாம்.பாயாசம் வேறு கிடைக்கும் என சொல்லிக்கொண்டே இருப்பான்.தான் இதுக்கு முன்னாடி ஒருமுறை அப்பிடி சாப்பிட்டு இருப்பதாகவும் சொல்லுவான். கடைசியில் முதலாளி வீட்டு சாப்பாடு கிடைக்காமல் போக, குய்யன் ஏங்கி அழுவான். அவன் சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு அழுவது கொஞ்சம் நம்மையும் 'அசைத்து' பார்க்கும்.நமக்கு தினம் கிடைக்கும் சாப்பாடு சிலருக்கு இன்னும் கனவாகவே இருக்கிறது என்கிற உண்மை முகத்தில் 'சடார்' எனஅடிக்கும் இடம் இது.


உண்மைகள் அம்மனமானவை. அவைகள் எப்போதும் நம்மை சங்கடப்படுத்தும்.ஏழாம் உலகம் அதே போன்ற அனுபவத்தை தான் நமக்கு கொடுக்கும். படித்து முடித்தவுடன் 'கரண்ட் பாதி நேரம் இருக்கிறதே இல்லை', 'ஆபீஸ்ல உயிர வாங்குரானுங்க', 'இதே தோசையே எத்தன நாளைக்கு சாப்புடுறது' போன்ற புலம்பல்களை எல்லாம் கண்டிப்பாய் குறைத்துக்கொள்வோம். வானத்தை அன்னாந்து பார்த்து ஏங்கிக்கொண்டிருப்பவர்களை ,நமக்கு கீழே நசுங்கிகிடக்கும் உலகத்தை பார்க்க வைக்கிறார்கள்.

புதன், 11 ஆகஸ்ட், 2010

நடுநிசி நாய்கள்'ஹே..உண்மைய சொல்லு .... நீ தான நகட்டுற...'

'உஷா எரும..நீதான் பொய் சொல்ற..நீயே மூவ் பண்ணிட்டு என்னைய சொல்றியா..'

'என்னடி மதி சொல்ற..' எனக் கேட்ட உஷா முகத்தில் வியர்வை துளிகள் படர்ந்திருந்தன. அவர்கள் முன் ஒரு பெரிய அட்டை இருந்தது. அதில் ஆங்கில எழுத்துக்கள், எண்கள் போன்றவை ஒரு வட்டத்திற்குள் எழுதப்பட்டிருந்தன. அந்த அட்டையில் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தில் மதி,உஷா இருவரும் வலது கை ஆள்காட்டி விரலை வைத்துக்கொண்டே எதிரெதிரே அமர்ந்திருக்கிறார்கள். உஷாவும்,மதியும் நாணயத்தையே பார்த்தபடி இருந்தனர்.இருவரும் சகோதரிகள் என பார்த்தவர் சொல்லிவிடும் தோற்றமே பெற்றிருந்தனர். 'ஆவிகளுடன் பேசுவது எப்படி' என்ற திகில் விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தனர். அறையின் அத்தனை ஜன்னல்களும் மூடப்பட்டு இருந்தது. நாம் கேட்கும் கேள்விக்கு ஆவிகள் நாணயத்தை நகர்த்தி கட்டத்தில் உள்ள எழுத்துக்கள் மூலம் பதில் சொல்வது அந்த ஆட்டத்தின் சாராம்சம்.நாணயம் மெல்லமாய் வலப்புரமாய் ஊர்ந்து கொண்டிருந்தது. மதி முகத்தில் பயம் பரவி இருந்தது.

'போடீ..நீ தான் பயமுறுத்துற... நான் வரல..' என சொல்லிக்கொண்டே மதி அறையை விட்டு வெளியே ஓடினாள்.

'நா ஒன்னும் பண்ணலடீ.. 'வழிஅனுப்புதல்' பண்ணனும் மதி.. நில்லுடீ..'

'போடி லூசு'

உஷாவும் கொஞ்சம் பயந்து அந்த அறையிலிருந்து வெளியே வந்தாள்.வீட்டின் முகப்பில் இருந்த கடிகாரத்தில் மணி 7.30 என காட்டிக்கொண்டிருந்தது. அடுப்பறையில் கேட்கும் விசில் சத்தம் தவிர காலை வேளை என்பதற்கான அறிகுறி அந்த வீட்டில் தெரியவில்லை.
கோமதி காபி டம்ளர்களை கையில் வைத்தபடியே அடுப்பறையில் இருந்து வந்தாள். 'காலங்காத்தால பரணி ரூம்ல என்னடி பண்ணிக்கிட்டிருக்கீங்க??' எனகேட்டாள். 'நானும் மதியும் படிச்சிட்டு இருந்தோம்மா' என்றாள் உஷா. மதி கண் சிமிட்டி உஷாவை பார்த்து சிரித்தாள்.

கோமதி ''நீ காலைல உட்காந்து படிச்சேன்னு அந்த ஈஸ்வரன் சொன்னாலும் நா நம்ப மாட்டேன்டீ.. எந்நேரம் பாரு ஒரே டிவி, விளையாட்டு... உங்களை சொல்லி என்ன செய்ய, மூத்தவளே அப்படித்தான் இருக்கா..போய் குளிங்கடீ ஸ்கூல் பஸ் வந்துரப்போகுது...''

மதி சிரித்துக்கொண்டே வந்து அம்மாவை தலையால் முட்டினாள்.கோமதி அவளை விளையாட்டாய் பின்புறம் தட்டினாள். மாடியில் மூத்தவள் பரணியின் அறையில் ஜன்னல் காற்றுக்கு அடிக்கும் சத்தம் கேட்டது. உஷா மேலே ஒருமுறை பார்த்துக்கொண்டு எச்சிலை விழுங்கிக்கொண்டாள். பள்ளிக்கு கிளம்பினாள்.

மாலை பள்ளி முடிந்து அனுவிடம் பேசிக்கொண்டே வந்தாள் உஷா. 'உனக்கு நேத்தே மூனு தடவ சொன்னேன்.. 'வழி அனுப்புதல்' பண்ணலேனா ஆவிகள் போகாது..வீட்டுக்குள்ளேயே தான் இருக்கும்'. உஷாவை பார்த்து அனு ரகசியமான குரலில் சொல்லிக்கொண்டு இருந்தாள். உஷா குழப்பமாய் அவளை பார்த்து ,'அதுக நம்ம வீட்ல இன்னுமும் இருக்கானு நாம எப்டி தெரிஞ்சிக்கிறது' . என்றாள்.'அதுக இருந்ததுனா நாய்களுக்கு தெரியும். கொலச்சிகிட்டே இருக்கும் விடாம..'

உஷா Tution முடித்து வீடு வந்து சேர மணி இரவு ஏழாகியிருந்தது..மேலே பரணி அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மதி ஹாலில் உட்காந்திருந்தாள். பேப்பரில் பென்சிலை வைத்து எதையோ வரைய முற்பட்டுக்கொண்டிருந்தாள். உஷாவை பார்த்தவுடன் ,'உஷாக்கா.. எப்டி இருக்கு 'யானை' ??' என பேப்பரை திருப்பி காண்பித்தாள்.

'ஓ..இது யானையா ??..எதுக்கும் கீழ யானைனு எழுதீறு...'

உஷாவும் மதியும் கொஞ்ச நேரம் தலை மயிரை பிடித்து சண்டை போட்டனர். டிவி,சாப்பாடு முடித்து விட்டு இருவருக்கும் படுக்கைக்கு செல்ல மணி பத்து ஆகியிருந்தது. மேலே பரணியின் அறையில் விளக்கு அணைந்திருந்தது. 'பரணிக்கு எதோ தலைவலியாம்' என அம்மா சொல்லியிருந்தாள். இருவரும் கொஞ்ச நேரத்திலே தூங்கிப்போயினர்.பக்கத்து வீட்டு நாய் குலைக்கும் சத்தம் கேட்டு உஷா விழித்தாள். ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். நாய் இவர்கள் வீட்டை நோக்கித்தான் குலைத்துக்கொண்டிருந்தது. காலையில் அனு சொன்னதெல்லாம் ஞாபகம் வந்தது. வேகமாய் திரும்பவும் படுக்கைக்கு வந்து மூஞ்சு வரை பெட்ஷீட்டை மூடிக்கொண்டு படுத்துவிட்டாள்.அப்போதுதான் அந்த சத்தம் மாடியில் இருந்து வந்தது 'ஆ...' வென காற்றைகிழித்து கொண்டு வந்த அந்த சத்தம் வீடு முழுக்க எதிரொலித்தது..கோமதி எழுந்து விட்டாள். உஷாவும் அறையிலிருந்து வெளியே வந்து விட்டாள்.. 'என்னடி..ஆச்சு இவளுக்கு... கண்ட கண்ட கதை புஸ்தகத்த படிக்க வேண்டியது..அப்புறம் கனா கண்டு கத்துறது' என சொல்லிக்கொண்டே மாடியில் இருக்கும் பரணியின் அறை நோக்கி நடந்தாள். உஷாவும் அம்மாவின் பின்னாலேயே நடந்தாள். அவளுக்கு அடி வயிற்றில் பய உருண்டை உருண்டுகொண்டிருந்தது.கதவை திறந்து கோமதி முதலில் அறைக்குள் சென்றாள்.

அறை முழுக்க இருளாய் இருந்தது. 'டக்..டக்' என கட்டிலில் இருந்து சத்தம் வந்து கொண்டிருந்தது.கோமதி விளக்கை போட்டாள். பரணி உட்கார்ந்து கொண்டு அந்த கட்டிலில் தலையை முட்டிக்கொண்டு இருந்தாள்.கோமதி மிரண்டு போய் ,'பரணிம்மா..என்னடா ஆச்சு ' என சொல்லிக்கொண்டே அவளருகே போய் கையை பிடித்தாள்.பரணி முகத்தை திருப்பினாள். அவளின் அந்த பெரிய கண்ணில் கருவிழியே தெரியவில்லை.கண் முழுக்க வெள்ளையாய் இருந்தது.வாயின் ஒரு பக்கம் உமிழ் நீர் ஒழுகிகொண்டே இருந்தது. கோமதி பயந்து போய் ரெண்டு அடி பின்னே நகர்ந்து விட்டாள். பின்னாலே பார்த்துக்கொண்டே இருந்த உஷாவும் 'வீல்' என கத்திவிட்டாள். பரணியின் முக்கத்தில் நிறைய 'மூர்க்கம்' தெரிந்தது. அவள் லேசாய் உறுமுவது போல் சத்தம் கேட்டது. நைட்டியில்,தலைவிரி கோலத்துடன் அந்த உருவம் யாரையும் மிரட்டிவிடும் என்றே இருந்தது. 'உஷா பக்கத்துக்கு வீட்ல ராதாக்காவை கூப்டு வா...' என கோமதி உஷாவை பார்த்து கத்தினாள்.

கோமதி பரணியின் அருகே சென்று தலையில் கைவைத்தாள். அவள் அதை பொருட்படுத்தாமல் தலையை வைத்து கட்டிலில் மீண்டும் முட்ட முற்பட்டாள். கோமதிக்கு அழுகை பீறிட்டது. 'இவரு வேற இந்த நேரம் பாத்து ஜெய்ப்பூர்க்கு போய் தொலைஞ்சிட்டார்..'
என புலம்பிக்கொண்டே வாசலை எதிர்பார்த்தாள். பரணி 'உர்..உர்' என இப்போது அதிக சத்தத்துடன் கத்திக்கொண்டிருந்தாள்.தன் கூரிய நகங்களால் அவள் கைகளில் அவளே பரண்டினாள். சுண்ணாம்பு சுவற்றில் நகத்தை வைத்து கீறினாள். கோமதியால் அந்த அசுர பலம்கொண்ட கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. நல்லவேளையாய் 'ராதாக்கா' வந்து சேர்ந்தாள். பரணியின் அந்த தோற்றத்தை பார்த்து கொஞ்சம் விக்கித்து நின்றாலும்,சுதாரித்துக்கொண்டு பரணியின் அருகே போனாள். கையில் வைத்திருந்த திருநீறை பரணியின் மேல் எறிந்தாள். உர் என உறுமிய அவளை கன்னத்தில் ரெண்டு முறை பளார் என விளாசினாள் ராதாக்கா. பரணி மயங்கி விழுந்தாள். உஷாவுக்கும் கண்கள் கலங்கியிருந்தது. வேப்பிலை,திருநீர் போன்றவற்றை தண்ணீரில் கலக்கி பரணிக்கு கொடுத்தாள்.

ராதாக்கா கோமதியை பார்த்து 'எதோ கெட்டதுக நடமாட்டமா தெரியுது' எனச்சொன்னாள். வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல்களையும் திறந்தார்கள். வீடு முழுக்க சாம்பிராணி புகை போட்டார்கள். உஷா கவனித்து இருந்தாள். பக்கத்து வீட்டு நாய் இப்போது அமைதி கொண்டிருந்தது. கொஞ்சம் அவளுக்கு நிம்மதியாய் இருந்தது. பரணி லேசாய் முழித்தாள். கண்கள் பழைய நிலைக்கு வந்திருந்தன. ஒரு முறை எல்லாரையும் பார்த்து விட்டு 'ரொம்ப Tiredஆ இருக்கும்மா' எனச்சொல்லிவிட்டு தூங்கிப்போனாள். அன்று இரவு எல்லாரும் ஹாலிலேயே படுத்துக்கொண்டார்கள். உஷாவுக்கும் கோமதிக்கும் நடுவே பரணி படுத்திருந்தாள். மதி கைசூப்பிக்கொண்டே கோமதியை கட்டிக்கொண்டு தூங்கினாள். ' நாளைக்கு முதல் வேளையாய் யாருக்கும் தெரியாம..அந்த 'வழி அனுப்புதல்' ஸ்லோகத்தை சொல்லி அந்த அட்டையை தூக்கி எரிந்திடனும்' என உஷா எண்ணிக்கொண்டாள். எல்லாரும் தூங்கிபோனார்கள். மணி ரெண்டு ஆகியிருந்தது.

பக்கத்துக்கு வீட்டு நாய் மீண்டும் முழு வீரியத்துடன் குலைக்கும் சத்தம் கேட்டது. உஷா விழித்து விட்டாள். உடல் அவளுக்கு நடுங்க தொடங்கியது. மெல்லமாய் இடது பக்கம் திரும்பி பரணியை பார்த்தாள். அவள் முழித்து இருந்தாள். அவளின் அந்த முட்டை கண்கள் மேலே விட்டத்தை பார்த்த படி இருந்தது.

****************************************************************************************
திகில்,அமானுஷ்ய பிரியர்களுக்கு கதை இத்துடன் முடிந்து விட்டது. மற்றவர்களுக்கு இன்னும் ரெண்டு வரி பாக்கி இருக்கிறது.தொடருங்கள்.

********************************************************************************************


அவளின் அந்த முட்டை கண்கள் மேலே விட்டத்தை பார்த்த படி இருந்தது.உதடு லேசாய் சிரிப்பது போல் இருந்தது. உஷா பெட்ஷீட்டால் முகத்தை மூடிக்கொண்டாள்.பலமாய் அடித்த காற்றில் காலண்டரில் நேற்றைய தேதி ஆடிக்கொண்டே இருந்தது. மார்ச் 31.
வியாழன், 22 ஜூலை, 2010

தமிழர்க்கோர் கடிதம்


நேற்று மாலை பொழுதுபோகலையேனு மாடிப்பக்கம் போனேன். லேசான தூறல்,குளிரிந்த காற்று, வானம் கொஞ்சம் உறுமிக்கொண்டு வேறு இருந்தது..அப்போது தான் மேலே அதை பார்த்தேன்.முதலில் பறவை என்று தான் நினைத்தேன். தாழ்வாக கீழே என்னை நோக்கி பறந்து வரவும் தான் காகிதம் என்று தெரிந்ததது. கையில் அந்த காகிதம் வந்து அகஸ்மாத்தாய் படர்ந்தது. அக்கம்பக்கம் பார்த்தேன் யாரும் இருப்பதாய் தெரியவில்லை. அது ஒரு கடிதம். படிக்க ஆரம்பித்தேன்.

அன்புள்ள தமிழர்க்கு,

வணக்கம். நலமாய் உள்ளீரா?? தமிழ் செம்மொழியானதை ஒட்டி மகிழ்ச்சியில் திளைத்து போயிருப்பீர்கள். அதுவும் செம்மொழி மாநாடெல்லாம் நடத்தி முடித்து ,ஒரு வார விடுப்பெல்லாம் பெற்று கொஞ்சம் களைத்தும் போயிருப்பீர்கள்.பக்கத்து தீவில் இதே செம்மொழியை பேசுவோர் கருவறுக்க பட்டார்களே?? எனக்கேட்டால் ,'அரசியல் பேசாதீர்' என்பீர்கள். உங்களை பொருத்தவரை செய்திதாள்களில் பிணக்குவியல்களை பார்த்து 'உச்' கொட்டுவதே உச்சகட்ட மனிதாபிமானம். பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்... உங்களுக்கு நித்யானந்தரை திட்டவும்,நயன்தாராவின் காதலை பற்றி பேசவுமே நேரம் சரியாய் இருக்கிறது. அதுவம் உங்க நேரமின்மை காரணமாக ஒட்டுச்சாவடிக்கு உங்களை வரவைக்க கட்சிகள் கூட 'ஆயிரங்களை' தள்ள வேண்டியிருக்கிறது.தெருவில் காய்கறிகாரனிடம் உயிரைக்கொடுத்து பேரம் பேசுவீர்கள். ஆனால் 'Multiplex'களில் ஒரு சமோசாவை நூறு ரூபாய்க்கு பெருமையாய் வாங்கி சாப்பிடுவீர்கள். பாரதியார் பாடல்களை பரீட்சைகளில் மதிப்பெண் பெறவும்,மேடைகளில் பேசும்போதும் உபயோகப்படுத்துவீர்கள்.வள்ளுவருக்கு சிலை வைப்பீர்கள். குஷ்புவுக்கு கோயிலே கட்டுவீர்கள். தமிழில் 'ழ'கரத்தை தப்பாக உச்சரித்து பெருமையாய் சிரிப்பீர்கள்,எவராவுது ஆங்கிலத்தில் is,was களில் சொதப்பினால் 'பட்டிக்காட்டான்' என்று கேலி பேசுவீர்கள். இந்தியா ஒலிம்பிக்கில் ஆப்பு வாங்குவதை பார்த்து கோபப்படுவீர்கள்.ஆனால் உங்கள் பிள்ளைகளை 'விளையாட போன காலை உடைச்சிருவேன்' னு அதட்டுவீர்கள்.உங்கள் வீட்டுக்குழாய்களில் தண்ணீர் வரலேனாலும் எல்லாம் இந்த 'I.T'னால் தான் என குறைப்பட்டுக்கொல்வீர்கள்.தெருவிளக்கு நின்று போனால் கூட போய் புகார் செய்யமாட்டீர்கள்,ஆனால் தி.மு.க வும் அ.தி.மு.க வும் நாட்டை சீரழித்து விட்டதாக வாய் கிழிய பேசுவீர்கள். கடவுளே உங்கள் தொகுதியில் போட்டியிட்டாலும் உங்க ஜாதிக்காரருக்குத்தான் தான் ஓட்டுபோடுவீர்கள்.

'சுறா'களையும்,'அசல்'களையும் கேலி செய்து குறுஞ்செய்திகளும்,மின்னஞ்சல்களும் அனுப்புவீர்கள். 'அப்போ ஏம்பா 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'அன்பே சிவம்' லாம் ஓடல' னு கேட்டா பதில் சொல்ல மாட்டீர்கள். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் நடந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 'Vuvuzela' என்ற வாத்திய கருவி காதுகளுக்கு எரிச்சல் தருவதாய் உலகமே கொக்கரித்தது.அது எங்கள் பாரம்பரியம் அதை தடை செய்ய முடியாது என ஆப்பிரிக்கர்கள் உறுதியாய் நின்றார்கள். கடைசியில் உலகம் முழுக்க அந்த வாத்தியம் பிரபலமானது தனிக்கதை. ஆனால் நீங்களோ உங்களின் வேட்டி,சேலை,மண் குவளைகள்,சிலம்பாட்டம்,நாட்டுப்புற பாட்டுக்கள்,சிற்பங்கள் என எல்லாத்திற்கும் இறுதி அஞ்சலி செலுத்தி நிறைய நாட்கள் ஆகிறது.

உங்கள் பிள்ளைகளை அடுத்த வீட்டு பிள்ளைகளுடன் ஒப்பிட்டு கொண்டே இருப்பீர்கள். இளநீர் உங்கள் தொண்டைகளில் இறங்குவதில்லை,கோக்களும் பெப்சிகளும் பெருமை பொங்க பருகுவீர்கள். பொழுது போகாத போது யாருக்காவுது 'டாக்டர்' பட்டம் கொடுப்பீர்கள்.கண்ணகி சிலையை வைத்து கபடி விளையாடுவீர்கள். யார் 'எதுகை.மோனையில்' பேசினாலும் கை தட்டுவீர்கள். உங்களில் பாதி பேருக்கு தமிழ்த்தாய் வாழ்த்தே தெரியாது.வந்தாரை வாழ வைப்பீர்கள்,இங்கேயே இருப்பவர்களுக்கு ஆப்பு வைப்பீர்கள். யாராவுது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பட்சத்திலாவுது புறநானூற்றையும்,தொல்காப்பியத்தையும் படித்து உங்கள் வரலாற்றையும்,பண்பாட்டையும் தெரிந்து கொள்ளுங்கள்.

கடிதம் படித்து முடித்தவுடன் எனக்கு கோபம் தலைக்கேறியது.நரம்பு புடைத்தது.கண்கள் சிவந்தது. இருப்பினும் அந்த நேரத்தில் 'தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல்' தொலைகாட்சியில் நடந்து கொண்டிருந்ததால் வீட்டை நோக்கி ஓடினேன்.சனி, 26 ஜூன், 2010

அனத்தல்கள்


மொட்டைமாடி நட்சத்திரத்தை
எண்ணும் போது
கணித பயம் வருவதில்லை!!


இவ்வளவு இறுக்கமாய் உடை அணிகிறார்கள்
எத்துனை புழுக்கம் எங்களுக்கு !!!
பெயர் முதற்கொண்டு தயார்
இன்னும் பிறக்காத என் மகளுக்கு !!!சிலருக்கு பெரிய ஹோண்டா கார்
சிலருக்கு அழகான காதலி
சிலருக்கு அடுத்த வேலை சோறு ..

தேவைகளிலும் எவ்வளவு பேதம் நம்முள் !!!
கடையில் அவ்வளவு நஷ்டம்
இருந்தும் சிரிக்கிறது
ஜவுளி கடை பொம்மை !!!

பீச்சில் சிலர் காதலிக்கிறார்கள்
குழந்தைகள் மணல் வீடு கட்டுகிறார்கள்
இரண்டுக்கும் பெரிதாய் வித்யாசம் இல்லை...

வெள்ளி, 11 ஜூன், 2010

Corporate திருவிளையாடல் (பகுதி 2)


நட்டுவிற்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. பெரியவர் கொடுத்த ‘Code’ அவனுடைய ‘Pen Drive’ இல் இருந்தது. மீண்டும் ஒருமுறை அதை ‘Run’ பண்ணி பார்த்துக்கொண்டான். எல்லாமே சரியாய் இருப்பதுபோல் பட்டது. அவனே ‘Develop’ செய்தது போல் கையை மடக்கி ‘Yes’ என சொல்லிக்கொண்டான். ‘அவருக்கு எப்படி அவனுடைய ‘Project’ விஷயங்கள் தெரிந்தன?? எப்படி இவ்வளவு சீக்கிரம் தவறுகளை சரி செய்ய முடிந்தது??’ போன்ற நியாயமான கேள்விகள் நட்டுவிடம் தோன்றவில்லை. நட்டு அதே சம்பளத்தையே மூன்று வருடமாய் வாங்கிக் கொண்டிருப்பதிற்கு இதுவும் கூட காரணமாய் இருக்கலாம்.

குமாரிடம் சொல்லவேண்டாம் என முடிவு செய்து,அடுத்த நாள் மதிய வேளையில் ‘Project Manager’ ஷியாமிடம் சென்றான்.

‘வாயா.. நட்ஸ்... என்ன தனியா வந்திருக்கியே...எப்பவுமே உங்கூடவே சுத்துற ‘வேதாளம்’ வரலயா?? ‘


நட்டுவிற்கு எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. எச்சிலை விழுங்கிக்கொண்டு பேச ஆரம்பித்தான்.


‘இல்ல ஷியாம்... வந்து நா அந்த Java Module ஐ சரி பண்ணிட்டேன்..அத உங்க கிட்ட சொல்லலாம்னு.......’


‘ A.C ல ரொம்ப சத்தம் வருதில்ல....இப்போ கூட பாரு நீ எதோ சொல்ற..என்காதுல ‘Java Module’ ஐ சரி பண்ணிட்டேன்னு விழுகுது....’

நட்டு கொஞ்சம் கடுப்பானான்.

‘அலோ ஷியாம்... நான் அதை சரி பண்ணிட்டேன்.... வேணும்னா செக் பண்ணி பாருங்க..’

ஷியாமும் கொஞ்சம் சீரியஸ் ஆனார். ‘நட்டு Calm down. relax. ஒரு தடவ நீ எழுதின Code ஐ நாம Server ல போட்டப்போ , ‘குப்பை கூளங்களை உள்ளே போடாதீர்’ னு Message வந்துச்சே அது ஞாபகம் இருக்கா?’ என கேட்டு மெலிதாய் சிரித்தார்.

அது ஆயிரந்தா உண்மையாய் இருந்தாலும் நட்டுவிற்கு கோபம் வரத்தான் செய்தது.அந்த இடத்திலிருந்து கிளம்ப எத்தனித்தான். ஷியாம் அவன் தோளை பிடித்தார்.

‘இருய்யா கோவிக்காதே... சரி உன்னோட ‘Code’ ஐ ஓட்டு.... பாப்போம்.’
என நக்கலாய் சொல்லி கண்ணடித்தார்.
நட்டு தன்னுடைய ‘Code’ ஐ ‘Execute’ செய்தான். எல்லாமே சரியாய் இருந்தது. Result அசுரத்தனமாய் படு வேகமாய் வந்தது. ஷியாம் மிரண்டு போய் பார்த்துக்கொண்டிருந்தார்.கண்ணாடியை வேறு கழற்றினார். ஆச்சர்யத்தை வெளிப்படுத்த தமிழகத்தில் பின்பற்றப்படும் பாரம்பர்ய முறை அதுதானே!!!

‘ ஹே... நட்ராஜ்... என்னய்யா இது....எப்டி பண்ண...’ என கேட்டுக்கொண்டே நட்டுவை கட்டிப்பிடித்தார்.விஷயம் அரைமணிநேரத்தில் அலுவலகம் முழுவதும் பரவியது. எல்லோரும் சொல்லிவைத்தார் போல் ‘நம்ம நட்டு வா ??’ என கேட்டுகொண்டார்கள்.

அதுவரை அவனிடம் பேசியே இருக்காத சுனிதா வந்தாள். ‘நட்ஸ்...கிரேட்..Office முழுக்க உன் பேச்சு தான்...ஆமா எதை Use பண்ணின...Servletடா... Strutsஸா?? என்றாள்

‘Keyboard’ என்றான்.
‘You Naughty!!!..’ என சொல்லி அவன் தலையை குலைத்து விட்டு சென்றாள்.

நட்டுவிற்கு எல்லாம் கனவு போல் தெரிந்தது. எல்லாம் சரியாய் நடந்தால் குலதெய்வம் கோவிலில் மொட்டயடிப்பதாய் வேண்டிக்கொண்டான். விஷயம் கேள்விப்பட்டு குமார் கூட வந்தான்.

‘ மச்சி..நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்த?? எதுவும் ஆவி கீவி உனக்குள்ள இறங்கிருச்சா??’


நட்டு புன்னகைத்தான். அதற்குள்ளாகவே நட்டுவை ஷியாம் கூப்பிட்டனுப்ப... அவன் Meeting Hall போனான்.

‘நட்ஸ்..Congrats.. எல்லாரும் உங்க Codeஐ பாத்து இம்ப்ரெஸ் ஆகிட்டாங்க...நம்ம mangement இப்பவே உங்களுக்கு Compliment கொடுக்கணும்னு முடிவு பண்ணி...’ என சொல்லிக்கொண்டே டேபிளில் இருந்த கவரை எடுத்தார்.

நட்டுவின் காதில் PULSAR சத்தம் கேட்டது.

‘ஒரு நிமிஷம்..’ என ஒரு கரகரப்பான குரல் கேட்டது.
வெங்கி நின்று கொண்டிருந்தான்.அந்த டீமின் ஆஸ்தான ‘டெஸ்டர்’.

‘நா அந்த Code ஐ டெஸ்ட் பண்ணனும்.’ என்றான்.

‘அதுவும் சரி தான்..வெங்கி நீயும் ஒரு தடவ பாத்திரு...ஆனா எல்லாம் பக்கவா தான் இருக்கு...’ என சொன்னார் ஷியாம்.

அந்த Code ஐ ஆராய்ந்தான் வெங்கி. நட்டுவின் அடி வயிற்றில் IPL நடந்துகொண்டிருந்தது.

‘இதுல ஒரு தப்பு இருக்கு ‘ என உரக்க சொன்னான் வெங்கி. நட்டுவிற்கு வியர்க்க தொடங்கியது.
‘ இந்த Window வை close பண்ணினா உடனே க்ளோஸ் ஆகுது... க்ளோஸ் பண்ணவா வேணாமானு ஒரு Message box வரணுமே’ என்றான்

நட்டு வெறுப்பாகி ,’ஏங்க.. விட்டா காபி வேணுமா.. டீ வேணுமான்னு கேக்க சொல்வீங்க போல... எவ்ளோ BUG இருக்கோ அவ்வளவு குறைச்சிட்டு மிச்ச காச கொடுங்க பாஸ்...’ என்றான்

‘This is not the place to crack stupid jokes...’ என கோபமாய் சொன்னான் வெங்கி. அந்த இடமே கலேபரமானது.

‘அந்த ‘Code’ ஐ அவர்கிட்ட கொடுத்தவனே நான் தான் ‘ என சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார் சுந்தராஜன். எல்லோரும் எழுந்தார்கள்.அவர் தான் அந்த Corporate அலுவலகத்தின் CEO. நட்டுவிற்கு Code கொடுத்தவரும் இவரே. கதையில் இப்படி ஒரு ‘Twist’ஐ நட்டுவும் எதிர்பார்க்கவில்லை.

கொஞ்ச நேரம் அந்த அறையை அமைதி ‘Occupy’ செய்தது.
‘CEO வே கொடுத்தாலும் Codeஇல் இருக்கும் குற்றம் குற்றமே!!!’ என்றான் வெங்கி.

‘ அதெல்லாம் இருக்கட்டும் வெங்கி... நீங்க இன்ஜினியரிங் முடிச்சே ரெண்டு வருஷந்தான் ஆகுது...ஆனா நாலு வருஷம் ‘Experience’ னு காமிச்சு நம்ம ஆபிஸ்ல வேலைக்கு சேந்திருகீங்க...அந்த ‘குற்றத்தை’ நேத்து தான் கண்டுபிடிச்சோம். நாளைல இருந்து ஆபிஸ் பக்கம் வந்தீங்கனா உங்க காதை கடிச்சு துப்பிருவேன்...’ என சுந்தராஜன் சொன்னார்.

வெங்கி அதிர்ச்சியில் உறைந்தான்.ஷியாம் தன பங்கிற்கு எதாவுது பேச வேண்டுமென்று எண்ணி ஆரம்பித்தார்.

‘ கிரேட் சார் நீங்க.... யாராலையுமே சரி செய்ய முடியாத Codeஐ நீங்க எப்டி சரி பண்ணீங்க சார் ‘
சுந்தராஜன் குமுற தொடங்கினார்.

‘ Mr.Shyam எதாவுது அசிங்கமா சொல்லிறபோறேன். அந்த Code மேலே ‘முருகன் துணை’ னு எவனோ அடிச்சிருக்கான்... அத எடுத்து விட்டுட்டு ‘Run’ பண்ணினா சரியா வொர்க் ஆச்சு... இது தெரியாம இங்க இவ்வளவு நாளா எண்ணத்தையா ‘PLUCK’ பண்ணிட்டு இருந்தீங்க.... இந்த லட்சணத்துல ‘Appraisal’ கம்மினு பகுமானம் வேற...தூ...’

பேசிவிட்டு சுந்தராஜன் மும்பை ஆபிஸ்க்கு சென்று விட்டார்.

அடுத்த நாள் காலையில் ஷ்யாம் டீம் மீட்டிங்கில் பேசி கொண்டிருந்தார். ‘Guys we have sucessfully crossed our hurdles in our last project. we will be facing new challenges in the upcoming project...’

அந்த அலுவலகம் அடுத்த திருவிளையாடலுக்கு தயாராகிக்கொண்டிருந்தது!!!!************************புதன், 9 ஜூன், 2010

Corporate திருவிளையாடல் (பகுதி 1)நிறைய பயணங்கள், இடைவிடாத அலுவல்(நம்புங்க..) கூடவே சோம்பேறித்தனமும் சேர்ந்துகிட்டதால எழுத முடியாம போச்சு.உன்னோட 'Blog' நூலாம்படை அடஞ்சிருச்சுனு சில விசமிகள் கேலி செஞ்சதால இந்த பதிவு எழுதி 're entry' கொடுக்கிறேன். நீங்க சந்தோசமோ/வருத்தமோ பட்டுக்கோங்க!!! Let me attack!!!!


எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் மாதத்தின் கடைசி தேதிகளில் வரண்டு கிடக்கும் 'Corporate' கனவான்களுக்கு இந்த புனைவு சமர்ப்பணம் .


Corporate திருவிளையாடல்(பகுதி 1)

அலுவலகம் பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்தது. எல்லோரும் கணினியை முறைத்துக்கொண்டிருந்தார்கள். வேகமாய் தன் இடத்திலிருந்து எழுந்து குமாரின் இடத்திற்கு போனான் நட்டு (எ) நடராஜ்.

'
டேய் குமாரு ..ஏதோ டீம் மீட்டிங்னு மெயில் வந்துச்சு பாத்தியா... என்னா விஷயம் டா... '


' ஒரு விசயமும் இருக்காது டா நட்டு... என்ன பெருசா சொல்லுவாங்க ... ' இது வரைக்கும் நாம புடிங்கின ஆணி எல்லாம் தேவையில்லாத ஆணி ,இனிமேவாவுது ஒழுங்கா வேலை பாப்போம்' னு சொல்லுவாய்ங்க. கண்டபடி அரைமணி நேரம் திட்டிட்டு, கடைசியா 'Thanks for the Cooperation' னு சொல்லி முடிச்சிடுவானுங்க. இதுக்கு ஏன் பயந்து சாகுறே??... சரி வா மீட்டிங்குக்கு போவோம்..'


எல்லோரும் அந்த அறையில் குழுமி இருந்தார்கள். நட்டுவும் குமாரும் வழக்கம்போல பின்னால் நின்று கொண்டார்கள். Project Manager ஷியாம் உள்ளே நுழைந்தார். பேண்டை ஒரு முறை தூக்கிவிட்டுக்கொண்டு பேச தொடங்கினார்.


' உங்களுக்கே தெரியும் இப்போ நம்ம ப்ராஜெக்ட் 'Critical' போய்ட்டு இருக்கு....'

'
அது என்னைக்கு நார்மலா போச்சு' என குமார் தாழ்ந்த குரலில் நட்டுவின் காதில் சொன்னான். நட்டு சோடா உடைக்கும் சத்தத்தில் சிரித்தான். சிலர் திரும்பி பார்த்தார்கள். ஷியாம் தொடர்ந்து பேசினார்.

'அதுனால அந்த 'Java' Module லில் உள்ள பிரிச்சனைய 'Solve' பண்றவுங்களுக்கு ஒரு லட்ச ரூபா bonus னு management ல சொல்லிட்டாங்க.. so அது சம்பந்தமான விசயங்கள உங்களுக்கு மெயில் பண்றேன். Guys All the Best....'


கொஞ்ச நேரம் அந்த அறையில் சிறு சலனம் நிலவியது. எல்லோரும் பிற்பாடு கலைந்து அவரவர் இடம் போய் சேர்ந்தனர்.நட்டு இன்னும் வாயை மூடாமல் இருந்தான். நட்டுவும்,குமாரும் கேன்டீன் போனார்கள்.


‘ என்னடா நட்டு ..வர வர ஐ.டீ கம்பெனிலாம் நாடக கம்பெனி யா மாறிட்டானுங்களா.. பரிசுத்தொகைலாம் அறிவிக்குறாயிங்க...’


‘ டேய் மச்சி... ஒரு லட்ச ரூபா டா... கிடைச்சா ஒரு ‘PULSAR’ வாங்கிடலாம் டா...’


‘அதுக்கு நெறைய நாள் பெட்ரோலும் போடலாம் டா நட்டு...’


நட்டுவுக்கு ஒரு லட்ச ரூபாய் மூளையை ஆக்கிரமிச்சிருந்தது. வாய்குள்ளேயே ஏதோ முனங்கிகொண்டிருந்தான்.கொஞ்சம் தயக்கத்துடன் குமாரிடம் பேசத்தொடங்கினான்.


‘குமாரு..நா அந்த Java Module try பண்ணலாம்னு நெனைக்குறேன்’

‘ ஹஹஹஹா...மச்சி நீ Java ‘Hello world’ program எழுதினாலே அதுல நூறு தப்பு வரும்...ஏன்டா இப்படி காமடி பண்ற...நாமெல்லாம் இன்னும் ஆபிஸ்ல வேலை பாக்குறதே அந்த ஆண்டவன் புண்ணியம் டா...’


‘ வேணும்னா கொஞ்சம் படிச்சு....’ என நட்டு இழுத்தான்.


‘ம்கும்... இதுக்கு மேலே நீ படிச்சு அந்த code ஐ திருத்திறதெல்லாம் கலைஞர் 100 மீட்டர் ரேஸ்ல ஓடி ஜெயக்கிற மாறி..அத மறந்திடு...


அதுமட்டுமில்லாம அந்த சுரேஷ்லாம் நூறு ரூபா கொடுத்தாலே மூனு நாள் கண் முழிச்சு வேல பாப்பான்..ஒரு லட்சம்னா விடுவானா??...’


குமாருக்கு எதோ போன் கால் வர ஓரமாய் எழுந்து கரை ஒதுங்கினான். நட்டு கையை தலையில் வைத்து தனியாய் உட்காந்து கொண்டான். அந்த நேரம் பார்த்து ஒரு அம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் அங்கு பிரசன்னமானார். ரொம்பவும் அழகாய் உடை அணிந்திருந்தார்.நட்டுவிடம் அவரே பேச தொடங்கினார்.

‘ தம்பி நீங்க பேசிட்டு இருந்ததை கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்’ என்றார் அவர்.

நட்டு கொஞ்சம் ஆச்சர்யமாய் அவரை பார்த்துவிட்டு ,’யார் சார் நீங்க ஒட்டுக்கேட்டதை இவ்வளவு பெருமையா சொல்றீங்க?’

அவர் லேசாய் சிரித்தார். மீசையை ஒருவாறு தடவிக்கொண்டு ‘உனக்கு அந்த ஜாவா ‘Code’ தானே வேணும்!!!’ என்றார்.

நட்டு இன்னும் கொஞ்சம் ஆச்சர்யமாகி ,’ ஆள் பார்க்க எதோ ஜவுளி கடை ஓனர் மாறி இருக்கீங்க... ஜாவா..கீவா னு பேசி என்னையே டபாய்க்ரீங்களா... ‘


பெரியவர் முகம் கொஞ்சம் சிவந்தது. ‘ டேய் தம்பி... நீ பிறக்கிறதுக்கு முன்னாடியே கம்ப்யூட்டர்ல ‘Code’ அடிச்சவன் நான்.. வேணும்னா எதோவுது கேள்வி கேட்டுப்பாரு...’ என்றார்.

‘சவுண்ட ஏத்துனா பயந்திடுவோமா... பாஸ் அப்டி சொன்னா கேள்வி கேக்கமாட்டோம்னு நெனச்சீங்களா... ‘ என சொல்லிக்கொண்டே நட்டு கேள்விகளை அடுக்க தயாரானான். பெரியவரும் ஆவலாய் எதிர்நோக்கினார். அங்கே ஒரு ‘அறிவுப்போர்’ தொடங்கியது.

‘ Apraisal Meeting’ என்பது??

தனியாய் பொய் சொல்வது ‘

‘Conference call’ என்பது??

கூட்டமாய் பொய் சொல்வது’

‘Recession’ வந்தால்??

‘ பாதி பேருக்கு வேலையில்லை’

‘Google’ இல்லையேல்??

‘ மீதி பேருக்கும் வேலையில்லை’


கொஞ்சம் மிரண்டு போய் அந்த பெரியவரை பார்த்துவிட்டு மீண்டும் கேள்விக்கணையை தொடர்ந்தான்.

‘ ‘Tester’ என்பவன்?? ‘

‘ ‘பேனை பெருமாளா’க்குபவன் ‘

‘ ‘Developer’ என்பவன்??

‘ ‘பெருமாளையே பேன் ஆக்குபவன்’


‘K.T’ என்பது ??

‘ ‘தனக்கு தெரியாததை ஊருக்கு தெரியப்படுத்துவது’ ‘‘பிரிக்கமுடியாதது’ ‘

‘Client’ டும்... ‘Escalation’ னும்

‘சேர முடியாதது?’ ‘

‘ நல்லசம்பளமும்... நாமும் ‘‘முதல் தேதில?? ‘

‘ பல்லை காட்டு ..‘கடைசி தேதினா??’

‘ கையை நீட்டு ‘


‘ஐயோ தெய்வமே... நீங்க ஐ.டீ Encyclopedia... உங்களோட ‘Code’ ஐ கொண்டுபோய் கொடுக்கிறேன்... வர்ற ஒரு லட்ச ரூபால பதினஞ்சாயிரம் மட்டும் எனக்கு கொடுங்க போதும்....’ என கண்கலங்கினான் நட்டு.


‘ ‘எல்லா பணமும் உனக்கு தான்..சந்தோசமாய் இரு..’ என்றார்.


‘நெஜமாவா சொல்றீங்க... அப்டி மட்டும் நடந்து நான் பல்சர் வாங்கினா அதுக்கு உங்க பேரை வைக்குறேன் சார்...’ என்றான் நட்டு.


சொல்லிவிட்டு நட்டு சந்தோசமாய் சிரித்தான். அவன் சிரிப்பு நிறைய நேரம் நீடிக்கவில்லை!!!!தொடரும்!!!! (அடுத்த பகுதியில் முற்றும்!!!)