திங்கள், 15 பிப்ரவரி, 2010

சாதம்


--
the white rice


我们的团体有一位主席,两位副主席 体有一位主席

மேலே இருக்கும் சொற்றொடரை பார்த்து தலை சொரிகிறீர்களா?? இதைப் போலவே சமையல் என்பது எனக்கு இன்றுவரை புரியாத மொழி. யாராவது என்னிடம் வந்து சாம்பாரில் என்னென்ன மூலப்பொருட்கள் உள்ளது என எழுது அல்லது மூன்றாவது மாடியில் இருந்து குதி எனச்சொன்னால் நான் பின்னதையே தேர்ந்தெடுப்பேன். எனக்கு ருசி சார்ந்த விசயங்களிலும் ஞானம் போதாது தான் .ஏன்.. ரொம்ப நாள் வரை காபிக்கும் டீக்கும் வித்யாசம் கண்டுபிடிக்க தெரியாது,இவனுக்கு நாக்கு என்று ஒன்று உள்ளதா என நண்பர்கள் பல நேரங்களில் சந்தேகிப்பார்கள்.சமையலில் இருந்து இது வரை தப்பி வந்தாலும் ,காலம் இப்போது கையில் கட்டையுடன் 'இப்ப என்ன செய்யுவே??' என என்னைப்பார்த்து வக்கணம் காட்டுகிறது. வேறு வழியே இல்லாத நிலையில் சமைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

நாமெல்லாம் ஒன்னா சமைச்சு சாப்பிடுவோமா?? என ஒரே தளத்தில் தங்கியிருக்கும் அலுவலக நண்பர்கள் கேட்டவுடன் முதலில் தலையாட்டியவன்நான் தான். இவன் ரொம்ப ஒற்றுமையான பையனா இருக்கானே எனஎன்னைபார்த்து பலர் பூரித்தனர். பாவம் அவர்களுக்கு நம் வண்ட வாளம்அப்போது தெரிந்திருக்கவில்லை.இங்கே இந்த அகில இந்திய சமையல்கூட்டணியில் இருப்பவர்களை விளக்க வேண்டியது அவசியமாகிறது . முதலாமவர் ஜஸ்வீந்தர் சிங்,இவர் எங்க எல்லாருக்கும் பெரியவர். பாத்ரூம்போவதை தவிர மற்ற அனைத்து விசயங்களையும் இவரை கேட்டுத்தான்செய்வோம்.அடி வயிற்றில் இருந்து தான் பேசுவார். எது ஹிந்தியில் பேசினாலும்ஒருமுறை எனக்காக ஆங்கிலத்தில் சொல்வார். முக்கியமாய் எங்கள் கழகத்தில்கார் வைத்திருக்கும் ஒரே உறுப்பினர் இவர் தான். அடுத்து அபிஷேக் , பழையஹிந்தி ஹீரோ மாறி வாட்ட சாட்டமா இருப்பான். பிராமின பையனாஇருந்தாலும் சிக்கன், மட்டன்,மீன்னு சமைச்சு கொடுக்கும் எங்க குழுவின் கவுச்சிநாயகன்.கடைசியா பியுஷ்- ஒரியா கார ஆளு. மனுஷன் செத்து போயிட்டானானுபயப்புடுற அளவுக்கு மரணத்தூக்கம்
தூங்குவான்.இப்போதைக்கு எனக்கு ஹிந்திகெட்ட வார்த்தைகள் கற்று தரும் புனிதர் இவர் தான்.

முதல் ரெண்டு நாள் எல்லாம் நல்லா தான் போய்ட்டு இருந்தது. நானும் அப்படிஇப்படி பாத்திரம் கழுவி ஓட்டிட்டேன்.நம்ம ஜஸ்வீந்தர் தான் சும்மா இல்லாமமூணாவது நாள் ஆரம்பிச்சார். 'பாவம், நீங்களே எல்லாத்தையும் clean பண்றீங்களே...இன்னைக்கு நான் பண்றேன்... நீங்க வேணும்னா சாதம்பண்ணிடுங்க' அப்டினார். எனக்கு நல்லது பண்ணுவதாய் நினைத்து எங்கள்குழுவுக்கே குழி தோண்டினார்.'இல்ல இருக்கட்டும்' னு நான் சமாளிக்கிறதுக்குள்ள கையில குக்கரை திணிச்சிட்டாங்க.எனக்கு ஒரு மண்ணும் தெரியாது என சொல்ல மீசைஉறுத்தியது.சரி ஒரு கை பாத்திருவோமேனு வைராக்கியமாய் குக்கருடன் என்அறைக்கு நடக்க ஆரம்பித்தேன். உள்ளே மிளகாய்,தக்காளியெல்லாம் போட்டுசிக்கன் சமைத்துக்கொண்டிருந்த பியுஷ், 'இந்த குழம்புக்கு சாதம் வைச்சுசாப்பிட்டோம்னா செம்மையா இருக்கும் டா..எனக்கு இப்பவே பசிக்குது..' எனகண்கள் விரிய சொல்லிக்கொண்டிருந்தான்.எனக்கு ஏனோ அவனை பார்க்கபாவமாய் இருந்தது.

என்
அறைக்குள் வந்தவுடன் குக்கரை திறக்க முற்பட்டேன்.ஒரு மாதிரி சாய்த்துக்கொண்டு மூடியை எடுக்கும் அந்த சூத்திரம் புரிபடவில்லை. இரண்டுநிமிட கடும் போராட்டத்திற்குபின் வெற்றி கண்டேன். யாரோ கண்டபடி சிரிக்கும்சத்தம் கேட்டது. கண்டிப்பாய் என் மனசாட்சியாய் தான் இருக்கும். நாலுபேருக்குசாதம் வைக்க எவ்வளவு அரிசியை போட வேண்டும்?? எவ்வளவு தண்ணி ஊற்றவேண்டும் ??எவ்வளவு நேரத்தில் எடுக்க வேண்டும் ?? என கேள்விகள் மட்டுமே என் வசம்இருந்தது. வீட்டுக்கு தொலைபேசி விவரம் கேட்கலாமா என யோசித்தேன். அவர்கள் விஷயத்தை ஊரெல்லாம் பரப்பி, சன் சிறப்பு பார்வை வரை போய்விடும்அபாயம் இருப்பதால் அதை தவிர்த்தேன்.கூகிளில் தேடலாமா என என் மென்பொருள் அறிவு மேலோங்கியது.இருப்பினும்எல்லாத்தையும் விடுத்து நால்வருக்கு நாலு கப் அரிசி என சுயேட்சையாய் முடிவுசெய்தேன். சாதம் சரியாய் முங்கும் அளவு தண்ணீர் ஊற்றினேன். அடுப்பில்குக்கரை வைத்தேன். இரண்டு விசிலுக்கு பிறகு எடுக்கலாம்னு கணித்தேன் . இனிபிரச்சனை இல்ல என அந்த சத்தத்திற்காக காத்திருந்தேன். சம்பந்தமேஇல்லாமல் திடீரென என் நினைவடுக்குகளில் இருந்த அந்த பழைய சம்பவம்ஞாபகம் வந்து தொலைத்தது.

நான்
தொடக்க பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமைஇரவு அது. என் வீட்டிற்கு வெளியே தோழர்களுடன் இனிமையாய் 'கல்லாமண்ணா??' என்ற அன்றைய கால பிரசத்தி பெற்ற விளையாட்டுவிளையாடிக்கொண்டிருந்தேன்.அம்மா காஸ் ஸ்டவில் எதோ வைத்து விட்டுஎன்னிடம் வந்து ,'நான் பக்கத்துல காய் வாங்கிட்டு வந்துடறேன், அடுப்பமறக்காம அஞ்சு நிமிஷத்துல அமத்திடு...' அப்படினு மூணு தடவ சொன்னாங்க. இது இப்ப நல்லா ஞாபகம் இருக்கு ஆனா அப்போ வழக்கம் போல மறந்துவிளையாட்டுல தீவிரம் ஆகிட்டேன். நாப்பது நிமிஷம் கழிச்சி அம்மா வந்துஎன்னடா சரியா அடுப்ப அணைச்சிடேலே?? என கேட்க நான் பயந்து போய்முழித்தேன். வீட்டினுள் பாத்திரம் விழும் சத்தம் கேட்டது.எனக்கு முன் அம்மாவீட்டுக்குள் ஓடினாங்க. மூஞ்ச சோகமா வச்சிக்கிட்டு ரெண்டு நிமிஷம் கழிச்சுநான் உள்ளே போனேன். எங்க பக்கத்து வீட்டு பெண்கள் எல்லாமே வீட்டுக்குள்தான் இருந்தாங்க. நல்ல வேளை அது நடக்கல , இது நடக்கல என நடக்காதசம்பவங்களை சொல்லி அம்மாவை வெறி ஏற்றி கொண்டிருந்தார்கள். அடுப்பங்கரை முழுக்க சாதம், காய்கறிகள் சிதறிக்கிடந்தன. கூட்டமெல்லாம்போனப்புறம் மரண அடி விழுகும் என எண்ணிகொண்டேன். அம்மா என்னைருத்ரமாய் பாத்தாங்க.பக்கத்துல இருந்த அடுத்த வீட்டுஹேமாக்கா(ஹேமா+அக்கா) ,'பிள்ளைய அடிச்சுராதடீ' னு சொல்ல அப்போதுவரை அடிக்கிற ஐடியாலயே இல்லாத அம்மா ஆவேசமாய் என் தலையில் இடியென ஒரு கொட்டு வச்சாங்க. அந்த கொட்டுக்கு நியாமாய் நான் பூமியில் புதைந்திருக்க வேண்டும், நல்ல காலம்சிமெண்ட் தரை என்பதால் அது நடந்தேறவில்லை. மறுபடியும் ஹேமாக்காஐயோ தலைப்பிள்ளைய தலைலே அடிக்காதம்மா' என சொல்ல அம்மா என்கன்னத்தை பதம் பார்த்தாங்க. இதற்கு மேலும் அமைதி காத்தால்ஹேமாக்காவால் எனக்கு சேதம் அதிகம் ஆகும் என்பதால் அழுது அந்தகாட்சியை முடித்தேன்.

Flashback over.நிகழ் காலத்துக்கு வருவோம். கிட்டத்தட்ட 45 நிமிஷம் வரைகுக்கரிலிருந்து எந்த ஒரு விசில் சத்தமும் வரவே இல்லை. குக்கருக்குதொண்டை கட்டியிருக்குமோன்ற மொக்கையெல்லாம் அந்த சூழ்நிலையிலதோணல. கொஞ்சம் கருகல் வாடை வந்ததால் அடுப்பை அணைத்தேன். விசிலைதூக்கி பார்த்தால் ஆவியே வரவில்லை. ஒரு வேளை இந்த ஊரில்ஆவியெல்லாம் வராது போல என எனக்குள் சொல்லிக்கொண்டு குக்கரைதிறந்தேன். பயத்துடன் உள்ளே பார்த்தால் ,சாதம் கருகிப்போய் கருப்பு நிறத்தில் இருந்தது. உண்மையா சொல்லணும்னா அரிசிய சமைக்குறதுக்கு பதிலா வறுத்திருக்கிறேன்.இந்த மாதிரி எதாவுது நடக்கும்ங்கறது நான் எதிர்பாத்தது தான்னாலும், இந்த அளவுக்கு போகும்னு நான் எதிர் பார்க்கல. பக்கத்து ரூம்ல இருந்து அபிஷேக் இண்டர்காம்ல கூப்பிட்டான். ,' சிவா.. வேகமா சாதத்தை எடுத்துட்டு வா..எல்லாருக்கும் ஒரே பசி' என ஆர்வமாய் பேசினான். எல்லாரும் என் ரூமுக்கு வாங்க ஒரு சின்ன பிரிச்சனையாயிடிச்சுனு சொல்லி phone ஐ வைத்தேன். எல்லாரும் வந்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே போயினர். நான் எதுவும் விளக்க தேவையிருக்கவில்லை. ஏற்கனவே பசியில் நொந்து போயிருந்த பியுஷ் வயிற்றை பிடித்துக்கொண்டு சோபாவில் உட்காந்து விட்டான். அபிஷேக் குக்கரை பார்த்து பார்த்து சிரித்து கொண்டிருந்தான். எனக்கும் சிரிப்பு வந்தாலும் சூழ்நிலை கருதி அடக்கிகொண்டேன். கடைசி நம்ம ஜஸ்விந்தர் தான் மௌனத்தை கலைத்து ,' சரி விடுங்க நல்ல வேலையா சப்பாத்தி மாவு இருக்கு ரெண்டு நிமிஷத்துல ரெடி பண்ணிடலாம் ' அப்டினார். 'ஆமா சப்பாத்தி உடம்புக்கும் நல்லது' னு நான் சொல்ல ,எல்லோரும் என்னை கர்ண கொடூரமாய் முறைத்தனர்.திங்கள், 8 பிப்ரவரி, 2010

ப...த.. நி.. ச...


“Music and rhythm find their way into the secret places of the soul”
- பிளாடோ


நம் தமிழ்கூறும் நல்லுலகம் தமிழை விட ஆங்கிலம் நன்கு அறியும் என்பதால் மேலே குறிப்பிட்டுள்ள கிரேக்க பேரறிஞர் பிளாட்டோவின் வரிகளை தமிழ்படுத்த தேவையில்லை. இசை நம் ஆன்மாவில் கலக்கும் அரு மருந்து என்று சொன்னால் மிகையில்லை தான். அது சரி காதை தவிர இசை கேட்க வேறெந்த மூலதனமும் உனக்கில்லையே ?? நீயென்ன இசைக்கட்டுரை எழுத போகிறாய் என சிலர் வழக்காடலாம். இது வெறும் தமிழ் திரையிசை பற்றிய பதிவு என்பதால் உங்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.'யார் இளையராஜா??' என தமிழகத்தில் ஒருவர் கேட்ப்பாராயின், அவர் கடந்த 40 வருட காலம் எங்கோ 'கோமா' வில் இருந்திருக்கிறார் என்றே நாம் முடிவு கொள்ளலாம். ' நானும் இளைய ராஜாவின் ரசிகன் தானோ' என உங்களுக்கே உங்கள் மீது சந்தேகம் வருமாயின் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுய பரிசோதனை தேர்வை முயன்று பாருங்கள்...
  • மௌன ராகம் படத்தில் வரும் 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலின் ஆரம்பத்தில் எஸ்.பி.பி 'ஆ....' வென மெல்லிய குரலில் ஆரம்பிக்கையிலேயே உங்கள் தொலைக்காட்சியின் அல்லது வானொலியின் ஒலியை உயர்த்த முயற்சிக்கிறீர்களா??
  • 'சங்கீத மேகம்' பாடல் முதல் பட பாடல்களில் மோகன் தானே பாடியது போல் தலையை ஆட்டிக்கொண்டு பாடுகையில் நீங்களும் தலையாட்டி ரசிக்கிறீர்களா??
  • 'ஜனனி ஜனனி' என இளைய ராஜா தன் வெண்கலகுரலை காற்றில் பரப்புகையில் நீங்கள் மெய்ச்சிலுர்க்குறீர்களா??
மேலே சொன்னவற்றில் ஏதேனும் ஒன்றுக்காவுது ஆம் எனச்சொன்னீர்கள்என்றால் நீங்கள் ராஜாவின் இசை வெள்ளத்தில் கொஞ்சமாவுது குளித்துதிளைத்திருக்குறீர்கள் என்று அர்த்தம். எங்கோ பண்ணைப்புரத்திலிருந்து வந்துபார்ப்பனர்கள் மட்டுமே ஆள முடியுமென்று நினைத்துக்கொண்டிருந்தஇசையுலகில் சிம்மாசனமிட்டு அமர்ந்த ராஜாவை பாராட்டவில்லையென்றால்இசை தேவி நம்மை ஈட்டியில் குத்தினாலும் ஆச்சர்யமில்லை.
போட்டிக்கு யாருமில்லாததால் ஏன் இளையராஜா கூட ' ராஜா..எப்போதும் நான்இங்கு ராஜா' , 'ராகங்கள் தாளங்கள் கூட ராஜா உன் பேர் சொல்லும்' (வளையோசை பாடல்) என பாடல்களிலேயே 'பஞ்ச்' வைத்தார். அந்தகாலங்களில் ராஜா இசை சாம்ராஜ்யம் நடத்திய படங்களில் பாடல்களின் நடுவேராஜாவின் புகைப்படத்தை காண்பித்து பெருமைப்படுத்துவார்களாம். பாடல்களுடன் ராஜா முடித்துக்கொள்வதில்லை, பின்னணி இசையிலும் படத்தைதாங்கிப்பிடிப்பார். நாயகன் படத்தின் உச்சக்காட்சியில் அந்த சிறு குழந்தைகமலிடம் ,'நீங்க நல்லவரா?? கெட்டவரா?? என கேட்கையில் ராஜாவின் பின்னணிஇசையால் கமலுக்கு முன்பே நமக்கு அழுகை முட்டிக்கோண்டு வரும். பெரும்பாலான நேரங்களில் கருவிகளை விட நம் உணர்வுகளையே மீட்டினார்
ராஜா.


நாம் அடுத்து இரு பத்திகளை இசைப்புயலுக்கு ஒதுக்குவோம். பிளஸ் 2 வில்முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட என் கடின உழைப்பால் வென்றேன்என சொல்லிக்கொண்டிருக்க, இரண்டு 'Oscar' களை கையில் ஏந்திக்கொண்டு ' எல்லாப்புகழும் இறைவனுக்கே!!!' என சரணடைந்த ஏ.ஆர்.ரகுமானை தமிழனெனசொல்வதில் நாமும் பெருமை கொள்ளலாம். ரோஜாவில் அறிமுகமாகிஅதிலேயே தேசிய விருதும் வென்றவர். தொழில் நுட்ப ரீதியிலும் தமிழிசையைஉலகத்தரத்துக்கு கொண்டுபோனவர் ரகுமான்.ஆரம்ப காலங்களில், சாத்திரியசங்கீத வாசம் இவர் இசையில் துளியும் இல்லை என்றவர்களுக்கு 'என்னவளே' பாடல்(படம்:காதலன்) கொடுத்து சாந்தி படுத்தினார். கிட்டத்தட்டஇப்போதிருக்கும் பல முன்னணி பாடகர்கள் இவரால் அறிமுகபடுத்தப்பட்டவர்களே. இரவு நேரங்களிலே இசைக்கோர்ப்பு செய்வது இவரின்இயல்பு,இது இசை உலகில் சலசலப்பை ஏற்படுத்தினாலும் பிற்பாடு புரிந்துகொள்ளப்பட்டது. ரகுமானின் 'தாய் மண்ணே வணக்கம்' பாடல் எந்தஇந்தியனாலும் மறக்க முடியாது. இவரின் பெயரை வைத்துக்கொண்டு ஒருபடத்தை உலகின் எந்த மூலையிலும் வியாபாரம் செய்ய முடிகிறது. என் பதின்மவயதுகளில் ரகுமானின் பெயரை பச்சைகுத்திக்கொள்ளலாமா?? என்றுயோசிக்கும் அளவிற்கு ரகுமானின் அபிமானியாய் இருந்தேன்.
ஒரு பத்தி விரயமானாலும் பரவாயில்லை என இந்த பாடலை பற்றி சொல்லுவதுஎனக்கு தலையாய கடமையாய் படுகிறது. மின்சார கனவு படத்தில் வரும்வெண்ணிலவே..வெண்ணிலவே ' பாடல். இன்னும் இந்த பாடல்தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அணுகுண்டே போட்டாலும் ஆணிஅடித்தது போல் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன். பிரபுதேவாவின் நடனம், கஜோலின் கண்கள் , மிதமான ஒளிப்பதிவு என ரகுமானின் தங்கமான இசை மேல்ஏகப்பட்ட வைரக்கற்கள். அதுவும் 'எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன்யாரு...' என ஹரிஹரன் ஒரு இழுஇழுப்பாரே பார்க்கணும், அந்த இடத்தில் நான்எப்போதும் சொக்கிப்போவேன்.பிரபுதேவா பாடு என்பது போல் செய்கைசெய்தவுடன் கஜோல் பாடுவது (i mean வாயசைப்பது),
உணர்ச்சிகளை முகத்தில் காட்டிக்கொண்டே நடனமாடுவது என இருவரும்படத்தில் நடித்ததை விட இந்த பாடலில் நடித்தது அதிகம் என நினைக்கிறேன். தமிழ் சினிமா வரலாற்றில் மறக்கமுடியாத டூயட்களில் இதுவும் ஒன்றாகும். நறுமுகையே...(இருவர்), உயிரே...(பாம்பே),என் மேல் விழுந்த மழைத்துளியே..(மே மாதம்), பூங்காற்றிலே...(உயிரே), பச்சைக்கிளிகள் (இந்தியன்) போன்ற பாடல்கள் மூலம் இசைப்புயல் நமக்கு வசந்தத்தையும் வீசுவதுண்டு.

இது தான் எனக்கு எப்போவோ தெரியுமே என அலுத்துக்கொள்ளாதீர்கள். இனிமே தான் ஆட்டமே ஆரம்பமாகிறது. மேலே நினைவுகூறப்பட்ட இசை ஜாம்பவான்கள் கூட ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம் எந்த பாடல் மக்கள் மத்தியில் வெற்றிபெறும் என்பதே!!! இவர்களின் எத்தனையோ சிறப்பான பாடல்களுக்கு பாராட்டுக்கிடைக்காமல் போயிருக்கிறது. எந்த இசை நம்மை மயக்கும் என்பது நாமே அறியாததே....கீழே நான் கொடுத்துள்ள சில பாடல்கள் கிட்டத்தட்ட இந்த ரகம் தான். இவை படம் வந்த போதே மாபெரும் வெற்றி பெரும் என நம்பியிருந்தேன். ஆனால் இவை சுவடே தெரியாமல் காணாமல் போனது கொடுமை தான்.

i) உயிரிலே..எனது உயிரிலே(படம்:வேட்டையாடு..விளையாடு ...) : இந்த பாடல் இந்த படத்தில் இருக்கிறதா என்றே பலருக்கு தெரியாது. மிக மெதுவான பாடல். மொட்டை மாடியில் நட்சத்திரத்தை ரசிப்போருக்கு இந்தபாட்டு பார்சல். ஒளியோடு ரசித்தால் கண்களுக்கும் ரம்யம் தருவார் ரவி வர்மன். ஸ்ரீநிவாஸ், மகாலக்ஷ்மி ஐயர் பாடியது.

'
ii) மாலை நேரம் (ஆயிரத்தில் ஒருவன்) : இப்பாடல் ஓரளவு மக்கள் மத்தியில் பிரபலமானாலும், கிடைக்க வேண்டிய நியாமான பாராட்டு கிடைக்கவில்லை என்பேன். ஆண்ட்ரியாவின் அற்புத குரலில் வெளிவந்த சமீபத்திய பாடல் இது. இந்த பாடலை ஒரு வேளை 'Head Set' இல் கேட்டீர்களென்றால் காது கொஞ்ச நேரத்தில் பிசுபிசுக்கும். தேன் குரல் அது!!!! கொஞ்சம் மிகைப்படுத்த படுவது போல் தோன்றினாலும் ஒரு முறையாயினும் இப்பாடலை கேட்டவர்களுக்கு இந்த உண்மை புரியும்.

iii) ஒரு நாளில்...(புதுப்பேட்டை): யுவனுக்கு பாடத்தெரியுமா என கேட்பவர்கள் இந்த பாடலை கேட்டால் வட்டமாக வாய்பிளப்பார்கள். படத்தின் கதையே இந்த பாடலில் சொல்லப்பட்டிருக்கும். இந்த பாடல் படத்தில் வைக்கப்படவில்லை. இது படத்திற்கு இழப்போ இல்லையோ?? இசைக்கு பேரிழப்பே... முடிந்தால் தரவிறக்கி (அதாங்க Download) கேட்டுப்பாருங்கள்.

iv) முழு மதி உனது முகமாகும்..(ஜோதா அக்பர் (தமிழ்)): ஜோதா அக்பர் திரைப்படம் தமிழில் வெளியானது பலருக்கு தெரிவதில்லை. ஒரு முறை கேட்டவுடனேயே பாத்ரூமில் அடிக்கடி இந்த பாடலை முணுமுணுப்பீர்கள். மிகமிக சிறந்த பாடல். இளைஞர்கள் இந்த பாடலை தவிர்ப்பது நலம், ஏனெனில் இப்பாடல் நமக்கு காது வழியே காதலை புகுத்தும். இந்தப்பாடல் கணவர்கள் ஸ்பெஷல் ....அதுவும் திரையில் ஐஸ்வர்யா ராயும்,ஹ்ரித்திக் ரோஷனுக்கும் உள்ள 'chemistry' (வார்த்தை உபயம்:விஜய் t.v) இருக்கிறதே ..அடப்போங்க..எனக்கு வெக்கமா இருக்கு...

v) உன் சிரிப்பினில்(பச்சை கிளி முத்துச்சரம்): மயங்க வைக்கும் பாடல்...படம் வந்த புதிதில் பாடல் எதாவுது தொலைக்காட்சியில் வராதா என பார்த்துக்கொண்டிருப்பேன்...யாரோ உங்கள் காதில் ரகசியம் சொல்வது போல் போகும்...பாடலின் பின்னே வரும் 'டக் டக்..' என வரும் பீட்,பாயசத்தில் கிடக்கும் முந்திரிபருப்பு....முடிந்தால் கேட்டு இன்புறுங்கள்!!!!

இது ஒரு தனி மனித விருப்பு/வெறுப்பு சார்ந்த கட்டுரையாக தெரிந்தாலும், இதன் உள்நோக்கம் இசை மீதான நம் ஆர்வத்தை தூண்டுவதே.நல்ல இசையை ரசிப்பது ஒரு குழந்தையை கொஞ்சுவதற்கு சமமானதே. நம் உணர்வுகளை முடிவு செய்யும் மாபெரும் சக்தி இசைக்கு உண்டு.

பொதுவாய் தேவா காப்பி அடிக்கிறார் என்று ஒரு கருத்து உண்டு நாம் அவரின் பாடல் வரிகளையே காப்பி அடித்து இந்த கட்டுரையை முடிப்போம்...
இசையோடு வாழ்ந்தோம்..
இசையோடு வாழ்வோம்...
இசையாவோம்!!!!!!!!!!!!!!!!!!திங்கள், 1 பிப்ரவரி, 2010

பா....
தாய்ப்பால்
தவிர ஒரு தந்தையின் பால் அன்பின் அடையாளங்கள் அனைத்தும் இருக்கத்தான்செய்கிறது.விளையாட்டுக்காரர்,பாசக்காரர், புரிந்துகொள்ளாதவர்,இரக்கமானவர் என நாம் வளரும் ஒவ்வொரு வயதிலும் அப்பா ஒவ்வொரு மாதிரி தெரிகிறார். கண்டிப்பாய் அவரின் நல்ல/கெட்ட குணங்கள் நம்மையுமறியாமல் நமக்குள் செலுத்தப்படுகிறது.

எனக்கு அப்போது பன்னிரண்டு வயதிருக்கும், வீட்டில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் கார சார மான விவாதம் போய்கொண்டிருந்தது. கோபத்தின் உச்சியில் அம்மா ,"இப்படி இருமறுதுக்கு பதிலா அந்த சிகரெட்ட நிப்பாட்டினால் தான் என்ன??" என குரலை உயர்த்திக்கேட்க ,வீட்டில் திடீரென மௌனம் குடி கொண்டது.நான்,தம்பி தங்கைகள் எல்லாம் வீட்டுப்பாடங்களை நிறுத்தி அப்பாவையே பார்க்க...அம்மா கூட கொஞ்சம் அவசர பட்டு விட்டோமோ என்கிற ரீதியில் முழிக்க... அப்பா யதார்த்தமாய் சட்டை பையிலுருந்த சிகரெட்டை எடுத்து பக்கத்திலிருந்த மேஜையில் செங்குத்தாக வைத்துப்பார்த்து விட்டு ," நிப்பாட்டி தான் பாக்குறேன் நிக்க மாட்டேங்குது!!' என சலனமே இல்லாமல் சொன்னார். நாங்கள் எல்லாரும் அடக்கவே முடியாத பெருஞ்சிரிப்பு சிரித்தோம். சிரிப்பை அடக்க முயற்சி செய்து தோற்ற அம்மா கூட எங்கள் சிரிப்பு ஜோதியில் ஐக்கியமானாங்க.இப்படி தான் எந்த கட்டத்திலேயும் சமயோஜிதத்தை பயன்படுத்துவது அவருக்கு இலகு.அதிகாலை மூன்று மணிக்கு என்னையும் எழுப்பி அவரும் எழுந்து world cup football பார்ப்பது, ' வாங்கடா படத்திற்கு போவோம்' என எங்களை அழைத்து சனிக்கிழமை சாயங்காலங்களை செலவிடுவது, "வீட்லயே உட்காந்து என்ன முட்டையா போடுறே?? வெளிய போய் சுத்திட்டு வாயேன்டா!! அப்பத்தான் உலகந்தெரியும்" என அடிக்கடி என்னை சொல்வது.. இவ்வாறு அப்பாவின் செயல்கள் பல இலக்கணங்களை வழக்கொழித்தது. மூக்கடச்சான், கரட்டாண்டி,கரிமேடு என வீட்டில் எல்லோரையும் ஒரு பட்டப்பெயர் வைத்தே அழைப்பார். நாங்களும் அப்பாவை எப்படியாவுது கலாய்க்க அவருக்கு பட்டப்பெயர்கள் வைப்போம், அது எதையும் நிலைக்க விடாமல் தப்பி விடுவார். அப்பாவை Tension ஆக்க நானும் தம்பியும் கடைசியாக ஒரு வழி கண்டுபிடித்தோம். அப்பா எங்களை கலாய்த்தால்,நாங்கள் தமிழ் சினிமா வில்லன்கள் போல் சும்மா 'தே மே' என நின்றிருக்கும் தங்கைகளை நறுக்கென தலையில் கொட்டு வைப்போம். தங்கைகள் வீரிட்டு அழுவதை தாங்க முடியாம அப்பா 'Tension' ஆகிருவார். அவருக்குத்தான் பெண்பிள்ளைகள் உயிராச்சே .... 'டேய்!!' என அப்பா அடி வயித்திலிருந்து கத்த.. நானும் தம்பியும் வீட்டின் boundary நோக்கி பறக்க ஆரம்பிப்போம். பெரும்பாலும் தம்பி மாட்டிக்கொண்டு அப்பாவிடம் தர்மடி வாங்குவான். அப்பாவிற்கு சூர்ய கிரகணம் போல எப்பவாவுது தான் கோபம் வரும், அப்போது சிக்கினால் சுட்டெரித்து விடுவார். பெரும்பாலும் அப்பாவின் கோபத்தின் அளவை கணிக்க வீட்டில் தம்பி தான் எங்களுக்கு கருவியாய் பயன் படுவான்.நான் இரண்டாம் வகுப்பு படிக்கிற நேரம் அது,அம்மா 'Conceive' ஆகி இருந்தாங்க. ஏற்கனவே நானும்,தம்பியும் இருப்பதால் பெண் குழந்தை தான் வேணுமென கோயில் கோயிலாக மனு போட்டுக்கொண்டிருந்தார்கள். எப்போதுமில்லாமல் அப்பா பக்தி பழமாகி இருந்தார். ஒரு வேளை தம்பிபாப்பாவாக இருந்தால் கடவுள்களை கோபித்துக்கொண்டு மதம் மாறிவிடுவாரோ என்று கூட நான் நினைத்ததுண்டு. கடைசியாய் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து" பெண் குழந்தை.. இல்லையில்லை இரட்டை பெண் குழந்தைகள்" என செய்தி வந்ததும்,அப்பா கிட்டத்தட்ட கத்தியே விட்டாராம்.தெருவில் இருப்பவர் எல்லோருக்கும் அப்பா அன்று இனிப்புகள் கொடுத்தார். எப்போதுமே 'shuttled' ஆக இருப்பவரை முதல் முதலாய் அன்று தான் அவ்வளவு உணர்ச்சிமயமாய் பார்த்தேன். தங்கைகள் மேல் கொஞ்சம் பொறாமையாய் கூட இருந்தது.

அப்பாவுக்கு ஒரு பொழுதுபோக்கு உண்டு. வீட்டில் ஹாலில் அமர்ந்துகொண்டு நாளிதழ் படித்துக்கொண்டிருப்பார். திடீரென எழுந்து வாசலைப்பார்த்து "வாங்க வாங்க" எனச்சொல்லுவார். வீட்டின் உள்-அறையில் இருக்கும் நாங்களும், அடுப்பங்கறையில் இருக்கும் அம்மாவும் யாரோ விருந்தினர்கள் வருகிறார்களோ என நினைத்து வேகமாக ஹாலுக்கு வருவோம்.அங்கே அப்பா ஒன்றுமே தெரியாதவர் போல நாளிதழ் புரட்டிக்கொண்டிருப்பார். நாங்களும் "பல்ப்" வாங்கியதை காட்டிக்கொள்ளாமல் எதார்த்தமாய் திரும்பி செல்வோம். அம்மா மட்டும் கையிலிருக்கும் தோசைக்கரண்டியால் அப்பாவின் கையில் ரெண்டு தட்டு தட்டுவதுண்டு. பிறகு ஒருமுறை உண்மையிலேயே உறவினர்கள் ஒரு நாள் இரவு வர ,அப்பா "வாங்க வாங்க" என வழக்கம் போல் சொல்ல , அம்மா அடுப்பறையில் இருந்து கொண்டே " என்னை ஏமாத்த முடியாது இந்நேரம் எந்த லூசாவுது வருமா??" என சத்தம் போட்டுச்சொன்னாங்க. வந்தவர்கள் விழிக்க,அம்மா பதறி போயி விளக்க... அன்று வீடே லொள்ளு சபாவானது.

நாட்கள் எவ்வளவோ ஓடிவிட்டன. அப்பாவென சொன்னதும் இப்படி இதயம் தித்திக்க எத்தனையோ நினைவுகள் வந்து போகும். மேலே சொன்னவை அனைத்தும் கடந்த நவம்பர் 26- அப்பாவின் பத்தாவுது நினைவுதினத்தில் எழுதியவை. தம் தந்தையை பற்றி எல்லோர்க்கும் இப்படி பசுமையான பல நினைவுகள் உள்ளிருக்கும். அவற்றையெல்லாம் உங்களுக்கு உகந்த மொழியில் ஒரு காகிதத்தில் எழுதி உங்கள் தந்தையிடமே கொடுத்து பாருங்களேன்.கண்டிப்பாய் அவர் கண்கள் ஈரமாகலாம்."இதெல்லாம் யதார்த்தமா?? , பாசமெல்லாம் உள்ளுக்குள்ளே இருக்கு!!!" என கேட்கும் அறிவாளிகளுக்கு ஒன்று சொல்கிறேன். 'நாம் தனிமை படுத்த படுகிறோம்,நம்மிடம் பேச யாரு மில்லை' என்ற உணர்வு 90 சதவீத வயதானவர்களுக்கு உண்டு என உளவியல் சொல்லுகிறது. இந்த கடிதம் அவர்களது சங்கடங்களை களைந்து சந்தோசம் தரலாம். பதிலுக்கு அவர் உங்கள் உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தம் கூட தரலாம்!!! அது சரி அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!!!!


உன் வித்தில் விளைந்து
விருட்சம் ஆனோம்!!!!
உன் அன்பிற்கு எப்போதும்
அடிமையானோம்!!!!
என் வாழ்வின் முதல் பக்கம் நீ
என் பேரின் வலப்பக்கம் நீ
எனக்குள் எப்போதும் நீ(ர்)!!!!!!!
இப்படிக்கு
சிவராஜ்காமராஜ்.