சனி, 26 அக்டோபர், 2013

முட்டைகன்னிகளும் பின்னே அவனும்- பகுதி 5




தன்னையே மறக்கவைக்கும் சந்தோசத்தையும்,தாங்கொணா துயரத்தையும் உலகத்தில் தரும் ஒரே விஷயம் காதல். பிரவீனும், மதியும் தங்களை தம்பதிகளாவே நினைத்துக்கொண்டார்கள். பிரவீனுக்கு மதிய உணவு சமைத்துக்கொடுத்தாள்.இவன் சேலைகள் வாங்கிக்கொடுத்தான். மதி காதல் விஷயத்தை வீட்டில் சொன்னவுடன் அவர்கள் கொதித்துப் போனார்கள். காரைக்குடியில் ஒரு வசதியான குடும்பம் அவளுடையது. அவளுடைய இரண்டு அக்காக்களுக்கும் திருமணமாகி விட்டது. மூத்த அக்காவின் வீட்டுக்காரர் இவர்களின் சொத்துக்களையும், குடும்ப வியாபாரத்தையும் பார்த்து வருகிறார்.அம்மாவுக்கு மதி வேலைக்குப் போவதில் பெரிய விருப்பமில்லை. மதி தினமும் போனில் வீட்டில் சண்டை
போட்டுக்கொண்டிருந்தாள். இவர்களின் காதல் அசுர பலமாய் இருப்பதால் யாரும் ஆட்டையை கலைக்க முடியாது என்று நான் நம்பினேன். ஆனால் வாழ்க்கையின் போக்கை அற்ப மனிதர்களால் பல நேரங்களில் புரிந்துகொள்ள முடியவில்லை.


மதியின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என செய்தி வந்ததால் அவள் ஊருக்கு கிளம்பிப்போனாள். அழுதுகொண்டே இருந்தவளை போய் ட்ரெயின் ஏத்தி விட்டு வந்தான் பிரவீன். அவனும் சங்கடமாய் காணப்பட்டான். மதி ஊருக்கு போனவுடன் தான் தெரிந்தது, அவளது அம்மா இந்த காதல் பிரச்சனையில் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஐ.சி.யூ விலேயே மூன்று நாட்கள் இருந்ததாக சொன்னார்கள். வீட்டில் இருப்பவர்கள் மதியை திட்டித்தீர்த்தனர். அவளது பெரிய அக்கா "அம்மாவ கொன்றாத டீ" எனச்சொல்லி மதியின் காலில் விழுந்து கதறி அழுதிருக்கிறாள். பொது நண்பர்கள் மூலம் இந்த செய்தி கிடைத்தது. மதியின் போனும் அணைக்கப் பட்டிருந்ததால் பிரவீனுக்குப் பதற்றம் அதிகமாகியது.ஒரு வாரமாய் அவள் அலுவலகம் வரவில்லை.

"ஏன்டா... அவ சூழ்நிலையை நினைச்சுப் பாரு..இப்போ போய் உனக்கு கூப்பிட முடியுமா.."

அவன் ஜன்னல் வழியே ரோட்டை வேடிக்கை பார்த்த படி இருந்தான். நான் பேசிய எதற்கும் பதிலே இல்லை. பக்கத்தில் போய் தோளைத் தொட்டேன். என் கை மேல் கை வைத்தான். "பயமா இருக்குடா.." .கேட்கவே சங்கடமாய் இருந்தது. அன்று சாயங்காலம் வரை யோசித்துக்கொண்டே இருந்தோம். எனக்குத் திடீரென ஒரு யோசனை வந்தது.

"பேசாம காரைக்குடிக்கு போய் பாப்போமா.." 

"நானும் நேத்துல இருந்து அதத்தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன். பேசாம குரு சித்தப்பாக்கிட்ட விஷயத்தை சொல்லி, அவரையே மதி வீட்டுக்கு அனுப்புனா என்ன?.."

பிரவீனின் சித்தப்பா சென்னை எக்மோரில் சி.ஆர்.பி.எப் போலிஸாய் வேலை பார்த்து வந்தார். சின்ன வயதிலிருந்தே பிரவீன் மீது அவருக்கு தனி பிரியம்.அவனுக்காக இதை செய்வார் என்று தோன்றியது. அவரை போய் பார்க்க எக்மோர் போனோம். நல்லா ஆறு அடியில் வினுசக்ரவர்த்தி ஜாடையில் இருப்பார். 

"வாங்கடா...இங்கயும் செட் சேர்ந்துட்டீங்களா..டீ சொல்லவா.."  என்றார்.

நலம் விசாரிப்புகள் முடிந்து பிரவீன் விஷயத்தை துவக்கினான். நான் தள்ளிப் போய் நின்று கொண்டேன். கொஞ்ச நேரத்தில் பிரவீனை பொலேரென அறைந்தார்."இந்தாளு சேம் சைடு கோல் போடுறானே.." என நினைத்துக்கொண்டேன். பிரவீன் அழுதுகொண்டே மேற்கொண்டு எதோ பேசிக்கொண்டு  இருந்தான். எனக்கு எதுவும் கேட்கவில்லை. "லேய்..நீ இங்க வா டா " என என்னை கூப்பிட்டார். "விடுங்க பாஸு..எதோ சிறுசுக...இதுக்குப் போய் கோபப்பட்டுக்கிட்டு.." வென சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டே பக்கத்தில் போனேன். எனக்கொன்று பொலேரென கொடுத்தார். "இதத்தான் மெட்ராஸ்ல பண்ணிட்டு இருக்கீங்களா.." என நாக்கை உருட்டிக் கேட்டார்.  பிரவீனுக்காக அடிவாங்குவேன் என்று தெரியும் ஆனால் எக்மோரில் ஊரே வேடிக்கை பார்க்கும் போது வாங்குவேன் என நினைக்கவில்லை. உள்ளே ரூமில் போய் உட்காரச்சொன்னார்.செய்தோம். டீ வந்தது. 



பிரவீன் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். சித்தப்பா உள்ளே வந்தார். "பொம்பள புள்ள  மாதிரி அழுகாத... நாளைக்குப் போலாமா.. இன்னைக்கு மாத்துறதுக்கு ஆளில்லை...". தலையாட்டினோம். கன்னம் பழுத்தாலும் காரியம் சாதித்த சந்தோசம் எங்களுக்கு. வீடு வந்தோம். சித்தப்பு மீண்டும் எனக்கு போன் செய்து நடந்தவைகளை கேட்டுத் தெளிந்தார். "நாளைக்கு சாயந்தரம் கெளம்புவோம்...நேரா பிள்ளையார்பட்டி போய் சாமிய கும்பிட்டிட்டு போவோம். எல்லாம் நல்லபடியா நடக்கும். அவனுக்கு தைரியஞ்சொல்லு.." . "ம்" என்றேன்.

மறுநாள் அவர் சொன்ன படியே பிள்ளையார்பட்டியில் மூவரும் இறங்கினோம். ரூமை போட்டு, குளித்துக்கிளம்பினோம். விநாயகரை தரிசனம் செய்தோம். பிரவீனை அங்கேயே இருக்கச்சொன்னார். முதலில் மறுத்தான். "நீ வந்தா சரியா இருக்காது.." என்றார். சரியென்றான். நானும் சித்தப்பாவும் பஸ்ஸில் ஏறி காரைக்குடி வந்தோம். பிள்ளையார்பட்டியிலிருந்து காரைக்குடி பன்னிரண்டு கிலோமீட்டர் தூரம் தான். சித்தப்பு பேருந்து நிலையத்தில் இறங்கி பழம், ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கினார். "பெருசுக..பெருசுக தான்" என எண்ணிக்கொண்டேன். நடந்தே மதியின் வீட்டுக்குப் போனோம். விலாசம் கையில் இருந்தததால் அலையவில்லை. நல்லாப் பெரிய வீடு. வீட்டுக்கு முன் தூண்கள் இருந்தது. போய் காலிங் பெல்லை அழுத்தினார். என் பக்கம் திரும்பி "நீ சும்மா அமைதியா நில்லு போதும்" என்றார். "அப்றமெதுக்கு நா வந்தேன்" னு கத்தலாமென நினைத்தேன். செய்யலை. ஒரு நடுத்தர வயது பெண் வந்து கதவைத் திறந்தார்.

"நீங்க.."

சித்தப்பு கேள்விக்கு பதில் சொல்லாமல் சாஷ்டாங்கமாய் இரு கைகளையும் குவித்து வணக்கம் சொன்னார்.நான் அதை ஒரு ஜெராக்ஸ் போட்டேன். பதிலுக்கு அந்தப்பெண்ணும் எங்களுக்கு வணக்கம் சொன்னார்.

"நான் குமரகுரு..சி.ஆர்.பி.எப் ல இருக்கேன்..பாப்பா கூட வேலை செய்யுற பிரவீனோட சித்தப்பா. அம்மாவுக்கு முடிலனு கேள்விப்பட்டேன். அதான் வந்தோம். உள்ள வரலாங்கள..."




அந்தப்பெண் முகம் மாறியது. அவளேதும் யோசிப்பதற்கு முன்னாடியே வீட்டுக்குள் நுழைந்தோம். மிகப்பெரிய ஹால். வேண்டா வெறுப்பாய் சேர் கொடுத்தார்கள். மதியின் அம்மா சோபாவில் உட்கார்ந்திருந்தார். முகம் மதி ஜாடையில் இருந்தது. எங்களை பார்த்து எதுவும் பேசாமல் உம்மென இருந்தார்.நான் மதியைத் தேடினேன். எங்களுக்கு கதவை திறந்து விட்டவர் மதியின் மூத்த அக்கா. அவள் தான் பேசினாள்.

"சார்...நீங்க ஏன் வந்திருக்கீங்கனு தெரில..எங்களுக்கு இதையெல்லாம் கேக்கவே அசிங்கமா இருக்கு...சொந்தக்காரவுங்களுக்கு தெரிஞ்சா நாண்டுக்கிட்டு சாக வேண்டியது தான்.."

"என்னம்மா..இப்படி பேசுறீங்க..நாங்க ஒன்னும் ஒன்னும்மில்லாதவுங்க இல்ல..மேற்கொண்டு பையன் தங்கமான பையன்..படிச்சவன்..நல்ல சம்பாத்தியம். பிள்ளைங்க சந்தோசமா இருந்தாத்தான நமக்கு நிம்மதி.."

"நிப்பாட்டுங்க..எதோ பெரியவர்னு தான் பேசாம இருந்தேன்..கண்ட சாதி ஆளுங்க வந்து சம்பந்தம் பேச காளிராசனார் வீடு என்ன சத்திரமா?...எதோ பொறிக்கி நாயி சின்னப்பிள்ளை மனச கெடுத்து வச்சிருக்கு..நாங்கெல்லாம் சேந்து பேசி இப்பத்தான் சரி பண்ணி வச்சிருக்கோம்..தேவையில்லாம இப்ப வந்துக்கிட்டு...அம்மாவுக்கு இப்பத்தான் உடம்பு திரும்பியிருக்கு..."

மதியின் அக்கா ஆங்காரமாய் பேசினாள். ஹால் முழுக்க எதிரொலித்தது. சாதி தான் முதல் எதிரி என நினைத்துக்கொண்டேன். சித்தப்பா பொறுமையாய் பேச முயன்றார். அவள் அவரது பொறுமையை சோதித்தாள்.பேச்சு பிரவீனையும் அவனது குடும்பத்தையும் அவமதிப்பதாகவே இருந்தது. ஒருகட்டத்தில் பொறுமையிழந்து கத்தினார். "வெளிய போய்யா.." வென மதியின் அக்கா கத்தினாள். சித்தப்பா விருட்டென எழுந்து வெளியே நடந்தார். நான் மெதுவாய் தொடர்ந்தேன்.ரூம் ஜன்னல் வழியாய் மதி பார்த்துக்கொண்டே இருந்தாள். அழுதாள். இயலாமை திரவமாய் திரண்டு கண்களிலிருந்து உருண்டது. சமுதாயம் எழுப்பியிருக்கிற மதில்களை பெண்ணால் தாண்ட முடிவதில்லை. அவள் அக்காவை மீண்டும் ஒரு முறை பார்த்தேன்.கண்களில் கொடூரமான கோபம் தெரிந்தது.அவள் ஒரு முட்டக்கண்ணி.

பிரவீனிடம் வந்து நடந்ததை சொன்னேன். திரும்பவும் சென்னை வந்தோம்.
சினிமாவில் நடப்பது போலெல்லாம் நிஜவாழ்க்கையில் ஆச்சர்யங்கள் நடப்பதில்லை. மேலிருந்து தேவதைகள் வந்து காதலை சேர்த்து வைப்பதில்லை.பிரவீன் அடுத்த ஒரு மாதம் பட்ட அவஸ்தையை எவனும் பார்த்தால், காதலே செய்ய மாட்டான். நண்பர்கள் இருவர் அவனை தினமும் காவல் காக்க வேண்டியிருந்தது. ரூம்களில் தாழ்ப்பாளைக் சுழற்றிவிட்டிருந்தோம். பிரவீன் பைத்தியம் போலத் தான் இருந்தான். சில நேரங்களில் மந்தவெளி ரயில்நிலைய பெஞ்சில் போய் உட்கார்ந்து கொள்வான். அங்கே தான் உட்கார்ந்து மணிக்கணக்கில் பிரவீனும் மதியும் பேசுவார்கள்.மாதங்கள் ஓடியது.


வருடங்கள் எனச் சொல்லும்போது பெரியதாய் தெரிகிறது, ஆனால் அவைகள் நம்மை எளிதாய் கடந்துவிடுகிறது. மூன்று வருடங்கள் இவ்வளவு வேகமாய் போகுமென நான் நினைத்ததில்லை. மதி திருமணமாகி புனேயில் செட்டில் ஆகிவிட்டாள். பிரவீன் அமெரிக்காவில் சில காலம் இருந்தான்.கொஞ்சம் தொப்பை போட்டுவிட்டது.எப்போதாவது தான் பேசுகிறான். பேஸ்புக் போட்டோக்களில் பார்த்துக்கொள்கிறோம். அவனுக்கும் போன வருடம் ஊரில் திருமணம் நடந்தது. போயிருந்தேன். சொல்லவே தேவையில்லை, அவன் மனைவியும் முட்டக்கண்ணி தான். தம்பதிகள் கூட நின்று போட்டோ எடுக்க மேடை ஏறினேன்.பக்கத்தில் பிரவீனின் காதில் பேசினேன்.

"ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டேயே..."

"சொல்லிட்டு வேமா ஓடிரு.."

"ஒன்னோட எல்லா பிகரை விடவும், வீட்டுக்காரம்மா தான் அழகா இருக்காங்க...இதுக்குத்தான் கடவுள் எல்லாத்தையும் கழட்டி விட்டிருக்கிறார்."

"இலவச இணைப்பா இன்னொன்னு சொல்லிக்கிறேன்..."

"ம்.."

"ஆப்பரேசன் பண்ணி கண்ணை மட்டும் மாத்திரு.."


சிரித்தான். இப்போது இனிப்பான இல்லறம் நடத்திக்கொண்டிருக்கிறான். அடிக்கடி தொலைப்பேசியில் பழைய கதை பேசிக்கொள்கிறோம். சமீபகாலமாய் ஆன்மீகத்தில் அவனுக்கு நாட்டம் வந்து விட்டது. பேசும் போது தத்துவங்கள் பேசி என்னை வெறியேற்றுகிறான். சமீபத்தில் அவன் வீட்டுக்கு போயிருந்தேன். ஹாலில் பெரிய எழுத்துக்களில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. "இதுவும் கடந்து போகும்"

                                                                                                                ---முற்றும்---

வியாழன், 24 அக்டோபர், 2013

முட்டைக்கன்னிகளும் பின்னே அவனும் -( பகுதி 4)


                                         மு.க.பி.அ -- பகுதி 1

                                         மு.க.பி.அ -- பகுதி 2

                                         மு.க.பி.அ --பகுதி 3 






பிரவீன் சென்னையில் அந்த உலகப்பிரசித்தி பெற்ற மூன்றெழுத்து கார்ப்பரேட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். சேர்ந்த மூன்றாவது மாதத்திலேயே பைக் வாங்கினான். மிக்ஸி,கிரைண்டர் தவிர எல்லாமிருக்கிற போன் வாங்கினான். சொந்த பந்தங்கள் அவனது ஜாதகத்தை கேட்டார்கள்.இரண்டு வருடங்களில் அவனது குடும்பப்பொருளாதாரம் மாறிப்போனது. பிரவீன் அலட்டிக்கொள்ளவில்லை. ஊருக்கு வரும்போதெல்லாம் எனக்கு போன் செய்வான், சந்தித்துப் பேசுவோம். கடைசி ஆண்டில் நடந்த காம்பெஸ் இண்டர்வ்யூவில் என்னையும் ஒரு கம்பெனி வேலைக்கு எடுத்தார்கள். சென்னை வந்து சேர்ந்தேன். பேசியிருந்த படி நுங்கம்பாக்கத்தில் இருந்த பிரவீன் வீட்டுக்குப் போனேன். இரண்டு அறைகள் கொண்ட வாடகை வீடு அது. கூடவே பிரவீனின் நண்பன் ஒருவனும் தங்கியிருந்தான். அவன் தலையில் காரச்சட்டினியை கொட்டியது போல கலரிங் செய்திருந்தான்.

"உள்ள வா..ஏன்டா இவ்ளோ நேரம்.வேமா குளிச்சிட்டு கெளம்பு எரும..இன்னைக்கு நான் ட்ராப் பண்ணிடுறேன்.."   

விருந்தோம்பலையெல்லாம் தமிழன் மறந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது என எண்ணிக்கொண்டேன்.ஆபிசுக்கு போய்விட்டு மாலை வீட்டுக்கு வந்தேன். 
பிரவீன் குளித்துக்கொண்டிருந்தான். அவனுடைய போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தேன். "வாடா..எப்டிருந்துச்சு மொத நாள்.." என பேசிக்கொண்டே வெளியே வந்தான்.கொஞ்ச நேரத்தில் சுதாரித்து "நீ கேமெல்லாம் கம்ப்யூட்டரில் விளையாடு" என சொல்லி போனை புடுங்கினான். எவனெல்லாம் போனை தர பயப்படுகிறானோ அவனெல்லாம் எதோ ரகசியம் வைத்திருக்கிறான். பிரவீன் அடிக்கடி வெளியே தனியே நின்று போன் பேசுகிறான். மர்மமான முறையில் வெளியே கிளம்பிப்போகிறான். ஒரு நாள் அவனிடம் நானே கேட்டேன்.

"டேய்..என்னடா நடக்குது...வரலாறு திரும்புதா.."

"ஒன்கிட்ட சொல்லாமலா..நீ பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது...தூங்கு காலைல பேசுவோம்"

ஆபிஸிலிருக்கும்போது போன் செய்தான்.ஆபிஸ் முடிந்தவுடன் மயிலாப்பூரில் உள்ள சரவணபவன் வரச்சொன்னான். போனேன். பிரவீனும், சேலை கட்டிய ஒரு பெண்ணும் உட்கார்ந்திருந்தார்கள். அவளே தான். அந்த மஞ்சக்கலர் சுடிதார்.அவன் என்ன சொல்லப்போகிறான் என்று யூகிக்க எனக்கு அப்துல்கலாம் அறிவெல்லாம் தேவைப்படவில்லை. அவளையும் என்னையும் அறிமுகம் செய்து வைத்தான்.

"இது சிவா..நான் சொன்னேன்ல..டேய் இது மதி...மதிவதினி..."

கை கொடுத்தோம். ரொம்பவும் ஜாலியான பெண்ணாக இருந்தாள். ரொம்ப நாள் பழகியவரிடம் பேசியது போல் பேசினாள். இவளை வந்தடையத்தான் இவன் வாழ்க்கையில் இத்தனை திருப்பங்கள் போல என எண்ணிக்கொண்டேன். "இவரு...." என பிரவீனை கைகாட்டி பேசிய போது அவள் கண்களில் ஒரு அடர்த்தியான காதல் தெரிந்தது. அவளை ஆஸ்டலில் விட்டுவிட்டு வீடு வந்தான். மொட்டை மாடியில் நான் வானத்தை வெறித்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.பிரவீன் அமைதியாய் நடந்து வந்து என் பக்கத்தில் நின்றான்.

"தப்பா எடுத்துக்காதே..உன்கிட்ட சொல்ல சங்கடமா இருந்துச்சு.. அதான் ஒரு வருஷம் போகட்டும்...பாத்துட்டு சொல்லிக்கலாம்னு இருந்தேன்"

"நல்ல வேள..ஒரு குழந்தை பொறந்ததுக்குப்புறம் சொல்லிக்கலாம்னு நினைக்காம இருந்தியே.."

"டேய் என்ன கடுப்பாகிட்டியா??"

"அத விடு. சீரியஸா இருக்க தானே. அப்புறம் சரிப்பட்டு வராதுனு நினைக்குறேன்னு பொலம்ப மாட்டேள்ளே...."

"நான் எப்போவோ முடிவு பண்ணிட்டேன் அவ தான் என் பொண்டாட்டி.."




எனக்கும் அது தான் சரியெனத் தோன்றியது. அவனுக்கும் அவளுக்குமென ஒரு அழகான அலைவரிசை இருந்தது. கண்கள் வழியாகவே பேசிக்கொள்ள முடிகிறது.பிரவீனெல்லாம் இவ்வளவு சிரிப்பானென்பதே எனக்கு அந்த நாள் தான் தெரியும். இது சேர்ந்த ஜோடியில்லை பிறந்த ஜோடி என்றே பட்டது.இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தோம். எனக்கு நாலு மணி நேரமாய் முட்டிக்கொண்டு நின்ற கேள்வியை அப்போது தான் கேட்டேன்.  

"யாரு மொத சொன்னது..?"

எல்லா காதலர்களும் எதிர் கொள்ளும் கேள்வி.

"நான் தான். எனக்கு அவ க்ளோஸ் பிரெண்ட். என்னத்த சொல்ல..அவ எது பண்ணினாலும் பிடிக்குது. அவ கூட இருந்தா அவ்வளவு சந்தோசமா இருக்கு. அவளுக்கும் புக்ஸ்னா உயிர். வைரமுத்துவ பத்தி பேசுனானு வை, சாப்பாடு தண்ணி இல்லாம கேட்டுக்கிட்டே இருக்கலாம். யாரையும் கோவிச்சு ஒரு வார்த்தை பேச மாட்டா. எனக்கென்னவோ அவ நெத்தில "பெறுநர்- பிரவீன்" னு எழுதி இருக்குன்னு தோணிச்சு . எனக்கு எப்பிடி சொல்றதுன்னு தெரிலடா. ஒரு படபடப்பு,குறுகுறுப்பு, எல்லாத்துக்கும் மேல தெகட்டுறளவு சந்தோசம்...அவகிட்ட சொல்றதுன்னு முடிவு பண்ணினேன்..."

பிரவீனா இவ்வளவு பேசுறான்னு ஆச்சர்யம். இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் "ம்..அப்றம்.." என்றேன்.

" ஒரு நா..அவள பாக்க ஆஸ்டலுக்கு போயிட்டேன். செம்ம மேக் அப். என்னானாலும் பரவாயில்லைனு தைரியம். போன்ல கூப்பிட்டு வெளிய வர சொன்னேன். அவள பாத்தான்னே எல்லாமே மறந்து போச்சு. இந்த நைட் நேரத்துல திடீர்னு கரண்ட் போனா எப்டியிருக்கும் அது மாதிரி இருந்தது. வைரமுத்துவ நினைச்சுக்கிட்டேன். "மதி..என்னைய நீ எவ்வளவு கேவலமா நினைச்சாலும் பரவால்ல..ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு.." னு சொல்லிட்டு வேமா நடந்து வந்துட்டேன்."

"டேய் மாங்கா.. ரெண்டாங்களாஸ் பையன் கூட கொஞ்சம் பெட்டரா ப்ரபோஸ் பண்ணியிருப்பான்டா.. அப்புறமென்னாச்சி? "  





"அடுத்த நாள் காலைல கால் பண்ணுனா..வீட்டுக்கு கீழே இருக்கேன் வான்னு சொன்னா. மெரண்டுட்டேன். போனேன். கைல ஒரு பார்சலை கொடுத்தாள். ரெட் ரோஸை கொடுத்தாள். இதெல்லாம் கொடுத்திட்டு சொல்லிருக்கணும்னு சொன்னாள். சந்தோசம்னா அப்டி ஒரு சந்தோசம் எனக்கு..கண்ணுல அழுக முட்டிக்கிட்டு வருது..அவளை கட்டிப்பிடிச்சு அப்டியே முத்தம் கொடுத்திட்டேன்.."

நான் அவனை ஒரு மாதிரியாய் பார்ப்பதை உணர்ந்து " கன்னத்துல தான்டா.." என்றான். அப்பிடியே மணிக்கண்ணில் பேசிக்கொண்டு இருந்தான். எனக்கும் சுவாரசியமாய் இருந்தது. பேச்சு மதியின் குடும்பத்தை பற்றி போனது. அப்பா இல்லை,இரண்டு அக்காக்கள் இருக்கிறார்கள் என்றும் சொன்னான். போனில் இருந்த அவள் குடும்ப புகைப்படத்தை காட்டினான். எல்லோரும் சிரித்த முகமாய் இருந்தார்கள். 

"அதெல்லாம் சரி அவ வீட்ல சொல்லியாச்சா..."

"சொல்லப்போறோம்..."

"எப்போ.."

"நாளைக்கு..."

                                                                                     ------ நாளை க்ளைமேக்ஸ்-----

செவ்வாய், 22 அக்டோபர், 2013

முட்டைக்கன்னிகளும் பின்னே அவனும் (பகுதி-3)

                           
                                              மு.க.பி.அ -பகுதி 1

                                              மு.க.பி.அ -பகுதி 2


பிரவீன் ஒரு மாதம் முழுக்க பேசும் வார்த்தைகளின் எண்ணிக்கை, ஹரிணி ஒரு அமைதியான நாளில் பேசுவதை விட குறைவாகவே இருக்கும். எந்த விதத்திலும் இவர்களுக்குள் செட் ஆகாது என நான் நினைத்துக்  கொண்டிருக்கையில், இவர்கள் இருவரும் கைக்கோர்த்து நடந்துகொண்டிருந்தார்கள். அவள் தன் விருப்பத்தை இவனிடம் தெரிவிக்க, நம்மாளு மறுத்திருக்கிறார். அவள் விடாமல் விரட்ட, பாஸு சரண்டர் ஆகியிருக்கிறார். ஹரிணியின் அப்பாவும், பிரவீனின் அம்மாவும் ஒன்றுவிட்ட அண்ணன் தங்கையாம். ஆகையால் பிரச்சனை வர வாய்ப்பேதுமில்லை என நினைத்திருப்பார்கள். இந்தக்காதல் எப்பிடியும் புட்டுக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இருந்ததில்லை. ஆனால் எப்படி,எப்போது என்பதில் மட்டும் ஒரு குழப்பம் இருந்தது. அதுவும் ஒரு நாள் தீர்ந்தது. பிரவீன் போன் செய்திருந்தான்.

 "ப்ரீயா இருக்கியா..பேசணும்"

 "எனக்கு எதுவும் மாமா பொண்ணு உசார் ஆகலை. என்னோட போனுக்கெல்லாம் கிரடிட்கார்டு காரய்ங்க தவிர எவனும் கூப்பிடறதில்லை.வெட்டியா தான் இருக்கேன். நீங்க பேசலாம் ஆபிசர்.."

"வெளாட்டு மயிரா பேசுரதாயிருந்தா நான் போனை வைக்குறேன்.."

"விடுறா பிரவீன். சும்மா ஜாலிக்குத்தான..மேட்டருக்கு வா."

"ஹரிணியும் நானும் பிரிஞ்சிட்டோம். அவ எனக்கு செட் ஆக மாட்டாடா.."

"என்னடா ஆச்சு..."

"குடும்பப்பிரச்சனை, ரெண்டு பேர் வீட்டிலும் சண்டை போட்டுட்டாங்க. இவ எங்கிட்ட வந்து எங்கப்பாவ படு மோசமா பேசுனா.சப்புன்னு அறைஞ்சிட்டேன். எப்போப்பாத்தாலும் சண்டை வேற போடுறா, எனக்கும் சரியா வரும்னு தோணல..."

"அய்யோ...இதை அவ எப்டிடா தாங்குவா.."

"ஆமா தாங்க முடியாது தான். அதான் வீட்ல பாத்திருக்க பையன நவம்பர்ல கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்குறா.."

"என்னடா சொல்ற.."

"உனக்கு நான் சொன்னது கேட்ருச்சு"

வழக்கம் போல ஆறுதலை தெளித்து விட்டேன். அவள் எங்கிருந்தாலும் நல்லாயிருக்கட்டுமென ஆரம்பித்து, போனை வைக்கையில் அவளோட உட்பீ ஒரு டொச்சுப்பயலாத் தான் இருப்பான்னு முடித்தோம்.பிரவீனுக்கு கவலையை விட எரிச்சலே அதிகமாய் இருந்தது. அவனுக்குப் பெண்கள் மீது ஒரு ஒவ்வாமை உருவாகிப்போனது. அவனுக்கு பெரிய சோகமெல்லாம் இருந்தது போல தெரியவில்லை. நானும் சினிமாக்களில் காட்டும் காதல் மாதிரி நிஜக்காதல் இருக்காது போல என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் ஹரிணியின் கல்யாணத்தின் போது மூன்று மாதம் அவன் ஊருக்கே வரவில்லை. அவன் கண்டபடி படித்துக்கொண்டிருப்பதாக அவனது நெருங்கிய நண்பர்கள் சொன்னார்கள். குடும்பச்சண்டையின் போது ஹரிணியின் அப்பா "வக்கத்தவய்ங்க""என பிரவீன் குடும்பத்தின் பொருளாதாரத்தை பற்றி பேசியிருக்கிறார். கேள்விப்பட்ட பிரவீன் கடுப்பாகிப் போனான்.

அது கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து கொண்டிருந்த காலம். கணினி படித்து வேலைக்கு போவது குதிரைக் கொம்பாக இருந்தது. கடைசி செமெஸ்டரில் இருந்த நாலு அரியர்களை முடித்தான். பிற்பாடு சென்னைக்கு வந்து வேலை தேடிக்கொண்டிருந்தான். பெரிய கார்ப்பரேட் கம்பெனி ஒன்று  மதுரையில் ஒரு கல்லூரியில் நேர்முகத்தேர்வு வைத்திருந்தார்கள். பிரவீன் அதில் கலந்து கொள்ள வருவதாக சொன்னான்.நானும் மதுரையில் படித்துக்கொண்டிருந்ததால் போயிருந்தேன்.




"என்னடா இவ்ளோ இளச்சிட்டே.. எத்தன பேர எடுக்குறாங்களாம்."

"தெரில...ஆனா இத மிஸ் பண்ணேன்னு வை, அடுத்த இன்டர்வியூ வர இன்னொரு ஆறு மாசம் கூட ஆகலாம். நிலைமை அந்தளவு மோசமா இருக்கு"

கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வந்திருந்தார்கள். நிறைய பேர் முனுமுனுத்துக்கொண்டே படித்துக்கொண்டிருந்தார்கள். சாயங்காலம் நோட்டிஸ் போர்டில் முதல் முப்பது பேர் ஒட்டினார்கள். அதிலிருந்து பத்து பேர் எடுக்கப்போவதாகச் சொன்னார்கள். முண்டியடித்துக்கொண்டு பார்த்தோம். பிரவீனின் பேர் இருந்தது.

"டேய் பிரவீன். சத்தியமா நம்ப முடிலடா...ஆயிரத்தில முப்பது..அதுல நீயும் ஒருத்தனாடா...இப்படில்லாம் கூட உலகத்துல நடக்குமா.."

"கடைசி பத்துலையும் வருவேன்டா "

"அதுக்குள்ள சிம்பு மாதிரி பேச ஆரம்பிச்சிட்ட..நாளைக்கு பெர்சனல் இன்டர்வ்யூ வேற இருக்குடா..."

சொன்னது போல பெர்சனல் இன்டர்வியூவிலேயும் கில்லி அடித்தான்.




பிரவீன் புத்திசாலி தான் ஆனால் அவன் படிப்பை அவ்வளவு முக்கியமாய் எடுத்துக்கொண்டதில்லை. நானெல்லாம் அவனுக்கு அறிவுரை சொல்லும்படி தான் அவனது மதிப்பெண்கள் இருந்தது. திடீரென அவன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என திமுறவதை பார்க்கையில் வியப்பாக இருந்தது. அவன் கண்கள் முழுக்க கனவுகளும், தன்னம்பிக்கையும் தெரிந்தது. மேடையில் வைத்து தேர்வானவர்களுக்கு அப்பொழுதே பணி நியமனம் தந்தார்கள். கீழிருந்தே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் பக்கத்திலிருந்த ஒரு மஞ்ச சுடிதாரிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தான். விதி அவனுக்கு ஒரு வேலையை கொடுத்துவிட்டு தன் வேலையை காட்டப்பாக்கிறதோ என எனக்கு பயம் வந்தது. "ச்சே..சே..ஒரே குழியில ஒருத்தன் ஓயாமலா விழுவான்" என சமாதானம் ஆனேன். எல்லாம் முடிந்து கீழே வந்தான்.

"போலாமா டா... அப்பாக்கு பிரசர் மாத்திரை வாங்கிட்டுப் போய் விசயத்த சொல்லுவோம்...பி.பி ஏறிடப்போகுது...நீயும் வந்து சொல்லு இல்லேன்னா நம்ப மாட்டாரு"

"அதிருக்கட்டும்..யாரு அந்த மஞ்சள்.."

"ஓ அவளா...அவளும் நானும் தான் க்ரூப் டிஸ்கசன்ல ஒரு டீம்..ரெண்டு பேரும் செலெக்ட் ஆயிட்டோம் அதான் பேசிட்டு இருந்தோம்..ரொம்ப நல்ல பொண்ணு"

அவன் சொன்னவுடன் என் மூளைக்குள் கரண்ட் அடித்தது. அவளைத்தேடினேன். கூட்டம் கலைந்து போய்கொண்டிருந்தது.தூரத்தில் தோழிகளுடன் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தாள். சுருட்டை முடி, காதில் ஜிமிக்கி, கைகளில் மெகந்தி..இன்னும் தேடினேன். கண்கள். எனக்கு போன உயிர் திரும்பவும் வந்தது.அவளுக்கு முட்டைக்கண்ணில்லை. பிரவீனை பார்த்து சந்தோசமாய் சிரித்தேன்.அவனும் சிரித்தான்.விதியும் சிரித்தது.
   
                                                                                                           ------------ தொடரும் 

வெள்ளி, 18 அக்டோபர், 2013

முட்டைக்கன்னிகளும் பின்னே அவனும் (பகுதி 2)


                                           மு.க.பி.அ (பகுதி 1)




பத்தாம் வகுப்பு படிக்கிறவுனுக்கெல்லாம் காதல் வருமா , அதெல்லாம் தேவையா என்பதையெல்லாம் யோசித்து புரிந்துகொள்கிற அறிவு அப்பொழுது எங்களுக்கில்லை. பிரவீன் அது காதல் என்று உறுதியாய் நம்பினான். நான் அவனை நம்பினேன். வசுந்துராவின் கர்ச்சீப்பை தவிர எல்லாம் கடன் வாங்கியாகிவிட்டது.பெருசாய் சொல்லிக்கொள்ளும்படி முன்னேற்றமில்லை. பத்தாவுது பப்ளிக் பரீட்சை என்று அரசாங்கம் கவலைப்பட்டாலும் பிரவீன் கவலைப்படுவதாயில்லை. பிரவீன் இந்த காலங்களில் என்னைத்தவிர்க்க ஆரம்பித்தான். இந்த பெரியவுனுங்களே இப்படித்தான் நேரம் பார்த்து சிறியவர்களை சுழற்றிவிட்டுடுவானுங்க. இந்தக்காலத்தில் எனக்கு சின்னம்மை வந்து படுத்த படுக்கையாய் வீட்டில் இருந்தேன். இளநீர், டொரினோ, பத்து நாட்கள் விடுமுறை, டீவியில் கிரிக்கெட் போட்டிகள் என "சின்னம்மை" பத்து நாட்கள் என்னை சந்தோசமாய் வைத்துக்கொண்டாள்.

எல்லாம் முடிந்து டியூசன் போனேன். பிரவீனையும் காணலை முட்டைக்கன்னியையும் காணலை. செட் ஆகி ஓடிட்டாய்ங்களோ என அதிர்ந்தேன். விசாரித்ததில் அதை விட பெரிய அதிர்ச்சி கிடைத்தது. பிரவீன், வசுந்தராவுக்கு லெட்டர் கொடுத்துவிட்டதாகவும், அவள் அழுது ஊரைக்கூட்டியதாகவும் சொன்னார்கள். பிற்பாடு அவளின் அப்பாவும், டியூசன் வாத்தியாரும் சேர்ந்து பிரவீனை வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.வீட்டிலும் அவனுக்கு தர்மடி விழுந்ததாக சொன்னார்கள்.அவனை பார்க்க வேண்டும் போல இருந்தது. அவன் வீட்டுக்குக்கிளம்பினேன்.வழக்கம்போல அவன் ரூம் ஜன்னலில் கல்லை விட்டெறிந்தேன். மாடிக்கு வந்தான். முகம் வீங்கியிருந்தது. கண்ணெல்லாம் சிவந்து காணப்பட்டது. என்னைப் பார்த்து கண் கலங்கினான். ஆறுதல் சொல்வதெல்லாம் என்னுடைய ஏழாவது சிலபஸ்ஸில் இல்லை என்பதால் முழித்துக்கொண்டு நின்றேன். பிரவீன் அப்படி நிற்பதை பார்க்க ரொம்ப கஷ்டமாய் இருந்தது. என்னை நிமிர்ந்து பார்த்து "வீட்ல அப்பா என்கூட பேசவே மாட்டேன்னு சொல்லிட்டாரு. வெளியவே போக முடில சிவா..ரொம்ப அசிங்கமா இருக்கு."

" விடு பிரவீன். எல்லாம் சரியாகிடும். நாளைக்கு ஓடப்பட்டிக்காரய்ங்க கூட மாட்ச். அந்த தொண்ணக்கையன் பாலை வெளுத்துக்கட்டுவோம். எல்லாத்தையும் மறந்திட்டு பழைய மாதிரி இருப்போம்."

பிரவீன் பேசாமல் குனிந்திருந்தான். நிமிர்ந்து என்னைப் பார்த்து "ஒனக்கு ஒன்னு தெரியுமா..அந்த லெட்டரை நான் ரத்தத்தில எழுதினேன்". அவனவே அதிர்ந்து பார்த்தேன்.கையில் பேண்டேஜ். உலகத்திலேயே ரத்தத்தில் எழுதிய ஒரு காதல் கடிதத்திற்கு இந்தளவு அவமதிப்பு நடந்திருக்காது. கொஞ்ச நேரம் அமைதியாய் நின்று கொண்டிருந்தோம்.அழுதான்.குலுங்கி குலுங்கி அழுதான். அந்தக்காட்சியை என்னால் இன்னும் நினைவு கொள்ள முடிகிறது.




காலம் ஒரு விசித்திர சக்கரம். சங்கடங்கள் எல்லாத்தையும் மறக்கும் சம்பவங்கள் வந்துகொண்டே இருக்கும். பிரவீன் பழைய நிலைக்கு சில மாதங்களில் வந்து விட்டான். கிரிக்கெட்டுக்கு அதில் முக்கிய பங்குண்டு. இறுதி போட்டி ஒன்றில் பிரவீன் புல் ஷார்ட்டில் அடித்த சிக்சர், எங்கள் ஊர் இளவட்டங்கள் மத்தியில் பிரபலம் ஆனது. " அப்பிடியே அஜய் ஜடேஜா மாதிரி விளையாடுரான்ப்பா "  என அந்நாட்களில் அவனை சொல்வார்கள். நிறையமுறை எனக்கு டிரைவ் ஆடுவது எப்படி என சொல்லித்தந்திருக்கிறான். சுமாராய் படித்து பத்து, பன்னெண்டுகளை முடித்து இஞ்ஜினியரிங் சேர்ந்தான். இந்த நாட்களில் அவன் வசுந்தராவை பற்றியோ மற்ற பெண்களை பற்றியோ பேசியதில்லை. நான் கூட அவனை கேலியாய் " என்னடா முட்டைக்கண்ணிட்ட போய் திரும்பவும் ஜாமிட்ரி நோட் வாங்குவோமா.." என்பேன். லேசாய் சிரிப்பான்.

பிரவீன் இன்ஜினியரிங் படிக்க ஊரை விட்டு போனதுக்கப்புறம் என்னுடைய வாழ்க்கை மணிரத்னம் படம் போல் மிகவும் மெதுவாய் போனது. என்னுடைய வயது நண்பர்கள், படிப்பு என மெல்லமாய் ட்ராக் மாறினேன். பத்தாவுது ரிசல்ட் வந்தவுடன் பிரவீன் போன் செய்தான்.

"டேய்..கம்ப்யூட்டர் சயின்ஸ் எடு...ஒனக்கு பயலாஜி செட் ஆகாது..தவிர நீயெல்லாம் டாக்டர் ஆனா நாடு தாங்காது"

"போடா வென்று...அரியர் வச்சத பாஸ் பண்ணு.அப்புறம் ஒன்னோட நகைச்சுவைய இங்க தெளி.."

இப்படியாக போனுக்குள் எங்கள் நட்பு சுருங்கிப்போனது. நானும் ஸ்கூல்களை கடந்து கல்லூரி போனேன். ஊருடைய தொடர்பு குறைந்து போனது. தீபாவளி,பொங்கல்களின் போது தான் பிரவீனை நேரில் பார்க்க முடிந்தது. செல்போன் வாங்கியிருந்தான். தனக்கு எதோ நம்பரில் இருந்து அடிக்கடி கால் வருவதாகவும் ,எடுத்தால் பேசாமல் சிரிப்பு சத்தம் கேட்பதாகவும் சொன்னான். நான் வேறொரு மொபைலில் இருந்து அந்த எண்ணுக்கு கூப்பிட்டேன்.
ஒரு பெண் எடுத்தாள். சுதாரித்தேன். பிரவீன் தம்மை பத்த வைத்து என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான்.(புகை பிடிப்பது உடலுக்கு கேடு )

" மேடம்"

" ஹா..ச்சொல்லுங்க யார் பேசுறது?"

" பேச்சு நல்லா வருதே மேடம். சிலருக்கு நீங்க கால் பண்ணி பேசாம சிரிக்க மட்டும் செய்றீங்களாமே..?"

கட் செய்தாள். பிரவீன் சிரித்தான். அவன் இன்னமும் பெண்கள் கூட இயல்பாய் பேசுவது கிடையாது. அவனுக்கு அந்த மொபைல் மோகினி மீது ஆர்வமேதும் இல்லை.நான் விடுவதாய் இல்லை. திரும்பவும் அந்த நம்பருக்கு அழைத்தேன்.

" ஹலோ.அவ்ளோ பயமிருக்குல...இன்னொரு தடவ கால் பண்ணுன.."

" நீ அந்த கூட சுத்துற அரைடிக்கெட் தான... என்ன நாக்கு நீளுது.."

"  ஹே..பாத்து பேசு ...தைரியமிருந்தா..."

" நிப்பாட்டு...ஹரிணி தான் கூப்பிட்டேன்னு உங்க வீராதிவீரர்ட்ட சொல்லு.."

இந்த முறை நான் கட் செய்து விட்டேன். நெஞ்சு பட படவென அடித்தது. பிரவீனை பார்த்தேன். அவன் என்ன என்பது போல புருவத்தை உயர்த்தி என்னை பார்த்தான். "டேய் ..யாருடா ஹரிணி". கொஞ்சம் யோசித்தான்.

"  பிரகாஷ் மாமா பொண்ணுன்னு நினைக்கிறேன்.."







"  பேண்ட் போட்டுட்டு உங்க வீட்டுக்கு வருவாளே அந்த குண்டாச்சட்டியா??"

" ம்..ம் "

விதி இந்த முறை வீட்டுக்குள்ளிருந்தே ஆள் பிடித்திருந்தது. அவளுக்கும் துறுதுறுவென,மிகக்கூர்மையாய்,மிகப்பெரியதாய்,முட்டை வடிவிலான கண்கள் துருத்திக்கொண்டு இருந்தது.

                                                                                                          ---- தொடரும் 
   

வியாழன், 17 அக்டோபர், 2013

முட்டைக்கன்னிகளும் பின்னே அவனும் (பகுதி-1)

                           


இரவு ரொம்பவும் அமைதியாக இருந்தது.பன்னிரண்டரை மணி பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும். தூக்கத்துக்கும் எனக்கும் சில மில்லிமீட்டர்கள் தான் இடைவேளை. கொஞ்சமாய் நெருங்கிக்கொண்டிருந்தேன். சனியன் பிடித்த செல்போன் கதறியது. தூக்கம் மாய மானாய் ஓடிப்போனது. பிடித்த பாடலை சத்தியமாய் ரிங்டோனாய் வைக்கக்கூடாது. பாம்பேஜெய்ஸ்ரீயின் குரல் சந்திரமுகி கதரலாய் எனக்குக் கேட்கிறது.செல்போனின் திரையை பார்த்தேன். பிரவீன் கூப்பிடுறான். கண்டிப்பாய் புலம்பப்போறான். கல்யாணமானவனுங்க போன் நம்பரையெல்லாம் ப்ளாக் பண்ற அப்ளிகேசன் வந்தா நல்லாயிருக்கும்.

"  தூங்கிட்டியா.."

"  இல்ல... கணபதி ஹோமம் பண்ணிட்டு இருக்கேன். டேய் மணி பன்னெண்டு டா"

"  என்னடா கோவிச்சுக்கிட்டியா.."

"  செல்போன் வழியா கழுத்த நெரிச்சு கொல்ல முடியாதுங்கற ஒரே காரணத்துனால தான் இன்னும் நீ உயிரோடவே இருக்கிற...."

"  கொல்லுடா..நீயும் என்ன கொல்லு...நேத்து அவ......"  

வழக்கம் போல் குடும்பச்சண்டை. குடித்திருந்தான். அரைமணி நேரம் அறுத்துக்கொன்றான். உலகத்துலேயே கஷ்டமான வேலைல ஒன்னு புலம்புறவுனுக்கு "ம்" போடுறது தான். ஒருவழியாய் பேச்சு கடைசி கட்டத்தை எட்டியது. "விடுறா ...எப்பயும் நடக்குறது தான....எல்லாம் சரியாகிடும்.." "என்றேன்.

"ம்ம்.. இந்த முட்டக்கன்னிகளே இப்படித்தான்டா...வைக்குறேன்.பாப்போம்டா.... பாய் "

திரும்பவும் படுத்தேன். அவன் கடைசியாய் சொன்ன வார்த்தைகள் என் காதுக்குள் ரீங்காரம் அடித்துக்கொண்டிருந்தது. அவன் சொன்னது வாஸ்தவம் தான். 

முட்டைக்கன்னிகளுக்கு அவன் வாழ்க்கையில் முக்கிய பங்குண்டு. தூக்கம் வராத இரவுகளில் கடந்த காலங்களில் ஒருமுறை நடந்து பார்த்து வருவது அலாதி சுகம். என் நினைவுகள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அழகாய் அமைந்திருக்கும் தேனிக்கு பறந்தது. ரிவர்ஸ் பட்டனை தட்டி பதினஞ்சு வருஷம் பின்னாடி போனேன்.நானும் பிரவீனும் எங்கள் ஏரியா கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள். பிரவீன் என்னை விட மூன்று வயது பெரியவன். சின்ன வயதிலிருந்தே வாடா போடாவென கூப்பிட்டு பழகிப்போனோம். ஒரே டியூசனில் வேறு படித்தோம். 



பிரவீன் ஆள் பார்க்க பழைய கால நடிகர் கார்த்திக் போல இருப்பான். மாநிறம்,நல்ல உயரம். ட்யூசனை கட்டடித்து கிரிக்கெட் டோர்ணமென்ட் போவது, விளையாடப்போறோம்னு சொல்லிட்டு வீரபாண்டி ஆற்றில் குளிக்கப் போவது, வீட்டுக்கு தெரியாமல் "யமஹா" க்களை ஓட்டி கீழே விழுவது என எனக்கும் பிரவீனுக்கும் கெமிஸ்ட்ரி செட் ஆகிப்போனது. என்னை அவன் வயதுக்கு சரியாய் நடத்துவான், அதனாலேயே அவனை எனக்கு பிடித்துப்போனது. காதலுக்கு மரியாதை படம் வந்து ஓடிக்கொண்டிருந்த சமயம் அது. பிரவீன் நடிகர் விஜய் போல கண்ணாடி போட்டுக்கொண்டான். ஒரு மாதிரி வாயை திறக்காமல் விஜய் போலவே என்னிடம் பேசிக்காட்டுவான். நான் சிரிப்பேன். அன்று டியூசனில் நானும் அவனும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தோம். அப்பொழுது தான் அவள் உள்ளே வந்து எங்கள் எதிரே அமர்ந்தாள். நீல நிற சுடிதார், ரெட்டை ஜடை,வடிவான தோற்றம்.பிரவீன் அதற்குள் அவளை சாலினியாகவும் தன்னை விஜயாகவும் பாவித்து 
கற்பனைக்குள் போய்விட்டான்.

"யாருடா அது..." என் காதை கடித்தான்.

"  டெய்லி டியூசன் வந்தா தெரியும். நம்ம இங்க கௌரவ தோற்றம் தான கொடுக்குறோம்.."



பக்கத்து பட்சிகளை விசாரித்ததில் அவள் ஊருக்கு புதுசு. அப்பாவுக்கு ஸ்டேட் பேங்க் வேலை. பேர் வசுந்தரா. பத்தாம் வகுப்பு என தகவல் கிடைத்தது. பிரவீனும் பத்தாவது படித்துக்கொண்டிருந்தான். அன்றிலிருந்து அவன் என்னை விட வேகமாக டியூசன் போக ஆரம்பித்தான். கண்ணாடி முன் அரைமணி நேரம் நின்று தாறுமாறாய் தலைசீவினான். எனக்கு கொஞ்சம் எரிச்சலாய் இருந்தது. போயும் போய் ஒரு பெண்ணுக்காகவா இவ்வளவு மெனக்கெடல். அந்த காலங்களில் பெண்ணை விட எனக்கு கிரிக்கெட் பேட் கவர்ச்சியாய் தெரிந்தது.

"பிரவீன் ரொம்ப ஓவர். போனவாரம் மேட்ச்சுக்கு கூட வரல. அந்த முட்டக்கண்ணி உன் கூட பேசக்கூட மாட்றா.."

"  நீ சின்ன பையன் உனக்கு இதெல்லாம் தெரியாது.. அதிகம் பேசாதே.."

ரெண்டு நாள் பேசாமல் இருந்தோம். பிற்பாடு அவனே வந்து பேசினான். அன்று அவன் அவளிடம் பேசப்போவதாகவும், என்னைக்கூட துணைக்கு வரவேண்டும் எனவும் அழைத்தான். பெரியவர்கள் விஷயத்தை தெரிந்த கொள்வதில் இருக்கும் இயற்கையான ஆசை எனக்கும் வந்தது. சரியென்றேன். மாட்டினால் கூட அப்ரூவராகி விடலாம் என முடிவு செய்தேன். ரெண்டு பேரும் சைக்களில் டியூசன் முடிந்ததும் அவளை விரட்டிப்போனோம். எனக்கு பட படவென இருந்தது. முதல் முதலாய் ஒரு காதல் காட்சியை நேரில் பார்க்கப் போகிறேன். பிரவீனும் எதோ முனுமுனுத்துக்கொண்டே வண்டியை ஓட்டினான். வண்டி முட்டக்கன்னியை நெருங்கிவிட்டது. எனக்கே இப்படி படபடனு இருக்கே இந்த காதல் பண்றவைங்கெல்லாம் ஹார்ட் அட்டாக் வந்து செத்துற மாட்டாய்ங்களா என நினைத்துக்கொண்டேன். வண்டி அவள் குறுக்கே போய் நின்றுவிட்டது.

பிரவீன் அவளை நேரே பார்த்து "ஏங்க உங்க ஜாமிட்ரி நோட்ட தரீங்களா...நான் நாளைக்கு தரேன் ப்ளீஸ்..."

அவள் தன் முட்டைக்கண்ணை உருட்டி அவனை ஒருமுறை பார்த்தாள். பிரவீனின் மூஞ்சை எந்த ஆங்கிளில் பார்த்தாலும் படிக்கிற பையன் மாதிரி தெரியமாட்டான். ஆகையால் தரமாட்டாள் என்று தான் நினைத்தேன். ஆனால் நோட்டைக் கொடுத்துவிட்டாள். பிரவீனும் பெருமாள் கோவில் பிரசாதம் வாங்குவதை போல் அதை பவ்யமாய் வாங்கிக்கொண்டான். மூன்றுமுறை தேங்க்ஸ் சொல்லிவிட்டான்.திரும்பவும் வண்டியை கிளப்பினோம்.

"டேய் சோத்து மூட்டை திரும்பிப்பாருடா...இன்னும் பாக்குராளா"

பார்த்தேன். அவள் வெறித்து எங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"ஆமாடா..எதோ செயின அத்துட்டு வந்த மாதிரி "ஆ"னு பாக்குறா.."


                                                                                                                  ----  தொடரும் 

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

சென்னை வாகன ஓட்டிகளுக்கு

         

தமிழகத்தின் எந்த ஊரில் நீங்கள் வாகன உரிமம் எடுத்திருந்தாலும், சென்னையில் வாகனம் ஓட்ட உங்களுக்கு அளப்பெரிய ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த சூட்சமம் பிடிபடாததால் பலருக்கு காலையில் அலுவலகம் போவது காஷ்மீர் பார்டரில் டேங்கரில் போவது போல் திகிலாகவே இருக்கிறது. தமிழன் தன்னுடைய கெட்ட வார்த்தை பேசும் திறனை ரோட்டிலேதான் வளர்த்துகொள்கிறான். சென்னையில் வாகனம் ஓட்ட முக்கியமான சில விதிமுறைகள் உள்ளன.

1) சென்னையை பொறுத்தவரை சிகப்பு,பச்சை விளக்குகள் எல்லாம் ஒன்று தான். ஒரே நிறத்தை எந்நேரமும் காண்பித்தால் போர் அடிக்கும் என்பதாலேயே மாற்றி மாற்றி காண்பிக்க படுகிறது.சிகப்பு விளக்கு எறிந்தால் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு ஹாயாக போய் விடலாம்.ஆகையால் பச்சை போட்டவுடன் நீங்க பாட்டுக்கு "பப்பரப்பே" என போனால் , எந்த மூலையிலிருந்தோ காரோ, பைக்கோ உங்க வண்டியை கிஸ் அடிக்க வாய்ப்பிருக்கிறது. சிக்னல் போட்டவுடன் முன்னூற்று அறுபது டிகிரியில் தலையை சுற்றி பார்த்து கிளம்புவது உசித்தம்.

2)காண்டாமிருகத்துக்கும், கரப்பான்பூச்சிக்கும் க்ராஸில் பிறந்தது போல் சைஸில் சில இரண்டு சக்கர வண்டிகள் ஊருக்குள் வலம் வருகின்றன. அதைக்கண்டாலே ஒதுங்கி வழி விட்டுவிடுங்கள். ஏனெனில் அவர்கள் ஆத்மா எந்த தெருமுக்கிலும் சாந்தி அடையலாம். அவர்கள் எந்த நேரம் எந்த பக்கம் திரும்புவார்கள் என கடவுளுக்கே தெரியாது.

3)மாநகராட்சி பேருந்தின் அருகே வண்டியை செலுத்தாதீர்கள். ஜன்னல் சீட்டுவாசிகள் ரோட்டில் எச்சில் துப்பி விளையாடுவார்கள். நீங்கள் முறைத்து பார்த்தால் "அச்சச்சோ..பாத்து போகக்கூடாதாப்பா.." என்று சொல்லி வெறியேற்றுவார்கள்.

4)கால்டாக்சிகள்,தண்ணிலாரியையெல்லாம் விட கொடுமையானவர்கள்.உங்கள் பக்கத்தில் வந்து ஹாரன் அடித்து பீதியை கிளப்புவார்கள்.சிலநேரங்களில் உங்கள்  அக்கிளுக்கு அடியில் புகுந்து கூட சைடு வாங்குவார்கள். அவன் போன பிறகு நாலைந்து கெட்டவார்த்தையை உபயோகிங்கள். உங்கள் மன அழுத்தம் சன்னமாய் குறையும்.

5)சென்னையின் பொதுஜனம் எந்த நேரமும் முன்னறிவிப்பின்றி காலாற ரோட்டை கடப்பார்கள். அதிலும் டாஸ்மாக் இருக்கும் ரோட்டில் ஆக்சலரேட்டரில் காலை வைக்காதீர்.

6)சென்னையின் ஓட்டுனர்கள் ப்ரேக்கில்லாமல் கூட வண்டி ஓட்டுவார்கள் ஆனால் ஹாரன் இல்லாமல் மாட்டார்கள். கோபத்தை காட்ட, சந்தோசத்தை வெளிப்படுத்த, பிகர்களின் கவனத்தை ஈர்க்க, சுறுசுறுப்பாக இருக்க என எல்லா காரணங்களுக்காகவும் ஹாரனில் டியூன் போடுவார்கள். நீங்கள் பதற தேவையில்லை.

7) டீ.நகருக்கு ஞாயிற்றுக்கிழமையில் டூ வீலரில் போவதும் வீராச்சாமி படத்தை 3டியில் பார்ப்பதும் ஒன்றுதான். எரிச்சல் எக்குத்தப்பாய் வரும். டீ நகருக்கு வண்டியில் போகாதீர்கள். என்னைக்கேட்டால் டீ நகருக்கே போகாதீர்கள்.

8) மனைவி உடனிருந்தால் அவருடன் பேசிக்கொண்டே வண்டியை செலுத்துங்கள். ரோட்டில் இருக்கும் எரிச்சல் கொஞ்சம் கம்மி தான் என்று தோன்றும் .

9) காலையில் அலுவலகம் போகும் போது யாராவது உங்களை வேகமாய் சைடு வாங்கிச்சென்றால் காண்டாகி வேகத்தை கூட்டாதீர். இந்த ஊரின் ரோடுகள் சிக்னல்களாலும், ட்ராபிக்குகளாலும் ஆனது. பயபுள்ள எப்படி போனாலும் நமக்கு முன்னாடி எதிலாவது சிக்கி நின்றிருப்பான். 

10) புதிதாய் இருக்கும் கார்கள் கொஞ்சம் நிதானமாய் போகும், அதிலேயே "L" போட்டிருந்தால் ரொம்பவே நிதானமாய் போகும். அதுவே கார் கொஞ்சம் ஆங்காங்கே நெளிந்திருந்தால் அவர்கள் வீடியோ கேம்களில் கார் ஓட்டுவது போல் ஓட்டுவார்கள். இதெல்லாம் நாம் சூத்திரம் போல் மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டும்.

11)மழை பெய்த அடுத்த நாள் ரோட்டை மிக கவனமாய் பார்த்துக்கொள்ளுங்கள். ரோட்டில் ஆங்காங்கே கிணறுகள் இருக்கும்.

12) சென்னையின் காற்று எப்போதும் மண்ணைத்தூற்றி நம்மை சபிக்கும்.அதற்காகவாவது ஹெல்மெட் அணிந்து கொள்ளலாம்.

13) காலை எட்டு டூ பத்து மற்றும் மாலை ஏழு டூ ஒன்பது வண்டி ஓட்டினால் பொறுமையின் முழுமையான அர்த்தம் உங்களுக்கு பிடி பட்டுவிடும்.

14)இதற்காகவா ஈ.எம்.ஐ போட்டு வண்டியெல்லாம் வாங்கினேன் என தோன்றினால் தினம் பேருந்துகளில் நொந்து செல்லும் பொதுஜனத்தை பாருங்கள். பிற்பாடு "அடையார் போகனும்பா..எவ்ளோ" என ஆட்டோ ட்ரைவரிடமும் கேட்டுப் பாருங்கள். இது எவ்வளவோ தேவலைடா எனத் தோன்றும்.




புதன், 6 மார்ச், 2013

படைப்பாளி




எத்தனை படங்கள்,எவ்வளவு வாசிப்பு, இடைவிடாத ரசனை இவ்வளவு இருந்தும் இன்னும் என்னால் ஒன்னும் செய்ய முடியவில்லையே. எனக்குள் இருக்கிற படைப்பாளி மட்டையாகிக்கிடக்கிறானே என தாங்கொணா துயரம் அடைந்து கொண்டு இருந்தேன். ஸ்கூல்ல ஒரு தடவை திருப்பூர் குமரன் வேஷம் போட்ட போது எல்லோரும் கை தட்டியதும், ஒரு பெரியவர் வந்து கண்கலங்கி என்னை கட்டிக்கொண்டது ஆகிய காட்சிகள் என்னுடைய 34 இஞ்ச் மன ஸ்க்ரீனில் ஓடியது. புது உத்வேகம் பெற்று என் தன்னம்பிக்கை தாறுமாறானது. டைரிகளில் ரொம்ப வேகமாய் எழுதி,அதை விட வேகமாய்கிழித்தேன். அடிக்கடி மொட்டை மாடியில் உட்கார்ந்து வானத்தை வெறித்து பார்த்தேன். மணிரத்தினத்தின் திரைக்கதையில் உள்ள பிழைகளை ஆராய்ந்தேன். எனக்குள் இருக்கிற படைப்பாளி "கலா"க்காவே "எக்செல்லென்ட்" சொல்லுமளவுக்கு உக்கிரமாய் நடனம் ஆடினான். களத்தில் இறங்குவதென முடிவு கட்டி,ஒரு நாள் சதீசுக்கு போன் செய்தேன். 

"சொல்லுப்பா..பேசி ரொம்ப நாளாச்சு..எதுவும் பிகர் செட் ஆகிடுச்சா??"

"ப்ச். ஒரு முக்கியமான மேட்டர்.. ஒரு குறும்படம் எடுக்கலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்.."

"சூப்பர் நல்லதா போச்சு. அடுத்த வாரம் என் மச்சினச்சி கல்யாணம் வருது. அதுல வந்து ஆரம்பிச்சிரு.."

"யோவ்..என்ன வெளாட்டா இருக்கா.."

"இல்லப்பா..குறும்படம்னா போட்டோ தான..."

போனை வைத்தேன். என்னை எள்ளிநகையாடும் இந்த உலகுக்கு நான் யாரென புரியவைக்க வேண்டுமென சூளுரைத்தேன். இராவோடு இராவாய் ஒரு உயிரைக்கரைக்கும் காதல் கதை எழுதினேன். ரொம்ப பெரிசாய் இருந்ததால் அதை கைமா பண்ணி பத்து நிமிடமாய் மாற்றினேன். மீண்டும் மீண்டும் படித்து பார்த்தேன். எனக்கே அழுகை வந்தது. பார்த்து உறையப் போகிற ரசிககண்மணிகளை நினைத்து பரிதாபப்பட்டேன். கொஞ்சம் யோசித்து பார்த்ததில் பட்ஜெட் பாதாளத்தில் இருந்தது தெரியவந்தது. அதனால் ஐ.டி ஹீரோயின், கொரியர் ஆபிஸ் கிளார்க் ஆனாள். பேங்க் மேனேஜர் கதாநாயகன்,
பலசரக்கடை வைத்தான். அதனாலென்ன கோழியா முக்கியம்,குழம்பு தான் முக்கியம். கேமரா முதற்கொண்டு தொண்ணூறு சதவீத வேலை முடிந்து விட்டதாய் தோன்றியது. ஆனால் அதற்கு பிறகு தான் "சனி பகவான்" சிறப்புத்தோற்றத்தில் என் படத்தில் எனக்கே தெரியாமல் இருந்திருக்கிறாரென தெரிந்தது. நாயகனும் அவனது தோழர்கள் ஆகியோரை சேர்ப்பதுக்குள் சலூனுக்கு போகாமலே எனக்கு பாதி முடி குறைந்து போனது. கதாநாயகன் ரோலுக்கு எவனைக்கேட்டாலும் "மச்சி..நான் வீகேண்ட்லாம் பிசி.." "என்னோட ஒய்பை கேட்டுச்சொல்றேன்.." "சென்னை வர முடியாதுடா..." என காரணங்கள் 
சொன்னார்கள். சிலர் சொன்ன காரணங்கள் என் கதையை விட பெரிதாய் இருந்தததால் இங்கே நான் குறிப்பிடவில்லை. கடைசியாய் நவீன் ஞாபகம் வந்ததது. அவன் ஒரு சாம்பார் சாதமே என மனம் யோசித்தது. அது சரி நம்ம என்ன "ராம்போ" படமா எடுக்க போறோம் என என்னை நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன். அவனிடம் பேசி ஓகே பண்ணினேன்.



"ஒன்னும் பிரச்சனையேயில்ல... ரெண்டே நாள் தான் சூட்டிங்...நம்ம போரூர்ல கிஷோர் வீடு இருக்குல அங்க சனிக்கிழம காலைல எட்டுக்கு வந்திரு.."

"பயமா இருக்குடா.. எனக்கு அவ்வளவா நடிக்க வராது..பாத்துட்டு கடுப்பாகிற மாட்டேளே.."

"ஒன்னுமில்லடா..நீ சும்மா எப்பயும் போல இரு அதுவே போதும். ஹீரோ கேரக்டர் கூட கொஞ்சம் அரலூசு தான்.."

"நோ ஜோக்கிங் ப்ளீஸ். அப்றம் என் பேர போடுறப்போ கடைசி ரெண்டு "என்" வரும்..அத மறந்துடாத.."

"டன்"

பவர்ஸ்டார்லாம் எவ்வளவோ பரவாயில்லை என நினைத்துக்கொண்டேன். இதுவே இந்த கதியென்றால் ஹீரோயின் தேடுதல் பற்றி சொன்னால், கமலுக்கு அனுப்பியது போல் எனக்கு நீங்களே மணி ஆர்டர் அனுப்புவீர்கள். "அய்யயோ எங்க வீட்ல தெரிஞ்சா கொன்றுவாங்க.." ,"எல்லாமே கேர்ல்ஸ் நடிக்கிறாங்கனா யோசிக்கலாம்" , "எனக்கு அலையன்ஸ் பாத்திட்டு இருக்காங்க..சாரி.." போன்ற பதில்கள் வந்து என் லட்சியத்தை பதம் பார்த்துக்கொண்டிருந்தது. பெண் குலத்தின் மீதே கோபம் வந்தது. கடுப்பில் பேசாமல் ஹீரோவை ஹோமோசெக்சுவலாய் மாற்றி விடலாமா என யோசித்தேன். நல்லவேளையாய் ஒளி பிறந்தது.ஆபிசில் உடன் வேலை செய்யும் கல்கத்தா பொண்ணு "நான் நடிக்கிறேன்" என்றாள். அவளும் சனிக்கிழமை மட்டும் தான் நான் ப்ரீ என்றாள். எது எப்படியோ அந்த சத்தியஜீத்ரேவே கொல்கத்தா காளியை அனுப்பி என் துயரம் போக்கியிருக்கிறார் என பரவசம் அடைந்தேன். வெற்றிகரமாய் அந்த சனிக்கிழமை வந்தது.


காலையில் ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி போரூர் அடைந்து வேலையை ஆரம்பித்தேன். கேமரா, மூவி மேக்கர் மென்பொருள், உடைகள், இடங்கள் எல்லாம் தயார். நவீனும் வந்து விட்டான். அவனுக்கு கைலி கட்டிவிட்டு பலசரக்கடை அண்ணாச்சியாக்கினேன். ஹீரோயின் தன்யா வருகிறவரை  இவனை ரெடி செய்வோம் என எண்ணி ""டேய் நவீன் எங்க உன் கடைல இருக்கிற தேங்கா எண்ணைக்கு விலை சொல்லு பாக்கலாம்" அவன் பெருமையாய் கைலியாய் மடித்து விட்டு "கோக்க நட் ஆயில் ஆப் லிட்டர் பாட்டி ருப்பீஸ் ..." என்றான். நான் கடுப்பானேன். அப்பயே திட்டினால் ஓடிவிடுவான் என்பதால் அமைதியானேன். நம்ம கல்கத்தா காளி வர லேட் ஆனதால் கால் செய்தேன்.

"தன்யா எங்கம்மா இருக்க..திருச்சிலேர்ந்தே இங்க அஞ்சு மணி நேரத்துல வந்திரலாம்..இங்கிருக்கிற மந்தவெளில இருந்து வர இவ்ளோ நேரமா.."

"காலைல பாத்ரூம்ல வழுக்கி விழுந்திட்டேன்.ஒரு வழியா கெளம்பி வந்து பஸ்ஸ்டாப்ல நிக்குறேன். ஒரு கார்காரன் சேரை அடிச்சு விட்டுட்டான்" என ஆங்கிலத்தில் சொன்னாள்.

"சரி வேகமா வா மா " என போனை வைத்தேன். அவள் சொன்ன காரணத்தை யோசித்து பார்த்த போது அவள் கண்டிப்பாய் நல்லா நடிப்பாள் எனத்தோன்றியது. பத்தரைக்கு வந்து சேர்ந்தாள். நம்ம ஹீரோ 

வெண்பொங்கல் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தார். தன்யாவை பார்த்த போது எதோ அவனது அத்தை பொண்ணை பார்ப்பது போல வெக்கப்பட்டுக்கொண்டே பார்த்தான். இருவரையும் ஹலோ சொல்ல வைத்தேன். கொஞ்ச நேரம் எல்லோரையும் உட்கார வைத்து அந்த சீனை விளக்கினேன். அந்த பத்து நிமிடத்துக்குள் தன்யாவுக்கு மூனு காலும், நவீனுக்கு நாலு கொட்டவியும் வந்தன.

"ஷண்முகம் கைலியை மடித்த படி சாமான்களை கொடுத்த வண்ணம் உள்ளான். கோமதி கடைக்கு வருகிறாள். "கல்ல பருப்பு இருநூறு" என்கிறாள் மொட்டையாய். அவளை ஒரு முறை ஊடுரவுகிற மாதிரி பார்த்துவிட்டு ,பொட்டணம் கட்டி கொடுக்கிறான். அவள் தலையை மீண்டும் பார்த்து விட்டு அவனாய் சீயக்காய் பாக்கெட் சேர்த்து கொடுக்கிறான். அவள் மிதமாய் சிரித்துவிட்டு கிளம்புகையில் கடையில் ஐம்பது ரூபா நோட்டை நீட்டும் சிறுவனிடம் "ஏன்..சில்ர கொண்டு வராதுதான...வாங்குறது மூனு ரூபாய்க்கு.." என கடிந்துவிட்டுப் போகிறாள்." சொல்லி முடித்தேன்.




அமைதியாய் கேட்டுவிட்டு தன்யா, " வாட் இஸ் சில்ர, கள்ளே பருப்பு, சீக்காய்.." என டவுட் கேட்டு தெளிந்தாள். நம்ம ஹீரோ கான்பிடென்ட்டாய் இருந்தார். எடுக்க ஆரம்பித்தோம். நவீனை பொட்டணம் மடிக்க சொன்னால் கல்லபருப்பை பேப்பருக்குள் போட்டு கத்திக்கப்பல் செய்வது போல எதோ செய்து கொண்டிருந்தான். அவனை அசால்டாய் தெரிந்தவனை பார்ப்பது போல் சைடாய் பார் என்றால் ஜூவில் புலியை பார்ப்பது போல் பார்த்தாள். முதலில் சிரித்து கலாய்த்து ஜாலியாய் வேலை பார்த்தேன். பின் அமைதியானேன்.பின் வெறியானேன். பின் கத்தினேன்.

"டேய் எத்தன தடவ சொல்றது லைட்டா சிரி...ஆல்ரெடி செட் ஆகிடுச்சு...ஏன் இவ்ளோ அகலமா சிரிக்கிற.."

"தன்ஸ்..இப்படி பயந்து போய் பார்க்கக்கூடாது..அற்பமா பாரு..அவன் மூஞ்ச பாத்தே பேசு..."

"நவீன் கைலி விழாது டா..அதான் பெல்ட் போட்ருகோமே..நேரா பாரு..."

"எம்மா அது ஈநூறு இல்ல இருநூறு... ஏன் மூஞ்சி சாணிய மிதிச்ச மாதிரி போகுது..அவ்வளவு ரியாக்சன் தேவ இல்ல.."



இப்படியாக அந்த ஒரு பேரா வை எடுக்க சாயங்காலம் ஆனது. நவீன் வந்தான். "ஆறு மணிக்கு கெளம்பிடலாம்ல..நாங்க பேமிலியா நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போறோம்.." நான் எதுவும் பேசவில்லை. அவனையே பார்த்தேன். நாம வேணும்னா "நாளைக்கு.." இழுத்தான். தன்யா வந்தாள். அவளும் ஒரு காரணம் சொன்னாள். அவள் மேற்கொண்டு நாளை முடியாது அடுத்த வாரம் ஐ ஆம் ப்ரீ என்றாள். திரும்பி நவீனை பார்த்தேன். "அடுத்த வாரம் மகா சிவராத்திரி வீட்ல பங்சன் இருக்கு..". மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவர்களை அனுப்பி வைத்தேன். எல்லா ஆர்வமும் வடிந்து வலியுடன் வீடு வந்து படுக்கையில் சாய்ந்தேன். கங்கா கால் செய்தான்.

"சொல்றா"

"ஹாய் டா.. நான் ஒரு ஷாட் பிலிம் எடுக்கலாம்னு இருக்கேன்..இந்த பிசா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரி லைவ்லியா ட்ரை பண்ணலாம்னு..."

"ஹஹஹா"

"ஏன்டா சிரிக்கிற.."

"எல்லார்குள்ளேயும் ஒரு படைப்பாளி தூங்கிட்டே இருக்கான்..."

"கரெக்டு டா"

"அவன் தூங்கிட்டு மட்டுமே இருந்தா எல்லாருக்கும் நல்லது.."  


சனி, 12 ஜனவரி, 2013

உபத்திரமில்லை

                                             

 காலத்தில்  கரைந்து   கானல் நீராகிப்போனது
   உங்களுடன் நான் நனைந்த தருணங்கள்.
எனக்கு  நினைவுகளை  கொடுத்து விட்டு
        என் நிஜத்திலிருந்து விடுபட்டு போனீர்கள்.


பள்ளிக்கு கூட வரும் சைக்கிள் தோழர்கள்
     விரட்டி விரட்டி சைட் அடித்த முட்டக்கண்ணி.
பட்ட பெயரில் பதிந்து போன ஆசிரியர்கள்
      வயதுக்கு வந்த பின் காணமல் போன தோழிகள்...


சுவாரஸ்யமாய் பேய்க்கதை சொல்லிய
                     வாட்ச்மேன் வீரமணி
"லெக் ஸ்பின்" சொல்லிக்கொடுத்த
                பிரசாத் அண்ணன்.


எல்லோரைப் போலவும் பல்கிப்பெருகி  நிற்கிறது
    என்  வாழ்க்கையிலிருந்து காணாமல் போனோர் பட்டியல்.
நீங்கள் எங்கிருக்கிறீர்... என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா??
        என் குரலை கண்டுகொள்வீரா?...


ஒரு வேளை  மறந்து போனீரா ??
      அல்லது  ஞாபகம் தூண்டினால் "அட..எப்டி டா இருக்க.." என ஓடி வந்து
             கட்டிக்கொள்வீரோ??


இது எதுவுமில்லாமல் மாண்டு போனீரா??
      எங்கோ புகைப்படங்களில் சந்தனப்பொட்டுடன்
             சிரித்துக்கொண்டிருக்கிறீரா??


உண்மையைச் சொல்லட்டுமா..எனக்கு அதுபற்றி அக்கறையில்லை.
   காலம் கூட்டிக்கொண்டு போனோரும் ,
         காலன் கூட்டிக்கொண்டு போனோரும்,
      எந்நாளும் திரும்புவதில்லை..அழுதென்ன செய்ய...


உபத்திரமில்லை. நீங்கள் தான் என் மூலையில்
        உறைந்த செல்களுக்குள் உலாவிக்கொண்டே இருக்குறீர்களே.
நான் நினைக்கையில் வந்து சிரிப்பீர்கள்.
          நிகழ்வுகளை பிசகாமல் மீண்டும் செய்து காண்பிப்பீர்.


உங்களுக்கு முதுமை இல்லை.முடிக்கழிவில்லை.
      நோய்களேதுமில்லை.  உபத்திரமில்லை.
நான் வாழும்வரை  நீங்களும் வாழ்வீர்
         உங்களுக்கு மரணமுமில்லை!!!!!!!!