வெள்ளி, 26 டிசம்பர், 2014

எழுத்தாளன் - பகுதி2

                                                                                                    எழுத்தாளன்- பகுதி 1

இளையராஜா வெண்கல குரலில் அந்த அறையை ஆக்கிரமித்திருந்தார். அவன் கிங்க்ஸ் சிகரட்டை வாயில் வைத்துக்கொண்டான்.ஒரு பெரிய பெக்கை நிரப்பி அளவு பார்த்து ஜேக்கப்புக்கு கொடுத்தான். அவர் பாட்டை ரசித்துக்கொண்டே கிளாசை கையில் வாங்கினார். பாடலின் இசைக்கு ஏற்ப தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார். "ஏன்டா...மூனாவதா...நாலாவதா...வீட்டுக்கு போகனும்டா...கூடிப்போச்சுனா சிக்கலாகிடும்" என்றார்.

"நாமளே எப்பயாச்சும் தான் சாப்பிடுறோம்..கணக்குப்பண்ணி சாப்டா நல்லாவே இருக்காது..நாமென்ன ஹோம்வொர்க்கா பண்றோம்..என்ஜாய் பண்ணி அடிங்க ஜேக்"

 "உங்க வீட்லலாம் உன்ன திட்ட மாட்டாங்களா... உங்கப்பா என்ன பண்றார்.."

பதிலேதும் அவன் சொல்லவில்லை. கொஞ்ச நேரத்தில் அறையில் சத்தமில்லை. அவன் தூங்கிப்போயிருந்தான். ஜேக்கப் இரண்டு தடவை அவனை கூப்பிட்டுப் பார்த்தார். மட்டையாகிவிட்டான். அறையை ஒரு நோட்டம் விட்டார்.  புகை ரூமை ஆக்கிரமித்திருந்தது. ஜன்னல்களில் ஜட்டிகள் தொங்கியது. "கழுதைக" என முனங்கினார்.குமரேசன் ஊருக்கு போயிருந்தான்.அப்படியே தடுமாறி எழுந்தார். அலமாரியில் நீல நிற நோட்டுப்புத்தகம் ஒன்று துறுத்திக்கொண்டு நின்றது. சாதாரண நாட்களில் அதை அவர் கவனித்திருக்க வாய்ப்பில்லை. கவனமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களிலிருந்து அது மட்டும் ஒழுங்கில்லாமல் நின்றது. உள்ளுக்குள் பேனா ஒன்றும் இருந்தது. குமரேசன் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவன். முதலில் அவனது நோட்டாய் இருக்குமென தான் கையிலெடுத்தார். முதல் பக்கத்தைப் புரட்டினார்.

"எழுத்துக்களும் ஓவியங்களே... வாசிக்கையில் எல்லோர் மனத்திலும் காட்சிகளை வரைவதால்..." என எழுதி அவனது பெயர் போட்டிருந்தது.கையெழுத்து அவனது தான். ஒரு முறை கண்ணைக் குறுக்கிப் படித்துப்பார்த்தார். லேசாய் சிரித்தார். "படிக்கலாமா.." வென ஒரு முறை யோசித்தார். அடுத்தவர் விஷயங்களில் ஏற்படும் இயல்பான கிளர்ச்சியின் உந்துதலில் முதல் பக்கத்தைப் புரட்டினார். நன்றாய் குண்டு குண்டு தமிழ் எழுத்துக்கள். நீல நிற பால் பாயிண்ட் பேனாவால் எழுதப்பட்டிருந்தது. முதல் இரண்டு பக்கத்தில் அவன் கோல்கொண்டா மலையின் ரம்யத்தைப் பற்றியும், இரவு நேரத்தில் அங்கு வீசும் காற்றைப்பற்றியும் கவிதை போல எழுதி இருந்தான். அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. எழுத்தில் நேர்த்தியும், ரசனையும் தெரிந்தது. மூன்றாம் பக்கம் வந்தார்."சித்திக் கொடுத்துவிட்டுப் போன பின் நேராய் மாடிக்கு வந்து விட்டேன். வீட்டில் யாருமில்லை. வித்யாசமான பழுப்பு நிறத்தில் காய்ந்த இலைகள் போல அந்த காகிதத்தில் அது இருக்கிறது.உண்மையிலேயே மூவாயிரம் இதற்கு அதிகம் தானென தோன்றுகிறது.பெங்களூரில் வெறும் எண்ணூறுக்கு வாங்கியிருக்கிறேன்.ஆனால் இது லடாக் சரக்கு..வீரியம் ஜாஸ்தியென சித்திக் சொல்கிறான். இதோ பேப்பரை சுருட்டி வாயில் வைக்கிறேன்.லேசாய் உப்புக்கரிப்பது போல உணர்வு. லைட்டரை பத்த வைக்கிறேன். எத்தனை முறை இழுத்தாலும் முதல் இழுவை கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஹா...ஹா... என்ன சுகம் அடி வயிற்றை மயிலிறகு வைத்து யாரோ வருடுவது போல இருக்கிறது..மிதமாய் போதை ஏறிக்கொண்டே இருக்கிறது. தூக்கத்தில் எழுந்தது போல ஒரு நிதானமின்மை என்னை ஆட்கொள்ள தயாராகிறது. ஏதேதோ நினைவுகள் வந்து போகிறது... மூன்றாவது படிக்கும் போது அப்பாவின் ரம் பாட்டிலை திறந்து திருட்டுத்தனமாய் குடித்தது..முதன் முறையாய் சுயமைத்துனம் செய்தது... ம்ஹூம்..எழத முடியவில்லை..கை குழறுகிறது..."

எழுத்து கிறுக்கலாய் மாறி அந்த வரியுடன் நின்று போயிருந்தது. ஜேக்கப் ஒரு முறை அவனைப் பார்த்தார். அவன் குப்பற படுத்துக்கிடந்தான். அவருக்கு அதற்கு மேல் படிப்பதா வேண்டாமா என யோசனையாய் இருந்தது. குழப்பத்துடன் அடுத்த பக்கம் திருப்பினார். 

"காலணியில் எத்தனயோ பேர் இருக்கையில் ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறானென யோசனையாய் இருந்தது. செக்யூரிட்டி யூனிபார்மில் இருந்த விசிலை நான் வரும்போது வேண்டுமென்றே ஊதினான். மற்ற செக்யூரிட்டிகள் யாரும் அப்படியில்லை.ரெண்டு முறை கேட்ட போதும் பதில் சொல்லாமல் சிரித்தான். அப்போது தான் அடக்க முடியாத கோபம் வந்தது. நடக்கப்போவது அப்போதே எனக்குத் தெரிந்து போனது. அன்று இரவு 14-c ப்ளாக்கின் பின்புறம் இருந்த புளிய மரத்தின் பின் நின்று கிளையை பலமாய் அசைத்தேன். நினைத்தது போலவே வேகமாய் விசில் ஊதிக்கொண்டே வந்தான். அருகில் வந்தான். அங்கு யாருமேயில்லை. அந்த இருளும்,தனிமையும் எனக்கு அடக்க முடியாத வெறியை கொடுத்திருந்தது. மூன்று நாளாய் தொராசின் வேறு சாப்பிடவில்லை.
அருகில் வந்து "நீங்களா சார்" என சிரித்தான். அது போதும். அதற்கு மேல் அங்கு நடந்த எல்லா விஷயங்களுக்கும் அது போதுமானதாய் இருந்தது. முகத்தில் மூன்று முறை குத்தினேன். வாயிற்குள் கர்சீப்பை அடைத்து கொச்சைக் கயிறால் அவனது கழுத்தை நெறித்தேன். அவனிற்கு போராடத்தெம்பில்லை. எனக்கு ஏமாற்றமாய் இருந்தது. எதோ எறும்பை நசுக்குவது போல இருந்தது. "தாவு..குதி..திமிறு.." என கத்திப் பார்த்தேன். ம்ஹீம்...சாவதற்கென்றே காத்திருந்து அந்த உடம்பு என்னை நோக்கி வந்ததாய் தோன்றியது. கழுத்தை இத்தனைக்கும் மிதமாய் தான் அழுத்தினேன்...துடித்துகொண்டிருந்த கால்களும் அடங்கியது...உடம்பு ஜில்லென குளிர்ந்தது. அது ஏன் உயிர் போனவுடன் உடல்கள் ஒரு சில வினாடிகள் அதிர்கிறதென தெரியவில்லை.... இதை எவனும் ஆராய்ச்சி கீராய்ச்சு பண்ணீருக்கானோ என்னவோ...ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் அவனைப்போட்டேன். மண்ணைப் போட ஆரம்பித்தேன்..மாலையில் பெய்த மழை காரணமாக மண் இறுகிப் போய்விட்டது..கொஞ்சம் கஷ்டப்பட்டு தோண்ட வேண்டியிருந்தது..ஹெட் போனில் பாடல் கேட்டுக்கொண்டே மண்வெட்டியில் அள்ளிப் போட்டேன். நாளை இவனை யாரும் தேடுவார்களா....என்ன ஆகும் என யோசித்துப் பார்க்கையில் எனக்கு ரொம்பவும் த்ரில்லாக இருந்தது.."

ஜேக்கப்புக்கு ரத்த அழுத்தம் அதிகமானது போல இருந்தது. மூச்சு வாங்கினார். நடுங்கிய கைகளில் இருந்த நோட்டை டேபிளில் வைத்தார். சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருந்தது. வீட்டை விட்டு முதலில் வெளியேறி விடுவதென்று முடிவெடுத்து வேகமாய் வாசலுக்கு நடந்தார். நிலை படி தடுக்கி கீழே விழுந்தார். அவன் சத்தம் கேட்டு தலை தூக்கிப்பார்த்தான்.

                                                                                                                     --தொடரும் 

செவ்வாய், 23 டிசம்பர், 2014

எழுத்தாளன் - பகுதி 1


வேறு யாராவதாய் இருந்தால் அந்த சத்தத்துக்கு உடனே எழுந்திருப்பார்கள். அது அவன்.அறைக்கதவை தட்டி சரியாய் ஒன்றரை நிமிடத்துக்கு அப்புறம் தான் திறந்தான். வெளியே குமரேசன் முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான்.ஜேக்கப் எரிச்சலை அடக்கிக்கொண்டு ஹாலில் ஹிந்துவை நோட்டமிட்டபடி உட்காந்திருந்தார். குமரேசனையும், ஜேக்கப்பையும் கண்ணைச்சுருக்கி பார்த்துவிட்டு நேராய் டாய்லெட்டுக்கு போனான். கதவைக் கொஞ்சம் வேகமாய் சாத்தினான்.சட்டென குழாய் திறக்கும் சத்தம் அந்த அதிகாலை அமைதியை சலனப்படுத்தியது. குமரேசன் முனங்கிக்கொண்டே வேகமாய் ஜேக்கப்புக்கு எதிரில் வந்து அமர்ந்தான். அவனைப் பார்த்து அவர் சிரித்தார். "நீ கோபப்படக்கூடாது ராஜா..உங்களுக்கு வீடு கொடுத்தனே...நான் தான் பழைய செருப்பெடுத்து...எம்மூஞ்சிலயே அடிச்சிக்கனும்..". சொல்லிவிட்டு தலையில் அடித்துக்கொண்டார். குமரேசன் குனிந்திருந்தான். எதுவும் பேசவில்லை. ஒரு நிமிடம் அமைதியாகவே கழிந்தது. 

ஜேக்கப் அறுபதை கடந்த பெரியவர். சொந்த ஊர் சென்னையாக இருந்தாலும் ஹைதராபாத்தில் செட்டில் ஆனவர். சுங்கத்துறையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். பிள்ளைகள் அமெரிக்காவில் வேலை செய்துகொண்டிருக்க, ஹைதராபாத்தில் உள்ள நீலிமா கிரீன்ஸ் குடியிருப்பில் ஒரு பெரிய வீட்டில் குடியிருந்து கொண்டிருக்கிறார். பக்கத்து வீடுகளுக்கு கேட்கும்படி மனைவியிடம் திட்டு வாங்குவது இவருக்கு நீண்டநாள் பொழுது போக்கு. சுகருக்கும் மனைவிக்கும் பயந்து தினமும் வாக்கிங் போகும் வயசாளி. இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் இரண்டு தமிழ் பசங்க தான் குமரேசனும் அவனும். குமரேசன்,எந்த நேரமும் கல்யாணம் ஆகலாம் என்கிற நிலையில் வாழும் மேட்ரிமோனி இளைஞன். வாரம் ஒருமுறை ஃபேசியல், தினமும் ஜிம் என ஸ்கெட்ச் போட்டு  சுத்திக்கொண்டு இருப்பவன். மிச்சமிருப்பவன் அவன் மட்டும் தான். உண்மையில் அவனை பற்றி சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. சோம்பேறி,குழப்பவாதி, சித்தாந்தங்கள் எதுவில்லாமல் எல்லாரையும் வெறுப்பேற்றுபவன். குமரேசனின் கம்பெனியில் கூடவே வேலை செய்கிறவன். குடிகாரன். அவனை பற்றி பேசி பத்தியை விரயம் செய்யாமல் நிகழ்காலத்துக்கு போவோம்.

வெளியே வந்தான். குமரேசன் அவனைப்பார்த்து "ஏழு மணிக்கு கம்யூனிட்டி செக்ரட்ரிய பாக்கப்போகணும்...இல்லேனா சாயங்காலம் வீட்டைக்காலி பண்ணனும்டா.. தெரியும்ல.." அவன் ஒரு முறை நிமிரிந்து பாத்துட்டு "ஓ பஞ்சாயத்து காலைலயா..." என லேசாய் சிரித்தான். உண்மையிலேயே அவனுக்கு இது போன்ற பிரச்சனைகள் பிடித்திருந்தது. எதுவுமே நடக்காத சாதாரண நாட்களை அவன் வெறுத்தான். ஜேக்கப் பக்கம் திரும்பி " ஓ... அதான் நம்ம ஜேக் காலைலேயே அனல் கக்கிக்கிட்டு உட்காந்திருக்கார்..பாத்து பாஸ் சூடு பிடிச்சுக்க போகுது.." யாருமே சிரிக்கவில்லை. ஜேக்கப் அவன் பக்கம் வந்தார். " நல்லா சிரிச்சிக்கோ..எது எப்படியோ நீ இந்த வீட்ல இனிமே இருக்க முடியாது...செக்ரட்ரி வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எனக்கு நடந்தது என்னான்னு தெரிஞ்சாகனும்...போலிஸ் கம்ப்ளைன்ட் அது இதுன்னு போகாம உங்கள நான் காப்பத்தனும்னா..."

"பாஸ்..ரொம்ப பயப்படாதீங்க..அவ்ளோ பெரிய மேட்டர் இல்ல.. இது சப்ப மேட்டர் தான்..."

"தூ நாயே..நான் ஏன்டா பயப்படனும்...நடந்தத சொல்லித் தொலைடா..என்னைய பேச வைக்காத..."

"சொல்றேன்..சொல்றேன்..கூல்... இந்த கம்யூனிட்டி வீக்லி மீட்டிங் நேத்து நடந்துச்சு.. நீங்க ஊர்ல இல்லாதனால நானும் குமரேசனும் அட்டென்ட் பண்ண போனோம்." கேட்டுக்கொண்டிருந்தவர் தலையில் கை வைத்தார். அவன் தொடர்ந்தான்."எல்லாரும் சேர்ந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோம்,வீட்டுக்கு ஐநூறு ரூபா பணம் கொடுக்கணும்னு சொன்னாங்க... அதுக்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து..."

குமரேசன் வேகமாய் நிறுத்தினான். "நான் சொல்லவே இல்ல..நா எதுவுமே பேசல"

"சரிடா,,நாந்தா பேசுனேன்.. இந்த தடவ முருகனோட பிறந்தநாளான கார்த்திகை தீபத்த கொண்டாடுவோம். அதுக்கு வேணும்னா காசு தருவோம்னு சொன்னேன்.அப்டியே..கொஞ்ச நேரம் வாக்குவாதம் போச்சு... இந்த அஞ்சு பி ஹிதேஷ் இருக்கான்ல கோவத்துல என்ன பாத்து "ச்சூத்தியா.."னு சொல்லிட்டான்.நானும் பதிலுக்கு திட்டிட்டேன்.."

"என்னான்னு..."

"தேவிடியா பயலேன்னு.." கொஞ்சம் கூட நிறுத்தாமல் சொன்னான்.

"நீங்கள்லாம் படிச்ச பசங்க தான..இப்பிடியா பேசுவீங்க..."

"சிலபஸ்ல இதெல்லாம் கவர் ஆகல.."

குமரேசன் வாயை மூடிக்கொண்டு சிரித்தான். "அறிவுகெட்ட முண்டங்களா...சரி..காலைல தான வாக்குவாதம்..சாயங்காலம் திரும்பவும் எப்படி கைகலப்பு ஆச்சு.."அவன் திரும்பவும் முகத்தை சீரியசாய் வைத்துக்கொண்டு ஆரம்பித்தான். "சாயங்காலம்...நம்ம வீட்டுக்கு வாசலுக்கு வந்து..ஏன்டா எங்கம்மாவை திட்டுனேன்னு சட்டைய புடிச்சிட்டான்...நான் திரும்ப உனக்கு ஏன்டா இவ்ளோ லேட்டா அம்மா பாசம் பொத்துக்கிட்டு வருதுன்னு சொல்லி டஸ்ட்பின் வச்சு அடிச்சேன்...கொஞ்ச நேரத்துல பெருசுக வந்து வெளக்கி விட்டுட்டாங்க.. ஒரு பத்து மினிட்ல முடிஞ்சிருச்சு..வேணும்னா நீங்க ஆண்டிட்ட கூட கேட்டுப்பாருங்க..".
மூன்று பேரும் நடந்து செக்ரட்ரி வீட்டுக்கு போயினர். சொன்னது போல் பெருசாய் எதுவும் நடக்கவில்லை. இருவரும் இனி மீட்டீங்குகளில் பங்கு பெற தடை விதிக்கப்பட்டது. அவன் வெளியே வரும் போது குமரேசனிடம் "வேமா முடிஞ்சிருச்சு..அவனுக சரியாவே விசாரிக்கல கும்ஸ்.." என சொல்லிக்கொண்டு வந்தான்.ஜேக்கப் அவன் முன்னாடி வந்து நின்றார்.

"சரி..வீட்ட எப்ப காலி பண்ணப் போற..."

"விடுங்க ஜேக்...இன்னைக்கு ஓல்ட் மாங்க் போட்டுக்கிட்டே இத அனாலைஸ் பண்றோம்..."

"வீட்ட எப்போ காலி பண்ண போற.."

"தந்தூரி ஒன்னு வாங்குறோம்... ரெண்டு பாக்கெட் கிங்க்ஸ்...லேப்டாப்ல இளையராஜா..."

"வீட்ட எப்போ காலி பண்ண போற.."

"மிக்ஸிங் பெப்சியா சோடாவா..."

"சோடா"

                                                                             ---------தொடரும் -----------ஞாயிறு, 14 டிசம்பர், 2014

லிங்கா - விமர்சனம்

 

லிங்கா பார்க்கவில்லையென்றால் ஆதார் அட்டை கிடையாது என்ற செய்தி வேறு வந்து கொண்டிருந்தது. "காட் தி டிக்கெட்ஸ்" என டிக்கெட்டுகளுடன் வெற்றிப்பெருமித ஃபேஸ் புக் போட்டோக்கள் எனக்குள் வெறியை கிளப்பின. படத்தை பார்த்தே தீருவது என்று முடிவு செய்தேன்.சனிக்கிழமைகளில் தனியாய் படத்திற்குப்போனால்,வீட்டிலிருப்பவர்கள் வரும் வாரத்தில் "உப்புமா,கோதுமைதோசை" என தாக்குதல் நடத்துவார்கள் என்பதால் குடும்ப சகிதம் போவதென ஒரு மனதாய் தீர்மானம் நிறைவேற்றினோம். குரோம்பேட்டை வெற்றித் தியேட்டரில் மக்கள் கூட்டம் கொய கொயவென இருந்தது. தலைவனின் தரிசனத்தை காண அத்துனை மக்களும் தேவுடு காத்துக்கொண்டிருந்தனர். எல்லோரும் தலைப்பாக்கட்டி விளம்பரத்தில் வரும் சரத்குமார் அண்ணாச்சி போல குஷியுடன் காணப்பட்டனர். ஒரு நபர் "சிட்டில வீக்கென்ட் டிக்கெட் கிடையாது.. நம்ம பசங்கெல்லாம் வேன் எடுத்திட்டு செங்கல்பட்டு போறானுங்கோ.." என போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.


"சூப்பர் ஸ்டார் ரஜினி" என திரையில் வந்ததும், திரையரங்கமே அதிர்ந்தது. சில ரசிக சிகாமணிகள் அடி வயிற்றிலிருந்து அதிக டெசிபல்களில் ஊளையிட்டு தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர். ரஜினி பட பாரம்பரியத்திற்கு உட்பட்டு சிலபல பில்டப்புகள் தரப்பட்டு "சூப்பர் ஸ்டார்" தோன்றினார். முந்தைய வரி இங்கே திரும்பவும் காப்பி & பேஸ்ட். வெள்ளைக்கார புள்ளைகளுடன் தலைவர் முதல் பாட்டுக்கு டான்ஸ் ஆடினார். எங்கே கீழே விழுந்து விடுவாரோ என கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. எவ்வளவு மேக்கப் போட்டாலும் வயது துறுத்திக்கொண்டு தெரிவதை தடுக்க முடியவில்லை. கே.எஸ்.ரவிக்குமாருக்கு  சூப்பர் ஸ்டார் மேல என்ன கோபமோ தெரியவில்லை, படத்தை அணை கட்டி அடித்திருக்கிறார். தலைவரின் கழுத்தைப்போல கதையையும் கடைசி வரை நமக்குக்காட்டவில்லை. படத்தின் எல்லாக்காட்சியிலும் ஒரு துண்டைப் போட்டு கழுத்தை மறைத்திருக்கிறார்கள். வயதை மறைக்க ஏன் இவ்வளவு மெனக்கெடல்? வயதுக்கேற்ற கதை தயார் செய்வது இதை விட எளிது என்று தான் தோன்றுகிறது. இந்த விசயத்தில் தலைவர், அமிதாப்பை இப்போதும் காப்பியடிக்கலாம்.அனுஷ்காவும் இல்லையென்றால் கே.எஸ்.ஆர்  வீட்டின் முன் நிறைய பேர் உண்ணாவிரதம் இருந்திருப்பார்கள்.  டான்ஸ் ஆடுவது, தலைவரை பார்த்து ஜொள்ளு விடுவது, வில்லனிடம் பிடி படுவது,கடைசியில் விடுபடுவது என ஹீரோயின் டியூட்டிகளை திறம்பட செய்திருக்கிறார். சந்தானம் வழக்கமான நண்பேன்டா வகையறா காமெடிகளை போட்டு இண்டர்வெல்லுக்காக ஏங்க வைக்கிறார். பென்னி குவிக் கதையை ரஜினியை வைத்து பின்னியிருக்கிறார்கள். சூப்பர்ஸ்டார் படங்களுக்கு யாரும் உலக சினிமா எதிர்பார்ப்புகளுடன் வருவதில்லை தான் , அதற்காக இப்படியா தமிழ் ரசிகர்களை அசிங்கப்படுத்துவது?? அதுவும் அந்த கொடூரமான க்ளைமேக்ஸ் காட்சி யூடுயூப்களில் ஹிட் அடிக்கப்போகிறது. பவர்ஸ்டார்களுக்கும் பாலகிரிஷ்ணாக்களுக்கும் சூப்பர் ஸ்டார் விட்ட பகிரங்க சவால் அந்த காட்சி. ஏ.ஆர்.ரகுமான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இடது கையில் இசை அமைத்திருப்பார் போல, டைட்டில் தவிர எங்குமே அவரைக் காணோம்.

ப்ளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் பரவாயில்லை. கலெக்டர் கம் மகராஜா ரஜினி ஊருக்கு டேம் கட்ட போராடுகிறார். வருகிற பிரச்சனையெல்லாம் பன்ச் டயலாக் பேசியே சமாளிக்கிறார்.சோனாக்சி கிராமத்துத் தமிழ்ப்பொண்ணாம். ப்ளாஷ்பேக் என்பதாலோ எழுபது எண்பதுகளில் வந்திருக்க வேண்டிய கதையை காட்டியிருக்கிறார்கள். இயற்பியல் விதிகளை இக்கட்டில் தள்ளும் சூப்பர்ஸ்டார் சண்டைக்காட்சிகள் தமிழ்நாட்டுக்கு புதிதல்ல என்றாலும், அந்த க்ளைமேக்ஸ் பைக் காட்சியையும் பலூன் சண்டை காட்சியையும் தமிழன் ஜீரணிக்க நிறைய நாட்கள் ஆகும். தலைவர் இந்தப் படத்திலும் ஊருக்கு சொத்தெழுதி வைக்கிறார். ஹீரோயின்கள் "கட்டியே தீருவேன்" என ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். அல்லக்கைகள் அரசியல் பூடக வசனங்கள் பேசுகிறார்கள். "இவர மாதிரி உண்டா" என குணச்சித்திரங்கள் படமுழுக்க குமுறுகிறார்கள். அடி வாங்கியவர்கள் எல்லாம் அந்திரத்தில் பறந்து கிளைமேக்ஸில் தான் கீழே விழுகிறார்கள். கேட்டால் கமர்சியல் படம் என்பார்கள். அதுக்காக மூளையெல்லாம் மூலைல வச்சிட்டு வந்திரனுமா?? சூது கவ்வும் விஜய் சேதுபதி, ஜிகர்தண்டா சிம்ஹா கேரக்டர்களையெல்லாம் ரஜினியை வைத்து யோசித்துப்பாருங்கள். உண்மையிலேயே தியேட்டர்கள் அலறும். தலைவா "நா யானே இல்லே குதிரே" னு பொசுக்குனு லிங்கா மாதிரி இன்னொரு படம் நடிச்சு விட்ராதீங்க... நாடு தாங்காது. பொறுமையா "ப்ளான்" பண்ணி பண்ணுங்க. 

"எம்பொண்ணு வயசுள்ள பொண்ணுங்களோட டூயட் ஆட வைப்பது கடவுள் எனக்குக் கொடுத்த தண்டனை" னு தலைவரு சொல்லிருக்காரு. இப்படி  டூயட் ஆடியே ஆகணும்னு அவர யாரு மிரட்டுறாங்கன்னு தெரியல...உண்மையிலேயே அந்த காட்சிகளை பார்க்க வைத்து கடவுள் நமக்குத்தான் தண்டனை கொடுத்திருக்கிறார்.. ஆக இந்த முறை கே.எஸ் ரவிக்குமார் "கத்து கிட்ட மொத்த வித்தையையும்" இறக்கியிருக்கிறார்.