வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

தமிழ் புத்தக பரிந்துரைகள்

 "நிகழ்காலத்திலேயே இருக்க பழகுங்கள்.கடந்த கால சுமையையோ..எதிர்கால பயத்தையோ தூக்கி சுமக்காதீர்கள்" என்பார்கள் அறிஞர்கள். என்னைப்பொறுத்த வரை நல்ல புத்தகங்களை கையிலெடுத்துக்கொண்டால் மூன்று காலங்களிருந்தும் விடுபட்டு  விடலாம். உலகியல் இன்ப துன்பங்களிருந்து ஜகா வாங்கி, அந்தந்த புத்தகங்கள் உருவாக்கிக்கொடுக்கும் நான்காம் உலகத்தில் நிம்மதியாய் திரியலாம். தமிழ் நாவல்களை வரிசைப்படுத்தவோ,விமர்சிக்கவோ எனக்கு அருகதை இல்லை. நான் வாசித்தவற்றில் எனக்கு பிடித்தவற்றை இங்கு கொடுத்துள்ளேன். உங்களுக்கும் இது பயன்படலாம். 



காவல் கோட்டம் (சு.வெங்கடேசன் ): சாகித்ய அகாடெமி ஜெயித்தது என்பதால் தான் இந்த நாவலை வாங்கினேன் . நாம் படித்த எந்த வரலாற்று புத்தகங்களும் சொல்லாத மதுரையின் வரலாற்றை இது பேசுகிறது . கிட்டத்தட்ட  ஆயிரம் பக்கங்கள்.குற்றப்பரம்பரை பற்றி,தாதுப்பஞ்சம் பற்றி..முல்லை பெரியார் அணை உருவானது பற்றி..என எல்லா தென்தமிழக  வரலாறு பற்றியும் சு.வெ அலசுகிறார்.புனைவு போல வரலாற்று உண்மையின் மேலே ஏறி நடப்பது இந்த நாவலின் சிறப்பு. இந்தப்புத்தகத்தின் பல பகுதிகள் பள்ளி/கல்லூரி பாடத்திட்டத்தில்  சேர்க்கப்படவேண்டியது. இதற்குள்ளிருந்து பத்து தரமான தமிழ்ப்படங்கள் எடுக்கலாம். வசந்த பாலன் முயற்சித்தார்(அரவான்). நான் சு.வெ வின் "வேள்பாரி " இரண்டாம் தொகுதி படிக்கவில்லை. படித்தவரை என் அளவீட்டில்  வேள்பாரியை விட காவல் கோட்டம் ஒரு இன்ச் மேலே நிற்கிறது.

உப பாண்டவம் (எஸ்.ராமகிருஷ்ணன் ): நமக்கு மகாபாரதம் தெரியும் என்ற எண்ணம் இருந்தால் அது மேல் தீயை கொளுத்துகிறார் எஸ்.ரா. கிளைக்கதைகள் மட்டுமே மகா பாரதத்தில்  ஆயிரக்கணக்கில் இருக்கிறது . நிறைய பயணங்கள்..ஆராய்ச்சிகள் செய்து..இந்தக்கதைகளையெல்லாம் தன்  பாணியில் நமக்கு சொல்கிறார். ஒரே பாரதம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரி கொண்டாடப்படுகிறது .தமிழகத்தில் கர்ணனுக்கு  நாம் எக்ஸ்டராவாய் பூப்போட்டால்  ..கேரளத்தில் பீமனுக்கு கொஞ்சம் கூடுதலாய் மாஸ் காட்டுகிறார்கள் என்கிறார் எஸ்.ரா. மகாபாரதம் பிடிப்பவர்கள் கண்டிப்பாய் படிக்கவும்.

கள்ளிக்காட்டு இதிகாசம் (வைரமுத்து ) : இந்த புத்தகம் ஒருவேளை ஆங்கிலத்தில் வந்திருந்தால் டைட்டானிக் போல படங்கள் எடுத்திருப்பார்கள் .வைரமுத்து  அவர்களின் நாவலின் சிறப்பே உரைநடை எழுத்துக்களும் பல நேரங்களில் கவிதை போல உங்களை உருக்கும். நாவல் முடியும் போது உங்களுக்கு தொண்டை அடைக்கவில்லை என்றால் நான் ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கிறேன். ஒவ்வொரு முறை வைகை அணை போகையிலும் அதன் நீரோட்டத்தை பார்க்கையில் கள்ளிக்காட்டு இதிகாசம் ஞாபகம் வரும். "இந்த நீர் அதன் வழித்தடங்களில் ஏற்படுத்திய சோகங்களை கடலில் சென்றாவது கரைக்குமாக!!" என எண்ணிக்கொள்வேன். வடுகபட்டியாரின் "கருவாச்சி காவியம்","தண்ணீர் தேசம்" போன்றவையும் இதயத்துக்கு நெருக்கமாயினும்  "கள்ளிக்காட்டு இதிகாசம் " உள்ளுக்குள்ளயே சென்று உசுரை வாங்கி விடுகிறது .(உவமையாய் சொன்னேன்.   ஆரோக்கியத்துக்கு பங்கமில்லை )



ஆடுஜீவிதம்(பென்யமின் /எஸ்.ராமன் ) : பிரிதிவிராஜ் நடிக்க இந்நாவல் படமாய் வந்துவிட்டது தான். விருதுகளெல்லாம் வெல்லப்போகிறது தான். இந்த வருடத்தின் சிறந்த படம் தான். ஆனால் நாவலுக்கும் படத்திற்கும் ஆன வித்தியாசம்...  பாத்ரூம் ஷவருக்கும் ,குற்றால அருவிக்குமான  வித்தியாசம். பென்யமினின் இந்தப்புத்தகம்  வளைகுடா நாடுகளில் நடக்கும் உழைப்பு சுரண்டலை பட்டவர்த்தனப்படுத்துகிறது. பாலைவன மணல் காட்டில் நடக்கும் கொடூரங்களை பென்யமின்  சிலநேரங்களில் நகைச்சுவையுடன் விளக்கும்போது நமக்குள் சிரிப்பும் வலியும் ஒரே நேரத்தில் உருவாகி சங்கடப்படுத்துகிறது. மொழிப்பெயர்ப்பு நாவல்களில் இருக்கும் அந்நியத் தன்மை இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் இராமன்.

டார்த்தீனியம் (ஜெயமோகன்): இது ஜெயமோகனின் குறுநாவல்கள் தொகுப்பில் வரும் ஒரு நாவல். எழுத்தாளர் முத்துலிங்கத்தி்டம் "தமிழில் உலகத்தரமான படைப்புக்களை கொடுத்தவர் யாரென நினைக்கிறீர்கள்" என விகடன் பேட்டியில் கேட்டார்கள். அவர் சொன்ன பெயர் "ஜெயமோகன்". கூடவே "நோபல் பரிசுக்கும் அவர் தகுதியானவர்" என்றார். ஏழாம் உலகம், யானை டாக்டர், உலோகம் போன்ற நாவல்கள் மூலம் நமக்கு ஜே.மோ வின் உலகங்கள்   பழக்கப்பட்டாலும்   டார்த்தீனியம் உருவாக்கும் கருப்பு உலகம் மனதிற்குள் கலக்கத்தை ஏற்படுத்தும். தனிப்பட்ட முறையில் இதைப்படித்து முடிக்க எனக்கு நிறைய தைரியம் தேவைப்பட்டது. ஜே.மோவே சொல்வது போல "ஒரு நல்ல படைப்பு. படிப்பவரின் புரிதல்களை ஆட்டம் காண வைக்கும்.. அச்சுறுத்தும்..." உங்களுக்கு தைரியம் இருக்கும் பட்சத்தில் மட்டும் ஜே.மோவை படியுங்கள். அதிலும் இந்நாவல் நம் மூளையில் துப்பாக்கிச்சூடு நடத்தும்.



அறம் (ஜெயமோகன்): ஒரே ஜெயமோகன் புராணமாய் போகிடுமோ என்ற பயம் வந்தாலும் இந்த சிறுகதை  தொகுப்பை ஒதுக்கி வைத்து விட்டு நகர முடியாது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். வாழ்க்கை பல நேரங்களில் மனிதர்களின் அறத்தை சோதித்துக்கொண்டே இருக்கும். வெகு சிலராலேயே அந்த சோதனைகளை வைராக்கியமாய்  கடக்க முடியும்.இதில்  வரும் "சோற்று கணக்கு", "வணங்கான்" கதைகள் நாம் கொண்டாடப்பட வேண்டியவை . ரொம்பவும்  பிடித்த யாருக்காவது  பரிசு கொடுக்க வேண்டுமென்றால்  இந்தப்புத்தகத்தை கொடுக்கலாம். ஒவ்வொரு தமிழனும்...இல்லையில்லை மனிதனும் படித்தே ஆக வேண்டிய புத்தகம்.



ஆ (சுஜாதா) :  தமிழ் இலக்கிய உலகம் சுஜாதாவை பெரிதாய் பெருமைப் படுத்தியதில்லை. அவரை "லைட் ரீடிங்" வகையில் சேர்த்து ஒதுக்கி விடுவார்கள். படிக்கும் போது எங்காவது சிரிப்பு வந்தால் அது இலக்கியம் இல்லை என்கிற மாயை இங்கே உண்டு. சுஜாதாவின் " .."  எனக்கு மிகவும் பிடித்த நாவல். எடுத்தால் கீழே வைக்க முடியாது. அறிவியலுக்குள்ளும்.. அமானுஷியங்களுக்குள்ளும் ...வண்டியை மாற்றி மாற்றி விட்டு கலக்கியிருப்பார். தலைவனின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள் ".. "ரத்தம் நிறம் சிகப்பு" ரெண்டும் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்தவை . மனதில் எப்பேர்ப்பட்ட கவலை இருந்தாலும் சுஜாதாவை படித்தால் ரெண்டே வரிகளில் உற்சாகத்தை கொண்டுவந்து  விடுவார் 

மோகமுள் (தி.ஜா ) :  அக்ரஹாரம்..சங்கீதம்..கும்பகோணம்..என்றவுடன் எகிறி இந்த நாவல் பக்கம் போகாமலிருந்தேன். சில நண்பர்கள் "படித்துப்பார்..தி ஜா ..ஏமாத்த மாட்டார்"னு துண்டை போட்டு தாண்டினார்கள். வாய்ப்புக்கொடுத்தேன். என்னை வாரி அனைத்துக்கொண்டது. அவர் பார்த்த வாழ்வியலை கண்ணியமாய் அழகாய் சொல்லியிருக்கிறார். மயிலிறகு போல காதல் ..ஆங்காங்கே சங்கீதம் என மழையில் போகும் பேருந்து பயணம் போல சுகமாய் நாவல் நகரும்.   



ஒரு புளியமரத்தின் கதை (சுந்தர ராமசாமி): சும்மாவெல்லாம் கம்பு சுத்த விரும்பவில்லை. இந்நாவலை எல்லோராலும் படிக்க முடியாது. நான் வாங்கிவைத்து ஆறு மாதம் கழித்து தான் படித்தேன்."நா இப்படி தா எழுதுவேன்..படிச்சா படி..இல்லாட்டி போ "   என ஒவ்வொரு பக்கத்திலும் சு.ரா சொல்வது போல இருக்கும். கதையின் நாயகன் "புளியமரம் " பற்றிய குறிப்புகளை  பக்கங்களை விரயம் செய்து விளக்குவார். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அந்த புளியமரம் நமக்குள் படர்ந்து விடும். அதற்கப்புறம் தான் ஏன் இந்த ஆளை எல்லாரும் சிலாகிக்கிறார்கள்  என அறிவோம். அது மூன்றாவது பக்கத்திலோ அல்லது முப்பதாவது பக்கத்திலோ நிகழலாம் .பொறுமை முக்கியம்.

சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜெயகாந்தன் ): தமிழ் கிளாசிக். அன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு நாவலை எழுத ஜெ.கே வால் மட்டுமே முடியும். மனிதன் எந்நேரமும் ஒரு தராசுடனே அலைகிறான். யார் கிடைத்தாலும் அவன் தராசுகளில் அளந்து தீர்ப்பு கொடுத்துக்கொண்டே திரிகிறான். "மயிரே போச்சு" போங்கடா என  தன் பாதையில் பயணிக்கும் கங்காவின் கதை தான் இந்நாவல். பக்கங்களெங்கும் ஜெ.கே உங்களுடன் பேசிக்கொண்டே இருப்பது போல இருக்கும். 

இதுக்கு மேல் எழுதி போரடிக்க விரும்பவில்லை. புத்தகங்களை கொண்டாடுவோம்!!!!


 





 







 


வியாழன், 22 ஆகஸ்ட், 2024

இணையத்தொடர்- சில பரிந்துரைகள்

எனக்கு வெப்சீரிஸ் எனப்படும் இணையத்தொடர்கள் மீது  எப்போதும் அலாதிப்பிரியம்அவை திரையில் நாவல்களை பார்ப்பது போன்று ஒரு உணர்வைத்தருகின்றனஅவசரங்களின்றி,   தயக்கங்களின்றி,முழுமையாய் கதைகளை  பார்ப்பது வாழை இலையில் "Full Meals"   சாப்பிட்ட திருப்தியை கொடுக்கிறதுமுதலில் "Game of Thrones","Breaking bad","Prison Break" போன்ற மாஸ்   தொடர்களில் தான் தொடங்கினேன்பிற்பாடு இணையக்கடலில்   நண்பர்களின் பரிந்துரையில் தொடர்களை தொடர்ந்தேன்எனக்கு பிடித்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.  ஒருவேளை உங்களுக்கும்  இவை பிடிக்கலாம்..நேரம்   இருந்தால் முயன்று பாருங்கள்.




When they see us(2019,Netflix)நியூயார்க் நகர சென்ட்ரல் பார்க்கில் நடந்த ஒரு வன்முறை சம்பவத்தின் அடிப்படையில்   எடுக்கப்பட்ட தொடர்.1989ல் நடந்த இந்த சம்பவத்தில் அதிகாரமும்,சமுதாய கட்டமைப்புகளும் சாமானியர்களை என்னவெல்லாம் செய்ய முடியும் என காட்டியிருக்கிறார்கள்திரையில்     நடக்கும் சம்பவங்கள் இப்போதும் உயிரோடு இருக்கும் சகமனிதர்களுக்கு நடந்திருக்கிறது   என எண்ணும் போது பயமும்,கோபமும் நம்மை   ஆட்கொள்கிறது.   நறுக்கென நான்கு பாகங்கள்விறுவிறு..பரபரக்களுக்கு முயலாமல் உண்மைக்கு அருகே    பயணிக்கிறது.இளகிய மனமுள்ளவர்கள் பார்ப்பது  கடினம்..ஆனால் அருகம்புல் ஜூஸ் போல பொறுத்து பார்த்து விடுங்கள்வாழ்க்கையில் என்றாவது அதிகாரங்களை எதிர்க்க நமக்கும்    வலிமை தேவைப்படலாம்.  

 

Succession(2018-2023,HBO) ஒரு கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தின் அடுத்த தலைமுறை வாரிசு யார் என்கிற புள்ளியில் தொடங்கி களேபரமான நகைச்சுவையிலும்..பணக்கார குடும்பங்களில் நிலவும் குழப்பங்களையும் கண் முன்நிறுத்துகிறார்கள்மீடியா சக்கரவர்த்தியான Murdoch குடும்பத்தை மையப்படுத்தி   எடுத்ததாக சொல்கிறார்கள்நான் நகைசுவைக்காகவே பார்த்தேன்இவ்வளவு அழகாய் ஒரு கதையை எழுதி..அதன் கேரக்டர்களை செதுக்கி..திரைக்கதைக்கு ஆளில்லாத ஹைவே அமைத்துள்ள படியால் நாலு சீசனையும் ஒரே வீக்கெண்டில் முடித்தேன்கடைசி சீசன் எப்படி எடுக்க  வேண்டும் என்பதற்கு இந்த சீரிஸ் ஒரு உதாரணம்.  

 


The Offer(2022,Paramount):   நீங்கள் காட்ஃபாதர் படங்களின் விசிறி என்றால் இந்தத்தொடர் உங்களுக்கு திகட்ட திகட்ட தித்திப்பை கொடுக்கும். காட்ஃபாதர் படம் எப்படி உருவாக்கப்பட்டது.. அதன் பின்னால்   நடந்தவை என்ன என்பதையே விறுவிறுப்பான தொடராக்கி இருக்கிறார்கள். "அல்பாசீனோ"லாம் இதுக்கு சரிப்பட மாட்டார்னு தயாரிப்பு தரப்பு சொல்வதும்டைரக்டர்    கோபெல்லா அவரை போராடி தக்க வைப்பதையும் இப்போது பார்க்க வியப்பாய்   இருக்கிறது.  உலகமே கொண்டாடிய ஒரு படத்துக்கு பின்னால் எப்பேர்ப்பட்ட சிக்கல்கள்.   விட்டோ கார்லியோனை விட மிகப்பெரிய ஹீரோ அந்த படத்தின் executive producer "ரூடிதான்தொடரில் அல்பசீனாவாய்..ப்ரண்டோவாய் வருகிறவரையெல்லாம் எங்கே   பிடித்தார்கள் என தெரியவில்லைஅம்புட்டு பொருத்தம்வெள்ளைக்காரன்..வெள்ளைக்காரன் தான்இது Paramount OTT யில் காணக்கிடைக்கிறது.

 

Mind hunter (Netflix 2017-2019):   சைக்கோ கொலையாளர்களை பேட்டி கண்டு.. அவர்களின் மனநிலையை ஆராய்ந்து...   குணாதிசியங்களை வகைப்படுத்தி.."Profiling" செய்கிறது FBI. எழுவதுகளில் சில மனோதத்துவ விற்பன்னர்களின் முயற்சியில் இதெற்கென ஒரு அணியை உருவாக்கி இருக்கின்றனர்இந்த    "Profiling" மூலமாய் இது போன்ற அசாத்திய தொடர் கொலைகளை செய்யும் சைக்கோக்களை   வேகமாய்  கண்டறிய முடியும் என நம்பினர்பின் செய்தும் காட்டினர்."சீரியல் கில்லர்என்கிற வார்த்தையை உருவாக்கியதே இந்த அணி தான்ஈரக்குழையை நடுங்க வைக்கும் கொலைகள்..அதன்விவரங்கள்..மிரட்டலான தொடர்... க்ரைம் ரசிகர்களுக்கு கண்டிப்பாய் பிடிக்கும்.   உங்களுக்கு David Fincherஇன்  ZODIAC, SEVEN போன்ற படங்கள் பிடிக்கும் என்றால்  நீங்கள் ஆபிசுக்கு   லீவு போட்டே இந்த தொடரை பார்க்கலாம்ஒர்த் சீரிஸ்.



Chernobyl (HBO,2019) :   ஒரு அணுஉலை சிக்கல் எப்பேர்ப்பட்ட பேரழிவை ஏற்படுத்தும் என இந்தத்தொடர்    விளக்குகிறது  அல்லது மிரட்டுகிறதுகூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை நாம் பெரிதாய் கண்டு  கொண்டதில்லைஇந்தத்தொடரை யார் பார்த்தாலும்   அணுஉலைகளுக்கு எதிரானவராக மாறுவார்கள்.Chernobyl(அன்றைய ரஷ்யாஎன்ற இடத்தில் நடந்த விபத்து எப்படி இயல்பாய் நடந்தது..சேட்டைகள் செய்தால் இயற்கை என்னவெல்லாம் செய்யும் என நாம் எச்சில் விழுங்கமுடியாத படி பரபரவென காட்டியிருக்கிறார்கள்.ஒரு மிகப்பெரிய பேரிடருக்குப்பின்னால் நடந்தவையை ரத்தமும் சதையுமாய் காட்டியுள்ளனர்தொடரின்   முடிவில் , நவீன கண்டுபிடிப்புகள்..தொழிற்சாலைகள்..வளர்ச்சி.. குறித்த நம்முடைய  புரிதல்கள்   மறுசீரமைக்கப்படும் .

 


The Last Dance(Netflix,2020):    நான் கொடுத்த லிஸ்டில் இது ஒன்று தான் ஆவணத்தொடர்அமெரிக்க கூடைப்பந்தாட்ட ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டானின் விளையாட்டு வாழ்க்கையை மையப்படுத்திய தொடர்விளையாட்டு ஆர்வலர்கள்அனைவரும் பார்த்தே ஆக வேண்டிய தொடர்சிகாகோ புல்ஸ் அணிக்கும் ஜோர்டானுக்கும் ஆன இணக்கம், "இனிமே ..இவரு அவளோ தான் "        என பத்திரிக்கைகளும்..  பண்டிட்களும் கத்தும்போதெல்லாம் தலைவன் எகிறி வந்து "டங்க்அடிப்பது, Isiah Thomas சுடன் ஏற்பட்ட மோதல்கள்...   என அனைத்தையும் ஆவணப்படுத்தியுள்ளார்கள்திறமைசாலிகள்   எல்லோரும் சாதனையாளர்களாக ஆவதில்லைஅப்படி ஆகி விடுபவர்களின் வாழ்க்கை   ஒரு தலைமுறைக்கே படிப்பினை.   

 


The Night Of(HBO,2016):Police Procedural Drama வகையறாஒரு கொலைஅதன்பிரதிபலிப்பாய்    கதைமாந்தர்களின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள்எந்த பரபரப்புக்கும் முயலாமல்..   இசையை கூட துணைக்கு சேர்க்காமல்..காட்சிகளின் அடர்த்தியை கடத்துகிறார்கள்இந்தத்தொடர் நிறைய பிரிவுகளில் ஏன்  "Emmy" ஜெயித்தது என பார்த்தபின் புரிந்து கொண்டேன்.   ஒரு க்ரைம் நடந்தால் அதன் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதை நோக்கி காட்சிகள் பயணிக்கும்..இதில்"After Math" களில் திரைக்கதை பறக்கிறது.John Turturro பட்டையை கிளப்பியிருக்கிறார்.   இதை வைத்துக்கொண்டு ஒரு வீக்கண்டையும் ..நிறைய தின்பண்டங்களையும் காலி   செய்யலாம்

 

Outlander(Netflix,2019) டைம் டிராவல் கதைஅதுக்காக அறிவியலில் அளக்காமல்வரலாற்று   புனைவு போல செல்லும்போகிற போக்கில் வரலாற்று சம்பவங்களையும்..பதினாறாம்   நூற்றாண்டின் வாழ்வியலையும் பிரம்மாண்டமாய் காட்டுகிறார்கள். 1950 களிலிருந்து  இருநூறுவருடம் முன்னால் சென்று விடும் ஒருத்தியின் வாழ்க்கையை தொடர்கிறது தொடர்பிரிட்டிஷுக்கும்..ஸ்காட்டிஷ்க்கும் நடந்த சுதந்திரப்போர் போன்ற வரலாற்று   சம்பவங்களை கதைக்களம் தொடுகிறது. பொறுமையாய் வாரக்கணக்கில் வைத்து பார்க்கலாம்.