வியாழன், 9 ஜனவரி, 2014

லூஸர்ஸ்-3

                               
                                                    லூஸர்ஸ் - பகுதி 1

                                                     லூஸர்ஸ் - பகுதி 2

              


அந்த வலியை உடல் முழுவதும் உணர முடிந்தது. பல்லைக் கடித்துக்கொண்டுஉட்கார்ந்தேன். கிரிக்கெட் பந்து பார்க்க அழகாய் இருக்கும். ஆனால் அசந்தோமேயானால் பாம்பு போல் கவ்வி விடும். வேகமாய் பேண்ட்டை இறக்கித் தொடையை பார்த்தேன். சிகப்பு கலரில் வட்டமாய் தடம் இருந்தது. தொட்டால் கொடூரமாய் வலித்தது. ரன்னரில் இருந்த பிரதீப் வந்து பக்கத்தில் நின்றிருந்தான். வெளியிலிருந்து சுருளி முதலுதவி பெட்டியுடன் ஓடி வந்தான்.காயத்தைப் பார்த்தான்.

"என்னடா இப்படி வீங்கிருக்கு..நல்ல வேளை தொடையில பட்டுச்சு...."

எரிச்சலாய் அவனைப் பார்த்தேன். பேசிக்கொண்டே எதையோ எடுத்து காயத்தில் தடவினான். ஜில்லென்று இருந்தது. "என்ன மச்சி தொடைல புல்லா முடியா இருக்கு..". இப்போது கடுப்பானேன். "டேய் மடக்கூ%...இப்ப அது ரொம்ப முக்கியம்..நா என்ன ரம்பாவா.. எடுத்திட்டு கெளம்பு..." என்னை ஏற,இறங்க பார்த்தான். எதுவும் பேசாமல் எடுத்துக்கொண்டு ஓடினான். மதுரை எஸ்.வி.என் கல்லூரியில் ஒரு பயிற்சிப்போட்டி அது. முதலில் பேட் செய்த அந்த கல்லூரிக்காரர்கள் 145 ரன்கள் எடுத்திருந்தார்கள். நாங்கள் நாற்பது ரன்னில் ஐந்து விக்கெட்டுகள் பறிபோய் நின்று கொண்டிருக்கிறோம். தரமான பாஸ்ட் பவுலிங்கை வைத்திருந்தார்கள். எங்கள் அணியில் நான் எப்போதுமே கூட்டத்தில் ஒருத்தனாகவே இருந்திருக்கிறேன். அணிக்கு உபயோகமாய் எதுவும் பெரியதாய் செய்ததில்லை."இன்னைக்கு அடிக்கிறேன்டா" என என் தன்னம்பிக்கை பொங்கும் போது தான்,அந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளனின் பந்து என் தொடையை தாக்கியது. நல்லவேளையாய் அது "கண்ட" இடத்தில் பட்டுத்தொலைக்கவில்லை. ஒரு முடிவுக்கு வந்தேன். இனி பயந்து பயனில்லை. முயற்சி செய்வோம்.யாரும் என்னிடம் எதிர்பார்க்கவில்லை. நான் அவுட்டானால் யாரும் தலையில் கை வைக்கப் போவதில்லை. 

அந்த சனியன் இடது கையில் பந்துடன் ஓடி வந்துகொண்டு இருந்தது. "சர்"ரென காற்றை கிளித்துக்கொண்டு மீண்டும் என் இடுப்பை நோக்கி பந்து வந்தது. பந்தை கீப்பருக்கு பின்னால் லெக் சைடில் க்ளான்ஸ் செய்தேன். பந்து சீறிக்கொண்டு ஓடியது. பவுண்டரி.நிறைய பேர் கை தட்டினார்கள். அடுத்த பந்து க்ளீன் "கவர் டிரைவ்". ஆப் சைடு பீல்டர்கள் வேடிக்கை பார்க்க, பந்து பவுண்டரியை நோக்கி "தரத்தர" வென ஓடியது. இப்போது சத்தமாய் கை தட்டினார்கள். ஐயப்பன் வெளியிலிருந்து விசில் அடித்தான். எனக்குள் பட்டாம்பூச்சி,கரப்பாம்பூச்சி எல்லாம் பறந்தது. கவர்டிரைவ் ஆடி விட்டால் உங்களுக்கு ஒரு பேட்ஸ்மேன் அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. அடுத்து இரண்டு ஓவர்களுக்கு சிங்கிள் தட்டிக்கொண்டு இருந்தேன். அதுவரை நன்றாய் ஆடிக்கொண்டிருந்த பிரதீப் எல்.பி.டபுள்யூ ஆனான்.அடுத்து வந்த அனந்த்து,கரடி ரெண்டு பேருமே பந்தை ஆகாசத்துக்கு அனுப்ப ஆசைப்பட்டு அவுட்டானார்கள். வீரா உள்ளே வந்தான். ஸ்கோர்போர்டை பார்த்தேன். 88/8 என்று இருந்தது. அந்த எட்டுக்களின் வரிசையை ரசிக்க முடியவில்லை.நம்ம நல்லா விளையாடினால் கடவுளுக்கே பொறுக்காதோ என நொந்து கொண்டேன். ஒரு வேகப்பந்து வீச்சாளனின் ஓவரில் பதினைந்து ரன்கள் அடித்தோம். நிறைய ஒய்டுகள் வேற போட்டான். "யாரு பெத்த பிள்ளையோ" என நினைத்துக்கொண்டேன். இடையிடையே பவுண்டரிகள் பறந்தது.மூன்று ஓவர்களில் இருபத்து ஒன்பது ரன்கள் தேவை.இப்போது எதிரணி பதறியது மாதிரி இருந்தார்கள். கூடிக்கூடி பேசினார்கள். அந்தக்கேப்டன் என் மேல் நம்பிக்கை வைத்து ஐந்து பேரை பவுண்டரிக்கு பக்கத்தில் நிறுத்தியிருந்தான்.ரன்னர் வீரா இளைத்துப் போயிருந்தான். பக்கத்தில் போனேன். பேசினான்.

"சிங்கிள் தட்டுப்பா..இல்லேனா பவுண்டரியப் போடு..டூ..த்ரீ லாம் ஓட முடியாது.."

"டேய் நம்ம என்ன வீடியோ கேமா விளாடுறோம்..காளி கேட்டார்னா ஒன்ன கடிச்சுத் தின்னுருவாறு..."

இப்படியே விட்டால் "கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கையில் இளைஞர் மரணம்" னு தினத்தந்தில செய்தி வந்துரும்னு தோணியது. நான் நேரத்தைக் கடத்த,"க்ளோவ்" பிஞ்சிருப்பதை காட்டி வேற கொண்டு வர சைகை செய்தேன். சுருளி திரும்பவும் க்ளோவ்களுடன் உள்ளே ஓடி வந்தான். 

"இவரு பெரிய ரிக்கிபாண்டிங்..வெண்ண... இருக்கிறதே மூனு செட்டு க்ளோவ்.." நான் கண்ணடித்து வீராவை காட்டினேன். வியர்த்துப்போய் இளைத்துக்கொண்டிருந்தான். சுருளி வீரா பக்கத்தில் போய் "என்னடா பண்ணுனே..இப்படி இளைக்குது.. " என்றான். வீரா சிரித்துக்கொண்டே இளைத்தான். வீரா அடுத்த ஓவரில் தொடர்ச்சியாய் இரண்டு பவுண்டரிகள் அடித்ததும்,நாங்கள் கண்டபடி ஓடியதும்,கடைசி ஓவரில் ஒன்பது ரன் எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலைக்குப் போட்டி வந்தது.காளிமுத்து சார், மற்ற அனைவரும் வெளியில் நின்று கை தட்டிக்கொண்டிருந்தார்கள். முதல் பந்து நோபால், ரெண்டு ரன்கள் ஓடினோம். இதயம் பட படவென அடித்தது. ஒருமுறை உட்கார்ந்து எழுந்தேன். பேட்டின் ஹேண்டிலை இருக்கிப் பிடித்தேன். ஆறு ரன் ஆறு பால். என் மண்டைக்குள்ளிருந்து அந்த சத்தம் கேட்டது. "கமான்டா..இது தான் சரியான நேரம்..எல்லா பீல்டர்ஸ்ஸும் முன்னாடி நிக்குறாங்க..விடாத..கண்டிப்பா ஓ.பி பால்..." அந்த கிளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. எட்டு விக்கெட்டுகள் போயிருக்கிறது. கவனமாய் இருக்க வேண்டும். சத்தம் தொடர்ந்தது. "தைரியம் வேணும் மிஸ்டர் ..ஸ்ட்ரைட் சிக்ஸ் மாதிரி கெத்து இருக்கா..யோசி..வின்னிங் சிக்ஸ்.."ஓ.பி யாய் வந்த பந்தை கிரீஸில் நின்ற படி நேராய் தூக்கினேன். "ட்டாக்". பந்து உறுமிக்கொண்டு பறந்தது. வெகு நேரம் பறந்து நேராய் பவுண்டரியை கடந்து ஆலமரத்திற்கு பக்கத்தில் போய் விழுந்தது.சிக்ஸ். ஜெயித்து விட்டோம். எல்லோரும் கிரவுண்டுக்குள் ஓடி வந்தார்கள். நானும் வீராவும் கட்டிப்பிடித்துத் தாவினோம். எனக்கு பெருமையாய் இருந்தது. கார்த்தியண்ணன் வந்து தலையைக் கோதினார்.நண்பர்கள் வந்து கட்டிப்பிடித்தார்கள்.கரடி பக்கத்தில் வந்து "மச்சி..எதுவும் ஊக்கமருந்து பயன்படுத்துனியா.." என்றான். எஸ்.வி.என் கல்லூரி பி.டி வாத்தியார் வந்து எங்களுக்கு கைகொடுத்து "வெல் ப்ளேடு" சொன்னார். சந்தோசமாய் ஊருக்குக் கிளம்பினோம். போகும் போது ஸ்கோர்போர்டை திரும்பிப்பார்த்தேன். "வி.கே.சி வொன் பை 2 விக்கெட்ஸ்". அந்த நாள் முடிந்ததில் எனக்கு விருப்பமேயில்லை. 

எல்லோருக்கும் வெள்ளைக்கலர் ஜெர்சி வந்திருந்தது. பத்தாம் நம்பர் டீ ஷர்ட்டுக்கு பெரும் அடிதடி நடந்தது. கடைசி ஒருமனதாய் சுருளிக்குக் கொடுப்பதாய் முடிவானது. மூன்றே வாரத்தில் யுனிவர்சிட்டி போட்டிகள் தொடங்கயிருந்தது.காளிமுத்து சார் இரவு ஒன்பது மணிக்கு ஆஸ்டலில் அவர் தங்கியிருந்த அறைக்கு வரச்சொல்லியிருந்தார். போயிருந்தோம். கைலிகளிலும்,ஷார்ட்ஸ்களிலும் போனோம். பேச ஆரம்பித்தார். அனந்த்து கொட்டாவி விட்டான். எல்லோரும் திரும்பி அவனைப்பார்த்தோம். 

" சார்..சீரியசாவே வந்துச்சு..".
"பெருசா ஒண்ணுமில்ல..நல்லா போயிட்டிருக்கு...மேட்ச் முடியிற வரைக்கும் சில விஷயங்களை பாலோ பண்ணனும்..அது ரொம்ப முக்கியம்....மூனே விஷயம் தான்.. ஒன்னு ...காலைல எல்லாரும் யோகா பண்ணனும்..அதிகாலைல...  ரெண்டாவுது  ஆன் டைமுக்கு கிரவுண்டுல இருக்கனும்..மூனாவுது..மூனாவுது.."

சொல்லிக்கொண்டு லேசாய் சிரித்தார். அனந்த்து ஆர்வமாய் "மூனாவுது..." என்றான்.

"யாரும் மாஸ்டர்பேட் பண்ணக்கூடாது "

                                                                                                         ----தொடரும் 

திங்கள், 6 ஜனவரி, 2014

லூஸர்ஸ் - பகுதி2கிரவுண்டை பத்து முறை ஓடிக்கடக்க வேண்டுமென்பது அவ்வளவு எளிதல்ல. நாலாவது ரவுண்டுக்குள் நாக்குத்தள்ள ஆரம்பிக்கும். ஆறாவது ரவுண்டில் தாத்தா,பாட்டியெல்லாம் கண்ணில் தென்படுவார்கள்.பத்தையும் கடப்பது பரமன் புண்ணியம். நான் ஏழாவது சுற்றில் கரை ஒதுங்கினேன். நிற்க முடியாமல் வேப்ப மரத்து அடியில் போய் உட்கார்ந்தேன். ஏற்கனவே அங்கு ஐயப்பன், கரடிசெந்தில், அனந்த்து மற்றும் சில பராக்கிரமசாலிகள் மட்டையாகிக்கிடந்தார்கள். எனக்கு தலை கிறுகிறுவென சுற்றியது. இரண்டு கால்களை மடிக்கி உட்கார்ந்து கொண்டு மூச்சி வாங்கினேன். வலது பக்கம் திரும்பிப் பார்த்தேன். கரடி சட்டையை கழட்டிவிட்டு படுத்திருந்தான். உடம்பு முழுக்க நனைந்து இருந்தது. வயிறு மேலும் கீழும் போய் வந்துகொண்டிருந்தது. கார்த்தியண்ணன்,சுருளி, ரஞ்சித் என மூன்று பேர் மட்டும்தான் பத்து சுற்றையும் முடித்திருந்தார்கள். காளிமுத்து சார் வந்தார். எங்களை பார்க்காமல் வேறு பக்கம் பார்த்து "என்னய்யா.. டீம்ல மூனு ஆம்பளைக தானா.." என்றார். ஐயப்பனுக்கு மூக்கு விடைக்க ஆரம்பித்தது. எழுந்தான். எச்சைத்துப்பிவிட்டு கோபமாய் ஓட ஆரம்பித்தான். எனக்கும் வீரம் வந்தது எழுந்து பின்னால் ஓட ஆரம்பித்தேன். பின்னாலேயே அனந்த்துவும் கரடியும் ஓடி வந்தார்கள். கரடி என் பக்கத்தில் வந்து "இப்படில்லாமாடா ஆண்மைய நிரூபிக்கிறது.. பொசுக்கு பொசுக்கு ரோசப்பட்டுறீங்களேடா.." என்றான். அனந்த்து சோகமாய் "பேசாம பேட்மிட்டன்ல சேந்திருப்பேன்...பொத்துனாப்ல கிரவுண்டுக்கு வந்திட்டு போயிருக்கலாம்..எந்நேரம்" என்றான்.

ஓடி முடிந்து பிட்ச்சுக்கு போய் நின்றோம். குளுக்கோஸ் கொடுத்தார்கள். உள்ளங்கையில் வாங்கி நளினமாய் நக்கினோம். காளிமுத்து சார் தொப்பி,பேட் சகிதம் நின்று கொண்டிருந்தார்."நம்ம டீம் பேட்ஸ்மேன்லாம் லெப்ட் சைடு வாங்க.." என்றார். எட்டு பேர் ஒதுங்கினோம். அனந்த்து வருவதா வேண்டாமா என்று குழம்பி பின் அங்கேயே நின்று கொண்டான். அவர் சிரித்து " உனக்கே நம்பிக்கையில்லையா.." என்றார். எல்லாருடைய மூஞ்சயும் ஒருமுறை பார்த்தார். "இன்னைக்கு யாராவுது க்ராஸ் ஷாட்  ஆடுனா ஒரு வாரத்துக்கு பேட்டிங் கிடையாது..Front foot ஆடத்தெரியாதவுங்க பேட்டிங் ஆர்டரில கீழ போயிருவீங்க..டெய்லி பத்து ரவுண்டு அடிக்காம பிச்சுக்குள்ளேயே எவனும் நுழைய முடியாது.." பேசிவிட்டு எங்களையே பார்த்தார். எதுவும் சொல்லாமல் அமைதியாய் நின்றிருந்தோம். கிரிக்கெட் விளையாடுவதை வாத்தியார்கள் வெளியேயிருந்து பார்த்து அதற்கு இன்டர்னல் மார்க் போடுவது போல் இருந்தது. "பிடிச்ச ஒரு விஷயத்தையும் கெடுத்திருவாய்ங்களோ" என பயந்து கொண்டேன். பவுலர்கள் பாடு படுதிண்டாட்டம். பேட்டிங் க்ரீசுக்கு அருகிலிருந்து ஒரு மரப்பலகை வைக்கப்பட்டது. அது நாலடி நீளமும் ஓரடி அகலமும் உடையது. டென்னிஸ் பாலை கொடுத்து தொடர்ச்சியாய் ஆறு பந்துகளும் அந்த பலகையில் விழுமாறு வீச வேண்டும். "குட் லென்த்" பந்துகள் வீச பெரிய அணிகள் இப்படித்தான் பயிற்சி எடுப்பார்களாம். அனந்த்து, ஷான் போல்லக்கின் விசிறி,ஆகையினால் ஒரு மாதிரி டிக்கியை நெளித்து நெளித்து ஓடி வந்து பந்து போடுவான். அவனால் எவ்வளவு முயன்றும் பலகையின் மேல் வீச முடியவில்லை. அதனால் அன்று மட்டும் அவன் பதினைந்து ஓவர்கள் போட வேண்டியிருந்தது. 

கொஞ்ச நாளில் காளிமுத்து சாரின் பயிற்சியின் மேல் ஒரு பிடிப்பு ஏற்பட்டுப்போனது. நாங்களாகவே ஞாயிற்றுகிழமையில் பயிற்சிக்கு போக ஆரம்பித்தோம். அப்போது வெளியாகியிருந்த க்ரிஷ் ஸ்ரீகாந்தின் "பேட் லைக் எ மாஸ்டர்" சிடி போட்டுக்காண்பித்தார். அதில் பேட்டிங் பற்றிய நுணுக்கங்கள் இருந்தது. புல் ஷாட்டுகள், ஸ்வீப் ஷாட்டுகள், ட்ரைவ்கள் போன்றவை விளக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க கிரிக்கெட் பற்றியே அந்த நாட்களில் பேசிக்கொண்டிருந்தோம்.ஐயப்பன், பெருமாள், ரஞ்சித், சுருளி என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தயாரானார்கள். நான் எனக்கு பிடித்த மூனாவது டவுனில் களமிறங்குவதாக முடிவானது. முப்பது நாளில் இப்படி ஒரு மாற்றம் நடக்கும் என நாங்கள் யாருமே நம்பவில்லை. காளிமுத்து சார் ஒரு நாள் காலை கிரவுண்டில் எல்லாரையும் வரச்சொன்னார்."நல்ல இம்ப்ரூவ்மண்ட் இருக்கு. ஆனா நமக்கு ரிசல்ட் வேணும். இன்னும் முப்பது நாளுல யுனிவர்சிட்டி மேட்ச் ஆரம்பிக்க போகுது. எல்லா வருஷமும் நம்ம காலேஜ் டீம் அதுல கோமாளியா இருக்கும். இந்த தடவ நாம மிரட்டலா விளையாடி கப்பைத்தூக்கிறோம்...இனி எவனாவது சாமியார் காலேஜ்னு கேலி பண்ணட்டும்.. சரி அதுக்கு முன்னாடி ரெண்டு பிராக்டிஸ் மேட்ச் ஆடுறோம்...வர்ற ஞாயிற்றுக்கிழமை திரும்பவும் மதுரை மெடிக்கல் காலேஜ் போறோம்..."

"சார்..சனிக்கிழமை போனாலாவுது சைட் அடிக்கலாம்..."

"யாருடா அது... செந்திலா.."

"சார் எல்லாத்துக்கும் நாந்தானா..சுருளி சார்.."

சிரித்தார். "வழக்கம் போல இப்போ நம்ம கேப்டன் கார்த்தி டீமை அறிவிப்பார்". கார்த்தியண்ணன் எழுந்தார். பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பரை எடுத்துப்படித்தார்."ஐயப்பன்,பெருமாள்,ரஞ்சித்,சுருளி,சிவராஜ்,அனந்தராமன்,கார்த்தி,பிரதீப்,செந்தில்,வீரக்குமார்,ராஜேஷ் தென் சின்னா டுவெல்த் மேன்..." கை தட்டினோம்.மேற்சொன்ன நாளில் மதுரை மெடிக்கல் காலேஜ் போனோம். அவர்கள் வழக்கம்போல் தயாராய் இருந்தார்கள். டாஸ் ஜெயித்து பேட்டிங் எடுத்தோம். ஓப்பனர்கள் பட்டையை கிளப்பினார்கள். ஐயப்பன் அறுபது ரன்கள் எடுத்தான். இருபது ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தோம். நான் பத்து ரன்கள் எடுத்தேன். கரடி என் பக்கத்தில் வந்து "ஒரு வேளை ஜெயிச்சாலும்.. ஜெயிச்சிருவோமோ.." என்றான். முறைத்தேன்.


மெடிக்கல் காலேஜ் ஓப்பனர்கள் வந்தார்கள். கரடியின் முதல் ஓவரில் பத்து ரன் போனது. பெருமாளின் ரெண்டாவது ஓவரில் ஏழு ரன்கள் போனது. கரடி திரும்பவும் ஓவர் போட வந்தான். கார்த்தியண்ணனும் நானும் அவன் பக்கத்தில் போனோம். கார்த்தியண்ணன் நெருங்கிப்போய் "செந்தில் ஓ.பி போடாத..ஏத்தி ஏத்தி வை.." என்றார். நான் "பீல்டிங் மாத்தனுமா.." என்றேன். முறைத்தான். அதற்கு "மூடிக்கிட்டு போ.." வென்று அர்த்தம். வந்து நின்றேன். முதல் பந்து போட்டான். மின்னல் வேகம். ஆனால் ஓவர் பிச்சிடு பால். சுதாகர் அதை பொலேரென அடித்தான். "ட்டாக்" கென சத்தம் வந்தது. சிக்ஸ். அதுவும் மிகவும் உயரமாய் போய் விழுந்தது. "போச்சு இன்னைக்கு கரடி செத்தான்..." என்றான் அனந்த்து. கரடியின் அடுத்த பந்து தான் அவன் வாழ்கையிலேயே போட்ட சிறந்த பந்தாக இருக்கும். அவுட்ஸ்விங்காகி ஆப் ஸ்டம்ப்பை பெயர்த்தது. கரடி கத்திக்கொண்டு ஓடிவந்தான். சுதாகர் முழித்துக்கொண்டு போனான். சுதாகரை விட நாங்கள் தான் அதிர்ச்சியாய் இருந்தோம்.

மளமளவென ஆறு விக்கெட் எடுத்தோம். வழக்கம் போல அந்த உயரமானவன் வந்து வேலையை காண்பித்தான்.காட்டடி அடிக்க ஆரம்பித்தான். பவுண்டரிகள் பறந்தது. இன்னும் முப்பது பந்துகளில் ஐம்பது எடுக்கவேண்டும். இப்போது உயரமானவன் வீராவின் ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தான். வீரா ஆப் ஸ்பின்னர்.நான் ஸ்டம்ப்புக்கு பின்னாலிருந்து கத்தினேன். "குட் பால்...குட் பால்..விடாத..தூக்கலாம்...கமான்...ஈஸி ஈஸி.." அடுத்த பந்து கொஞ்சம் வேகமாய் வந்தது.வளந்தவன் "மட்டை" வைக்க முயன்றான். பந்து பேட்டின் நுனியை மெல்லியதாய் ஒரு முத்தம் கொடுத்து என் கையில் தஞ்சம் புகுந்தது. நானும் வீராவும் ஓடி வந்து கட்டிக்கொண்டோம். கொஞ்ச நேரத்தில் அவர்கள் ஆல்அவுட் ஆனார்கள். எல்லோருக்கும் கை கொடுத்தோம். வெற்றியை முதல் முறையாய் உணர்கிறோம். கரடி அனந்த்துவிடம் வந்து "மச்சி திடீர்னு எனக்கு கங்குலி கால் பண்ணி சவுத்ஆப்ரிக்கா வானு கூப்பிட்டா என்னா பண்றதுடா..செமெஸ்டர் வேற இருக்கே.." என்றான். அனந்த்து சிரித்துக்கொண்டே "கவலப்படாதடா..அங்கெல்லாம் கக்கூஸ் கழுவிறதுக்கு ஆட்கள் கெடப்பாங்க.. கூப்பிட மாட்டார்" என்றான். சிரித்தேன்.காளிமுத்து சார் வந்து எல்லாருக்கும் கை கொடுத்தார். அன்று இரவு மதுரை பாண்டியன் ஹோட்டலில் சாப்பிட்டோம். ஒரே பெரிய டேபிளில் பதினாலு பேரும் உட்கார்ந்திருந்தோம். அமைதியாய் இருந்த இடத்தில் வழக்கம்போல அனந்த்து ஆரம்பித்தான். "ஒருக்க..வெஸ்ட்இண்டீஸ் வெர்சஸ் இங்கிலாந்து மேட்ச்..அப்போ விவியன் ரிச்சர்ட்ஸ் பேட்டிங் பிடிக்கிறாரு.. இங்கிலாந்து பவுலர் போட்ட பால் பிச்சாகி ரிச்சர்ட்சை பீட் பண்ணி கீப்பர்ட்ட போயிருச்சி..  உடனே அந்த பவுலர் ரிச்சர்ட்சை பார்த்து கேலியாய்  " அஞ்சு அவுன்சுல...உருண்டையா...சிகப்பா இருக்கும்..அதுக்கு பேரு பால்..அத பாத்தீங்களா.." னு கேட்டானாம். ரிச்சர்ட்ஸ் சிரிச்சாராம். அதற்கு அடுத்த பால் "சொத்"னு ஒரு அடி. மரண சிக்ஸ். கிரவுண்ட விட்டு வெளிய போயிருச்சாம். உடனே ரிச்சர்ட்ஸ் பவுலர பாத்து "உங்களுக்குத் தான் பந்த பத்தி நல்லா தெரியுமே போய் தேடி எடுத்திட்டு வந்திருங்க.".அப்டின்னாறாம்.." எல்லோரும் சிரித்தோம். நான் என்னை ரிச்சர்ட்ஸ்ஸாகவும் பவுலராய் அக்தரையும் நினைத்துக்கொண்டு கனவு கண்டு பார்த்து சிரித்தேன்.

புதன், 1 ஜனவரி, 2014

லூஸர்ஸ் (பகுதி - 1)
நானும் அனந்த்துவும்  காலில்  பேடை கட்டிக்கொண்டு புளியமரத்தின் கீழே போடப்பட்டிருந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்தோம்.  வி.கே.சி 126/4 என எழுதப்பட்ட ஸ்கோர் போர்ட் எங்களை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. மதிய நேரம் என்பதால் வியர்த்து ஊத்தியது.உபயம் சித்திரை மாதம். சுருளி ஓரமாய் உட்கார்ந்துகொண்டு அவன் அவுட்டானது பற்றி சத்தமாய் பேசிக்கொண்டிருந்தான்.அனந்த்து என் கையை சுரண்டினான்.

" எப்ப பார்த்தாலும் பத்து பால் மிச்சமிருக்கிற நேரத்துலேயே நம்ம இறங்கிற மாறி இருக்கே..இத பத்தி நீ என்ன நினைக்குற.."

" இந்த கேள்விக்கு அவசியம் இப்பயே பதில் தெரிஞ்சாகனுமா.."

" கூலா இருடா..செஞ்சூரியன்ல.. பாகிஸ்தான் மேச்சப்போ... இன்னிங்ஸ் பிரேக்ல சச்சின் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டு பேட்டிங் இறங்கினாராம்.."

சாதாரணமான நேரத்தில் இந்த துணுக்கை ஆர்வமாய் கேட்டிருப்பேன். ஆனால் அப்போது எரிச்சலாய் இருந்தது. அதே நேரத்தில் ஐயப்பன் அடித்த பந்து உயரமாய் பறந்தது. அனந்த்து என்னை நோக்கி"பாஸ்..கெளம்புங்க..கட்சிப்பணி அழைக்கிறது...".  பேட்டை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். "கார்டு" வைத்திருக்கிறேனா என ஒரு முறை செக் செய்தேன். இருந்தது. லேசாய் படபடப்பாய் இருந்தது. 140 கூட எடுக்கலேனா காளிமுத்து சார் காரித்துப்பிருவாரே என பயமாய் இருந்தது.பார்ட்னரிடம் பேசவில்லை, நேராய் போய் பேட்டிங் சைடில் நின்றேன். கீப்பர் எதோ கத்திக்கொண்டு இருந்தான். சுந்தர் பந்து வீச தயாராய் இருந்தான். மதுரை மெடிக்கல் காலேஜின் ஆஸ்தான வேகப்பந்து வீச்சாளர். இதற்கு முந்தைய போட்டியில் இவன் போட்ட பந்து என் பேட்டுக்கும் பேடுக்கும் நடுவில் புகுந்து நடு ஸ்டம்பை பரத நாட்டியம் ஆட வைத்தது. இன்னும் ஏழே பந்துகள்.  சுந்தர் ஓடி வர ஆரம்பித்தான். பதட்டம் என் உடல் முழுக்க பரவ தொடங்கியது. என் மூளையை யோசிக்கத்தூண்டினேன். பழக்கமில்லாத வேலை. என்ன செய்யும் பாவம். குதிரை போல முடிகள் தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தான்.

" ஸீமுக்கு இடது புறமாய் விரல்கள் வைத்து பந்தை பிடித்திருக்கிறான். உறுதியாய் இன்ஸ்விங்....இல்ல ஸீமுக்கு குறுக்காய் விரல்கள் இருக்கிறது..ஷார்ட் பிச்...ரெடியாகு..."  என யோசித்துக்கொண்டிருக்கையில் பந்து fullடாஸாய் என் தொடை உயரத்தில் வந்தது. முதல் பந்தே fullடாஸாய் வருவதென்பது கேத்தரினா கைப், கரீனா கபூர், ஹன்சிகா எல்லோரும் ஒரே நேரத்தில் வந்து    "எனக்கு முதல்ல முத்தம் கொடு " ன்னு சொல்றது மாதிரி. என்ன செய்றதுன்னே தெரியாது. ஆனந்த அவஸ்தை.  மிட்விக்கெட் ஏரியா பக்கம் ஆள் அரவம் இல்லை. என் காஷ்மீர் வில்லோ, பந்தின் பொடனியில் ஒரு போடு போட்டு மிட்விக்கெட் திசையில் விரட்டியது. பவுண்டரி. சிலர் கை தட்டினார்கள். ரன்னர் கார்த்திஅண்ணன் வந்து "குட்ஷாட்..நல்ல பிளேஸ்மென்ட்.." என்றார்.இப்போது தைரியம் வந்திருந்தது. அடுத்த ஓவரில் மேற்கொண்டு ஒன்பது ரன் எடுத்தோம். இருபது ஓவர்களில் 139 ரன்கள் என்பது கொஞ்சம் கௌரவமாய் இருந்தது. போன தடவையை விட 19 ரன்கள் அதிகம். வேகமாய் ஓடி வந்து பேட்டிங் பேடை கழட்டிவிட்டு கீப்பிங் பேடை மாட்ட ஆரம்பித்தேன். காளிமுத்து சார் நடுவில் வந்து நின்றார். எல்லோரும் அவரை சுற்றி நின்றோம். தாடையை தடவிக்கொண்டு பேசினார்.

"பரவால்ல..ஜெயிக்கிற ஸ்கோர் தான்...செந்திலு லைன்லய போடு..லெக்ல காட்டிராத...சுருளி ஸ்பீட குறைச்சிறாத..சிவா வேமா பேட கட்டு...கத்திட்டே இருக்கனும்"

எல்லோரும் மொத்தமாய் கிரவுண்டுக்குள் இறங்கினோம்.யாரும் கை தட்டவில்லை. செந்திலிடம் போய் பேசினேன். செந்தில் எங்களின் முதல் ஓவர் வேகப்புயல்.உடல் முழுவதும் அவனுக்கு முடிகள் கண்டபடி இருந்ததால் அவனுக்கு வேறொரு பட்டப்பெயரும் இருந்தது. 

"டேய் கரடி...இன்னைக்கு மட்டும் நீ லெக் சைடு போடு.. ஒனக்கு லெக்கே இருக்காது..."

" ஆமா நேரா போட்டாலும் இவரு அப்படியே "கிளுக்" குனு பிடிச்சிருவாரு..போன மேச்சில நாலு பைஸ் விட்டது ஞாபகம் இல்லையா.."

"  நம்ம வரலாற்ற நோண்டினோம்னா வாடை தாங்காது..அத விடு..சுதாகருக்கு நம்ம போட்ட பிளான் ஞாபகம் இருக்குல்ல.."

"  பிளானா..இவுங்க பெரிய அல்கொய்தா... மூனு ஷார்ட் பிட்ச்...நாலாவது ஸ்ட்ரைட் புல் பால்..அதான..."

முறைத்துக்கொண்டே போனேன். செந்தில் சிரித்துக்கொண்டே "கோவிச்சிக்காதீங்க கில்கிறிஸ்ட்.." என கத்தினான். வந்து நின்றேன். ரெண்டு மூன்று முறை உட்கார்ந்து எழுந்து கொண்டேன். பயங்கர இரைச்சல் கேட்டது. மதுரை மருத்துவ கல்லூரியின் ஒப்பனர்கள் சுதாகரும், தாமசும் நடந்து வந்தார்கள். போன போட்டியில் விக்கெட்டே விழாமல் ஜெயித்தார்கள். காளிமுத்து சார் அந்த தோல்வியை "ரேப்" என்றார். சுதாகர் அந்த அணியின் அதிரடி ஒப்பனர். அவன் கரடியை எதிர்கொள்ள தயாராய் நின்றான். முதல் பாலே அவனின் நெஞ்சை உரசிக்கொண்டு வந்தது. தொடவில்லை. என் தலைக்கு அருகில் பிடித்தேன். பந்து காற்றை கிழித்துகொண்டு வந்தது. கரடி, சுதாகரை நேருக்கு நேராய் நின்று முறைத்து விட்டு சென்றான். முதல் ஸ்லிப்பில் இருந்த அனந்த்து "கரடிக்கு மெக்ராத்னு நெனப்பு..சீன பாத்தியா..போன மேட்ச்ல தான விரட்டி விரட்டி அடிச்சான்.." என்றான்.

சரியாய் நாலாவது பந்து சுதாகரின் பேட்டின் நுனியில் பட்டு இரண்டாவது ஸ்லிப்பில் வீராவின் கையில் பிடிபட்டது. செந்தில் கத்திக்கொண்டு ஓடி வந்தான்.எல்லோரும் கூடி கும்மாளமிட்டோம். சுருளியும், கார்த்தியன்ணனும் அடுத்தடுத்து விக்கெட் எடுத்தார்கள். ஆனால் அதன் பின் வந்த உயரமானவனும், தாமசும் வெளுத்து வாங்கினார்கள். அதுவும் அனந்த்துவின் ஒரு ஓவரில் இரண்டு சிக்சரும், இரண்டு பவுண்டரியும் பறந்தது. இறுதியில் பதினேழாவது ஓவரில் ஒரு பவுண்டரி மூலம் எங்களது மூன்றாவது தொடர் தோல்வி உறுதியானது. உண்மையில் கடைசியாய் எப்போது ஜெயித்தோமென்று எங்களுக்கு ஞாபகமில்லை.எல்லோருக்கும் கை குலுக்கிவிட்டு கிரவுண்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தோம். சட்டை முழுக்க அழுக்கு, ஆங்காங்கே காயங்கள்,வியர்வை வாடை, மொத்தத்தில் சோர்ந்து போயிருந்தோம். கேப்டன் கார்த்தியண்ணன், வீரா, சுருளி, ஐயப்பன், ரஞ்சித் ஆகியோர் முன்னால் நடந்து கொண்டிருந்தார்கள். நான்,அனந்த்து,கரடிசெந்தில் ஆகியோர் கொஞ்சம் இடைவெளியில் பின்னாடி நடந்தோம்.அனந்த்து என் பக்கத்தில் வந்து கொஞ்சம் தாழ்ந்த குரலில் "டேய் பைரேட்ஸ் ஆப் கரீபியன் போலாம்டா...வேமா போயிட்டா டிக்கெட் உறுதியா கிடைக்கும்.." என்றான். நான் கொஞ்சமாய் யோசித்து கரடியை பார்த்தேன். அவன் எரிச்சலாய் "டேய் ஏன்டா....நீட்டா ராம்விக்டோரியாவில ஒரு சீன் படத்த பாத்திட்டு கெளம்புவோம்" என்றான். எனக்கென்னவோ கரடியின் பக்கம் நியாயம் இருப்பதாய் பட்டது. பேட்டுகள், பேடுகள்,க்ளோவ்கள் என எல்லாத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தோம். காளிமுத்து சார் வந்தார். அவரது பச்சை டீ ஷர்ட்டில் சின்னதாய் ஒரு முதலை படம் போட்டிருந்தது. எங்கள் கல்லூரியின் இளம் வேதியில் பேராசிரியர், கடைசி நாலு மாதமாய் கல்லூரியின் கிரிக்கெட் கோச். எப்போதும் பல்லை கடித்துக்கொண்டே பேசுவது போல் பேசுவார். இந்த முறை உண்மையிலேயே பல்லை கடித்துக்கொண்டு பேசினார்.

"வெக்கமே இல்லையா டா..தோக்கிறது அசிங்கமில்லே..ட்ரை பண்ணாம தோக்கிற பார் அதான் அசிங்கம்...பதினாலு ஓயிடு போட்டிருக்கோம்.. ப்ராக்டிஸ் வரச்சொன்னா...ஏமாத்திட்டு ஓடுறது... இன்னைக்கு ரெண்டு ஓவர் போட்டிட்டு நாயி மாறி இளைக்குறீங்க...நீங்கெல்லாம் ஆம்பளையா??... எப்பப்பாத்தாலும் கேனப்பயக மாதிரி ஈனு இளிக்க வேண்டியது...  யூ புவர் லூஸர்ஸ்......"

கோபமாய் திரும்பி நடந்தார். அவர் கடைசியாய் சொன்ன வார்த்தை சத்தமாய் எதிரொலித்தது. எனக்கு கோபம் தாளவில்லை.கூட்டத்தில் நாங்கள் மட்டும் நிர்வாணமாய் நிற்பது மாதிரி இருந்தது. செந்திலை பார்த்தேன். அவன் கோபமாய்  "என்னடா இப்படி பேசிட்டு போறாரு..நம்மள பாத்தா லூஸு மாதிரியா இருக்கு.." என்றான்.


                                                                                         -- ---தொடரும்