திங்கள், 13 ஆகஸ்ட், 2012

பிர(ற)தோசம்

 அன்று திங்கட்கிழமை. இருக்குற எல்லா எரிச்சலையும் பேக்கில் போட்டுக்கொண்டு ஆபீஸ்க்கு கிளம்பிவந்தேன். ஒரு பய இல்ல. அவள் மட்டும் அவளோட இருக்கையில் அமர்ந்திருந்தாள்.சேலை கட்டி இருந்தாள்.நெற்றி முழுக்க வெள்ளை,சிகப்பு என திருநீரும், குங்குமமும் கோட்டிங் கொடுக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் இருந்த சாமி படங்களுக்கு பூ போட்டிருந்தாள். கையில் சூலாயுதம் இல்லையே தவிர கிட்டத்தட்ட ஒரு அம்மன் போலவே காட்சி அளித்தாள். இவளோட கொஞ்சம் பேச்சப்போட்டோம்னா பொழுதுபோகுமேனு பக்கத்தில போனேன்.

"ஹாய்..குட்மார்னிங்...என்னங்க சாயங்காலம் பூ மிதிக்கிறீங்களா..கெட்டப்பே பயங்கரமா இருக்கே.."

"ஹலோ கேலி பேசாதீங்க..இன்னைக்கு பிரதோஷம்...அதான் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்....நாளைக்கு குணாவுக்கு யூ.எஸ் விசா இண்டர்வ்யூ.." 

குணா அவளோட அடிமை.அதாவுது காதலன். வழக்கம்போல அவள வீட்ல இருந்து ஆபிஸ்க்கு ட்ராப் செய்றது, மொபைலுக்கு ரீசார்ஜ் செய்றது, வாராவாரம் ஒரு இங்கிலீஷ் படத்துக்கு டிக்கெட் புக் பண்றது, இவ அசிங்கசிங்கமா திட்டினாலும் "ஈ" யென சிரிப்பது போன்ற அளப்பெரிய காரியங்கள் செய்பவன். சில நேரங்களில் இவன் போன ஜென்மத்தில் அடிமாடா பொறந்திருப்பானோவென நான் நெனச்சிருக்கேன்.

"ஓ அப்டியா..குணாவுக்கு விசா இண்டர்வ்யூவா...கங்ராட்ஸ்..கண்டிப்பா யூ.எஸ் போயிடுவான்..கவலைய விடுங்க..."

"ஏங்க..வாய கழுவுங்க.. அவன் யூ.எஸ் போகக்கூடாதுனு தான் இத்தன வேண்டுதல் போட்ருக்கேன்...நீங்க வேற.."

"என்னங்க சொல்றீங்க...ஏங்க??"

"அவன்லாம் இங்கயே இந்த சீன் போடுறான். அங்கெல்லாம் போனா என்னைய மதிக்க மாட்டான். தவிர இங்க நமக்கு ஹெல்ப்லாம் யாரு பண்றது..ஒரு பொண்ணா இருந்து யோசிச்சு பாருங்க புரியும்.."

"இதுக்காக நா அந்த ஆப்பரேசன்லாம் பண்ணிட்டு யோசிக்க முடியாது..ஏங்க இப்டி...பய ரொம்ப நல்லவனுங்க...உண்மைய சொல்லணும்னா உங்க நாய விட உங்ககிட்ட அதிக விசுவாசமா இருக்கிறது அவன் தான்.."

"கிழிச்சான்...போன பெர்த்டேவுக்கு பிளாட்டினம் ரிங் வாங்கித்தரேன்னு சொல்லிட்டு, டெடிபீர் வாங்கித்தந்து ஏமாத்திட்டான். இந்த பசங்களே இப்டித்தான். நாம ஓகே சொல்றவரைக்கும் தான் கண்ட்ரோல்ல இருப்பானுங்க.அப்றம் அவ்ளோ தான்.."

"என்னங்க கண்ட்ரோல்,கிண்ட்ரோல்னு மிலிட்டரி கர்னல் மாதிரி பேசுறீங்க. எல்லாம் புடிச்சுபோய் தானே லவ் பண்ணீங்க..இப்பப்புடிச்சி எளிமிண்டரி ஸ்கூல் டீச்சர் மாதிரி அவன டார்ச்சர் பண்றீங்க.."

"பின்ன....முன்னெல்லாம் நிலா,வானவில்,ரோஜானு எனக்கு கவிதை எழுதி அனுப்புவான்...அடிக்கடி போன் பண்ணுவான்...எனக்கென்ன பிடிக்கும்னு தெரிஞ்சு தேடித்தேடி வாங்கித்தருவான்...இப்போல்லாம் ஒரு நாளைக்கு நாலு காலுக்கு மேல பண்ண மாட்றான்...போன வாரம் படத்துக்குகூட கூட்டுப் போல தெரியுமா...இப்ப என்ன சொல்றீங்க.."

"ஒரு வேள மூளை திரும்பவும் அவனுக்கு கரெக்டா வேல செய்ய ஆரம்பிச்சிருச்சோ என்னவோ.."

அவள் என்னை எரிப்பது போல் முறைத்தாள். உடனே பயப்பட நாம என்ன குணாவா... இவளை இன்னும் கொஞ்சம் வெறியேற்றினால் அன்றைய நாள் இனிய நாளாக அமையும்னு ஒரு பச்சி எனக்குள் கூவியது.

"குணா உங்கள ரொம்ப டீப்பா லவ் பண்றான்ங்க..சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.. அவன் உங்க பின்னாடி சுத்த ஆரம்பிக்கிறப்பவே நம்ம சுரேஷ் கூட "அது ரொம்ப சுமார் பிகர் மச்சி...லூசு மாதிரி அடிக்கடி சிரிக்கும்...வேற நல்ல பொண்ணா ட்ரை பண்ணுடா" னு சொன்னான். ஆனா குணா தான் "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு" சொல்லிட்டான்...அத கூட விடுங்க...நீங்க நான்வெஜ் சாப்ட மாட்டீங்கன்றது தெரிஞ்சதும் அவனும் நிறுத்திட்டான் தெரியுமா...நீங்க காந்திய காதலிச்சிருந்தாக்கூட அவர் இந்த மாதிரி தியாகம்லாம் பண்ணிருக்க மாட்டார்..."

"ஸ்டாப்...நா ஒன்னும் அவன் என்ன லவ் பண்ணலேன்னு சொல்லல..இப்போ மொத மாதிரி இல்ல மாறிட்டான்னு சொல்றேன்.."

"கரெக்ட்தான..மாற்றம் ஒன்று தான் மாறாததுனு மாற்றான் பட டைரக்டர் கே.வி. ஆனந்தே சொல்லிருக்காரே.."

"ஹலோ என்ன ரைமிங்கா பேசுறதா நினைப்பா...அது எப்டிங்க எல்லா பசங்களும் கொஞ்சங்கூட சீரியஸ்நெஸ் இல்லாம இருக்குறீங்க...பெருசா ஜோக் அடிக்கிறோம்னு நெனப்பு...அன்னைக்கு குணா எங்கிட்ட  "உங்கப்பா "தார்-டின்" என்ன சொல்றாரு" ங்கிறான். எனக்கு எப்டி இருந்துச்சு தெரியுமா.."

"முன்னாடி "விடாது கருப்பு" னு சொல்லுவான்..இப்ப மாத்திட்டானா..வெரி ஹுமரஸ் Guy..."

"உங்ககிட்ட போய் பேசிட்டு இருந்தேன் பாருங்க..என்ன சொல்லணும்...."

"சும்மா ஜாலிக்குங்க..சரி கடைசியா ஒரே கேள்வி...அதோட நம்ம உரையாடல முடிச்சிக்கிறலாம்.இப்டி வெறித்தனமா சாமி கும்புடுரீங்களே அப்டி என்னதான் வேண்டுவீங்க..." அவள் "ம்ம்ம்.." னு சொல்லிக்கிட்டே மேலே விட்டத்தை பார்த்தாள். பொண்ணுங்க எல்லாம் சேவாக் மாதிரி... ஸ்டெம்ப்கு வெளியே ஒரு பால் போட்டாலும் டமால்னு அடிச்சிருவாங்க. அவள் தன் திருவாயை திறந்தாள்.


"ம்...மொத மொத குணா ஸ்கெட்ச்ல படம்லாம் வரைஞ்சு லவ் லெட்டர் குடுத்தானே அது மாதிரி வாரம் ஒன்னு குடுக்கணும். தினமும் என்னை ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு ட்ராப் பண்ணனும். அடிக்கடி அம்மா,அப்பாவ  பாக்குறேன்னு ஊருக்கு போகக்கூடாது. தேவையில்லாம உக்காந்து கிரிக்கெட் பாத்திட்டு இருக்க கூடாது. சுடி,சல்வார் மாசம் ஒன்னாவுது வாங்கித்தரனும். ஆபிஸ்ல இருக்கிறாளுகளே அனிதா,பவித்ரா..அவளுங்க கூட பேசவே கூடாது. இந்த கொரங்கு மாறி அங்க இங்கன்னு தாடி வளக்காம "க்ளீன் ஷேவ்" பண்ணனும். எங்க அப்பா அம்மா கிட்ட மரியாதையா நடக்கணும்..."

அவள் கல்யாண வீட்டு மளிகை லிஸ்ட் மாதிரி சொல்லிக்கிட்டே போனாள். எனக்கு தலை கிறுகிறுவென சுத்தியது. அடிமைகள் பிறப்பதில்லை,உருவாக்கப்படுகிறார்கள்.