திங்கள், 19 டிசம்பர், 2011

வேணியக்கா..(பகுதி-2)நானும் பிரபுவும் தண்ணி குடிக்க,மூச்சா போக என ஒன்றாகவே போனோம். வேணியக்கா எங்கள் நட்பை பலப்படுத்தியிருந்தாள். "மச்சி...கவனிச்சியா ஆம்பள பேய்களெல்லாம் ரொம்ப கம்மிடா..இவளுக தான்டா செத்தும் நம்மள டார்ச்சர் கொடுக்குராளுக...". நான் தலையாட்டினேன். "ஏன்டா இந்த விஜய் டீவில காமிக்குறானுகளே ஆவி,தீயசக்தி, அதெல்லாம் உண்மை தான் போலடா.." . பிரபு கொஞ்சம் அதிகமாய் பேசிக்கொண்டிருந்தான். பயமாய் இருக்கலாம்.நான் அமைதியாய் இருந்தேன். எனக்கும் கூட பயம் தான். எனக்கு இந்த முட்டை கண்ணுள்ள பெண்களை க்ளோஸ் அப்-ல் பார்த்தாலே கொஞ்சம் பதறும். இந்த லச்சனத்தில் பேயை,அதுவும் முகம் முழுக்க முடியுள்ள பேயை...அய்யோ நினைத்து பார்க்கவே கொடூரமாய் இருந்தது. இது தவிர காற்று வேற தீவிரமாய் அடித்து பீதியை அதிகமாக்கிக் கொண்டிருந்தது. இன்னும் நைட் சாப்பாடு வேற சாப்பிடவில்லை என்பதால் பேயை பார்த்தால் பயப்படக்கூட தெம்பில்லாமல் இருந்தேன்.

" டேய்...ரொம்ப பசிக்குது.பாத்துக்கோ...நா பக்கத்துல போய் எதாவுது சாப்டு வந்திடுறேன். ஒரு மாதிரி கிறுகிறுனு வருது.." என்றேன்.

"ரொம்பத் தெளிவுடா நீ..எதாவுது பிகர் கூட பேசுறப்ப கூடவே ஒட்டிக்கிட்டே இருந்து உயிர வாங்கிறது. இந்த மாதிரி சிக்கல்ல இருக்கிறப்போ தனியா விட்டுட்டு ஓடுறது..."

"சத்தியமா பசிக்குதுடா..ஷிப்ட்ல யாராச்சும் ஒராளாவுது இருக்கனும்ல...பத்து நிமிஷம்தான்டா வந்திருவேன்...அப்டி இல்லேன்னா நீ வேணும்னா வண்டி எடுத்திட்டு போய் எனக்கு சாப்பாடு வாங்கிட்டு வா..."

 சில நேரத்துல நம்ம நாக்குல சனி உக்காந்து நமக்கு பதிலா டப்பிங் கொடுக்கும். அந்த மாதிரி தேவையில்லாம நா வாய விட்டேன். ஸ்லிப் கேட்ச்க்கு காத்திருந்த ராகுல் டிராவிட் மாதிரி பிரபு அந்த பாயிண்ட்டை கபக்கென கவ்வினான்.அவன் முகம் ஏதோ ஜெயிலில் இருந்து விடுதலையான ஆயுள் தண்டனை கைதி போல மிக பிரகாசமானது. "சரி..ஓகே மச்சி...நா வாங்கிட்டு வரேன்.." என சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான். நான் சுதாரிப்பதுக்குள் ஆள் கேட்டுக்கு பக்கத்தில் போய் விட்டான். 

"டேய் நில்லுரா...."

"மச்சி..உங்கக்காவுக்கும் சேத்து சாப்பாடு வாங்கிட்டு வரவா..ஹிஹி.."

போய்விட்டான். இருந்த ஒரே துணையும் ஓடிருச்சு. எப்படியும் அவன் வர முப்பது நிமிஷம் ஆகும். அது வரைக்கும் பேசாம போன்ல ரத்தினம் அண்ணனோட பேசிட்டு இருப்போம்னு அவருக்கு கால் பண்ணினேன். ஒரு ஹிந்திக்காரன் எடுத்தான். ரத்தினம் ஒடம்பு சரி இல்லேன்னு சொல்லிட்டு ரூம்ல தூங்கிட்டு இருக்காரு என்றான். எனக்கு நடுராத்திரியில் எமகண்டம் ஆரம்பமாகிருச்சுனு புரிந்தது.போனை வைத்துவிட்டு ஆபிஸை ஒரு நிமிடம் நோட்டம் விட்டேன். எவனும் இல்லை. நான் உட்காந்திருக்கும் ஏரியால மட்டும் தான் லைட் எரியுது. மத்த பக்கம்லாம் இருட்டா இருக்கு. ஏன்டா லைட்லாம் ஆப் பண்ணீங்கன்னு கேட்டா "காஸ்ட் கட்டிங்" னு சொல்வாய்ங்க. இந்த பட்ஜெட் போடுறவனையெல்லாம் நைட் ஷிப்ட்ல வேல பாக்கவிடனும்னு நெனச்சுகிட்டேன். ஒரு முறை இருமினேன். ரெண்டு மூணு தடவை எதிரொலித்தது. காண்டாமிருகம் கர்ஜித்தது மாதிரி இருந்தது. நம்ம இவ்வளவு கொடூரமாவா இருமிறோம்னு கொஞ்சம் வியப்பாய் இருந்தது.

சத்தமே இல்லாமல் இருப்பது தான் பிரச்சனை என்று தோன்றியது. என்னுடைய சோனி எரிக்சன் மொபைலில் இருந்த ஐயப்பன் பாடல்களை ஸ்பீக்கரில் போட்டு விட்டேன்.கொஞ்சம் நிலைமை கட்டுக்குள் வந்தது போல் இருந்தது.எங்கும் ஒரு தெய்வீக வாசனை வருவது போல் பட்டது. கொஞ்சம் தெம்பு வந்தது. நேராய் என் கணினி முன் அமர்ந்து மெயில் செக் செய்து கொண்டிருந்தேன். திடீரென "தொப்ப்....." பென ஒரு சத்தம். இதயம் பட படவென அடித்தது.யாருமே இல்லாத இடத்தில் இதென்ன சத்தம். ஒருவேளை எலி எதையும் உருட்டுதோ...இல்லை வாய்ப்பில்லை...எழுந்து போகலாமா.... என் மூளைக்குள் பலவாறு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இருந்தும் எழுந்து நடந்தேன். எவனோ முழு வாட்டர் கேனில் தண்ணியை நிரப்பி வைத்திருக்கிறான், அது காத்துக்கு கீழே விழுந்திருக்கிறது.கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. என் இடத்துக்கு திரும்ப நடந்த போது தான், எனக்கு அந்த சத்தம் கேட்டது.


முதலில் பூனை கத்துவது போல் தான் இருந்தது. கவனித்து கேட்ட போது தான் அழுகும் குரல் என்று தெரிந்தது. என் முதுகு தண்டு முழுதும் குளிர் பரவியது.கொஞ்சம் யோசித்து பார்த்தால் என் வாழ்க்கையில் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதே இல்லை. வெறும் பயத்தால் தேவையில்லாமல் குழம்புகிறேனோ என்று தான் அதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். உண்மையில் அழுகை சத்தம் எந்த திசையில் இருந்து வருகிறதென தெரியவில்லை. அடி வயிற்றில் இருந்து பீறி அழுகும் அழுகை சத்தம். எனக்கு நடுக்கம் அதிகமானது. வேகமாக நடந்து செக்யூரிட்டி இருக்கும் இடம் வந்து விட்டேன். இதயம் கண்டபடி வேகமாக துடித்தது. கண்ணாடி வழியாய் உள்ளே பார்த்தேன். அந்த ஹிந்திக்கார செக்யூரிட்டி என்னை வித்யாசமாய் பார்த்தான்.

"என்ன சார் லேடீஸ் யாரும் இன்னும் வேல பாக்குராங்களா...நைட் பத்து மணிக்கு மேல நாட் அளவுட்னு தெரியாதா..."

"இல்....இல்லையே...நீங்க யாரையும் பாத்தீங்களா..."

"அட என்னங்க..இப்பத்தானே மமதா மேடம் டேபிள்ள இருந்து அந்த பொம்மைய எடுத்துட்டு ஒரு மேடம் உள்ள போனாங்க..போறப்பகூட வாட்டர் கேன தள்ளிவிட்டுகூட போனாங்களே...நீங்க பாக்கலீங்களா..."

எனக்கு புரிந்து போனது. அந்த செக்யூரிட்டியிடம் நான் எதுவும் சொல்லவில்லை. நிம்மதியாய் இருப்பவர்களை பேய் கதை சொல்லி சங்கடபடுத்த வேண்டாமென நினைத்தேன். பிரபு சரியாய் வந்து சேர்ந்தான். "டேய் தோசைக்கு தேங்கா சட்னி தர மாட்டேன்னாய்ங்க..சண்ட போட்டு வாங்கிட்டு வந்திருக்கேன்... என்ன இங்க நிக்குற,வா உள்ள போவோம்" என்றான். 

உள்ளே வந்தோம். "ஆமா...அப்பிடி இப்டி எதுனா பாத்தியா..இந்த ரத்தினம் சரியான டுபாக்கூர்டா..இப்பிடித்தான் ஒரு நா என்கிட்ட பதினஞ்சு அடில ஒரு பாம்ப ரோட்ல பாத்தேன்னு கத விடுராறு..அவரு நம்ம ஆபிஸ் பிகர் எதையாச்சும் மேக்அப் இல்லாம பாத்திருப்பாராயிருக்கும்... "


கொஞ்ச நேரம் பேசிக்கொண்டே இருந்தோம். பிரபு ரொம்ப இயல்பாய்,கலகலப்பாய் இருந்தான்.அவனே தனியாய் போய் பிஸ் அடித்துவிட்டு வந்தான். இவன்கிட்ட எதுவும் இப்போதைக்கு சொல்ல வேண்டாம்  என நினைத்துக்கொண்டேன். ஒருவழியாய் விடிந்தது. கீழே இறங்கி வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்தோம். ரத்தினம் அண்ணனும் கிளம்பி நடந்தார். நான் அவர் பக்கத்துலே போனேன். எதுவும் பேச வில்லை. அவர் சொன்னார்.

"ஒவ்வொரு பெரிய கட்டடம் முடியறதுக்குள்ளேயே எப்பிடியும் ஒருத்தராவுது அங்க செத்துருவாய்ங்க...அப்டியே அவுக அங்குட்டுத் தான் சுத்துவாகளாம்..பாவம் எம்புட்டு ஆசைக..பாசங்க...."  சொல்லிவிட்டு நடந்து போக ஆரம்பித்தார். நான் ஒருமுறை அந்த பிரமாண்ட கட்டிடத்தை திரும்பி பார்த்தேன்.ஆகாயத்தை நோக்கி வளர்ந்து ஆணவமாய் சிரித்துக்கொண்டிருப்பது போல் இருந்தது.இதெல்லாம் நடந்து 
இரண்டு.மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதும் பெரிய கட்டிடங்களை பார்த்தால் வேணியக்கா ஞாபகம் வருகிறாள்.                            
                                                         ---------  முற்றும் --------

புதன், 14 டிசம்பர், 2011

வேணியக்கா..(பகுதி-1)


                                       வேணியக்கா..(பகுதி-1)
கண்ணை திறந்து பார்த்தேன் ,மணி சாயங்காலம் ஆறு. கை,காலெல்லாம் எதோ ரக்பி விளையாண்டவன் மாதிரி ஒரே வலி. இன்னும் ஒரு வாரம் நைட் ஷிப்டில் வேலையா என மலைப்பாய் இருந்தது. டீ.வி யை போட்டேன். சன் மியூசிக்கில் பொம்மரேனியன் நாய் மாதிரி முடி வைத்திருந்த ஒருத்தன் ,"ஹை குட்டீஸ்..நீங்க பாட்டு பாடுரீங்களா, இல்ல ரைம்ஸ் சொல்றீங்களா" என பெனாத்திக் கொண்டிருந்தான். வயிறு பசித்தது. ஊரே தூங்கப்போகும் நேரத்தில் நான் ஆபிஸ் போனுமா என கோபமாய் இருந்தது.கடவுள் அசிடிட்டி பிரச்சனையில் இருக்கும் போது என் தலை எழுத்தை எழுதி இருப்பாரோ என நொந்து கொண்டேன்.வழக்கம் போல குளித்துக் கிளம்பி இரவு எட்டு மணிக்கு ஆபிஸை அடைந்தேன். சாந்தோமில் கடலை முத்தமிடும் தூரத்தில் இருக்கும் ஒரு பெரிய கட்டிடத்தில் தான் அலுவலகம் இருந்தது. பத்து அடுக்கு கட்டிடம் அது. மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் கடல் அழகாய் தெரியும். ஒன்பது மணிக்கு தான் நம்ம டுயூட்டி ஆரம்பம் அதனால் நேராய் லிப்டில் என் பத்தை அழுத்தி கடலை சைட் அடிக்க மாடிக்கு கிளம்பினேன். வாகனங்கள்,மனிதர்கள் எல்லாம் பொடிப்பொடியாய் தெரிந்தனர். கடல் காற்று ரம்யமாக என் மூஞ்சில் வந்து அடித்துக்கொண்டிருந்தது. எவன் சொன்னது சென்னை அழகான ஊரில்லை என. .


"டே வெண்ணை கால் பண்ணா எடுக்க மாட்டியா.... ". பிரபு போனை காட்டிய படி வந்தான்.ஜீன்ஸ் பேண்டை இதற்குமேல் இறக்க முடியாது என்கிற நிலையில் அணிந்திருந்தான். என்னுடன் நைட் ஷிப்டில் வேலை பார்க்கும் மற்றொரு பட்சி. நான் பதிலேதும் சொல்லாமல் கடலை பார்த்துக்கொண்டிருந்தேன். "கடல் கடவுளோட மாஸ்டர் பீஸ்" ல என்றேன் பிரபுவை பார்த்து. வாயில் சிகரெட்டை பத்த வைத்தவாரே என்னை பார்த்தான்.


"கடவுள் ஒரு மாவுருண்டை செஞ்சு வச்சாராம் அது பூமியாகிருச்சாம்...அப்புறம் அதுல ஒன்னுக்கடிச்சாராம் அது கடலாகிடுச்சாம்.. அப்டின்னு எங்க பாட்டி சொல்லும்.." என சொல்லி சிரித்தான்.


"உங்க பாட்டி இப்போ உயிரோட இருக்கா..???"


"இல்ல டா..போன வருஷம் டெங்கு காச்சல்ல போயிருச்சு"


"நல்லவேளை..எனக்கு முன்னாடி டெங்கு முந்திருச்சு". சிகரட்டை என்மேல் சூடு வைப்பது போல பாவனை காட்டினான். பேசிக்கொண்டே கீழே அலுவலகத்துக்கு போனோம். எல்லா பய புள்ளைகளும் வீட்டுக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்தார்கள். எங்களை பார்த்ததும் ஜெயராமன் மட்டும் சிரித்துக்கொண்டே "வந்துட்டாய்ங்கடா.. வாட்ச்மேனுக..." என்றார். மதுரைக்காரர். பேண்டை டக் இன் பண்ணாமல்,செருப்புப் போட்டுக்கொண்டு வந்து வேலை பார்க்கும் ஐ.டி போராளி. பிரபு அவர் பக்கத்தில் போனான்.


"யோவ் ஜெயா... நல்லா Laughing புத்தா மாதிரி தொப்பையும் தொந்தியும் வச்சிக்கிட்டு ஒனக்கெல்லாம் குசும்பு ஜாஸ்தியா போச்சு" என்றான்.


."டேய் நாய் நக்குன மண்டையா.. உங்கள செக்குயூரிட்டி ரத்தினம் தேடுனாரு..அத சொல்லத்தான் கூப்டேன்.."


இரவு மூணு மணிக்கு மேல் எங்களுக்கு செக்கியூரட்டி ரத்தினம் அண்ணன் தான் தூக்கம் போக்கும் ரட்சகர்.அரசியல்,சினிமா என புகுந்து விளையாடுவார். அவர் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எதற்காகக் கூப்பிட்டிருப்பாரு என யோசித்துக்கொண்டே அவருக்கு போன் செய்தேன். "நான் நேரா வரேன்" என சொல்லிவிட்டு கொஞ்ச நேரத்தில் வந்தார்.சாம்பல் நிறத்தில் அந்த செக்யூரட்டி உடுப்பில் இருந்தார். முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்பு கொஞ்சம் கூட இல்லை, நெற்றியில் பெரிய திருநீர் கோடு. "என்னாச்சுண்ணா...எதாவுது பிரச்சனையா??" என்றேன். "நேத்து ராத்திரி சிக்கலாகிப்போச்சு பா" என்றார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்தார். இப்போது அலுவலகம் கிட்டத்தட்ட காலியாகி இருந்தது. 


"நேத்து ஒரு மணியிருக்கும் ரிசப்சன் ஷோபால பாட்டுக்கேட்டுக்கிட்டே படுத்துக்கிடந்தேன். ஜன்னலெல்லாம் தெறந்து கெடந்து இருந்ததால,கடல் காத்து ஜிலு ஜிலுனு அடிச்சிட்டு இருந்தது. என்னடா யாரோ பின்னாடி நிக்குராப்ல இருக்கேன்னு திரும்புறேன். கரு கருனு ஒரு உருவம். மூஞ்சு முழுசா முடி முளச்சிருக்கு. உதடு மட்டும் ரத்தச் செகப்பா துருத்திக்கிட்டே தெரியுது. எனக்கு தூக்கி வாரிப்போட்ருச்சி. நல்லா பின்னாடி நீளமான மயிர பாக்குறப்ப தான் பொம்பளனு தெரியுது. கத்தலாம்னு பாக்குறேன் வாய் வர மாட்டிங்குது. "நூறு ரூவாய கொடுரா..எம்டு நூறு ரூவாயா.." னு சொல்லிக்கிட்டே பக்கத்துல வர பாக்குது. திரும்பி ஓடிரலாம்னு திரும்புறேன். முதுகுல ஒரு அடி. எம்மா சவுக்க சொழட்டி அடிச்ச மாதிரி அந்த வலி. அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரில.முழிக்குறப்ப விடிஞ்சிருச்சு."

"
   ஏங்க ஒங்க பொண்டாட்டிய நெனச்சிக்கிட்டு பயந்துகிட்டே தூங்கிருப்பீங்க. அதான் கெட்ட கனவா வந்திருக்கு.." ஜெயராமன் பையை தூக்கிகொண்டு கெளம்பும் போது கிண்டலாய் சொல்லிவிட்டு சென்றார்.நான் லேசாய் சிரித்தேன். பிரபு சிரிக்காமல் ரத்தினம் அண்ணனையே பார்த்தான். அவர் சட்டையை கழட்டி முதுகை காட்டினார்.முதுகில் பெரிய சிகப்பு கோடு தெரிந்தது. பயம் எனக்குள்  ஜிவ்வென பரவியது. கொஞ்சம் வேர்த்தது. காட்டிக்கொள்ளவில்லை. ரத்தினம் கொஞ்சம் இடைவெளிக்கு அப்புறம் பேசினார்.


"நம்ம எலக்ட்ரீசியன் குமார கேட்டேன்..அவன் தான் சொன்னான். இந்த பில்டிங் கெட்டுரப்ப கிருஷ்ணவேணின்னு பக்கத்துல பட்டினபாக்கத்துல இருந்து ஒரு பொண்ணு வந்து வேல பாத்துச்சாம். கொழந்தை க்கு சாப்பாடு வாங்க வச்சிருந்த நூறு ரூபாய தொலைச்சுப்புட்டதாம். மாடில போய் தேடி பாக்குறப்ப,மேல இருந்து தவறி கீழ விழுந்து செத்து போச்சாம். அதுல இருந்து இந்தப்பக்கம் அலையுதாம். அவனுங்கூட பாத்திருக்கானாம். நீங்களும் தனியா சுத்தாம..ஒன்னு மண்ணா சூதானமா இருந்துக்கோங்க.."


சொல்லிவிட்டு போனார். இப்போது எங்கள் ப்ளோரில் என்னையும் பிரபுவையும் தவிர வேற யாரும் இல்லை. பிரபு சோகமாய் என்னையே பார்த்தான். "டேய்...ஐநூறா இருக்கு...அஞ்சு நூறு சேஞ்ச் இருக்கா.." என்றான். நான் சிரித்தேன். "ஏன்டா நீ நம்புறியா..." என்றேன்.


"நம்புறேனோ இல்லையோ...ஆனா இவய்ங்க சந்திரமுகி கதை மாதிரி சொன்னத கேக்குரப்ப தொடை ஷேக் ஆகுது. லைட்டா பாத்ரூம் வருது."


"ஆமாடா..அவரு முதுகுல அந்த காயத்த பாத்தப்போ...எங்காதுல ஓநாய் ஊளையிடுற சத்தம் கேட்டுச்சுடா.."


"டேய் எனக்கு துணையா ரெஸ்ட் ரூம் வரையும் வர்றியா... அர்ஜென்டா பாத்ரூம் வருது..."


"வேணியக்கா லேடீஸ் டா. ஜென்ஸ் பாத்ரூமுக்கெல்லாம் வராது..தைரியமா போ.."


"என்னடா அக்கானு முறை சொல்லி கூப்பிடுற..."


"அதுகள மரியாதையா பேசினோம்னா நம்மள அண்டாதாம்...."

ரெண்டு பேரும் பேசிக்கொண்டே ரெஸ்ட் ரூம் போனோம். ஜன்னல் வழியே கடல் காத்து முகத்தில் அடித்தது. இந்த முறை பயமாய் இருந்தது.


                                                                                                                  தொடரும்...