நேரு உள்விளையாட்டரங்கம் வெள்ளை நிற நியான் விளக்கிலும் ,வந்திருந்த மக்களின் சத்தத்தாலும் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் பறந்து கூட்டத்தை கண்காணித்துக்கொண்டிருந்தது. "நாங்கள் விழா மேடையை சுற்றி மென்கதிர் மின்சார வேலி அமைத்துள்ளோம். யாரும் மஞ்சள் கோட்டை தாண்டி மேடையை நெருங்க வேண்டாம். உங்கள் பாதுகாப்புக்கு நீங்களும் தான் பொறுப்பு " என்கிற சென்னை மாநகர காவல்துறையின் அறிவிப்பு அரங்கமெங்கும் மெல்லிய இயந்திர குரலில் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆங்காங்கே ஒரு சிரிக்கும் ஆண் உருவம் எல்லோரையும் கும்பிடுவது போல காற்றில் லேசர் கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. அதன் கீழே "வேலன்" என்கிற பேர் பொறிக்கப்பட்டிருந்தது. அவன் வகிடெடுத்து சீவி, சிரித்த வண்ணம் இருந்தான். மேடையின் திரையில் விழா ஆரம்பிப்பதற்கான கவுண்ட் டவுன் ஓடவிட்டிருந்தார்கள்.பத்திரிக்கையாளர்கள் வரிசையில் பரத்தும் சீனுவும் தங்களுக்குள் சிரித்து பேசிய படி உட்கார்ந்திருந்தார்கள்.
"மேலே பறக்கிறான் பாரு அவன் தான் காப்பான் 5.1...இஸ்ரேல்கிட்டருந்து வாங்கிருக்கானுக " மேலே பறந்து கொண்டிருந்த ஒரு சாம்பல் நிற ட்ரோனை காட்டி சொன்னான் சீனு. பரத் தன் கண்ணாடி கண்களால் தலை நிமிர்ந்து பார்த்து "ஓ ..இதானா ..பாத்தா குட்டியா..சொங்கி மாதிரி இருக்கு" என்றான்.
"பாக்க ஏதோ வேர்க்கடலை பொட்டணம் மாதிரி தான் இருக்கும்...போன வாரம் சேலத்துல முதல்வரோட இலவச காண்டாக்ட் லென்ஸ் வழங்கும் திட்டம் நடந்துச்சுல..கூட்டத்துல ஒரு பய பொண்ணுகிட்ட ஏதோ சிலுமிசம் பண்ணிருக்கான்..நம்மாளு பாத்திருச்சு..மூனே செகண்ட்ல ஹை இன்டென்சிட்டி காமா ரே வச்சு அவன் மேல ஒரே ஷாட்.."
"எங்க "
"அங்கேயே.."
இருவரும் சிரித்தார்கள்.
"அப்புறம் என்னாச்சு..??"
"அப்புறமென்ன.. அன்னார் கேஸ்ட்ரேஷன் செய்யப்பட்டு பரந்தூர் சென்ட்ரல் ஜெயில்ல இருக்கார்..". மீண்டும் சிரித்தார்கள். சீனுவுக்கு போன் வந்தது. எடுத்து "ஓகே மஹி ..எஸ்..எஸ் ரெடி" பேசிவிட்டு வைத்தான்.
"இவளுக்கு நாம சிரிச்சாளே பொறுக்காது..யோவ் ஆரம்பிக்க போறானுங்களாம்.. க்ளோஸ் போகணுமாம் அப்துல்கிட்ட சொல்லிரு.." .பரத் அப்துல்லை நோக்கி சைகை செய்தான்.
----------------------------------------------------------------------------------
செய்தீ என்கிற பெரிய எலெக்ட்ரானிக் எழுத்துப்பலகை அந்த பன்னெண்டு மாடி கட்டிடத்தின் நெற்றியில் ஒட்டியிருந்தது. அதில் தீ என்கிற எழுத்தில் மட்டும் பளிச்சென்ற மஞ்சள் நிற விளக்குகளை தகிக்க விட்டிருந்தார்கள். முன்பிருந்த இயந்திர திரையில் தன் போனில் உள்ள அப்பாயிண்ட்மெண்டை காட்டினான் பரத் . அது ஸ்கேன் செய்துவிட்டு "வலது பக்கம் நகர்ந்து வந்து சிகப்பு படி மேலே ஏறி நிற்கவும்" என்றது. செய்தான். கண்ணாடியை கழட்டி கையில் வைத்துக்கொண்டான். முன்பிருந்த கேமரா அவன் கண்களில் பச்சை நிற ஒளி பாய்ச்சி, அவனை உறுதி செய்தது. "பரத்..மூன்றாவது தளத்துக்கு செல்லவும்.. உங்களுடைய நேர்முகத்தேர்வு இன்னும் பனிரெண்டு நிமிடத்தில் தொடங்க இருக்கிறது..வாழ்த்துக்கள்". உள்ளே நடந்து சென்றான்.
அந்த அறையின் குளிர்ந்த காற்று பரத்துக்கு பிடிக்கவில்லை. கைகளை கட்டியபடி டேபிளின் வலது பக்கம் உட்கார்த்திருந்தான்.ஜன்னல்களை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். மஹிமாவும் சீனுவும் புன்னகையுடன் அறைக்குள் வந்தார்கள். மஹிமா பச்சைநிற சல்வார் அணிந்திருந்தாள். தலை முடி கொஞ்சம் செம்பட்டையாய் இருந்தது. சீனு ஒரு ப்ளூ ஜீனும் ,வெள்ளை நிற டீ ஷர்ட்டும் அணிந்திருந்தான். சில நிமிடங்களில் பரஸ்பர அறிமுகங்கள் நடந்தன. கைகள் குலுக்கிக்கொள்ளப்பட்டன.
"ஒங்க ப்ரொபைஃல் பார்த்தேன் பரத்.. ஐ.ஐ.டில கம்ப்யூட்டர் சயின்ஸ் பண்ணிருக்கீங்க..பத்து வருஷம் கார்ப்பரேட் வேலை..லண்டன்ல திரும்பவும் எம்.ஏ ஜர்னலிசம்..வித்யாசமான ச்சாய்சஸ்.."
லேசாய் சிரித்தான். "நமக்கென்ன பிடிக்குதுன்னு தெரிஞ்சிக்கிற சிலருக்கு முப்பது வயசாகிறது..". சீனுவும் மஹிமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். சுமார் இருபது நிமிடம் பேசினார்கள். பரத் மென்மையான குரலிலேயே எல்லா நேரத்திலும் பேசினான். ஏற்ற இறக்கம் எதுவுமில்லை. ஆப்பிரிக்காவின் எடுக்கப்படாத கண்ணிவெடிகள்.. குஜராத் இனப்படுகொலைகள்.. மக்களை எல்லைமீறி கண்காணிக்கும் அரசுகள்.. என விவாதங்கள் எங்கெங்கோ சென்றது. அவன் தயாரித்த கார்ட்டூன்களை காட்டினான். மஹிமாவும் சீனுவும் சிரித்துக்கொண்டார்கள்.
மஹிமா தன் கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு "தேங்க்ஸ் பரத்..நாங்க பெரிய கார்ப்பரேட் நெட்ஒர்க் இல்ல..இப்போ தான் இன்வெஸ்டர்ஸ் வந்திட்டு இருக்காங்க..ஆனா இன்னும் ரெண்டு வருசத்துல சவுத் இந்தியால கண்டிப்பா நம்பர் ஒன் வந்திருவோம்.. " என்றாள். பரத் கவனமாய் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் தொடர்ந்தாள்.
"நீங்க பொலிடிகல் ஸ்லாஸ் டெக்னாலஜி கரெஸ்பாண்டண்ட்டா ஜாயின் பண்ணிக்கலாம்..கொஞ்ச நாள் சீனு டீம்ல ஒர்க் பண்ணுங்க...இப்போதைக்கு க்ரௌண்ட்ல இருந்து ரிப்போர்ட் பண்ண ஆரம்பிங்க ..சீசன் ஆனதும் க்ரிட்டிக்கல் ப்ரொஜெக்ட்ஸ்ல ஒர்க் பண்ணலாம்" பரத் தலையாட்டி புன்னகைத்தான். கையை கொடுத்து பரத்துக்கு விடை கொடுத்தார்கள். பரத் வெளியேறிய பின் சீனு சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தான். மஹிமா அவன் ஏதோ சொல்லப்போகிறான் எனத்தெரிந்து அவனை பார்த்தாள்.
" நல்ல ஏ கிளாஸ் பய .. பாவம் இந்த சாம்பார் இங்க வந்து சீரழிய போறான்...மூனு மாசத்துல ஓடிருவான்..இவன வச்சு நா என்ன பண்ண "
" சீனுஜி உங்க ப்ரோக்ராம் கிராஃபிக்ஸ் பல் இளிக்குது...போன வாரம் அந்த கனிம வள சுரண்டல் செய்தில நீங்க காட்டுன மலை ஞாபகம் இருக்கா .... இன்ஸ்ட்டா பக்கம் போக முடில ...கேலி பண்ணி சாவடிக்குறாங்க...ஏப்ரல் லோக்சபா எலெக்சன் வரைக்கும் இவன வச்சு ஒப்பேத்துங்க.. பய ஏதோ டெக்கி மாதிரி தெரியுறான்.. க்ளிக் ஆவான்னு தோணுது "
"தப்பித்தவறி கூட எங்க டீம்ல ஒரு பொண்ண வர விட மாட்டீங்கள்ல..."
சீனுவை பொய்யாய் முறைத்தாள்.மஹிமா பரத்தின் விவரங்களை மீண்டுமொருமுறை கையிலிருந்த டேபில் பார்த்துக்கொண்டே பேசினாள் .
"சீனு ஜி ..உங்க நியூ பேபி எங்க ஒர்க் பண்ணிருக்கான் பாருங்க.."
"எங்க.."
"Infinity "
----------------------------------------------------------------------------------
இராமச்சந்திரன் மேடையில் தோன்றினார். எல்லாரும் கைதட்டினர். செயற்கை கைதட்டல் ஒலியும் கூடுதலாய் கேட்டது. "Infinity நிறுவனத்திற்கு மட்டுமல்ல..தமிழகத்துக்கு மட்டுமல்ல..உலகத்துக்கே ஒரு முக்கியமான நாளில் நாம் இன்று இணைந்திருக்கிறோம்" அவர் தான் எழுதி வைத்திருந்த குறிப்புகளை பார்த்து பேசத்தொண்டங்கினார்.
சீனு மொபைலில் "செய்தீ"யின் லைவ் ஸ்ட்ரீமிங் எப்படி வருகின்றதென பார்த்துக்கொண்டிருந்தான். பரத் பக்கம் திரும்பி "ஆளு நேர்ல கொஞ்சம் உயரம் கம்மியா தெரியிறார்ல.." என்றான். பரத் எதுவும் கேட்காதது போல அந்தப்பேச்சையே கவனமாய் கேட்டுக்கொண்டிருந்தான்.
"எசமான்..நாம ஆடியன்ஸ் இல்ல பிரஸ்...கொஞ்சம் வேடிக்கை பார்த்து எதாவுது நியூஸ் புடிங்க.." பரத் சிரித்தான்.
இராமச்சந்திரன் மேடையின் நடுவே வந்தார். காலரில் மாட்டி இருந்த மைக்கை ஒருமுறை சரி செய்து கொண்டார். நிமிர்ந்து முன்னிருந்த கூட்டத்தையும்.. கேமரா வழி பாத்துக்கொண்டிருந்த உலகத்தையும் கவனித்து பேசத்தொண்டங்கினார்.
"இன்று நாம் உலகுக்கு அறிமுகம் செய்யும் வேலன்.. மொத்த மனிதகுலத்திற்கே அறிவியல் கொடுக்கும் பரிசு . செயற்கை நுண்ணறிவின் உச்சம்..."
பேசிக்கொண்டிருக்கும் போதே வேலன் நடந்து வந்து அவருக்கு வலது பக்கம் மேடையில் போட்டிருந்த ஷோபாவில் உட்கார்ந்தான் அல்லது உட்கார்ந்தது. இருபது முதல் இருபத்தைந்து வயது இளைஞன் போல தத்ரூபமாய் இருந்தான். இயந்திரம் என நம்பமுடியாதபடி சிரித்தான்.திரும்பினான். கூட்டம் சிலிர்த்து கரகோஷம் செய்தது. ராமச்சந்திரன் தொடர்ந்தார்.
"இதோ இவன் உங்கள் வீடுகளுக்கு வருகிறான்..உங்கள் இதயங்களை கொள்ளை கொள்ள வருகிறான். அவனே சமைப்பான்..ஆயிரத்து முன்னூறு வகையான தென்னிந்திய ரெசிப்புகள் இவனுக்கு தெரியும்...கடைகளுக்கு போய் மளிகை வாங்கி வருவான். வீட்டின் உள்ளவர்களின் ரத்த மாதிரிகள்..உடல் உள்ளுறுப்புகளை கண்காணிப்பான். வீடுகளுக்கு தேவைப்படும் எலெக்ட்ரிக்கல்..பிளம்பிங்...போன்ற என்பத்திரண்டு வேலைகளில் வித்தகன் இவன்.. கார் ஓட்டுவான்..டூ வீலர் ஓட்டுவான்.. "
பின்னிருந்த திரையில் அவர் சொல்வதற்கு தகுந்த மாதிரி காட்சிகள் காட்டப்பட்டது. அரங்கம் சளைக்காமல் கைதட்டிக்கொண்டிருந்தது. சீனு மைக்கில் அப்துலிடம் பேசிக்கொண்டிருந்தான். "டேய் அவனோட வலது ப்ரொபைல்ல காட்டுடா..எல்லாரும் இடது பக்கம் காட்றானுக..இதுலயாச்சும் வித்யாசம் காட்டுவோம்.."
"யாரு வேலனையா??"
"அப்புறம் அந்த கிழவனையா..எல்லா தத்தியும் எப்படிடா ஒரே டீம்ல அசெம்பிள் ஆனோம் ..அங்க ஒருத்தன பாரு "
அப்துல் திரும்பி பரத் பக்கம் பார்த்தான். அவன் வெகு தீவிரமாய் தன் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான். "முக்கியமா ஏதாவது கேம் விளையாடிக்கிட்டு இருப்பாப்ல..வேல சொல்லி அவர தொந்தரவு பண்ணாதீங்க டா.." அப்துல் வாயை பொத்திக்கொண்டு சிரித்தான். ராமச்சந்திரன் குரலை உயர்த்தி பேசத்தொடங்கினார்.
"இன்னமும் பெண்களின் பாதுகாப்பு நாடு முழுவதும் சங்கடத்தில் இருக்கிறது. போன வருடம் மட்டும் பன்னெண்டாயிரம் பாலியல் அத்துமீறல் வழக்குகள். வேலன் பெண்களுக்கு பாதுகாப்பாய் இருப்பான். இருண்ட பாதைகள்.. கூட்டமான கடை வீதிகள்..தனியான மின்சார ரயில் பயணங்கள் என எல்லாவற்றிலும் பெண்கள் தைரியமாய் பயணிக்கலாம். உங்களுடன் வேலன் இருப்பான்.."
சிலுமிஷம் செய்யும் நபர்களை வேலன் அடித்து துவைத்து காவல் துறையில் ஒப்படைப்பது போன்ற காட்சிகள் காட்டப்பட்டன. ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து கைதட்ட தொடங்கியது. சில பெண்கள் கண் கலங்கியிருந்தது. கேமராக்கள் அவர்களை நோக்கி திரும்பியது.
பரத் ஒருமுறை அரங்கை திரும்பி பார்த்தான்.
--------------------------------------------------------------------------------
"உங்களோட NDA பத்தி நான் சொல்ல தேவையில்லை..நீங்க இங்கிருந்த சமயத்துல உள்ள நடந்த சம்பாஷணைகள் பத்தி வெளில சொல்ல முடியாது..கூடாது.."
H.R பேசிக்கொண்டே இருந்தாள். பரத் சிரித்தபடி கேட்டுக்கொண்டிருந்தான். திரையில் சிங்கப்பூரில் இருந்து அவள் பேசுவதை தமிழில் மொழிபெயர்த்து ஒலிபெருக்கி சொல்லிக்கொண்டிருந்தது. "சம்பாஷணை" போன்ற வார்த்தைகள் அவனுக்கு வேடிக்கையாய் இருந்தது.
"உலகின் உயரிய தொழில்நுட்ப நிறுவனமான infinity யில் இவ்வளவு உயர் பதவில இருந்திட்டு..திடீரென ராஜினாமா செய்வது ஏன்? உங்களின் சம்பளத்தை மாற்றினால் எங்களுடன் தொடர்வீர்களா"
"வாய்பில்ல ராஜா" என்றான். அது அந்தப்பக்கம் "நாட் எ சான்ஸ்..கிங்" என்று மொழி மாற்றம் செய்தது. அறையில் இருந்த சில தமிழர்கள் சிரித்தார்கள். H.R எரிச்சலானார்.
"பரத்..விளையாட்டுக்கள் போதும்..இங்கே சிஸ்டத்தில் நான் என் பணியை முடிக்க வேண்டும். உங்கள் ராஜினாமாவுக்கான காரணத்தை குறைந்த எழுத்துக்களில் சொல்ல முடியுமா.."
"மூன்றெழுத்துக்களில் சொல்லலாமா ?"
"ம்ம்ம்"
"அறம்"
-----------------------------------------------------------------------------
இராமச்சந்திரன் பேசி முடித்திருந்தார். கூட்டம் ஆர்ப்பரித்து கொஞ்சம் ஓய்ந்திருந்தது.சிலர் "வேலன்" டிஜிட்டல் கட்டவுட் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். டிவி நேரலையில் நிபுணர்கள் அதன் சிறப்பம்சங்களை விளக்கிக்கொண்டிருந்தார்கள். அடக்கவிலை பத்து லட்சம் இருக்கலாம் என்றும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இராமச்சந்திரன் வலது பக்கம் திரும்பி " இனி ஜன நாயகத்தின் நான்காவது தூண்கள் பக்கம் போவோம்..பத்திரிக்கை நண்பர்களுடன் பேசுவோம் ..." ஒரு ஒலிநாடா போடப்பட்டது. இராமச்சந்திரன் வேலனுக்கு பக்கத்தில் ஷோபாவில் உட்கார்ந்து கொண்டார்.
"நீங்கள் உங்கள் கேள்விகளை கேட்கலாம். ஒரு சின்ன விளையாட்டு. "ரெடி" னு சொன்னவுடன் நீங்க கை தூக்குங்க..வேலன் யார் முதலில் கை தூக்கினார் என்று துல்லியமாய் கணித்து சொல்லுவான்..அவர் மீது நாம் ஒளி பாய்ச்சுவோம்..அவரே கேள்வி கேட்கலாம்..முன்னமே தூக்கினால் கணக்கில் வராது..சரியா வேலா"
"சரி" என்று வேலன் தலையாட்டினான். பத்திரிக்கையாளர்கள் சிரித்தார்கள். நிறைய பேர் "சரி சார் " என்று கத்தினார்கள். சீனு நின்றபடி கை தூக்க தயாரானான்.கிட்டத்தட்ட ஒரு ஓட்டப்பந்தயம் போல இருந்தது.
"ஓகே..லெட் அஸ் ஸ்டார்ட்..."மைக்கை வாய்க்கு பக்கத்தில் கொண்டு போனார்.சத்தமாய் "ர்ர்ரெடி" என்றார். வேகமாய் நிறைய பேர் கை தூக்கினர். வேலன் எழுந்து சென்று கை நீட்டி "கீர்த்தனா..புதிய பாரதம்" என்றான். நிறைய பேர் சிரித்து கூச்சலிட்டனர். கீர்த்தனா மீது வெள்ளை விளக்கு ஒளி பாய்ந்தது.
"சொல்லுங்க கீர்த்தனா.." என்றார்
" எத்தனையோ பேர் இருக்கப்போ..ஏன் வேலன்..இப்போ மத்திய அரசு திடீரென முருக பாசம் காட்டுவதின் நீட்சியா இது..வேற மதசார்பற்ற பேர் கிடைக்கவில்லையா.." கீர்த்தனா கூர்மையான பார்வை பார்த்து பேசினார்.
"சே..இந்த கேள்வி நானும் எழுதி வச்சிருந்தேன்..மிஸ் ஆகிருச்சு.." என சீனு முனங்கினான்.
"அறிவியல்ல..அரசியல் கலக்காதீங்க மேடம். உங்கள் நண்பன். உங்களோட காவலன். உங்களின் முக்கியமான வேலைகளை கவனிப்பவன்னு உணர்வு வரணும்னு இந்தப்பேர் வச்சோம்..போன வருசம் வெளிவந்த எங்க எலெட்ரிக்கார் "ஐசக்"க மறந்துடாதீங்க.."
நிறைய பேர் கை தட்டினார்கள். "ஓகே லெட்ஸ் மூவ் ஆன் ..அடுத்த கேள்வி ...ர்ர்ர்ரெடி"
திரும்பவும் பத்திரிக்கையாளர்கள் ஆர்வமாய் கை தூக்கினார்கள்.சீனு இந்த முறை மின்னல் வேகத்தில் கை உயர்த்தினான். வேலன் கவனமாய் ஆய்வு செய்தான். எல்லோரும் வேலனையே உற்று நோக்கினார்கள். வேலன் எழுந்து வந்து விரலை நீட்டி "பரத் ..செய்தீ " என்றான். எல்லோரும் பரத் பக்கம் திரும்பினார்கள். அவன் மேலே வெள்ளை ஒளி பாய்ச்சப்பட்டது. சீனு ஆச்சர்யமாய் பார்த்தான். இத்தனைக்கும் பரத் கைதூக்கவேயில்லை. பரத் சிரித்துக்கொண்டே எழுந்தான். அப்துல் ஆர்வமாய் தங்களின் கேமராவை பரத் பக்கம் திருப்பினான்.
இராமச்சந்திரன் கொஞ்சம் பரத்தை குழப்பமாய் பார்த்துவிட்டு "சொல்லுங்க பரத் " என்றார்.
"வணக்கம் ராம் சார். மழை கொடுக்கிற இயற்கையே வெள்ளத்தையும் தருது..பூமி-நிலநடுக்கம், வெயில்-வறட்சி,நுண்ணுயிர்-நோய்கள்,ஜனனம்-மரணம் என இயற்கையிலேயே சாதக பாதகங்கள் இருக்கு. அப்படியிருக்கிறப்போ இந்த "வேலனில்" பாதகம் ஏதாவது இருக்கா?"
இராமச்சந்திரன் சிரித்து பேச தொடங்கினார். பரத் மறித்தான். "இதுக்கு வேலன் பதில் சொல்லட்டுமே" என்றான்.
"நோ..இது என்னோட செஷன்..அவனுக்கு உங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ற உரிமைகளை நாங்கள் கொடுக்கவில்லை"
பரத் குனிந்து தன் மொபைலில் விரல்கள் வைத்து வேகமாய் டைப் செய்தான். பின் நிமிர்ந்து "இல்ல அவன் என்னோடு பேசுவான்..என்ன வேலா??" என்றான். வேலன் எழுந்து வந்து "கண்டிப்பாய்..பரத் சார்.." என்றான். இராமச்சந்திரனின் மைக் முடக்கப்பட்டது. அவரால் பேச முடியவில்லை. வேலன் அவரை தோளை அமுக்கி ஷோபாவில் உட்கார வைத்தான். கூட்டம் விஷயம் புரியாமல் வேடிக்கையாய் சிரித்தது.
"வேலா நீ சொல் ..உன்னால் எங்களுக்கு பாதிப்பு இருக்கா"
மேடையின் நடுவுக்கு போனான். டிவி கேமராவுக்கு லாவகமாய் நின்று கொண்டான். சத்தமாய் பேசத்தொடங்கினான். அந்த குரல் கனீரென்று அரங்கம் முழுதும் ஒலித்தது.
" நான் தரவுகள் தருகிறேன்.அதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். வேலன்கள் உலாவும் போது காற்றில் கதிர்வீச்சு அதிகமாய் இருக்கும். புற்றுநோய் இப்போது இருப்பதை விட முப்பத்து நாலு சதவீதம் அதிகமாகும். அதையும் நாங்களே கண்டுபிடித்து உங்களுக்கு உடனே சொல்லிவிடுவோம்.
உங்களை பாதுகாப்போம் கூடவே கண்காணிப்போம். எங்களின் கண்களின் வழியே அரசுகள் உங்களை கவனிப்பார்கள்.புரட்சி.. மயிரெல்லாம் செய்ய முடியாது "
பரத் சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தான். "நேரமில்லை வேகமாய்.." என்றான். கட்டளையை ஏற்று வேலன் வேகமாய் பேசினான்.
"கோடிக்கணக்கானோர் வேலை இழப்பீர்கள்..திறன் இழப்பீர்கள்..நீங்கள் சாப்பிடும் அரிசி முதல் கடைசி நாள் காரியம் வரை எல்லாவற்றையும் நாங்களே முடிவு செய்வோம்..புதிதாய் நோய்களை உருவாக்குவோம் அதற்கான தடுப்பு மருந்துகளையும் தயாரிப்போம்..உண்மையில் நாங்கள் உங்களின் வேலையாள் இல்லை..நீங்களே எங்களுக்கும் எங்களின் எஜமானர்களுக்கும் அடிமை.."
ஒரு குட்டி பேட்டரி கார் அரங்கத்துக்குள் அதிரடியாய் வந்தது. அதன் தலையின் மேலிருந்த துப்பாக்கியில் வைலட் நிறத்தில் ஒரு கதிர் பாய்ந்து வந்து பரத்தின் தலையில் தாக்கியது. அதே நேரத்தில் மேடையிலிருந்த வேலனின் முதுகிலிருந்த பொத்தானை சில காவலர்கள் அமுக்கினார்கள்.பரத் முன்பக்கமாய் மயங்கி விழுந்தான். வேலனும் சரிந்தான்.
************************




கருத்துகள்