Tuesday, August 16, 2016

டவுசர் காலங்கள் -பகுதி4

எங்கள் ஏரியாவின் இதயத்துடிப்பே பெண்கள் தான், அவர்களின்றி அங்கு அணுவும் அசையாது. பிறகு வீட்டு ஆம்பளைகள் பற்றி சொல்லத்தேவையில்லை. முன்னாடி லயன், நடு லயன், மூணாவது லயன் என மூன்று தெருக்குள்ளும் மொத்தமாய் நாலு நல்லதண்ணி குழாய்கள் உண்டு. அதிகாலையில் தண்ணி வர ஆரம்பிக்கும் போது கொட்டாவி விட்டுக்கொண்டே தலை முடியை கொண்டையிட்டபடி குடத்துடன் வருவார்கள். வரிசை கட்டி நிற்பார்கள். யார் எவ்வளவு குடம் பிடித்தார்கள்? போன்ற கணக்குகள் அத்துப்படியாய் இருக்கும். போன முறை "எக்ஸ்ட்ரா" குடம் பிடித்தவர்கள் அடுத்த முறை இடஒதுக்கீட்டில் பின்னுக்குத்தள்ளப்படுவார்கள். இவர்களின் நீர் மேலாண்மையை எந்தவொரு எம்.பி.ஏவும் புரிந்து கொள்வது கடினம். "நா வெள்ளனே வந்து கொடத்த வச்சிட்டே..மூனாவுது வீட்டுக்காரக்கா மாத்தி வச்சிட்டாங்க.." என கோல்ட் மெடல் தவறவிட்ட வீராங்கனையாய் சீறுவார்கள். எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் "ஹேமாக்கா", "ஜெயந்தியக்கா", "சொக்கநாச்சியக்கா", "ஜெகதீஸ்வரியக்கா" போன்ற சீனியர்கள் களமிறங்கி தர்மத்தை நிலைநாட்டுவார்கள். ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கொய்யாப்பழம்,கீரை விற்பவர்கள் எவ்வளவு மெதுவாய் கத்தினாலும் இவர்களுக்குக்கேட்டுவிடும்.


மீன் விற்பவர் தெருவிற்குள் உள்ளே வந்தவுடன் ஒவ்வொருவராய் வெளியே வருவார்கள். ஆர்வமாய் வருவதாக காட்டிக்கொள்ளமாட்டார்கள். அது ஒரு யுக்தி.ஒருவர் பின் ஒருவராக வந்து சூழ்ந்து மீனை நோட்டமிடுவார்கள். பின் ஒருவொருக்கொருவர் கண்களாலேயே பார்த்துக்கொண்டு "வொர்த் பீஸா" என உறுதிப்படுத்திக்கொள்வார்கள். மீன்காரர் சொல்லும் விலையை மூன்றால் வகுத்து கொஞ்சம் கருணையை சேர்த்து இவர்கள் ஒரு விலை சொல்வார்கள். மீன்காரர் நிலைகுலைந்து போவார். லாபத்தை குறைத்து இறங்கி வர முயல்வார், அதற்குள் "யண்ணே...சதையே இல்ல..சொங்கியா கெடக்கு..இதுக்கு யான வெல சொல்றீங்க..","ஃபுல்லா முல்லு..சின்ன புள்ளைக எங்கிட்டு திங்க.." "நேத்து மீனா..ஒரே வீச்சமா இருக்கு" என அடுத்தடுத்து தாக்குதல்கள் இறக்குவார்கள்.வேறுவழியில்லாமல் பல நேரங்களில் பேரம் படிந்து விடும். பிற்பாடு ஏதாவது ஒரு வீட்டில் காபி போட்டுக்கொடுத்து அந்த மீன்காரரை கண்கலங்காமல் அனுப்பிவைப்பார்கள். "அடுத்து வாரமும் வாங்கண்ணே" என இவர்கள் வழியனுப்பிவைக்கையில் அவர் பயந்தபடியே தலையாட்டி செல்வார். ஒரு தட்டில் சாம்பல்,கல் உப்பு வைத்து கொண்டு அருகாமனையுடன் உட்கார்ந்து மீனை சுத்தம் செய்துகொண்டே அன்றைய செய்தியை அலசுவார்கள். எத்தனை "புதிய தலைமுறை" வந்தாலும் அந்த நாட்களின் இனிமையை கொண்டு வந்துவிட முடியாது. "ஏங்க்கா..இந்த ராமர்பிள்ளைங்கறாங்களே..அவரு பிள்ளமாரா??" 


சொக்கநாச்சியக்கா வீட்டு வாசலில் போய் நின்றேன். அம்மாவால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தேன். "அக்கா"வுக்கு வயது எழுபதுக்கும் மேலிருக்கும். நானும் சொக்கநாச்சியக்காவை "அக்கா"வென்பேன், எங்கம்மாவும் "அக்கா" வென்பார். இன்னும் சொல்லப்போனால் எங்கள் ஏரியாவுக்கே அவுங்க அக்கா தான். அக்காவுக்கு ரெண்டு கண்களில் ஒரு கண் அளவு சிறியதாய் இருக்கும். கண்ணாடி போட்டிருப்பார். தலையை ஒரு மூன்று ஆங்கிளில் மேலும் கீழும் திருப்பி என்னைப்பார்த்து விட்டு "வாடா தனம் மகனே..என்னா விசேசம்.." என்றார்.

"க்கா நெஞ்சுச்சளியா இருக்காம்..இருமல் வருதாம்..அம்மா உங்கட்ட என்ன சாப்பிடனும்னு கேட்டு வர சொன்னாங்க.."

"உனக்கா..உங்கம்மாளுக்கா.."


"எனக்கு"

பக்கத்தில் வந்து முதுகை தொட்டுப்பார்த்தார். "பாலுல மஞ்சத்தூள் போட்டு...பச்சமுட்ட மஞ்சக்கருவ போட்டு..கொஞ்சூண்டு மிளகு இம்மி போட்டு.." பட்டியல் நீண்டுகொண்டே போனது. எனக்கு அந்த பாழாப்போன பாலை எப்படி குடிப்பது என்ற பயம் அப்போதே தொற்றிக்கொண்டது. அக்கா என்னைப்பார்த்து "இன்னொரு தடவ சொல்லனுமாப்பா.." என்றார்."இல்லக்கா..நாபகமிருக்கு..". நமக்கு தேவையில்லாததை அங்கேயே சென்சார் கட் செய்துவிட வேண்டும் என எண்ணிக்கொண்டேன். திடீரென பக்கத்தில் கூச்சல் சத்தம் கேட்டது. ஒயிட் ஹவுஸ் எனப்படும் பெரிய வீட்டை நோக்கி பலர் ஓடிக்கொண்டிருந்தார்கள். நடுலயன் பெண்கள் பவுடரெல்லாம் அடித்தபடி போய்க்கொண்டிருந்தார்கள். சொக்கநாச்சியக்காவுக்கும் ஏதும் புரியவில்லை. கண்களை குறுக்கிக் கூட்டத்தை நோக்கினார்.

"என்னவாம்மா..கூட்டமா எங்கன போறீங்க..மொளப்பாரி ஏதும் போகுதா..."

"க்கா...குஷ்பு வந்துருக்காமுக்கா..ஒயிட் அவுஸ் வீட்ல தான் மதிய சாப்பாடாம்...அம்புட்டு கலராம்.."

"யாருடி இந்த ரசினி படத்துல நடிச்சாலே அவளா..கொஞ்சம் ஊத்தமா இருப்பாளே.." 


"ஆமக்கா" என்ற குரல் தூரத்தில் கேட்டது. நான் என் டவுசரை டைட் செய்து கொண்டேன். ஓடுவதற்கு முன்னால் மானம் காக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடு. குஷ்புவை பார்க்கப் போறோம் என்கிற தெய்வீக உணர்வு எனக்குள் ஜிவ்வென்று ஏறியது. அதற்குள் சொக்கநாசியக்கா "டேய் குட்டி..போய் கூட்டம் எப்டியிருக்குன்னு பாத்துட்டு வா..அக்கா சீல மாத்திட்டு வரேன்..". "சரிக்கா" வென வண்டியை கிளப்பினேன். குஷ்புவை பார்க்க ஒயிட் ஹவுசை சுற்றி கூட்டம் கூடி விட்டது. அந்த வீட்டின் உரிமையாளர் சினிமா விநியோகஸ்தராய் இருந்தார். தேனியில் சூட்டிங் நடந்தால்  நடிகர்கள் ஒருமுறையாவது அவர் வீட்டுக்கு வந்து விடுவார்கள். கேட்டை அடைத்து விட்டார்கள். பல தன்மானத்தமிழர்களுடன் நானும் கேட்டை பிடித்த படி நின்றிருந்தேன். கிராமத்து சேலை கெட்டிய படி குஷ்பு ஒரு சேரில் உட்கார்ந்திருந்தார்."நாட்டுப்புற பாட்டு" என்கிற பட சூட்டிங். இளைஞர்கள் கத்தினார்கள். பதிலுக்கு குஷ்பு சிரித்தபடி கையாட்டினார்.

யாரையும் உள்ளே விடவேயில்லை. எங்களுக்கு பின்னால் ஒருத்தர் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏதோ பேசியபடி உள்ளே போக வழி கேட்டார். மக்கள் ஒதுங்கவேயில்லை. "ஏங்க..அரை மணி நேரமா நிக்கறவன்லா கேனயனா ..பின்னாடி போங்க.." என கத்திக்கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து தான் தெரிந்தது அவரும் அந்த படத்திலும் நடிக்கும் ஒரு நடிகரென்று. அது நடிகர் செல்வா. கூட்டத்தில் ஒரு ஆளு "டேய் அவர தெரியுதா..ஒரு படத்துல கஸ்தூரிக்கு சோடியா வருவார்ல.." என்றார். செல்வா முறைத்துக்கொண்டே உள்ளே போய்விட்டார். எப்படியாவது உள்ளே நுழைந்து குஷ்புவை பக்கத்தில் பார்த்து பிறவிப்பயன் அடைந்து விட மாட்டோமா என ஏங்கிக்கொண்டிருந்தேன். சொக்கநாச்சியக்கா பெண்கள் படையுடன் வந்து கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரை கண்ட ஏழைக்குழந்தை
போல பக்கத்தில் போய் ஒட்டிக்கொண்டேன். அக்காவுக்கு பெரிய வீட்டில் பெண்கள் பழக்கம் என்பதால் கொஞ்ச நேரத்தில் கேட்டை திறந்தார்கள். பெண்கள் மட்டும் தான் அனுமதிக்கப்பட்டார்கள். சிறுவர் கோட்டாவில் நானும் உள்ளே நுழைந்து விட்டேன். ஏதோ உலக அதிசயத்தை பார்க்கப்போவது போல எனக்கு படபடப்பாய் இருந்தது. கேட்டுக்கு வெளியே நின்றவர்கள் எல்லாம் என்னைப் பொறாமையுடன் பார்ப்பது போலத்தெரிந்தது. அடுத்த நாள் ஸ்கூலில் இந்த குஷ்பு தரிசனத்தை எப்படி நண்பர்களுக்கு விளக்க வேண்டுமென திரைக்கதையெல்லாம் மனதில் ஓடியது.குஷ்பு ஒரு சோபாவில் அமர்ந்திருந்தார். பக்கத்தில் ஒரு பெரிய சேரில் மனோரமா ஆச்சி உட்கார்ந்து அருகிலிருப்பவருடன் மெதுவாய் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இருபது பெண்கள் சுற்றி நின்றிருந்தார்கள். எல்லோருக்கும் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. "கன்னம் ரோஸ் கலருடி" "பூரா பவுடரு..." என ஹஸ்கி வாய்சில் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தார்கள். ஹேமாக்கா லேசாய் முன்னே வந்து மனோரமாவை பார்த்து "நேத்துக்கூட டிவில சம்சாரம் அது மின்சாரம் போட்டான்..சிரிச்சுக்கிட்டே இருந்தோம்" என்றார். நிறைய பேர் சிரித்துக்கொண்டே தலையாட்டினார்கள். மனோரமா லேசாய் சிரித்தார்.நன்றி என்பது போல கும்பிட்டார். பக்கத்தில் இருந்தவர்கள் ஆச்சிக்கு தொண்டை கட்டியிருக்கிறது என்றார்கள். "ஆமா..ஒரு சீன பத்துத் தடவைக்கு மேல எடுப்பாங்களாம்ல..கட்டத்தான செய்யும்.." என சொல்லி சிரித்தார்கள். மனோரமா திரும்பவும் எளிமையாய் சிரித்தார். எனக்கு எதிலும் அக்கறையில்லை. குஷ்புவை பார்த்தபடியிருந்தேன்.

பெண்களெல்லாம் குஷ்பூவிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். நானும் வரிசையில் நின்று வாங்கினேன். ஏதோ ஆங்கிலத்தில் எழுதி கீழே கண்டபடி கிறுக்கி மேலே புள்ளி வைத்து கையில் நோட்டைக்கொடுத்தார். சென்ட் மனம் தூக்கியது. "கமலஹாசன் வீட்டு போன் நம்பர் உங்ககிட்ட இருக்கா என கேக்க வேண்டும்" என நினைத்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் போனவுடன் எல்லாம் மறந்துவிட்டது. "ஏக்கா...குஷ்பூவும் நம்மள மாறி தோசை இட்லிலாம் சாப்டுமா.."என பக்கத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த சத்தம் குஷ்புவுக்கு கேட்டிருக்க வேண்டும். "ஓ..எனக்கு அதெல்லாம் ரொம்ப பிடிக்குமே.." என சிரித்துக்கொண்டே சொன்னார். எனக்கு அந்த குரலை கேட்க பேரதிர்ச்சியாய் இருந்தது. கட்டைக்குரலாய் இருந்தது. அதுநாள் வரை "கொண்டையில் தாழம்பூ..நெஞ்சிலே வாழைப்பூ.."வென படங்களில் பாடியதெல்லாம் குஷ்புவென நினைத்துக்கொண்டிருந்தேன். அதே பாடல்களை பிறகு கல்யாணவீடுகளிலும், கச்சேரிகளிலும் பாடுகிறவர்கள் தான் பின்னணிப்பாடகர்கள் என்பது என் அன்றைய நாள் அவதானிப்பு. கொஞ்ச நேரத்தில் அவர்கள் சாப்பிட சென்றார்கள். நாங்களும் நடையை கட்டினோம். குஷ்பூ எல்லாருக்கும் டாட்டா சொன்னார். குழந்தைகளுக்கு "பறக்கும் முத்தம்" கொடுத்தார். நான் சொக்கநாச்சியக்கா பக்கத்தில் போனேன்.

"ஏங்க்கா..கொரல் ஒரு மாதிரி கட்டையா இருந்துச்சுனா என்னத்த குடிச்ச சரியாகும்..."

                                                                                                            ---தொடரலாம்


Thursday, July 28, 2016

டவுசர் காலங்கள் - பகுதி 3

                                       


 "இத எழுதி கிழிக்க இவ்வளவு நேரமாடா..."


ராதாகிருஷ்ணன் சாரின் குரல் அவரின் வீடு முழுக்க எதிரொலித்தது. ரானாகினாவை நாங்கள் "ட்டூஷன் சார்" என்றே சொல்வோம். ட்யூசன் போனால் பிள்ளைகள் பேரறிவு பெற்று விடுவார்கள் என்று பெற்றோர்கள் நம்பத்தொடங்கியிருந்தார்கள்.ஆகையால் ரானாகினா சாரின் ட்யூசனில் கூட்டம் அள்ளும். அவர் கைராசிக்காரர் ஒன்னுக்குமத்ததெக்கூட உருப்படியாக்கிவிட்ருவாரென எங்கள் ஏரியாவில் அவரைப் பற்றி டாக் இருந்தது. கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட மாணவமணிகளுடன் 
ட்யூசன் நடத்தி எங்கள் ஏரியாவின் கல்வித்தந்தையாகயிருந்தார் ரானா கினா. ஒரு பிரவுன் கலர் கைலி, மேலே ஒரு காட்டன் துண்டு, தடிமனான கண்ணாடி, கையில் ஹீரோ பேனாவுடன் "எல்லாரும் புக்க மூடி ஓரமா வை" என சொல்கிறாரென்றால் ஒரு ஆக்சன் சீக்வன்ஸ்க்கு ரெடியாகிறார் என்று அர்த்தம். அன்று "ட்யூசன் டெஸ்ட்" இருக்கும். எங்களுக்கு அன்று சயின்ஸ் டெஸ்ட். வெள்ளைத்தாள், பேனா சகிதம் எல்லோரும் சில அடிகள் இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ள  வேண்டும். சார் கேள்விகளை சொல்வார் குறித்துக்கொள்ளவேண்டும். பிறகு பதில்கள் எழுத வேண்டும்.

ட்யூசன் சீனியர்கள் பெரும்பாலும் இந்த டெஸ்ட்களுக்கு அஞ்சுவதில்லை. இதுவும் கடந்து போகும் என்கிற மனநிலையில் இருந்தார்கள். அந்த ட்யூசனில் காலங்காலமாக படிக்கும் "வடக்கடை" கணேசன் எனக்கு தோஸ்த். அவன் அவ்வப்போது ட்யூசன் நெளிவு சுளிவுகள் பற்றி போதனைகள் செய்வான். "சார் அடிக்கிறப்ப அவர் கண்ண நிமிந்து பாக்க கூடாது" ,"தெனமும் துந்நூறு வச்சிட்டு வா" , "டெஸ்ட் இருக்கிற அன்னைக்கு ட்யூசன் பீஸ் கொடு" போன்றவைகளை நாங்கள் பிரமாஸ்திரமாக கருதினோம். அன்றைய சயின்ஸ் டெஸ்ட் முடியும் தருவாயில் இருந்தது. பத்தாவது பையன்களுக்கு கணக்கு சொல்லிக்கொடுத்தவாரே சார் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். நிறைய பேர் ஹாலிலும், இடப்பற்றாக்குறையால் கணேசன் உட்பட நாங்கள் ஒரு நாலு பேர் ஒரு ரூமிலும் எழுதிக்கொண்டிருந்தோம். எல்லோரும் எழுதி முடித்துவிட்டோம். பேப்பரை போய்க்கொடுத்தால் எங்கே உடனே திருத்தி விடுவாரோ என யாரும் கொடுக்கவில்லை.எனக்கு அன்று ட்யூசன் எப்போது முடியுமென்றிருந்தது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உலககோப்பை அரையிறுதிப்போட்டி கல்கத்தாவில் நடந்து கொண்டிருந்தது. "என்னாச்சோ..ஏதாச்சோ" என யோசித்துக்கொண்டிருந்தேன்.
நாங்கள் உட்கார்ந்த ரூமில் தான் டிவி இருந்தது.ஹாலில் இருந்து பார்த்தால் டிவியிருப்பது தெரியாது. திடீரென பக்கத்து வீட்டிலிருந்து ஆரவார கூச்சல் கேட்டது. எங்களால் ஆர்வத்தை அடக்கமுடியவில்லை. "அனேகமா ஜெயசூர்யாவ தூக்கிடாய்ங்கனு நெனைக்குறேன்" என்றான் செல்வா. எல்லோரும் ரூமில் இருந்த டிவியை போடுவதென முடிவெடுத்தோம்.வாசலுக்கு ஒருத்தன் காவல். சார் வந்தால் இரும வேண்டும். கணேசன் சுவிட்சை ஆன் செய்ய வேண்டும். ஒரு வேளை சார் திடீரென உள்ளே நுழைந்து விட்டால் பவர் வயரை பிடுங்கி விட நானும் ஒரு எல்லைப்பாதுகாப்பு பணியில் இருந்தேன். கூட்டு முயற்சியுடன் டிவியை போட்டோம். சத்தத்தை முன்பே குறைத்து விட்டோம். ஜெயசூர்யா அவுட்டாகியிருந்தார். இலங்கைக்கு இருபத்து ஒன்பது ரன்னுக்கு மூனு முக்கிய விக்கெட்டுகள் காலி. நானும் கணேசனும் ஹைஃபை பண்ணிக்கொண்டோம். தொண்ணூறுகளின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேய் பயத்தை விட ஜெயசூர்யா பயம் அதிகம். மனுஷன் அஞ்சே ஓவரில் ஆட்டையை முடிச்சிருவான். வெளியேயிருந்து "பேப்பர்லாம் வை" னு வாத்தியாரின் சத்தம் சன்னமாய் கேட்டது.

கணேசனை டிவியை ஆஃப் பண்ண சொன்னேன். அவன் தவறுதலாக வால்யூமை கூட்டிவிட்டான். டோனிகிரேக்கின் காந்தக்குரல் அந்த வீடு முழுக்க பரவியது. ஒரே வினாடியில் பேங்க் கொள்ளையர்களை பார்ப்பது போல் மொத்த ட்யூசனும் எங்களைப்பார்த்தது. சார் தன்னுடைய முட்டைக்கண்களை உருட்டிக்கொண்டு "டேய்" என்ற படி உள்ளே வந்தார். கணேசனின் கை இன்னமும் டிவியிலேயே இருந்தது. எங்கள் முழிகளையும் கணேசனையும் வைத்து நடந்ததை யூகித்துவிட்டார். மின்னல் வேகத்தில் எங்கள் எல்லாரையும் வெளுத்து வாங்கினார். மூச்சு வாங்கிக்கொண்டே "முழங்கால் போடுங்கடா எருமைகளா" என்றார்.ட்யூசன் முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள். நாங்கள் மட்டும் வெயிட்டிங்கில் இருந்தோம். வாத்தியார் எங்கள் டெஸ்ட் பேப்பர்களுடன் வந்தார். ஒவ்வொருவரையும் கூப்பிட்டுத்திருத்தினார். சப்சப்பென கன்னங்களில் அறை. கணேசன் "வெர்னியர் காலிப்பர்" படத்தை தந்தூரி சிக்கன் போல வரைந்திருந்ததை பார்த்து வெறியேறினார். அவனுக்கு அஞ்சு நிமிட குருபூஜை நடத்தினார். அவன் ஏங்கியேங்கி அழ ஆரம்பித்தான். அவ்வளவு சோகத்திலும் கணேசன் அழுவது எனக்கு சிரிப்பை உண்டாக்கியது. அடக்கிக்கொண்டேன்.
"எல்லாரும் சயின்ஸ் புக்க எடு... திரும்பவும் மிட்டேர்ம் போசன படி" என்றார். கொஞ்சம் இடைவெளி விட்டு "உட்கார்ந்து படி" என்றார். எல்லோரும் புக்கை கையில் வைத்து உட்கார்ந்து கொண்டோம். எல்லாருடைய முகங்களும் கொஞ்சம் வீங்கியிருந்தன. செல்வாவுக்கு உதடு வீங்கியிருந்தது. கணேசன் விபத்தை சந்தித்தவன் போல இருந்தான். செல்வா என் பக்கத்தில் வந்து "ஜெயசூர்யா ஆவி அங்கேர்ந்து இங்க வந்து நம்மாளு மேல இறங்கிருச்சு போல" என்றான். நான் பதில் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து "நம்ம கணேசுதான் வெங்கடேஷ் பிரசாத்.." என்றான். வெகுநேரம் அடக்க முடியாமல் சிரித்தோம்.கணேசன் நிமிரவே இல்லை. எங்களுக்கு குற்றஉணர்ச்சியாய் இருந்தது. வாத்தியார் வெளியில் அவர் சைக்கிளை துடைத்துக்கொண்டிருந்தார். கணேசன் தோளைத்தொட்டேன்.

"கணேசா..சாரிடா..எல்லாருக்கும் தானே அடி விழுந்துச்சு.. விடுடா..ரொம்ப வலிக்குதா..." என்னை சோகமாய் பார்த்தான். ஒரு மணி நேரத்திற்கு முன் சிரிப்பு வெடியாய் இருந்தவன்,இப்போது சோக கீதமாய் மாறிப்போயிருந்தான்.

"பரிமளா முன்னாடி அடிச்சிட்டார்டா.. ரொம்ப அசிங்கமாயிருச்சுடா...". பரிமளா(பெயர் மாற்றப்படவில்லை) கணேசனின் ரெண்டாவது ஒன் சைடு லவ். ட்யூசனில் எட்டாவது படித்து வந்தாள். வாத்தியார் அவன் கன்னத்தோடு சேர்ந்து அவன் காதலிலும் அடித்திருக்கிறார். 

"அதெல்லாம் பிரச்சனையில்ல கணேசா..வாத்தியார் எல்லாரையும் தான் அடிக்கிறாரு...". அவன் சமாதானம் ஆனது போல தெரியவில்லை. பக்கத்து வீட்டிலிருந்து  "நோ ப்ராப்ளம்..நோ ப்ராப்ளம்" பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தது. அது பிரபுதேவா நடித்த லவ் பேர்ட்ஸ் ரிலீஸ் ஆகியிருந்த சமயம். கிரிக்கெட்டில்லாமல் வேற ஒரு நிகழ்ச்சி மாற்றப்பட்டால் மேட்ச் மோசமாக போகிறதென்று அர்த்தம். செல்வா "அங்கேயும் போச்சா" என்றான். வாத்தியார் உள்ளே வந்தார். நாங்கெல்லாம் சட்டென 
புக்குகளை பார்க்க ஆரம்பித்தோம். அவர் பக்கத்தில் வந்தார். குனிந்து இருந்ததால் நிறைய நகங்களுடன் இருந்த அவர் கால் மட்டும் தெரிந்தது.

"டேய் உங்க நல்லதுக்கு தாண்டா சொல்றோம்...விளையாடுறவன் லட்சம் லட்சமா சம்பாதிச்சிட்டு போயிருவான்..உனக்கு என்ன பிரயோஜனம்.." நாங்கள் இன்ஸ்டண்டாய் திருந்திவிட்டது போல முகத்தை வைத்துக்கொண்டோம். அந்த படுபாவி கணேசன் சரியான பட்டனை திருப்பியிருந்தால்,அந்நேரம் வீட்டில் நிம்மதியாய் டிவி பார்த்துக்கொண்டிருந்திருப்போம். வாத்தியார் கருணை அடிப்படையில் எங்களை விடுவித்தார். மணி எழாகியிருந்தது. தெறித்து வெளியில் ஓடி 
வந்தோம். வேகமாக ஓடி சைக்கிளையெடுத்து கணேசனையும் ஏற்றிக்கொண்டேன். கணேசனின் வீட்டில் கிரிக்கெட் ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் அங்கேயே பார்த்துவிட்டு வீட்டுக்கு போவோம் என உட்கார்ந்தேன். சச்சின் விளாசிக்கொண்டிருந்தார். கணேசனின் பாட்டி கையை கண்ணுக்கு மேல் வைத்து முகத்தில் பலஅபிநயங்கள் செய்து டிவியில் ஸ்கோரை பார்க்க முயற்சி செய்தார். என் பக்கம் திரும்பி "சச்சின் எம்புட்டு'' என்றார். பாட்டி சச்சினின் பழம்பெரும் ரசிகை. "அறுவது" என்றேன். உதட்டை மடித்து தலையாட்டிக்கொண்டாள். கொஞ்ச நேரத்தில் விக்கெட்டுகள் விழுந்தன. கணேசன் பாயை விரித்து படுத்தே விட்டான்.

ஐந்து விக்கெட்டுகள் விழுந்திருந்தது. வினோத் காம்ப்ளி களம் இறங்கினார். அவர் ஒரு இடதுகை ஆட்டக்காரர். பாட்டியை திரும்பிப்பார்த்தேன்.
"ம்ம்க்கும்..நேரா அடிக்கிறவனுகளே அவுட்டாயிட்டாய்ங்க..இந்த நொட்டங்கைக்காரன் கிழிக்கவா போறயான்..." என்றாள். எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.அன்றைய போட்டியில் இந்தியா தோற்று, வினோத் காம்ப்ளி தேம்பி அழுதது அடுத்த நாள் தலைப்பு செய்தியானது. இருபது வருடங்கள் கழித்து  இப்போதும் எப்போதாவது டிவியில் அந்த போட்டி காட்டப்படும் போதும் காம்ப்ளி அழுகையுடன் சேர்ந்து கணேசனின் அழுகையும் ஞாபகம் வருகிறது. 


                                                                                              -ஒருவேளை தொடரலாம் 

Tuesday, December 22, 2015

டவுசர் காலங்கள் - பகுதி 2காலையில் எழும்போது மிகப்பெரிய எரிச்சல் வந்தால் அது திங்கட்கிழமை. வீட்டுப்பாடம் முடித்தாகிவிட்டதா? மனப்பாட பாடல்கள் ஞாபகம் இருக்கிறதா என ஒரு பதட்டத்துடனே பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன். ட்ரவுசர் போடும் போது எரிச்சல் இன்னும் அதிகமானது. ட்ரவுசர் சிறியதாய் என்னுடைய பாதி தொடை தெரியும்படி ஏறியிருந்தது. நண்பர்கள் சிலர் "இப்படியே போச்சுனா இன்னும் கொஞ்ச நாள்ல ஒன்னோட "குஞ்சுமணி" வெளில தெரிஞ்சிடும்டோய்" என கேலி செய்தார்கள். "இப்போ தானே ஜூன்ல எடுத்தோம் அரைப்பரீட்சை முடியட்டும்.." என அப்பா சொல்லிவிட்டார். பல்லைக்கடித்துக்கொண்டு கிளம்பினேன். தட்டில் வைத்திருந்த இட்லியை கடித்துக்குதறிவிட்டு வெளியேறினேன்.அம்மா எதிர்வீட்டு ரமாக்காவுடன் பேசிக்கொண்டிருந்தாள். "ரமாக்கா"(ரமா+அக்கா) அம்மாவின் அன்றைய "கூகிள்". எல்லாக்கேள்விகளுக்கும் அக்காவிடம் பதில் இருப்பதாய் அம்மா நம்பினாள். எங்கள் ஏரியாவில் இருக்கும் எல்லா பெண்மணிகளின் சேலைகள் பற்றியும் அவற்றின் நிறம் முதற்கொண்டு ரமாக்கா ஞாபகம் வைத்திருந்தாள். எல்லா வீட்டுப்பிள்ளைகளின் மதிப்பெண்களும் தெரிந்திருந்தது. பெண்கள் கூட்டத்தின் அரட்டையின் போது அக்கா இது போன்ற புள்ளி விவரங்களை அள்ளித்தெளிப்பாள். இதனாலேயே தெருப்பெண்கள் மத்தியில் அக்காவிற்கு சிறப்பு இடம் அளிக்கப்பட்டிருந்தது.

பள்ளியை நெருங்கும்போது அடிவயிற்றில் ஒரு பயம் உருண்டுகொண்டிருந்தது. காரணமில்லாமல் பொதுவான பயம். தப்பே செய்யவில்லையென்றாலும் போலிஸ் ஸ்டேஷன் செல்கையில் ஏற்படும் உணர்வு. பள்ளியை மனதார வெறுத்தேன். பெரிய மழைகள் பெய்யும் போது பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள். அடுத்த நாளும் மழை வேண்டி பிரார்த்தனை செய்வேன். பள்ளி கேட்டின் அருகில் வந்த போது "அமுங்குனி" என கூப்பிடும் சத்தம் கேட்டது. ராஜாமணி பாட்டியின் குரல். கேட்காதது போல் உள்ளே போய் விடலாமாவென யோசித்தேன். பிறகு முறைத்துக்கொண்டே அவளருகில் சென்றேன். ராஜாமணிப்பாட்டி பள்ளிக்கு வெளியில் கடை வைத்திருக்கிறாள். கப்பக்கிழங்குகள், சூராம்பழம், தட்டு மிட்டாய்,கலாக்காய்கள்,கண்ணாடி பாட்டில்களில் வண்ண மிட்டாய்கள், மஞ்சள் நிற அப்பளங்கள் என பாட்டியின் கடை பள்ளிக்குழந்தைகளின் கனவுக்கொட்டடையாக திகழ்ந்தது. எனக்கும் பாட்டிக்கும் ஒரு பிசினஸ் டீலிங் இருந்து வந்தது. பாட்டியிடம் கணக்கு வைத்து வாங்கித்தின்று விட்டு ,காசு கொடுக்காமல் பலர் பள்ளியில் சுற்றிகொண்டிருப்பார்கள். அந்த மாணவர்களிடம் சென்று அந்த "வாராக்கடனை" வசூலித்துத்தந்தால், பாட்டி எனக்கு கொஞ்சம் சூராம்பழமும், நெல்லிக்காயும் கொடுப்பாள். 
"மூனு பி செல்வம் முக்கா ரூவா... டி கிளாஸ் சென்றாயன் ரெண்டார்ரூவா ..ம்ம்".

நெற்றியை குறுக்கி யோசித்தாள். ஏற்கனவே சுருக்கமான முகம் இன்னும் சுருக்கமாக தெரிந்தது. எப்போதும் கசங்கிய சேலைகள் தான் கட்டியிருப்பாள். வெள்ளைக்கலரில் பாசி மாலை அணிந்திருப்பாள். குரல் மட்டும் எப்போதும் அரட்டும் தொனியில் கட்டக்குரலாய் இருக்கும். பாட்டியை முறைத்துப்பார்த்தேன்.

"இனிமே அப்டி கூப்ட்டா நா கடைக்கு வர மாட்டேன்.."

பாட்டி சிரித்தாள். அவளுக்கு பற்கள் கூரியதாக, கண்டபடி எளிரில் கிடைக்கிற இடத்திலெல்லாம் முளைத்திருந்தது. அதனாலேயே அவளது சிரிப்பு கொஞ்சம் வசீகரமானதாய் இருக்கும்.

"என்னானு கூப்டேன்.." சிரித்துக்கொண்டே கேட்டாள்.நான் பேசவில்லை.

"அமுங்குனினா..?" . ஆம் என்பது போல் தலையாட்டினேன்.

"சரிடீக்கனி...இதுக்கலாமா கோவிக்கிறது...அந்த மூனாங்கிளாஸ் முண்டப்பயலுக கிட்ட பாட்டிக்கு காசு வாங்கியாடிக்கனி...பாட்டி ரேசன்ல சீமத்தண்ணி வாங்கப்போகணும்..". என சொல்லிக்கொண்டே கன்னத்தை கிள்ளினாள். பாசம் பொங்கினால் இது போல வார்த்தைக்கு வார்த்தை "கனி" போடுவாள். 

தலையாட்டிவிட்டு நடந்து பள்ளிக்குள் போனேன். கொய கொய வென குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். எங்கும் வெள்ளைச்சட்டைகள், ஊதா ட்ரவுசர்கள், மெரூன் பாவாடைகள். வகுப்பை நெருங்க நெருங்க எரிச்சல் அதிகமாகியது. என்னிடத்தில் போய் அமர்ந்தேன். பெஞ்சில் அமருகையில் ட்ரவுசர் கொஞ்சம் மேலேறியது. நிறைய பேர் சிரிப்பதைப்போல தோன்றியது. திரும்பிப் பார்த்து யாரும் சிரிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். பெண்கள் முந்தானையை சரி செய்வது போல நான் என் ட்ரவுசரை பிடித்துக்கொண்டு அழைந்தேன்.

பக்கத்துக்கிளாஸ் சந்திரிகா டீச்சர் திடீரென உள்ளே நுழைந்தார். "லேய் சத்தம் போடாம உட்கார்ந்திருக்கனும்...இன்னிக்கு உங்க டீச்சர் லீவு..கத்தாம உக்காந்து இங்க்லீஷ் போயத்த படி.. சத்தம் வந்துச்சு ஹெட் மாஸ்டர் ரூமுக்கு அனுப்பிருவேன்.." சொல்லிவிட்டுப்போனார். என் கண்ணுக்கு சந்திரிகா டீச்சர் தேவனின் தூதுவர் போல தெரிந்தார். ஒரே நொடியில் குதூகலமானேன். உலகம் இன்பமயமானதாய் தெரிந்தது. ஜன்னல் வழியாய் கல்லை விட்டு எறிவது, "அண்ணாமலை" படத்தின் வசனங்களை பேசுவது என பொழுது சிறப்பாய் கழிந்து கொண்டு இருந்தது. அருண் ஒரு சின்ன தூக்குச்சட்டியை கையில் பாதுகாப்பாய் வைத்திருந்தான். ஒரு வேளை அதற்குள் "திங்க" எதுவும் இருக்குமோ என்ற பேராசையில் அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அருண் கருப்பு ஃப்ரேமில் ஒரு கண்ணாடி போட்டிருப்பான். நோட்டுப்புத்தகங்களிலெல்லாம் சாமிப்படங்கள் ஒட்டி வைத்திருப்பான். 

"லே..தூக்குச்சட்டில என்னடா??"

அருண் என்னை ஒரு மாதிரி பார்த்தான். பிறகு சொன்னான்.
"விநாயகருக்கு பால்...இப்போ எல்லா கோயில்லயும் விநாயக சாமி பால் குடிக்கிறாராம்டோய்...நேத்துக்கூட பெத்தாச்சி விநாயகர் கோயில்ல ஒரு சட்டி குடிச்சாராம்.. எங்க மயினி சொல்லிச்சு...ஒரு கரண்டில பால் வச்சாங்களாம் சொர்ர்னு உறிஞ்சிட்டாராம்..அதான் பாலு கொண்டு வந்திருக்கேன்.."

நான் ராமநாராயணனின் துர்கா படத்தையே நாலு தடவை பார்த்தவன். எப்படியாவது கணேசன் பால் குடிப்பதை கண்டுவிட வேண்டுமென ,அன்று சாயங்காலம் அருணின் சைக்கிளில் தொத்திக்கொண்டேன். எல்லாக்கோவில்களும் கூட்டம் கொப்பளித்தது. கோவில்களிலிருந்து "ஜெய் கணேஷா" கோஷம் பலமாய் வந்து கொண்டிருந்தது. ஊர் முழுக்க விநாயகர் ஆக்ரமித்திருந்தார். எல்லாக்கோவில்களிலும் விநாயகர் சிலை இருந்ததால், ஒரு முருகன் கோவிலுக்கு வண்டியை விட்டோம். அங்கு ஒரு மரத்தின் கீழே விநாயகர் ஃப்ரீயாய் இருந்தார். நானும் அருணும் சாமியின் முன்னால் போய் நின்றோம். தூக்குச்சட்டியில் இருந்த பாலை ஒரு ஸ்பூனில் ஊற்றினோம். அருண் ஸ்வாமி சிலையின் தும்பிக்கை அருகே ஸ்பூனை கொண்டு சென்றான். எனக்கு பதட்டம் அதிகமானது. ரெண்டு மூன்று நிமிடமாகியும் பால் ஸ்பூனில் அப்படியே இருந்தது. இரண்டு பெரும் மாறி மாறி அரை மணி நேரம் முயற்சி செய்தோம். சாமி குடித்த பாடில்லை. சோகமாய் கோவிலிலிருந்து கிளம்பினோம். 

"ஏன்டா அருணு..சாமி பால குடிக்கல.."

"வயிறு நொம்பிருக்கும்டா... கருவேல்நாயக்கம்பட்டில குடிச்சிட்டு ஏப்பமே விட்டாராம்.."

"ஆமா பால்ல சீனி போட்டியா?.."

"இல்ல.."

"அட கேனயா....சீனி போடலேனா நானே குடிக்க மாட்டேன்...சாமி எப்டிடா குடிப்பாரு..."

சீனியை வாங்கி பாலில் போட்டு விட்டு ரெண்டு பேரும் மீண்டும் கோவிலை நோக்கி ஓடினோம். 
                      

Thursday, October 29, 2015

டவுசர் காலங்கள் - 1

                                  

தொண்ணூறுகளில் இதே உலகத்தில் தான் வளர்ந்தோமா என அடிக்கடி தலையை சொரிய வேண்டியிருக்கிறது. இந்த "வாட்ஸ் அப்" யுகத்திற்கு, அஞ்சல் அட்டையில் எச்சில் தொட்டு நாங்கள் ஸ்டாம்ப் ஒட்டிய காலத்தை விளக்க முடியாது.சந்திரகாந்தாவுக்கும் சக்திமானுக்கும் வாரம் முழுக்கக்காத்திருப்போம். "ஆசை" மிட்டாய்கள் எங்கள் பால்யத்தை இனிக்க வைத்தது. வாடகை சைக்கிள்கள், சீனி வெடிகள், ஜாமிட்ரி பாக்ஸ்கள்,ஒளியும் ஒலியும் என ஏக்கப்பெருமூச்சு ஏகமாய் வருகிறது. என் டவுசர் காலங்களில் வேகமாய் வளர்ந்து "பேண்ட்" போட்டு பெரியாளாகிவிட வேண்டுமென்பதே என் ஆகப்பெரிய லட்சியமாய் இருந்தது. பேருந்துகளில் அரை டிக்கெட் எடுக்கப்படுவது, அம்மாவின் மடியில் உட்கார்ந்துகொண்டு தியேட்டரில் படம் பார்ப்பது போன்றவையெல்லாம் எனக்கு பெருத்த அவமானத்தை கொடுத்தது. அந்த நாட்களில் "கொடிக்கா" பழங்களை பாக்கெட்டுகளில் போட்டுக்கொண்டு "ஆன் தி வே" யில் சாப்பிட்டுக்கொண்டே நடப்போம். "சா பூ த்ரீ" போட்டு ஆட்டங்களை ஆரம்பிப்போம். விருந்தினர்களுக்கு வாங்கி வரப்பட்ட "டொரினோ"க்கள் காலியாகி விடக்கூடாதென வேண்டிக்கொள்வோம்.
இப்படியாகவே எங்களின் டவுசர் காலங்கள் கிழிந்தது...மன்னிக்கவும் கழிந்தது.

எங்கள் தெருவின் பெயர் "ஒயிட்ஹவுஸ் தெரு". மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிமடியில் கிடக்கும் டவுன் தேனி. இந்த ஊரில் இருக்கும் ஒரு தெருவுக்கு இந்தப் பெயரா என பலர் குழம்புவார்கள். எங்கள் ஏரியாவிற்கு பக்கத்தில் ஒரு பெரிய வெள்ளை பங்களா இருந்தது. அது ஒரு முக்கியமான லேண்ட் மார்க், ஆகையால் "ஒயிட் ஹவுஸ்" தெரு என பெரும்பேரு பெற்றது எங்கள் தெரு. மணிரத்னம் ஒருவேளை அஞ்சலி படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுக்க நினைத்திருந்தால் எங்கள் தெருவிற்கு வந்திருப்பார். கூட்டமாய் எல்லா வயதிலும் குழந்தைகள் இருந்தார்கள். விசித்திரமான குணச்சித்திரங்கள் இருந்தார்கள். எல்லா நாட்களும் நிறைய சுவாரசியங்களை சுமந்து கொண்டே நகர்ந்தது. எங்கள் தெருவில் மொத்தம் நாற்பது வீடுகள். தெரு,மூன்று உபதெருக்களாக மானசீகமாய் பிரிக்கப் பட்டிருந்தது. அதை நாங்கள் "முன்னாடி லயன்" ,"நடு லயன்", "மூனாவது லயன்" என அழைத்து வந்தோம். நடு லயனுக்கு முன்னால் ஒரு பெரிய கிணறு இருந்தது. நிறைய கம்பிகள் போட்டு கிணற்றின் வாயை அடைத்திருந்தார்கள். அந்தக்கிணறு எண்பது சதவீதம் தண்ணீராலும், இருபது சதவீதம் ரப்பர் பந்துகளாலும் ‏நிரம்பியிருந்தது. உபயம் எங்களின் தெருக்கிரிக்கெட்.
நான் "மூனாவது லயன்" பிரஜை. அன்று நடு லயனில் கொஞ்சம் சத்தம் அதிகமாய் கேட்டுக்கொண்டிருந்தது. கண்டிப்பாய் "காக்காக்குஞ்சு"* விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். வேகமாய் கிளம்பினேன். கொய்யாவை ஒரு கடி கடித்து விட்டு மிச்சத்தை பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். எல்லோரும் கிணற்றை சுற்றியிருந்த தூணில் ஏறி இறங்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். "காக்காக்குஞ்சு" களை கட்டியிருந்தது. "ண்ணே..நானும் வரேன்.." யாரும் என்னைக்கண்டு கொள்ளவில்லை. பாலாவும், செல்வாவும் வெறியாய் திரும்பிப்பார்த்துவிட்டு விளையாட்டைத் தொடர்ந்தார்கள். அவர்கள் வெறியேறித்திரிவதற்கும் ஒரு காரணம் இருந்தது. முதல் நாள் எல்லோரும் "ஐஸ்பால்" விளையாடினோம். சாபூத்ரீயில் நான் தான் "பட்டு" ஆனேன். விதிப்படி கண்ணை மூடிக்கொண்டு மரத்தைத் தொட்டு நூறு எண்ண வேண்டும். எல்லோரும் ஒளிந்து கொள்வார்கள். பிற்பாடு ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும். நான் நூறு எண்ணி விட்டு எல்லோரையும் தேடக்கிளம்பினேன். தாகமாய் இருந்ததால் வீட்டில் போய் தண்ணீர் குடித்தேன். அங்கே டிவியில் வந்த ஒரு பாடலை பார்த்துகொண்டே அசந்து தூங்கிப்போனேன்.செடிகளின் நடுவிலும், கிணற்றின் கம்பி மேலும் ஒளிந்து கொண்டிருந்தவர்கள் "என்றாவது அவன் வருவான்" என முக்கால் மணி நேரமாய் காத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். பிற்பாடு பொறுமையிழந்து வீட்டிற்கு வந்து பார்த்திருக்கிறார்கள். நான் வாயை திறந்து கொண்டு தூங்கிக்கொண்டிருந்தது அவர்களுக்கு பெருங்கோபத்தை கொடுத்திருக்க வேண்டும்.எனக்கு அக்கனமே "ரெட் கார்டு" போடப்பட்டது. என்னை "ஆரும்" ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.என்னோடு "ஆரும்" அன்னந்தண்ணி புழங்க மாட்டார்கள்.

"ண்ணே..ப்ளீஸ்ண்ணே" கொஞ்சம் சத்தமாய் கத்தினேன். எல்லோரும் என்னைத்திரும்பிப் பார்த்தார்கள். செல்வா, பாலா, சேகர், சின்ன கார்த்தி எல்லோரும் என்னை விட ஒன்று இரண்டு வயது பெரியவர்கள். மாணிக்கம் என்னை விட நாலு வயது சீனியர்.இது போன்ற இக்கட்டான சூழலில் எல்லோரையும் "ண்ணே..." வென கூப்பிட்டு ஸ்கோர் செய்வது என்னுடைய வழக்கம், அன்று அது எடுபடுவது போலில்லை. மாணிக்கம் மட்டும் பக்கத்தில் வந்தார். முகத்தை கடுமையாய் வைத்திருந்தார். சம்பவத்தன்று சட்டையை கழட்டிவிட்டு புழுதி தரையில் அரை மணி நேரம் ஒளிந்து படுத்துக்கிடந்திருக்கிறார். அவருக்கு வகிடெடுத்து சீவிய தலை. சினிமா படங்களின் பாதிப்பால் கோபத்துடன் பேசும் போது முகத்தில் ஒன்றரை வண்டி ரியாக்சன்கள் காட்டுவார்.

"ரெண்டாவது படிக்கிறவெனெல்லாம் ஆட்டைல சேக்குறதில்லை...மரியாதையா ஓடிரு..."

இதற்கு மேல் அமாவாசையாய் இருந்து பயனில்லை. ராஜராஜ சோழனாய் மாறினேன். "போடா செரட்டைத்தலையா" என சொல்லிவிட்டு நாலாவது கியரில் ஓடத்தொடங்கினேன். மாணிக்கம் "டேய்" என கத்திக்கொண்டே விரட்டத்தொடங்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று தெருக்களை கடந்து ஓடிவிட்டேன். அந்தக்காலங்களில் நான் ஓடினால் ஒரு பய பிடிக்க முடியாது. மாட்டிக்கொள்வது போல இருந்தால் ஏதாவது வீட்டிற்குள் நுழைந்து விடுவேன். எதிராளிகள் உள்ளே நுழைய முடியாமல் திணறிப்போவார்கள். இப்படித்தான் ஒருமுறை ஒரு இக்கட்டான தருணத்தில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து விட்டேன். யார் வீடெனத் தெரியவில்லை. நிறைய பேர் கூட்டமாய் உட்கார்ந்து வி.சி.ஆரில் "நடிகன்" படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சேர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டேன். ஒரு மணி நேரம் கழித்து லைட்டை போட்டார்கள். ஒரு பெரியவர் மிரண்டு போய் "யார்றா நீ??" என்றார். நடந்ததை சொல்லி அந்த வீட்டில் ரெண்டு முறுக்கு சாப்பிட்டு கிளம்பி வந்தேன்.இந்த முறை அதற்குத் தேவையிருக்கவில்லை. மாணிக்கம் கொஞ்ச நேரத்தில் நின்று விட்டார்.வேப்பமரத்தின் கீழே சோகமாய் நின்று கொண்டிருந்தேன். அங்கே குழி பறித்து ஒரு கூட்டம் 'குண்டு' விளையாடிக்கொண்டிருந்தது. மனம் அதில் ஒட்டவில்லை.  மூனாவது லயனில் ஒரு வீட்டிலிருந்து அதிகமாய் சத்தம் வந்தது. ஒலியை பின் தொடர்ந்து வீட்டை நோக்கி நடந்தேன். நிறைய பேர் உட்கார்ந்து தூர்தர்ஷன் செய்தி கேட்டுக்கொண்டிருந்தார்கள். ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார் என பேசிக்கொண்டார்கள். ஒரு பெரியவர் வீட்டின் வெளியே உட்கார்ந்து பொலம்பிக்கொண்டிருந்தார். 

"ரோசாப்பூ மாதிரி மொகம்..அதப் போய் கொல்ல அந்த பாவி பயலுகளுக்கு எப்படி மனசு வந்துச்சோ... நாட்டோட தூண சாச்சிட்டாய்ங்களே..."

கிட்டத்தட்ட அழுவது போல இருந்தார். கதர்சட்டை அணிந்து பாக்கெட்டில் வெள்ளைக்கலர் பேனா வைத்திருந்தார். திடீரென அந்த கேள்வி என் மனதில் உதித்தது. 

"அப்போ நாளைக்கு லீவா தாத்தா??.."

தாத்தா தலையில் அடித்துக்கொண்டார். அவருக்கு இன்னும் சோகம் குறையவில்லை போல என எண்ணிக்கொண்டேன்.
   
Saturday, July 4, 2015

பாபநாசம்

                                      


நாயகன் நடிக்கும் போது கமலுக்கு முப்பத்திரண்டு வயது. அதற்கும் முன்பே சலங்கை ஒலி, மூன்றாம் பிறை, ராஜபார்வை, மரோ சரித்ரா போன்ற மைல்கல்களை கடந்து விட்டிருக்கிறார். ஆக கமல் தன் வாழ்நாளில் முப்பத்திரண்டு வயதிற்குள் அடைந்த உயரங்களை இப்பொழுது இருக்கிற எந்த ஹீரோவும் நினைத்துப்பார்க்கக்கூட வாய்ப்பில்லை. இணையங்களில் இந்த ஹீரோக்களின் ரசிகக்குஞ்சுகள் சண்டையிடும் போதும், ஒரு டொச்சு போட்டோவை போட்டு "லைக்" போடு "ஷேர்" பண்ணு என்று உயிரை வாங்கும் போதும் தாங்கொணா கோபம் வரும். கமல் "வேட்டையாடு விளையாடு" படத்தில் சொன்னது போல "த்தா..சின்ன பசங்களா..யார்ட்ட?" என கேட்கத்தோன்றும். கமலைப் பற்றிய எவ்வளவு விமர்சனங்கள் ஊடகத்தில் அலசப்பட்டிருக்கும் ஆனால் அவரின் நடிப்பை யாரும் விமர்சிக்க செய்ய முயன்றதில்லை. அது அவர்களால் முடிந்ததுமில்லை. இதோ இப்போது கூட உத்தமவில்லன் ஊத்தியது. திட்டிதீர்த்து விமர்சனங்களில் கூட கமலின் நடிப்பை அங்கீகரித்தனர். இத்துடன் முடிந்து விட்டது என விமர்சித்தவர்களுக்கு பாபநாசம் மூலம் தான் ஏன் "உலக நாயகன்" என உணர்த்தியிருக்கிறார்.

கதையை முழுக்க சொல்லி "பிரம்மஹத்தி" சாபம் வாங்கிக்கொள்ள ஐடியாயில்லை. மலையாள த்ரிஷ்யமும் பார்த்திருப்பதால் எங்கே பல்பு வாங்கி விடுவோமோ என பயந்து கொண்டே தான் போனேன். எங்கும் மூலத்தை மீறவில்லை நடிப்பில் மட்டும் கமல் தன் பீஷ்மத்தனத்தை காட்டிவிட்டார். மோகன்லாலுடன் ஒப்பிடக் கூடாதென்றாலும் பல இடங்களில் கமல் தன் சொந்த வழியில் சிக்சர் அடித்து விட்டார். இரண்டு வேற வெர்சன்கள். படம் முழுக்க எல்லோரும் 'திருநவேலி' பாஷ பேசுறாங்க. எங்கும் எரிச்சல் இல்லை. போக போக இதமாகி விடுகிறது. உண்மையில் அது திருநெல்வேலி பாஷையும் இல்லையாம் "உவரி பாஷை" என ஜெயமோகன் கூட "ஸ்கூப் நியூஸ்" சொல்லியிருக்கிறார்.திரிஷ்யத்தின் வெற்றிச்சூத்திரமே அதன் திரைக்கதை தான். இது வரை வந்த இந்திய திரைப்படங்களில் மிகச்சிறந்த பத்து திரைக்கதைகள் பட்டியலிட்டால் அதில் த்ரிஷ்யம் கண்டிப்பாய் இருக்கும். மலையாள பதிப்பை பார்க்காதவர்கள் பாபநாசம் பார்த்தால் மெர்சலாவார்கள். தமிழ் படங்களின் இலக்கணங்கள் பல இடங்களில் மீறப்பட்டிருக்கும். படத்தில்  ஹீரோவுக்கு ஐம்பது வயதிற்கும் மேல எனக்காட்டுவதே நம்மூருக்குப்புதுசு. பொதுவாய் கமல் தன் கேரக்டரயும் தாண்டி "கமல்த்தனங்களை" காட்டுவார். விளக்கிச்சொன்னால் இலைமறைக்காயாய் பகுத்தறிவு வசனங்கள் பேசுவார், புத்திசாலித்தனமான கேலிகள் செய்வார். அது குணாவாக இருந்தாலும் சரி , தெனாலியானாலும் சரி. இதில் சுயம்பு லிங்கத்தின் எல்லைக்குள் தன்னை அடக்கிக்கொள்கிறார். திருநீர் பூசிக் கொள்கிறார். கோவிலுக்கு போகிறார். "ஆண்டவனுக்கு பயந்தா போதும்" என வசனம் பேசுகிறார்.கெளதமி என்றவுடனே எனக்கு எரிச்சலாய் இருந்தது. மீனாவையே நடிக்க வைத்திருக்கலாம் எனத்தோன்றியது. உண்மையிலே கெளதமி சொதப்பவில்லை. வட்டார மொழியைத் தான் கொஞ்சம் கஷ்டப்பட்டபடி பேசுகிறார். எல்லோரும் திறம்பட நடித்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் படம் டாப் கியருக்கு போகும் போது பல இடங்களில் தியேட்டரில் விசில் பறக்கிறது. ரொம்ப அரிதாகவே நம் பொறுமையை சோதிக்காத யதார்த்த சினிமா வருகிறது. பார்த்து விடுங்கள்.படத்திற்கு கூட வந்த நண்பர் பிரபு இண்டர்வெல்லில் முழுக்கதையும் சொல்லாவிடில் பிஸ் அடித்துவிட்டு வீட்டுக்கு போய் விடுவதாக மிரட்டினார்.

"டேய்..நீ என்னடா..அவனவன் கதையை சொல்லிராதேனு கெஞ்சுவான்..நீ கதைய சொல்லிறுனு உயிரெடுக்குற..."

"இல்லடா..நான்ல மகாநதி பாத்துட்டு மூணு நாள் அழுதவன்...இதுல வேற குடும்பம் குட்டினு காட்றானுக..பயமா இருக்கு...நா கொஞ்சம் சாஃப்டு டைப்..சோகத்துக்கு செட் ஆக மாட்டேன்"

பிற்பாடு முழுக்கதையும் சீன் பை சீன் கேட்டுட்டுத் தான் படம் பார்த்தான். படத்துல வர்ற கேரக்டர்ஸ்ஸ விட கூட வர கேரக்டர்ஸ் விசித்திரமா இருக்கானுக. 

கொசுறு செய்தி: ஒரு வருஷம் முன்னாடி த்ரிஷ்யம் பார்த்து கண்ல தண்ணி வச்சுட்டன். இந்திய சினிமா உலகத்தையே நாக்கைத்துறுத்தி மிரட்டும் நாள் 
வெகுதூரத்தில் இல்லை என தீராக்கனா கண்டேன். இணையத்தில் தேடிய போது த்ரிஷ்யம், "சஸ்பெக்ட் எக்ஸ்" என்ற கொரிய படத்தை சுட்டு எடுத்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை படிக்க நேரிட்டது. "அடப்பாவி நீங்களுமா??" என டென்சனாகி அந்த கொரிய படத்தை டவுன்லோடி பார்த்தேன் (ஆம் சப்டைட்டிலுடன் தான் ) பிளாட் தவிர வேறு பெரிய ஒற்றுமை கிடையாது என்று அந்த வழக்கை என் மனதிற்குள் தள்ளுபடி செய்தேன். ஆனால் ஒரு ஆனந்த அதிர்ச்சி சஸ்பெக்ட் எக்ஸ். படம் திர்ஷ்யத்தை விடவும் சூப்பர். என்னை போல் சக சைக்கோக்கள் தரவிறக்கி பார்த்து பயனடையுங்கள்Friday, July 3, 2015

வாயாடிகள் உலகம்


எங்கள் வீட்டில் இரவில் கொசுத்தொல்லை அதிகமாக இருந்தால், ஏதாவது ஒரு செய்திச் சேனலைப்போட்டு விடுவேன். ஐந்தே நிமிடத்தில் கொசுக்கள், பூச்சு பட்டைகள் எல்லாம் தெறித்து ஓடிவிடும். டீமாண்டிகளும், காஞ்சனாக்களும் மிரளுமளவு கூச்சலிடுகிறார்கள்.நம்மை டம்மாரமாக்க தினமும் விடாமுயற்சி செய்கிறார்கள். எல்லா தமிழ் ஆங்கில செய்திச்சேனல்களிலும் சாயங்காலத்துக்கு மேல் "கோட்சூட் தொகுப்பாளர்", வீடியோகான்ஃப்ரன்ஸ் போட்டுவிட்டு உட்கார்ந்து விடுவார். எல்லா கட்சியிலிருந்தும் "ஏழு கட்டையில்" பேசக்கூடியவர்கள் விக்ஸ் போட்டுவிட்டு ஆஜராகி விடுவார்கள். அன்றைய டாபிக்கை எடுத்து பிரிச்சி பேன் பார்க்க ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் பெட்ரோல் விலை உயர்வு, ஜெயலலிதா விடுதலை, யோகா நாள் என இவர்களுக்காகவே தினமும் ஒரு ஃபுல்டாஸ் பால் காத்திருக்கும்.

தொகுப்பாளர்கள் கோட்சூட் போடவில்லையென்றால் டிவி லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என எதுவும் விதிமுறைகள் இருக்கின்றனவா தெரியவில்லை?. "இந்த பரபரப்பான அரசியல் சூழலில் விஜயகாந்த், கலைஞரின் வீட்டுக்கு அருகில் வாக்கிங் போனது எந்த வித சலனத்தை ஏற்படுத்தும்..?" என்கிற ரீதியில் ஆரம்பிப்பார்கள். எல்லா கட்சியிலிருந்தும் ஒரு உருப்படி வந்திருக்கும். தலைப்பு என்னவிருந்தாலும் இவர்களுக்கு கவலையில்லை, அவர்கள் தயார்செய்ததை கொப்புளிப்பார்கள். போனவாரம் கூட மெட்ரோ ரயில் பற்றிய விவாதத்தில் குமாரசாமி தீர்ப்பை பற்றி ஐந்து நிமிடம் பேசினார் ஒரு பராக்கிரமசாலி. அவர்  பேசியதை அவர் கட்சிக்காரர்கள் கேட்டால் கூட ரத்த வாந்தியெடுத்து செத்து விடுவார்கள். சம்பந்தமே இல்லாமல் மூன்று நிமிடம் தங்கு தடையின்றி தமிழில் பேசினால் இவர்கள் வென்று விட்டதாய் நினைக்கிறார்கள். எல்லாக்கட்சிகளும் ஆளும்கட்சியை கழுவி ஊற்ற வேண்டும், ஆளும்கட்சி போன ஆட்சியை கரித்துக்கொட்ட வேண்டும். சமூக ஆர்வலர்கள் எல்லாவனையும் திட்ட வேண்டும். போன்றவையெல்லாம் இந்த விவாதங்களின் விதி.

கொஞ்ச நாட்களுக்கு முன் பா.ஜ.க வின் ஹச்.ராஜா "பர்தாவை தடை செய்ய வேண்டும்" என்று எங்கேயோ கூட்டத்தில் பொங்கிவிட்டார். இவர்கள் இங்கே 
சாயங்காலம் கடையை திறந்து விட்டார்கள். திராவிட கட்சிகளெல்லாம் சேர்ந்து ஏறி அடித்துக்கொண்டிருந்தன. திடீரென நாமம் போட்ட ஒருவர் "ஏன் பெரியார் கூட இதைத் தானே சொல்லியிருக்கிறார்.. ராஜா பெரியார் வழியில் நின்று இதை சொல்லிவிட்டார் என எடுத்துக்கொள்ளலாமே.." என்றார். இவ்வாறாக நேரலையில் வண்டி வண்டியாய் வாந்தியெடுக்கிறார்கள். காவிக்கும் கருப்புக்கும் கட்டாயத்திருமணம் செய்து வைக்கிறார்கள். கழகங்கள் சார்பில் பெரும்பாலும்  வழக்கறிஞர்கள் தான் களமிறங்குகிறார்கள். கேசுகள் கைவசம் நிறைய இருப்பதால் எல்லாக்கழகத்திலும் வக்கீல்களுக்கு "வாக் இன்" இண்டர்வ்யூ நடந்திருக்கும் போல. எல்லாரும் ஒரே நேரத்திலே பேசுவார்கள், அடுத்தவர் பேசுவது கேட்டு விடக்கூடாது என்பதில் குறியாய் இருப்பார்கள். 

பேசுவோர் எல்லோரும் கையில் ஆளுக்கு ரெண்டு பேப்பர் வைத்திருக்கிறார்கள்.சேனல்களில் மெதுவடை எதுவும் கொடுப்பார்களோ என்னவோ..  இன்னொரு ரக பேச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்களது பேச்சு ஆழமாய் கருத்துள்ளது போல இருக்கும். முழுமையாய் விளங்காது. யாரோ மூளையில் கொத்து பரோட்டா போட்டது போல இருக்கும். "முதலாளித்துவத்தால்  கட்டமைக்கப்பட்ட கூறுகளினால் எழுப்பப்பட்ட ஒரு வினையூக்கியாய் மாறி நம் சக தோழனே நம் ரத்தத்தை உறிகிறான்". மேலே சொன்ன வாக்கியம் ஒரு பானை பிரியாணியில் ஒரு லெக் பீஸ். இவர்கள் எல்லாக்கட்சியினரையும் வாரிவிட்டு தாங்கள் நடுநிலையாளர்கள் 
என்று நிலைநாட்டுவார்கள்.

ஆங்கில சேனல்கள் "அதுக்கும் மேல" செய்கிறார்கள். டைம்ஸ் நவ் ஆசாமி.... சாரி... கோஸாமி , அடி வயிற்றிலிருந்து கத்தி ஒரு மிகப்பெரிய கேள்வி கேட்பார்.சம்பந்த பட்டவர் பதில் சொல்வதற்குள் புகுந்து இடைமறித்து இவரே பேசுவார். பெரும்பாலோனோர் பொண்ணு பார்க்க கூட வந்த ஒன்று விட்ட சித்தப்பா போல அமைதியாக உட்கார்ந்துவிட்டுப்போவார்கள். சாயங்காலம் ஆறு மணிக்கு மேல மொத்த இந்தியாவும் குத்த வைத்து உட்கார்ந்து எங்கள் சேனலை தான் வெறிக்க வெறிக்க பார்க்கிறார்கள் என உலகமகா விளம்பரம் வேறு போடுகிறார்கள்.


இதற்கு மேல எழுதுறதுக்கு மேற்படி டாப்பிக்கில் எனக்கும் எதுவும் தோன்றவில்லையென்பதால் பாயிண்ட் தேற்றுவதற்காக புதியதலைமுறையை போட்டேன். வழக்கம் போல வீடியோ கான்ஃபிரன்ஸ்ஸில்  கட்டம் கட்டி ஆறுபேரை காட்டிக்கொண்டிருந்தார்கள். மெட்ரோ ரயில் பற்றி "ப்ராது" கொடுத்திருந்தார்கள். எல்லோரும் மெட்ரோ ரயிலை "நாம்பெத்த புள்ள" என சொந்தம் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.

"மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட...."

"இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட..."


"நாங்கள் டெல்லயில் 2002ல் மெட்ரோ ரயிலை தொடங்கிய போது..."


"கட்டணத்தை குறைக்க வேண்டுமென்று நாங்கள் அப்போதிருந்தே சொல்...."


செயற்கைக்கோள் வழியாக இலவச "ரத்த அழுத்தத்தை" வழங்கத் தொடங்கினார்கள்.

Sunday, May 31, 2015

திருப்பூர் குமரன்தலையில் கையை வைத்துக்கொண்டார். எனக்கு வயிறு வைப்ரேசன் மோடில் இருந்தது. என் முகத்தில் வியர்வை இருந்ததை சுற்றியிருந்தவர்கள் வியப்பாய் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பத்துவயதில் எனக்கு வந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாதென்று எண்ணிக்கொண்டேன். இன்னொருமுறை சொதப்பினால் பரமசிவம் சாரின் எருமைமாட்டுக்கையால் எனக்கு அடி உறுதி. ஒருமுறை யோசித்துப்பார்த்துவிட்டு மீண்டுமொருமுறை நடந்து வந்து உரக்கப்பேசினேன்."இந்த உடம்புக்கு கையிரண்டு காலிரண்டு எனக்குடுத்த இறைவன்... அந்த உயிரை மட்டும் இரண்டாக கொடுத்திருந்தால் நாட்டுக்காக அடுத்தடுத்து கொடுத்திருப்போம்..........." சொல்லிவிட்டு மிரட்சியாய் அவரை பார்த்தேன். வேகமாய் பக்கத்தில் வந்தார்.

"அப்பிடியே தான். ஒன்னே ஒன்ன மட்டும் சேதத்துடு... "உயிரை மட்டும்"னு சொல்றப்ப ஒரு ஏக்கம் தெரியணும்... அதோடு சொல்லிரு.. இன்னைக்கு வீட்டுக்குக்கிளம்பிறலாம்.."

கன்னம் தப்பித்த சந்தோசம் வெகு நேரம் நீடிக்கவில்லை.அந்த "உயிரை மட்டும்" அடுத்த அரைமணி நேரம் என் உயிரை வாங்கியது. ஆண்டு விழாவில் "திருப்பூர் குமரன்" நாடகம் தான் போடுவேன் என பரமசிவம் சார் அடம்பிடித்திருந்தார். ஐந்தாம் வகுப்பில் திருப்பூர் குமரனைத் தேடினார். தலையை சொறிந்துகொண்டே நிமிர்ந்து பார்த்த என்னை எப்படி அந்த வேஷத்திற்கு தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. அன்னைக்கு நான் லீவில் இருந்திருக்கக் கூடாதாவென பலமுறை யோசித்திருக்கிறேன். ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் இறுதி காட்சி தான் எங்கள் நாடகத்தின் முக்கியமான பகுதி. அதை சார் நிறைய தடவை வி.சி.ஆரில் போட்டுக்காட்டி உயிரை வாங்குவார். பெரும்பாலான நாடகத்தின் வசனங்கள் அவ்விடமிருந்தே உருவப்பட்டன. அவர் அந்த வருடம் வெறியாய் இருந்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. எங்கள் பள்ளியில் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்த ஆசிரியைகள் ஒரு காமெடி நாடகம் தயார் செய்து கொண்டிருந்தார்கள். அது தான் அந்த வருடத்தின் "ஹைலைட்" என்று ஹெட்மாஸ்டர் பீற்றி வருவதாக ஒரு வதந்தி இருந்தது. அச்செய்தி வேப்ப மரத்தின் பின்னால் நின்று பரமசிவம் சாரை நிறைய சிகரெட் புகைக்க வைத்தது.

பரமசிவம் சாரின் தொப்பையும் வழுக்கையும் அவரது நாற்பது வயதை நியாயப்படுத்தும். அடிக்கடி கர்சீப்பை வைத்து முகத்தை துடைத்துக்கொள்வார். தினமும் சாயங்கால ரிகர்சலுக்கு முன் சொந்த செலவில் எங்களுக்கு பஜ்ஜியும் பலாச்சுளைகளும் வாங்கித்தருவார். நாடகத்தின் முதல் காட்சியில் திருப்பூர் குமரன் தன் அம்மாவிடம் சென்று போராட்டத்துக்காக ஆசி வாங்குவார். அம்மாவோ வருத்ததுடன் வழியனுப்புவார். அதில் அம்மா ஒரு வசனம் சொல்லுவார் ,"குமரா..பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு போயிருக்கும் உன் மனைவி திரும்ப வந்தால் நான் என்ன பதிலப்பா சொல்லுவேன்..". அம்மாவாக நடித்தவள் சி கிளாஸ் அஜந்தா. அவள் ஒருமுறை "பிரசவத்திற்கு" என்று சொல்வதற்கு பதிலாய் "பிரதோசத்திற்கு" என சொல்லிவிட்டாள். பரமசிவம் சார் பக்கத்தில் வந்து "லூசுக்கழுத" என சொல்லி அவள் தலையில் ஒரு "யார்க்கர்" போட்டார்.அஜந்தா ஏங்கி ஏங்கி அழுதாள். அதன் பிற்பாடு அவளுக்கு எப்போதும் டங்க் ஸ்லிப் ஆகவேயில்லை. வீட்டுக்கு கிளம்பும் போது அஜந்தா என்னிடம் வந்து "அவரு எது வாங்கி கொடுத்தாலும் நா இனிமே திங்க மாட்டேன்..இன்னிக்கு தின்னதையே இப்ப வாந்தி எடுக்கப் போறேன்.." எனச்சொல்லி வாய்க்குள் விரலை விட்டாள். நான் பீதியானேன். நல்ல காலம் செரிமானமாகிவிட்டது போல அவளது இரைப்பை ஒத்துழைக்கவில்லை.

அம்மாவின் கதியே அப்படியென்றால் திருப்பூர் குமரனை விட்டிருப்பாரா?? வெளுத்து வாங்கினார். எனக்கு உளறல் பிரச்சனையில்லை ஆனால் வசனங்கள் மறந்து போய்விடும். குமரன்  பிரிட்டிஷாரிடம் போராட்டத்தில் பேசும் வசனம் மிகப்பெரியது. திருப்பூர் குமரன் இவ்வளவு நீளமாய் எப்படித்தான் பேசினாரோ என நினைத்துக்கொள்வேன். ஆக்ரோஷமாய் பேசிக்கொண்டிருக்கும் போதே அடுத்த வரி மறந்து போகும், முகத்தைக்குறுக்கி ஓரக்கண்ணால் சாரை பார்ப்பேன். அவர் மதம் கொண்ட யானை போல ஓடி வந்து கொண்டிருப்பார். அடைமழையாய் அடித்து நொறுக்குவார். உண்மையில் ரெண்டாவது மூன்றாவது அடியிலேயே எல்லாம் ஞாபகம் வந்து விடும். அவர் அடிக்கென்றே ஒரு மகத்துவம் இருந்தது.

"இருபத்தொரு வயசுல நாட்டுக்காக செத்தவெண்டா...எவஞ்சாவான்?? அப்டியே சிங்கம் மாதிரி உருமிட்டு சாஞ்சுட்டான்...எப்பேர் பட்ட வைராக்கியம் இருந்தா சாகுற போது கூட கொடிய விடாம இருந்திருப்பான்... அப்படியாப்பட்டவன் குரல் எப்டியிருக்கும்... நீ கஞ்சிக்கு செத்தவன் கெனக்கா மொனங்குற..."


'வைராக்கியம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் அப்போது தெரிந்திருக்கவில்லை. அர்த்தம் கேட்க அது சரியான நேரமில்லை என்பதால் அமைதி காத்தேன். பரமசிவம் சார் எல்லா வசனத்தையும் நடித்துக் காண்பிப்பார்.வாட்ச்சை மேஜையில் கழட்டி வைத்து விட்டு, தொண்டையை உருமி ஆரம்பிப்பார். மொத்த வசனத்தையும் தங்கு தடையின்றி கணீரென்று பேசுவார். அவர் கண்களெல்லாம் கலங்கியிருக்கும். முகம் ஆக்ரோஷமாய் இருக்கும். நடித்து முடித்து விட்டு "இப்டி பண்ணனும்"பார். நான் குல தெய்வத்தை ஒரு முறை கும்பிட்டுக்கொள்வேன்.

ஒரு வாரத்தில் எல்லாம் இலகுவானது. வசனங்கள் பதிந்து போனது. நெஞ்சை நிமிர்த்தி, குரலை உயர்த்தி நேராய் கண்களை வைத்துக்கொண்டு பேசுவது பிடிபட்டது. சார் ஓரமாய் உட்கார்ந்து கொண்டு "அவ்ளோ தான்..அருமே..அருமே.." என்பார். வீட்டில் கூட சட்னியில் உப்பு அதிகமாய் இருந்தால் "ஓவர் ஆக்டிங்" செய்ய ஆரம்பித்தேன். இந்த "ஆண்டுவிழாப் பேய்" எப்ப எறங்குமோ?? என நொந்து கொண்டாள் அம்மா. முன்பு எருமை மாடாய் தெரிந்த பரமசிவம் சார் இப்போது பசு மாடாய் தெரிய ஆரம்பித்தார். மிக அழுத்தமாய் திருப்பூர் குமரன் எனக்குள் பதிந்து போனார். தனியாய் இருக்கும் வேளையில் குமரன் பிரிட்டிஷ் போலீசிடம் பேசும் காட்சி என் மனக்கண்ணில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். இந்தியக்கொடியை மானசீகமாக கையில் ஏந்திக்கொண்டு "இறுக்கமாய்" பிடித்துக்கொள்வேன். பரமசிவம் சார் சொல்வது போல "லட்சிய உடும்புப் பிடி.."

"உனக்கு அது மேடையா தெரியக்கூடாதுடா..திருப்பூர் வீதியா தான் தெரியனும்..நீ தான் குமரன்..எதுக்கும் பயப்படாத குமரன்...தேசபக்தியால் தோலெல்லாம் இரும்பாப் போனவன்..உயிற துச்சமுனு இருந்தவன்...தமிழ்நாட்ல பிற்பாடு ஏற்படப்போற புரட்சிக்கு விதை நீ..முக்கியமா தேசியக்கொடிய விட்டுவிடாமல் உயிர்மாய்த்த கொடிகாத்த குமரன்..."  பரமசிவம் சார் மகுடி ஊத நான் பாம்பானேன். ஆனால் மொத்த ஸ்கூலும் எங்கள் மீது வெறியாய் இருந்தது. நாடகத்துக்கு கூடுதலாய் பதினைந்து நிமிடம் வேண்டுமென்றார் சார். "ரங்கீலா" பாடலை தூக்கிவிட்டால் நமக்கு அந்த பதினைந்து நிமிடம் கிடைக்குமென தலைமைக்கு மேற்கொண்டு யோசனையும் சொன்னார். பள்ளியின் கலைக்காதலர்கள் கொதித்தார்கள். எல்லோரும் சாருக்கு எதிராக தங்கள் குரலை பதிவு செய்தார்கள்.தலைமையாசிரியர் பரமசிவ சாரிடம் பேசினார்.

"ஒரு மணி நேரம் நாடகம் பாத்தா எல்லாருக்கும் போர் அடிச்சிரும் சார்..ஒரு பாட்டு ..ஒரு நாடகம் அது தான நம்ம ஐடியா.."

"ஏங்க திருப்பூர் குமரன விட, தெரியாத மொழிப்பாட்டு பெருசா போச்சா.."

"எல்லாம் சேர்ந்தது தான் கலை நிகழ்ச்சி...நீங்.."

"செரி விடுங்க..அப்போ "நேத்து ராத்திரியம்மா" வையும் போட்டு கலைய வளருங்க..."

கடைசியில் "ரங்கீலா" தப்பித்தாள். அந்த மிகப்பெரிய நாள் வந்தது. வேட்டி சட்டை மற்றும் முழு மேக்கப்புடன் சாயங்காலமே தயார் செய்யப்பட்டேன். அம்மா அஜந்தாவுக்கு தலையெல்லாம் பவுடர் கொட்டப்பட்டு இன்ஸ்டன்ட் கிளவியானாள். கடைசிக்காட்சியில் வரும் ரத்தத்திற்காக சிவப்பு மை பாட்டில் தயாராய் இருந்தது. வசனத்தை ஆரம்பித்திலிருந்து ஒருமுறை சொல்லிப்பார்த்தேன். திருப்தியாய் இருந்தது. மறந்து விட வாய்ப்பேயில்லை என தைரியம் வரும் வரை சொல்லிப்பார்த்தேன். பரமசிவம் சார் திடீரென வந்து திருநீர் பூசி விட்டார். "அதிகமா தண்ணி குடிக்காத...அப்புறம் மேடைல ஏறுனதுக்குப்புறம் ஒன்னுக்கு வரும்..."

"சரி சார்"

"நிமிந்து நின்னு பேசணும்..கூன் போட்டுட்டு கெளவி மாதிரி நிக்கக் கூடாது"

"சரி சார்"

மேடை ஏறினோம். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. திருப்பூர் குமரன் சாகும்போது மக்கள் கூட்டம் அமைதி காத்தது. கடைசியில் கொஞ்சமாய் கைத்தட்டல் கேட்டது. முடிந்து மேடையிலிருந்து பின்பக்கமாய் கீழிறங்கினோம். பரமசிவம் சார் ஓடி வந்து கட்டிக்கொண்டார். தன் தொப்பையை வைத்து அமுக்கி தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். சரியாக மேடைக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தோம். எனக்கு வியர்த்துக் கொட்டியிருந்தது. தண்ணீர் குடித்தேன். பெரிதாய் கைத்தட்டல் சத்தம் கேட்டது.

"ரங்கீலா ஆரம்பிச்சிட்டாங்க போல...சரி கெளம்புறேன்" என பரமசிவன் சார் தன் பாக்கெட்டுக்குள் கை விட்டு சைக்கிள் சாவி தேடினார்.

நான் அவரை கொஞ்சம் குழப்பமாய் பார்த்தேன்.

"மூணாவது பரிசோ..ஆறுதல் பரிசோ தருவாங்க..அதுக்கெதுக்கு நா தேவுடு காக்கணும்...ம்ம்ம் ஒரு மாசமா குமரன் புண்ணியத்துல சந்தோசமா இருந்தேன்.."

அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"மத்த விஷயத்தலெல்லாம் ஜெயிச்சா தான் வெற்றி..பிடிச்ச விஷயத்தை பண்ணினாலே வெற்றி...அடுத்தவனுக்கு எது பிடிக்கும்? எது பண்ணினா கைத்தட்டுவாங்கனு தேடிட்டே அலையக்கூடாது... " சைக்கிளை மிதித்து கிளம்பினார். இருளை கிழித்து அந்த சைக்கிள் போய்க்கொண்டிருந்தது. வேகமாய் ஓடிப்போய் சாரின் சைக்கிளில் ஏறிக்கொண்டேன்.