சனி, 26 செப்டம்பர், 2026

அப்பாவின் டைரி






அன்புள்ள சஷ்டிகா,

                                    அன்று காலையும் வழக்கம் போல அலாரத்தின் முதல் கத்தலிலேயே எழுந்து விட்டேன். அலாரத்தை அனைத்து விட்டு அம்மாவை பார்த்தேன். எந்த சலனமுமில்லலாமல் தூங்கிக்கொண்டிந்தாள். ஒரு சாய்ந்து படுத்திருந்தாள். கை முழுக்க வளைகாப்புக்கு போடப்பட்ட வளையல்கள். அம்மா  கொஞ்சம் அசைந்தாலும் வீடெங்கும் ஜல்ஜல் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தது. சரியாக படுத்திருக்கிறாள் என உறுதிப் படுத்திக்கொண்டு எழுந்து வந்து என் காலைப்பணிகளை தொடக்கினேன்.  

  டீ கொதித்துக்கொண்டிருக்கும் வரை செய்திகள் கேட்டுக்கொண்டிருந்தேன். அம்மா ஜல்ஜல்  என  எழுந்து ஹாலுக்கு வந்தாள்.  என் முகத்தை சில நொடிகள் பார்த்து விட்டு ஷோபாவில் உட்கார்ந்தாள். 

 " என்ன.." என்றேன் 

"பயப்படாதீங்க.." 

அம்மா பெருசாய் பதறமாட்டாள். "பூகம்பம் வந்திருச்சு..வாம்மா ஓடலாம்" னு சொன்னாக்கூட "துணி காயுது..பத்து நிமிஷம் பொறுத்து போவோம்" என்பாள்.  அப்படியாப்பட்டவள் காலையில் எழுந்து வந்தவுடன் "பயப்படாதீங்க" என ஆரம்பிக்கிறாள் என்றால் அவள் அடுத்து சொல்லப்போகும் வார்த்தைகள் என்  இதயத்தை பஞ்சராக்கி ,எனக்குள் பயப்பந்துகளை ஓடவிடப்போகிறதை உணர்ந்து தயாரானேன்.

"என்ன". இந்தமுறை 'என்ன'வில் சத்தத்தை கூட்டியிருந்தேன். 

"நைட் ரெண்டு மணி போல லைட்டா மேல் வயிறு வலிச்சது..அப்புறம் ஒரு அரை மணி நேரத்துல நின்றுச்சு.. டாக்டர் கூட சொன்னாங்கள்ல ஒரு வாரம் முன்னாடி கூட  மொதல்ல Fake  pain வரும்னு..அதுவா இருக்கும்னு நெனைக்கிறேன்.." 

பிரசவ தேதிக்கு இன்னும் ஒரு வாரம் இருந்தது. வீட்டில் பெரியவர்களுக்கு விசா கிடைக்கவில்லை. ஒரு சில நண்பர்களை தவிர பக்கத்தில் யாருமில்லை. எனக்கு நியாயமாய் பதட்டம் வந்திருக்க வேண்டும். ஆனால் சந்தோசமாய் இருந்தது. கடவுள் வாசலில்  நின்று "உள்ள வரலாமா "  என கேட்பது போல இருந்தது. 

முதல்நாளே  ஆஸ்பத்திரிக்கு தேவையான பொருட்களை ஒரு பெட்டியில் எடுத்து காரில் வைத்திருந்தேன். மூன்று முறை ஆஸ்பத்திரிக்கு காரில் போய் பார்த்து..எந்த பில்டிங்கில் அட்மிட்  ஆகணும்..பார்க்கிங் எங்கே...ஆஸ்பத்திரி வழிமுறைகள் என்னவென்றெல்லாம் கேட்டு வைத்திருந்தேன். வரப்போகும் அந்த ஒரு நாளை  கடந்த முப்பது நாட்களாக மனதிற்குள் வாழ்ந்து கொண்டே இருக்கிறேன்.

அம்மாவை திரும்பிப்பார்த்து "எதுக்கும் செயின்னலாம் கழட்டி பத்திரமா உள்ள வச்சிரு..இந்தியால யாருக்கும் இப்போ எதுவும் சொல்ல வேண்டாம்.. இன்னைக்கு போற மாதிரி இருந்தா உன்னோட பர்ஸ மறக்காம என்கிட்ட கொடுத்துரு.."  என்றேன்.

பதில் பேசாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். உப்பிய வயிற்றில் கை வைத்து தடவிய படி இருந்தாள்.

  "என்னம்மா.." 

  "மொதல்ல டீய குடிப்போமா" என்றாள்.

நீ  "உச்"சுக்கொட்டிய சத்தம் எனக்கு மட்டும் கேட்டது.

-------------------------------------------------------------------------------------------------------------


காரை துவக்கிய பின் அம்மாவை ஒரு முறை பார்த்துக்கொண்டேன். அவள் கணக்கு பரிட்சையில் தியரங்களை மறந்த மாணவி போல உட்கார்ந்திருந்தாள். கடந்த சில மாதங்களில் இணையத்தில் பிரசவம் குறித்து கிடைப்பதையெல்லாம் படித்திருக்கிறாள். பிரசவத்தின் போது இவள்  டாக்டருக்கு எதுவும் புத்திமதி சொல்லிவிடக்கூடாது என வேண்டிக்கொண்டேன். காலையிலிருந்து ரெண்டு மூன்று முறை வலி வந்து போனதால்.."எதுக்கும் ஆஸ்பத்திரிக்கு போயிருவோம்" என தீர்மானம் நிறைவேற்றினோம்.

"காலைல பத்து மணிக்கு வலிச்சது ..அடி வயித்துல..சுள்ளுனு இருந்துச்சு..பத்து செகண்ட்ல நின்றுச்சு.. Sure ஆ fake pain தான்..இன்னைக்கு கிடையாதுன்னு தோணுது.."

அவளை திரும்பி பார்த்தேன்.காலையிலிருந்து இந்த "Fake pain" என்கிற வார்த்தையை பலமுறை கேட்டு விட்டேன். எனக்கே லைட்டாய் பிரசவ வலி வருவது போல இருந்தது.

"விடும்மா.. அவய்ங்க பாத்துட்டு சொல்லட்டும்...பத்து தடவ கூட திரும்ப திரும்ப போவோம்..என்னா வந்துச்சு.."

வண்டி அதுக்குள்ளேயும்  'Honor health Medical Center' வளாகத்துக்குள் நுழைந்திருந்தது. அம்மாவை இறக்கி விட்டுட்டு ,வண்டியை பார்க் செய்து விட்டு வேகமாய் வந்தேன். அரிசோனா வெயில் வீரியமாய் வறுத்துக்கொண்டிருந்தது. நான் போய் விவரங்களை செவிலியர்களிடம் விளக்கி சொன்னேன். இருக்கைகளை காட்டி "அமருங்கள்" என்றார்கள்.நானும் அம்மாவும் அமர்ந்து கொண்டோம். தோளில் சாய்ந்து கொண்டாள்.

"ஒன்னுமில்ல ..கொஞ்சம் சுத்தி பாரு..ஆஸ்பத்திரி மாதிரியா இருக்கு..ஏதோ ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்கு.."  

என்னை நிமிர்ந்து ஒரு முறை பார்த்தாள். அதுக்கு 'நீ மொத தைரியமா இரு ராசா'   என அர்த்தம். அதற்குள் ஒரு நர்ஸ் வந்தாள்.

அம்மாவை பார்த்து "ஆர் யூ முட்ட்டு பார..?"  மிச்சப்பேரையாவது காப்பாத்துவோம் என்று வேகமாய் "ஆமாம்" என்றேன். வாங்க "டைலேசன் செக் பண்ணுவோம்.." என எங்களை கூட்டிக்கொண்டு போனாள்.  அந்த அறை முழுக்க மருத்துவ உபகரணங்கள் இருந்தது. அம்மாவிற்கு உடை மாற்றி , பற்பல வயர்களை வயிற்றிலும் கையிலும் சொருகினார்கள். மாட்டிக்கொண்டிருக்கும் போதே அம்மாவுக்கு வலி வந்தது. முதல் முறையாய் முகத்தில் வலியை காண்பித்தாள். உதடுகளை உள்ளே மடக்கி கண்களை சுருக்கினாள். திரையில் ஓடும் கோடுகள் சிறு சிறு மலைக்குன்றுகளை வரைந்தது. நர்ஸ்கள் அதை கூர்ந்து கவனித்தார்கள்.

கொஞ்ச நேர பரிசோதனைகளுக்கு பிறகு நர்ஸ் என்னிடம் வந்து "இன்னும் டைம் இருக்கு..ஒரு வேல ரெண்டு,மூனு  நாள் கூட ஆகலாம். கொஞ்சம் வெயிட் பண்ணி பாப்போம். அப்புறம் வீட்டுக்கு போலாமான்னு பாத்துட்டு சொல்றோம்" 

தலையாட்டினேன். அம்மா பக்கத்தில் வந்து அமர்ந்து  கைகளை பிடித்துக்கொண்டேன். அத்தனை வலியிலும் selfie எடுக்க சொன்னாள்.செய்தேன்.

அடுத்த அரை மணி நேரத்தில் அம்மாவுக்கு வலி அடிக்கடி வந்தது. என் கைகளை பிடித்தபடியே இருந்தாள். நர்ஸ்கள் அடிக்கடி ரூமுக்கு வந்து கணினி திரையை பார்த்துவிட்டு சென்றார்கள். நான் எழுந்து கேள்வி கேட்க போகும் போது "ஓகே தான்..  பதறாதீங்க " என்றார்கள். இந்த அமெரிக்காவில் ஒரு மனிதன் நிம்மதியாய் பதறக்கூட முடிவதில்லை.கொஞ்ச நேரத்தில் டாக்டர் அனிதா பெர்னார்ட் வந்து தோளில் தட்டினார்.

"என்னப்பா..உம்பொண்ணு இன்னைக்கே வரணும்னு அடம்பிடிக்கிறா போல"

நான் சிரித்தேன். கொஞ்ச நேரம் அம்மாவை செக் செய்துவிட்டு மீண்டும் என்னிடம் வந்தார்.

"ஆறு மணிக்கு ஆப்பரேசன் தியேட்டர் போயிடலாம்..நர்ஸ் மற்ற விவரம் சொல்லுவாங்க.."

 மேற்படி நர்ஸ் என்னிடம் வந்து ஒரு பத்து நிமிடம் பேசினார். பெரும்பாலும் எனக்கு "கொய்ங்.." என்றே கேட்டது. கடைசியில் போகும்போது "உள்ளே உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச மியூசிக் ப்ளே பண்ணனும்னா பண்ணுவோம்..It helps both of  you to relax ..நீங்க யூ டிட்யூப் லிங்க் அனுப்புங்க" என்றாள். வேண்டாமென சொல்ல நினைத்தேன். பிறகு யோசித்துவிட்டு 'கந்தசஷ்டி' கவசத்தின் லிங்க்கை அனுப்பினேன்.  

அம்மா முழுமையாய் ஆஸ்பத்திரி உடுப்புக்கு மாறி இருந்தாள். "நல்லா சாமி கும்பிட்டுக்கோங்க" . தலையாட்டினேன். மனதிற்குள் முருகனுக்கு ஒரு missed call விட்டு அவரை அலெர்ட் செய்தேன். கிளம்பும் முன் அம்மாவிற்கு நெற்றியிலும்,வயிற்றிலும் முத்தமிட்டேன். நான் எப்போதோ எழுதிய ஒரு கவிதை எனக்கு நியாபகம் வந்தது.

           "இனி எந்த குழந்தைக்கும் முத்தம் கொடுப்பதில்லை 

             இப்போதே சேர்த்து வைக்கிறேன் - இன்னும்

             பிறக்காத என் மகளுக்கு!!!"

---------------------------------------------------------------------------------------------------------------------

சில நாட்கள் அதன் நெற்றியில் "பண்டிகை" என்று போட்டுக்கொண்டு பிறக்காது. திடீரென காலண்டரில் இருந்து தாவி வந்து நம்மை கட்டிக்கொள்ளும். எங்களுக்கும் அந்த நாள் அப்படித்தான்.

ஆபரேஷன் தியேட்டரில் அம்மாவின் தலைமாட்டில் நின்று கொண்டிருந்தேன். அம்மா அனஸ்தீசியாவில் இருந்தாள். அவளுக்கு வலி தெரிந்திருக்காது.நல்லது. எனக்கு என் இதயத்தை வைத்து யாரோ பாஸ்கெட்பால் விளையாடுவது போல இருந்தது. நல்ல வேளையாய் டாக்டரின் குரல் வந்தது.

  "டாடி இங்க வாங்க..உங்க குட்டி பாப்பா வந்துட்டாங்க.." 

ஒரு எட்டு வைத்தேன். உன் அழுகைச்சத்தம் கேட்டது. உடல் சிலிர்த்து..உயிர் உருகி..அழுதுகொண்டே சிரிக்கிறேன். எதை அதிகமாய் செய்தேன் என உறுதியாய் தெரியவில்லை. பக்கத்திலிருந்த நர்ஸ் முதுகில் தட்டி "தண்ணீர் வேண்டுமா.." என்றார். வேண்டாமென தலையாட்டினேன். உன்னை டாக்டர் அனிதா கையில் ஏந்தியிருந்தார். ஏசுநாதர் கையில் இருக்கும் அழகிய ஆட்டுக்குட்டி போல இருந்தாய்.

 "சிவா..இந்தாங்க தொப்பிள் கொடிய கட் பண்ணுங்க"  கையில் கத்திரியை கொடுத்தார். எனக்கு கை நடுங்கியது. "பாப்பாவுக்கு வலிக்காது..வேமா பண்ணுங்க.."  என்றார். கவனமாய் செய்தேன். "இந்தாங்க..பாப்பாவை வாங்குங்க.." என உன்னை என் பக்கம் நீட்டினார். டாக்டர் அனிதாவின் காலை தொட்டு கும்பிட்டுவிட்டு உன்னை வாங்கினேன். டாக்டர் குழப்பமாய் என்னை பார்த்தார்.பின்னொரு நாளில் அவரிடம் அதை விளக்கினேன்.

உன்னை கையில் வாங்கிய அந்த நிமிடம் இன்றும் என் மூளைக்குள் பொக்கிஷமாய் உறைந்து இருக்கிறது. உன்னை நான் தூக்கினேனா..என்னை நீ தூக்கியிருந்தாயா வென தெரியாதது அந்த தருணம். அவ்வளவு சந்தோசத்தை என் வாழ்க்கையில் நான் அனுபவித்ததே இல்லை. கண்களை இடது பக்கமாய் திருப்பி நீ என்னை பார்த்த முதல் பார்வையை நான் என்றும்  மறக்க மாட்டேன். ஒரு மனுஷனின் கடைசி தருணத்தில் அவனின் வாழ்க்கையின் Highlights சில வினாடிகள் அவனுக்கு மனக்கண்ணில் காட்டப்படுமாம். எனக்கான நேரத்தில் நான் கடவுளிடம் "வேறெதுவும் வேணாம்..என் சஷ்டி குட்டிய கைல வாங்குனத மட்டும் திரும்ப திரும்ப காட்டுங்க..அது போதும்" என்பேன் 

 கிளம்பும்போது நர்ஸ் என் பக்கத்தில் வந்து "நீங்க சொன்ன ம்யூசிக்க போட முடில..வேலைல மறந்துட்டேன்..சாரி " என்றாள். கந்தசஷ்டியை சொல்கிறாள் என யூகித்தேன்.

"அப்படியா..எனக்கு கேட்டுச்சே.. "என்றேன். அவள் குழப்பமாய் முன் நடந்தாள்.


கருத்துகள் இல்லை: