ஞாயிறு, 27 ஜூலை, 2025

கடவுளின் பள்ளத்தாக்கு- மாய ஊர்தி

அலுவலகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். இடது ஓரத்தில் இருந்த மரத்தின் நிழல் என்  முகத்தில் விழுந்து அந்த சூடான மாலையை கொஞ்சம் சாந்தப்படுத்திக்கொண்டிருந்தது. லாபியில் செக்கியூரிட்டி ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தார்.

 " நம் பள்ளத்தாக்கில் இன்று வெயிலின்  தாக்கம் அதிகமாக இருக்கும் ..மாலை 4 மணி முதல் 7 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.."  

அரிசோனா மாகாணத்தை இந்த ஊர்க்காரர்கள் பள்ளத்தாக்கு (Valley) என்றே அழைக்கிறார்கள். மலைகளின் கீழே அமைந்திருப்பதால் அப்பெயர் என அறிகிறேன். ஜூன்,ஜூலைகளில் வெயில் வெளுத்து வாங்கும். மற்ற மாதங்களில் இயற்கை அன்னை நம்மை சங்கடப்படாமல் பார்த்துக்கொள்வாள். அமெரிக்காவின் கிழக்கு  மாகாணங்களை போல குளிர் காலங்கள் இங்கே கொடூரமாய் இருக்காது.  கொஞ்ச நேரத்தில் பென் மட்டும் வெளியில் வந்தான். என்னை பார்த்து அளவாய் சிரித்துவிட்டு மொபைலை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தான். பெரும்பாலும் அலுவலகவாசிகளை  "அலுவலக நண்பர்கள்" என கூறிக்கொள்வது நாகரீகம் கருதி என்றே நினைக்கிறேன். அலுவலகத்தின் தொடர்பு அறுந்து போகும் போது அவர்களும் இயல்பாய் மறைந்து போவார்கள். நானும் பென்னும் அப்படியாப்பட்ட அலுவலக நண்பர்கள் தான். நான் அவன் பக்கத்தில் போனேன்.

"பசிக்குது பென் .. நாம வேணும்னா முன்னாடி போயிரலாமா" 



எங்கள் டீமின் சார்பில் ஒரு ஹோட்டலில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.  எப்போதும் நாலைந்து பேராய் வெளியே வருவார்கள், ஒரு காரில் ஏறி செல்வோம். அன்னைக்கென்று பார்த்து எல்லா பக்கிகளும் கண்டபடி கட்சிப்பணி செய்து கொண்டிருந்தார்கள். என் வயிறு, பசி காரணமாய் ஏற்கனவே என்னை கடிந்து கொண்டு வினோதமான சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது.

"போலாமே.." என்னை பார்க்காமல் போனை பார்த்தபடியே பேசினான்.

"நா போய் என் வண்டிய எடுத்துட்டு வந்துடறேன்" 

"ஷிவ் ..இருங்க "வேமோ " புக் பண்ணிருக்கேன்..அதுல போயிடலாம் "

அவன் வேமோ (WAYMO ) என சொன்னதும் 'ஏழாம் அறிவு' படத்தில் போதி தர்மரை குறிப்பிடும் போது  "தாமூஊஊஊஊ" என சத்தம் குடுத்து ஒரு பின்னணி இசை வருமே அது என் தலைக்குள் ஓடியது. வேமோ (WAYMO ) எனப்படுவது  செயற்கை நுண்ணறிவால்  ஓட்டுநர் இல்லாமல் தானாய் இயங்கும் ரோபோ கார். தற்சமயம் அமெரிக்காவில் இரண்டு மூன்று நகரங்களில் சேவையை தொடங்கி இருக்கிறார்கள்.  ஒரு வருடமாகவே  இந்த கார் பீனிக்ஸ் நகரில் ஓடிக்கொண்டிருந்தாலும் நான் ஏறியதில்லை. மனுஷன் வண்டி ஓட்டுனாலே ரோட்டுல ஆயிரம் பிரச்சனை வருது, இதுல "இதுகளை" நம்பி காரில் ஏற என் பரிசுத்த ஆவி ஒத்துக்கொள்ளவில்லை. 

நான் ஒருமாதிரியாய் விழிப்பதை பார்த்து "ஓ ..நீங்க போனதில்லையா It will be fun" என்றான். கொஞ்ச காலமாகவே  நண்பர்கள் இந்த கார்களில் இருந்தபடி புகைப்படங்களை சுட்டு தள்ளி.. இன்ஸ்டாகளில் பதிவிட்டு தாங்கள் ட்ரெண்டில் இருப்பதாய் காட்டிக்கொண்டிருந்தார்கள்.  "சரி போய்தான் பார்ப்போமே " என என் மனதும் கிளர்ச்சியானது.  சரியாய் பத்து நிமிடத்தில் waymo கார் எங்களை நோக்கி வந்தது. கார் பெரிய வித்யாசமாகவெல்லாம் இருக்காது. அதன் தலையில் ஒரு கொண்டை போன்ற சென்சார் ஒன்று சுத்திக்கொண்டே இருக்கிறது. அந்த சென்சாரை வைத்து மேப்புகளை மேம்படுத்தி தன்  பாதைகளை தீர்மானிக்கிறது. வண்டியின் எல்லா மூலைகளில் கேமராக்கள் இருக்கிறது. வெள்ளை நிறத்தில் தேர் போல மெதுவாய் "வேமோ" எங்கள் பக்கத்தில் வந்தது. காரின் முன் சீட்டில் யாருமில்லாமல் ஸ்டேரிங் அதுவாய் திரும்பி லாவகமாய் எங்கள் பக்கத்தில் வந்து நின்றதை பார்த்து எச்சில் விழுங்கிக்கொண்டேன்.

"அடுத்து" என்பது போல நான் பென்னை பார்த்தேன். அவன் என் பக்கத்தில் வந்து அவன் மொபைலில் இருந்த ஆப்பை காட்டினான். அதில் "அன்லாக் " என்கிற பொத்தான் துருத்திக்கொண்டு தெரிந்தது. "இப்ப இத அமுக்கனும் .." என சொல்லி அதை அமுக்கினான். காரின் கதவு திறந்து கொண்டது. 

" மொத தடவ வரீங்க..பரவால்ல நீங்க முன்னாடி ஏறிக்கோங்க .."  என சொல்லிக்கொண்டே பென் பின் சீட்டில் ஏறிக்கொண்டான். "இது சலுகையா..தண்டனையா " என என்னை அவன் யோசிக்க கூட விடவில்லை. நான் முன் சீட்டில் ஏறிக்கொண்டேன். ஒரு இயந்திரக்குரல் சீட் பெல்ட் போடச்சொல்லியது, பாஸ்கோட் கேட்டது..போகும் முகவரி சரி பார்க்க சொல்லியது.எல்லா சம்பிரதாயங்களையும் முடித்தவுடன் வண்டி நகரத்தொடங்கியது. பத்து அடி தூரத்தில் இருந்த ஒரு இடது வளைவில் "இண்டிகேட்டர்' போட்டு அழகாய் திரும்பியது. எனக்கு நான் சின்ன வயதில் பார்த்த "பழி வாங்கும் கார்" என்ற பழைய படம் ஞாபகம் வந்தது.




இரண்டே நிமிடத்தில் மெயின் ரோட்டில் இறங்கி மற்ற மனுசப்பயக ஓட்டும் கார்களுடன் கலந்தது. கொஞ்சம் கூட பிசுறு தட்டாமல் ஒரே வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. பயம்..ஆச்சர்யம் எல்லாம் கொஞ்சம் மட்டுப்பட்டு மனது ஆசுவாசமாய் இருந்தது. டெஸ்லா கூட இந்த ரோபோ டாக்சி தொழிலில் இறங்கப்போவதாய் படித்திருந்தேன். உலகம் முழுக்க கொஞ்ச கொஞ்சமாய் இவை இறங்கப்போகிறது. "இன்னொரு இருநூறு கூட கொடுத்தா வரேன் " என அடம்பிடிக்காது என்பதால் நம்ம ஊரிலும் வேகமாக களம் காணக்கூடும். என்ன..கொஞ்சம் வண்டி எசகு பிசகாக ஓடினால்.. வேகமாக போய் ஓட்டுனரை திட்டுவோம். இதில் அது முடியாதது ஒரு சங்கடம். இப்போது நெடுஞ்சாலையை அடைந்து விட்டிருந்தோம். வண்டி வேகத்தை கூட்டியது. சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்.  சாலை விதிகளையெல்லாம் மதித்து ..ரொம்பவும் கவனமாக வண்டி ஓட்டும்  ஒரு ஆசாமி வண்டி ஓட்டுவது போல இருந்தது. பென் திடீரென உயிர்ப்பெற்று என்னிடம் பேசத்தொடங்கினான்.

"எப்படிருக்கு ஷிவ்...ரொம்ப ஸ்மூத்தா திரும்புதுல ..எப்பிடி முன்னாடி போற வண்டிக்கு ஸ்பேஸ் கொடுத்து தொடருது பாருங்க..."   

"அதெல்லாம் சரி ..ஒரு வேல இந்த வண்டி எங்கேயாச்சும் இடிச்சி ஏதாவது ஆகிருச்சுனா ..யார அரெஸ்ட் பண்ணுவானுங்க.. கம்பெனி சி.ஈ.ஓ வையா? இல்ல கோட்  எழுதுன டெவலப்பர்களையா?"

பென் ஒரு மாதிரி முழித்தான். இது மாதிரி  நார வாய்க்கேள்விகளை என்கிட்ட ஏன்டா கேக்குற? என்பது போல இருந்தது.

"சான் பிரான்சிஸ்கோல இந்த மாதிரி ஏதோ நடந்திருக்கு ஆனா அத லீகலா எப்படி டீல் பண்ணுவாங்கன்னு தெரில .." . சீரியஸாய் பதில் சொன்னான்.

"ம்ம்.. தப்பா கோட் எழுதுனவுங்கெல்லாரையும்  புடிச்சு ஜெயில்ல போடுவாங்கன்னா ..எனக்கெல்லாம் ரெட்டை ஆயுள் தண்டனை கிடைக்கும்.."

கேட்டுவிட்டு பென் சிரித்தான். "நான்லாம் அடுத்த ஜென்மத்துலயும் ஜெயில்ல தான் பொறக்கணும்".  ரெண்டு பேரும் வாய்விட்டு சிரித்தோம். 

ஜன்னல் வழியாய் பார்த்தேன்... எங்கும் மலைகள். அதன் மேலே வெயில் பட்டு மஞ்சள் நிறத்தில் மின்னிக்கொண்டு இருந்தது. காரின் திரையில் பார்த்தேன் ஹோட்டலை அடைய இன்னும் பனிரெண்டு நிமிடங்கள் இருப்பதாய் காட்டியது. இப்படி ஒரு காரில் போவேன் என யாராவுது இரண்டு வருடம் முன்பு சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க மாட்டேன். சயின்ஸ் பிக்சன் படங்களில் வந்த பீஸ்கள் எல்லாம் இப்படி ரோட்டில் உலாத்தும் என நான் நினைத்து பார்க்கவில்லை. 

" எனக்கு தெரிஞ்சி ..இந்த வீட்டு வேலையெல்லாம் முழுக்க செய்ற மாதிரி ரோபோ தான் மார்க்கெட்ல மொத வரும்..என்ன மாதிரி டெய்லி பாத்திரம் கழுவி சாவுற எவனோ இந்நேரம் அத பண்ணிட்டு இருப்பான்"

 பென் சொல்வது வாஸ்தவம். இனி கூட்டுவது..துவைப்பது..சமைப்பது போன்ற தினசரி வீட்டு வேலைகளெல்லாம் கம்பியூட்டர் கோட்களாக மாற்றப்பட்டு மெஷின்களுக்குள் திணிக்கப்படும். டி.வி விளம்பரங்களில் சூர்யா..ஆர்யா போன்றவர்கள்  கோட் சூட் போட்டுக்கொண்டு "எடுத்துக்கோ..எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோனு" ரோபோக்களை   விற்றுக்கொண்டிருப்பார்கள்.மனிதர்கள் வீட்டில் எந்த வேலையுமில்லாமல் எதையாவது நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கலாம். காலையில் காபி கொடுக்கும்போது நம் இதயத்துடிப்பை கவனித்து "எஜமான்..இன்னைக்கு உங்களுக்கு அட்டாக் வர அதிக வாய்ப்பிருக்கு..ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணிட்டேன்..போய் அட்மிட் ஆகியிருங்க..அப்பல்லோவ மட்டும் தவிர்த்திருங்க.."னு  சொல்லலாம்.  நாமே நினைத்தாலும் இந்த செயற்கை நுண்ணறிவு சமாச்சாரங்களை தவிர்க்க முடியாது.  வேதாளம் போல நம் தோளில் ஏறிக்கொள்ளும். அதோடு வாழ பழகிக்கொள்வதே ஒரே வழி.



ஹோட்டலுக்கு பக்கத்தில் வந்து விட்டிருந்தோம்.  வாசலில் நிறைய கார்கள் நின்று கொண்டிருந்தது. நம்ம "வேமோ" பார்க்கிங்கிற்கு வகையான இடம் பார்த்துக்கொண்டிருந்தது.

"ஷிவ்..இந்த வாட்டி காரமில்லாம ஏதாவது ஆர்டர் பண்ணி கொடுங்கப்பா..போன தடவ சாப்பிட்ட மட்டன் பிரியாணி ரொம்ப பிரச்னை பண்ணிருச்சு"

நாங்கள் பெரும்பாலும் இந்திய ரெஸ்டாரண்ட்களில் தான் சாப்பிடுவோம்.  

"வாய்ப்பில்லையே..போன வாரம் காரம் கம்மியா தான இருந்துச்சு''

பென் காண்டானான். "யோவ் மனுஷங்களாயா நீங்க..சாப்பிடறப்ப விட ,டாய்லட் போறப்ப தான்யா எனக்கு ரொம்ப உறைச்சிச்சு ". நான் விழுந்து விழுந்து சிரித்தேன். வண்டி சரியாய் நின்றது. "வேமோ" எங்களை மரியாதையான வார்த்தைகளால்  இறங்கச்சொல்லியது.

"ஷிவ்..இப்போ தான் நமக்கு மரியாதை. ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்லிருக்காருல..மொத்த பூமியும் மெஷின்களின் கைக்கு போகும். மனித இனத்தின் அழிவு இந்த ஏ.ஐ களின் கையில் தானாம்.." 

இறங்குவதற்கு முன் காரின் பக்கம் திரும்பி "உங்களுக்கு அப்பிடி திட்டம் இருந்துச்சுனா என்னையும் உங்க கூட சேத்துக்கோங்க..எனக்கும் மனுஷங்கள பிடிக்காது " என்றேன் .

நாங்கள் இறங்கியபின் கார் சாவகாசமாய் கிளம்பியது . எதிர்காலங்கள் என்னத்தையெல்லாம் சுமந்து கொண்டு நமக்காக காத்திருக்கிறதோ என நினைக்கையில் பயமாக இருந்தது.




ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

ஒரு காங்கிரீட் கனவு



ஆட்டோ காமராஜர் பூங்காவை  கடந்து பத்திர ஆபீஸை நெருங்கிக் கொண்டிருந்தது. இடது பக்கம் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை  பார்த்தபடி வந்தேன்.அன்னை  பேக்கரியில் சூடாய் பப்ஸ் வாங்க கூட்டம் நின்றிருந்தது. ஒரு வேகத்தடை    மேட்டை ஏறி இறங்கியவுடன் ஆட்டோ  ஓரமாய் நின்றது. நானும் அம்மாவும் இறங்கினோம்.  ஆட்டோக்காரண்ணன்  " தம்பி..சித்ரா ஸ்டோர் தாண்டி நிக்குறேன்..முடிச்சிட்டு அந்த பக்கம் வந்துருங்க " என்றார். சரி என்பது போல தலையாட்டினேன். பத்திர ஆபீஸ் சுறுசுறுப்பாய் இருந்தது. நானும் அம்மாவும் ஒரு மர நிழலில் நின்று கொண்டோம். எல்லாம்   வேகமாய் முடிந்தால் நிம்மதியாய் இருக்கும் என நினைத்துக்கொண்டேன். கொஞ்ச நேரத்தில் சிதம்பரம் வந்தார்.      எங்களை பார்த்தவுடன் சிரித்தபடி அருகில் வந்தார்.

"வாங்க தம்பி..வந்து ரொம்ப நேரமாச்சா.."  

 "இல்லண்ணே.. இப்பதான் வந்தோம் "

"டீ  சாப்புடுறீங்களா.."

 வேண்டாமென ஒரு  மனதாய் தலையாட்டினோம்.  சில கேள்விகளுக்கு சில சூழ்நிலையில் என்ன பதில் கிடைக்கும் என தெரியும். இருந்தும் கேட்கப்படும். அது ஒரு நாகரீகம். சிதம்பரத்தின் முகம் சிரித்தபடி இருக்கும் அல்லது சிரிக்க தயாராய் இருக்கும். நெற்றியில் திருநீர்..வியர்வையில் மறைந்து கொண்டிருக்கும் சந்தனம் .. ஒரு கோல்டு கலர் வாட்ச் என பெரிய மனிதர் தோரணையில் இருப்பார். ரியல் எஸ்டேட் ஆசாமிகளுக்கே உரித்தான உடல்மொழிகள் அவருக்கு வாய்த்திருந்தது.  பத்திர ஆபிசில் இருக்கும் எல்லாருக்கும் அவரை தெரிந்திருந்தது. கோப்புகளை வாங்கி ஒரு டேபிளில் இருந்து இன்னொரு டேபிளுக்கு கொடுத்தார். நிறைய பேரை "சௌக்யமாண்ணே.." கேட்டார். கண்ணாடி போட்ட ஒரு அலுவலக   கிளெர்க்கிடம் காதோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தார். பிறகு எங்களை பார்த்தபடி அவரின் காதுக்கருகே போய்   தாழ்வான குரலில் பேசினார். எதுவும் பெருசாய் கேட்கவில்லை ஒரு வார்த்தையை தவிர.. "அந்த நீல கலர் வீடு ".

---------------------------------------------------------------------------------------------------------

பாதி கட்டிடத்திற்கு தண்ணீரடித்து முடித்திருந்தேன். வெறும் செங்கலாய்..கூடு போல இருக்கும் இந்த கட்டிடம் மூன்று மாதத்தில் வீடாக மாறப்போகிறதா என நம்பாமல் பார்த்துக்கொண்டிருப்பேன். லீவு நாட்களில் கட்டிடம் வந்து அங்கு   கொடுக்கப்படும் சில்லரை வேலைகளை நான் செய்ய வேண்டும். பெரும்பாலும் வேலை செய்பவர்களுக்கு டீ  வாங்கி   வந்து கொடுப்பேன். சிமெண்ட் மூட்டைகள் எடுக்கப்பட்டால் நோட்டில் வரவு வைத்து கொள்வேன். மாலைகளில் போனால்   கட்டடம் முழுக்க ரப்பர் ஓஸ் வைத்து தண்ணீர் அடிப்பேன். அப்பா பக்கத்தில் வந்து தலையில் தட்டி ஒரு சுவற்றின் ஓரத்தை  காட்டினார். அது ஈரம் படாமல் அனாமத்தாய் இருந்தது. திடீர் சுறுசுறுப்பு வந்து தண்ணீரை அதை குறி வைத்து       அடித்தேன்.   அப்பா  உள்ளே போய் ரூமில் வேலை செய்து கொண்டிருக்கிற எலக்ட்ரீசியன் சேகரிடம் பேச தொடங்கினார்.

"என்ன சேகர்..நல்ல சம்பாத்தியம் போல ..ரெண்டு நாளா ஆள காணோம்"

"ஏண்ணே..ரெண்டு நாள வயித்துக்கடுப்பு..தண்ணி குடிச்சாக்கூட கடுக்குது.."

"ஓ ..எங்க காட்டற.."

"மதுரை ரோட்டில சங்கர்னு இருக்கார்ல..ரெண்டு நாளைக்கு மாத்திர கொடுத்திருக்காரு..காரம் சாப்பிட வேணாம்டுருக்காப்ள..நானே ரெண்டு மாசமா தயிர் சோறு தான் திங்குறேன்.."

 "எதுக்குயா எங்கயோ பாக்குற..போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல சுப்ரமணிய ராஜா..நல்லா பாப்பாரு". சேகர் அண்ணன்   தலையாட்டினார். கொஞ்ச நேரம் ஏதேதோ பேசினார்கள்.

 "சாயங்காலம் டீ  முடிஞ்சிச்சாணே.."

"ஆறு ஆச்சுல்ல நீ மட்டும் அடி..."என அப்பா பாக்கெட்டில்  கை விட்டு  பைசாவை தேடினார். எனக்கு தெரியும் அடுத்து   என்ன நடக்குமென்று. சேகரண்ணனை ஜாக்கி ஜான் படங்களில் வருவது போல மனதிற்குள்ளேயே பறந்து போய்   எத்தினேன். அப்பா கூப்பிட்டார் ."தம்பி..கழுவி வச்சிருக்கிற தூக்குச்சட்டிய எடுத்திட்டு..முக்கு கடைல.." 

 --------------------------------------------------------------------------------------------------------------





 அன்று பத்திர ஆபிசில் கூட்டம் அதிகமாய் இருந்தது. நிறைய பெண்கள் பட்டுச்சேலையில் வந்திருந்தார்கள். அது ஏதோ நல்ல நாளாக இருக்க வேண்டும். நாங்கள் ஒரு மர பெஞ்சில் உட்கார்ந்து  எங்கள் முறைக்காக காத்திருந்தோம்.   ரிஜிஸ்திரார் அறைக்கு சிலர் உள்ளே போய் வெளியே வந்த வண்ணம் இருந்தனர். கதவு திறக்கும் போது ரிஜிஸ்திரார் தெரிந்தார். நீல கலர் சட்டையில் பெரிய உருவமாக இருந்தார். ஒரு முத்திரைத்தாளில் வேண்டியவற்றை ஷரத்துடன்   தெளிவாய் எழுதி இவரிடம் கையொப்பம் வாங்கினால் சம்பத்தப்பட்ட இடமோ..வீடோ ஒருவருக்கு சொந்தமாகி விடும்.   பூமியில் இருக்கும் ஒரு இடத்திற்கு உரிமையாளரை நிர்ணயிக்கும் சக்தி ஒரு மனிதனுக்கு இருக்குமாயின் அவன் கிட்டத்தட்ட கடவுள் தானே. எண்ணங்கள் என்னை மீறி ஓடிக்கொண்டிருந்தன. சோகத்தின் பிடியில் இருக்கும் மனம் மூச்சிரைக்க ஓடும். அது அடங்காது."ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு இடத்துல மாடு அது குடும்பத்தோட இருந்திருக்கும்...அத   கம்ப வச்சு வெரட்டி விட்டுட்டு நீ உன் குடும்பத்தோட புகுந்து அங்க வாழுவ..சில வருஷம் கழிச்சி நீ மாட்டுக்கு செஞ்சத   இன்னொரு மனுஷன் உனக்கு செய்வான்.. அவன 'அயோக்கியன்..ரவுடி' னு தூத்துவ.. வலியவன் செய்வதே நியாயம்..  அவன் போதிப்பதே அறம்". நல்ல வேளையாக மனதில் ஓடுவதெல்லாம் வெளியில் கேட்பதில்லை. 

"தம்பி டிரைவிங் லைசன்ஸ் இருக்கா" ..சிதம்பரம் தோளை உலுக்கினார்.

 "இல்லண்ணே..பேன் கார்டு இருக்கு ". பாக்கெட்டிலிருந்து எடுத்துக்கொடுத்தேன்.

 கொஞ்ச நேரத்தில் என்னையும் அம்மாவையும் உள்ளே கூப்பிட்டார்கள். நான் பாக்கெட்டில் பேனா இருக்கிறதா என   உறுதி படுத்திக்கொண்டேன். உள்ளே போனோம். அரசு அலுவலகங்களுக்கே உரிய வாடை அங்கிருந்தது.  நூலகம்..   வட்டார போக்குவரத்து அலுவலகம் எல்லா இடங்களிலும் அந்த "அரசுவாடை"   வியாபித்திருக்கும். சிதம்பரத்தின்   அசிஸ்டன்ட் என்னிடம் வந்து "ஒரிஜினல் எடுய்யா..அந்தம்மாட்ட காட்டனும்" என்றார். கையிலிருந்த பைஃலை நீட்டினேன். அதில் அப்பாவின் இறப்பு சான்றிதழ் துருத்திக்கொண்டிருந்தது.

-----------------------------------------------------------------------------------------------------------

வீடு கிட்டத்தட்ட ரெடியாகியிருந்தது. சில மணி நேர ஒப்பனையில் தயாராகி விடும் மணப்பெண்ணை போல   காத்திருந்தது. பெயிண்ட் தவிர முக்கியமான எல்லா வேலையும் முடிந்து விட்டது. நான்  கட்டிடத்திற்கு அப்போது தான்   வந்தேன். வழக்கம் போல வேகமாய் மாடிக்குப்போய் என் ரூமை பார்த்தேன். கச்சிதமாய் இருந்தது. எந்த இடத்தில் சச்சின் போஸ்டர் ஒட்ட வேண்டும். கட்டில் எந்த பக்கம் போட்டால் பேய் பயமில்லாமல் தூங்கலாம் என கணக்குப்போட்டேன். போய் பாத்ரூமை திறந்தேன். வெஸ்டர்ன் டாய்லெட் அமைக்கப்பட்டிருந்தது. எரிச்சலாய் இருந்தது. அப்பா வந்தார்.

 "என்ன தம்பி..எப்பவும் உன் ரூம மட்டும் வந்து தனியா ரசிக்கிறியே..." .

"ப்பா.."

" ம்ம்ம் "

" என் ரூமுக்கு மட்டுமாவது ப்ளூ கலர் அடிக்கலாம் பா.."

"நீ எத்தனாவது படிக்கிற இப்போ "

 "எட்டாவது "

 "உன் கல்யாணத்தப்போ ஒருக்க பெயிண்ட் அடிப்போம். அப்போ உன் இஷ்டத்துக்கு அடிச்சிக்கோ"

"அப்பெதுக்கு நா உங்க கிட்ட கேக்குறேன்..".

 வெளியே நடப்பது போல நடந்து திரும்பவும் உள்ளே  வந்து என் டிக்கியில் எத்தி விட்டு வேகமாய் ஓடினார். ஓடிப்போய்    அடிப்பதற்காக  தாவி அவர் முதுகில் ஏறினேன்.

---------------------------------------------------------------------------------------------------------------


கையெழுத்தை போட்டு முடித்திருந்தோம். பெருவிரலை எடுத்து  ஒரு கருப்பு மைக்குள் முக்கி  கை ரேகை வைத்தார்கள். சிதம்பரம் குஷி மூடில் இருந்தார். பக்கத்தில் இருப்பவர்களிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். ஒரே நாள் ஒரே சம்பவம் ஒருவருக்கு பெருவலியாகவும் மற்றொருவருக்கு பேரின்பமாகவும் இருக்கிறது. வீட்டை ஒரு வணிகப்பொருளாய்   பார்க்கும் பட்சத்தில் யாரும் தவறு செய்யவில்லை. எல்லோரும் அவரவர் வேலையை தான் பார்க்கிறார்கள். சில பேங்க் ஆசாமிகள் தங்களுக்குள் கைகுலுக்கிக்கொண்டு சிதம்பரத்திடமும் கை குலுக்கினார்கள்.  ஒருத்தர் பக்கத்தில் வந்து  "எவ்வளவுக்கு கிரயம் முடிச்சீங்க.." என்றார். அவர் பேசுவது கேட்கிறது. ஆனால் உடல் முழுதும் ஒரு மாதிரி சோகை   பிடித்தது போல உணர்வில்லாமல் திம்மென்று இருந்தது. அப்பா இன்னொருமுறை இறந்தது போல இருந்தது.

 

நானும் அம்மாவும் அமைதியாய் நடந்து சித்ரா ஸ்டோர் பக்கத்தில் எங்களுக்காக காத்திருந்த ஆட்டோவில் ஏறினோம். வீடு வரை பேசிக்கொள்ளவேயில்லை. வீட்டிற்குள் போனவுடன் ரூமில் படுத்து தூங்கவேண்டும் போலிருந்தது. போய்ப்படுத்துக்கொண்டேன். வெளியில் ஜன்னல் வழியாய் வானத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். "இந்த வீட்டில் வேறு யாரோ குடி வருவார்கள்..வீட்டின் வணிக மதிப்பு உயரும்..அவர்கள் புதிய நினைவுகளை உருவாக்கிக்கொள்வார்கள்.. இதே வீடு அவர்களின் வாழ்க்கையில் முக்கியமானதாய் மாறும். ஆனால் அவர்களுக்குத்தெரியாது   வீட்டின் முதல் மாடிக்கு செல்லும் படிகள் ஏன் நிலைவாசலுக்கு முன்னமே இருக்கிறதென்று..சமயலறையின் மேடை ஏன் உயரம் கம்மியாக இருக்கிறதென்று.. இந்த வீட்டின் ஒவ்வொரு அணுவிலும் நாங்கள் கலந்தே இருக்கிறோம். எத்தனை   பத்திரங்கள் எழுதினாலும்..இதன் மதிப்பு கோடிகளில் போனாலும்.. இந்த வீடு எப்போதும் "எங்கள் வீடு" தான்”. அப்படியே மானசீகமாய் மொத்த வீட்டையும் கட்டிக்கொண்டு தூங்கிப்போனேன்.

                                                          ---------------------------------------------------------------