திங்கள், 8 பிப்ரவரி, 2010

ப...த.. நி.. ச...






“Music and rhythm find their way into the secret places of the soul”
- பிளாடோ


நம் தமிழ்கூறும் நல்லுலகம் தமிழை விட ஆங்கிலம் நன்கு அறியும் என்பதால் மேலே குறிப்பிட்டுள்ள கிரேக்க பேரறிஞர் பிளாட்டோவின் வரிகளை தமிழ்படுத்த தேவையில்லை. இசை நம் ஆன்மாவில் கலக்கும் அரு மருந்து என்று சொன்னால் மிகையில்லை தான். அது சரி காதை தவிர இசை கேட்க வேறெந்த மூலதனமும் உனக்கில்லையே ?? நீயென்ன இசைக்கட்டுரை எழுத போகிறாய் என சிலர் வழக்காடலாம். இது வெறும் தமிழ் திரையிசை பற்றிய பதிவு என்பதால் உங்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.



'யார் இளையராஜா??' என தமிழகத்தில் ஒருவர் கேட்ப்பாராயின், அவர் கடந்த 40 வருட காலம் எங்கோ 'கோமா' வில் இருந்திருக்கிறார் என்றே நாம் முடிவு கொள்ளலாம். ' நானும் இளைய ராஜாவின் ரசிகன் தானோ' என உங்களுக்கே உங்கள் மீது சந்தேகம் வருமாயின் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுய பரிசோதனை தேர்வை முயன்று பாருங்கள்...
  • மௌன ராகம் படத்தில் வரும் 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலின் ஆரம்பத்தில் எஸ்.பி.பி 'ஆ....' வென மெல்லிய குரலில் ஆரம்பிக்கையிலேயே உங்கள் தொலைக்காட்சியின் அல்லது வானொலியின் ஒலியை உயர்த்த முயற்சிக்கிறீர்களா??
  • 'சங்கீத மேகம்' பாடல் முதல் பட பாடல்களில் மோகன் தானே பாடியது போல் தலையை ஆட்டிக்கொண்டு பாடுகையில் நீங்களும் தலையாட்டி ரசிக்கிறீர்களா??
  • 'ஜனனி ஜனனி' என இளைய ராஜா தன் வெண்கலகுரலை காற்றில் பரப்புகையில் நீங்கள் மெய்ச்சிலுர்க்குறீர்களா??
மேலே சொன்னவற்றில் ஏதேனும் ஒன்றுக்காவுது ஆம் எனச்சொன்னீர்கள்என்றால் நீங்கள் ராஜாவின் இசை வெள்ளத்தில் கொஞ்சமாவுது குளித்துதிளைத்திருக்குறீர்கள் என்று அர்த்தம். எங்கோ பண்ணைப்புரத்திலிருந்து வந்துபார்ப்பனர்கள் மட்டுமே ஆள முடியுமென்று நினைத்துக்கொண்டிருந்தஇசையுலகில் சிம்மாசனமிட்டு அமர்ந்த ராஜாவை பாராட்டவில்லையென்றால்இசை தேவி நம்மை ஈட்டியில் குத்தினாலும் ஆச்சர்யமில்லை.
போட்டிக்கு யாருமில்லாததால் ஏன் இளையராஜா கூட ' ராஜா..எப்போதும் நான்இங்கு ராஜா' , 'ராகங்கள் தாளங்கள் கூட ராஜா உன் பேர் சொல்லும்' (வளையோசை பாடல்) என பாடல்களிலேயே 'பஞ்ச்' வைத்தார். அந்தகாலங்களில் ராஜா இசை சாம்ராஜ்யம் நடத்திய படங்களில் பாடல்களின் நடுவேராஜாவின் புகைப்படத்தை காண்பித்து பெருமைப்படுத்துவார்களாம். பாடல்களுடன் ராஜா முடித்துக்கொள்வதில்லை, பின்னணி இசையிலும் படத்தைதாங்கிப்பிடிப்பார். நாயகன் படத்தின் உச்சக்காட்சியில் அந்த சிறு குழந்தைகமலிடம் ,'நீங்க நல்லவரா?? கெட்டவரா?? என கேட்கையில் ராஜாவின் பின்னணிஇசையால் கமலுக்கு முன்பே நமக்கு அழுகை முட்டிக்கோண்டு வரும். பெரும்பாலான நேரங்களில் கருவிகளை விட நம் உணர்வுகளையே மீட்டினார்
ராஜா.


நாம் அடுத்து இரு பத்திகளை இசைப்புயலுக்கு ஒதுக்குவோம். பிளஸ் 2 வில்முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட என் கடின உழைப்பால் வென்றேன்என சொல்லிக்கொண்டிருக்க, இரண்டு 'Oscar' களை கையில் ஏந்திக்கொண்டு ' எல்லாப்புகழும் இறைவனுக்கே!!!' என சரணடைந்த ஏ.ஆர்.ரகுமானை தமிழனெனசொல்வதில் நாமும் பெருமை கொள்ளலாம். ரோஜாவில் அறிமுகமாகிஅதிலேயே தேசிய விருதும் வென்றவர். தொழில் நுட்ப ரீதியிலும் தமிழிசையைஉலகத்தரத்துக்கு கொண்டுபோனவர் ரகுமான்.ஆரம்ப காலங்களில், சாத்திரியசங்கீத வாசம் இவர் இசையில் துளியும் இல்லை என்றவர்களுக்கு 'என்னவளே' பாடல்(படம்:காதலன்) கொடுத்து சாந்தி படுத்தினார். கிட்டத்தட்டஇப்போதிருக்கும் பல முன்னணி பாடகர்கள் இவரால் அறிமுகபடுத்தப்பட்டவர்களே. இரவு நேரங்களிலே இசைக்கோர்ப்பு செய்வது இவரின்இயல்பு,இது இசை உலகில் சலசலப்பை ஏற்படுத்தினாலும் பிற்பாடு புரிந்துகொள்ளப்பட்டது. ரகுமானின் 'தாய் மண்ணே வணக்கம்' பாடல் எந்தஇந்தியனாலும் மறக்க முடியாது. இவரின் பெயரை வைத்துக்கொண்டு ஒருபடத்தை உலகின் எந்த மூலையிலும் வியாபாரம் செய்ய முடிகிறது. என் பதின்மவயதுகளில் ரகுமானின் பெயரை பச்சைகுத்திக்கொள்ளலாமா?? என்றுயோசிக்கும் அளவிற்கு ரகுமானின் அபிமானியாய் இருந்தேன்.




ஒரு பத்தி விரயமானாலும் பரவாயில்லை என இந்த பாடலை பற்றி சொல்லுவதுஎனக்கு தலையாய கடமையாய் படுகிறது. மின்சார கனவு படத்தில் வரும்வெண்ணிலவே..வெண்ணிலவே ' பாடல். இன்னும் இந்த பாடல்தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அணுகுண்டே போட்டாலும் ஆணிஅடித்தது போல் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன். பிரபுதேவாவின் நடனம், கஜோலின் கண்கள் , மிதமான ஒளிப்பதிவு என ரகுமானின் தங்கமான இசை மேல்ஏகப்பட்ட வைரக்கற்கள். அதுவும் 'எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன்யாரு...' என ஹரிஹரன் ஒரு இழுஇழுப்பாரே பார்க்கணும், அந்த இடத்தில் நான்எப்போதும் சொக்கிப்போவேன்.பிரபுதேவா பாடு என்பது போல் செய்கைசெய்தவுடன் கஜோல் பாடுவது (i mean வாயசைப்பது),
உணர்ச்சிகளை முகத்தில் காட்டிக்கொண்டே நடனமாடுவது என இருவரும்படத்தில் நடித்ததை விட இந்த பாடலில் நடித்தது அதிகம் என நினைக்கிறேன். தமிழ் சினிமா வரலாற்றில் மறக்கமுடியாத டூயட்களில் இதுவும் ஒன்றாகும். நறுமுகையே...(இருவர்), உயிரே...(பாம்பே),என் மேல் விழுந்த மழைத்துளியே..(மே மாதம்), பூங்காற்றிலே...(உயிரே), பச்சைக்கிளிகள் (இந்தியன்) போன்ற பாடல்கள் மூலம் இசைப்புயல் நமக்கு வசந்தத்தையும் வீசுவதுண்டு.

இது தான் எனக்கு எப்போவோ தெரியுமே என அலுத்துக்கொள்ளாதீர்கள். இனிமே தான் ஆட்டமே ஆரம்பமாகிறது. மேலே நினைவுகூறப்பட்ட இசை ஜாம்பவான்கள் கூட ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம் எந்த பாடல் மக்கள் மத்தியில் வெற்றிபெறும் என்பதே!!! இவர்களின் எத்தனையோ சிறப்பான பாடல்களுக்கு பாராட்டுக்கிடைக்காமல் போயிருக்கிறது. எந்த இசை நம்மை மயக்கும் என்பது நாமே அறியாததே....கீழே நான் கொடுத்துள்ள சில பாடல்கள் கிட்டத்தட்ட இந்த ரகம் தான். இவை படம் வந்த போதே மாபெரும் வெற்றி பெரும் என நம்பியிருந்தேன். ஆனால் இவை சுவடே தெரியாமல் காணாமல் போனது கொடுமை தான்.

i) உயிரிலே..எனது உயிரிலே(படம்:வேட்டையாடு..விளையாடு ...) : இந்த பாடல் இந்த படத்தில் இருக்கிறதா என்றே பலருக்கு தெரியாது. மிக மெதுவான பாடல். மொட்டை மாடியில் நட்சத்திரத்தை ரசிப்போருக்கு இந்தபாட்டு பார்சல். ஒளியோடு ரசித்தால் கண்களுக்கும் ரம்யம் தருவார் ரவி வர்மன். ஸ்ரீநிவாஸ், மகாலக்ஷ்மி ஐயர் பாடியது.

'
ii) மாலை நேரம் (ஆயிரத்தில் ஒருவன்) : இப்பாடல் ஓரளவு மக்கள் மத்தியில் பிரபலமானாலும், கிடைக்க வேண்டிய நியாமான பாராட்டு கிடைக்கவில்லை என்பேன். ஆண்ட்ரியாவின் அற்புத குரலில் வெளிவந்த சமீபத்திய பாடல் இது. இந்த பாடலை ஒரு வேளை 'Head Set' இல் கேட்டீர்களென்றால் காது கொஞ்ச நேரத்தில் பிசுபிசுக்கும். தேன் குரல் அது!!!! கொஞ்சம் மிகைப்படுத்த படுவது போல் தோன்றினாலும் ஒரு முறையாயினும் இப்பாடலை கேட்டவர்களுக்கு இந்த உண்மை புரியும்.

iii) ஒரு நாளில்...(புதுப்பேட்டை): யுவனுக்கு பாடத்தெரியுமா என கேட்பவர்கள் இந்த பாடலை கேட்டால் வட்டமாக வாய்பிளப்பார்கள். படத்தின் கதையே இந்த பாடலில் சொல்லப்பட்டிருக்கும். இந்த பாடல் படத்தில் வைக்கப்படவில்லை. இது படத்திற்கு இழப்போ இல்லையோ?? இசைக்கு பேரிழப்பே... முடிந்தால் தரவிறக்கி (அதாங்க Download) கேட்டுப்பாருங்கள்.

iv) முழு மதி உனது முகமாகும்..(ஜோதா அக்பர் (தமிழ்)): ஜோதா அக்பர் திரைப்படம் தமிழில் வெளியானது பலருக்கு தெரிவதில்லை. ஒரு முறை கேட்டவுடனேயே பாத்ரூமில் அடிக்கடி இந்த பாடலை முணுமுணுப்பீர்கள். மிகமிக சிறந்த பாடல். இளைஞர்கள் இந்த பாடலை தவிர்ப்பது நலம், ஏனெனில் இப்பாடல் நமக்கு காது வழியே காதலை புகுத்தும். இந்தப்பாடல் கணவர்கள் ஸ்பெஷல் ....அதுவும் திரையில் ஐஸ்வர்யா ராயும்,ஹ்ரித்திக் ரோஷனுக்கும் உள்ள 'chemistry' (வார்த்தை உபயம்:விஜய் t.v) இருக்கிறதே ..அடப்போங்க..எனக்கு வெக்கமா இருக்கு...

v) உன் சிரிப்பினில்(பச்சை கிளி முத்துச்சரம்): மயங்க வைக்கும் பாடல்...படம் வந்த புதிதில் பாடல் எதாவுது தொலைக்காட்சியில் வராதா என பார்த்துக்கொண்டிருப்பேன்...யாரோ உங்கள் காதில் ரகசியம் சொல்வது போல் போகும்...பாடலின் பின்னே வரும் 'டக் டக்..' என வரும் பீட்,பாயசத்தில் கிடக்கும் முந்திரிபருப்பு....முடிந்தால் கேட்டு இன்புறுங்கள்!!!!

இது ஒரு தனி மனித விருப்பு/வெறுப்பு சார்ந்த கட்டுரையாக தெரிந்தாலும், இதன் உள்நோக்கம் இசை மீதான நம் ஆர்வத்தை தூண்டுவதே.நல்ல இசையை ரசிப்பது ஒரு குழந்தையை கொஞ்சுவதற்கு சமமானதே. நம் உணர்வுகளை முடிவு செய்யும் மாபெரும் சக்தி இசைக்கு உண்டு.

பொதுவாய் தேவா காப்பி அடிக்கிறார் என்று ஒரு கருத்து உண்டு நாம் அவரின் பாடல் வரிகளையே காப்பி அடித்து இந்த கட்டுரையை முடிப்போம்...
இசையோடு வாழ்ந்தோம்..
இசையோடு வாழ்வோம்...
இசையாவோம்!!!!!!!!!!!!!!!!!!



திங்கள், 1 பிப்ரவரி, 2010

பா....




தாய்ப்பால்
தவிர ஒரு தந்தையின் பால் அன்பின் அடையாளங்கள் அனைத்தும் இருக்கத்தான்செய்கிறது.விளையாட்டுக்காரர்,பாசக்காரர், புரிந்துகொள்ளாதவர்,இரக்கமானவர் என நாம் வளரும் ஒவ்வொரு வயதிலும் அப்பா ஒவ்வொரு மாதிரி தெரிகிறார். கண்டிப்பாய் அவரின் நல்ல/கெட்ட குணங்கள் நம்மையுமறியாமல் நமக்குள் செலுத்தப்படுகிறது.

எனக்கு அப்போது பன்னிரண்டு வயதிருக்கும், வீட்டில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் கார சார மான விவாதம் போய்கொண்டிருந்தது. கோபத்தின் உச்சியில் அம்மா ,"இப்படி இருமறுதுக்கு பதிலா அந்த சிகரெட்ட நிப்பாட்டினால் தான் என்ன??" என குரலை உயர்த்திக்கேட்க ,வீட்டில் திடீரென மௌனம் குடி கொண்டது.நான்,தம்பி தங்கைகள் எல்லாம் வீட்டுப்பாடங்களை நிறுத்தி அப்பாவையே பார்க்க...அம்மா கூட கொஞ்சம் அவசர பட்டு விட்டோமோ என்கிற ரீதியில் முழிக்க... அப்பா யதார்த்தமாய் சட்டை பையிலுருந்த சிகரெட்டை எடுத்து பக்கத்திலிருந்த மேஜையில் செங்குத்தாக வைத்துப்பார்த்து விட்டு ," நிப்பாட்டி தான் பாக்குறேன் நிக்க மாட்டேங்குது!!' என சலனமே இல்லாமல் சொன்னார். நாங்கள் எல்லாரும் அடக்கவே முடியாத பெருஞ்சிரிப்பு சிரித்தோம். சிரிப்பை அடக்க முயற்சி செய்து தோற்ற அம்மா கூட எங்கள் சிரிப்பு ஜோதியில் ஐக்கியமானாங்க.இப்படி தான் எந்த கட்டத்திலேயும் சமயோஜிதத்தை பயன்படுத்துவது அவருக்கு இலகு.



அதிகாலை மூன்று மணிக்கு என்னையும் எழுப்பி அவரும் எழுந்து world cup football பார்ப்பது, ' வாங்கடா படத்திற்கு போவோம்' என எங்களை அழைத்து சனிக்கிழமை சாயங்காலங்களை செலவிடுவது, "வீட்லயே உட்காந்து என்ன முட்டையா போடுறே?? வெளிய போய் சுத்திட்டு வாயேன்டா!! அப்பத்தான் உலகந்தெரியும்" என அடிக்கடி என்னை சொல்வது.. இவ்வாறு அப்பாவின் செயல்கள் பல இலக்கணங்களை வழக்கொழித்தது. மூக்கடச்சான், கரட்டாண்டி,கரிமேடு என வீட்டில் எல்லோரையும் ஒரு பட்டப்பெயர் வைத்தே அழைப்பார். நாங்களும் அப்பாவை எப்படியாவுது கலாய்க்க அவருக்கு பட்டப்பெயர்கள் வைப்போம், அது எதையும் நிலைக்க விடாமல் தப்பி விடுவார். அப்பாவை Tension ஆக்க நானும் தம்பியும் கடைசியாக ஒரு வழி கண்டுபிடித்தோம். அப்பா எங்களை கலாய்த்தால்,நாங்கள் தமிழ் சினிமா வில்லன்கள் போல் சும்மா 'தே மே' என நின்றிருக்கும் தங்கைகளை நறுக்கென தலையில் கொட்டு வைப்போம். தங்கைகள் வீரிட்டு அழுவதை தாங்க முடியாம அப்பா 'Tension' ஆகிருவார். அவருக்குத்தான் பெண்பிள்ளைகள் உயிராச்சே .... 'டேய்!!' என அப்பா அடி வயித்திலிருந்து கத்த.. நானும் தம்பியும் வீட்டின் boundary நோக்கி பறக்க ஆரம்பிப்போம். பெரும்பாலும் தம்பி மாட்டிக்கொண்டு அப்பாவிடம் தர்மடி வாங்குவான். அப்பாவிற்கு சூர்ய கிரகணம் போல எப்பவாவுது தான் கோபம் வரும், அப்போது சிக்கினால் சுட்டெரித்து விடுவார். பெரும்பாலும் அப்பாவின் கோபத்தின் அளவை கணிக்க வீட்டில் தம்பி தான் எங்களுக்கு கருவியாய் பயன் படுவான்.



நான் இரண்டாம் வகுப்பு படிக்கிற நேரம் அது,அம்மா 'Conceive' ஆகி இருந்தாங்க. ஏற்கனவே நானும்,தம்பியும் இருப்பதால் பெண் குழந்தை தான் வேணுமென கோயில் கோயிலாக மனு போட்டுக்கொண்டிருந்தார்கள். எப்போதுமில்லாமல் அப்பா பக்தி பழமாகி இருந்தார். ஒரு வேளை தம்பிபாப்பாவாக இருந்தால் கடவுள்களை கோபித்துக்கொண்டு மதம் மாறிவிடுவாரோ என்று கூட நான் நினைத்ததுண்டு. கடைசியாய் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து" பெண் குழந்தை.. இல்லையில்லை இரட்டை பெண் குழந்தைகள்" என செய்தி வந்ததும்,அப்பா கிட்டத்தட்ட கத்தியே விட்டாராம்.தெருவில் இருப்பவர் எல்லோருக்கும் அப்பா அன்று இனிப்புகள் கொடுத்தார். எப்போதுமே 'shuttled' ஆக இருப்பவரை முதல் முதலாய் அன்று தான் அவ்வளவு உணர்ச்சிமயமாய் பார்த்தேன். தங்கைகள் மேல் கொஞ்சம் பொறாமையாய் கூட இருந்தது.

அப்பாவுக்கு ஒரு பொழுதுபோக்கு உண்டு. வீட்டில் ஹாலில் அமர்ந்துகொண்டு நாளிதழ் படித்துக்கொண்டிருப்பார். திடீரென எழுந்து வாசலைப்பார்த்து "வாங்க வாங்க" எனச்சொல்லுவார். வீட்டின் உள்-அறையில் இருக்கும் நாங்களும், அடுப்பங்கறையில் இருக்கும் அம்மாவும் யாரோ விருந்தினர்கள் வருகிறார்களோ என நினைத்து வேகமாக ஹாலுக்கு வருவோம்.அங்கே அப்பா ஒன்றுமே தெரியாதவர் போல நாளிதழ் புரட்டிக்கொண்டிருப்பார். நாங்களும் "பல்ப்" வாங்கியதை காட்டிக்கொள்ளாமல் எதார்த்தமாய் திரும்பி செல்வோம். அம்மா மட்டும் கையிலிருக்கும் தோசைக்கரண்டியால் அப்பாவின் கையில் ரெண்டு தட்டு தட்டுவதுண்டு. பிறகு ஒருமுறை உண்மையிலேயே உறவினர்கள் ஒரு நாள் இரவு வர ,அப்பா "வாங்க வாங்க" என வழக்கம் போல் சொல்ல , அம்மா அடுப்பறையில் இருந்து கொண்டே " என்னை ஏமாத்த முடியாது இந்நேரம் எந்த லூசாவுது வருமா??" என சத்தம் போட்டுச்சொன்னாங்க. வந்தவர்கள் விழிக்க,அம்மா பதறி போயி விளக்க... அன்று வீடே லொள்ளு சபாவானது.

நாட்கள் எவ்வளவோ ஓடிவிட்டன. அப்பாவென சொன்னதும் இப்படி இதயம் தித்திக்க எத்தனையோ நினைவுகள் வந்து போகும். மேலே சொன்னவை அனைத்தும் கடந்த நவம்பர் 26- அப்பாவின் பத்தாவுது நினைவுதினத்தில் எழுதியவை. தம் தந்தையை பற்றி எல்லோர்க்கும் இப்படி பசுமையான பல நினைவுகள் உள்ளிருக்கும். அவற்றையெல்லாம் உங்களுக்கு உகந்த மொழியில் ஒரு காகிதத்தில் எழுதி உங்கள் தந்தையிடமே கொடுத்து பாருங்களேன்.கண்டிப்பாய் அவர் கண்கள் ஈரமாகலாம்."இதெல்லாம் யதார்த்தமா?? , பாசமெல்லாம் உள்ளுக்குள்ளே இருக்கு!!!" என கேட்கும் அறிவாளிகளுக்கு ஒன்று சொல்கிறேன். 'நாம் தனிமை படுத்த படுகிறோம்,நம்மிடம் பேச யாரு மில்லை' என்ற உணர்வு 90 சதவீத வயதானவர்களுக்கு உண்டு என உளவியல் சொல்லுகிறது. இந்த கடிதம் அவர்களது சங்கடங்களை களைந்து சந்தோசம் தரலாம். பதிலுக்கு அவர் உங்கள் உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தம் கூட தரலாம்!!! அது சரி அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!!!!


உன் வித்தில் விளைந்து
விருட்சம் ஆனோம்!!!!
உன் அன்பிற்கு எப்போதும்
அடிமையானோம்!!!!
என் வாழ்வின் முதல் பக்கம் நீ
என் பேரின் வலப்பக்கம் நீ
எனக்குள் எப்போதும் நீ(ர்)!!!!!!!
இப்படிக்கு
சிவராஜ்காமராஜ்.














சனி, 30 ஜனவரி, 2010

காதல் சிவன் Vs மோதல் சிவன்


Xray வில் தெரியாத போதிலும் எல்லாருக்குள்ளும் ஒரு தேவதையும் ஒரு மிருகமும் இருப்பதாய் ஒரு கூற்று உண்டு. எனக்கும் இதில் பெரிதாய் நம்பிக்கை உண்டு.எனக்குள்ளும் இது நடப்பதுண்டு. சும்மா இருக்கும் குழந்தைகளை கொஞ்சி குசியாக்குவேன்,திடீரென கிள்ளி கடுப்பாக்குவேன்.அதே போல் ,அவ்வப்போது ஹோர்மோன்களில் ஏற்படும் கலவரத்தினால் என்னைச்சுற்றியும் காதல் தேவதைகள் வட்டமிடுவார்கள் ,திடீரென உள்ளே இருக்கும் மிருகம் வந்து 'உர்' என கத்தி அவைகளை விரட்டி விட்டு விடும். இதனாலேயே எத்தனை கூட்டத்திலேயும் நான் 'Single' ஆகவே இருக்கிறேன்.கீழே என் தேவதை எண்ணங்களை 'காதல் சிவன்' என்றும் , அதை பகடி செய்து விரட்டி அடிக்கும் மிருக புத்தியை 'மோதல் சிவன்' எனவும் தொகுத்து இருக்கிறேன்(அல்லது அறுத்திருக்கிறேன்). படித்துத் துன்புறுவீர்!!!!!!!!!!!!!!


i) காதல் சிவன்: 'ஒரு முறை சொன்னதை மறுமுறையும் சொன்னால்
கவிதையாம்
ஒரு முறை பார்த்தவுடன் உன்னை மீண்டுமொருமுறை பார்க்க தோன்றுதே -
நீயும் கவிதை தானோ!!!!!!

மோதல் சிவன்: அதெல்லாம் ஒன்னும் இல்ல. மொத வாட்டி நீ சரியா பாத்திருக்க மாட்டே!!!




ii) காதல் சிவன்: ' உலகத்தில் சிறந்த இசை கருவி எது ?
சிலர் வயலின் என்றனர்..
சிலர் பியானோ என்றனர்
சிலர் கிட்டார் என்றனர்.
நான் உன் கொலுசு என்கிறேன்!!!

மோதல் சிவன் : நான் நீ லூசு என்கிறேன் !!!!!




iii) காதல் சிவன் : குத்து பாடல்களில் கும்மாளம் போட்டவன்
இப்போதெல்லாம் மெல்லிசையை மெல்லுகிறேன்!!!

மோதல் சிவன்: கடைசி சாவுமேளம் தான்டோய்!!!!




iv) காதல் சிவன்: உன்னை படைத்தது தான் தானென பெருமையாய்
பிரம்மன் தன் 'Resume' இல் போட்டுக்கொண்டானாமே!!!!

மோதல் சிவன்: அப்ப உன்ன படைச்சதுக்கு தலைல போட்டுக்கிட்டரா??




v) காதல் சிவன்: கடற்கரை
கடைத்தெரு
கோயில் -எங்காவுது ஒரு இடத்தில் உன்னை
மீண்டும் இயல்பாய் சந்திப்பேனா??

மோதல் சிவன்: ஏன்.உன்கிட்ட கடன் வாங்கிருக்காளா ??




vi) காதல் சிவன்: தேவதைகளுக்கு என்ன தேர்வு விடுமுறையா
தெருக்களில் தென்படுகிறார்கள் !!!!

மோதல் சிவன் :
அப்போ தெரு நாய் மாதிரியே சுத்திட்டு இருக்கே??




vii) காதல் சிவன்: நீ ஒரு முறை கடலில் காரி உமிழேன்-
கடல் நீர் குடி நீராக வாய்ப்பிருக்கிறது.

மோதல் சிவன் : ஏன் அப்டியே உன் மூஞ்சில துப்ப சொல்லேன்..





viii) காதல் சிவன்: நீ அழுதிருக்க வேண்டாம்
என்னை அடித்திருக்கலாம்
அவ்வளவு வலித்திருக்காது!!!!

மோதல் சிவன் : நீயும் கூட இப்டி எழுதி கொல்லாம, எங்கள அடிச்சி கொன்றுக்கலாம்




ix) காதல் சிவன்: இப்போதெல்லாம் நிறைய பேசுகிறேன்
-தனிமையில்
மோதல் சிவன் : நெனச்சேன். confirm பண்ணிட்ட....


ஒரு வேளை இந்தப்பதிவு உங்களுக்கு பிடித்து தொலைத்திருந்தால் அடியேனின் வலைத்தளத்துக்கு வந்து சேருங்களேன் நானும் எத்தன நாள் தான் யாருமில்லாத கடையில் டீ ஆத்துவுது!!!






சனி, 23 ஜனவரி, 2010

ஆகாய மார்க்கம்




நம்மளயெல்லாம் onsite அனுப்புறதே அதிகம்னாலும்,மும்பை ஏர்போர்ட்ல நாலு மணி நேரம் வெயிட் பண்றதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான் . அதுவும், கூட வந்த ரெண்டு பேருமே ஹிந்தி கார பசங்க, சலபுலசலபுலனு ஹிந்தில பேசிகிட்டே வந்தானுங்க. நமக்கு வேற ஹிந்தி "Maalum Nahee" ங்கறதால எதோ தூர்தர்சன் பார்குற மாதிரியே இருந்துச்சு. சரி flight நாலு மணிக்கு தானே இப்போ ரெண்டு மணி தான் ஆகுதே ஒரு தூக்கத்த போடலாம்னு பாத்தா, பஸ்ஸை மிஸ் பண்ண பழைய சம்பவங்கள் ஞாபகம் வந்து தொலைச்சது.
அங்கங்க
அவன காணோம் ,இவன் வரலேன்னு மைக்ல கூவிட்டு இருந்தாங்க. அந்த நேரம் பாத்து நமக்கு அடுத்த சீட்ல VIP சூட்கேசோட ஒரு முரட்டு ஆளு வந்து உட்காந்தார். அவரு பார்க்காதப்ப நான் அவர பார்ப்பேன் ,அவரு என்னை பார்த்தா மூக்க சொறிஞ்சிக்கிட்டே எதார்த்தமா வேற பக்கம் பாப்பேன். அதையே அவரும் செய்தார். ஆளு ஒரு மார்க்கமா இருந்தாரு,எதோ செய்ய போற மாதிரியே முழிச்சிகிட்டு இருந்தாரு. கொஞ்ச நேரத்துல ஏர்போர்ட் ஆளுங்க வந்து அவரு கிட்ட எதுவோ ஹிந்தி கேக்க,அவரு வேற எதோ மொழில (கன்னடம் னு நெனைக்குறேன் ) பதில் சொல்லிட்டு இருந்தார். இவருக்கு englishசும் பிரச்சனையா இருந்ததால கைல இருக்கிற டிக்கெட்ட உருகி பாத்தாங்க.பிறகு ரொம்ப கடுப்பாகி அந்த ஆள ஹிந்தில கத்த ஆரம்பிசிட்டாங்க.

பக்கத்துல உட்காந்திருந்த ஒரு german தாத்தா என்கிட்டே ரொம்ப ஆர்வமா what happened?? அப்டினார். எனக்கும் சத்தியமா புரியலய்யா னு சொல்றதுக்கு பதிலா உதட்டை பிதுக்கினேன். கடைசி பாத்தா அந்த ஆளுக்காக ரியாத் போற AirIndia flight அரை மணி நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்திருக்கு. பய புள்ள இங்க உட்காந்து நம்மள பயமூர்த்திட்டு இருந்திருக்கு!!! ஒருவழியா அவர பேக்-அப் பண்ணி கூட்டு போய்ட்டாங்க.


தெரிஞ்ச மூஞ்சு ஒன்னு கண்ணுல தென்பட்டுச்சு ,யாருன்னு பாத்தா நம்ம இலங்கை கிரிக்கெட் வீரர் அஜந்தா மென்டிஸ். இந்த 'carom ball' லாம் போட்டு கொஞ்ச காலம் இந்தியாவை டரியல் ஆக்குனரே அவரே தான்.மனுஷன் வெள்ளை டி ஷர்ட்,ஜீன்ஸ்ல ஒரு "trolly" சூட்கேசை தர தரனு இழுத்திட்டு போயிட்டு இருந்தார். அவர அங்க ஒரு பய கண்டுக்கல, நா விடாம வெரட்டி ஓடி போயி கை குடுத்து ,ஒரு ஆட்டோகிராப் வாங்கிட்டேன். யார்கூடயோ போன்ல பேசிட்டே இருந்தாரு. கையெழுத்த பாத்தேன் ,தமிழ் சினிமா ஹோஸ்பிட்டல் சீன்ல சீஸ்மோக்ராப் காட்டுவாங்களே அது மாறி இருந்துச்சு.சிங்களம்னு நெனைக்குறேன்.

ஒரு வழியா நம்ம flight டுக்குரிய அறிவிப்பு வந்தது. சும்மா சுத்தி சுத்தி செக் பண்ணாங்க. நான் அந்த அளவுக்கு 'Worth' இல்லீங்கன்னு சொல்லலாம்னு பாத்தேன்,கைல துப்பாக்கி இருந்ததால் அமைதி காத்தேன்.தேடி கண்டுபிடிச்சு நானும் ,அபிசேக்கும் சீட்டில செட்டில் ஆனோம். முன்னாடி நின்னு ஒரு பொண்ணு flight கடலுல பார்க் ஆயிருச்சுனா என்னென்ன செய்ய வேண்டும்னு செய்து காண்பித்தாள். அந்த life jacket உபயோக படுத்தும் முறையை நடித்து காட்டினாள்.எனக்கு அத்தனை A.C யிலும் ஏனோ வேர்த்தது. ஒரு நிமிஷம் டைட்டானிக் படம்லாம் ஞாபகம் வந்து போனது. பொதுவா flight டேக் ஆப் ஆகுறப்போ " வயித்தில பட்டாம்பூச்சி பறக்கும்" னு சொல்லுவாங்க. எனக்கு "பாரசூட்டே பறந்தது". பத்து நிமிஷம் கழிச்சு நம்ம அபிசேக்கு என் கையை சுரண்டினான். என்னனு பாத்தா எங்களுக்கு அடுத்த வரிசைல டிபன் மற்றும் சரக்கு சப்ளை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.அதுவும் அந்த Air-Hostress , நம்ம திரிஷா அப்டியே கேட் வின்ச்லேட் கலர்ல இருந்தா எப்டி இருக்கும்.அப்டி இருந்தது.நம்ம பய மூஞ்சுல முன்னூறு வாட்ஸ் வெளிச்சம் வந்துச்சு. எங்க வரிசைல யார் வருவான்னு ஆர்வமா பாத்தா சரோஜா தேவி மாதிரி ஒரு அம்மா வந்திச்சு. உங்க மனக்கண்ணுல அன்பே வா சரோஜா தேவி வந்தா அத அழிச்சிருங்க, இது ஆதவன் சரோஜா தேவி. நியாயமாபாத்தா அந்தம்மா retire ஆயிருக்கனும். நா ஒரு கோக் மட்டும் குடிக்க (நம்புங்க!!!) நம்ம பய whishky ஒரு பெக் அடிச்சிட்டு மட்டயாகிட்டான்.

பின்னாடி
ஒரு குழந்தை தன்னோட முழு பலத்தையும் திரட்டி அழ ஆரம்பிச்சது, எந்த ஊரு குழந்தை அழுதாலும் காது கிழிய தான் செய்கிறது. அவுங்க அம்மாவோட ஆறுதலை விட சக பிரயாணிகளின் பிரார்த்தனையே அந்த குழந்தையை தூங்க வச்சிருக்கும்னு நெனைக்குறேன். கைல வச்சிருக்கிற "3 point some one" புத்தகத்தையும் ,டி.வி யையும் எவ்வளவு நேரந்தான் மேயுறது. கடைசியா சாயங்காலம் 4 மணிக்கு Atlanta வந்திறங்கினோம். எங்க பெட்டி,படுக்கைகளெல்லாம் எடுத்துக்கிட்டு Taxi யை கூப்புட்டோம்.
அங்க இருந்து கைல வச்சிருக்க அட்ரஸ் எவ்வளவு தூரம்னு எங்களுக்கும் தெரியாது. டாக்ஸி டிரைவர் 80 டாலர் கேட்டான், நாங்களும்
ரொம்ப தெரிஞ்சவைங்க மாதிரி இங்க இருக்கிற ஹோட்டலுக்கு இவ்வளவானு கேட்டு பேரம் பேசுனோம். பத்து நிமிஷ பேச்சு வார்த்தை முடிவில 60 டாலருக்கு ஒத்துக்கிட்டான்.பாவம் அந்த ஆளுக்கு வேர்த்துப்போச்சு. ஹோட்டல்ல போயி இறங்குனவுடனே அங்கேயே இருக்கிற எங்க அலுவலக நண்பர் ," Taxi க்கு 90 டாலர் வாங்கிருப்பானே??" னு கேட்டார். நான் அவர் காது பக்கத்துல போய் 60 டாலர் னு சொன்னேன். கடைசி கிளம்புறப்ப அந்த டிரைவர் நம்ம அபிசேக்கு கிட்ட "Sir Tips??" அப்டினார். நம்ம பய 45 ஆள பெருக்கிப்பாத்து ஒரு டாலர் நோட்ட நீட்டி ரொம்ப பெருமையா பார்த்தான்.அவன் அதை விடுக்குனு வாங்கிட்டு எதோ சத்தமா முனங்கிகிட்டே போனான். கண்டிப்பா கெட்ட வார்த்தையாத்தான் இருக்கும்.










ஞாயிறு, 15 நவம்பர், 2009

CAST AWAY(2000)


Tom Hanks நடிப்பில் 2000ல் வெளிவந்து அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்ட படம் இது.ஏற்கனவே இயக்குனர் "Robert Zemeckis"சுடன் சேர்ந்து 'forrestgump' யில் கலக்கிய hanks, நடிப்பில் சிகரம் தொட்ட படம் இது என்றால் மிகையாகாது.

இந்த பதிவை படிக்க நேரும் எல்லோரும் இந்த படத்தை பார்த்திருக்கும் சாத்தியங்கள் அதிகம் என்றாலும், திரும்ப திரும்ப பார்க்க சலிக்காத படங்களில் இதுவும் ஒன்று என அனைவரும் ஒத்து கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.

"FEDEX" shipping நிறுவனத்தில் பணிபுரியும் Chuck Noland(Tom Hanks) ஒரு விபத்தில் தனியொரு தீவில் மாட்டிக்கொள்வதே படத்தின் மையக்கதை. துரு துருவென திரியும் Hanks தீவில் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தை ஆரம்பத்தில் சிரிப்பாக தெரிந்தாலும் போக போக நம்மை கலங்க வைத்து விடும்.அதுவும் அந்த நெருப்பை வரவைக்க அவர் படும் அவஸ்தை விவரிக்க முடியாத ஹைக்கூ.


படத்தில் அந்த தீவு காட்சிகளில் வசனமே அதிகம் இருக்காது.பின்னணியில் வெறும் கடல் அலை சத்தம் மட்டுமே. பேச்சுத்துணைக்கு ஆளில்லாமல் வாலிபாலுக்கு 'wilson' என பெயரிட்டு பேசுவது, குகைக்குள் காலண்டர் போட்டு வைப்பது போன்ற காட்சிகள் தனிமை பயத்தை நமக்கும் தரும்.

ஒரு மனுஷன் இப்படியெல்லாம் நடிக்க முடியுமான்னு "TomHanks" நடிப்ப பாக்கிறபோது எண்ணம் வரும். அதுவும் அந்த தீவு காட்சிகளுக்காக 40 பவுண்ட் (20 KG) எடை குறைந்தாராம்(ஒரு வேலை சொந்த படம் என்பதாலோ!!!)

ஊருக்கு திரும்பி வரும் Hanks சிற்கு நடக்கும் சம்பவங்களை பார்க்கையில் நமக்கு ஆங்கிலம் தெரியவில்லை எனினும் அழுகை முட்டிக்கொண்டு வரும். கடைசியில் இப்போதும் இவன் தனி தீவில் தான் இருக்கிறான் என்பது போல முடிவது கவிதை.இந்த படம் பார்த்த பிறகு TomHanks படங்களை விரட்டி விரட்டி பார்த்ததெல்லாம் தனிக்கதை.



இயக்குனர் Robert Zemeckis மற்றும் நம்ம TomHanks


Gladiator படத்திற்காக russel crowe விற்கு 2000ம் ஆண்டிற்க்கான ஆஸ்கார் கிடைத்தது. எனக்கென்னமோ அது நம்ம hanksசிற்கு தரப்பட்டிருக்க வேண்டியது என்றே தோன்றுகிறது .

வெள்ளி, 16 அக்டோபர், 2009

காதல் கடிதம்

காங்கிரசிற்கு ஆதரவாய் கைகளை நீட்டி
முருக கடவுள் நின்றிருந்த காலெண்டரை பார்த்தேன்.
அன்றைய தேதிக்கு 'சிம்மம்-கேடு'
என ஆருடம் சொன்னது.
உண்மைதான் பலன் எனக்கு
"பன்மையில்" பலித்து கொண்டிருந்தது....

"ஆரம்பிக்கலாமா??" என பேப்பரை
என் பக்கம் தள்ளினான் பாலன்.
மீசை,தாடி இல்லா T.R போலிருப்பான்
எங்கள் ஒரு பானை சோற்றில்
ஒரு சோறு இவன் ......

"இதெல்லாம் எந்த நாய் செய்யுதோ
அந்த நாய் தான் எழுதனும்னு " சீறி
அந்த அமரக்காதலை
அஃறினை காதலாக்கினேன்.

"டேய் என் எழுத்து கேவலமா இருக்கும்
பிழை வேறு வரும்''
- என தன்னிலை விளக்கம் அளித்தான்
தன்மான தமிழன்.

"அதாவுது சிந்தனை உனது
சிற்பம் எனது ??!!!!" என்றேன்
"சூப்பர்டா.. மச்சான் எடேல இந்த மாதிரி
பிட்ட போடணும்டா " என்றான்.

இந்த சப்பை தமிழுக்கே
சங்க தமிழ் "feel" கொடுத்தான்.
"ஊரார் பிள்ளையை" பழமொழி வேறு
உள்ளுக்குள் வந்து போனதால் உடன் பட்டேன்!!!!!!!!!

"சொல்லித்தொல" எனச்சொல்லி
காகிதத்தின் நெற்றியில் "" போட்டேன்.
"அவ அழகிருக்கே அது என்னை அப்டியே
கொல்லுதுடா " வென சொல்லி பாயை பிராண்டினான்...

பேனாவை பின்னால் கூடி நெற்றியில் குத்தி
சிந்தனை கிடங்கை தோண்டுவது போல்
"கவிஞர்" டச் கொடுத்தேன்....

சட்டென " அழகு திளைக்கும் தேவதை நீ
என் அறிவை கொலைக்கும் ராட்சசி நீ " என்றேன்.
"அதான் அதே தான்..." என
குணா கமல் போல் கத்தினான்.
அவன் உளறியதையெல்லாம்
முடிந்தவரை உருமாற்றினோம்.

"வெட்கம் உனது தாய் மொழி
நீ வாய் மூடி சிரிக்கையில்
அது வெறும் வாய்மொழி" என்றெல்லாம் எழுதினோம்.

கிட்டத்தட்ட அவள் கிட்னி தவிர
அனைத்தையும் வர்ணித்தாகிவிட்டது!!!!!
கடிதத்தை மீண்டும் ஒருமுறை
படித்து பார்த்தான்.
"அன்புள்ள" பக்கத்தில்
அவள் பெயர் போட்டான்.

" டேய் ஐஸ்வர்யாராய்க்கு கடிதம் எழுதி
மனோரமாவுக்கு அஞ்சல் செய்வது போலுள்ளது" என்றேன்
நான் உரைத்தது
அவனுக்கு "உறைத்ததாய்" தெரியவில்லை.
வரேண்டா மச்சான்
என சொல்லி மறைந்தான்

கால சக்கரம் 4 வது கியரில் சுற்றியது
சமீபத்தில் தி.நகர் கூட்டத்தில் பாலனை பார்த்தேன்.
நலம் விசாரிப்புகளுக்கு பின்
நாசூக்காய் கேட்டேன்..
"இல்லடா ...கொடுக்கவே இல்ல
அவளுக்கு இப்ப கல்யாணமெல்லாம்
முடிஞ்சு போச்சு" ன்னு சொல்லி சிரிச்சான்.....

நாசா சொல்கிறது
"சொல்லப்படாத காதல் பூமியில்
சுற்றிக்கொண்டே இருக்குதாம்......... "



வியாழன், 6 ஆகஸ்ட், 2009

பொய்கள்

'எப்படி இருக்கீங்க??' நமக்கு தெரிந்தவர்கள்
அவர்கள் கண்ணில் நாம் தெரிந்தவுடன் கேட்கும் கேள்வி..
"நல்லா இருக்கேன்!!!!" நாமும் வாடிக்கை பதில் சொல்வோம்!
அவர்கள் உள்ளூர கேட்காவிடினும் நாம் உண்மையாய் சொல்லாவிடினும் இந்த பொய்கள் அழகு!!!!

தூரத்து சொந்தத்திடம் துக்கம் விசாரிக்க செல்வோம்
சாப்பிட்டு போங்க என சம்பிரதாயமாய் சொல்வர் ..
"இப்போ தான் சாப்பிட்டோம்" என கொலை பசியிலும்
கொடுர பொய் சொல்வோம் ...

தொலை பேசியில் எதிர் முனையில் எதிரியே பேசினாலும்
"ஹலோ" என ஆங்கில பொய்யுடன் தான ஆரம்பிப்போம் !!!!!!!!!!!!!!

நம் கற்பனை குதிரை போட்ட சாணிகள் - பொய்கள்
நம் மூளைக்கும் இதயத்துக்கும் நடக்கும் சண்டையில்
பிறக்கும் சங்கட குழந்தைகள் -பொய்கள்
மாயைகள் பார்க்க எப்போதும் மயக்கங்கள் நமக்கு
இல்லாமலா திரை அரங்குகள் நிறையுது!!!!

சில நேரங்களில் உண்மைகள்
நம் முன் அம்மனமாய் நின்று சிரிக்கும்
ஆடை பொய்களே நம் அவமானம் மறைக்கும்...

தீமை பயக்கா பொய்கள் சொல்லலாம்...
நன்மை நடக்க வாய்மையும் கொல்லலாம்!!!!
அகம் மகிழ பொய் சொல்லலாம்
பிறர் நெகிழ பொய் சொல்லலாம்..
பொய் உரைப்போம்
கொஞ்சம் மெய் மறப்போம்!!!!!