செவ்வாய், 31 மே, 2011

என்னத்த எழுத??







ஒரு வலைத்தளம் ஆரம்பித்து தொடர்ச்சியாய் விடாமல் எழுதுவது என்பது மக்கள் டிவியை அரைமணிநேரம் உட்கார்ந்து பார்ப்பதை விட கடினமானது. ஆரம்பிச்ச நாளுல இருந்தே அப்படி என்னதான் எழுதுறதுனு மூளைல ஒரே புகைச்சல். சரி அக்கம்பக்கத்துல Blog எழுதுறவுங்க என்ன எழுதுறாங்கன்னு பார்த்தா நமக்கு ஒரு க்ளு கிடைக்குமேனு ஒரு நோட்டம் விட்டேன். சில பேரு புது படம் வந்தவுடனே அதுக்கு ஒரு விமர்சனத்த போடுறாங்க. படம் பாத்துக்கிட்டு இருக்கிறப்பவே "Interval" கேப்புல விமர்சனம் போடும் விட்டலாச்சாரியார்கள் கூட உண்டு. அதில் "திரைக்கதை சரியில்ல..", "நடிகை நடிகர்கள் தேர்வு கச்சிதம்..", "ஒளிப்பதிவு அருமை..."னு ஆனந்த விகடன் பாதிப்புகள் அதிகமாய் இருக்கிறது. வேறு சிலர் ஆங்கில படத்துக்கு விமர்சனம் எழுதுகிறேன் என்று வெள்ளைக்காரன் பிஸ் அடிச்சாக்கூட "அவுங்கள மாதிரி மூச்சா அடிக்க ஆள் இல்லைங்க"னு புலம்புகிறார்கள்.

இப்படி அடுத்தவுங்கள லொட்டை சொல்றது ரொம்ப எளிது.ஆனா எழுதிப்பார்த்தா தான் அதில் டவுசரை கிழிக்கும் சமாச்சாரங்கள் இருப்பது தெரியும். ரொம்ப நாளைக்கு முன்னாடி இல்லாத மூளையை இறுக்கிக் கசக்கி ஒரு பதிவு எழுதினேன். எல்லோருக்கும் அதை மின்னஞ்சல் வேறு செய்தேன். அனுப்பிய பத்தே நிமிடத்தில் ஒரு தோழியிடம் இருந்து பதில் வந்தது. சந்தோசமாய் திறந்து படித்துப்பார்த்தால் ,"டேய் லூசு ..உனக்கு வேற வேலையே இல்லையா.. " என்று என் தன்மானத்தின் மேல் தடியடி நடத்தப்பட்டிருந்தது. "எப்படிங்க பொறுமையா உட்கார்ந்து எழுதிறீங்க" ,"ஆபிஸ்ல "பெஞ்ச்ல" இருக்கீங்களா", "தூக்கத்துல எழுதுற வியாதி ஏதும் இருக்கா??' னு ஏகப்பட்ட ஏவுகணைகள் வந்து தாக்கும். ஒரு பயலும் நம்ம எழுதியது பற்றி பேச மாட்டார்கள். ஆங்காங்கே ஆலங்கட்டி மழை போல எப்போதாவது நல்ல விமர்சனங்கள் வரும். ஒரு எழுத்தாளனுக்கும் ,வலைத்தளத்தில் எழுதுபவனுக்கும் உள்ள வித்யாசம் என்பது சச்சினுக்கும் ,தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறுவனுக்கும் உள்ள தூரத்துக்கு சமமானது.இந்த யதார்த்தை புரிந்து கொண்டு எழுதுதல் நலம். ஏதோ படத்தில் மம்மூட்டி சொல்வது போல சில நேரங்களில் "உப்மா" கூட நல்லா இருக்கும்.



முதல் முதலில் மின்னல் என்ற கவிதை எழுதினேன். என்னை தவிர ஒரு பத்து பேர் அதை படித்திருப்பார்களா என்பது சந்தேகம். இருந்தும் அவ்வப்போது எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.எழுதுவது கலவி போல. யாரும் பாராட்டுவதற்கு செய்வதில்லை. புத்தகங்கள் படிக்கிற போது அந்த கதா பாத்திரங்கள்,சம்பவங்கள் நம் முன் வாழ்ந்து கொண்டே இருக்கும். நல்ல எழுத்து நம்மை அந்த உலகில் பயணிக்க வைக்கும்.ஜெயமோகன் சொல்வது போல ஒரு எழுத்தாளன் நிஜத்தைப்போல ஒரு நிழலான வரலாற்றை உருவாக்குகிறான். நானும் வாழ்நாளுக்குள் நல்லோர் மெச்சும் ஒரு சிறுகதை எழுதிவிட வேண்டும் என்று எத்தனித்துக்கொண்டே இருக்கிறேன், ஆண்குழந்தை வேண்டி அடுத்தடுத்து பெண்குழந்தைகள் பெற்றெடுக்கும் பெற்றோர் போல.சரி வாழ்க்கையில் தான் தினமும் சமாளிப்புகள் செய்கிறோமே...எழுத்திலாவது முரண்டு பிடித்து சுயத்தை காப்போம் என எப்போதும் முயல்கிறேன். படிப்பதே பத்து பேர் அதில் என்ன பகுமானம் என்றெல்லாம் கேலி செய்தாலும் பரவாயில்லை என.


Cyanide கண்டுபிடித்தவர் அதை உண்டு பார்த்துவிட்டு அதை விவரித்து எழுதி விட்டு இறந்ததாய் சொல்லுவார்கள். ஒரு சிகரெட்டை வாங்கி ஒரு முறை புகைத்து பார்த்து அந்த அனுபவத்தை ஒரு பதிவாய் எழுதலாமா என யோசித்தேன்.ம்ஹூம்...ஏற்கனவே எனக்கு அறிவுரை சொல்ல தனியாய் ஒரு கழகமே ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவேற வேண்டாம் என விட்டு விட்டேன். பிறகு ஆர்வக்கோளாறில் வெண்பா பற்றி படித்து "ஈற்றடி சிறுத்து இருக்கும்" என ஒரு பதிவு தயார் செய்து ,சரி தப்பு பார்க்காமல் நாலஞ்சு வெண்பா அடித்து விட்டேன். பதிவேற்றும் அளவு அந்தப்பதிவுக்கு தகுதியில்லாமல் அது தூங்கிகொண்டிருக்கிறது.இலங்கைப்பிரச்சனையின் வரலாற்றை படித்து உணர்ச்சிமயமாய் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. போதிய அறிவு இல்லாமல் பதிவு எழுதுவது குறைகுடம் குத்தாட்டம் போடுவது போல. ஆகையால் வாசித்தலை அதிகப்படுத்தி இருக்கிறேன்.


கொஞ்ச நாள் முன்னாடி சென்னையில் இருந்த போது பக்கத்து வீட்டு சிறுவன் ஓடி வந்தான்.

"அங்கிள் நீங்க தமிழுல ப்ளாக்லாம் எழுதுவீங்கன்னு உங்க பிரெண்ட்ஸ் சொன்னாங்க... அப்டியா"

இத்தன நாளா நம்ம பெருமைய நாமளே தெரியாம இருந்திருக்கோம் என மனதில் நினைத்துக்கொண்டு "ஆமா ...அதுக்கென்ன..." என்றேன்.

" அது ஒண்ணுமில்ல...எங்க கிளாஸ் மிஸ் தமிழ் மிஸ்... எனக்கு லீவ் லெட்டர் தமிழுல எழுதித்தாங்களேன் ப்ளீஸ்...."




செவ்வாய், 25 ஜனவரி, 2011

பெக்-3 : காதல்



முன்குறிப்பு: உள்ளதை உள்ள படி உரைக்க முயன்றதால் இது வயது வந்தோருக்கான கட்டுரை ஆகிறது. கலாசார காவலர்கள் படிக்காமல் இருப்பதே உத்தமம்.


ஹைதராபாத்தில் குளிர் எட்டு டிகிரியை தொட்டிருந்த ஒரு இரவுப்பொழுது. விவேக் சத்தம் போட்டு ஏப்பம் விட்டபோது எல்லோரும் எங்களையே பார்த்தார்கள். உபயம் அல்கஹால். நகரின் பெரிய ஹோட்டல்களில் அதுவும் ஒன்று. 'லேட்டாகுதுடா கெளம்புவோம்..' என நான் சொன்னது அவன் காதுகளை சென்றடைந்ததாய் அறிகுறி எதுவும் இல்லை. 'ஒன் பெக் ஓல்ட்மங்க்' என்றான் வெயிட்டரிடம்.எனக்கு அடி வயிற்றில் கோபப்பந்து உருண்டது. எனக்கு வந்த பிரியாணியை நான் சாப்பிட்டு முடித்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. விவேக் என்அலுவலகத்தோழன்.ஒரே வீட்டில் வேறு தங்கியிருக்கிறோம்.

'டேய்..போதும்டா..நெறையா குடிச்சா யாராவது ஒனக்கு அவார்டு தரேன்னு சொல்லிருகாங்களா' என்றேன் அலுப்புடன்.

விவேக் குனிந்தான்.அந்த குண்டான உடம்பு மட்டும் குலுங்கியது.பிற்பாடு தான் புரிந்தது அவன் அழுது கொண்டிருக்கிறான். 'அய்யயோ..அந்த விஷயமா' என எனக்கு கொஞ்சம் பீதி ஏற்பட்டது. விவேக் போதை முத்திப்போனால் தன்னுடைய காதல் கதையை சொல்லித்தொலைவான்.கிட்டத்தட்ட இருபது முறைக்கு மேல் நானே கேட்டிருக்கிறேன்.

'இன்னைக்கு என்ன நாள் தெரியுமா??'

'அவ குழந்தைக்கு பொறந்த நாளா??'

என்னை முறைத்து பார்த்துவிட்டு 'அவ கிட்ட என்னோட காதல சொன்ன நாள்' என்றான்.

'ஓ அப்டியா..காலெண்டர்ல எதுவும் போடல சாரி... அதான்...'

இந்தியாவில் மக்கள் தொகைக்கு அப்புறம் அதிகமாய் இருப்பது காதல் தான். அதுவும் முக்கால் வாசி காதல்கள் இந்திய கால்பந்து அணி போல,தோத்து தான் போகும்.அவன் உளறத்தொடங்கினான். நான் வழக்கம்போல் அக்கம்பக்கத்து டேபிள்களில் அமர்ந்திருக்கும் வட இந்திய பெண்களை சகோதர பாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு பெரியவர் ஜீன்ஸ் டீ சர்ட் சகிதமாய் அமர்ந்து எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரின் கண்கள் விவேக்கையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது. இடதுகை ஆள்காட்டி விரலால் அடிக்கடி மூக்கை சொரிந்து கொண்டிருந்தார்.


'2007ல அவ பிறந்த நாளன்னைக்கு நைட் 12 மணிக்கு நேரா போய் wish பண்ணேன். என் கை நிறைய அவளுக்கு புடிச்ச பூக்களும்,புத்தகங்களும்.அவளோட கண்ணுல அப்டியே தண்ணி அருவி மாதிரி கொட்டியது. நேரா ஓடி வந்து என்ன கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தா தெரியுமா?? அத என்னைக்கும் மறக்க முடியாது'

கன்னத்தில் கொடுத்தாளா?? இல்லை உதட்டில் கொடுத்தாளா?? என்ற உன்னத சந்தேகம் எனக்குள் தோன்றியது. தருணம் சரி இல்லை என்பதால் கேட்கவில்லை.

முகத்தை அஷ்ட கோணலாய் வைத்துக்கொண்டு ஒரு Pegஐ நிறுத்தாமல் குடித்தான். முகமெல்லாம் வியர்த்து போயிருந்தது. அவன் மேல் ஒரு வித வாடை வேறு வர தொடங்கி விட்டது.மட்டையாகி போனால் ,நான் ஒருத்தனாய் இவனை எப்படி வீடு போய் சேர்ப்பது என்ற கவலை வேறு வந்துவிட்டது. டீ ஷர்ட் பெரியவர் இப்பவும் விவேக்கை பார்த்துக்கொண்டே இருந்தார். ஒரு வேளை இந்த ஆளு இவனுக்கு சொந்தக்காரரோ என்றெல்லாம் எனக்கு யோசிக்க தோன்றியது.

எது நடந்திருமோனு பயந்தனோ அது அப்போது தான் நடந்தது. 'என் கைல மோதிரம்லாம் போட்டு விட்டு ,நீ தான் என்னோட புருசன்னுலாம் சொல்லிட்டு கடைசி என்னை விட்டுட்டு போயிட்டாடா அந்த தேவிடியா....' என மிகச்சத்தமாக சொல்லிவிட்டு பொல பொல வென வாந்தி எடுத்தான்.என் பேண்டும் கொஞ்சம் நாஸ்தி ஆனது.சாரில் இருந்து கீழே தரையில் உட்கார்ந்தான். நான் வேகமாய் கீழே விழுந்து விடுவானோ என்கிற பயத்தில் தோளை பிடித்தேன்.கொஞ்சமாய் திறந்த கண்களில் என்னை பார்த்தான். எல்லோரும் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் முகம் சுளித்தார்கள். பலர் 'இவனுகள யாருடா உள்ள விட்டது' என்பது போல பார்த்தார்கள்.

'எவ்வ்வ்ளவு கஷ்டமா இருக்கு தெரியுமா..நிம்மதியா தூங்கி ரெண்டு வருஷம் ஆச்சுடா...' எனச்சொல்லி என் மடியில் படுத்து அழத்தொடங்கினான். அடிவயிற்றில் இருந்து இரைந்து அப்படி ஒரு அழுகை. எனக்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே புரியவில்லை. அவனை பார்க்க ரொம்ப பாவமா இருந்தது. நட்சத்திர ஹோட்டல் என்பதால் அதற்குள் சிப்பந்திகள் வந்து நாகரிகமாய் எங்களை வெளியே தள்ளினார்கள்.விவேக்கை தூக்கி வந்த ஒருத்தன் கடுப்பில் 'பென் சோத்' என்றான் சத்தம் குறைவாக.


ஹோட்டலின் வெளியே ஆட்டோவுக்காக காத்திருந்தோம் இருவரும். விவேக் என் தோளில் சாய்ந்திருந்தான். அந்த டீ ஷர்ட் பெரியவர் ஹோட்டலில் இருந்து வெளியே வந்து எங்கள் பக்கத்துக்கு வந்தார்.தலையில் நிறைய முடிகள் வெள்ளை.ஆனால் உடம்பு இருக்கமாய் இருந்தது. அவரும் கொஞ்சம்போதையில் தான் இருப்பதாய் தோன்றியது.விவேக்கின் அருகில் வந்து அவன் தாடையை பிடித்து முகத்தை தூக்கி , 'என்ன லவ் Failure ரா??' என்றார். மவுனமாய் இருந்தான்.

'காலைல எழுந்ததும் கை அடிச்சிடு ..எல்லாம் சரி ஆகிடும்' என சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார். நாங்கள் அவரை பார்த்துக்கொண்டே நின்றோம்.

சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சியு மாகிக் கொடுமையினால்
பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழி விட்டு
ஏறுங்கரைகண்டி லேன் ,இறைவா , கச்சியேகம்பனே

- பட்டினத்தார்




புதன், 29 டிசம்பர், 2010

புத்தாண்டு தீர்மானங்கள்

அலுவலகத்தில் வேலை பார்ப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கிக்கொண்டிருந்த போது தான் நண்பர் அதை கேட்டார். 'ஏன்டா சிவா.. ஒன்னோட 'Newyear resolutions' என்னாதுடா ??' என்றார். 'ம்ம்.. உங்க Frienshipஐ கட் பண்ணலாம்னு இருக்கேன்' னு எப்போதோ கேட்ட ஒரு சினிமா ஜோக்கை வைத்து அவர் மூக்கை பதம் பார்த்தேன். சிரிப்பதற்காக மட்டுமே அலுவலகம் வரும் நாலு பேர் அருகில் சிரித்தனர். இருந்தாலும் அவர் கேள்வியின் நியாயம் எனக்கு உறைக்கத்தான் செய்தது. Newyear Resolution எடுக்காத பட்சத்தில் நம் மீது சில நாச சக்திகள் 'உதவாக்கரை' பட்டம் சூட்டி விடும் அபாயம் இருப்பது எனக்கு அப்போது தான் புலப்பட்டது. இப்போது புத்தாண்டு வேறு நெருங்கி கொண்டிருப்பதால், இதுசமயம் 'Resolution'களுக்கு செம்ம கிராக்கி ஏற்பட்டு விட்டது போல. 'மாப்ள எதுனா Resolution இருந்தா சொல்லுடா..' என கேட்கும் நண்பர்கள் மூலம் இது உறுதியாகிறது.

எது எப்டியோ நானும் புத்தாண்டு தீர்மானம் எடுத்துவிடுவது என முடிவு செய்து, சிந்தனை கிடங்கை தோண்டினேன். என்ன ஆச்சர்யம் நிறைய விசயங்கள் இருக்கின்றன. பின்பு மிகுந்த வீராப்புடன் எழுத தொடங்கினேன்.

1.இனிமேல் மேனேஜர் சொல்லும் மொக்கையான ஜோக்குக்கு தேவைக்கு அதிகமா சிரிக்கக்கூடாது.

2.மதிய வேளைகளில் தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டை பகிர்ந்து கொண்டு ,'எப்டி இருக்கு' என கேட்கும் தோழிகளிடம் 'கேவலமா இருக்கு' னு உண்மையை சொல்லி விடுதல் வேண்டும்.

3. 'பஜாஜ் எவ்வளவு மைலேஜ் தருது...ஹோண்டா என்ன ரேட் ??' என்று கேட்பதை விட்டுட்டு முதலில் டூ வீலர் லைசென்ஸ் வாங்குதல் வேண்டும்.

4. போடும் ஜீன்ஸ் பேண்டுகளை ஒரு மாதத்திற்கு ஒரு தடவையாவது துவைத்து விட வேண்டும்.


5. 'வித்யாசமா எடுத்திருக்கோம்' ,'அவரே பாத்திட்டு அழுது வடிஞ்சிட்டார்', 'அப்டியே வாழ்ந்திருக்காங்க..' னு வரும் விளம்பரங்களை நம்பி மொக்கை படங்களை பார்க்க தியேட்டர் செல்லுதல் கூடவே கூடாது .

6) 'ஏன்டா தமிழுல 'சீக்கு' ங்றத தான் இங்கிலிஷ்காரன் 'Sick' னு காப்பியடிச்சுடானா டா ??' போன்ற முற்போக்கு சந்தேகங்கள் கேட்க நண்பர்களை இரவு பனிரெண்டு மணிக்கு எழுப்புதல் கூடாது.

7) பெரியவர்கள் உயிரை உருக்கி அறிவுரைகள் சொல்லுகையில் கொட்டாவி விடக்கூடாது.

8) 'நாங்கெல்லாம் காலேஜ் படிக்கிறப்போ..' னு யாராவுது ஆரம்பித்தால், அவர் வாங்கிக்கொடுத்த ஓசி டீயையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து ஓடி விடுதல் வேண்டும்.

9) 'நா இப்போ தலைய சொறிஞ்சிட்டு இருக்கேன்.நீ என்ன பண்ணிட்டு இருக்க??' போன்ற Chat Messageகளை தவிர்க்க வேண்டும்.

10)நண்பர்கள் யாராவுது புகைப்பிடித்தால் ,'உங்கூட எங்கம்மா சேரக்கூடாதுனு சொல்லிருக்காங்க' என சொல்லி அவர் நட்பை முறித்து விட வேண்டும்.


எழுதிய முத்தான பத்து தீர்மானங்களையும் அடுத்த நாள் நம்ம அலுவலக நண்பரிடம் காட்டினேன். வாசித்து பார்த்தார். அவரின் முகம் மாறியது. கண்களிலே நீர் கொட்டியது. 'இருக்காத பின்னே..' என பெருமைபட்டுக்கொண்டே ,'அவ்வளவு நல்லவா இருக்கு' என்றேன். 'சுகாதாரமா இருக்கட்டுமேனு கண்ணாலேயே காரி துப்பினேன்' என்றார். மீண்டும் அந்த நாலு பேர் சிரித்தார்கள்.



வியாழன், 23 டிசம்பர், 2010

விக்கி- சில குறிப்புகள்




பெயர்: விக்னேஷ் (அ) விக்கி
நிறம்: மாநிறம்
குணம்:குசும்பு

எல்லா விக்னேஷ்களை போலவும் அவனும் 'விக்கி' என்றே அழைக்கப்பட்டான். விக்கியுடன் நான் அதுவரை அதிகம் பேசியது கிடையாது. பதினொன்றாம் வகுப்பில் எங்கள் பெஞ்சில் வந்து உட்காந்த போது முதலில் நானும் பிரிதிவியும் கொஞ்சம் பீதி ஆனோம். ஏனெனில் அதுவரை அவனை பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள் அப்படி. 'மாப்ள...நா இங்க உட்கார்ந்துக்கவா??' என விக்கி கேட்ட போது, நான் பிரிதிவியை பார்த்தேன். அவன் சாணியை மிதித்தவன் போல் முழித்தான். ஒரு வழியாய் 'ஹி..ஹி..' என இளித்துக்கொண்டே இடம் கொடுத்தோம். 'இனிமே நமக்கு சங்கு தான் டா' என பிரிதிவி என் காதில் மெல்லமாய் சொன்னான். அவன் நம்பிக்கை வீண் போகவில்லை. விக்கி தன் பணியை அன்றே செவ்வனே துவக்கினான். வாத்தியார் 'Computer Science' வகுப்பில் Internet க்கும் Intranet க்கும் என்ன வித்யாசம் என ஒரு கேள்வியை பொத்தாம் பொதுவாய் கேட்டார். வழக்கம் போல் மொத்த வகுப்புமே அமைதி காக்க, விக்கி "ஸ்பெல்லிங் சார்" என குனிந்து கொண்டு சத்தம் போட்டு சொன்னான். எல்லோரும் பயங்கரமாய் சிரித்தார்கள். கொடுமை என்னவெனில், யார் சொன்னதுனு யாருக்கும் தெரில. மொத்த வகுப்பும் எங்கள் பெஞ்சையே வெறித்து பார்த்தது.

வாத்தியார் எங்கள் அருகில் வந்து ,'மூணு பேருல யாருடா??' என்றார். நான் 'நாங்க இல்ல சார்' என்றேன். என் கன்னத்தில் ஜெட் வேகத்தில் ஒரு அறை விழுந்தது.அடுத்து விக்கி கண் கலங்கி 'எனக்கு சத்தியமா தெரியாது சார்'னு என கேட்பதற்கு முன்னே சொன்னான்.அந்த உலக நடிப்பை பார்த்து மிரண்டு போனேன். கடைசியாய் நின்ற ப்ரிதிவியை பார்த்தார். கோழி திருடியவன் போல முழி,கையில் கலர் கலரான கயிறுகள், பாக்கெட்டில் சீப்பு என சந்தர்ப்ப சாட்சிகள் எல்லாமே பிரிதிவிக்கு எதிராக அமைந்தது. அவன் பேச ஆரம்பிக்கும் முன்னாலே வாத்தி அவன் கன்னத்தில் மானாவாரியாய் தூர் வாரினார். அவர் போனப்பிறகு விக்கி ப்ரிதிவியிடம் ,'மாப்ள அப்டி இப்டி அழுது சீன போடுறத விட்டுட்டு ..மலையூர் மம்பட்டியான் மாதிரி வெரப்பா நின்னா இப்டி தான்' என்றான். பிரிதிவி பதிலேதும் பேசவில்லை. அவ்வளவு அடி வாங்கினால் யாரால் தான் பேச முடியும்.

பிடிக்காத பாடம்:வேதியல்

ஆனால் கொஞ்ச நாட்களிலேயே நாங்கள் மூவரும் நெருங்கி விட்டோம். அதுவரை சாம்பார் பெஞ்ச் ஆக இருந்த நாங்கள் சண்டியர் பெஞ்சாக மாறினோம். நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் திரும்பி பார்க்கும் முதல் பெஞ்ச் மாணவர்களுக்கு கெட்ட வார்த்தைகளை பரிசளித்தோம். விக்கி வேதியலை கண்டாலே சிலுவையை கண்ட ரத்த காட்டேரி போல் தெறித்து ஓடுவான். வேதியலில் இரண்டு இலக்க மதிப்பெண்களை அவன் வாங்கியதே இல்லை.இப்படி இருக்க, 'கொடுக்கப்பட்ட உப்பு என்ன வகையை சார்ந்தது' என்று கண்டுபிடிக்கும் ஆய்வுக்கூட சோதனை நடந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு மாணவனுக்கும் கொடுக்கப்பட்ட உப்பு எந்த வகையை சார்ந்தது என்று அவரவர் வேதியல் சோதனை செய்து கண்டு பிடித்து சொல்ல வேண்டும். விக்கி பாராளுமன்றம் சென்ற 'அண்ணன் அஞ்சாநெஞ்சர்'
போல் முழித்து கொண்டிருந்தான். 'டேய் மாப்ஸ்.. இந்த கருமம் என்னா உப்புடா??' என கேட்க, பிரிதிவி விளையாட்டாய் 'ஜாவா டை ஆக்ஸைட்' என்றான். அது கிண்டல் என்பது கூட தெரியாமல் வாத்தியாரிடம் போய் உப்பை காட்டி 'ஜாவா டை ஆக்ஸைட்' என்று பெருமை பொங்க சொல்லித்தொலைந்து விட்டான். அன்று விக்கிக்கு வேதியல் ஆய்வுக்கூடத்தில் சிறப்பு பூஜை நடந்தது. மூஞ்சி வீங்கி வெளியே வந்த விக்கியை பார்த்து நானும் ப்ரித்திவியும் அடக்க முடியாமல் சிரித்தோம்.கடைசியில் ஒரு பப்ஸ் வாங்கி கொடுத்து அவனை சமாதான படுத்தினோம்.


பொழுபோக்கு: நடிகைகளின் புகைப்படங்களை சேகரிப்பது

விக்கியின் maths நோட்டுக்குள் அழகான பாலிவுட் நடிகைகளின் போஸ்டர்களை வைத்திருப்பான். கரீனா கபூரும் ,கரிஷ்மா கபூரும் இருக்கும் படத்தை காட்டி ,'மாப்ள அக்காள நீ கட்டுற..தங்கச்சிய நான் கட்டுறேன்..' என சொல்வான். எதாவுது சுமாரான பெண்ணாக பார்த்து ப்ரித்திவிக்கு ஒதுக்கி விடுவான். என்ன காரணத்தினாலாவோ விக்கிக்கு தென்னிந்திய நடிகைகளை பிடிப்பதில்லை.

பட்ட பெயர்: மாரி

சில நேரங்களில் கட்டுக்கு அடங்காமல் எங்களை கேலி செய்து கொண்டிருப்பான். அப்போது எங்களின் பிரம்மாஸ்த்திரம் 'மாரி' தான். அவனை மாரி என கூப்பிட்டால் வெறியாகி விடுவான். எதற்காக அவனுக்கு அப்படி ஒரு பட்ட பெயர் வந்தது என்பது தெரியவே இல்லை.

பிறந்த நாள்: 25-12-1983

பிறந்த நாளை எப்போதும் சீரும் சிறப்புமாய் கொண்டாடுவான். 'ஆமா..இவர் பெரிய நேரு மாமா..' என நாங்கள் கேலி செய்வதையும் பொருட்படுத்த மாட்டேன். அந்த பிறந்த நாளில் சூராம்பழம்,முட்டைபஜ்ஜி, Fanta என எனக்கும் ப்ரித்திவிக்கும் வாங்கித்தந்தான். பதிலுக்கு நாங்கள் சுமார் ரூபாய் நாலு பெருமானமுள்ள ஒரு Handband பரிசளித்தோம். வாங்கி பார்த்த விக்கி 'பிச்சைக்கார பசங்களா..' என சொல்லிக்கொண்டு எங்களை ரோட்டில் விரட்டி வந்தது இன்னமும் பசுமையாய் இருக்கிறது.

மறைந்த நாள்: 13-03-2003

என் வாழ்வின் சோகமான தருணங்களில் ஒன்று விக்கியின் மரணம். ஒரு பைக் விபத்தில் மரணித்தான். அதீத வேகமாய் மூவர் பயணித்த வண்டி மைல் கல்லில் மோதி ,இருவர் அந்த இடத்திலேயே மடிந்தார்கள். விக்கி மட்டும் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவ மனையில் கோமாவில் ஒரு வாரம் இருந்து ,பின் மீண்டு எல்லோரையும் அழ வைத்து இறந்தான். விக்கியின் எல்லா செயல்களிலும் ஒரு மெத்தனம் இருக்கும். அந்த நேரத்தில் அது எங்களுக்கு சிரிப்பாய் இருக்கும். எத்தனையோ முறை அவனிடம் 'டேய் வெண்ணை.. மெதுவா போ... எங்கயாவுது விழுந்து வைக்கப்போறோம்' என அவன் வண்டி ஓட்டுகையில் சொல்லி இருக்கிறேன். 'மாப்ள மோளாத டா..இது தாண்டா திரில்லே' என்பான். ஹெல்மெட் போட்டிருந்தால்,மித வேகமாய் போயிருந்தால், சாலை விதிகளை மதித்து இருந்தால்..இப்படி எல்லா 'ஆல்களும்' நடந்திருந்தால் எங்கள் விக்கி இன்று எங்களுடன் இருந்திருப்பான்.விக்கியின் அம்மாவின் அழுகையை பார்த்த பிறகு விக்கி மேல் எனக்கு கோபமே மிஞ்சியது. இன்று ரோட்டில் மிக வேகமான பைக்குகளை செலுத்தும் நிறைய 'விக்கிகளை' பார்க்கிறேன். சொன்னால் கேட்பார்களா தெரிய வில்லை??

மெத்தனமாய் வாகனம் செலுத்துவோருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். விக்கியை பார்த்தால் நான் விசாரித்ததாய் சொல்லவும்!!!!



ஞாயிறு, 14 நவம்பர், 2010

கமல சாகசன்




நான் குழந்தையாக இருந்த காலத்தில் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் மறக்காமல் சில கேள்விகளை என்னிடம் கேட்பார்கள். " உனக்கு அம்மாவ ரொம்ப பிடிக்குமா அப்பாவ ரொம்ப பிடிக்குமா?? ", "நீ டாக்டர் ஆகபோறியா இல்ல இன்ஜீனியர் ஆக போறியா??",பெரும்பாலும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் 'ஈஈ...' என இளிப்பேன். அடுத்தத்தாய் 'உனக்கு கமல் பிடிக்குமா ,ரஜினி பிடிக்குமா?' என்பார்கள். கொஞ்சமும் தாமதிக்காமல் கமல் என கத்திவிடுவேன். இப்படியாக டவுசர் காலங்களில் இருந்தே இந்தாளை பிடித்துப்போனது. யாரோ ஒரு நடிகரை நமக்கு கொஞ்சம் அதிகமாய் பிடித்துப்போகும். எல்லா நல்ல படங்களை பார்த்தாலும், அவரின் மேல் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும். இன்றுவரை நாயகன் படத்தை முழுமையாய் முப்பது முறையேனும் பார்த்திருப்பேன் இன்னமும் என் பிரமிப்பு அகன்ற பாடில்லை.

அது ஒரு தீபாவளி நாள். இப்போது போல் டி.வி யை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்காமல் உண்மையாய் பண்டிகையை கொண்டாடிய காலம் அது. கமலின் குணாவும் , ரஜினியின் தளபதியும் வெளியாகியிருந்தது. எங்கள் தெருவில் நானும், குரு அண்ணனும் மட்டுமே கமல் ரசிகர்கள். ஒரு பெரும்படையே ரஜினி பக்கம் இருந்தது. நானும்,குரு அண்ணாவும் 'குணா' ,தளபதியை தூக்கி சாப்பிட்டு விடும் என்கிற ரீதியில் கலாய்த்து கொண்டிருந்தோம். " 'கண்மணி அன்போடு ..' பாட்டுக்கே நீங்கெல்லாம் எங்க ஆளு காலுல விழுகணும் டோய் " என்று ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றிகொண்டிருந்தோம். கடைசியில் பார்த்தால் 'குணா' கவிழ்ந்து விட ,தளபதி வெற்றி பெற்று விட்டது. நானும் குரு அண்ணனும் வீட்டுக்குள்ளேயே பதுங்கிவிட்டோம். சில நண்பர்கள் எங்கள் வீட்டு ஜன்னல் வெளியே நின்று ' சிட்டுகுருவி ..சிட்டு குருவி.. ' என குணா கமல் போல் கத்தியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. அதற்கு பின்னரும் தூர்தர்சனில் ரஜினி படம் போட்டால் வெளியே போய் கிரிக்கெட் விளையாடுவது, 'ஒளியும் ஒலியும்' களில் கமல் பாடல் போட்டால் கரைச்சல் கொடுப்பது, என எங்களின் அறப்போராட்டம் தொடர்ந்தது. இன்னொரு தீபாவளி.இந்த முறை தேவர் மகனும்,பாண்டியனும் மோதின.
பழைய அனுபவங்களால் நானும் குரு அண்ணனும் கொஞ்சம் அடக்கி வாசித்தோம். நல்ல வேளையாய் தேவர் மகன் ஜெயித்தது. நாங்க 'சாந்து பொட்டு , சந்தன பொட்டு ' என பாடிக்கொண்டே வெளக்கமாத்து குச்சியால் சிலம்பம் சுற்றி ரஜினி ரசிகர்களை பழிக்கு பழி தீர்த்தோம்.

'மூன்றாம் பிறை' பார்த்த போது தான் வாழ்க்கையிலேயே முதல் முறையாய் ஒரு சினிமா படத்திற்கு கலங்கினேன். அப்போது ஸ்ரீதேவி மேலே செமத்தியான கோபம் வந்தது. அது படம் என புரியாமல் அந்த சோகம் என்னையும் சேர்த்து கவ்வியது. அந்த மாதிரி நடிப்பு நடிக்க இப்போதிருப்பவர்களால் சத்தியமாய் முடியாது. அந்த படத்தில் ஸ்ரீ தேவி நடிப்பதை அந்த படக்குழு மொத்தமும் கைதட்டி ரசிக்குமாம். கமல் சிரித்துக்கொண்டே ஸ்ரீதேவியிடம் 'உங்கள நான் கிளைமாக்ஸ்ல பாத்துக்கிறேன்' என்பாராம். பிறகு நடந்ததெல்லாம் சினிமா சரித்திரம். சொச்சமாய் கமல் கையில் தேசிய விருது. வறுமை நிறம் சிகப்பு, பதினாறு வயதினிலே,நாயகன்,அபூர்வ சகோதரர்கள்,மகாநதி,புன்னகைமன்னன், தேவர்மகன் .... ம்கூம் சொல்லி மாளாது அந்த சொக்கிப்போன படங்களின் பட்டியலை.'அன்பே சிவம்' என்ற படம் ஓடி தொலைந்திருந்தால் இவ்வளவு மொக்கைபடங்கள் தைரியமாய் வெளிவந்திருக்காது. குருதிபுனல் படத்தில் கமல் பேசும் வசனங்கள் அத்தனையும் மனப்பாடம் எனக்கு. 'தைரியம்ங்கிறது பயப்படாத மாறி நடிக்கிறது தான்', ' பத்ரி..மிச்சமிருக்கிறவன்லாம் உன்ன மாறி பொறிக்கிக்கும், போராளிக்கும் கலப்புல பொறந்தவனுங்க ..' இப்படி கமல் படத்தின் எல்லாவற்றிலும் உரையாடல் கவனிக்கப்படும்.

கமலின் மேல் வைக்கப்படும் விமர்சனங்களையும் நானும் ரொம்ப காலமாக கவனித்து வருகிறேன். கண்டிப்பாய் ஆங்கில படங்களின் பாதிப்பு சில கமல் படங்களில் உண்டு என்பதை நான் ஒத்துக்கொள்வேன். பாதிப்புக்கும், சுடுதலுக்கும் உள்ள வேறுபாட்டை சில அதிபுத்திசாலிகள் புரிந்து கொள்வதில்லை. இன்னும் இணையதளங்களில் சிலர் கமல் நிகழாத அற்புதமா?? என பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நம்ம சுஜாதா சொல்வது போல் 'அவர்களை பசித்த புலி தின்னட்டும்...' . அவ்வை சண்முகி , ராபின் வில்லியம்சின் Mrs.Doubtfire படத்தின் காப்பி என எவனாவுது சொன்னால் நான் அகோரியாகி அவனை கடித்து தின்பேன். இதுபோல் இணையத்தில் கமல் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் 'என்னிடமும் கீ போர்டு இருக்கிறது' என்பதற்காகவே எழுதப்பட்டவை. தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்து கமல் முடிந்த வரை நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். நல்ல இயக்குனர்களுடன் சேரும் பட்சத்தில் கமலின் இரண்டாவுது இன்னிங்க்ஸ் நொறுக்களாய் அமையும்.
இதோ இந்த வருட தீபாவளி நாளில் வீட்டில் உட்காந்திருந்தேன். தேசிய விளையாட்டான 'ரிமோட் அமுக்குதல்' விளையாடி கொண்டிருந்தேன்.

'நடுவர் அவர்களே இன்றைய இளைஞர்களுக்கு என்ன குறை.... ' டொபக்

'இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் போத்திஸ்,
கோல்ட்வின்னர்...' டொபக்

'நாங்க பட்ட கஷ்டம் படத்தோட ஒவ்வொரு frameளையும் வந்திருக்கு..' டொபக்

'பக்தியையும் செக்ஸ் மாறி வீட்டுக்குள்ளேயே வச்சிகோங்க..வெளில கொண்டு வராதீங்க...'


உலக நாயகன் கருப்பு உடையில் வழக்கம்போல் தன் கருத்துக்களை தெனாவெட்டாய் பேசிக்கொண்டிருந்தான்.அதற்கு மேல் ரிமோட் என்கிற வஸ்து தேவை இல்லாமல் போகி விட்டது.


ஆமாங்க மன்மதன் அம்பு எப்போ ரிலீஸ் ???

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

எந்திரன் - சன் திரைவிமர்சனம்








வணக்கம். இது உங்கள் சன் திரை விமர்சனம். இந்த வாரம் நாம பார்க்க போற படம் சங்கர் இயக்கி, சூப்பர் ஸ்டார் நடிக்க, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் பெத்த பெருமையுடன் வழங்கும் 'எந்திரன்'. வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நமது சன் டாப்-டென்னில் இந்த படம் முதல் இடத்திலிருந்தது குறுப்பிடத்தக்கது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாகி இந்த படம் தியேட்டர்களை திருவிழா கூட்டங்களாக்கி கொண்டிருக்கிறது. குறிப்பா இது தமிழ் சினிமாவை அடுத்த வட்டத்திற்கு ...மன்னிக்கணும் அடுத்த கட்டத்திற்கு அலேக்கா தூக்கிட்டு போயிருக்குனு சொன்னா அது மிகையாகாது.

வெளியான முதல் வாரத்திலேயே இது வரை வெளியான எல்லா இந்திய படங்களின் வசூல் சாதனையையும் இந்த படம் 'டம்,டும்' னு அடிச்சி உடைச்சிடுச்சு. இந்தியால டிக்கெட் கிடைக்காம சில ரசிகர்கள்
அமெரிக்காவுக்கு பறந்து போய் படம் பார்த்ததா நமது செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. சில ரசிகர்கள் பெட்டி படுக்கையுடன் வந்து தியேட்டரிலேயே தங்கி அனைத்து காட்சியையும் பார்ப்பது இந்திய சரித்திரத்திலேயே இதுவே முதன் முறை. இப்போ நாம படத்தோட விமர்சனத்துக்கு போவோம்.

வசீகரன் ஒரு விஞ்ஞானி. (a+b)^2 க்கு அப்புறம் ஒரு நல்ல formula வரவே இல்லேன்னு தீவிரமா ஆராய்ச்சி பண்றார். தாடியைதவிர வேறேதும் அந்த ஆராய்ச்சியின் போது வளர்ந்ததா தெரியல. இறுதில 'டோகாமா' என்கிற ஒரு டெக்னாலஜிய கண்டுபிடிக்கிறார். அத ஒரு எந்திரத்துக்கு செலுத்துகிறார். அதனுடைய மூளை மனித மூளைய விட மூவாயிரம் மடங்கு வேகமா செயல் படக்கூடியது. அது ரெண்டாயிரம் யானையின் பலம் கொண்டது. ஆனால் சாணி போடாது. அந்த 'எந்திரனுக்கு' சிட்டினு பெயரிடுகிறார் வசீகரன். பின்பு வரிவிலக்குகாக 'அறிவுநிதி' எனப்பெயரை மாற்றுகிறார். சென்னையில்
டாட்டா சுமோவில் கூட்டமாய் போய் வில்லத்தனம் செய்கிறார் மந்திரி 'முண்டக்கலப்பை'. அவர் தன்னுடைய தம்பியை +2 வில் பாஸாக்க எந்திரனை உபயோகிக்க பார்க்கிறார். இதற்கிடையில அது ஒரு இயந்திரம்ங்கிறது தெரியாம 'எந்திரனை' கன்னா பின்னானு காதலிக்கிறார் ஐஸ்வர்யாராய். கடைசியில காதலையும், கலகத்தையும் எப்படி சமாளிக்கிறான்கிறதை அதிரடியா சொல்லிருக்கார் இயக்குனர் சங்கர். Hollywood க்கு சவால் விடுற மாறி அமைஞ்சிருக்கு அந்த கிளைமாக்ஸ் காட்சி. இப்படி ஒரு படம் இனிமே எடுக்கவே முடியாதுன்னு சினிமா வல்லுனர்கள் துண்டைப்போட்டு தாண்டுகிறார்கள்.


இவை எல்லாத்துக்கு மேலாக உலக திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையா ஒரு முயற்சியை சன் குழுமம் செய்திருக்கிறது. திரையரங்குகளில் படத்தின் போது இரண்டு காட்சிகளுக்கு ஒருமுறை, 'இந்த காட்சியை வழங்குவோர்' என விளம்பரங்கள் போடுவது மிகப்புதுமை. இது வர்த்தகத்தின் பல வாசல்களை திறக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் புதுமை கொப்பளிக்கிறது. சூப்பர் ஸ்டார் மிக இளமையாய் காட்சி தருகிறார். இவர் பக்கத்தில் நிற்கையில் ஐஸ்வர்யா கொஞ்சம் வயசானவராய் தெரிவதை மறுக்க முடியவில்லை. 'நா பேசினா டெசிபல்... நீ ராங்கா பேசினா எகிறும் உன்பல்லு' னு
பஞ்ச் பேசுவதாகட்டும், 'ரிங்கா ரிங்கா ரோசஸ்' னு காமெடி பண்ணுவதாகட்டும் , 'எனக்கு ஜுரம்,இருந்தும் 'ஐஸ்' ஸ பிடிக்குது' னு காதல் புரிவதாகட்டும் சூப்பர் ஸ்டார் பின்னியெடுக்கிறார். இறுதில இந்தியாவில் இருந்து கொண்டே இங்கிலாந்து பிரதமர் வீட்டில் இருக்கும் வெடிகுண்டை கண்டுபிடிக்கும் காட்சி மிக அபாரமாய் படமாக்க பட்டிருக்கிறது.ஓவ்வொரு காட்சியிலும் சங்கரின் உழைப்பு தெரிகிறது அதுதானா என்னவோ தியேட்டரில் ஒரே வியர்வை வாடை!!


ரஜினி ஐஸ்வர்யா ஆடும் டூயட் தவிர படத்தில் வேறு இடங்களிலும் நகைச்சுவை இருக்கிறது. அருமையான நகைச்சுவைக்கு சந்தானமும், கருணாசும் உத்தரவாதம் தராங்க. சந்தானம் அடிக்கும் இரட்டைஅர்த்த நகைச்சுவையை குடும்பமாக ரசிகர்கள் ரசிப்பதை காண முடிகிறது. வில்லனாக வரும் 'முண்டக்கலப்பை' கண்ணாலேயே அனைவரையும் மிரட்டிவிடுகிறார். அவர் டாட்டா சுமோவில் கூட்டமாய் வருவது புதுமை. 'அரிமா அரிமா' பாடல் பிரம்மாண்டத்தின் உச்சம். அந்த பாடலில் ஆயிரம் எந்திரன்கள் ஒரே நேரத்தில் ஆடுவது,குதிப்பது, மூச்சா போவது என தொழில்நுட்பத்தில் நாக்கைதுறுத்தி
மிரட்டியுள்ளனர். படம் வேகமாக போகிறது என்பதை காண்பிக்க ஸ்க்ரீனின் ஓரத்தில் '350km/hr' என்று போடுவது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. படத்தை பத்தி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் என்ன சொல்றார்னு கேட்போம்.



'அருமை தம்பி ரஜினியின் எந்திரன் ரசிகர்களை எப்போதும் மயக்கும் மந்திரன். இந்த கலைத்தாயின் மூத்த மகனின் படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு 'இலவச பாப்கார்ன்' வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நாளை முதல் அமல்படுத்துகிறது. மேலும் ஏழை எளிய மக்களுக்கு போய் சேரும் வண்ணம் இந்த படத்தின் பாடல் 'ரிங்டோன்'கள் இலவசமாய் வழங்க இருக்கிறது. எனக்கடுத்து தமிழர்களுக்காக தன்னிகரில்லாமல் உழைப்பவர் தம்பி ரஜினி. அவர் அரசியிலுக்கு வராத பட்சத்தில் எனக்கு நிரந்தர தம்பியாக இருப்பார்' இவ்வாறு தன் கர கர குரலில் கராராய் தெரிவித்தார் நம் முதல்வர்.

இப்போ ரசிகர்கள் என்ன சொல்றாங்கன்னு கேப்போம்.

' ஹெ..சூப்பர்ங்க படம் போற வேகமே தெரில அவளோ ஸ்பீடு'

(பாஸ்.. நீங்க பாத்தது ட்ரைலர்..')

'சூப்பர் ஸ்டார் பின்னிட்டார்... இன்னும் நாலு தபா பாப்பேன்'


''இது வரைக்கும் இந்தியால இப்டி ஒரு படம் வந்தில்லங்க..''



மொத்தத்தில் எந்திரன் ரசிகர்களின் "முதல்வன்". மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் வணக்கம்.







திங்கள், 13 செப்டம்பர், 2010

அய்யம்மா



வீடு நிறைய கூட்டம் நிரம்பியிருக்கிறது. 'அய்யம்மா' ரொம்பவும் சுருங்கிப்போய் படுத்திருக்கிறாள். கண்களை மூடியிருக்கிறாள்.கண்டிப்பாய் நினைவு இருப்பதற்கான அறிகுறி இல்லை. மரணத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிறாள், பாவம் அவளுக்கு 'Gate pass'
கிடைப்பதாயில்லை.எல்லோரும் எப்போது 'அது' நிகழும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் ஓரமாய் நின்று கொண்டிருக்கிறேன். எனக்கு யார் இவள்?? . என் அப்பாவை பெற்றவள். அப்பாவின் தாயை நாங்கள் 'அய்யம்மா' என்றே அழைப்போம். வீடு நிறைய இருக்கிற சாமி புகைப்படங்களை ஒரு முறை நோட்டம் விட்டேன். தொண்டைக்குழி தயக்கமாய் நகர்ந்து கொண்டிருந்த அய்யம்மாவை பார்த்து ,'சீக்கிரம் போயிரு அய்யம்மா' என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். அப்படி நான் நினைக்க என் வசம் இரண்டு காரணங்கள் இருந்தன.


1. இத்தனை வயதில் கடுமையான வலி, நினைவு பிறழ்வுகளுடன் அவளைப்பார்க்க சங்கடமாய் இருந்தது.

2. எனக்கு இன்னொருமுறை ஊருக்கு வந்து போக காசில்லை.

நம் மனதில் நினைப்பது அடுத்தவர்க்கு தெரிவதில்லை என்பது கொஞ்சம் வசதியாய் தான் இருக்கிறது.

என் எண்ணத்தில் இடியை இறக்கினாள் அய்யம்மா. ஒரு பெரியப்பா வீட்டுக்குள் வந்தவுடன் ,'ஏன் பிறந்தாய் மகனே...' என்ற பழைய பாடலை பாட ஆரம்பித்துவிட்டாள். அந்த அறையில் ஒரே சிரிப்பலை. அவள் சுருதி சுத்தமாய் பாடியது எனக்கு அடி வயிற்றில் புளியை கரைத்தது. சிலர் 'எப்பா இது பழைய கட்டப்பா..இன்னும் ஒரு மாசம் தாங்கும் பா..' என சொல்லிக்கொண்டே வெளியேறினர். திடீரென அய்யம்மா 'பாயாசம்..பாயசம்' என கேட்டாள். சாக போகிறவர்கள் கேட்பதை மறுக்க கூடாது என்பதற்காக, ஒரு தேக்கரண்டி பாலில் ஒரு ஜவ்வரசி போட்டு அய்யம்மா வாயில் ஊற்றினார்கள். கொஞ்சத்தை விழுங்கினாள். கொடுத்து முடித்தவுடன் சும்மா இல்லாமல், அத்தை அய்யம்மாவை பாயாசம் எப்படி இருந்தது என கேட்டார். அது 'டுபாக்கூர்' பாயாசம் என்பதை அய்யம்மாவால் இந்த சூழ்நிலையில் கண்டு பிடிக்க முடியாது என்று நினைத்துக்கொண்டிருந்தோம்.

' எம்மா...திடீர் பாயாசம் எப்டி இருந்துச்சு..??'

'...............'

'சொல்லுங்கம்மா.. திடீர் பாயாசம் எப்டி இருந்துச்சு??'

'ம்ம்ம்.. திடீர் பாயாசம் மயிறு மாறி இருந்துச்சு!!!'

எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். எனக்கிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிற்று.அய்யம்மாவின் பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தேன். சின்ன வயதில் அவள் சொல்லும் 'ஆதி பராசக்தி' கதைகள் ஞாபகம் வந்தது. பெரும்பாலும் கதைகளில் ஆதிபராசக்தி இறுதியில் அரக்கனை ஈட்டியில் குத்துவார். 'இத முதல்லயே செஞ்சிருக்கலாம்ல' என கேட்க நினைத்து, ஆதிபராசக்திக்கும்,அய்யம்மாவுக்கும் பயந்து அதை கேட்டதில்லை. அய்யம்மா ஒரு உணர்ச்சிப்பிளம்பு .கோபமோ, பாசமோ பொங்கிவிடுவாள். அவளை கண்டு நிறைய பேர் பயப்படுவதை பார்த்திருக்கிறேன்.திரும்பி அய்யம்மாவை பார்த்தேன். கிட்டத்தட்ட எலும்புக்கூடு போல படுத்திருக்கிறாள். கண்கள் முழுமையாய் மூடி இருக்கிறது. அவளைச்சுற்றி ஒருகூட்டம் உட்காந்து பேச்சுக்கொடுத்துகொண்டு இருக்கிறது.

'காசு...காசு...'

'உங்களுக்கு எதுக்கும்மா இப்போ காசு??''

'ம்ம்ம்..நாய் குரைக்கிறப்ப குப்பைல போடுறதுக்கு..'

திரும்பவும் சிரிப்பு. 'நாய் குறைக்கிறப்ப' என்பதை தேவையில்லாமல் சேர்த்து கேட்பவர்களை குழம்ப வைப்பது அந்தக்காலத்து குசும்பு. அய்யம்மா எழுந்து வந்து 'என்ன சிவராஸ்...காபி போடட்டுமா??' என்று கேட்டுவிடுவாள் போலிருந்தது. கடைசி காலங்களில் முதுமையை விட தனிமையே அவளை ரொம்ப வருத்தியது. பேச்சுத்துணைக்கு கூட ஆளில்லாமல் கஷ்டப்பட்டாள். அதான் அவள் சாகும் போதுகூட பேச துடிக்கிறாள்.கைநிறைய பணம், அழகான வாழ்க்கைத்துணை, வீடு, கார், தூரதேச பயணங்கள் என நம் ஆசையின் பட்டியல் எப்போதும் நீண்டு கொண்டே இருக்கும். கடைசியில் '
இன்னைக்கு சரியா நாமளே கஷ்டப்பட்டாவது எழுந்து போய் காலைக்கடனை முடிச்சிட்டு வந்திடனும்' னு மானுடத்தின் இறுதி நிலை வந்திடுது. மரணம் அய்யம்மாவை கவ்வுவதை வேடிக்கையாய் உட்காந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். 'நாளைக்கு நமக்கும் இது தான்' என்கிற சின்ன பயம் கூட யார் கண்ணிலும் இருப்பதாய் தெரியவில்லை.



இரண்டு,மூன்று வாரங்கள் அய்யம்மாவின் இந்த நிலை தொடர்ந்தது. உறவுகள் எல்லாம் சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தன. தூரத்து ஊர்களில் இருந்து வந்தவர்கள் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அம்மாவாசைக்கு போய் விடுவாள், பௌர்ணமிக்கு போய் விடுவாள் என்று ஆக்டோபஸ் போல் அருள்வாக்கு சொன்னவர்களை எல்லாம் முறியடித்து முன்னேறிக்கொண்டிருந்தாள். நினைவு முழுமையாய் தப்பியதால் என்னென்னமோ பேசினாள். 'நா எவ்ளோ செகப்பு... கரு கருனு இருக்குற அவருக்கு போய் கொடுத்துட்டாக...தெருவுல போனா எல்லாரும் கேப்பாக...' என சொன்னாள். எல்லாரும் கொஞ்சம் அதிர்ச்சி ஆகிப்போனார்கள். இதுவரை யாரிடமும் அய்யம்மா இந்த விஷயத்தை பேசியதில்லை. கிட்டத்தட்ட அறுபது வருடத்து ரகசியம். நல்லவேளை 'அய்யப்பா' உயிருடன் இல்லை. இன்னும் என்னென்ன ரகசியங்கள் அந்த மூளைக்குள் இருக்கிறதோ என்று எண்ணிக்கொண்டேன். சொந்தங்கள் பொறுமை இழந்து போயினர். ஒருத்தர் ,'இப்படி தான் ஆண்டிபட்டில ஒரு பெருசு இழுத்துக்கிட்டு போகாம கெடந்துச்சு... 'அப்பா' போயிட்டியேனு நடுராத்திரில அவர் மேல விழுந்து மூச்ச அமுக்கி முடிச்சுப்புட்டானுங்க' என சொன்னார். நல்லவேளை அய்யம்மா யாரையும் அப்படி யோசிக்க வைக்கவில்லை. ஒரு காலைவேளையில் இறைவனடி சேர்ந்தாள்.

அய்யம்மா ஐஸ் பெட்டியில் வைக்கபட்டிருக்கிறாள். மருமகள்கள்,மகள்கள்,பேரன்,பேத்திகள் என நெறைய பேர் அழுதுகொண்டிருந்தனர். ஆச்சர்யமாய் இருந்தது.எனக்கு கொஞ்சம் கூட அழுகையே வரவில்லை. மூஞ்சை மட்டும் சோகமாய் வைத்துக்கொண்டேன். அய்யம்மா அமைதியாய் படுத்திருக்கிறாள். அழுகைச்சத்தம் அதிகமானது. மூன்று வீடு தள்ளி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கைக்குழந்தை ஒன்று சிரித்து கொண்டிருந்தது. குழந்தையும் தெய்வமும் ஒன்று தான் போல!!!