வியாழன், 29 அக்டோபர், 2015

டவுசர் காலங்கள் - 1

                                  

தொண்ணூறுகளில் இதே உலகத்தில் தான் வளர்ந்தோமா என அடிக்கடி தலையை சொரிய வேண்டியிருக்கிறது. இந்த "வாட்ஸ் அப்" யுகத்திற்கு, அஞ்சல் அட்டையில் எச்சில் தொட்டு நாங்கள் ஸ்டாம்ப் ஒட்டிய காலத்தை விளக்க முடியாது.சந்திரகாந்தாவுக்கும் சக்திமானுக்கும் வாரம் முழுக்கக்காத்திருப்போம். "ஆசை" மிட்டாய்கள் எங்கள் பால்யத்தை இனிக்க வைத்தது. வாடகை சைக்கிள்கள், சீனி வெடிகள், ஜாமிட்ரி பாக்ஸ்கள்,ஒளியும் ஒலியும் என ஏக்கப்பெருமூச்சு ஏகமாய் வருகிறது. என் டவுசர் காலங்களில் வேகமாய் வளர்ந்து "பேண்ட்" போட்டு பெரியாளாகிவிட வேண்டுமென்பதே என் ஆகப்பெரிய லட்சியமாய் இருந்தது. பேருந்துகளில் அரை டிக்கெட் எடுக்கப்படுவது, அம்மாவின் மடியில் உட்கார்ந்துகொண்டு தியேட்டரில் படம் பார்ப்பது போன்றவையெல்லாம் எனக்கு பெருத்த அவமானத்தை கொடுத்தது. அந்த நாட்களில் "கொடிக்கா" பழங்களை பாக்கெட்டுகளில் போட்டுக்கொண்டு "ஆன் தி வே" யில் சாப்பிட்டுக்கொண்டே நடப்போம். "சா பூ த்ரீ" போட்டு ஆட்டங்களை ஆரம்பிப்போம். விருந்தினர்களுக்கு வாங்கி வரப்பட்ட "டொரினோ"க்கள் காலியாகி விடக்கூடாதென வேண்டிக்கொள்வோம்.
இப்படியாகவே எங்களின் டவுசர் காலங்கள் கிழிந்தது...மன்னிக்கவும் கழிந்தது.

எங்கள் தெருவின் பெயர் "ஒயிட்ஹவுஸ் தெரு". மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிமடியில் கிடக்கும் டவுன் தேனி. இந்த ஊரில் இருக்கும் ஒரு தெருவுக்கு இந்தப் பெயரா என பலர் குழம்புவார்கள். எங்கள் ஏரியாவிற்கு பக்கத்தில் ஒரு பெரிய வெள்ளை பங்களா இருந்தது. அது ஒரு முக்கியமான லேண்ட் மார்க், ஆகையால் "ஒயிட் ஹவுஸ்" தெரு என பெரும்பேரு பெற்றது எங்கள் தெரு. மணிரத்னம் ஒருவேளை அஞ்சலி படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுக்க நினைத்திருந்தால் எங்கள் தெருவிற்கு வந்திருப்பார். கூட்டமாய் எல்லா வயதிலும் குழந்தைகள் இருந்தார்கள். விசித்திரமான குணச்சித்திரங்கள் இருந்தார்கள். எல்லா நாட்களும் நிறைய சுவாரசியங்களை சுமந்து கொண்டே நகர்ந்தது. எங்கள் தெருவில் மொத்தம் நாற்பது வீடுகள். தெரு,மூன்று உபதெருக்களாக மானசீகமாய் பிரிக்கப் பட்டிருந்தது. அதை நாங்கள் "முன்னாடி லயன்" ,"நடு லயன்", "மூனாவது லயன்" என அழைத்து வந்தோம். நடு லயனுக்கு முன்னால் ஒரு பெரிய கிணறு இருந்தது. நிறைய கம்பிகள் போட்டு கிணற்றின் வாயை அடைத்திருந்தார்கள். அந்தக்கிணறு எண்பது சதவீதம் தண்ணீராலும், இருபது சதவீதம் ரப்பர் பந்துகளாலும் ‏நிரம்பியிருந்தது. உபயம் எங்களின் தெருக்கிரிக்கெட்.




நான் "மூனாவது லயன்" பிரஜை. அன்று நடு லயனில் கொஞ்சம் சத்தம் அதிகமாய் கேட்டுக்கொண்டிருந்தது. கண்டிப்பாய் "காக்காக்குஞ்சு"* விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். வேகமாய் கிளம்பினேன். கொய்யாவை ஒரு கடி கடித்து விட்டு மிச்சத்தை பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். எல்லோரும் கிணற்றை சுற்றியிருந்த தூணில் ஏறி இறங்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். "காக்காக்குஞ்சு" களை கட்டியிருந்தது. "ண்ணே..நானும் வரேன்.." யாரும் என்னைக்கண்டு கொள்ளவில்லை. பாலாவும், செல்வாவும் வெறியாய் திரும்பிப்பார்த்துவிட்டு விளையாட்டைத் தொடர்ந்தார்கள். அவர்கள் வெறியேறித்திரிவதற்கும் ஒரு காரணம் இருந்தது. முதல் நாள் எல்லோரும் "ஐஸ்பால்" விளையாடினோம். சாபூத்ரீயில் நான் தான் "பட்டு" ஆனேன். விதிப்படி கண்ணை மூடிக்கொண்டு மரத்தைத் தொட்டு நூறு எண்ண வேண்டும். எல்லோரும் ஒளிந்து கொள்வார்கள். பிற்பாடு ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும். நான் நூறு எண்ணி விட்டு எல்லோரையும் தேடக்கிளம்பினேன். தாகமாய் இருந்ததால் வீட்டில் போய் தண்ணீர் குடித்தேன். அங்கே டிவியில் வந்த ஒரு பாடலை பார்த்துகொண்டே அசந்து தூங்கிப்போனேன்.செடிகளின் நடுவிலும், கிணற்றின் கம்பி மேலும் ஒளிந்து கொண்டிருந்தவர்கள் "என்றாவது அவன் வருவான்" என முக்கால் மணி நேரமாய் காத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். பிற்பாடு பொறுமையிழந்து வீட்டிற்கு வந்து பார்த்திருக்கிறார்கள். நான் வாயை திறந்து கொண்டு தூங்கிக்கொண்டிருந்தது அவர்களுக்கு பெருங்கோபத்தை கொடுத்திருக்க வேண்டும்.எனக்கு அக்கனமே "ரெட் கார்டு" போடப்பட்டது. என்னை "ஆரும்" ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.என்னோடு "ஆரும்" அன்னந்தண்ணி புழங்க மாட்டார்கள்.

"ண்ணே..ப்ளீஸ்ண்ணே" கொஞ்சம் சத்தமாய் கத்தினேன். எல்லோரும் என்னைத்திரும்பிப் பார்த்தார்கள். செல்வா, பாலா, சேகர், சின்ன கார்த்தி எல்லோரும் என்னை விட ஒன்று இரண்டு வயது பெரியவர்கள். மாணிக்கம் என்னை விட நாலு வயது சீனியர்.இது போன்ற இக்கட்டான சூழலில் எல்லோரையும் "ண்ணே..." வென கூப்பிட்டு ஸ்கோர் செய்வது என்னுடைய வழக்கம், அன்று அது எடுபடுவது போலில்லை. மாணிக்கம் மட்டும் பக்கத்தில் வந்தார். முகத்தை கடுமையாய் வைத்திருந்தார். சம்பவத்தன்று சட்டையை கழட்டிவிட்டு புழுதி தரையில் அரை மணி நேரம் ஒளிந்து படுத்துக்கிடந்திருக்கிறார். அவருக்கு வகிடெடுத்து சீவிய தலை. சினிமா படங்களின் பாதிப்பால் கோபத்துடன் பேசும் போது முகத்தில் ஒன்றரை வண்டி ரியாக்சன்கள் காட்டுவார்.

"ரெண்டாவது படிக்கிறவெனெல்லாம் ஆட்டைல சேக்குறதில்லை...மரியாதையா ஓடிரு..."

இதற்கு மேல் அமாவாசையாய் இருந்து பயனில்லை. ராஜராஜ சோழனாய் மாறினேன். "போடா செரட்டைத்தலையா" என சொல்லிவிட்டு நாலாவது கியரில் ஓடத்தொடங்கினேன். மாணிக்கம் "டேய்" என கத்திக்கொண்டே விரட்டத்தொடங்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று தெருக்களை கடந்து ஓடிவிட்டேன். அந்தக்காலங்களில் நான் ஓடினால் ஒரு பய பிடிக்க முடியாது. மாட்டிக்கொள்வது போல இருந்தால் ஏதாவது வீட்டிற்குள் நுழைந்து விடுவேன். எதிராளிகள் உள்ளே நுழைய முடியாமல் திணறிப்போவார்கள். இப்படித்தான் ஒருமுறை ஒரு இக்கட்டான தருணத்தில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து விட்டேன். யார் வீடெனத் தெரியவில்லை. நிறைய பேர் கூட்டமாய் உட்கார்ந்து வி.சி.ஆரில் "நடிகன்" படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சேர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டேன். ஒரு மணி நேரம் கழித்து லைட்டை போட்டார்கள். ஒரு பெரியவர் மிரண்டு போய் "யார்றா நீ??" என்றார். நடந்ததை சொல்லி அந்த வீட்டில் ரெண்டு முறுக்கு சாப்பிட்டு கிளம்பி வந்தேன்.இந்த முறை அதற்குத் தேவையிருக்கவில்லை. மாணிக்கம் கொஞ்ச நேரத்தில் நின்று விட்டார்.



வேப்பமரத்தின் கீழே சோகமாய் நின்று கொண்டிருந்தேன். அங்கே குழி பறித்து ஒரு கூட்டம் 'குண்டு' விளையாடிக்கொண்டிருந்தது. மனம் அதில் ஒட்டவில்லை.  மூனாவது லயனில் ஒரு வீட்டிலிருந்து அதிகமாய் சத்தம் வந்தது. ஒலியை பின் தொடர்ந்து வீட்டை நோக்கி நடந்தேன். நிறைய பேர் உட்கார்ந்து தூர்தர்ஷன் செய்தி கேட்டுக்கொண்டிருந்தார்கள். ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார் என பேசிக்கொண்டார்கள். ஒரு பெரியவர் வீட்டின் வெளியே உட்கார்ந்து பொலம்பிக்கொண்டிருந்தார். 

"ரோசாப்பூ மாதிரி மொகம்..அதப் போய் கொல்ல அந்த பாவி பயலுகளுக்கு எப்படி மனசு வந்துச்சோ... நாட்டோட தூண சாச்சிட்டாய்ங்களே..."

கிட்டத்தட்ட அழுவது போல இருந்தார். கதர்சட்டை அணிந்து பாக்கெட்டில் வெள்ளைக்கலர் பேனா வைத்திருந்தார். திடீரென அந்த கேள்வி என் மனதில் உதித்தது. 

"அப்போ நாளைக்கு லீவா தாத்தா??.."

தாத்தா தலையில் அடித்துக்கொண்டார். அவருக்கு இன்னும் சோகம் குறையவில்லை போல என எண்ணிக்கொண்டேன்.
   




சனி, 4 ஜூலை, 2015

பாபநாசம்

                                      


நாயகன் நடிக்கும் போது கமலுக்கு முப்பத்திரண்டு வயது. அதற்கும் முன்பே சலங்கை ஒலி, மூன்றாம் பிறை, ராஜபார்வை, மரோ சரித்ரா போன்ற மைல்கல்களை கடந்து விட்டிருக்கிறார். ஆக கமல் தன் வாழ்நாளில் முப்பத்திரண்டு வயதிற்குள் அடைந்த உயரங்களை இப்பொழுது இருக்கிற எந்த ஹீரோவும் நினைத்துப்பார்க்கக்கூட வாய்ப்பில்லை. இணையங்களில் இந்த ஹீரோக்களின் ரசிகக்குஞ்சுகள் சண்டையிடும் போதும், ஒரு டொச்சு போட்டோவை போட்டு "லைக்" போடு "ஷேர்" பண்ணு என்று உயிரை வாங்கும் போதும் தாங்கொணா கோபம் வரும். கமல் "வேட்டையாடு விளையாடு" படத்தில் சொன்னது போல "த்தா..சின்ன பசங்களா..யார்ட்ட?" என கேட்கத்தோன்றும். கமலைப் பற்றிய எவ்வளவு விமர்சனங்கள் ஊடகத்தில் அலசப்பட்டிருக்கும் ஆனால் அவரின் நடிப்பை யாரும் விமர்சிக்க செய்ய முயன்றதில்லை. அது அவர்களால் முடிந்ததுமில்லை. இதோ இப்போது கூட உத்தமவில்லன் ஊத்தியது. திட்டிதீர்த்து விமர்சனங்களில் கூட கமலின் நடிப்பை அங்கீகரித்தனர். இத்துடன் முடிந்து விட்டது என விமர்சித்தவர்களுக்கு பாபநாசம் மூலம் தான் ஏன் "உலக நாயகன்" என உணர்த்தியிருக்கிறார்.

கதையை முழுக்க சொல்லி "பிரம்மஹத்தி" சாபம் வாங்கிக்கொள்ள ஐடியாயில்லை. மலையாள த்ரிஷ்யமும் பார்த்திருப்பதால் எங்கே பல்பு வாங்கி விடுவோமோ என பயந்து கொண்டே தான் போனேன். எங்கும் மூலத்தை மீறவில்லை நடிப்பில் மட்டும் கமல் தன் பீஷ்மத்தனத்தை காட்டிவிட்டார். மோகன்லாலுடன் ஒப்பிடக் கூடாதென்றாலும் பல இடங்களில் கமல் தன் சொந்த வழியில் சிக்சர் அடித்து விட்டார். இரண்டு வேற வெர்சன்கள். படம் முழுக்க எல்லோரும் 'திருநவேலி' பாஷ பேசுறாங்க. எங்கும் எரிச்சல் இல்லை. போக போக இதமாகி விடுகிறது. உண்மையில் அது திருநெல்வேலி பாஷையும் இல்லையாம் "உவரி பாஷை" என ஜெயமோகன் கூட "ஸ்கூப் நியூஸ்" சொல்லியிருக்கிறார்.



திரிஷ்யத்தின் வெற்றிச்சூத்திரமே அதன் திரைக்கதை தான். இது வரை வந்த இந்திய திரைப்படங்களில் மிகச்சிறந்த பத்து திரைக்கதைகள் பட்டியலிட்டால் அதில் த்ரிஷ்யம் கண்டிப்பாய் இருக்கும். மலையாள பதிப்பை பார்க்காதவர்கள் பாபநாசம் பார்த்தால் மெர்சலாவார்கள். தமிழ் படங்களின் இலக்கணங்கள் பல இடங்களில் மீறப்பட்டிருக்கும். படத்தில்  ஹீரோவுக்கு ஐம்பது வயதிற்கும் மேல எனக்காட்டுவதே நம்மூருக்குப்புதுசு. பொதுவாய் கமல் தன் கேரக்டரயும் தாண்டி "கமல்த்தனங்களை" காட்டுவார். விளக்கிச்சொன்னால் இலைமறைக்காயாய் பகுத்தறிவு வசனங்கள் பேசுவார், புத்திசாலித்தனமான கேலிகள் செய்வார். அது குணாவாக இருந்தாலும் சரி , தெனாலியானாலும் சரி. இதில் சுயம்பு லிங்கத்தின் எல்லைக்குள் தன்னை அடக்கிக்கொள்கிறார். திருநீர் பூசிக் கொள்கிறார். கோவிலுக்கு போகிறார். "ஆண்டவனுக்கு பயந்தா போதும்" என வசனம் பேசுகிறார்.



கெளதமி என்றவுடனே எனக்கு எரிச்சலாய் இருந்தது. மீனாவையே நடிக்க வைத்திருக்கலாம் எனத்தோன்றியது. உண்மையிலே கெளதமி சொதப்பவில்லை. வட்டார மொழியைத் தான் கொஞ்சம் கஷ்டப்பட்டபடி பேசுகிறார். எல்லோரும் திறம்பட நடித்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் படம் டாப் கியருக்கு போகும் போது பல இடங்களில் தியேட்டரில் விசில் பறக்கிறது. ரொம்ப அரிதாகவே நம் பொறுமையை சோதிக்காத யதார்த்த சினிமா வருகிறது. பார்த்து விடுங்கள்.படத்திற்கு கூட வந்த நண்பர் பிரபு இண்டர்வெல்லில் முழுக்கதையும் சொல்லாவிடில் பிஸ் அடித்துவிட்டு வீட்டுக்கு போய் விடுவதாக மிரட்டினார்.

"டேய்..நீ என்னடா..அவனவன் கதையை சொல்லிராதேனு கெஞ்சுவான்..நீ கதைய சொல்லிறுனு உயிரெடுக்குற..."

"இல்லடா..நான்ல மகாநதி பாத்துட்டு மூணு நாள் அழுதவன்...இதுல வேற குடும்பம் குட்டினு காட்றானுக..பயமா இருக்கு...நா கொஞ்சம் சாஃப்டு டைப்..சோகத்துக்கு செட் ஆக மாட்டேன்"

பிற்பாடு முழுக்கதையும் சீன் பை சீன் கேட்டுட்டுத் தான் படம் பார்த்தான். படத்துல வர்ற கேரக்டர்ஸ்ஸ விட கூட வர கேரக்டர்ஸ் விசித்திரமா இருக்கானுக. 

கொசுறு செய்தி: ஒரு வருஷம் முன்னாடி த்ரிஷ்யம் பார்த்து கண்ல தண்ணி வச்சுட்டன். இந்திய சினிமா உலகத்தையே நாக்கைத்துறுத்தி மிரட்டும் நாள் 
வெகுதூரத்தில் இல்லை என தீராக்கனா கண்டேன். இணையத்தில் தேடிய போது த்ரிஷ்யம், "சஸ்பெக்ட் எக்ஸ்" என்ற கொரிய படத்தை சுட்டு எடுத்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை படிக்க நேரிட்டது. "அடப்பாவி நீங்களுமா??" என டென்சனாகி அந்த கொரிய படத்தை டவுன்லோடி பார்த்தேன் (ஆம் சப்டைட்டிலுடன் தான் ) பிளாட் தவிர வேறு பெரிய ஒற்றுமை கிடையாது என்று அந்த வழக்கை என் மனதிற்குள் தள்ளுபடி செய்தேன். ஆனால் ஒரு ஆனந்த அதிர்ச்சி சஸ்பெக்ட் எக்ஸ். படம் திர்ஷ்யத்தை விடவும் சூப்பர். என்னை போல் சக சைக்கோக்கள் தரவிறக்கி பார்த்து பயனடையுங்கள். 



வெள்ளி, 3 ஜூலை, 2015

வாயாடிகள் உலகம்


எங்கள் வீட்டில் இரவில் கொசுத்தொல்லை அதிகமாக இருந்தால், ஏதாவது ஒரு செய்திச் சேனலைப்போட்டு விடுவேன். ஐந்தே நிமிடத்தில் கொசுக்கள், பூச்சு பட்டைகள் எல்லாம் தெறித்து ஓடிவிடும். டீமாண்டிகளும், காஞ்சனாக்களும் மிரளுமளவு கூச்சலிடுகிறார்கள்.நம்மை டம்மாரமாக்க தினமும் விடாமுயற்சி செய்கிறார்கள். எல்லா தமிழ் ஆங்கில செய்திச்சேனல்களிலும் சாயங்காலத்துக்கு மேல் "கோட்சூட் தொகுப்பாளர்", வீடியோகான்ஃப்ரன்ஸ் போட்டுவிட்டு உட்கார்ந்து விடுவார். எல்லா கட்சியிலிருந்தும் "ஏழு கட்டையில்" பேசக்கூடியவர்கள் விக்ஸ் போட்டுவிட்டு ஆஜராகி விடுவார்கள். அன்றைய டாபிக்கை எடுத்து பிரிச்சி பேன் பார்க்க ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் பெட்ரோல் விலை உயர்வு, ஜெயலலிதா விடுதலை, யோகா நாள் என இவர்களுக்காகவே தினமும் ஒரு ஃபுல்டாஸ் பால் காத்திருக்கும்.

தொகுப்பாளர்கள் கோட்சூட் போடவில்லையென்றால் டிவி லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என எதுவும் விதிமுறைகள் இருக்கின்றனவா தெரியவில்லை?. "இந்த பரபரப்பான அரசியல் சூழலில் விஜயகாந்த், கலைஞரின் வீட்டுக்கு அருகில் வாக்கிங் போனது எந்த வித சலனத்தை ஏற்படுத்தும்..?" என்கிற ரீதியில் ஆரம்பிப்பார்கள். எல்லா கட்சியிலிருந்தும் ஒரு உருப்படி வந்திருக்கும். தலைப்பு என்னவிருந்தாலும் இவர்களுக்கு கவலையில்லை, அவர்கள் தயார்செய்ததை கொப்புளிப்பார்கள். போனவாரம் கூட மெட்ரோ ரயில் பற்றிய விவாதத்தில் குமாரசாமி தீர்ப்பை பற்றி ஐந்து நிமிடம் பேசினார் ஒரு பராக்கிரமசாலி. அவர்  பேசியதை அவர் கட்சிக்காரர்கள் கேட்டால் கூட ரத்த வாந்தியெடுத்து செத்து விடுவார்கள். சம்பந்தமே இல்லாமல் மூன்று நிமிடம் தங்கு தடையின்றி தமிழில் பேசினால் இவர்கள் வென்று விட்டதாய் நினைக்கிறார்கள். எல்லாக்கட்சிகளும் ஆளும்கட்சியை கழுவி ஊற்ற வேண்டும், ஆளும்கட்சி போன ஆட்சியை கரித்துக்கொட்ட வேண்டும். சமூக ஆர்வலர்கள் எல்லாவனையும் திட்ட வேண்டும். போன்றவையெல்லாம் இந்த விவாதங்களின் விதி.





கொஞ்ச நாட்களுக்கு முன் பா.ஜ.க வின் ஹச்.ராஜா "பர்தாவை தடை செய்ய வேண்டும்" என்று எங்கேயோ கூட்டத்தில் பொங்கிவிட்டார். இவர்கள் இங்கே 
சாயங்காலம் கடையை திறந்து விட்டார்கள். திராவிட கட்சிகளெல்லாம் சேர்ந்து ஏறி அடித்துக்கொண்டிருந்தன. திடீரென நாமம் போட்ட ஒருவர் "ஏன் பெரியார் கூட இதைத் தானே சொல்லியிருக்கிறார்.. ராஜா பெரியார் வழியில் நின்று இதை சொல்லிவிட்டார் என எடுத்துக்கொள்ளலாமே.." என்றார். இவ்வாறாக நேரலையில் வண்டி வண்டியாய் வாந்தியெடுக்கிறார்கள். காவிக்கும் கருப்புக்கும் கட்டாயத்திருமணம் செய்து வைக்கிறார்கள். கழகங்கள் சார்பில் பெரும்பாலும்  வழக்கறிஞர்கள் தான் களமிறங்குகிறார்கள். கேசுகள் கைவசம் நிறைய இருப்பதால் எல்லாக்கழகத்திலும் வக்கீல்களுக்கு "வாக் இன்" இண்டர்வ்யூ நடந்திருக்கும் போல. எல்லாரும் ஒரே நேரத்திலே பேசுவார்கள், அடுத்தவர் பேசுவது கேட்டு விடக்கூடாது என்பதில் குறியாய் இருப்பார்கள். 

பேசுவோர் எல்லோரும் கையில் ஆளுக்கு ரெண்டு பேப்பர் வைத்திருக்கிறார்கள்.சேனல்களில் மெதுவடை எதுவும் கொடுப்பார்களோ என்னவோ..  இன்னொரு ரக பேச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்களது பேச்சு ஆழமாய் கருத்துள்ளது போல இருக்கும். முழுமையாய் விளங்காது. யாரோ மூளையில் கொத்து பரோட்டா போட்டது போல இருக்கும். "முதலாளித்துவத்தால்  கட்டமைக்கப்பட்ட கூறுகளினால் எழுப்பப்பட்ட ஒரு வினையூக்கியாய் மாறி நம் சக தோழனே நம் ரத்தத்தை உறிகிறான்". மேலே சொன்ன வாக்கியம் ஒரு பானை பிரியாணியில் ஒரு லெக் பீஸ். இவர்கள் எல்லாக்கட்சியினரையும் வாரிவிட்டு தாங்கள் நடுநிலையாளர்கள் 
என்று நிலைநாட்டுவார்கள்.

ஆங்கில சேனல்கள் "அதுக்கும் மேல" செய்கிறார்கள். டைம்ஸ் நவ் ஆசாமி.... சாரி... கோஸாமி , அடி வயிற்றிலிருந்து கத்தி ஒரு மிகப்பெரிய கேள்வி கேட்பார்.சம்பந்த பட்டவர் பதில் சொல்வதற்குள் புகுந்து இடைமறித்து இவரே பேசுவார். பெரும்பாலோனோர் பொண்ணு பார்க்க கூட வந்த ஒன்று விட்ட சித்தப்பா போல அமைதியாக உட்கார்ந்துவிட்டுப்போவார்கள். சாயங்காலம் ஆறு மணிக்கு மேல மொத்த இந்தியாவும் குத்த வைத்து உட்கார்ந்து எங்கள் சேனலை தான் வெறிக்க வெறிக்க பார்க்கிறார்கள் என உலகமகா விளம்பரம் வேறு போடுகிறார்கள்.


இதற்கு மேல எழுதுறதுக்கு மேற்படி டாப்பிக்கில் எனக்கும் எதுவும் தோன்றவில்லையென்பதால் பாயிண்ட் தேற்றுவதற்காக புதியதலைமுறையை போட்டேன். வழக்கம் போல வீடியோ கான்ஃபிரன்ஸ்ஸில்  கட்டம் கட்டி ஆறுபேரை காட்டிக்கொண்டிருந்தார்கள். மெட்ரோ ரயில் பற்றி "ப்ராது" கொடுத்திருந்தார்கள். எல்லோரும் மெட்ரோ ரயிலை "நாம்பெத்த புள்ள" என சொந்தம் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.

"மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட...."

"இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட..."


"நாங்கள் டெல்லயில் 2002ல் மெட்ரோ ரயிலை தொடங்கிய போது..."


"கட்டணத்தை குறைக்க வேண்டுமென்று நாங்கள் அப்போதிருந்தே சொல்...."


செயற்கைக்கோள் வழியாக இலவச "ரத்த அழுத்தத்தை" வழங்கத் தொடங்கினார்கள்.

ஞாயிறு, 31 மே, 2015

திருப்பூர் குமரன்



தலையில் கையை வைத்துக்கொண்டார். எனக்கு வயிறு வைப்ரேசன் மோடில் இருந்தது. என் முகத்தில் வியர்வை இருந்ததை சுற்றியிருந்தவர்கள் வியப்பாய் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பத்துவயதில் எனக்கு வந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாதென்று எண்ணிக்கொண்டேன். இன்னொருமுறை சொதப்பினால் பரமசிவம் சாரின் எருமைமாட்டுக்கையால் எனக்கு அடி உறுதி. ஒருமுறை யோசித்துப்பார்த்துவிட்டு மீண்டுமொருமுறை நடந்து வந்து உரக்கப்பேசினேன்."இந்த உடம்புக்கு கையிரண்டு காலிரண்டு எனக்குடுத்த இறைவன்... அந்த உயிரை மட்டும் இரண்டாக கொடுத்திருந்தால் நாட்டுக்காக அடுத்தடுத்து கொடுத்திருப்போம்..........." சொல்லிவிட்டு மிரட்சியாய் அவரை பார்த்தேன். வேகமாய் பக்கத்தில் வந்தார்.

"அப்பிடியே தான். ஒன்னே ஒன்ன மட்டும் சேதத்துடு... "உயிரை மட்டும்"னு சொல்றப்ப ஒரு ஏக்கம் தெரியணும்... அதோடு சொல்லிரு.. இன்னைக்கு வீட்டுக்குக்கிளம்பிறலாம்.."

கன்னம் தப்பித்த சந்தோசம் வெகு நேரம் நீடிக்கவில்லை.அந்த "உயிரை மட்டும்" அடுத்த அரைமணி நேரம் என் உயிரை வாங்கியது. ஆண்டு விழாவில் "திருப்பூர் குமரன்" நாடகம் தான் போடுவேன் என பரமசிவம் சார் அடம்பிடித்திருந்தார். ஐந்தாம் வகுப்பில் திருப்பூர் குமரனைத் தேடினார். தலையை சொறிந்துகொண்டே நிமிர்ந்து பார்த்த என்னை எப்படி அந்த வேஷத்திற்கு தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. அன்னைக்கு நான் லீவில் இருந்திருக்கக் கூடாதாவென பலமுறை யோசித்திருக்கிறேன். ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் இறுதி காட்சி தான் எங்கள் நாடகத்தின் முக்கியமான பகுதி. அதை சார் நிறைய தடவை வி.சி.ஆரில் போட்டுக்காட்டி உயிரை வாங்குவார். பெரும்பாலான நாடகத்தின் வசனங்கள் அவ்விடமிருந்தே உருவப்பட்டன. அவர் அந்த வருடம் வெறியாய் இருந்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. எங்கள் பள்ளியில் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்த ஆசிரியைகள் ஒரு காமெடி நாடகம் தயார் செய்து கொண்டிருந்தார்கள். அது தான் அந்த வருடத்தின் "ஹைலைட்" என்று ஹெட்மாஸ்டர் பீற்றி வருவதாக ஒரு வதந்தி இருந்தது. அச்செய்தி வேப்ப மரத்தின் பின்னால் நின்று பரமசிவம் சாரை நிறைய சிகரெட் புகைக்க வைத்தது.

பரமசிவம் சாரின் தொப்பையும் வழுக்கையும் அவரது நாற்பது வயதை நியாயப்படுத்தும். அடிக்கடி கர்சீப்பை வைத்து முகத்தை துடைத்துக்கொள்வார். தினமும் சாயங்கால ரிகர்சலுக்கு முன் சொந்த செலவில் எங்களுக்கு பஜ்ஜியும் பலாச்சுளைகளும் வாங்கித்தருவார். நாடகத்தின் முதல் காட்சியில் திருப்பூர் குமரன் தன் அம்மாவிடம் சென்று போராட்டத்துக்காக ஆசி வாங்குவார். அம்மாவோ வருத்ததுடன் வழியனுப்புவார். அதில் அம்மா ஒரு வசனம் சொல்லுவார் ,"குமரா..பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு போயிருக்கும் உன் மனைவி திரும்ப வந்தால் நான் என்ன பதிலப்பா சொல்லுவேன்..". அம்மாவாக நடித்தவள் சி கிளாஸ் அஜந்தா. அவள் ஒருமுறை "பிரசவத்திற்கு" என்று சொல்வதற்கு பதிலாய் "பிரதோசத்திற்கு" என சொல்லிவிட்டாள். பரமசிவம் சார் பக்கத்தில் வந்து "லூசுக்கழுத" என சொல்லி அவள் தலையில் ஒரு "யார்க்கர்" போட்டார்.அஜந்தா ஏங்கி ஏங்கி அழுதாள். அதன் பிற்பாடு அவளுக்கு எப்போதும் டங்க் ஸ்லிப் ஆகவேயில்லை. வீட்டுக்கு கிளம்பும் போது அஜந்தா என்னிடம் வந்து "அவரு எது வாங்கி கொடுத்தாலும் நா இனிமே திங்க மாட்டேன்..இன்னிக்கு தின்னதையே இப்ப வாந்தி எடுக்கப் போறேன்.." எனச்சொல்லி வாய்க்குள் விரலை விட்டாள். நான் பீதியானேன். நல்ல காலம் செரிமானமாகிவிட்டது போல அவளது இரைப்பை ஒத்துழைக்கவில்லை.

அம்மாவின் கதியே அப்படியென்றால் திருப்பூர் குமரனை விட்டிருப்பாரா?? வெளுத்து வாங்கினார். எனக்கு உளறல் பிரச்சனையில்லை ஆனால் வசனங்கள் மறந்து போய்விடும். குமரன்  பிரிட்டிஷாரிடம் போராட்டத்தில் பேசும் வசனம் மிகப்பெரியது. திருப்பூர் குமரன் இவ்வளவு நீளமாய் எப்படித்தான் பேசினாரோ என நினைத்துக்கொள்வேன். ஆக்ரோஷமாய் பேசிக்கொண்டிருக்கும் போதே அடுத்த வரி மறந்து போகும், முகத்தைக்குறுக்கி ஓரக்கண்ணால் சாரை பார்ப்பேன். அவர் மதம் கொண்ட யானை போல ஓடி வந்து கொண்டிருப்பார். அடைமழையாய் அடித்து நொறுக்குவார். உண்மையில் ரெண்டாவது மூன்றாவது அடியிலேயே எல்லாம் ஞாபகம் வந்து விடும். அவர் அடிக்கென்றே ஒரு மகத்துவம் இருந்தது.

"இருபத்தொரு வயசுல நாட்டுக்காக செத்தவெண்டா...எவஞ்சாவான்?? அப்டியே சிங்கம் மாதிரி உருமிட்டு சாஞ்சுட்டான்...எப்பேர் பட்ட வைராக்கியம் இருந்தா சாகுற போது கூட கொடிய விடாம இருந்திருப்பான்... அப்படியாப்பட்டவன் குரல் எப்டியிருக்கும்... நீ கஞ்சிக்கு செத்தவன் கெனக்கா மொனங்குற..."


'வைராக்கியம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் அப்போது தெரிந்திருக்கவில்லை. அர்த்தம் கேட்க அது சரியான நேரமில்லை என்பதால் அமைதி காத்தேன். பரமசிவம் சார் எல்லா வசனத்தையும் நடித்துக் காண்பிப்பார்.வாட்ச்சை மேஜையில் கழட்டி வைத்து விட்டு, தொண்டையை உருமி ஆரம்பிப்பார். மொத்த வசனத்தையும் தங்கு தடையின்றி கணீரென்று பேசுவார். அவர் கண்களெல்லாம் கலங்கியிருக்கும். முகம் ஆக்ரோஷமாய் இருக்கும். நடித்து முடித்து விட்டு "இப்டி பண்ணனும்"பார். நான் குல தெய்வத்தை ஒரு முறை கும்பிட்டுக்கொள்வேன்.

ஒரு வாரத்தில் எல்லாம் இலகுவானது. வசனங்கள் பதிந்து போனது. நெஞ்சை நிமிர்த்தி, குரலை உயர்த்தி நேராய் கண்களை வைத்துக்கொண்டு பேசுவது பிடிபட்டது. சார் ஓரமாய் உட்கார்ந்து கொண்டு "அவ்ளோ தான்..அருமே..அருமே.." என்பார். வீட்டில் கூட சட்னியில் உப்பு அதிகமாய் இருந்தால் "ஓவர் ஆக்டிங்" செய்ய ஆரம்பித்தேன். இந்த "ஆண்டுவிழாப் பேய்" எப்ப எறங்குமோ?? என நொந்து கொண்டாள் அம்மா. முன்பு எருமை மாடாய் தெரிந்த பரமசிவம் சார் இப்போது பசு மாடாய் தெரிய ஆரம்பித்தார். மிக அழுத்தமாய் திருப்பூர் குமரன் எனக்குள் பதிந்து போனார். தனியாய் இருக்கும் வேளையில் குமரன் பிரிட்டிஷ் போலீசிடம் பேசும் காட்சி என் மனக்கண்ணில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். இந்தியக்கொடியை மானசீகமாக கையில் ஏந்திக்கொண்டு "இறுக்கமாய்" பிடித்துக்கொள்வேன். பரமசிவம் சார் சொல்வது போல "லட்சிய உடும்புப் பிடி.."

"உனக்கு அது மேடையா தெரியக்கூடாதுடா..திருப்பூர் வீதியா தான் தெரியனும்..நீ தான் குமரன்..எதுக்கும் பயப்படாத குமரன்...தேசபக்தியால் தோலெல்லாம் இரும்பாப் போனவன்..உயிற துச்சமுனு இருந்தவன்...தமிழ்நாட்ல பிற்பாடு ஏற்படப்போற புரட்சிக்கு விதை நீ..முக்கியமா தேசியக்கொடிய விட்டுவிடாமல் உயிர்மாய்த்த கொடிகாத்த குமரன்..."  பரமசிவம் சார் மகுடி ஊத நான் பாம்பானேன். ஆனால் மொத்த ஸ்கூலும் எங்கள் மீது வெறியாய் இருந்தது. நாடகத்துக்கு கூடுதலாய் பதினைந்து நிமிடம் வேண்டுமென்றார் சார். "ரங்கீலா" பாடலை தூக்கிவிட்டால் நமக்கு அந்த பதினைந்து நிமிடம் கிடைக்குமென தலைமைக்கு மேற்கொண்டு யோசனையும் சொன்னார். பள்ளியின் கலைக்காதலர்கள் கொதித்தார்கள். எல்லோரும் சாருக்கு எதிராக தங்கள் குரலை பதிவு செய்தார்கள்.தலைமையாசிரியர் பரமசிவ சாரிடம் பேசினார்.

"ஒரு மணி நேரம் நாடகம் பாத்தா எல்லாருக்கும் போர் அடிச்சிரும் சார்..ஒரு பாட்டு ..ஒரு நாடகம் அது தான நம்ம ஐடியா.."

"ஏங்க திருப்பூர் குமரன விட, தெரியாத மொழிப்பாட்டு பெருசா போச்சா.."

"எல்லாம் சேர்ந்தது தான் கலை நிகழ்ச்சி...நீங்.."

"செரி விடுங்க..அப்போ "நேத்து ராத்திரியம்மா" வையும் போட்டு கலைய வளருங்க..."

கடைசியில் "ரங்கீலா" தப்பித்தாள். அந்த மிகப்பெரிய நாள் வந்தது. வேட்டி சட்டை மற்றும் முழு மேக்கப்புடன் சாயங்காலமே தயார் செய்யப்பட்டேன். அம்மா அஜந்தாவுக்கு தலையெல்லாம் பவுடர் கொட்டப்பட்டு இன்ஸ்டன்ட் கிளவியானாள். கடைசிக்காட்சியில் வரும் ரத்தத்திற்காக சிவப்பு மை பாட்டில் தயாராய் இருந்தது. வசனத்தை ஆரம்பித்திலிருந்து ஒருமுறை சொல்லிப்பார்த்தேன். திருப்தியாய் இருந்தது. மறந்து விட வாய்ப்பேயில்லை என தைரியம் வரும் வரை சொல்லிப்பார்த்தேன். பரமசிவம் சார் திடீரென வந்து திருநீர் பூசி விட்டார். 



"அதிகமா தண்ணி குடிக்காத...அப்புறம் மேடைல ஏறுனதுக்குப்புறம் ஒன்னுக்கு வரும்..."

"சரி சார்"

"நிமிந்து நின்னு பேசணும்..கூன் போட்டுட்டு கெளவி மாதிரி நிக்கக் கூடாது"

"சரி சார்"

மேடை ஏறினோம். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. திருப்பூர் குமரன் சாகும்போது மக்கள் கூட்டம் அமைதி காத்தது. கடைசியில் கொஞ்சமாய் கைத்தட்டல் கேட்டது. முடிந்து மேடையிலிருந்து பின்பக்கமாய் கீழிறங்கினோம். பரமசிவம் சார் ஓடி வந்து கட்டிக்கொண்டார். தன் தொப்பையை வைத்து அமுக்கி தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். சரியாக மேடைக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தோம். எனக்கு வியர்த்துக் கொட்டியிருந்தது. தண்ணீர் குடித்தேன். பெரிதாய் கைத்தட்டல் சத்தம் கேட்டது.

"ரங்கீலா ஆரம்பிச்சிட்டாங்க போல...சரி கெளம்புறேன்" என பரமசிவன் சார் தன் பாக்கெட்டுக்குள் கை விட்டு சைக்கிள் சாவி தேடினார்.

நான் அவரை கொஞ்சம் குழப்பமாய் பார்த்தேன்.

"மூணாவது பரிசோ..ஆறுதல் பரிசோ தருவாங்க..அதுக்கெதுக்கு நா தேவுடு காக்கணும்...ம்ம்ம் ஒரு மாசமா குமரன் புண்ணியத்துல சந்தோசமா இருந்தேன்.."

அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"மத்த விஷயத்தலெல்லாம் ஜெயிச்சா தான் வெற்றி..பிடிச்ச விஷயத்தை பண்ணினாலே வெற்றி...அடுத்தவனுக்கு எது பிடிக்கும்? எது பண்ணினா கைத்தட்டுவாங்கனு தேடிட்டே அலையக்கூடாது... " சைக்கிளை மிதித்து கிளம்பினார். இருளை கிழித்து அந்த சைக்கிள் போய்க்கொண்டிருந்தது. வேகமாய் ஓடிப்போய் சாரின் சைக்கிளில் ஏறிக்கொண்டேன்.

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

எழுத்தாளன் - பகுதி3 (நிறைவுப் பகுதி )

   



                                         எழுத்தாளன்- பகுதி 1

                                        எழுத்தாளன் - பகுதி 2

ஹைதராபாத்தின் "ஜூப்ளி ஹில்ஸ்" பணக்காரர்கள் வாழும் பகுதி. பாறைகளைக்குடைந்து மாளிகைகள் கட்டியிருப்பார்கள். பளபளக்கும் வெளிநாட்டு இறக்குமதி கார்கள் வீடுகளின் முன் நின்று சிரிக்கும். குமரேசன் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தான். காலை குளிர்க்காற்று முகத்தில் அடித்து அவனின் வியர்வையை துடைத்தது. அப்பல்லோ மருத்துவமனை வளாகம் அந்த அதிகாலை நேரத்திலேயே சுறுசுறுப்பாய் இருந்தது. குமரேசன் கையில் வைத்திருந்த ஃப்ளாஸ்க்கை தூக்கிக்கொண்டு நாலாவது மாடிக்கு ஏறினான். சுகுணாம்மா முன்னால் போய் நின்றான். அவள் லேசாய் சிரித்து அவனது கையிலிருந்த காபியை குடித்தாள். 


ஜேக்கப் மூன்று நாளாய் ஐ.சி.யுவில் இருந்து முதல் நாள் தான் பொது வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். யாரிடமும் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை.சுகுணாம்மா வழக்கம் போல வீட்டில் போய் குளித்து வர கிளம்பினாள். 

ஜேக்கப் கண் முழித்துப் பார்த்தார். தலையை லேசாய் தூக்கி சுகுணாம்மாவைத் தேடினார். குமரேசன் அவரைப் பார்த்து "அம்மா..குளிச்சிட்டு வர போயிருக்காங்க..வந்திருவாங்க.." என்றான். பெட் பேனை எடுத்து வைத்தான். ஜேக்கப் கூச்சமாய் அவனைப் பார்த்தார். "சும்மா போங்க..நான் வேணா திரும்பிக்கிறேன்..". போனார். கொஞ்ச நேரம் குமரேசன் அமைதியாய் இருந்தான். அவர் மெல்லமாய் கட்டிலில் எழுந்து இருந்து உட்கார்ந்தார்.

"ஜேக்..பாத்து..பாத்து...இப்போ பரவாயில்லையா.."

அவர் தலையாட்டினார். கொஞ்ச நேரம் கண் இமைக்காமல் அவரைப்பார்த்துக்கொண்டிருந்தான். கொஞ்சமாய் கனைத்து விட்டு பேசத்தொடங்கினான்.  "அடுத்த நாள் காலைலேயே அம்மா அவன கெளம்ப சொல்லிட்டாங்க...எனக்குத் தெரியும் அன்னிக்கு அவ்ளோ குடிச்சதுக்கு காரணம் அவனாத்தான் இருக்கும்... லூசு நாய்.."

அவர் குமரேசனையே பார்த்துக்கொண்டிருந்தார். "சரியான கிறுக்கன்..யார்கூட எப்பிடி பழகணும்னு தெரியாது..நல்ல வேள ஒழிஞ்சான்.. சுகுணம்மா மண்ணைத் தூத்தி அவன் மேல எறிஞ்சி திட்டுனப்போ மட்டும் கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு..அடுத்த நாள் காலைலேயே வீட்ட விட்டு கிளம்பிட்டான்.ஆபிஸ்ல வேற அவன பாக்கவேயில்ல. டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போயிட்டான்னு சொல்றாங்க.."

ஜேக்கப்புக்கு லேசாய் வியர்த்தது. நடந்ததெல்லாம் ஒரு முறை மனதிற்குள் ஓடியது. குமரேசனிடம் அது பற்றி பேசலாமாவென தெரியவில்லை. அமைதியாய் இருந்தார். குமரேசன் தொடர்ந்தான்."போறப்போ..உங்க கிட்ட கொடுக்கச் சொன்னான்..." குமரேசன் ஒரு கவரை நீட்டினான்.  ஜேக்கப்புக்கு பதட்டம் அதிகமானது. அவர் பயந்தபடியே அதை வாங்கினார். கையில் நடுக்கம் தெரிந்தது. குமரேசன் சத்தமாய் "என்னாச்சு ஜேக்...நர்சை கூப்பிடவா" என்றான். வேணாம் என கையசைத்தார். அந்த கவரை வாங்கி இடது பக்கம் இருந்த டேபிளில் வைத்தார்.





இரண்டு வாரத்தில் ஜேக்கப் நல்லமுறையில் தேறி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஊரிலிருந்து பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவரைப் பார்க்க வந்திருந்தார்கள். எப்போதும் போலில்லாமல் அவரது வீடு இரைச்சல்களாலும், கீச்சுக்குரல்களாலும் களை கட்டியிருந்தது. வீட்டு வாசலில் எந்நேரமும் நிறைய செருப்புகள் கிடந்தன. வீட்டுக்குள்ளேயே கொஞ்சமாய் நடக்க ஆரம்பித்திருந்தார், எனினும் படிகள் ஏற அனுமதியில்லை. அப்படியொரு நாள் தான் குமரேசன் கொடுத்த அந்த கவர் அவர் கண்ணில் பட்டது. அதை நினைக்கும் போதெல்லாம் அவருக்குள் ஒருவித அசௌகர்ய உணர்வு வந்து போனது. என்னதான் எழுதியிருக்கிறான்னு பார்ப்போமென்ற வைராக்கியத்தில் அந்த கவரை பிரித்தார். ஒரு பெரிய வெள்ளைத்தாள் அதில் நீல நிற மையில் குண்டு குண்டாய் தமிழ் எழுத்துக்கள். நீல நிற நோட்டில் படித்த அதே கையெழுத்து. படிக்க தொடங்கினார்.

"ஜேக், வணக்கம். நீங்கள் இந்த கடிதத்தை ஒரு வேளை படிக்கும் படி அமைந்தால் மிகவும் சந்தோசம். தலை நரை போல மாரடைப்பு ஏதோ ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் இப்போதெல்லாம் வந்து விடுகிறது. அதுகுறித்து பயம் தேவையில்லை. உங்கள் மேல் சுகுணாம்மாவிற்கு எவ்வளவு பாசமென்று என்னை அவர் திட்டிய போதுணர்ந்தேன். தெருவில் மானம் போனாலும் அந்த வகையில் எனக்கு சந்தோசம். அம்மாவுக்கு என்னைவிட நிறைய கெட்ட வார்த்தைகள் தெரிந்திருப்பது ஒரு உபரித்தகவல். இத்தனை நாள் அம்மாவிடம் திட்டு வாங்கி அதுவரை உங்களுக்கு "அட்டாக்" வராதது வியப்பே...."

லேசாய் சிரித்தார். மீண்டும் வாசிக்கலானார். "அதிருக்கட்டும். நாம் போன புது வருடத்துக்கு இரண்டு பாட்டில் ரம்மை காலி செய்த போது கூட டேங்கர் லாரி போல கம்பீரமாயல்லவா வீட்டிற்கு போனீர்கள். வெறும் நாலு ரவுண்டில் கீழே விழுந்ததேன்?? அதுவும் நிலைப் படி தடுக்கி.. கொஞ்சம் குழப்பமாய் இருந்தது". ஜேக்கப் எச்சிலை விழுங்கினார்."என்னுடைய நோட் டேபிளில் இருந்த போதே எனக்குப் புரிந்தது. நீங்கள் கண்டிப்பாய் அதை படித்திருப்பீர்கள். ஆமாம் அதிலென்ன அவ்வளவு பயம். எழுதிய எழுத்தெல்லாம் எழுதியவனுடைய கருத்து மட்டும் தானா?? கதாபாத்திரங்கள் அதன் மன ஓட்டத்தை நேராக பேசக்கூடாதா?? அதையெல்லாம் விடுங்கள் போகட்டும். நானெல்லாம் கதையெழுதக்கூடாதா?? டால்ஸ்டாய், மார்க் ட்வைன் போல காலத்தால் கரைக்க முடியாத காவியங்கள் படைக்கக் கூடாதா?? ..ஸ்ஸ்..எத்தனை "கூடாதா"...என் கதைகளில் ஒரே வார்த்தை இத்துனை முறை "கூடாது". கடிதம் என்பதால் அடித்தெழுத முடியவில்லை.

நீங்கள் எத்தனை பக்கம் படித்தீர்ளெனத் தெரியவில்லை. முழுமையாய் படித்திருந்தால் அது என் கதாநாயகன் ஷ்யாமின் டைரி எனத் தெரிந்திருக்கும். நூறு சதவீத உண்மையுடன் ஒரு சம்பவத்தை ஒருவரால் விளக்கமுடியாது. கற்பனை இல்லாத விவரிப்பு நீங்கள் சாப்பிடும் "கேப்ப ரொட்டி" போல..யாருக்கும் பிடிக்காது..நான் உண்மையிலேயே கோல்கொண்டா போனதில்லை..கஞ்சா இழுத்ததில்லை..உள் நீச்சல் அடித்ததில்லை..உண்மையில் எனக்கு நீச்சலே தெரியாது.. நீங்கள் பயப்படும் அளவுக்கு வில்லத்தனங்கள் செய்ய எனக்கு வாய்ப்பில்லை.இதில் ஒரே ஒரு சந்தோசம். ஒருவருக்கு பயத்தைக்கொடுத்து மரணத்தின் வாசல் வரை தள்ளும் வீரியம் என் எழுத்துக்கு இருந்ததென்பது தான். கற்பனையும் உண்மையும் , தங்கமும் செம்பும் போல... அதன் சதவீதங்களை எழுத்தாளனே அறிவான்.சரி..நேரமாயிற்று விடைகொடுங்கள். இனி நான் குடிக்கும் ஒவ்வொரு முறையும் உங்களை
நினைத்துக்கொள்வேன்.வாய்ப்புக்கிடைத்தால் சிந்திப்போம். நன்றி."

ஜேக்கப்புக்கு பாரம் குறைந்தது போல இருந்தது. அவன் மேல் இரக்கம் பிறந்தது.சேரில் சாய்ந்து கொண்டே அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார். அவன் அடங்காத மாடாகவே வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றிய எந்தவொரு தகவலும் யாருக்கும் முழுமையாக தெரிந்திருக்கவில்லை. தன்னுடைய சொந்த விஷயங்களை அவன் யாரிடமும் ஒரு முறை கூட பேசியதில்லை. திடீரென அவர் மூளையில் சில குழப்பங்கள் உருவானது போல இருந்தது. மீண்டும் மீண்டும் "கற்பனை..உண்மை..தங்கம்..செம்பு.." என்கிற வார்த்தைகளை உச்சரித்தார். எழுந்தார். வீட்டில் எல்லாரும் மொட்டை மாடியில் இருந்தார்கள். கிளம்பி வெளியேறினார். சிரமப்பட்டு வேகமாய் நடந்தார். 14-C ப்ளாக்கை அடைந்தார். காற்று பலமாய் வீசியது. யோசிக்காமல் இடது புறமாய் வீட்டின் பின் பக்கம் போனார். 




அங்கே எதுவும் மரமேயில்லை. கீழே காங்க்ரீட் தரை. மண் எதுவும் இல்லை. குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமானால் பத்து பேர் கூட நிற்க முடியாத ஒரு கொள்ளைப்புறம். சிரித்தார். அவன் முகம் ஒரு முறை வந்து போனது. வெளியே வந்தார். காலணி செகரட்டரி கண்ணில் தென் பட்டார்.

"என்ன ஜேக்கப் சார் அதுக்குள்ளேயும் வாக்கிங் ஆரம்பிச்சாச்சா...உடம்ப பாத்துக்கோங்க..."

"சரி சார்.."

"ஒரு மாசமாவே இங்க ஒன்னும் சரியில்ல..உங்களுக்கு இப்படி ஆகியிருச்சி.. போன மாசம் செக்யூரிட்டி ஒராள நைட்ல இருந்து காணோம். போலிஸ் கீலிஸ்னு இன்னும் அலஞ்சிகிட்டு இருக்கோம்.."

"செக்யூரிட்டிய காணோமா.."

"ஆமா சார்..ஷிவ்லால் யாதவ்னு...யூ.பி காரன்..சிரிச்ச முகமா இருப்பானே..."

ஜேக்கப் தலையில் ஒரு குரல் கேட்டது "கற்பனையும் உண்மையும் ...தங்கமும்செம்பும் போல... அதன் சதவீதங்களை எழுத்தாளனே அறிவான்". அவருக்கு லேசாய் நெஞ்சு வலிப்பது போல இருந்தது.

                                                                                                               ----முற்றும் 



                                                    

வெள்ளி, 26 டிசம்பர், 2014

எழுத்தாளன் - பகுதி2

                                         



                                                           எழுத்தாளன்- பகுதி 1

இளையராஜா வெண்கல குரலில் அந்த அறையை ஆக்கிரமித்திருந்தார். அவன் கிங்க்ஸ் சிகரட்டை வாயில் வைத்துக்கொண்டான்.ஒரு பெரிய பெக்கை நிரப்பி அளவு பார்த்து ஜேக்கப்புக்கு கொடுத்தான். அவர் பாட்டை ரசித்துக்கொண்டே கிளாசை கையில் வாங்கினார். பாடலின் இசைக்கு ஏற்ப தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார். "ஏன்டா...மூனாவதா...நாலாவதா...வீட்டுக்கு போகனும்டா...கூடிப்போச்சுனா சிக்கலாகிடும்" என்றார்.

"நாமளே எப்பயாச்சும் தான் சாப்பிடுறோம்..கணக்குப்பண்ணி சாப்டா நல்லாவே இருக்காது..நாமென்ன ஹோம்வொர்க்கா பண்றோம்..என்ஜாய் பண்ணி அடிங்க ஜேக்"

 "உங்க வீட்லலாம் உன்ன திட்ட மாட்டாங்களா... உங்கப்பா என்ன பண்றார்.."

பதிலேதும் அவன் சொல்லவில்லை. கொஞ்ச நேரத்தில் அறையில் சத்தமில்லை. அவன் தூங்கிப்போயிருந்தான். ஜேக்கப் இரண்டு தடவை அவனை கூப்பிட்டுப் பார்த்தார். மட்டையாகிவிட்டான். அறையை ஒரு நோட்டம் விட்டார்.  புகை ரூமை ஆக்கிரமித்திருந்தது. ஜன்னல்களில் ஜட்டிகள் தொங்கியது. "கழுதைக" என முனங்கினார்.குமரேசன் ஊருக்கு போயிருந்தான்.அப்படியே தடுமாறி எழுந்தார். அலமாரியில் நீல நிற நோட்டுப்புத்தகம் ஒன்று துறுத்திக்கொண்டு நின்றது. சாதாரண நாட்களில் அதை அவர் கவனித்திருக்க வாய்ப்பில்லை. கவனமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களிலிருந்து அது மட்டும் ஒழுங்கில்லாமல் நின்றது. உள்ளுக்குள் பேனா ஒன்றும் இருந்தது. குமரேசன் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவன். முதலில் அவனது நோட்டாய் இருக்குமென தான் கையிலெடுத்தார். முதல் பக்கத்தைப் புரட்டினார்.

"எழுத்துக்களும் ஓவியங்களே... வாசிக்கையில் எல்லோர் மனத்திலும் காட்சிகளை வரைவதால்..." என எழுதி அவனது பெயர் போட்டிருந்தது.கையெழுத்து அவனது தான். ஒரு முறை கண்ணைக் குறுக்கிப் படித்துப்பார்த்தார். லேசாய் சிரித்தார். "படிக்கலாமா.." வென ஒரு முறை யோசித்தார். அடுத்தவர் விஷயங்களில் ஏற்படும் இயல்பான கிளர்ச்சியின் உந்துதலில் முதல் பக்கத்தைப் புரட்டினார். நன்றாய் குண்டு குண்டு தமிழ் எழுத்துக்கள். நீல நிற பால் பாயிண்ட் பேனாவால் எழுதப்பட்டிருந்தது. முதல் இரண்டு பக்கத்தில் அவன் கோல்கொண்டா மலையின் ரம்யத்தைப் பற்றியும், இரவு நேரத்தில் அங்கு வீசும் காற்றைப்பற்றியும் கவிதை போல எழுதி இருந்தான். அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. எழுத்தில் நேர்த்தியும், ரசனையும் தெரிந்தது. மூன்றாம் பக்கம் வந்தார்.



"சித்திக் கொடுத்துவிட்டுப் போன பின் நேராய் மாடிக்கு வந்து விட்டேன். வீட்டில் யாருமில்லை. வித்யாசமான பழுப்பு நிறத்தில் காய்ந்த இலைகள் போல அந்த காகிதத்தில் அது இருக்கிறது.உண்மையிலேயே மூவாயிரம் இதற்கு அதிகம் தானென தோன்றுகிறது.பெங்களூரில் வெறும் எண்ணூறுக்கு வாங்கியிருக்கிறேன்.ஆனால் இது லடாக் சரக்கு..வீரியம் ஜாஸ்தியென சித்திக் சொல்கிறான். இதோ பேப்பரை சுருட்டி வாயில் வைக்கிறேன்.லேசாய் உப்புக்கரிப்பது போல உணர்வு. லைட்டரை பத்த வைக்கிறேன். எத்தனை முறை இழுத்தாலும் முதல் இழுவை கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஹா...ஹா... என்ன சுகம் அடி வயிற்றை மயிலிறகு வைத்து யாரோ வருடுவது போல இருக்கிறது..மிதமாய் போதை ஏறிக்கொண்டே இருக்கிறது. தூக்கத்தில் எழுந்தது போல ஒரு நிதானமின்மை என்னை ஆட்கொள்ள தயாராகிறது. ஏதேதோ நினைவுகள் வந்து போகிறது... மூன்றாவது படிக்கும் போது அப்பாவின் ரம் பாட்டிலை திறந்து திருட்டுத்தனமாய் குடித்தது..முதன் முறையாய் சுயமைத்துனம் செய்தது... ம்ஹூம்..எழத முடியவில்லை..கை குழறுகிறது..."

எழுத்து கிறுக்கலாய் மாறி அந்த வரியுடன் நின்று போயிருந்தது. ஜேக்கப் ஒரு முறை அவனைப் பார்த்தார். அவன் குப்பற படுத்துக்கிடந்தான். அவருக்கு அதற்கு மேல் படிப்பதா வேண்டாமா என யோசனையாய் இருந்தது. குழப்பத்துடன் அடுத்த பக்கம் திருப்பினார். 

"காலணியில் எத்தனயோ பேர் இருக்கையில் ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறானென யோசனையாய் இருந்தது. செக்யூரிட்டி யூனிபார்மில் இருந்த விசிலை நான் வரும்போது வேண்டுமென்றே ஊதினான். மற்ற செக்யூரிட்டிகள் யாரும் அப்படியில்லை.ரெண்டு முறை கேட்ட போதும் பதில் சொல்லாமல் சிரித்தான். அப்போது தான் அடக்க முடியாத கோபம் வந்தது. நடக்கப்போவது அப்போதே எனக்குத் தெரிந்து போனது. அன்று இரவு 14-c ப்ளாக்கின் பின்புறம் இருந்த புளிய மரத்தின் பின் நின்று கிளையை பலமாய் அசைத்தேன். நினைத்தது போலவே வேகமாய் விசில் ஊதிக்கொண்டே வந்தான். அருகில் வந்தான். அங்கு யாருமேயில்லை. அந்த இருளும்,தனிமையும் எனக்கு அடக்க முடியாத வெறியை கொடுத்திருந்தது. மூன்று நாளாய் தொராசின் வேறு சாப்பிடவில்லை.




அருகில் வந்து "நீங்களா சார்" என சிரித்தான். அது போதும். அதற்கு மேல் அங்கு நடந்த எல்லா விஷயங்களுக்கும் அது போதுமானதாய் இருந்தது. முகத்தில் மூன்று முறை குத்தினேன். வாயிற்குள் கர்சீப்பை அடைத்து கொச்சைக் கயிறால் அவனது கழுத்தை நெறித்தேன். அவனிற்கு போராடத்தெம்பில்லை. எனக்கு ஏமாற்றமாய் இருந்தது. எதோ எறும்பை நசுக்குவது போல இருந்தது. "தாவு..குதி..திமிறு.." என கத்திப் பார்த்தேன். ம்ஹீம்...சாவதற்கென்றே காத்திருந்து அந்த உடம்பு என்னை நோக்கி வந்ததாய் தோன்றியது. கழுத்தை இத்தனைக்கும் மிதமாய் தான் அழுத்தினேன்...துடித்துகொண்டிருந்த கால்களும் அடங்கியது...உடம்பு ஜில்லென குளிர்ந்தது. அது ஏன் உயிர் போனவுடன் உடல்கள் ஒரு சில வினாடிகள் அதிர்கிறதென தெரியவில்லை.... இதை எவனும் ஆராய்ச்சி கீராய்ச்சு பண்ணீருக்கானோ என்னவோ...ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் அவனைப்போட்டேன். மண்ணைப் போட ஆரம்பித்தேன்..மாலையில் பெய்த மழை காரணமாக மண் இறுகிப் போய்விட்டது..கொஞ்சம் கஷ்டப்பட்டு தோண்ட வேண்டியிருந்தது..ஹெட் போனில் பாடல் கேட்டுக்கொண்டே மண்வெட்டியில் அள்ளிப் போட்டேன். நாளை இவனை யாரும் தேடுவார்களா....என்ன ஆகும் என யோசித்துப் பார்க்கையில் எனக்கு ரொம்பவும் த்ரில்லாக இருந்தது.."

ஜேக்கப்புக்கு ரத்த அழுத்தம் அதிகமானது போல இருந்தது. மூச்சு வாங்கினார். நடுங்கிய கைகளில் இருந்த நோட்டை டேபிளில் வைத்தார். சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருந்தது. வீட்டை விட்டு முதலில் வெளியேறி விடுவதென்று முடிவெடுத்து வேகமாய் வாசலுக்கு நடந்தார். நிலை படி தடுக்கி கீழே விழுந்தார். அவன் சத்தம் கேட்டு தலை தூக்கிப்பார்த்தான்.

                                                                                                                     --தொடரும் 

செவ்வாய், 23 டிசம்பர், 2014

எழுத்தாளன் - பகுதி 1


வேறு யாராவதாய் இருந்தால் அந்த சத்தத்துக்கு உடனே எழுந்திருப்பார்கள். அது அவன்.அறைக்கதவை தட்டி சரியாய் ஒன்றரை நிமிடத்துக்கு அப்புறம் தான் திறந்தான். வெளியே குமரேசன் முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான்.ஜேக்கப் எரிச்சலை அடக்கிக்கொண்டு ஹாலில் ஹிந்துவை நோட்டமிட்டபடி உட்காந்திருந்தார். குமரேசனையும், ஜேக்கப்பையும் கண்ணைச்சுருக்கி பார்த்துவிட்டு நேராய் டாய்லெட்டுக்கு போனான். கதவைக் கொஞ்சம் வேகமாய் சாத்தினான்.சட்டென குழாய் திறக்கும் சத்தம் அந்த அதிகாலை அமைதியை சலனப்படுத்தியது. குமரேசன் முனங்கிக்கொண்டே வேகமாய் ஜேக்கப்புக்கு எதிரில் வந்து அமர்ந்தான். அவனைப் பார்த்து அவர் சிரித்தார். "நீ கோபப்படக்கூடாது ராஜா..உங்களுக்கு வீடு கொடுத்தனே...நான் தான் பழைய செருப்பெடுத்து...எம்மூஞ்சிலயே அடிச்சிக்கனும்..". சொல்லிவிட்டு தலையில் அடித்துக்கொண்டார். குமரேசன் குனிந்திருந்தான். எதுவும் பேசவில்லை. ஒரு நிமிடம் அமைதியாகவே கழிந்தது. 

ஜேக்கப் அறுபதை கடந்த பெரியவர். சொந்த ஊர் சென்னையாக இருந்தாலும் ஹைதராபாத்தில் செட்டில் ஆனவர். சுங்கத்துறையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். பிள்ளைகள் அமெரிக்காவில் வேலை செய்துகொண்டிருக்க, ஹைதராபாத்தில் உள்ள நீலிமா கிரீன்ஸ் குடியிருப்பில் ஒரு பெரிய வீட்டில் குடியிருந்து கொண்டிருக்கிறார். பக்கத்து வீடுகளுக்கு கேட்கும்படி மனைவியிடம் திட்டு வாங்குவது இவருக்கு நீண்டநாள் பொழுது போக்கு. சுகருக்கும் மனைவிக்கும் பயந்து தினமும் வாக்கிங் போகும் வயசாளி. இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் இரண்டு தமிழ் பசங்க தான் குமரேசனும் அவனும். குமரேசன்,எந்த நேரமும் கல்யாணம் ஆகலாம் என்கிற நிலையில் வாழும் மேட்ரிமோனி இளைஞன். வாரம் ஒருமுறை ஃபேசியல், தினமும் ஜிம் என ஸ்கெட்ச் போட்டு  சுத்திக்கொண்டு இருப்பவன். மிச்சமிருப்பவன் அவன் மட்டும் தான். உண்மையில் அவனை பற்றி சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. சோம்பேறி,குழப்பவாதி, சித்தாந்தங்கள் எதுவில்லாமல் எல்லாரையும் வெறுப்பேற்றுபவன். குமரேசனின் கம்பெனியில் கூடவே வேலை செய்கிறவன். குடிகாரன். அவனை பற்றி பேசி பத்தியை விரயம் செய்யாமல் நிகழ்காலத்துக்கு போவோம்.

வெளியே வந்தான். குமரேசன் அவனைப்பார்த்து "ஏழு மணிக்கு கம்யூனிட்டி செக்ரட்ரிய பாக்கப்போகணும்...இல்லேனா சாயங்காலம் வீட்டைக்காலி பண்ணனும்டா.. தெரியும்ல.." அவன் ஒரு முறை நிமிரிந்து பாத்துட்டு "ஓ பஞ்சாயத்து காலைலயா..." என லேசாய் சிரித்தான். உண்மையிலேயே அவனுக்கு இது போன்ற பிரச்சனைகள் பிடித்திருந்தது. எதுவுமே நடக்காத சாதாரண நாட்களை அவன் வெறுத்தான். ஜேக்கப் பக்கம் திரும்பி " ஓ... அதான் நம்ம ஜேக் காலைலேயே அனல் கக்கிக்கிட்டு உட்காந்திருக்கார்..பாத்து பாஸ் சூடு பிடிச்சுக்க போகுது.." யாருமே சிரிக்கவில்லை. ஜேக்கப் அவன் பக்கம் வந்தார். " நல்லா சிரிச்சிக்கோ..எது எப்படியோ நீ இந்த வீட்ல இனிமே இருக்க முடியாது...செக்ரட்ரி வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எனக்கு நடந்தது என்னான்னு தெரிஞ்சாகனும்...போலிஸ் கம்ப்ளைன்ட் அது இதுன்னு போகாம உங்கள நான் காப்பத்தனும்னா..."

"பாஸ்..ரொம்ப பயப்படாதீங்க..அவ்ளோ பெரிய மேட்டர் இல்ல.. இது சப்ப மேட்டர் தான்..."

"தூ நாயே..நான் ஏன்டா பயப்படனும்...நடந்தத சொல்லித் தொலைடா..என்னைய பேச வைக்காத..."

"சொல்றேன்..சொல்றேன்..கூல்... இந்த கம்யூனிட்டி வீக்லி மீட்டிங் நேத்து நடந்துச்சு.. நீங்க ஊர்ல இல்லாதனால நானும் குமரேசனும் அட்டென்ட் பண்ண போனோம்." கேட்டுக்கொண்டிருந்தவர் தலையில் கை வைத்தார். அவன் தொடர்ந்தான்.



"எல்லாரும் சேர்ந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோம்,வீட்டுக்கு ஐநூறு ரூபா பணம் கொடுக்கணும்னு சொன்னாங்க... அதுக்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து..."

குமரேசன் வேகமாய் நிறுத்தினான். "நான் சொல்லவே இல்ல..நா எதுவுமே பேசல"

"சரிடா,,நாந்தா பேசுனேன்.. இந்த தடவ முருகனோட பிறந்தநாளான கார்த்திகை தீபத்த கொண்டாடுவோம். அதுக்கு வேணும்னா காசு தருவோம்னு சொன்னேன்.அப்டியே..கொஞ்ச நேரம் வாக்குவாதம் போச்சு... இந்த அஞ்சு பி ஹிதேஷ் இருக்கான்ல கோவத்துல என்ன பாத்து "ச்சூத்தியா.."னு சொல்லிட்டான்.நானும் பதிலுக்கு திட்டிட்டேன்.."

"என்னான்னு..."

"தேவிடியா பயலேன்னு.." கொஞ்சம் கூட நிறுத்தாமல் சொன்னான்.

"நீங்கள்லாம் படிச்ச பசங்க தான..இப்பிடியா பேசுவீங்க..."

"சிலபஸ்ல இதெல்லாம் கவர் ஆகல.."

குமரேசன் வாயை மூடிக்கொண்டு சிரித்தான். "அறிவுகெட்ட முண்டங்களா...சரி..காலைல தான வாக்குவாதம்..சாயங்காலம் திரும்பவும் எப்படி கைகலப்பு ஆச்சு.."அவன் திரும்பவும் முகத்தை சீரியசாய் வைத்துக்கொண்டு ஆரம்பித்தான். "சாயங்காலம்...நம்ம வீட்டுக்கு வாசலுக்கு வந்து..ஏன்டா எங்கம்மாவை திட்டுனேன்னு சட்டைய புடிச்சிட்டான்...நான் திரும்ப உனக்கு ஏன்டா இவ்ளோ லேட்டா அம்மா பாசம் பொத்துக்கிட்டு வருதுன்னு சொல்லி டஸ்ட்பின் வச்சு அடிச்சேன்...கொஞ்ச நேரத்துல பெருசுக வந்து வெளக்கி விட்டுட்டாங்க.. ஒரு பத்து மினிட்ல முடிஞ்சிருச்சு..வேணும்னா நீங்க ஆண்டிட்ட கூட கேட்டுப்பாருங்க..".




மூன்று பேரும் நடந்து செக்ரட்ரி வீட்டுக்கு போயினர். சொன்னது போல் பெருசாய் எதுவும் நடக்கவில்லை. இருவரும் இனி மீட்டீங்குகளில் பங்கு பெற தடை விதிக்கப்பட்டது. அவன் வெளியே வரும் போது குமரேசனிடம் "வேமா முடிஞ்சிருச்சு..அவனுக சரியாவே விசாரிக்கல கும்ஸ்.." என சொல்லிக்கொண்டு வந்தான்.ஜேக்கப் அவன் முன்னாடி வந்து நின்றார்.

"சரி..வீட்ட எப்ப காலி பண்ணப் போற..."

"விடுங்க ஜேக்...இன்னைக்கு ஓல்ட் மாங்க் போட்டுக்கிட்டே இத அனாலைஸ் பண்றோம்..."

"வீட்ட எப்போ காலி பண்ண போற.."

"தந்தூரி ஒன்னு வாங்குறோம்... ரெண்டு பாக்கெட் கிங்க்ஸ்...லேப்டாப்ல இளையராஜா..."

"வீட்ட எப்போ காலி பண்ண போற.."

"மிக்ஸிங் பெப்சியா சோடாவா..."

"சோடா"

                                                                             ---------தொடரும் -----------