வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

சென்னை வாகன ஓட்டிகளுக்கு

         

தமிழகத்தின் எந்த ஊரில் நீங்கள் வாகன உரிமம் எடுத்திருந்தாலும், சென்னையில் வாகனம் ஓட்ட உங்களுக்கு அளப்பெரிய ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த சூட்சமம் பிடிபடாததால் பலருக்கு காலையில் அலுவலகம் போவது காஷ்மீர் பார்டரில் டேங்கரில் போவது போல் திகிலாகவே இருக்கிறது. தமிழன் தன்னுடைய கெட்ட வார்த்தை பேசும் திறனை ரோட்டிலேதான் வளர்த்துகொள்கிறான். சென்னையில் வாகனம் ஓட்ட முக்கியமான சில விதிமுறைகள் உள்ளன.

1) சென்னையை பொறுத்தவரை சிகப்பு,பச்சை விளக்குகள் எல்லாம் ஒன்று தான். ஒரே நிறத்தை எந்நேரமும் காண்பித்தால் போர் அடிக்கும் என்பதாலேயே மாற்றி மாற்றி காண்பிக்க படுகிறது.சிகப்பு விளக்கு எறிந்தால் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு ஹாயாக போய் விடலாம்.ஆகையால் பச்சை போட்டவுடன் நீங்க பாட்டுக்கு "பப்பரப்பே" என போனால் , எந்த மூலையிலிருந்தோ காரோ, பைக்கோ உங்க வண்டியை கிஸ் அடிக்க வாய்ப்பிருக்கிறது. சிக்னல் போட்டவுடன் முன்னூற்று அறுபது டிகிரியில் தலையை சுற்றி பார்த்து கிளம்புவது உசித்தம்.

2)காண்டாமிருகத்துக்கும், கரப்பான்பூச்சிக்கும் க்ராஸில் பிறந்தது போல் சைஸில் சில இரண்டு சக்கர வண்டிகள் ஊருக்குள் வலம் வருகின்றன. அதைக்கண்டாலே ஒதுங்கி வழி விட்டுவிடுங்கள். ஏனெனில் அவர்கள் ஆத்மா எந்த தெருமுக்கிலும் சாந்தி அடையலாம். அவர்கள் எந்த நேரம் எந்த பக்கம் திரும்புவார்கள் என கடவுளுக்கே தெரியாது.

3)மாநகராட்சி பேருந்தின் அருகே வண்டியை செலுத்தாதீர்கள். ஜன்னல் சீட்டுவாசிகள் ரோட்டில் எச்சில் துப்பி விளையாடுவார்கள். நீங்கள் முறைத்து பார்த்தால் "அச்சச்சோ..பாத்து போகக்கூடாதாப்பா.." என்று சொல்லி வெறியேற்றுவார்கள்.

4)கால்டாக்சிகள்,தண்ணிலாரியையெல்லாம் விட கொடுமையானவர்கள்.உங்கள் பக்கத்தில் வந்து ஹாரன் அடித்து பீதியை கிளப்புவார்கள்.சிலநேரங்களில் உங்கள்  அக்கிளுக்கு அடியில் புகுந்து கூட சைடு வாங்குவார்கள். அவன் போன பிறகு நாலைந்து கெட்டவார்த்தையை உபயோகிங்கள். உங்கள் மன அழுத்தம் சன்னமாய் குறையும்.

5)சென்னையின் பொதுஜனம் எந்த நேரமும் முன்னறிவிப்பின்றி காலாற ரோட்டை கடப்பார்கள். அதிலும் டாஸ்மாக் இருக்கும் ரோட்டில் ஆக்சலரேட்டரில் காலை வைக்காதீர்.

6)சென்னையின் ஓட்டுனர்கள் ப்ரேக்கில்லாமல் கூட வண்டி ஓட்டுவார்கள் ஆனால் ஹாரன் இல்லாமல் மாட்டார்கள். கோபத்தை காட்ட, சந்தோசத்தை வெளிப்படுத்த, பிகர்களின் கவனத்தை ஈர்க்க, சுறுசுறுப்பாக இருக்க என எல்லா காரணங்களுக்காகவும் ஹாரனில் டியூன் போடுவார்கள். நீங்கள் பதற தேவையில்லை.

7) டீ.நகருக்கு ஞாயிற்றுக்கிழமையில் டூ வீலரில் போவதும் வீராச்சாமி படத்தை 3டியில் பார்ப்பதும் ஒன்றுதான். எரிச்சல் எக்குத்தப்பாய் வரும். டீ நகருக்கு வண்டியில் போகாதீர்கள். என்னைக்கேட்டால் டீ நகருக்கே போகாதீர்கள்.

8) மனைவி உடனிருந்தால் அவருடன் பேசிக்கொண்டே வண்டியை செலுத்துங்கள். ரோட்டில் இருக்கும் எரிச்சல் கொஞ்சம் கம்மி தான் என்று தோன்றும் .

9) காலையில் அலுவலகம் போகும் போது யாராவது உங்களை வேகமாய் சைடு வாங்கிச்சென்றால் காண்டாகி வேகத்தை கூட்டாதீர். இந்த ஊரின் ரோடுகள் சிக்னல்களாலும், ட்ராபிக்குகளாலும் ஆனது. பயபுள்ள எப்படி போனாலும் நமக்கு முன்னாடி எதிலாவது சிக்கி நின்றிருப்பான். 

10) புதிதாய் இருக்கும் கார்கள் கொஞ்சம் நிதானமாய் போகும், அதிலேயே "L" போட்டிருந்தால் ரொம்பவே நிதானமாய் போகும். அதுவே கார் கொஞ்சம் ஆங்காங்கே நெளிந்திருந்தால் அவர்கள் வீடியோ கேம்களில் கார் ஓட்டுவது போல் ஓட்டுவார்கள். இதெல்லாம் நாம் சூத்திரம் போல் மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டும்.

11)மழை பெய்த அடுத்த நாள் ரோட்டை மிக கவனமாய் பார்த்துக்கொள்ளுங்கள். ரோட்டில் ஆங்காங்கே கிணறுகள் இருக்கும்.

12) சென்னையின் காற்று எப்போதும் மண்ணைத்தூற்றி நம்மை சபிக்கும்.அதற்காகவாவது ஹெல்மெட் அணிந்து கொள்ளலாம்.

13) காலை எட்டு டூ பத்து மற்றும் மாலை ஏழு டூ ஒன்பது வண்டி ஓட்டினால் பொறுமையின் முழுமையான அர்த்தம் உங்களுக்கு பிடி பட்டுவிடும்.

14)இதற்காகவா ஈ.எம்.ஐ போட்டு வண்டியெல்லாம் வாங்கினேன் என தோன்றினால் தினம் பேருந்துகளில் நொந்து செல்லும் பொதுஜனத்தை பாருங்கள். பிற்பாடு "அடையார் போகனும்பா..எவ்ளோ" என ஆட்டோ ட்ரைவரிடமும் கேட்டுப் பாருங்கள். இது எவ்வளவோ தேவலைடா எனத் தோன்றும்.




புதன், 6 மார்ச், 2013

படைப்பாளி




எத்தனை படங்கள்,எவ்வளவு வாசிப்பு, இடைவிடாத ரசனை இவ்வளவு இருந்தும் இன்னும் என்னால் ஒன்னும் செய்ய முடியவில்லையே. எனக்குள் இருக்கிற படைப்பாளி மட்டையாகிக்கிடக்கிறானே என தாங்கொணா துயரம் அடைந்து கொண்டு இருந்தேன். ஸ்கூல்ல ஒரு தடவை திருப்பூர் குமரன் வேஷம் போட்ட போது எல்லோரும் கை தட்டியதும், ஒரு பெரியவர் வந்து கண்கலங்கி என்னை கட்டிக்கொண்டது ஆகிய காட்சிகள் என்னுடைய 34 இஞ்ச் மன ஸ்க்ரீனில் ஓடியது. புது உத்வேகம் பெற்று என் தன்னம்பிக்கை தாறுமாறானது. டைரிகளில் ரொம்ப வேகமாய் எழுதி,அதை விட வேகமாய்கிழித்தேன். அடிக்கடி மொட்டை மாடியில் உட்கார்ந்து வானத்தை வெறித்து பார்த்தேன். மணிரத்தினத்தின் திரைக்கதையில் உள்ள பிழைகளை ஆராய்ந்தேன். எனக்குள் இருக்கிற படைப்பாளி "கலா"க்காவே "எக்செல்லென்ட்" சொல்லுமளவுக்கு உக்கிரமாய் நடனம் ஆடினான். களத்தில் இறங்குவதென முடிவு கட்டி,ஒரு நாள் சதீசுக்கு போன் செய்தேன். 

"சொல்லுப்பா..பேசி ரொம்ப நாளாச்சு..எதுவும் பிகர் செட் ஆகிடுச்சா??"

"ப்ச். ஒரு முக்கியமான மேட்டர்.. ஒரு குறும்படம் எடுக்கலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்.."

"சூப்பர் நல்லதா போச்சு. அடுத்த வாரம் என் மச்சினச்சி கல்யாணம் வருது. அதுல வந்து ஆரம்பிச்சிரு.."

"யோவ்..என்ன வெளாட்டா இருக்கா.."

"இல்லப்பா..குறும்படம்னா போட்டோ தான..."

போனை வைத்தேன். என்னை எள்ளிநகையாடும் இந்த உலகுக்கு நான் யாரென புரியவைக்க வேண்டுமென சூளுரைத்தேன். இராவோடு இராவாய் ஒரு உயிரைக்கரைக்கும் காதல் கதை எழுதினேன். ரொம்ப பெரிசாய் இருந்ததால் அதை கைமா பண்ணி பத்து நிமிடமாய் மாற்றினேன். மீண்டும் மீண்டும் படித்து பார்த்தேன். எனக்கே அழுகை வந்தது. பார்த்து உறையப் போகிற ரசிககண்மணிகளை நினைத்து பரிதாபப்பட்டேன். கொஞ்சம் யோசித்து பார்த்ததில் பட்ஜெட் பாதாளத்தில் இருந்தது தெரியவந்தது. அதனால் ஐ.டி ஹீரோயின், கொரியர் ஆபிஸ் கிளார்க் ஆனாள். பேங்க் மேனேஜர் கதாநாயகன்,
பலசரக்கடை வைத்தான். அதனாலென்ன கோழியா முக்கியம்,குழம்பு தான் முக்கியம். கேமரா முதற்கொண்டு தொண்ணூறு சதவீத வேலை முடிந்து விட்டதாய் தோன்றியது. ஆனால் அதற்கு பிறகு தான் "சனி பகவான்" சிறப்புத்தோற்றத்தில் என் படத்தில் எனக்கே தெரியாமல் இருந்திருக்கிறாரென தெரிந்தது. நாயகனும் அவனது தோழர்கள் ஆகியோரை சேர்ப்பதுக்குள் சலூனுக்கு போகாமலே எனக்கு பாதி முடி குறைந்து போனது. கதாநாயகன் ரோலுக்கு எவனைக்கேட்டாலும் "மச்சி..நான் வீகேண்ட்லாம் பிசி.." "என்னோட ஒய்பை கேட்டுச்சொல்றேன்.." "சென்னை வர முடியாதுடா..." என காரணங்கள் 
சொன்னார்கள். சிலர் சொன்ன காரணங்கள் என் கதையை விட பெரிதாய் இருந்தததால் இங்கே நான் குறிப்பிடவில்லை. கடைசியாய் நவீன் ஞாபகம் வந்ததது. அவன் ஒரு சாம்பார் சாதமே என மனம் யோசித்தது. அது சரி நம்ம என்ன "ராம்போ" படமா எடுக்க போறோம் என என்னை நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன். அவனிடம் பேசி ஓகே பண்ணினேன்.



"ஒன்னும் பிரச்சனையேயில்ல... ரெண்டே நாள் தான் சூட்டிங்...நம்ம போரூர்ல கிஷோர் வீடு இருக்குல அங்க சனிக்கிழம காலைல எட்டுக்கு வந்திரு.."

"பயமா இருக்குடா.. எனக்கு அவ்வளவா நடிக்க வராது..பாத்துட்டு கடுப்பாகிற மாட்டேளே.."

"ஒன்னுமில்லடா..நீ சும்மா எப்பயும் போல இரு அதுவே போதும். ஹீரோ கேரக்டர் கூட கொஞ்சம் அரலூசு தான்.."

"நோ ஜோக்கிங் ப்ளீஸ். அப்றம் என் பேர போடுறப்போ கடைசி ரெண்டு "என்" வரும்..அத மறந்துடாத.."

"டன்"

பவர்ஸ்டார்லாம் எவ்வளவோ பரவாயில்லை என நினைத்துக்கொண்டேன். இதுவே இந்த கதியென்றால் ஹீரோயின் தேடுதல் பற்றி சொன்னால், கமலுக்கு அனுப்பியது போல் எனக்கு நீங்களே மணி ஆர்டர் அனுப்புவீர்கள். "அய்யயோ எங்க வீட்ல தெரிஞ்சா கொன்றுவாங்க.." ,"எல்லாமே கேர்ல்ஸ் நடிக்கிறாங்கனா யோசிக்கலாம்" , "எனக்கு அலையன்ஸ் பாத்திட்டு இருக்காங்க..சாரி.." போன்ற பதில்கள் வந்து என் லட்சியத்தை பதம் பார்த்துக்கொண்டிருந்தது. பெண் குலத்தின் மீதே கோபம் வந்தது. கடுப்பில் பேசாமல் ஹீரோவை ஹோமோசெக்சுவலாய் மாற்றி விடலாமா என யோசித்தேன். நல்லவேளையாய் ஒளி பிறந்தது.ஆபிசில் உடன் வேலை செய்யும் கல்கத்தா பொண்ணு "நான் நடிக்கிறேன்" என்றாள். அவளும் சனிக்கிழமை மட்டும் தான் நான் ப்ரீ என்றாள். எது எப்படியோ அந்த சத்தியஜீத்ரேவே கொல்கத்தா காளியை அனுப்பி என் துயரம் போக்கியிருக்கிறார் என பரவசம் அடைந்தேன். வெற்றிகரமாய் அந்த சனிக்கிழமை வந்தது.


காலையில் ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி போரூர் அடைந்து வேலையை ஆரம்பித்தேன். கேமரா, மூவி மேக்கர் மென்பொருள், உடைகள், இடங்கள் எல்லாம் தயார். நவீனும் வந்து விட்டான். அவனுக்கு கைலி கட்டிவிட்டு பலசரக்கடை அண்ணாச்சியாக்கினேன். ஹீரோயின் தன்யா வருகிறவரை  இவனை ரெடி செய்வோம் என எண்ணி ""டேய் நவீன் எங்க உன் கடைல இருக்கிற தேங்கா எண்ணைக்கு விலை சொல்லு பாக்கலாம்" அவன் பெருமையாய் கைலியாய் மடித்து விட்டு "கோக்க நட் ஆயில் ஆப் லிட்டர் பாட்டி ருப்பீஸ் ..." என்றான். நான் கடுப்பானேன். அப்பயே திட்டினால் ஓடிவிடுவான் என்பதால் அமைதியானேன். நம்ம கல்கத்தா காளி வர லேட் ஆனதால் கால் செய்தேன்.

"தன்யா எங்கம்மா இருக்க..திருச்சிலேர்ந்தே இங்க அஞ்சு மணி நேரத்துல வந்திரலாம்..இங்கிருக்கிற மந்தவெளில இருந்து வர இவ்ளோ நேரமா.."

"காலைல பாத்ரூம்ல வழுக்கி விழுந்திட்டேன்.ஒரு வழியா கெளம்பி வந்து பஸ்ஸ்டாப்ல நிக்குறேன். ஒரு கார்காரன் சேரை அடிச்சு விட்டுட்டான்" என ஆங்கிலத்தில் சொன்னாள்.

"சரி வேகமா வா மா " என போனை வைத்தேன். அவள் சொன்ன காரணத்தை யோசித்து பார்த்த போது அவள் கண்டிப்பாய் நல்லா நடிப்பாள் எனத்தோன்றியது. பத்தரைக்கு வந்து சேர்ந்தாள். நம்ம ஹீரோ 

வெண்பொங்கல் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தார். தன்யாவை பார்த்த போது எதோ அவனது அத்தை பொண்ணை பார்ப்பது போல வெக்கப்பட்டுக்கொண்டே பார்த்தான். இருவரையும் ஹலோ சொல்ல வைத்தேன். கொஞ்ச நேரம் எல்லோரையும் உட்கார வைத்து அந்த சீனை விளக்கினேன். அந்த பத்து நிமிடத்துக்குள் தன்யாவுக்கு மூனு காலும், நவீனுக்கு நாலு கொட்டவியும் வந்தன.

"ஷண்முகம் கைலியை மடித்த படி சாமான்களை கொடுத்த வண்ணம் உள்ளான். கோமதி கடைக்கு வருகிறாள். "கல்ல பருப்பு இருநூறு" என்கிறாள் மொட்டையாய். அவளை ஒரு முறை ஊடுரவுகிற மாதிரி பார்த்துவிட்டு ,பொட்டணம் கட்டி கொடுக்கிறான். அவள் தலையை மீண்டும் பார்த்து விட்டு அவனாய் சீயக்காய் பாக்கெட் சேர்த்து கொடுக்கிறான். அவள் மிதமாய் சிரித்துவிட்டு கிளம்புகையில் கடையில் ஐம்பது ரூபா நோட்டை நீட்டும் சிறுவனிடம் "ஏன்..சில்ர கொண்டு வராதுதான...வாங்குறது மூனு ரூபாய்க்கு.." என கடிந்துவிட்டுப் போகிறாள்." சொல்லி முடித்தேன்.




அமைதியாய் கேட்டுவிட்டு தன்யா, " வாட் இஸ் சில்ர, கள்ளே பருப்பு, சீக்காய்.." என டவுட் கேட்டு தெளிந்தாள். நம்ம ஹீரோ கான்பிடென்ட்டாய் இருந்தார். எடுக்க ஆரம்பித்தோம். நவீனை பொட்டணம் மடிக்க சொன்னால் கல்லபருப்பை பேப்பருக்குள் போட்டு கத்திக்கப்பல் செய்வது போல எதோ செய்து கொண்டிருந்தான். அவனை அசால்டாய் தெரிந்தவனை பார்ப்பது போல் சைடாய் பார் என்றால் ஜூவில் புலியை பார்ப்பது போல் பார்த்தாள். முதலில் சிரித்து கலாய்த்து ஜாலியாய் வேலை பார்த்தேன். பின் அமைதியானேன்.பின் வெறியானேன். பின் கத்தினேன்.

"டேய் எத்தன தடவ சொல்றது லைட்டா சிரி...ஆல்ரெடி செட் ஆகிடுச்சு...ஏன் இவ்ளோ அகலமா சிரிக்கிற.."

"தன்ஸ்..இப்படி பயந்து போய் பார்க்கக்கூடாது..அற்பமா பாரு..அவன் மூஞ்ச பாத்தே பேசு..."

"நவீன் கைலி விழாது டா..அதான் பெல்ட் போட்ருகோமே..நேரா பாரு..."

"எம்மா அது ஈநூறு இல்ல இருநூறு... ஏன் மூஞ்சி சாணிய மிதிச்ச மாதிரி போகுது..அவ்வளவு ரியாக்சன் தேவ இல்ல.."



இப்படியாக அந்த ஒரு பேரா வை எடுக்க சாயங்காலம் ஆனது. நவீன் வந்தான். "ஆறு மணிக்கு கெளம்பிடலாம்ல..நாங்க பேமிலியா நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போறோம்.." நான் எதுவும் பேசவில்லை. அவனையே பார்த்தேன். நாம வேணும்னா "நாளைக்கு.." இழுத்தான். தன்யா வந்தாள். அவளும் ஒரு காரணம் சொன்னாள். அவள் மேற்கொண்டு நாளை முடியாது அடுத்த வாரம் ஐ ஆம் ப்ரீ என்றாள். திரும்பி நவீனை பார்த்தேன். "அடுத்த வாரம் மகா சிவராத்திரி வீட்ல பங்சன் இருக்கு..". மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவர்களை அனுப்பி வைத்தேன். எல்லா ஆர்வமும் வடிந்து வலியுடன் வீடு வந்து படுக்கையில் சாய்ந்தேன். கங்கா கால் செய்தான்.

"சொல்றா"

"ஹாய் டா.. நான் ஒரு ஷாட் பிலிம் எடுக்கலாம்னு இருக்கேன்..இந்த பிசா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரி லைவ்லியா ட்ரை பண்ணலாம்னு..."

"ஹஹஹா"

"ஏன்டா சிரிக்கிற.."

"எல்லார்குள்ளேயும் ஒரு படைப்பாளி தூங்கிட்டே இருக்கான்..."

"கரெக்டு டா"

"அவன் தூங்கிட்டு மட்டுமே இருந்தா எல்லாருக்கும் நல்லது.."  


சனி, 12 ஜனவரி, 2013

உபத்திரமில்லை

                                             

 காலத்தில்  கரைந்து   கானல் நீராகிப்போனது
   உங்களுடன் நான் நனைந்த தருணங்கள்.
எனக்கு  நினைவுகளை  கொடுத்து விட்டு
        என் நிஜத்திலிருந்து விடுபட்டு போனீர்கள்.


பள்ளிக்கு கூட வரும் சைக்கிள் தோழர்கள்
     விரட்டி விரட்டி சைட் அடித்த முட்டக்கண்ணி.
பட்ட பெயரில் பதிந்து போன ஆசிரியர்கள்
      வயதுக்கு வந்த பின் காணமல் போன தோழிகள்...


சுவாரஸ்யமாய் பேய்க்கதை சொல்லிய
                     வாட்ச்மேன் வீரமணி
"லெக் ஸ்பின்" சொல்லிக்கொடுத்த
                பிரசாத் அண்ணன்.


எல்லோரைப் போலவும் பல்கிப்பெருகி  நிற்கிறது
    என்  வாழ்க்கையிலிருந்து காணாமல் போனோர் பட்டியல்.
நீங்கள் எங்கிருக்கிறீர்... என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா??
        என் குரலை கண்டுகொள்வீரா?...


ஒரு வேளை  மறந்து போனீரா ??
      அல்லது  ஞாபகம் தூண்டினால் "அட..எப்டி டா இருக்க.." என ஓடி வந்து
             கட்டிக்கொள்வீரோ??


இது எதுவுமில்லாமல் மாண்டு போனீரா??
      எங்கோ புகைப்படங்களில் சந்தனப்பொட்டுடன்
             சிரித்துக்கொண்டிருக்கிறீரா??


உண்மையைச் சொல்லட்டுமா..எனக்கு அதுபற்றி அக்கறையில்லை.
   காலம் கூட்டிக்கொண்டு போனோரும் ,
         காலன் கூட்டிக்கொண்டு போனோரும்,
      எந்நாளும் திரும்புவதில்லை..அழுதென்ன செய்ய...


உபத்திரமில்லை. நீங்கள் தான் என் மூலையில்
        உறைந்த செல்களுக்குள் உலாவிக்கொண்டே இருக்குறீர்களே.
நான் நினைக்கையில் வந்து சிரிப்பீர்கள்.
          நிகழ்வுகளை பிசகாமல் மீண்டும் செய்து காண்பிப்பீர்.


உங்களுக்கு முதுமை இல்லை.முடிக்கழிவில்லை.
      நோய்களேதுமில்லை.  உபத்திரமில்லை.
நான் வாழும்வரை  நீங்களும் வாழ்வீர்
         உங்களுக்கு மரணமுமில்லை!!!!!!!!  




சனி, 8 டிசம்பர், 2012

அன்புடைமை

  


பத்தாம் கிளாஸ் ஏ செக்சனுக்கு ராவுகாலம் காலைல பத்தரைக்கெல்லாம் ஆரம்பிச்சிரும். பயபுள்ளைக எல்லாம் தமிழ் புக்க எடுத்து வச்சிக்கிட்டு கஞ்சா இழுத்த அகோரிகள் மாதிரி முழிச்சுக்கிட்டுருப்போம்.மொத நாள் நடத்துன பாடத்தை ஒரு ரவுண்ட் கேள்வி கேட்டுட்டுத்தான் மணி ஐயா அன்னைக்கு கடையவே தெறப்பார். அப்டிதான் அன்றைய தினமும் களை கட்டிக்கிட்டு இருந்துச்சு. நாங்க தான் கடைசி பெஞ்ச், அய்யா எப்பவும் தன்னோட கேள்விக்கணைய பின்னாடி இருந்துதான் ஆரம்பிப்பார். பொதுவா கடைசி பெஞ்சில  முரட்டு பீஸ்களா தான் உட்காந்திருப்பாய்ங்க ஆனா எங்க டெஸ்க்ல நாங்க மூனு பெரும் பாவப்பட்ட ஜென்மங்க. கிள்ளி வச்சாலே அழுதுருவோம். எப்பயுமே அய்யா தாக்குதலை எங்ககிட்ட இருந்து தான்  ஆரம்பிப்பார். கேள்விக்கு பதில் சொல்லலேனா வாய்ப்பு அடுத்தவனுக்கு போய்டும்.சொல்லாதவன்லாம் நின்னுக்கிட்டே இருக்கணும். மொத்தமா முடிஞ்சவுடனே, நிக்குற பிரமுகர்களுக்கு கடைசியா சிறப்பு வழிபாடு நடக்கும். அய்யாகிட்ட தர்மடி வாங்கி ஊர  விட்டு ஓடுன கேசுலாம் இருந்துச்சு.

என்னோட பெஞ்ச்ல எனக்கு இடது பக்கம் அம்மு என்கிற அமுதராஜ். வலது பக்கம் ராம்ஜி. இவனுக ரெண்டு பேருக்கும் சுற்றளவு கொஞ்சம் அதிகம்ங்கிறதால ,அஞ்சு பேர் உட்கார வேண்டிய பெஞ்ச்ல மூணு பேரா அடங்கிப்போனோம். அம்மு தான் எப்பவும் எங்க கிளாசுக்கே ஓப்பனிங்
 பேட்ஸ்மேன்.மொத கேள்வி அவனுக்கு தான்.ஆளு எப்பயுமே படிச்சதை  வாய்க்குள்ள முனுமுனுத்துக்கிட்டே இருப்பான்.கேக்குறப்போ நமக்கும் டரியல் ஆகும். ராம்ஜி அடி வாங்குறப்போ கைய எப்டி நீட்டுறதுன்னு மொதவே தற்காப்புகலைக்குள்ள போயிருவான்.நிலவரத்தை அறிய ரெண்டு பேரிடமும் பேசினேன்.

"அம்மு..படிச்சிட்டியா... சரஸ்வதிதேவியே  வெள்ளச்சட்ட ப்ளூ பேண்ட் போட்டுக்கிட்டு ஆம்பள கெட்டப்ல வந்த மாதிரி இருக்கு..."

"மூடுடா..படிக்கல படிக்கலனு சொல்லிட்டு நீ எப்டியாச்சும் தப்பிச்சிருடா.."

"அம்முக்குட்டி சத்தியமா இன்னைக்கு சரியா படிக்கலடா..டேய் ராம்ஜி நீ.."

ராம்ஜி எங்க ரெண்டு பேரையும் ஒரு முறை பார்த்துவிட்டு ,கையை பீப்பி போல் வைத்து "வடக்குப்பட்டி ராமசாமி ...உ..ஊஊஊஊ......" ன்னான். சிரித்தோம். மணியய்யா சரியாய் வகுப்புக்குள் வந்தார்.  எல்லாரும் மொத்தமாய் எழுந்து "வணக்கம் அய்ய்ய்யா...." னு கோரஸா சொன்னோம்.
மொத்த வகுப்பும் அமைதியானது.எதுவும் பேசாமல் தமிழ் புத்தகத்தை புரட்டினார். ஐயா ஆக்சன் சீனுக்கு ரெடியாகிறார்னு அர்த்தம்.





"கடைசியாளு எந்திடே..."பிறர்க்கு" எனும் முடியும்  குறள் சொல்லுடே...."

அம்மு எந்திரிச்சி ஒன்னும் தெரியாதவன் மாதிரி "நானா ஐயா.." ன்னான்.

"ம்ம்..இல்ல உங்க மாமியா..சொல்லுலே அமுதராசா..."

"அன்பிலார்  எல்லாம்.......எல்லாம்....எல்லாம் ...."

"அடுத்தவெ.."

"ஐயா ப்ளீஸ்யா..சொல்லிடுறேயா..அன்பிலார் எல்லாம் ..எல்லாம்..."

"  நீ ச்சொல்றதுக்குள்ள கடேசி தேர்வு வந்துரும்லே...அடுத்தவே எந்தி..சிவராசா.."

எனக்கு நல்லா தெரிஞ்ச குறள். சரியாத்தான் ஆரம்பிச்சேன். அன்பிலார் எல்லாம் தமக்குரியர்..தமக்குரியர்...... அன்புடையார்..அன்புடையார் ...". சுத்தமாய் மறந்து போனது. யாரோ செய்வினை செய்து விட்டது போல் உணர்ந்தேன். பிற்பாடு தான் அது யாரென உணர்ந்தேன்.


"சூப்பெர்டே..கடேசி பெஞ்சுக்கு சுளுக்கு எடுக்கணும் போலயே...அடுத்தவே...:

ராம்ஜி சிரித்துக்கொண்டே எழுந்தான்.  புன்னகையோடு

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு." என்றான்.

பிறகு சந்தோசத்தோடு உட்கார்ந்து கொண்டான். நானும் அம்முவும் அவனை ஏக்கத்தோடு பார்த்தோம். "இந்த  ஒன்னு தான்டா படிச்சேன்..எங்க நீ சொல்லிருவியோன்னு பயந்திட்டே இருந்தேன்..தேங்க்ஸ் டா.." ன்னான். கடுப்பில் அவன் காலில் ஒரு மிதி மிதித்தேன். ஒரே சந்தோசம்  என்னன்னா அன்றைய தினம் நிறைய பேர் பதில் சொல்லாம நின்னிட்டு இருந்தோம். கூட்டமா அடிவாங்கிறதுல  ஒரு திருப்தி இருக்கு. ஆனா அய்யா கோவத்தில் இருக்கிறார்னு அவர் அடிக்கடி பல்ல கடிக்கும்போதே தெரிந்தது.
எல்லாரையும் கேள்வி கேட்டு முடிந்தாகிவிட்டது. அய்யா வாட்சை கழற்றி பெஞ்ச் மேல வைத்தார். "டேய் எவனாது போய் பக்கத்து கிளாஸ்ல பெரம்பு வாங்கிட்டு வா " என்றார்.




ராம்ஜி எழுந்து உடனே ஓடினான். இனத்துரோகி. கொஞ்ச நேரத்தில் மூணு அடியில் சிகப்பு கலர் டேப் சுத்தப்பட்ட ஒரு கொடூரமான பிரம்புடன் வந்தான்.திருவள்ளுவர் மேலே கண்டபடி கோபம் வந்தது . கொஞ்சமாய் தொடை நடுங்கியது . திரும்பி அம்முவை பார்த்தேன் அவனுக்கு உடம்பே குலுங்கிக்கொண்டிருந்தது.

"அம்மு..பயமா இருக்காடா..."

"இல்ல ரொம்ப சந்தோசமா இருக்கு..சு&* .. வாய மூடிட்டு நில்லுடா"

"ஹிஹி..டென்ஷன் ஆகாதடா..பெரம்பு சைஸ பாத்தேல்ல..கண்டிப்பா மொத அடி வாங்குறவன் செத்துருவான்..நாமெல்லாம் தப்பிச்சிரலாம்.."

"வெண்ண  பேசாம இருடா..அதுக்கு ரெண்டு அடி சேத்து விழுகும்".நியாயமான பயம் தான்.


"நிக்குரவன்லாம் வரிசையா வாங்கடே " னு அய்யா பிரம்பை ஒரு முறை வளைத்து வார்ம் அப் செய்தார்.போய் வரிசையில் நின்றோம். கிட்டத்தட்ட முப்பது பேர் இருந்த க்யூவில் நாங்கள் நடுவில் நின்றோம். அடி விழுக ஆரம்பித்தது. முதுகெலும்பில் ஒரு குளிர்ச்சி பரவியது. வழக்கமான கூக்குரல்கள் கேட்க ஆரம்பித்தது.

"அய்யா..ப்ளீஸ் யா நாளைக்கு படிச்...ய்ய்ஆஆஆ...."

"நேத்து பீவர்யா ...ஆஸ்பிட்.....ய்ய்ய் ஆஆ...."

அடிவாங்கியபடி க்யூ கரைந்து கொண்டு போனது. அழுது ஆர்ப்பரித்து சிலர் அதிக நேரம் எடுத்துக்கொண்டனர். "கையை நீட்டி கண்ணை மூடிக்கொள்ள வேண்டும்..ரெண்டே அடி..அவ்ளோ தான்.." எனக்கு நானே சமாதானம் சொன்னேன். எனக்கு முன்னாடி நின்ன ராஜ்குமார் என்னை பாத்து லேசாய்  சிரித்தான்.

"டேய் நாயே ..எதுக்கு சிரிக்கிற..நம்ம என்ன தேசிய விருது வாங்கறதுக்கா லயன்ல நிக்குறோம்..நீயும் அடிதான பக்கி வாங்கப்போற..."

"போடா இவனே..நாங்கெல்லாம் ஆம்பள மாறி நின்னு கை நீட்டுவோம்..ஒன்னைய மாதிரி பிதுங்குனியா.."

எனக்கு கோபம் கொப்பளித்தது. அந்த நாட்களில் அய்யாவிடம் அடி வாங்கி எவன் ''உஸ்ஸ்ஸ்...அய்ய்ய்யாஆஆ... "  என  கையை உதறி கதறாமல், உணர்ச்சியை காட்டாமல் அசால்டாய் போகிறானோ அவன் கெத்தானவன். இது போல் வகுப்பில் ஒரு அஞ்சாறு பேரு இருந்தார்கள். ராஜ்குமாரும் அந்த பரம்வீர் சக்ரா க்ரூப்பில் ஒருவன். நானும் என்னுடைய வீரத்தை காட்ட வேண்டும் என சூளுரைத்தேன். ராஜ்குமார் போய் கையை நீட்டினான். ரெண்டு அடி வலுவாய் விழுந்தன. சலனமே இல்லாமல் போனான். கிளாசில் லேசாய் சிரிப்பு சத்தம் வந்தது.

" போகுது பாரு..எரும கணக்கா..அடுத்தவன் வாளே ..டைம் ஆவுதுல..."

பயப்பந்து வயிற்றுக்குள் பௌன்ஸ் ஆனது. தைரியமாய் வலது கையை தள்ளி நீட்டினேன். அய்யா அஞ்சடிக்கு பிரம்பை தூக்கி என் கையை நோக்கி இடி போல இறக்கினார். என் கையில் எதோ டேங்கர் லாரி ஏறியது போல் இருந்தது. இருந்தும் மூஞ்சில் எந்த வித ரியாக்ஸனும் காட்டவில்லை. அய்யா கடுப்பானார். நான் வைராக்கியமாய் அடுத்த கையை நீட்டினேன். அய்யா ரெண்டு மடங்கு வேகத்தில் தன்னுடைய ரெண்டாவது ஷாட்டை இறக்கினார். எனக்கு வலி உயிர் போனது. கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அடக்கிக்கொண்டேன். "சாதிச்சிடோம்டா சிவா..சாதிச்சிட்டோம்.." னு மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். கதையில் அப்பொழுது தான் ஒரு பெரிய திருப்புமுனை. அப்பொழுது அய்யா மதம்கொண்ட யானையாய் மாறினார்.

"  எல்லாம் கொழுப்பெடுத்து அலைரீங்களாடே...இந்தா வரேம்டே.."

பெரம்பில் என்னை சரமாரியாய் தூர் வாரினார். கொஞ்ச நேரத்தில் வாட்சை கழட்டிட்டு கையை வச்சி கன்னத்தில் வேறு இலவச இணைப்புகள் வழங்கினார். நான் ஒரு சொட்டு கண்ணீர் விடலையே.

"  போய்த்தொல மாடு..."

கிளாடியேட்டர் போல் பெருமை பொங்க நடந்தேன்.மொத்த வகுப்பும் என்னையே பார்த்தது. தம்கட்டி ஒரு வழியாய் பெஞ்சில் போய் உட்கார்ந்தேன். குனிந்து கொண்டு கதறி அழுதேன். அப்றம்..வராதா...அடிச்ச அய்யாவே கைய உதறிட்டு இருக்கறார். அம்மு என்னை பார்த்து "இதெல்லாம் தேவையா" ன்னான்.

என் கை விரல் ஓரத்தில் ரத்தம் வந்திருந்தது. மூஞ்செல்லாம் வீங்கிப்போய் இருந்தது. சொல்ல மறந்துட்டேனே அன்னைக்கு அய்யா எங்களுக்கு கேள்வி கேட்ட திருக்குறள் அதிகாரத்தோட பேர் என்ன தெரியுமா..அன்புடைமை...








செவ்வாய், 27 நவம்பர், 2012

பந்து

  


அப்பாவோட சைக்கிளில் முன்னாடி உட்கார்ந்து  ஸ்கூலுக்கு போறது ரொம்ப ஜாலியா இருக்கும்.  சைக்கிள் முன் கம்பி குத்தக்கூடாதுனு குழந்தைகள் உட்காறதுக்கு  ஒரு குட்டி  சீட் மாதிரி முன்னாடி மாட்டிருக்கும். மூனு  வயசுல போன அந்த பயணம் இன்னைக்கும் அப்டியே மூளையிலே உறைஞ்சு நிக்குது. நா பேசிட்டே வருவேன். அப்பா அமைதியா அதுக்கு பதில் சொல்லிட்டே வருவார். நா எதுவும் பேசலேனா வண்டிய கொஞ்சம் மெதுவாக்கி "டேய்.."ம்பார். பெரும்பாலும் குழந்தைகளுக்கு  கை சூப்ர பழக்கம் இருக்கும்.  ஆனா நா கொஞ்சம் விசித்திரமா நாக்கை  கொஞ்சம் உள்ள கூடி மடிச்சி  வாயமூடி கிட்டு சூப்பிகிட்டே இருப்பேன். எதுவும் பேசலேனா இதான் பண்ணிட்டு இருப்பான்னு எல்லாருக்கும் தெரியும். அப்பா அடிக்கடி கண்டுபிடிச்சு அதட்டுவார்.

"ப்பா...கீர்த்தி..ருக்காள்ல  என்னய குண்டா குண்டானு  சொல்றாப்பா.. நீங்க வந்து மிஸ்கிட்ட சொல்லுங்கப்பா.."

"நீ அவள என்ன செஞ்ச.."

"நா ஒரு தடவ தாம்பா மங்கினு சொன்னேன்..அவ அதுக்கு த்ரீ டைம்ஸ் குண்டானு சொல்றா... "

"தம்பி..சண்ட போடமா வெளாடனும்...எப்பப்பார் சண்ட போட்டா ஒன்ன எல்லாரும் என்ன சொல்வாங்க..சொல்லு.."

"..................."

"சொல்ல்ல்லு...என்ன சொல்வாங்க.."

"பேட் பாய்.."

ஸ்கூலுக்கு வெளியே நின்று அப்பா என் வயதுக்கு மீறிய சித்தாந்தங்களை எளிமையாய் சொல்ல முயல்வார்.அப்படி ஒரு நாள் தான் அந்த பந்து எனது லட்சியமாய் மாறியது. ஊர்லருந்து அத்தையும்,அவுங்க குழந்தைகளும் வந்திருந்தாங்க. அந்த நேரத்துல நான் ஸ்கூலுக்கு போறது எனக்கு இழைக்கப்படும் அநீதினு நினைச்சேன். போகவே முடியாதுன்னு அடம்பிடிச்சேன்.கன்னம்லாம் ஈராமாகுற அளவு  "ப்ளீஸ் மா" னு அழுதேன். கடைசியாய் அம்மாவின் "தோசைக்கரண்டி" என்னை ஸ்கூலுக்கு அனுப்பியது.சைக்கிள்ல போறப்ப அப்பா பேச்சுக்கொடுத்துப் பார்த்தார். நான் மசியலை.

"இப்போ ஏன் உம்முனு இருக்க..இன்னும் அஞ்சு நாள்ல உனக்கும் பரிட்ச முடிஞ்சிரும்..அப்றம் லீவு தான.. உனக்கு பரீட்ச முடிஞ்சோனே பாரு அப்பா அந்த பந்த வாங்கித்தருவேன்..சரியா"

அப்பா எங்க ஸ்கூலுக்கு எதிர்புறத்துல இருக்கிற  கடைல இருந்த அந்த பந்தை காண்பித்தார். ஆறு வண்ணங்களில் ஒரு பூசணிக்காய் அளவில் இருந்தது அது. ஆங்கில எழுத்துக்களும் ,அதில் ஆரம்பமாகும் விலங்குகளின் பெயர்களும், படங்களும் பந்தில் இருந்தது. அதை பார்த்த மாத்திரத்தில் எனக்கு பிடித்துப்போனது.ஸ்கூலுக்கு போய் பரீட்சை எழுதிக்கொண்டு இருந்த போதும் பந்து என் மனக்கண்ணில் வந்து போய்க்கொண்டே இருக்கும்.ஒரு கற்பனை உலகத்தில் அந்த பந்துடன் விளையாடிக்கொண்டே இருப்பேன்."புதன்,வியாழன்,வெள்ளி..." என எனது நாட்களை எண்ணிக்கொண்டே இருந்தேன்.



சதா சர்வ நேரமும் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததால் நிறைய விசித்திரமான் சந்தேகங்கள் வரும். அன்றைய என் உலகத்தில் என்னை மதித்து பதில் சொல்றவர் அப்பா மட்டும் தான். அவரது பொறுமையையும் நான் சோதிக்க தவறியதில்லை.வியாழக்கிழமை காலை எழுந்தவுடன்

 "ஏம்பா..மொத்தமே அந்த அங்கிள் கடேல நாலு பால் தான இருந்துச்சு ..யாராச்சும் நாளைக்குள்ள எல்லாத்தையும் வாங்கிட்டா.."

பல் விலக்கிக்கிட்டுருந்தவர் அந்த நுரை வாயுடன் என்னையே பார்த்தார்.கொஞ்சம் முறைத்து "அதனால.." ன்னார்.

"நீங்க அந்த பந்த இன்னைக்கே வாங்கி வீட்ல வச்சிருங்க...எனக்கு பரீட்ச முடிஞ்சோனே கொடுங்க போதும்..ப்ளீஸ் பா..."

பக்கத்தில் வந்தார்."வர வர..நீ ரொம்ப அடம்புடிக்க ஆரம்பிச்சிட்ட.."

நானும் சத்தத்தை உயர்த்தி "அப்புறம் பால் தீந்திருச்சுனா.........."

அப்பா கொஞ்சம் முறைத்து பார்த்து "நீ அப்பாவா நா அப்பாவா " ன்னார் .
 கொஞ்சம் தொண்டை கரகரவென ஆனது.அம்மா மரணஅடி அடிச்சாலும் சமாளிப்பேன்.அப்பா முறைத்தாலே கண்லாம் கலங்கிடும். 

அப்பா லேசாய் சிரிச்சுக்கிட்டே " தலைலாம் நரச்சிருக்குல..தொப்ப இருக்கு பார்...அப்ப நான் தான் அப்பா. நீ நான் சொல்றத கேக்கணும் " நானும் சிரித்து விடுவேன்.என்னை தூக்கி கையில் வைத்துக்கொண்டு "உறுதியா அப்பா வாங்கித்தருவேன்..அதவே பேசி சீவன வாங்க கூடாது சரியா .." தலையாட்டுவேன்.


தவமிருந்த நாள் வந்தது. சாயங்காலம் அந்த இளவெயிலில் அந்த பந்தை நான் தொட்ட கணத்தை மறக்க முடியாது.அவ்வளவு மிருதுவாய் என் கைகளுக்குள் அடங்கிய அந்த நொடியை இன்னும் என்னால் மீட்டி பார்க்க முடிகிறது. என் மனது நிறைய சந்தோசம்.ஓடிப்போய் அப்பாவுக்கு "தேங்க்ஸ் பா" என முத்தம் கொடுத்தேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.வீட்டுக்கு வருகையில் பக்கத்துக்கு வீட்டுக் குழந்தைகளிடமெல்லாம் பெருமை பொங்க காட்டிக்கொண்டே வந்தேன்.அதன் பிரமிப்பு அடங்கவே எனக்கு ஒரு வாரம் பிடித்தது.அப்படி அதை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குகையில் தான் அந்த கனவு வந்தது.


பந்து வாங்கிய கடைக்காரர் அழுது கொண்டே பேசுகிறார். "எல்லாரும் என்னை  ஏமாத்திட்டாங்க...என்னை ஏமாத்திட்டாங்க..இதப்போய் கொடுத்திட்டு என்னோட பாலெல்லாம் தூக்கிக்கிட்டாங்க..கொடுங்கடா கொடுங்கடா " என சொல்லிக்கொண்டே கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் நோட்டுக்களை தூக்கி எறிகிறார். முழித்து விட்டேன்.  பக்கத்தில் இருந்த பந்தை அணைத்துக்கொண்டேன் .


இதோ இப்போ தான் நடந்தது போல் இருக்கிறது இந்த இருபத்து நாலு வயதான காட்சிகள் கடந்து. சொந்தமாய் சம்பாதித்து நிறைய பொருட்கள் வாங்கி விட்டேன் ,ஆனால் அந்த பத்து ரூபாய்  பந்து தந்த சந்தோசம் எதுவும் தரவில்லை. கொஞ்சமாய் யோசித்து பார்த்த போது ஒன்று மட்டும் விளங்கியது. இப்போது  நானும் அந்த கடைக்காரன் போலத்தான் என் சந்தோசங்களை விற்றுவிட்டு குப்பைகளை சேகரிக்கிறேன் .ஒரு நாள் நானும் குப்பைகளை வீசியெறிந்து என் சந்தோசங்களை மீட்டெடுக்க கிளம்புவேன் ,அப்போது என் குப்பைகளை பொறுக்கிக்கொள்ள தயாராயிரு சமுதாயமே!!




வியாழன், 22 நவம்பர், 2012

பாப்கார்ன்




   பேரன்பு கொண்ட தாய்மார்களே,பெரியோர்களே... தமிழ் வலையுலக வரலாற்றுலேயே மொத முறையா  கண்டமானிக்கு,குண்டாங்குதிரையா ஏகப்பட்ட படங்களுக்கு ஒரே பதிவுலே விமர்சனம் சொல்றோம். இப்படிப்பட்ட அளப்பரிய காரியத்தை நான் செய்ய காரணமாக திகழ்ந்த தமிழ்நாடு மின்சாரத்துறை,பாக்கவே முடியாதபடி மட்டமா விளையாடிய கிரிக்கெட் அணி,போட்ட படத்தையே பொறையேருற அளவு போட்ட தொலைக்காட்சிகள்,மிஸ்டு கால் கொடுத்தும் திரும்பக்கூப்பிடாத கல்நெஞ்சுக்கார நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மானாவாரியாய் இந்த பதிவை அவர்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்குறேன்.

மிரட்டல் :  சொல்லிகிறமாதிரி ஒரு படம் கிடையாது தான். இப்போ தமிழ்நாடே சொல்ற அதே வாசகத்தை நானும் சொல்றேன் "சந்தனதுக்காக பாக்கலாம்". வசனம் தான் தமிழுல..மத்த படி அக்மார்க் தெலுங்கு படம். நைட்டு தூக்கம் வரலேன பாக்கலாம் .

அட்டக்கத்தி: பயங்கர ஹைப் ஏத்தி ரிலீஸ் ஆன படம்.படு சுமார் ரகம். பாட் டெல்லாம் நல்லா இருக்கும் . ஆனா அதத்தான் டி.வில போட்டுரானே..நந்திதா சிரிக்கும்போது கன்னத்துல விழுற குளிக்காக கிளைமேக்ஸ் வரைக்கும் உட்காந்திருந்தேன்.

சுந்தரபாண்டியன்: கைப்புள்ள மாதிரி அடி மேல அடி வாங்குனதுக்கு பிறகு  கொஞ்சம் நிம்மதி தந்த படம். அதே சசிகுமாரிசம். பரோட்டா சூரி காமெடி செம்ம கலக்கல்.ஏற்கனவே வந்த படங்கள மிக்சில போட்டு அடிச்சு எடுத்த மாதிரி இருக்கு ,ஆனா ரசிக்கிற மாதிரி இருக்கு.

நான் : எதோ இங்க்லீஷ் படத்தோட உல்டானு ஒரு பதிவுல படிச்சேன். "Identity Theft" வச்சு இங்க்லீஷ்ல  ஒரு நூறு படம் வந்திருக்கும் ,அதுனால அத  ஏத்துக்க முடியாது. புத்திசாலித்தனமான த்ரில்லர். குடு குடு திரைக்கதை (எத்துன நாள் "விறு விறு " னு சொல்றது ..மாத்துவோம் ). நல்ல படம். விஜய் ஆண்டனி இன்னும் ஒரு டீ ஸ்பூன் நடிச்சிருக்கலாம்.


முகமூடி : இந்த படத்துக்கு இவ்வளவு பில்டப் கொடுத்திருக்க தேவையில்லை. இது சூப்பர் ஹீரோ படமாம். குங்க்பூ ,அது இதுனு ஒரு மாதிரி முயற்சி பண்ணாங்க. பாவம் மிஸ்கினுக்கு செட் ஆகல.முந்தய படங்களுக்காக மன்னிசிரலாம்.


மாற்றான்: இந்த வருசத்தோட மகா மோசமான படம். ரெட்டைத் தலைவலி. நம்பி ரெண்டாவுது நாள் புக் பண்ணி சில நண்பர்களை வேற கூட்டிட்டு போனேன். அதில் பலர் இன்னைக்கு வரைக்கும் என்கூட பேசுரதில்லை.ஹாரிஸ் பாஸ்..எங்கயாச்சும் காப்பி அடிச்சாவுது நல்ல பாட்டா போடுங்க...




பீசா : டக்கர் படம். சும்மா புகுந்து விளயாடிட்டாங்க. அம்பது கோடிக்கு படம் எடுக்கும் புத்திசாலிகளெல்லாம் இந்த படம் பாத்தா தேவல.முழுக்க இருட்டு ,ஒரு டார்ச்,கொஞ்சம் இசை இத வச்சி நம்மள ஒரு நாப்பது நிமிஷம் உலுக்கி எடுத்திடுறாங்க...அடுத்த படத்துல "கார்த்திக் சுப்புராஜ்"னு பேர் போடும் போது கை தட்டுவேன். எல்லாரும் தியேட்டர்ல போய் அவசியம் பாக்க வேண்டிய படம்.

துப்பாக்கி: ஏழெட்டு விமர்சனம் படிச்சிட்டு, நாலஞ்சு தடவ கால் பண்ணி கேட்டுட்டு "சேதாரம் இருக்காது" னு நம்பகமான  தகவல் கெடச்சப்றம்  தான் போனேன்.ஒரு தரமான படம். கடைசி வரைக்கும் விஜயானு நம்பவே முடில.முருகதாஸ் எப்படியும் இதவே நாலஞ்சு வருசத்துக்கு எல்லா மொழிலேயும் ரீமேக் பண்ணிட்டு இருப்பார்.இதல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் சில படங்கள நா எதிர் பாத்திட்டு இருக்கேன்..விஜய் பாணில சொல்லணும்னா I am W(h)aiting....அதெல்லாம் எதுன் னா ..




1) பாலாவின் "பரதேசி" (சொதப்ப சான்சே இல்ல...என்ன.. க்ளைமாக்ஸ்ல  யாரு சாகப்போறாங்கன்னு பதறிப்போய் உக்காந்திருக்கணும்)

2) நீ தானே என் பொன் வசந்தம்.(பாட்டெல்லாம் சுமாரா தான் தெரியுது..சமந்த்தாவுக்காக மஸ்ட் வாட்ச் )

3) கமலின் "விஸ்வரூபம்" (நாங்கெல்லாம் கமல் போஸ்டரவே நூறு நாள் பாப்போம்..இத விடுவோமா..)

4) தங்க மீன்கள் ( "கற்றது தமிழ்" ராமோட படம். வேற காரணம் வேணுமா??)

5) கௌரவம் (ராதாமோகன் படம் கண்டிப்பா டீசன்ட்டா இருக்கும் )

6)   ஆதிபகவன் (அமீர் )

7)  கடல் (ஒன்னு மணிரத்னம்..ரெண்டு ராஜீவ் மேனன்..எல்லாத்துக்கும் மேல ஏ.ஆர் .ஆர்.. ) 

8) நடவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (புது டீம்...நல்லா இருக்கும்னு அரசல் புரசலா ஒரு பேச்சு இருக்கு..)





கொஞ்சம் நல்லா  கவனிச்சோம்னா இந்த வருஷம் வெளியான பட பெரிய படங்கள், நம்ம ரசனைய ரொம்ப மலிவா எடை போட்டுட்டாங்க. அதுக்கு முக்கிய காரணம் நல்ல படங்கள நாம கண்டுக்கல. "அழகர்சாமியின் குதிரை" ஓடிருந்துச்சுனா " ராஜபாட்டை"னு ஒரு படம் வந்திருக்காது. ஒன்னும் வேணாம் "ஆரண்ய காண்டம்" னு ஒரு படம் பாஸ்...எப்படியாவுது தேடி பிடிச்சு பாருங்க... இதப்போயா பாக்காம விட்டோம்னு கண்டிப்பா வருந்துவோம். நல்ல படங்கள ஆதரிச்சோம்னா தமிழிழும் பியானிஸ்ட், ப்ரஸ்டீஜ், மில்லியன்  டாலர் பேபி போன்ற படங்களை எதிர்பாக்கலாம் (அதையே எடுத்திராதீங்கப்பா..)








 

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

பிர(ற)தோசம்





 அன்று திங்கட்கிழமை. இருக்குற எல்லா எரிச்சலையும் பேக்கில் போட்டுக்கொண்டு ஆபீஸ்க்கு கிளம்பிவந்தேன். ஒரு பய இல்ல. அவள் மட்டும் அவளோட இருக்கையில் அமர்ந்திருந்தாள்.சேலை கட்டி இருந்தாள்.நெற்றி முழுக்க வெள்ளை,சிகப்பு என திருநீரும், குங்குமமும் கோட்டிங் கொடுக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் இருந்த சாமி படங்களுக்கு பூ போட்டிருந்தாள். கையில் சூலாயுதம் இல்லையே தவிர கிட்டத்தட்ட ஒரு அம்மன் போலவே காட்சி அளித்தாள். இவளோட கொஞ்சம் பேச்சப்போட்டோம்னா பொழுதுபோகுமேனு பக்கத்தில போனேன்.

"ஹாய்..குட்மார்னிங்...என்னங்க சாயங்காலம் பூ மிதிக்கிறீங்களா..கெட்டப்பே பயங்கரமா இருக்கே.."

"ஹலோ கேலி பேசாதீங்க..இன்னைக்கு பிரதோஷம்...அதான் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்....நாளைக்கு குணாவுக்கு யூ.எஸ் விசா இண்டர்வ்யூ.." 

குணா அவளோட அடிமை.அதாவுது காதலன். வழக்கம்போல அவள வீட்ல இருந்து ஆபிஸ்க்கு ட்ராப் செய்றது, மொபைலுக்கு ரீசார்ஜ் செய்றது, வாராவாரம் ஒரு இங்கிலீஷ் படத்துக்கு டிக்கெட் புக் பண்றது, இவ அசிங்கசிங்கமா திட்டினாலும் "ஈ" யென சிரிப்பது போன்ற அளப்பெரிய காரியங்கள் செய்பவன். சில நேரங்களில் இவன் போன ஜென்மத்தில் அடிமாடா பொறந்திருப்பானோவென நான் நெனச்சிருக்கேன்.

"ஓ அப்டியா..குணாவுக்கு விசா இண்டர்வ்யூவா...கங்ராட்ஸ்..கண்டிப்பா யூ.எஸ் போயிடுவான்..கவலைய விடுங்க..."

"ஏங்க..வாய கழுவுங்க.. அவன் யூ.எஸ் போகக்கூடாதுனு தான் இத்தன வேண்டுதல் போட்ருக்கேன்...நீங்க வேற.."

"என்னங்க சொல்றீங்க...ஏங்க??"

"அவன்லாம் இங்கயே இந்த சீன் போடுறான். அங்கெல்லாம் போனா என்னைய மதிக்க மாட்டான். தவிர இங்க நமக்கு ஹெல்ப்லாம் யாரு பண்றது..ஒரு பொண்ணா இருந்து யோசிச்சு பாருங்க புரியும்.."

"இதுக்காக நா அந்த ஆப்பரேசன்லாம் பண்ணிட்டு யோசிக்க முடியாது..ஏங்க இப்டி...பய ரொம்ப நல்லவனுங்க...உண்மைய சொல்லணும்னா உங்க நாய விட உங்ககிட்ட அதிக விசுவாசமா இருக்கிறது அவன் தான்.."

"கிழிச்சான்...போன பெர்த்டேவுக்கு பிளாட்டினம் ரிங் வாங்கித்தரேன்னு சொல்லிட்டு, டெடிபீர் வாங்கித்தந்து ஏமாத்திட்டான். இந்த பசங்களே இப்டித்தான். நாம ஓகே சொல்றவரைக்கும் தான் கண்ட்ரோல்ல இருப்பானுங்க.அப்றம் அவ்ளோ தான்.."

"என்னங்க கண்ட்ரோல்,கிண்ட்ரோல்னு மிலிட்டரி கர்னல் மாதிரி பேசுறீங்க. எல்லாம் புடிச்சுபோய் தானே லவ் பண்ணீங்க..இப்பப்புடிச்சி எளிமிண்டரி ஸ்கூல் டீச்சர் மாதிரி அவன டார்ச்சர் பண்றீங்க.."





"பின்ன....முன்னெல்லாம் நிலா,வானவில்,ரோஜானு எனக்கு கவிதை எழுதி அனுப்புவான்...அடிக்கடி போன் பண்ணுவான்...எனக்கென்ன பிடிக்கும்னு தெரிஞ்சு தேடித்தேடி வாங்கித்தருவான்...இப்போல்லாம் ஒரு நாளைக்கு நாலு காலுக்கு மேல பண்ண மாட்றான்...போன வாரம் படத்துக்குகூட கூட்டுப் போல தெரியுமா...இப்ப என்ன சொல்றீங்க.."

"ஒரு வேள மூளை திரும்பவும் அவனுக்கு கரெக்டா வேல செய்ய ஆரம்பிச்சிருச்சோ என்னவோ.."

அவள் என்னை எரிப்பது போல் முறைத்தாள். உடனே பயப்பட நாம என்ன குணாவா... இவளை இன்னும் கொஞ்சம் வெறியேற்றினால் அன்றைய நாள் இனிய நாளாக அமையும்னு ஒரு பச்சி எனக்குள் கூவியது.

"குணா உங்கள ரொம்ப டீப்பா லவ் பண்றான்ங்க..சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.. அவன் உங்க பின்னாடி சுத்த ஆரம்பிக்கிறப்பவே நம்ம சுரேஷ் கூட "அது ரொம்ப சுமார் பிகர் மச்சி...லூசு மாதிரி அடிக்கடி சிரிக்கும்...வேற நல்ல பொண்ணா ட்ரை பண்ணுடா" னு சொன்னான். ஆனா குணா தான் "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு" சொல்லிட்டான்...அத கூட விடுங்க...நீங்க நான்வெஜ் சாப்ட மாட்டீங்கன்றது தெரிஞ்சதும் அவனும் நிறுத்திட்டான் தெரியுமா...நீங்க காந்திய காதலிச்சிருந்தாக்கூட அவர் இந்த மாதிரி தியாகம்லாம் பண்ணிருக்க மாட்டார்..."

"ஸ்டாப்...நா ஒன்னும் அவன் என்ன லவ் பண்ணலேன்னு சொல்லல..இப்போ மொத மாதிரி இல்ல மாறிட்டான்னு சொல்றேன்.."

"கரெக்ட்தான..மாற்றம் ஒன்று தான் மாறாததுனு மாற்றான் பட டைரக்டர் கே.வி. ஆனந்தே சொல்லிருக்காரே.."

"ஹலோ என்ன ரைமிங்கா பேசுறதா நினைப்பா...அது எப்டிங்க எல்லா பசங்களும் கொஞ்சங்கூட சீரியஸ்நெஸ் இல்லாம இருக்குறீங்க...பெருசா ஜோக் அடிக்கிறோம்னு நெனப்பு...அன்னைக்கு குணா எங்கிட்ட  "உங்கப்பா "தார்-டின்" என்ன சொல்றாரு" ங்கிறான். எனக்கு எப்டி இருந்துச்சு தெரியுமா.."

"முன்னாடி "விடாது கருப்பு" னு சொல்லுவான்..இப்ப மாத்திட்டானா..வெரி ஹுமரஸ் Guy..."

"உங்ககிட்ட போய் பேசிட்டு இருந்தேன் பாருங்க..என்ன சொல்லணும்...."

"சும்மா ஜாலிக்குங்க..சரி கடைசியா ஒரே கேள்வி...அதோட நம்ம உரையாடல முடிச்சிக்கிறலாம்.இப்டி வெறித்தனமா சாமி கும்புடுரீங்களே அப்டி என்னதான் வேண்டுவீங்க..." அவள் "ம்ம்ம்.." னு சொல்லிக்கிட்டே மேலே விட்டத்தை பார்த்தாள். பொண்ணுங்க எல்லாம் சேவாக் மாதிரி... ஸ்டெம்ப்கு வெளியே ஒரு பால் போட்டாலும் டமால்னு அடிச்சிருவாங்க. அவள் தன் திருவாயை திறந்தாள்.


"ம்...மொத மொத குணா ஸ்கெட்ச்ல படம்லாம் வரைஞ்சு லவ் லெட்டர் குடுத்தானே அது மாதிரி வாரம் ஒன்னு குடுக்கணும். தினமும் என்னை ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு ட்ராப் பண்ணனும். அடிக்கடி அம்மா,அப்பாவ  பாக்குறேன்னு ஊருக்கு போகக்கூடாது. தேவையில்லாம உக்காந்து கிரிக்கெட் பாத்திட்டு இருக்க கூடாது. சுடி,சல்வார் மாசம் ஒன்னாவுது வாங்கித்தரனும். ஆபிஸ்ல இருக்கிறாளுகளே அனிதா,பவித்ரா..அவளுங்க கூட பேசவே கூடாது. இந்த கொரங்கு மாறி அங்க இங்கன்னு தாடி வளக்காம "க்ளீன் ஷேவ்" பண்ணனும். எங்க அப்பா அம்மா கிட்ட மரியாதையா நடக்கணும்..."

அவள் கல்யாண வீட்டு மளிகை லிஸ்ட் மாதிரி சொல்லிக்கிட்டே போனாள். எனக்கு தலை கிறுகிறுவென சுத்தியது. அடிமைகள் பிறப்பதில்லை,உருவாக்கப்படுகிறார்கள்.