புதன், 20 நவம்பர், 2019

பிரதி புதன் பேசலாம் -3

"சார்.."

"....."

நன்றாக  தூங்கி எழுந்துவிட்டிருந்தேன். மணி இத்தனைக்கும்  ஆறு தான் காட்டிக்கொண்டிருந்தது. "சார்" எதுவும் பேசுவது போலில்லை. பாலகுரு என்னை  'ரெங்கன்' ஆக்குவதற்கோ, என் புகைப்படத்தைப்போடுவதற்கோ ஆட்சேபனையேதும் தெரிவிக்கவில்லை. தமிழின் தலைசிறந்த வாரஇதழ் ஒன்றில், தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர் எழுதிய ஒரு கட்டுரைக்கு மேல் என் புனைப்பெயரும் , என் முகமும் தெரியப்போகிறது. தவிர நிறைய ஐநூறு ரூபாய் திணிக்கப்பட்ட ஒரு வெள்ளைக்கவரும் "கமலத்திடம்" இருந்து கொடுக்கப்பட்டு விட்டது. எட்ஜ் வாங்கி ஃபோர் போகும்..சிக்ஸ் போகும் ..ஆனால் எனக்கு நூறே அடித்தது போல இருந்தது. கொஞ்சூண்டு தலை தூக்கும் சுய மரியாதையை நறுக்கென கொட்டி உள்ளே அமுக்கிவிட்டால் நான் நூறு சதவீதம் சந்தோசமாய் இருப்பதாய் சொல்லலாம்



"சார்.. நீங்க ஒரு நாள் "ரெக்க" கதை சொன்னீங்களே அது இப்போ தான் புரிஞ்சது...ஏதாவது பேசுங்க சார்..."

".........."


"தயவு செஞ்சு பாலா சார் கொடுத்த காசுல பாதிய ஏதாச்சு ஆசிரமத்துக்கு கொடு ,அது இதுனு பேசி என் சந்தோசத்துல ஸ்ப்ரே அடிச்சுராதீங்க..சென்றாயனுக்கு சம்பளம்..இன்டர்நெட் பில்லு....வாடகை போக எதுவும் மிஞ்சாது....கிட்டத்தட்ட நானும் அசிரமத்துக்கு வெளிய தான் நிக்குறேன்னு வைங்களேன் .."


"........."


அவர் எதுவும் பேசவில்லை. காலையிலெழுந்து காபி குடிக்காததைப் போல அசௌகர்யமாய் இருந்தது.சென்றாயன் அந்த நேரத்தில் சரியாய் என் மொபைலில் அழைத்தான். பல நாட்களாய் அவனின்  போனை எடுக்கவில்லை. எடுத்து சில விஷயங்களை அவனிடம் பகிர்வோம் என்று நினைத்த அந்த நொடியில் தலைவன் வெளியே வந்தார்.


"மட்டி..அவன்கிட்ட எதையாச்சும் சொன்ன ... நீ  பழையபடி சுடுகாட்டுப் பக்கம் சுத்த வேண்டியது தான் ..மொத தடவையா மூளைய  உபயோகப்படுத்தி  சொல்ல வேண்டியதை மட்டும்  சொல்லு ..நீ பாக்குற வேலைக்கு உனக்கு ஒரு அசிஸ்டென்ட் வேற .."

திட்டினாலும் அவர் பேசியது கொஞ்சம் சந்தோசமாய் இருந்தது. போனை எடுத்து சென்றாயனிடம் " சொல்லுடா.." வென்றேன்.


"ஜி ...என்னாச்சு ஒரு வாரமா பிடிக்க முடில..எல்லாம் ஓகே தான.."

"லைட்டா வைரல் ஃபீவர்  மாதிரி இருக்கு..கை..காலுலாம் வலி அதான் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க.."


"ஓ ..அப்பிடியா..ஜி..அந்த செல்லம்பட்டி மேட்டரு   ஃப ர்ஸ்ட்  கட் ரெடி ஆகிருச்சு..லிங்க் அனுப்புனேனே பாத்தீங்களா.."


"இல்லடா...அதை நீயே பாத்துக்கோ..சனிக்கிழமை அப்ளோடு பண்ணு..ஃபேஸ்புக்கில நம்ம க்ரூப்ல ஷேர் பண்ணி விட்ரு.."


"ஓகே ஜி..பாஸ்வேர்டு ..அதே தானே..மாத்தலையே "


நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே கேட்டான். எனக்கு சட்டென கோபம் வந்து பின்பு அதை அடக்கிக்கொண்டு "அதே தான்டா " என்றேன்.

"டேய் சென்று...இந்த மாச சேலரி ..அக்கௌண்ட்ல போட்டுட்டேன் செக் பண்ணிக்கோ.."

"ஜி .."


"சொல்றா"


"உங்களுக்கு எதுவும் கேன்சர்..கீன்சர்னு சொல்லிட்டாங்களா...மூனா ந்தேதியே காசு போடுறீங்க.."


"எரும ..வேலைய பாருடா .."




சிரித்துக்கொண்டே போனை வைத்தான். திடீரென கொஞ்சம் மனது டல்லாய் ஆனது. அடுப்பை அனைத்தவுடன் பொங்கி வந்த பால் புஸ்ஸென கீழிறங்குவது போல உற்சாகமெல்லாம் கீழிறங்கியது. இந்த மனமெனப்படும் குரங்கு எப்போது தாவிக்குதிக்கும் , எப்போது குழம்பித்தவிக்கும் என்பதற்கெல்லாம் வரைமுறை கிடையாது போல.

"தம்பி ...நேத்தே உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன் ..என்  எழுத்துக்களில்  கூட பத்தி பத்தியாய் சொல்லக்கூடியவற்றை  சில வரிகளில் சொல்லிவிடுவேன்...நீட்டிப்பு எனக்கு பிடிக்காத சம்பிரதாயங்களில் ஒன்று ..நீ 'என் இனிய எந்திரா ' படித்திருக்கிறாயா ?..'


அந்த "கிறாயா" காதில் விழுந்தவுடன் தான் ஏதோ கேட்கிறார் எனப்புரிந்தது. "இன்னொரு முறை சொல்லுங்க" சொல்ல மனமில்லாமல் , அவர் பேசியதை மீண்டுமொருமுறை ரீவைண்ட் செய்து "இல்லை" என்றேன்.


"பரவால்ல ..அந்த கதைல அம்பத்தாறு வயதானதற்கு பிறகு மனிதர்களை  வலியில்லாமல் நவீன முறையில்  அரசாங்கமே கொலை செய்யும்..பழையன கழிதல், உலகம் சுழல்வதற்கு ஆதாரம் ...ஆகையால் நான் வேகமாய் விடைபெற்றுவிடுவேன் ..வருத்தப்பட வேண்டாம் .."

"ஐயோ ..சார் ...இப்போ எனக்கு செட் ஆகிருச்சு .. எனக்கு நீங்க இந்த 'அலெக்ஸ்சா '..'சிரி ' மாதிரி..நீங்க பேசலேனா தான் லோன்லியா  

ஃ பீல்  ஆகுது .."

".............ம்ம்ம்..."


"சார் ..நா என்னமோ  அந்த பைசாவுக்கு ஆசைப்பட்டு சொல்றேன்னு நினைக்காதீங்க ..உண்மைலியே  ஒரு பாண்டு கிரியேட் ஆகிடுச்சு ..படையப்பா பாணில சொல்லனும்னா 'நீங்க ரொம்ப லக்கி ..எனக்கே உங்கள பிடிச்சிருக்கு '..." 


"தம்பி..சொல்றேன்னு தப்பா நினைக்காத ..இந்த மாதிரி தயவுசெஞ்சு பேசாத ..எவனோ நீ இந்த மாதிரி பேசுறப்பெல்லாம் சிரிச்சி உன்ன கெடுத்து வச்சிருக்கான்..நாளைக்கு இந்நேரம் நீ ஒரு எழுத்தாளன்..பொதுவா எழுத்தாளர்கள் பேச மாட்டாங்க..அதுலயும் இந்த மாதிரி சத்தியமா பேச மாட்டாங்க.."


அவர் சொன்னது சரியானு யோசித்து பார்க்கும் முன்பே "எழுத்தாளன்"கிற வார்த்தை என் காதுக்குள் எதிரொலித்தது. சன் செய்தியில்,"எழுத்தாளர் ரெங்கன் இந்த வருட  சாகித்ய அகாடெமி விருதுக்காக தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார்" என ஒரு பட்டுச்சேலை பெண்மணி சொல்வது போல மனதில் காட்சி ஓடியது. மனக்குரங்கு மீண்டும் உற்சாக "மோடுக்கு" மாறியது.


டுத்த நாள் காலையென்பது கணக்கின் படி சில மணி நேரங்கள் ,ஆனால் எனக்கு அதை கடப்பது யுகம் போல இருந்தது.அவர் பெரிதாய் எதுவும் பேசவில்லை. அவருக்கென்ன தெரியும். கூட்டத்திலேயே வாழ்ந்து பழகிய ஒருத்தனுக்கு திடீரென மேடையில் ஏற்றி மாலை போட்டால்  அவனுக்கு சந்தோசத்தை விட பதட்டமே அதிகமாய் இருக்கும். அதுவும் யாருக்கோ போட வேண்டிய மாலை.
காலை பத்து மணி வாக்கில் டீக்கடைக்குப் போனேன். கமலத்தை தேடினேன். முன் வரிசையில் இருந்தது. அட்டையில் ஆர்யாவும் அவர் மனைவியும் வேஷ்டி சேலையில் இருக்கும் போட்டோ போட்டிருந்தார்கள். அந்தப்பெண்ணின் பெயர் பாத்திமாவா.. ஆயிஷாவா வென   யோசித்தேன். பிற்பாடு சூழ்நிலை உணர்ந்து "இப்போ இது ரொம்ப முக்கியம்.."மென கை விட்டேன்.காசு கொடுத்துவிட்டு ,தம்பதியை உள்ப்பக்கமாய் மடக்கி கமலத்தை கையகப்படுத்தி வீட்டுக்கு வந்தேன்.

சரியாய் நாலாம்பக்கத்தில் கட்டுரை இருந்தது. நான் நினைத்ததை விட போட்டோ பெரிதாய் போட்டிருந்தார்கள்.நான் கூட எங்கே ஆதார் அட்டையில் வருவது போல இருக்குமோ வென பயந்தேன்."என்னை"யே பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்சம் மீசை ட்ரிம் பண்ணியிருக்கிற போட்டோ கொடுத்திருக்கலாமோவென தோன்றியது. இதை எல்லோரும் படிப்பார்களா ? . கை லேசாய் நடுங்கியது.   எல்லோருமென்றால் எல்லோருமா? இந்த மனக்குரங்கு பழைய புண்களை ஏன் நோண்டுகிறது.

"கங்ராட்ஸ் பாஸ் ..."

"சொல்ல சொல்ல எழுதிட்டு ஸீன் போடுறானேனு ...கேலி பண்றீங்களா .."

"சே ..ச்சே "

"இல்ல  பரவால்ல ..எனக்கு பறக்கிற மாதிரி இருக்கு ..கடைசியா யாரு எப்ப என்ன பாராட்டுனாங்கன்னே ஞாபகம் இல்ல ..கோடிப்பேரு படிக்கிற ஒரு புத்தகத்துல  நான் எழுதற ...ம் ..அதாவது எழுதறதா வரது  என் கற்பனைக்கு அப்பாற்பட்ட 3டி கனவு .."

"கோடிப்பேரா ..இந்த பத்து வருசத்துல கமலம்  கண்டபடி பூத்திருக்கும் போல .."

"அரசியல் பேசாதீங்க .."

"குட் ஒன்"

பாலகுருவிடமிருந்து  போன்வந்தது . அவருக்கு "நூறு ஆயிசு" சொல்ல நினைத்து, அன்று முதல் எழுத்தாளர் தோத்திரத்தில் இணைந்ததால் தட்டையான குரலில் "ஹலோ.." என்றேன்.



"சுந்தர்..நேத்து சொல்ல மறந்துட்டேன்...தனியா ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஏதும் வச்சுக்காத...வாட்ஸாப் அது இதுல உளறி வைக்காத..என்னக்கேட்டா அத டெலிட் பண்ணிரு..பெர்சனல் ஈமெயிலுக்கு ஏதாவது மெயில் வந்தால் என்னை கேக்காம ரிப்ளை பண்ணாத.."

"இப்போ மூச்சா வருது..அதுக்காவது போலாமா" வென கேட்க நினைத்தேன்.பிற்பாடு அடுத்த வாரத்திற்கான வெள்ளைக்கவரும் ஐநூறு ரூபாய்  நோட்டுக்களும் ஞாபகம் வந்து என்னை அமைதியின் பக்கம் திருப்பியது. கமலத்தின் இன்டர்நெட் அட்மின் அக்கௌன்ட் லாகின் கேட்டேன். அதாவது "அவர்" கேட்டார். அதனால் இவர் கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் என் லேப்டாப்பின் வழி உட்புகுந்தோம். கமலத்தை அந்த நொடியில் உலகம் முழுவதும் சுமார் பனிரெண்டாயிரம் பேர் இணையத்தில் படித்துக்கொண்டிருந்தார்கள்.

"டேமிட்...ஒரு நாளைக்கு மினிமம் ரெண்டு லட்சம் பேர படிக்க வைக்கலாம்..ஆப்ப பாரு ..பாழடைஞ்சு கெடக்கு... சப்ஸ்கிரிப்சன்  சார்ஜ கம்மி பண்ணலாம்..பாலாவுக்கு இது புரிய இன்னும் ரெண்டு ஜென்மம் ஆகலாம்..பட் ஹி இஸ் மேக்கிங் குட் மணி.." 

கொஞ்ச நேரத்தில்  'பிரதி புதன்' பக்கத்திற்கு வந்தோம். நிறைய பேர் "குட் ஒன் ..நைஸ் " சொல்லியிருந்தார்கள். அதுவரை பத்தாயிரம் பேர் படித்திருந்தார்கள்.ஆயிரம் தான் இருந்தாலும் எழுதியவன் நானல்லவா...அதாவது சொல்ல சொல்ல எழுதியவன். அறுபது கமெண்ட்டுகள்  இருந்தது ..ஸ்க்ரோல் செய்து இன்னும் கீழே போனேன் "இவரு பெரிய மயிரு .." ..."உங்க நோபல் பரிச எங்க வச்சிருக்கீங்க.."  போன்ற கமெண்ட்டுகள் இருந்தது. கோபத்தில் டைப் அடிக்க போனேன்.

"நோ..நோ..எழுதுற வரைக்கும் தான் அது நம்ம வார்த்த..அதுக்கப்புறம் அது பொது சொத்து..அதுக்கு பூஜை போட்டாலும்..ஒன்னுக்கு அடிச்சாலும் கண்டுக்க கூடாது...பிஹேவ் லைக்க ரைட்டர்.."

கொஞ்சம் அமைதியானேன். அன்றைய நாள் மிக அயற்சியாய் போய்க்கொண்டிருந்தது. தெரிந்தவர்கள் யாராவது என் படத்தை  பார்த்து  விட்டு போன் பண்ண மாட்டார்களா என ஏக்கமாயிருந்தது.
தமிழ் வாத்தியார் பரமசிவம்...வாட்ஸாப் க்ரூப்பில் இருக்கும் ஏகப்பட்ட நண்பர்கள்...ஊர்க்காரர்கள்..சொந்தக்காரர்கள்.. அந்த பனிரெண்டாயிரத்தில் இவர்கள் ஒருத்தர் கூடவாயில்லை .. எரிச்சலாய் இருந்தது..



நான் எதிர்பார்க்காத அந்தப்பாடல் அப்போது ஒலித்தது. ஒரு குறிப்பிட்ட நபருக்கு மொபைலில் நான் வைத்திருக்கும் ரிங் டோன் அது. நான்கு வருடங்களுக்கு பிறகு அந்த ஒலி என் போனில் இப்போது ஒலிக்கிறது. மொபைலின் பக்கத்தில் போய் அதன் திரையை பார்த்தேன். அவள் சிரித்தபடி தெரிந்தாள்...மொபைல் அடித்துக்கொண்டே இருந்தது. இதயம் வேகமாய் துடித்தது..

"ஓ..இது தான் உன் பாஸ்வேர்டா..."


PARANI CALLING..........







புதன், 13 நவம்பர், 2019

பிரதி புதன் பேசலாம் -2

 இடி இறங்கியது போல அதிர்ச்சியில் பாலகுரு உட்கார்ந்திருந்தார். என்னால் அவரின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது.அதே இடியை ஒரு வாரத்திற்கு முன் மதுரையில் நானும் சந்தித்து, அதன் சத்தம் காதுகளை விட்டு  இன்னும்  போனபாடில்லை. அவர் முகம் வியர்த்திருந்தது. பக்கத்தில் இருந்த வாட்டர் கேனில் தண்ணீரைப்பிடித்து அவருக்குக் கொடுத்தேன். என் முகத்தை பார்க்காமல் வாங்கி மடக்கென குடித்தார். "ஓ பயப்படறாராமா ... 'அண்ணா கிட்ட பழைய மாதிரி போன்ல மணிக்கணக்குல       பேசணும் போல  இருக்குனு'  நினைவு நாள்  விழாவுல  கண்ண கசக்குனானே .."




அந்த குரலுக்கு ஒரு குரல்வளை இருந்திருந்தால் பிடித்து  அழுத்தியிருப்பேன். பாலகுருவின் பக்கத்தில் போனேன். அவர் என்னை குழப்பமாய் பார்த்தார். அழுவது போல குரல் நடுங்கி பேசினார்.

"தம்பி.. அவரு எனக்கு அப்பா மாதிரி..அவர் பேர வச்சு விளையாட்டுத்தனம் பண்ணாத...உண்மையிலேயே அவர் உன்கிட்ட பேசுறாரா...பணம் ஏதுனா வேணும்னா கூட ..."

அவரை தொடர விடாமல் நிப்பாட்டினேன்.

"சார்..என்னப் பாத்தா உங்களுக்கு எப்படித்தெரியுது...சத்தியமா பெர்சனல் லோன் கூட வாங்கித்தர்றேன் ...தயவு செஞ்சு அவரு எழுதுறத உங்க மேகசின்ல போடுங்க..."

எனக்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அடக்கிக்கொண்டேன். 

"திடீர்னு உடம்பு அதிருற மாதிரி தலைக்குள்ள குரல் கேட்டா எப்படி இருக்கும் தெரியுமா..காலைல ஆறு மணிக்கே எழுப்பி விட்ருவார்..வாக்கிங் போலாம்பார்..இப்போ இந்த ஒரு வாரத்துல மட்டும் நாலு புக் வாங்க வச்சுட்டார்..அவர் சொல்ல சொல்ல புக்க கைல வச்சிட்டு நான் பக்கம் திருப்பனும்..எவ்வளவு நேரம் சார் அப்படி உட்கார்ந்திருக்க முடியும்...டாய்லெட்ல ஒரு புக் வச்சு ,டெய்லி அதுல பத்து பக்கம் படிக்க.... அதாவது திருப்ப சொல்றார்...சார் நான்லாம் இங்கிலிஷ் மீடியம் படிச்சேன்..ஸோ எனக்கு தமிழும் வராது..இங்க்லீசும்  வராது..டெய்லி தமிழில எதையாச்சும் எழுத வச்சு டார்ச்சர் பண்ணுறார்..'தத்தி.. ரெண்டு சுழி 'ன' போடு' ம்பார்..
எங்கப்பா கூட என்னைய இவ்வளவு டார்ச்சர் பண்ணல....ஒரு ஏழெட்டு கட்டுரை தானாம்.. அப்புறம் போயிடுறேன்னு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மேல சத்தியம் பண்ணிருக்கார்...ப்ளீஸ் .."

அவரை கும்பிட்டேன். பாலகுரு என் தோளில் தட்டினார். என் கண்ணில் இருந்து நீர் உருண்டு வந்து கீழே விழுந்தது. ஒரு ஆண் இன்னொரு ஆண் முன் அழுவதென்பது அந்த அழுகைக்கான காரணத்தை விட சோகமானது.

"உனக்கு கேக்குறது உறுதியா அவர் வாய்ஸ் தானா.."

"நெட்ல பழைய வீடியோஸ்லாம் பாத்தேன்..அதே குரல் தான்.. என்ன அங்க நிதானமா பேசுறார்..எங்கிட்ட உறுமலா பேசுறார்.."

"ஒரு தடவ அவர் பூர்வ ஜென்மம்  சம்பந்த பட்ட தொடர் ஒன்னு எங்க பத்திரிக்கைல எழுதிட்டிருந்தார்...ஒரு பொண்ணு பெங்களூர்ல இருக்குற அவரு வீட்டுக்கே  போயி ..போன ஜென்மத்துல நான் தான் உங்க மருமக..என்னை உங்க வீட்ல சேத்துக்கோங்கனு அடம்பிடிக்க ஆரம்பிச்சிருச்சு...அப்புறம் அது போலீஸ் கம்பளைண்ட் வரைக்கும் போச்சு.. இவரு எனக்கு போன் பண்ணி "நல்ல வேல பாலா..முதல்ல ஏலியன் கதை எழுதலாம்னு இருந்தேன்..எழுதிருந்தா என்ன வந்திருக்குமோ" னு சிரிக்கிறார்.."



பாலகுரு கண்களும் கலங்கியிருந்தது. கொஞ்சம் நேரம் மௌனமாய் இருந்தோம்.அமைதியான குளத்தில் எறியப்பட்ட கல் போல அந்த சத்தம் வந்தது.

"இன்னைக்கு என்ன உலக அழுகை தினமா..ஒரே அழுகாச்சியா இருக்கே....நாளைக்கு ஞாயத்திக்கிழமை..இப்போ ஆர்டிகிள்  பிரஸ்ஸுக்கு போனாத்தான் ப்ரூஃப்  பார்த்து நேரத்துக்கு பப்ளிஷ் பண்ண முடியும்.. பாக்கெட்ல இருக்குற பேப்பர அவன்கிட்ட கொடுத்திட்டு..மிச்ச அழுகைய அழுங்க.."

எதுவும் சொல்லவில்லை. பாக்கெட்டிலிருந்து நாலாய் மடிக்கப்பட்ட இன்னொரு பேப்பரை எடுத்து பாலகுருவிடம் நீட்டினேன். அவர் அதை வாங்கி விட்டு, டிராயரிலிருந்த கண்ணாடியை எடுத்து போட்டுக்கொண்டு படிக்கத்தொடங்கினார். என் தமிழ் கையெழுத்தை தெளிவாய் காட்ட ஒரு கண்ணாடி இது வரை தயாரிக்கப்படவில்லை. முயற்சித்தார்.

குழந்தைகளின்  உலகம்  உதாசீனப்படுத்த பட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு குழந்தையின் மிகப்பெரிய லட்சியமே அது வேகமாய் வளர்ந்து மனிதனாய் மாற வேண்டியது தான் என புகட்டிக்கொண்டே இருக்கிறோம். வீட்டுக்கு வரும் மாமாக்களிடம் ஆங்கில ரைம்ஸ் பாடிக்காட்ட வேண்டும். பண்டிகைகளின் போது சிறு குழந்தைகளுக்கான வேஷ்டி/சேலை கட்டி போட்டோக்களுக்கு போஸ் கொடுக்க வேண்டும். பாழாய்ப்போன ஸ்கூலுக்கு சனிக்கிழமையும் போக வேண்டும். நோட்டுகளில் மிஸ்ஸிடம் ஐந்து ஸ்டார் வாங்க வேண்டும். ஹிந்தி, அபாகஸ், கராத்தே,ஸ்விம்மிங் என பக்கத்து வீட்டுக்குழந்தைகள் கற்றுக்கொள்வதை தாமும் கற்றுக்கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையிடம் "நாளைக்கு ஸ்கூலுக்கு போகணும் ..மறந்திராத.." னு சொல்லுவது அக்மார்க் அடல்ட் அயோக்கியத்தனம். ஆழ்துளை கிணற்றின் துவாரம் கொஞ்சம் பெரியதாய் இருந்தால் அடைத்திருப்போம். எப்படியும் நாம் நினைத்தால் கூட நம் சைஸுக்கு அதில் விழ முடியாதென்பதால் தான் அது மெத்தனமாக விடப்படுகிறது. சமுதாயம் முழுக்க பெரியவர்கள் தோண்டி வைத்த கிணறுகள் பிள்ளைகளைத்தின்ன காத்துக்கிடக்கிறது.

சுரன்  பார்த்தேன். வெக்கை நாவலை மிகச்சரியாய் சினிமாப்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாய் கொஞ்ச வயது நடிகர்கள் வயதான வேடத்தில் நடிக்கும் போது இருநூறு,முன்னூறு  வயதுக்காரர்கள் போல ஒரு மாதிரி இருமிக்கொண்டு அதிகமாய் நடிப்பார்கள். தனுஷ் கச்சிதமாய் நடித்திருக்கிறார். இன்னொரு தேசிய விருது கிடைத்தால் ஆச்சர்யப்படமாட்டேன். கூச்சப்படாமல் வெற்றிமாறனை தமிழின் தலைசிறந்த இயக்குனர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இனி ஜி.வி பிரகாஷ் வீட்டுக்கு நடிக்க கேட்டுப்போகும் இயக்குனர்களை பெயிலில் வெளிவர முடியாத காவலில் வைக்க எடப்பாடிக்கு சிபாரிசு செய்கிறேன்.


ஸ்ரேல் கம்பெனி ஒன்று வாட்ஸாப் செயலியை ஹேக் செய்து நிறைய பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், ஆக்டிவிஸ்டுகள் ஆகியோரின் சொந்த விஷயங்களை திருடி விட்டதாய் சொல்கிறார்கள். "கார்டியன்"னில்  கூட வாட்ஸாப் ,சம்பந்தபட்டவர்கள் மீது வழக்குப் போட்டிருப்பதாய் எழுதியி ருந்தார்கள். இது அரசாங்கத்துக்கு தெரியாமல் நடந்திருக்கும் என நான் நகக்கண் அளவு கூட நம்பவில்லை. அரசாங்கத்துக்கு உளைச்சல் கொடுப்பவரை மோப்பம் பிடிப்பது ஆதிகாலத்துப் பழக்கம். அவ்வளவே. தவிர சொந்த விஷயங்களை வாட்ஸாப்பில் மட்டுமல்ல எந்த ஆப்பில் வைத்தாலும் நமக்கு ஆப்பு வைக்கப்படும். 
"வணக்கம் கங்காராம்  சார் ...நாங்க ஐ.டி புரஃபசனல்களுக்கு சல்லீசான  வட்டியில் லோன் தர முடிவு செய்திருக்கோம்" னு  வருகிற காந்தகுரல் பெண்களின் அழைப்புகளும் தகவல் திருட்டின் ஒரு படிநிலை தான்.எத்தனை  புத்திசாலித்தனமான என்கிரிப்ஷன்கள் செய்தாலும் ,இந்த களவாணிகள் டீக்ரிப்ட் செய்து விடுவார்கள்.வீட்டை பூட்டுபோட்டு விட்டுத்தான் செல்வோம். ஜன்னல் ,பின் கதவு எல்லாவற்றையும் அடைத்திருப்போம். தெருவுக்கு ரெண்டு செக்யூரிட்டிகள் கூட இருப்பார்கள். இருந்தும் எங்கயாவது ஓட்டையைப் போட்டு  லலிதா  ஜுவல்லரிக்குள் இறங்கியதைப் போல பொம்மை முகமூடியைப் போட்டு இறங்கிவிடுவார்கள். இன்றைய தேதிக்கு வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை வைத்துக்கொள்ளாமல் திருடர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குங்கள். அதாவது வாட்ஸப்பில் உங்கள் மேனேஜரை "தேங்கா மண்டையன்"னு நண்பருடன் கேலி செய்து கொள்ளலாம். ஆனால் ஏ.டி.எம் பின் நம்பரை பொண்டாட்டிக்கு கூட அனுப்பிவிடாதீர்கள்.


ர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் வளருவது நல்லதா கெட்டதா என தெரியவில்லை. அதையெல்லாம் யோசிக்காமல் அது தினமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நம்முடைய ஈ.சி.ஜி ரிசல்ட்டை வைத்துக்கொண்டு நாம் இன்னும் ஒரு வருடத்தில் செத்துப்போய்விடுவோமாவென சொல்லிவிடுவார்களாம். அதாவது நமது ஈ.சி.ஜி கிராஃப் பேட்டர்னை வைத்துக்கொண்டு ஏற்கனவே ஆராய்ச்சி செய்யப்பட்ட பதினேழு லட்சத்து  சொச்ச ரிப்போர்டுகளையும் வைத்து நமது வாழ்நாள் குறித்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.இந்த செயற்கரிய சேவையை செய்தது பெனிஸில்வானியாவைச்சேர்ந்த ஒரு ஹெல்த் சிஸ்டம் கம்பெனி. ஆக இனி நாம் ஈ.சி.ஜி க்கு போனால் ,டெஸ்ட் ரிசல்ட் இப்படிக்கூட வரலாம்.

"பையனுக்கு கல்யாணத்தை அக்டோபரில் வைத்துக் கொள்ளுங்கள்.பதினாலு,பதினஞ்சு முகூர்த்த தினங்கள். உங்கள் ஹௌசிங் லோனை நவம்பருக்குள் முடித்து விடுங்கள். அதே போல ஆபிசில் மிச்சமிருக்கும் இருக்கும் பதினாலு நாள் லீவை வேகமாய் எடுத்து விடுங்கள். நீங்கள் டிசம்பர் பத்தில் சாகப்போகிறீர்கள்" 


ஹாராஷ்டிராவில்  இடியாப்பக்குழப்பங்கள்  இன்னும் இழுத்துக்கொண்டே போகிறது. தேர்தலுக்கு முன் சண்டை போட்ட சிவசேனாவும்  என்.சி .பி யும்  கூடிப்பேசுகிறார்கள் . பாரதிய ஜனதா நூறு சீட் ஜெயித்தும் அது "நாய் பெற்ற தெங்கம்பழம் " ஆனது.  காங்கிரஸ் "நல்லெண்ண வேப்பெண்ண வெளெக்கெண்ண..பாகிஸ்தான் ஜெயிச்சா எனெக்கென்ன .." என்பது போல யாரையும் கண்டுகொள்ளாமல் நிற்கிறது. ஒரு வேளை  காங்கிரசும் .என்.சி .பியும்  மனசு வைக்கும் பட்சத்தில் சேனையின் இளைய தளபதி  "ஆதித்ய தாக்ரேவாகிய நான் " சொல்ல வாய்ப்பிருக்கிறது. என்ன செய்தாலும்  நம்ம வடக்கூரான் அமீத்ஷா கர்நாடகாவில் செய்தது போல  ஏதாவது "உருண்டை" உருட்டி வைத்திருப்பார்.பொறுத்திருந்து பார்ப்போம். எது எப்படியோ மும்பை நியூஸ் சேனல்களின் டி.ஆர்.பி  இன்னும் ஒரு மாதத்திற்கு எகிறும் . 


பாலகுரு பேப்பரை மடித்தார். மூன்றாவது,நான்காவது பக்கங்களை அவர் படிக்கவேயில்லை. எழுந்து நடந்து கதவு வரை சென்றார். பின் குறுக்காய் ஒரு முறை நடந்தார்.நான் அவரை பார்வையால் தொடர்ந்தேன். என்னை நோக்கித்திரும்பினார்.


"சு..சு..சுப்ர..."

"சுந்தர்  சார்.."

"ஹா..சுந்தர்..ஒருவிஷயம் இருக்கு..அவர் பேர போட்டு பிரசுரிக்க முடியாது... பிரச்சனையாகிடும். தமிழ்நாட்ல அவரைப் படிக்காதவுங்க ரொம்பக்குறைவு. அறிவியல் அறிந்தவர்ங்கிறதால அவரை மொத்த தமிழ்ச் சமூகமே ஆசானா ஏத்துக்கிச்சு. அவர் என்ன எழுதினாலும் கேள்வி கேட்காம ஏத்துப்பாங்க. கேலி செஞ்சா எவ்வளவு பெரிய ஆளானாலும் சிரிச்சிட்டு கடந்திருவாங்க. அவரின் எழுத்தோட வீச்சு அப்படி. அவர் ஒரு மேதமை நிலைய ரொம்ப சீக்கிரமே அடைஞ்சிட்டார். அப்படி ஒரு பிம்பம் எழுதறது வேற ..இப்போ இதை என்ன பேர்ல பிரசுரிக்கறதுனு குழப்பமா இருக்கு..."




பாலகுரு "பிரசுரிப்பது" என்கிற வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்தியது எனக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. ஆனால் அவர் சொல்லும் சிக்கல் நியாயமானதாய் தெரிந்தது.

"சார்..அவரும் கேட்டுக்கிட்டே தான இருப்பாரு..ஏதாவது சொல்வாரு னு நினைக்குறேன்"

தலையை திருப்பி பார்த்தேன். எதுவும் சத்தம் வரவில்லை. தேவையில்லாத போது நொண நொணனு பேசுறது. தேடுறப்போ காணாமப்போறதென மனதிற்குள் கடிந்து கொண்டேன். லேசாய் "ம்க்கும்" சத்தம் கேட்டது. பெரிசு வந்திட்டது.


"பாலாவ ரொம்ப யோசிக்காதே முடி கொட்டிரும்னு சொல்லு...பேர் என்ன பேரு...ரெங்கன்னு  போட்டுக்க சொல்லு..பயோ டேட்டால 'இன்ஜினியரிங் படித்திருந்தாலும்  இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்டு கொஞ்ச நாள் ஒரு பத்திரிக்கையில்  வேலை செய்தார். உலக இலக்கியங்கள் படித்திருப்பதால் , தமிழில் காலத்தால் அழியா படைப்புகளை எழுத வேண்டுமென்பதே இவரது அவா. தற்சமயம் சமகால நிகழ்வுகளை சோஷியல் கமெண்ட்ரி செய்து வருகிறார்'னு போட்டுக்க சொல்லு"

கேலி வசனங்களை கட் செய்து விட்டு சொன்னதை சொன்னேன். பாலகுரு " அதெல்லாம் சரி..பிசிக்கலா ஆளு வேணும்ல...எங்களுக்கு ஆடிட்டுக்கு போட்டோ ..மத்த விஷயம்  எல்லாம் வேணும்ல.."
   
நான் திரும்பவும் குரலை எதிர் பார்த்து திரும்பினேன். "அட முண்டமே..நீ தான் அந்த ரெங்கன்..உன் போட்டோ..ஆதார்...இத்யாதிகளையெல்லாம் அவன்கிட்ட கொடு "

பாலகுரு அவர் என்ன சொன்னார் என்பது போல புருவத்தை உயர்த்திக்கேட்டார். எனக்கு அவரிடம் இதை இப்படி சொல்வதென்று சங்கடமாய் இருந்தது. ஒரே நாளில் தமிழுக்கும்,தமிழ் பத்திரிக்கையாசிரியனுக்கும் எத்தனை 
அதிர்ச்சிகளைத்தான்  கொடுப்பது.


புதன், 6 நவம்பர், 2019

பிரதி புதன் பேசலாம் -1

 அந்த அறை கொஞ்சம் பெரியதாய்  இரண்டு மூன்று ஜன்னல்களுடன் இருந்தது. ஒரு  டேபிள் போடப்பட்டு ஒரு பக்கம் பெரிய ரோலிங் சேரும் ,எதிரே மூன்று பிளாஸ்ட்டிக் சேரும்  இருந்தது. நான் பவ்வியமாய் நடுவில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டேன். ஒரு வயதான அம்மா அறையை பெருக்கிக்கொண்டிருந்தாள்.  சுவற்றில் ஒரு  தாமரை படம்  போடப்பட்டு  அதன் பின்னே கமலம் என அடர்த்தியான பச்சை நிறத்தில் எழுதியிருந்தது. அதன் கீழே "தமிழகத்தின் நம்பர் ஒன்  வார இதழ்"  என  சின்ன எழுத்துக்களில் போடப்பட்டிருந்தது. இரண்டு பக்கம் ஷோகேசுகளிலும்  நிறைய விருதுகளும் , நிறுவனர்  மற்றும் தலைமை பதிப்பாசிரியர் பாலகுரு சிரித்தபடி  எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் சேர்ந்து நிற்கும்  போட்டோக்களும் இருந்தது.  பாலகுரு கிட்டத்தட்ட  ஆறடியில் ஆஜானுபாகுவாய்  தெரிந்தார். அவர் ஒரு அறை அறைந்தால் கண்டிப்பாய் வாயில் இரத்தம் வரும் என தோன்றியது.எச்சில் விழுங்கிக்கொண்டேன். பாக்கெட்டில் இருக்கும் பேப்பர்களை ஒரு முறை தொட்டுப்பார்த்துக்கொண்டேன்.என் காதுக்கு மிக அருகில் கீச்சுக்கீச்சில்  அந்த குரல் மீண்டும் முனங்கியது.





"பதினேழு கிரெனெடு...போலியா தைச்சி போட்டுக்கிட்ட ராணுவ ட்ரெஸ்ஸோட ,"உரி" ராணுவ தளத்துக்குள்ள நுழைஞ்ச தீவிரவாதிக கூட இவ்ளோ பயந்திருக்க மாட்டாங்க ..ராஜா நீ நடந்தத சொல்லிண்டு போய்ட்டே இருக்கப்போறே..கத்திய வச்சி வெண்ணைய வெட்டுற மாதிரி ஸ்மூத்தா போகப்போகுது..அதுக்கப்புறம் அவர்பாடு ..எம்பாடு..."


எனக்கு அந்த குரல் எரிச்சலாய் இருந்தது. "உஷ்" என்றேன்.

"திருவாளரே..."பாடு" னு நான் ஒன்னும் திட்டலை..வம்பாடு..பெரும்பாடு மாதிரி அவர்பாடு-எம்பாடு"

கோபம்  தலைக்கேறியது. "கொஞ்சம் வாய மூடுங்க..ப்ளீஸ்" என்றேன்.


"ஏம்ப்பா..சிரிக்கிறதுக்கு கூட ஜி.எஸ்.டி இருக்கா..ரொம்ப பண்ற.."


தலையில் கைவைத்துக்கொண்டேன். கூட்டிக்கொண்டிருந்த ஆயா, நான் பொலம்புவதை கண்டுகொள்ளவில்லை. ஏதோ ப்ளூ டூத்தில்  பேசிக்கொண்டிருக்கிறேன் என நினைத்திருப்பாள். இவ்வாறாக இந்த நவீன கண்டுபிடிப்புகள் நான் பைத்தியக்கார ஆஸ்பத்திரி போவதை ஒருவாரமாய் தடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த  பாலகுரு வந்து தொலைந்தால் தான் என்ன என்று  தோன்றியது . நினைத்த  மாத்திரத்தில் கனைத்த படி வந்தார். வேகமாய் வந்து டேபிளில் இருந்த விநாயகர் படத்தை கும்பிட்டு விட்டு சேரில் உட்கார்ந்தார்.  அவர் மீது  வியர்வையுடன் கூடிய திருநீர் வாசனை அடித்தது.

"அட்வெர்டைஸ்மென்ட்  ஃபார்ம்  நிரப்பி கொண்டு வந்துடீங்களா...லோகோ நீங்க கேக்குற சைஸுல பண்ண முடியாது..சரவணன் சொன்னானா.."

நான் பெரிதாய் எதுவும் செய்யத்தேவை இருக்கவில்லை. என் முழியும், முகம் போகிற போக்கையும் பார்த்து அவரே நிப்பாட்டினார்.

"நீங்க மதினீஸ் மசாலா ஆள் தான.."

எனக்கு நெஞ்சு படபட வென அடித்தது. வேகமாய் எழுந்து ஓடிவிடலாம் போல இருந்தது. கொஞ்சமாய் பலத்தை திரட்டி "நா அதில்ல சார் ...நா  வேற விஷயமா வந்திருக்கேன்..."

அவர் புருவத்தை உயர்த்தி என்னை உற்றுப்பார்த்தார். நான் என்ன விஷயம் சொல்லப்போகிறேன் என  கவனிப்பது போல தெரிந்தது. பேசத்தொடங்கினேன்.  காலை முதல் பல முறை சொல்லிப்பார்த்தவை தான்.உலகத்துலயே ரொம்ப கஷ்டமானது உண்மைய  சொல்றது தான்.அதுவும் எனக்கு நடந்ததை..

"சார்..ஒரு பதினஞ்சு  நிமிஷம் நான் சொல்றத காது குடுத்துக் கேளுங்க..கோபம் வந்தாலோ..எரிச்சல் வந்தாலோ  பொறுத்துக்கோங்க..ட்ராபிக்ல வண்டிய நிப்பாட்டி காத்திருப்போம்ல அந்த மாதிரி...அந்த பதினஞ்சு  நிமிஷம் முடிஞ்சதுக்கப்றம் உங்களுக்கு என்ன தோணுதோ அத செய்ங்க... I am in Big trouble..நா உங்ககிட்ட பேசியே ஆவனும் ..."

லேசாய் சிரித்தார். "சொல்லுங்க "என்றார். அவர் முகத்தில் ஒரு தேஜஸ் தெரிந்தது. நான் பயந்தது போல எதுவும் நடக்காது என தோன்றியது. குரல் திரும்பவும் காதுக்கு பக்கத்தில் விஜயம் செய்தது. "அவனுக்கென்ன முத்தமா கொடுக்கப் போற.. சொல்லித்தொல முண்டமே..."

"சார்..எம்ப்பேரு சுந்தர். ஒரு ஏழு வருஷமா "நெற்றிக்கண்" இணைய பத்திரிக்கைல வேல செஞ்சேன். யாரும் பொண்ண கட்டிக்கொடுக்க முடியாதளவுக்குத் தான் சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். இந்த வருஷம் தான் வெளில வந்து நாலு ஃப்ரெண்ட்ஸ்ஸோட  சேர்ந்து  "அமானுஷ்யம்" னு ஒரு யூ ட்யூப்  சேனல் ஆரம்பிச்சோம். பயங்கர ஹிட். "பேரா நார்மல் ஆக்டிவிட்டி" கள் நடக்கிற இடங்கள தேடி கேமராவோட போயிடுவோம். அதன் பின்னணி கதைகளை அலசுவோம். அதை சுவையா, மிரட்டலா சொல்லுவோம். நிறைய நியூஸ் சேனல்களுக்கு கூட வீடியோ கொடுத்திட்டு இருந்தோம்..நல்ல பைசா வேற.."


தலையை அசைக்காமல் கேட்டுக்கொண்டே இருந்தார். தொடர்ந்தேன்.

"உண்மையா  என்ன பயமுறுத்திற  மாதிரி எதையும் சமீபத்துல வரைக்கும் பாக்கல..எப்படி மக்கள பயமுறுத்துறது என்பதில தான் என் முழு சிந்தனையே..சில பேய்ப்பட டிஸ்கஷனுக்கு கூட போயிருக்கோம்..ஆனா புதுசா கான்செப்ட் பிடிக்கலேனா ஃபீல்ட்ல நிக்க முடியாது...சப்ஸ்க்ரிப்ஷன் ஏறல.. வெறித்தனமா கேஸ் தேட ஆரம்பிச்சோம்.. போன மாசம் அமாவாசைக்கு முதல் நாள் என் அசிஸ்டன்ட்  சென்றாயன் போன் செஞ்சு "ஜி.. மதுரைக்கு பக்கத்துல இருக்க செல்லம்பட்டில இருக்கேன்..ஏதோ பெருசா சிக்குன மாதிரி இருக்கு..வரீங்களா " என்றான்.

கிளம்பினேன். நான் போயிருக்கக்கூடாது. காலச்சக்கரத்திற்கு ரிவர்ஸ் கியர் கிடையாது. இப்போது பேசி பயனில்லை. சென்றாயனும் ,கோபியும்  மதுரை ரயில் நிலையத்துக்கே வந்திருந்தனர். சென்றாயன் எனக்கு அசிஸ்டன்ட், கிட்டத்தட்ட நாலு வருட பழக்கம். துடுக்கான பையன். நான் சோர்ந்து கிடக்கிறபோதெல்லாம் எங்கிருந்தாவது ஒரு பேயை ஓட்டிக்கொண்டு  வந்து எனக்கு பூஸ்ட் கொடுப்பான். அவன் என்னிடம் கோபியை காட்டி "ஜி..இவர்  தான் கோபி " என்றான்.


சென்றாயன் கண்ணைக்காட்டி  சொன்ன விதத்துலயே அவன் தான் "ஸோர்ஸ்" என புரிந்தது. பெரும்பாலும்  என் அனுபவத்தில் "ஸோர்ஸ்கள்" புரளிகளை மொத்தமாய் மேய்ந்து விட்டு  ஒரு பொது கதையை நம்மிடம் சொல்லுவார்கள். அது நிறைய  பிசிறடிக்கும்.நாம அதுல கொஞ்சம் ஒர்க் பண்ணி சரி பண்ணனும். ஆனா இவன் வேற மாதிரி தெரிந்தான். கனீரென பேசினான். மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் எம்.ஃபில் படிப்பதாய் சொன்னான்.

மதுரையிலிருந்து செக்காணூரணி போகிற டவுன்பஸ்ஸில் மூவரும் ஏறினோம். கோபியை நடுவில் உட்காரவிட்டு நாங்கள் இருபுறமும் உட்கார்ந்து கொண்டோம். அவனுக்கு இருபத்து ஐந்து வயதிருக்கும்.கோபியின் கையில் தட்டி "சொல்லுங்க" என்றேன்.

" சார்..இங்கன நாகமலை புதுக்கோட்டை பக்கத்துல  போன வருஷம் முழுக்க   அகழ்வாராய்ச்சி  செஞ்சாங்கள்ளே .. அப்போ மண்பானை, செம்புக்கம்பி  என நிறைய கிடைச்சிருக்கு .. விஷயம் என்னான்னா ஆறடிக்கு ஒரு விசனக்கல்லும்  கிடைச்சுதாம்....விசனக்கல்னா  இறந்தவர் உடலை புதைத்த  இடத்தில்  வைக்கும்  நினைவுக்கல் ...எழுத்துக்களோடு ஸ்ட்ரோக்ஸ்ஸ பார்க்கிறப்ப  முதலாம் தமிழ்ச்சங்க காலமா இருக்க வாய்ப்பு இருப்பதா சொன்னாங்க..அப்போ தான் யூனிவர்சிட்டில இத பத்தி அரசல் புரசலா கேள்விப்பட்டேன்.."

" போன மாசத்துல இருந்து நம்ப செல்லம்பட்டில மக்கள் பார்வைக்கு அந்த பொருட்கள எல்லாம் வச்சாங்க..பெரும்பாலும் யாரும் வர மாட்டாங்க..தினமும் விசனக்கல்லில எழுதுன இரங்கலை படிப்பேன். அந்த மொழி நடை பிடிபட்டு, விஷயம் பின்பு தான் புலப்பட்டது"

"என்னானு?"

அவன் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு " சார்..முதலாம் தமிழ்சங்கம்ங்கிறது அகஸ்தியர் காலம்.. தோராயமா கி.மு  நாலாயிரம் ..அப்போ வாராகினு ஒரு பார்வையில்லா மன்னன் தெற்கு மதுரையை ஆண்டு வந்திருக்கிறான்..அவரோட தலைமைப் புலவர் அருமன்  ஒரு  நாள் இறந்து போறார். அரசனுக்கு தாங்க முடியாத சோகம். அருமனோட குரல் தான் அரசனுக்கு உலகமே. அரசவையிலும் நாட்டிலும் நடப்பவையை அவரே அரசருக்கு தெரிவித்துக்கொண்டிருந்தார். மிகப்பெரிய கல்விமான். அரசரின் உணர்வறிந்து அறிவுரை தருவது அவர் தானாம்.."

நான் ஒருமுறை சென்றாயனை எட்டிப்பார்த்தேன்.அவன் கண்ணை கூர்மையாக்கி கேட்டுக்கொண்டிருந்தான். கோபி தொடர்ந்தான்.


"வாராகி அழுது புலம்பி..தன் குடும்பத்தினர் பேச்சையும் புறக்கணித்து   உண்ணாமல்  "வடக்கிருந்து" உயிர் விட முடிவெடுத்திருக்கிறார்..விஷயம் அகஸ்தியர் வரை சென்றது. பெரியவர் வந்தும் சமாளிக்க முடியவில்லை..அரசனின் அன்பில் அகஸ்தியர் நெகிழ்ந்தார்..இருவரி வெண்பா ஒன்றை எழுதி கொடுத்து விட்டு  'மகனே..இதனை அருமனின் சமாதி மீது வைக்கப்போகும் விசனக்கல்லில் பதித்து விடு..இரங்கற் செய்தியுடன் கடைசியில் இதுவுமிருக்கட்டும். அருமன் படைத்த நூலொன்றை  விசனக்கல்லில் வைத்து அமாவாசையன்று இப்பாவை முப்பது முறை  மனமுருக பாடு' வென சொல்லிவிட்டு சென்றாராம். சொன்னபடி செய்த பின் ,அடுத்த நாள் முதல்அரசன் காதுகளுக்கு அருமன் குரல் கேட்டதாம். அரசன் அதன் பின் மகிழ்ச்சியுடன் கடைசி வரை வாழ்ந்ததாய் சொல்லப்படுகிறது. சிலர் அரசருக்கு புத்தி சுவாதீனம் ஆனதாய் சந்தேகித்திருக்கிறார்கள்."




நான் சென்றாயன் பக்கம் திரும்பி "டிராஃ ப்ட்  எழுதிக்கோ..கடைசி பைத்தியம் மேட்டர விட்டுரு..செமத்தி தான் "

கோபி  "சார்  அரசன் நல்லாத்தான் இருந்திருக்கணும்  ...அரசன விடுங்க ..அகஸ்தியர்  யாரு தெரியுமா..தெய்வப்புலவன்..வார்த்த ஒன்னொன்னும் தமிழ் மந்திரம்.."

"சரி கோபி..நானும் தப்புன்னு சொல்லல..மக்களுக்கு வேற ஐடியா கொடுக்கிற மாதிரி எந்த செய்தியும் வரக்கூடாது அதான்..இன்னைக்கு அந்தக்கல்ல போயி பார்த்திருவோமா.."

என்னை ஒரு மாதிரி பார்த்தான். "போலாம்..நான் வாட்ச்மேன் கிட்ட சொல்லுடுறேன்..நைட் பத்து மணி வாக்குல வாங்க..."

நான் சென்றாயனிடம் "டேய்..இன்னைக்கு லொக்கேஷன்போய் லைட்டிங் எப்படி போகுதுனு பாக்கலாம்.. நாளைக்கு ஷூட் போயிடலாம் ..போன வாட்டி மாதிரி புகை போட வேண்டாம் " என்றேன்.

இரவு சொன்னபடி நானும் சென்றாயனும் செல்லம்பட்டியில் இருந்த அந்த அரசுக்கட்டிடத்துக்கு போயிட்டோம். அங்கே தான் அகழ்வாராய்ச்சி பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. வாட்ச்மேன் தூங்கிக்கொண்டு இருந்தார். கோபி எங்களுக்கு முன்னமே  அங்கே காத்திருந்தான். உள்ளே நுழைந்தோம். நோட்டம் விட்டதில் திகிலை கூட்ட எல்லா காரணிகளும் அங்கே இருந்தது.  மாட்டின் மண்டை ஓடு, கடப்பாரை , முதுமக்கள் தாழி. எனக்கு ஒரு ஹிட் கொடுக்க போகிற சந்தோசம். கோபி என் கையைப்பிடித்து கொண்டு போய் அந்த விசனக்கல் முன்னிறுத்தினான். கையில் வைத்திருந்த புத்தகத்தை அந்தக்கல் மீது வைத்தான்.

"உட்காருங்க சார்..உங்களுக்கும் பைத்தியம் பிடிக்குதானு பார்க்கலாம்.."

நான் சிரித்தேன். கோபிக்கு சாயங்காலம் நான் பேசிய தொணி பிடிக்கவில்லை. எனக்கு உண்மை,பொய் மீது அக்கறையில்லை . நல்ல கன்டென்ட் கிடைக்க எந்தக்கதைகளையும் நான் கேட்கத்தயார் தான். வைக்கப்பட்ட புத்தகத்தின் அட்டையை பார்த்தேன் "மீண்டும் ஜீனோ" வென இருந்தது. ஒரு நாய் படம் போட்டிருந்தது. ஆசிரியர் பெயர் சிறியதாய் இருந்தது .அந்த வெளிச்சத்துல கண்ணுக்கு தெரியல.

"இப்போ எதுனா ஆவி வந்தா ஒன்ன விட நாங்க தான் செம்ம ஹேப்பி ஆவோம்..பேய விட அது கொடுக்கிற பயம் தான் ஒரு த்ரில்லே.... என்ன.."

போய் கல்லின் எதிரில் உட்கார்ந்தேன். புத்தகம் காற்றுக்கு ஆடி அதன் பக்கங்கள் பறந்தது. நான் கல்லில் எழுதிய பாடலை தேடினேன். எழுத்துக்கள் புரியவில்லை. மெதுவாய் படித்தேன்.

"மாயா த்தமிழ்ஈன்ற  புத்திர னேகாலன் 
கயிற்றறுத் தெம்மிடம் வா "

கோபி சிரித்தான். "இன்னும் இருபத்து ஒன்பது தடவ படிக்கணும்"
சிரித்துக்கொண்டே தொடர்ந்தேன். கோபி எண்ணிக்கொண்டிருந்தான். சென்றாயன் செல்போன் லைட் வெளிச்சத்தில் டிராஃப்ட் எழுதிக்கொண்டிருந்தான். சரியாய் கடைசி தடவை சொல்லையில் திடீரென பறப்பது போல இருந்தது. ஏதோதோ காட்சிகள் தெரிந்தது. ஒரு பேண்ட் சட்டை போட்ட மனிதன், கொஞ்சம் கூன் போட்ட வாரே நடந்து வருகிறார். சென்றாயனும், கோபியும் முகத்தில் தண்ணீரைத்தெளித்தனர். கண்ணைத்திறந்து நான் எழுந்த போது ஒரு ஆஸ்பத்திரியில் இருந்தேன்.

கோபி "சாரி சார்..உண்மைலயே என்ன ஆகும்னு பாக்கலாம்னு தான் செஞ்சேன்..நீங்க இப்படி மயக்கம் போடுவீங்கன்னு தெரியாது..."

திரும்பி சென்றாயனை தேடினேன். "அவன் ..சாப்பாடு வாங்க போயிருக்கான்..". கோபி தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே போனான். ஃபேன் ஓடுகிற சத்தம் மட்டும் தான் அங்கே கேட்டுக்கொண்டு இருந்தது. அந்த மிகச்சரியான நொடியில் தான் அந்த குரல் என் வாழ்க்கைக்குள் நுழைந்தது.

"தேங்க்ஸ்பா தம்பி..பொதுவா தெரியாமல் செய்கிற உதவிக்கு நான் யாருக்கும் நன்றி சொல்றதில்ல..''

காதுகளை தடவிப்பார்த்தேன். அறையின் எல்லா திசைகளையும் பார்த்தேன் அங்கே யாருமில்லை. காதுக்கு மிக அருகில் ,மிக துல்லியமாய் அந்த குரல் வந்தது.

"பதறாதே...பழகிக்கோ..இப்போ திடீர்னு  ஒரு நாள்  
காலம்பர எந்திருக்கிறே..பாத்தா ரெண்டு தோள்பட்டை பக்கத்துலேயும் ரெண்டு ரெக்கை  முளைச்சிருக்கு..பதறிடுற..ஆனா அது யாரு கண்ணுக்கும் தெரில..உனக்கு மட்டும் தான் தெரியுது..அழற..தலைல அடிச்சுக்குற..கடவுளை பழிக்கிற ..ரெண்டு நாள் போனப்புறம் லேசா றெக்கைய ஆட்டி பாக்குற..அது அழகா ஆடுது..கொஞ்சம் வேகமா ஆட்டுற ..அது உன்ன அப்படியே பறக்க வைக்குது..சந்தோஷமாயிடுது..பிற்பாடு தான் யோசிக்கிற..உனக்கு கை,கால்..எல்லாம் அப்படியே இருக்கு..எக்ஸ்ட்ராவா  யாருக்குமே இல்லாத ஒன்னு கிடைச்சிருக்கு..அது ஒரு கிஃப்ட்னு உணருற..ஆச்சா..இப்போ உனக்கு நான் தான் அந்த ரெக்க"  

என் தலைமுடியை இறுக்கிப்பிடித்துக்கொண்டேன்.



"ஹே ..ஹே ...ஸ்டாப்..ஸ்டாப் " பாலகுரு கிட்டத்தட்ட கத்துவது போல என்னை நிறுத்தினார். எனக்கு லேசாய் மூச்சு வாங்கியது.

"நீ இப்போ என்ன சொல்றே..டேய் ஃப்ராடு.. அந்த புக்க வச்சு நீ அத படிச்சோனே உன்கிட்ட அவரு பேசுறாராமா ..நீ அவர இதுக்குள்ள இழுத்தேன்னு வை .. " நாக்கை மடித்து கோபத்தில் ஏதோ பேசப்போனார். நிப்பாட்டினேன்.

"சார்...நீங்க நிப்பாட்டி ஏதாவது பேசுன உடனேயே இத கொடுக்க சொன்னார்"  பாக்கெட்டிலிருந்து ஒரு மடித்த வெள்ளைத்தாளை எடுத்து அவரிடம் நீட்டினேன்.பாலகுரு குழப்பமாய் அதை வாங்கினார். படிக்கத்தொடங்கினார். சொல்ல சொல்ல எழுதியது நானென்பதால்  எனக்கு அந்த கடிதத்தில் இருந்தவை தெரியும்.

"அன்பு பாலா..நலமா..உன் தீப்பெட்டி சைஸ் மூளையை பெரிதாக்க இந்த முறை நான் பிரயத்தனப்பட போவதில்லை..விஷயத்திற்கு வருகிறேன்..நான் ஆஸ்பத்திரியில் இருந்த கடைசி நாட்களில் நீ என்னைப்பார்க்க வந்திருந்தாய்.."அண்ணா அழாதேள்..எல்லாம் சரியாகிடும் ..தெம்பா எழுந்து வர போறேள்...பேசுனபடி நம்ம கமலத்துல அடுத்த வாரம் முதல் நீங்க எழுதறேள்..நாளைக்கு இஸ்ஸுல ஒரு பக்கம் பெருசா விளம்பரம் போடுறேன்..நீர் தமிழ் பீஷ்மன்"  அது இதுனு பெனாத்திட்டு போயிட்ட. ஆனா அடுத்த நாள் நர்ஸ் சொன்னா ..அந்த மாதிரி எதுவும் விளம்பரம் வரலேன்னு..நிம்மதியா சாகட்டும்னு சொல்லிருப்ப..பரவால்ல..ஆனா எழுதுறதா இருந்த அந்த  வார தொடருக்கு நான் கொடுத்த தலைப்பு நினைவு இருக்கா...கீழே இருக்கு படி..மாண்டு திரும்பியும் மாளாத என் ஞாபகத்தை மீண்டும் ஒரு முறை மெச்சு!!!"


             "பிரதி புதன் பேசலாம் "

                                                                                             










செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

டவுசர் காலங்கள் -பகுதி4





எங்கள் ஏரியாவின் இதயத்துடிப்பே பெண்கள் தான், அவர்களின்றி அங்கு அணுவும் அசையாது. பிறகு வீட்டு ஆம்பளைகள் பற்றி சொல்லத்தேவையில்லை. முன்னாடி லயன், நடு லயன், மூணாவது லயன் என மூன்று தெருக்குள்ளும் மொத்தமாய் நாலு நல்லதண்ணி குழாய்கள் உண்டு. அதிகாலையில் தண்ணி வர ஆரம்பிக்கும் போது கொட்டாவி விட்டுக்கொண்டே தலை முடியை கொண்டையிட்டபடி குடத்துடன் வருவார்கள். வரிசை கட்டி நிற்பார்கள். யார் எவ்வளவு குடம் பிடித்தார்கள்? போன்ற கணக்குகள் அத்துப்படியாய் இருக்கும். போன முறை "எக்ஸ்ட்ரா" குடம் பிடித்தவர்கள் அடுத்த முறை இடஒதுக்கீட்டில் பின்னுக்குத்தள்ளப்படுவார்கள். இவர்களின் நீர் மேலாண்மையை எந்தவொரு எம்.பி.ஏவும் புரிந்து கொள்வது கடினம். "நா வெள்ளனே வந்து கொடத்த வச்சிட்டே..மூனாவுது வீட்டுக்காரக்கா மாத்தி வச்சிட்டாங்க.." என கோல்ட் மெடல் தவறவிட்ட வீராங்கனையாய் சீறுவார்கள். எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் "ஹேமாக்கா", "ஜெயந்தியக்கா", "சொக்கநாச்சியக்கா", "ஜெகதீஸ்வரியக்கா" போன்ற சீனியர்கள் களமிறங்கி தர்மத்தை நிலைநாட்டுவார்கள். ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கொய்யாப்பழம்,கீரை விற்பவர்கள் எவ்வளவு மெதுவாய் கத்தினாலும் இவர்களுக்குக்கேட்டுவிடும்.






மீன் விற்பவர் தெருவிற்குள் உள்ளே வந்தவுடன் ஒவ்வொருவராய் வெளியே வருவார்கள். ஆர்வமாய் வருவதாக காட்டிக்கொள்ளமாட்டார்கள். அது ஒரு யுக்தி.ஒருவர் பின் ஒருவராக வந்து சூழ்ந்து மீனை நோட்டமிடுவார்கள். பின் ஒருவொருக்கொருவர் கண்களாலேயே பார்த்துக்கொண்டு "வொர்த் பீஸா" என உறுதிப்படுத்திக்கொள்வார்கள். மீன்காரர் சொல்லும் விலையை மூன்றால் வகுத்து கொஞ்சம் கருணையை சேர்த்து இவர்கள் ஒரு விலை சொல்வார்கள். மீன்காரர் நிலைகுலைந்து போவார். லாபத்தை குறைத்து இறங்கி வர முயல்வார், அதற்குள் "யண்ணே...சதையே இல்ல..சொங்கியா கெடக்கு..இதுக்கு யான வெல சொல்றீங்க..","ஃபுல்லா முல்லு..சின்ன புள்ளைக எங்கிட்டு திங்க.." "நேத்து மீனா..ஒரே வீச்சமா இருக்கு" என அடுத்தடுத்து தாக்குதல்கள் இறக்குவார்கள்.வேறுவழியில்லாமல் பல நேரங்களில் பேரம் படிந்து விடும். பிற்பாடு ஏதாவது ஒரு வீட்டில் காபி போட்டுக்கொடுத்து அந்த மீன்காரரை கண்கலங்காமல் அனுப்பிவைப்பார்கள். "அடுத்து வாரமும் வாங்கண்ணே" என இவர்கள் வழியனுப்பிவைக்கையில் அவர் பயந்தபடியே தலையாட்டி செல்வார். ஒரு தட்டில் சாம்பல்,கல் உப்பு வைத்து கொண்டு அருகாமனையுடன் உட்கார்ந்து மீனை சுத்தம் செய்துகொண்டே அன்றைய செய்தியை அலசுவார்கள். எத்தனை "புதிய தலைமுறை" வந்தாலும் அந்த நாட்களின் இனிமையை கொண்டு வந்துவிட முடியாது. "ஏங்க்கா..இந்த ராமர்பிள்ளைங்கறாங்களே..அவரு பிள்ளமாரா??" 


சொக்கநாச்சியக்கா வீட்டு வாசலில் போய் நின்றேன். அம்மாவால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தேன். "அக்கா"வுக்கு வயது எழுபதுக்கும் மேலிருக்கும். நானும் சொக்கநாச்சியக்காவை "அக்கா"வென்பேன், எங்கம்மாவும் "அக்கா" வென்பார். இன்னும் சொல்லப்போனால் எங்கள் ஏரியாவுக்கே அவுங்க அக்கா தான். அக்காவுக்கு ரெண்டு கண்களில் ஒரு கண் அளவு சிறியதாய் இருக்கும். கண்ணாடி போட்டிருப்பார். தலையை ஒரு மூன்று ஆங்கிளில் மேலும் கீழும் திருப்பி என்னைப்பார்த்து விட்டு "வாடா தனம் மகனே..என்னா விசேசம்.." என்றார்.

"க்கா நெஞ்சுச்சளியா இருக்காம்..இருமல் வருதாம்..அம்மா உங்கட்ட என்ன சாப்பிடனும்னு கேட்டு வர சொன்னாங்க.."

"உனக்கா..உங்கம்மாளுக்கா.."


"எனக்கு"

பக்கத்தில் வந்து முதுகை தொட்டுப்பார்த்தார். "பாலுல மஞ்சத்தூள் போட்டு...பச்சமுட்ட மஞ்சக்கருவ போட்டு..கொஞ்சூண்டு மிளகு இம்மி போட்டு.." பட்டியல் நீண்டுகொண்டே போனது. எனக்கு அந்த பாழாப்போன பாலை எப்படி குடிப்பது என்ற பயம் அப்போதே தொற்றிக்கொண்டது. அக்கா என்னைப்பார்த்து "இன்னொரு தடவ சொல்லனுமாப்பா.." என்றார்.



"இல்லக்கா..நாபகமிருக்கு..". நமக்கு தேவையில்லாததை அங்கேயே சென்சார் கட் செய்துவிட வேண்டும் என எண்ணிக்கொண்டேன். திடீரென பக்கத்தில் கூச்சல் சத்தம் கேட்டது. ஒயிட் ஹவுஸ் எனப்படும் பெரிய வீட்டை நோக்கி பலர் ஓடிக்கொண்டிருந்தார்கள். நடுலயன் பெண்கள் பவுடரெல்லாம் அடித்தபடி போய்க்கொண்டிருந்தார்கள். சொக்கநாச்சியக்காவுக்கும் ஏதும் புரியவில்லை. கண்களை குறுக்கிக் கூட்டத்தை நோக்கினார்.

"என்னவாம்மா..கூட்டமா எங்கன போறீங்க..மொளப்பாரி ஏதும் போகுதா..."

"க்கா...குஷ்பு வந்துருக்காமுக்கா..ஒயிட் அவுஸ் வீட்ல தான் மதிய சாப்பாடாம்...அம்புட்டு கலராம்.."

"யாருடி இந்த ரசினி படத்துல நடிச்சாலே அவளா..கொஞ்சம் ஊத்தமா இருப்பாளே.." 


"ஆமக்கா" என்ற குரல் தூரத்தில் கேட்டது. நான் என் டவுசரை டைட் செய்து கொண்டேன். ஓடுவதற்கு முன்னால் மானம் காக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடு. குஷ்புவை பார்க்கப் போறோம் என்கிற தெய்வீக உணர்வு எனக்குள் ஜிவ்வென்று ஏறியது. அதற்குள் சொக்கநாசியக்கா "டேய் குட்டி..போய் கூட்டம் எப்டியிருக்குன்னு பாத்துட்டு வா..அக்கா சீல மாத்திட்டு வரேன்..". "சரிக்கா" வென வண்டியை கிளப்பினேன். குஷ்புவை பார்க்க ஒயிட் ஹவுசை சுற்றி கூட்டம் கூடி விட்டது. அந்த வீட்டின் உரிமையாளர் சினிமா விநியோகஸ்தராய் இருந்தார். தேனியில் சூட்டிங் நடந்தால்  நடிகர்கள் ஒருமுறையாவது அவர் வீட்டுக்கு வந்து விடுவார்கள். கேட்டை அடைத்து விட்டார்கள். பல தன்மானத்தமிழர்களுடன் நானும் கேட்டை பிடித்த படி நின்றிருந்தேன். கிராமத்து சேலை கெட்டிய படி குஷ்பு ஒரு சேரில் உட்கார்ந்திருந்தார்."நாட்டுப்புற பாட்டு" என்கிற பட சூட்டிங். இளைஞர்கள் கத்தினார்கள். பதிலுக்கு குஷ்பு சிரித்தபடி கையாட்டினார்.

யாரையும் உள்ளே விடவேயில்லை. எங்களுக்கு பின்னால் ஒருத்தர் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏதோ பேசியபடி உள்ளே போக வழி கேட்டார். மக்கள் ஒதுங்கவேயில்லை. "ஏங்க..அரை மணி நேரமா நிக்கறவன்லா கேனயனா ..பின்னாடி போங்க.." என கத்திக்கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து தான் தெரிந்தது அவரும் அந்த படத்திலும் நடிக்கும் ஒரு நடிகரென்று. அது நடிகர் செல்வா. கூட்டத்தில் ஒரு ஆளு "டேய் அவர தெரியுதா..ஒரு படத்துல கஸ்தூரிக்கு சோடியா வருவார்ல.." என்றார். செல்வா முறைத்துக்கொண்டே உள்ளே போய்விட்டார். எப்படியாவது உள்ளே நுழைந்து குஷ்புவை பக்கத்தில் பார்த்து பிறவிப்பயன் அடைந்து விட மாட்டோமா என ஏங்கிக்கொண்டிருந்தேன். சொக்கநாச்சியக்கா பெண்கள் படையுடன் வந்து கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரை கண்ட ஏழைக்குழந்தை
போல பக்கத்தில் போய் ஒட்டிக்கொண்டேன். அக்காவுக்கு பெரிய வீட்டில் பெண்கள் பழக்கம் என்பதால் கொஞ்ச நேரத்தில் கேட்டை திறந்தார்கள். பெண்கள் மட்டும் தான் அனுமதிக்கப்பட்டார்கள். சிறுவர் கோட்டாவில் நானும் உள்ளே நுழைந்து விட்டேன். ஏதோ உலக அதிசயத்தை பார்க்கப்போவது போல எனக்கு படபடப்பாய் இருந்தது. கேட்டுக்கு வெளியே நின்றவர்கள் எல்லாம் என்னைப் பொறாமையுடன் பார்ப்பது போலத்தெரிந்தது. அடுத்த நாள் ஸ்கூலில் இந்த குஷ்பு தரிசனத்தை எப்படி நண்பர்களுக்கு விளக்க வேண்டுமென திரைக்கதையெல்லாம் மனதில் ஓடியது.



குஷ்பு ஒரு சோபாவில் அமர்ந்திருந்தார். பக்கத்தில் ஒரு பெரிய சேரில் மனோரமா ஆச்சி உட்கார்ந்து அருகிலிருப்பவருடன் மெதுவாய் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இருபது பெண்கள் சுற்றி நின்றிருந்தார்கள். எல்லோருக்கும் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. "கன்னம் ரோஸ் கலருடி" "பூரா பவுடரு..." என ஹஸ்கி வாய்சில் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தார்கள். ஹேமாக்கா லேசாய் முன்னே வந்து மனோரமாவை பார்த்து "நேத்துக்கூட டிவில சம்சாரம் அது மின்சாரம் போட்டான்..சிரிச்சுக்கிட்டே இருந்தோம்" என்றார். நிறைய பேர் சிரித்துக்கொண்டே தலையாட்டினார்கள். மனோரமா லேசாய் சிரித்தார்.நன்றி என்பது போல கும்பிட்டார். பக்கத்தில் இருந்தவர்கள் ஆச்சிக்கு தொண்டை கட்டியிருக்கிறது என்றார்கள். "ஆமா..ஒரு சீன பத்துத் தடவைக்கு மேல எடுப்பாங்களாம்ல..கட்டத்தான செய்யும்.." என சொல்லி சிரித்தார்கள். மனோரமா திரும்பவும் எளிமையாய் சிரித்தார். எனக்கு எதிலும் அக்கறையில்லை. குஷ்புவை பார்த்தபடியிருந்தேன்.

பெண்களெல்லாம் குஷ்பூவிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். நானும் வரிசையில் நின்று வாங்கினேன். ஏதோ ஆங்கிலத்தில் எழுதி கீழே கண்டபடி கிறுக்கி மேலே புள்ளி வைத்து கையில் நோட்டைக்கொடுத்தார். சென்ட் மனம் தூக்கியது. "கமலஹாசன் வீட்டு போன் நம்பர் உங்ககிட்ட இருக்கா என கேக்க வேண்டும்" என நினைத்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் போனவுடன் எல்லாம் மறந்துவிட்டது. "ஏக்கா...குஷ்பூவும் நம்மள மாறி தோசை இட்லிலாம் சாப்டுமா.."என பக்கத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த சத்தம் குஷ்புவுக்கு கேட்டிருக்க வேண்டும். "ஓ..எனக்கு அதெல்லாம் ரொம்ப பிடிக்குமே.." என சிரித்துக்கொண்டே சொன்னார். எனக்கு அந்த குரலை கேட்க பேரதிர்ச்சியாய் இருந்தது. கட்டைக்குரலாய் இருந்தது. அதுநாள் வரை "கொண்டையில் தாழம்பூ..நெஞ்சிலே வாழைப்பூ.."வென படங்களில் பாடியதெல்லாம் குஷ்புவென நினைத்துக்கொண்டிருந்தேன். அதே பாடல்களை பிறகு கல்யாணவீடுகளிலும், கச்சேரிகளிலும் பாடுகிறவர்கள் தான் பின்னணிப்பாடகர்கள் என்பது என் அன்றைய நாள் அவதானிப்பு. கொஞ்ச நேரத்தில் அவர்கள் சாப்பிட சென்றார்கள். நாங்களும் நடையை கட்டினோம். குஷ்பூ எல்லாருக்கும் டாட்டா சொன்னார். குழந்தைகளுக்கு "பறக்கும் முத்தம்" கொடுத்தார். நான் சொக்கநாச்சியக்கா பக்கத்தில் போனேன்.

"ஏங்க்கா..கொரல் ஒரு மாதிரி கட்டையா இருந்துச்சுனா என்னத்த குடிச்ச சரியாகும்..."

                                                                                                            ---தொடரலாம்


வியாழன், 28 ஜூலை, 2016

டவுசர் காலங்கள் - பகுதி 3

                                       


 "இத எழுதி கிழிக்க இவ்வளவு நேரமாடா..."


ராதாகிருஷ்ணன் சாரின் குரல் அவரின் வீடு முழுக்க எதிரொலித்தது. ரானாகினாவை நாங்கள் "ட்டூஷன் சார்" என்றே சொல்வோம். ட்யூசன் போனால் பிள்ளைகள் பேரறிவு பெற்று விடுவார்கள் என்று பெற்றோர்கள் நம்பத்தொடங்கியிருந்தார்கள்.ஆகையால் ரானாகினா சாரின் ட்யூசனில் கூட்டம் அள்ளும். அவர் கைராசிக்காரர் ஒன்னுக்குமத்ததெக்கூட உருப்படியாக்கிவிட்ருவாரென எங்கள் ஏரியாவில் அவரைப் பற்றி டாக் இருந்தது. கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட மாணவமணிகளுடன் 
ட்யூசன் நடத்தி எங்கள் ஏரியாவின் கல்வித்தந்தையாகயிருந்தார் ரானா கினா. ஒரு பிரவுன் கலர் கைலி, மேலே ஒரு காட்டன் துண்டு, தடிமனான கண்ணாடி, கையில் ஹீரோ பேனாவுடன் "எல்லாரும் புக்க மூடி ஓரமா வை" என சொல்கிறாரென்றால் ஒரு ஆக்சன் சீக்வன்ஸ்க்கு ரெடியாகிறார் என்று அர்த்தம். அன்று "ட்யூசன் டெஸ்ட்" இருக்கும். எங்களுக்கு அன்று சயின்ஸ் டெஸ்ட். வெள்ளைத்தாள், பேனா சகிதம் எல்லோரும் சில அடிகள் இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ள  வேண்டும். சார் கேள்விகளை சொல்வார் குறித்துக்கொள்ளவேண்டும். பிறகு பதில்கள் எழுத வேண்டும்.

ட்யூசன் சீனியர்கள் பெரும்பாலும் இந்த டெஸ்ட்களுக்கு அஞ்சுவதில்லை. இதுவும் கடந்து போகும் என்கிற மனநிலையில் இருந்தார்கள். அந்த ட்யூசனில் காலங்காலமாக படிக்கும் "வடக்கடை" கணேசன் எனக்கு தோஸ்த். அவன் அவ்வப்போது ட்யூசன் நெளிவு சுளிவுகள் பற்றி போதனைகள் செய்வான். "சார் அடிக்கிறப்ப அவர் கண்ண நிமிந்து பாக்க கூடாது" ,"தெனமும் துந்நூறு வச்சிட்டு வா" , "டெஸ்ட் இருக்கிற அன்னைக்கு ட்யூசன் பீஸ் கொடு" போன்றவைகளை நாங்கள் பிரமாஸ்திரமாக கருதினோம். அன்றைய சயின்ஸ் டெஸ்ட் முடியும் தருவாயில் இருந்தது. பத்தாவது பையன்களுக்கு கணக்கு சொல்லிக்கொடுத்தவாரே சார் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். நிறைய பேர் ஹாலிலும், இடப்பற்றாக்குறையால் கணேசன் உட்பட நாங்கள் ஒரு நாலு பேர் ஒரு ரூமிலும் எழுதிக்கொண்டிருந்தோம். எல்லோரும் எழுதி முடித்துவிட்டோம். பேப்பரை போய்க்கொடுத்தால் எங்கே உடனே திருத்தி விடுவாரோ என யாரும் கொடுக்கவில்லை.எனக்கு அன்று ட்யூசன் எப்போது முடியுமென்றிருந்தது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உலககோப்பை அரையிறுதிப்போட்டி கல்கத்தாவில் நடந்து கொண்டிருந்தது. "என்னாச்சோ..ஏதாச்சோ" என யோசித்துக்கொண்டிருந்தேன்.




நாங்கள் உட்கார்ந்த ரூமில் தான் டிவி இருந்தது.ஹாலில் இருந்து பார்த்தால் டிவியிருப்பது தெரியாது. திடீரென பக்கத்து வீட்டிலிருந்து ஆரவார கூச்சல் கேட்டது. எங்களால் ஆர்வத்தை அடக்கமுடியவில்லை. "அனேகமா ஜெயசூர்யாவ தூக்கிடாய்ங்கனு நெனைக்குறேன்" என்றான் செல்வா. எல்லோரும் ரூமில் இருந்த டிவியை போடுவதென முடிவெடுத்தோம்.வாசலுக்கு ஒருத்தன் காவல். சார் வந்தால் இரும வேண்டும். கணேசன் சுவிட்சை ஆன் செய்ய வேண்டும். ஒரு வேளை சார் திடீரென உள்ளே நுழைந்து விட்டால் பவர் வயரை பிடுங்கி விட நானும் ஒரு எல்லைப்பாதுகாப்பு பணியில் இருந்தேன். கூட்டு முயற்சியுடன் டிவியை போட்டோம். சத்தத்தை முன்பே குறைத்து விட்டோம். ஜெயசூர்யா அவுட்டாகியிருந்தார். இலங்கைக்கு இருபத்து ஒன்பது ரன்னுக்கு மூனு முக்கிய விக்கெட்டுகள் காலி. நானும் கணேசனும் ஹைஃபை பண்ணிக்கொண்டோம். தொண்ணூறுகளின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேய் பயத்தை விட ஜெயசூர்யா பயம் அதிகம். மனுஷன் அஞ்சே ஓவரில் ஆட்டையை முடிச்சிருவான். வெளியேயிருந்து "பேப்பர்லாம் வை" னு வாத்தியாரின் சத்தம் சன்னமாய் கேட்டது.

கணேசனை டிவியை ஆஃப் பண்ண சொன்னேன். அவன் தவறுதலாக வால்யூமை கூட்டிவிட்டான். டோனிகிரேக்கின் காந்தக்குரல் அந்த வீடு முழுக்க பரவியது. ஒரே வினாடியில் பேங்க் கொள்ளையர்களை பார்ப்பது போல் மொத்த ட்யூசனும் எங்களைப்பார்த்தது. சார் தன்னுடைய முட்டைக்கண்களை உருட்டிக்கொண்டு "டேய்" என்ற படி உள்ளே வந்தார். கணேசனின் கை இன்னமும் டிவியிலேயே இருந்தது. எங்கள் முழிகளையும் கணேசனையும் வைத்து நடந்ததை யூகித்துவிட்டார். மின்னல் வேகத்தில் எங்கள் எல்லாரையும் வெளுத்து வாங்கினார். மூச்சு வாங்கிக்கொண்டே "முழங்கால் போடுங்கடா எருமைகளா" என்றார்.ட்யூசன் முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள். நாங்கள் மட்டும் வெயிட்டிங்கில் இருந்தோம். வாத்தியார் எங்கள் டெஸ்ட் பேப்பர்களுடன் வந்தார். ஒவ்வொருவரையும் கூப்பிட்டுத்திருத்தினார். சப்சப்பென கன்னங்களில் அறை. கணேசன் "வெர்னியர் காலிப்பர்" படத்தை தந்தூரி சிக்கன் போல வரைந்திருந்ததை பார்த்து வெறியேறினார். அவனுக்கு அஞ்சு நிமிட குருபூஜை நடத்தினார். அவன் ஏங்கியேங்கி அழ ஆரம்பித்தான். அவ்வளவு சோகத்திலும் கணேசன் அழுவது எனக்கு சிரிப்பை உண்டாக்கியது. அடக்கிக்கொண்டேன்.




"எல்லாரும் சயின்ஸ் புக்க எடு... திரும்பவும் மிட்டேர்ம் போசன படி" என்றார். கொஞ்சம் இடைவெளி விட்டு "உட்கார்ந்து படி" என்றார். எல்லோரும் புக்கை கையில் வைத்து உட்கார்ந்து கொண்டோம். எல்லாருடைய முகங்களும் கொஞ்சம் வீங்கியிருந்தன. செல்வாவுக்கு உதடு வீங்கியிருந்தது. கணேசன் விபத்தை சந்தித்தவன் போல இருந்தான். செல்வா என் பக்கத்தில் வந்து "ஜெயசூர்யா ஆவி அங்கேர்ந்து இங்க வந்து நம்மாளு மேல இறங்கிருச்சு போல" என்றான். நான் பதில் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து "நம்ம கணேசுதான் வெங்கடேஷ் பிரசாத்.." என்றான். வெகுநேரம் அடக்க முடியாமல் சிரித்தோம்.கணேசன் நிமிரவே இல்லை. எங்களுக்கு குற்றஉணர்ச்சியாய் இருந்தது. வாத்தியார் வெளியில் அவர் சைக்கிளை துடைத்துக்கொண்டிருந்தார். கணேசன் தோளைத்தொட்டேன்.

"கணேசா..சாரிடா..எல்லாருக்கும் தானே அடி விழுந்துச்சு.. விடுடா..ரொம்ப வலிக்குதா..." என்னை சோகமாய் பார்த்தான். ஒரு மணி நேரத்திற்கு முன் சிரிப்பு வெடியாய் இருந்தவன்,இப்போது சோக கீதமாய் மாறிப்போயிருந்தான்.

"பரிமளா முன்னாடி அடிச்சிட்டார்டா.. ரொம்ப அசிங்கமாயிருச்சுடா...". பரிமளா(பெயர் மாற்றப்படவில்லை) கணேசனின் ரெண்டாவது ஒன் சைடு லவ். ட்யூசனில் எட்டாவது படித்து வந்தாள். வாத்தியார் அவன் கன்னத்தோடு சேர்ந்து அவன் காதலிலும் அடித்திருக்கிறார். 

"அதெல்லாம் பிரச்சனையில்ல கணேசா..வாத்தியார் எல்லாரையும் தான் அடிக்கிறாரு...". அவன் சமாதானம் ஆனது போல தெரியவில்லை. பக்கத்து வீட்டிலிருந்து  "நோ ப்ராப்ளம்..நோ ப்ராப்ளம்" பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தது. அது பிரபுதேவா நடித்த லவ் பேர்ட்ஸ் ரிலீஸ் ஆகியிருந்த சமயம். கிரிக்கெட்டில்லாமல் வேற ஒரு நிகழ்ச்சி மாற்றப்பட்டால் மேட்ச் மோசமாக போகிறதென்று அர்த்தம். செல்வா "அங்கேயும் போச்சா" என்றான். வாத்தியார் உள்ளே வந்தார். நாங்கெல்லாம் சட்டென 
புக்குகளை பார்க்க ஆரம்பித்தோம். அவர் பக்கத்தில் வந்தார். குனிந்து இருந்ததால் நிறைய நகங்களுடன் இருந்த அவர் கால் மட்டும் தெரிந்தது.

"டேய் உங்க நல்லதுக்கு தாண்டா சொல்றோம்...விளையாடுறவன் லட்சம் லட்சமா சம்பாதிச்சிட்டு போயிருவான்..உனக்கு என்ன பிரயோஜனம்.." நாங்கள் இன்ஸ்டண்டாய் திருந்திவிட்டது போல முகத்தை வைத்துக்கொண்டோம். அந்த படுபாவி கணேசன் சரியான பட்டனை திருப்பியிருந்தால்,அந்நேரம் வீட்டில் நிம்மதியாய் டிவி பார்த்துக்கொண்டிருந்திருப்போம். வாத்தியார் கருணை அடிப்படையில் எங்களை விடுவித்தார். மணி எழாகியிருந்தது. தெறித்து வெளியில் ஓடி 
வந்தோம். வேகமாக ஓடி சைக்கிளையெடுத்து கணேசனையும் ஏற்றிக்கொண்டேன். கணேசனின் வீட்டில் கிரிக்கெட் ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் அங்கேயே பார்த்துவிட்டு வீட்டுக்கு போவோம் என உட்கார்ந்தேன். சச்சின் விளாசிக்கொண்டிருந்தார். கணேசனின் பாட்டி கையை கண்ணுக்கு மேல் வைத்து முகத்தில் பலஅபிநயங்கள் செய்து டிவியில் ஸ்கோரை பார்க்க முயற்சி செய்தார். என் பக்கம் திரும்பி "சச்சின் எம்புட்டு'' என்றார். பாட்டி சச்சினின் பழம்பெரும் ரசிகை. "அறுவது" என்றேன். உதட்டை மடித்து தலையாட்டிக்கொண்டாள். கொஞ்ச நேரத்தில் விக்கெட்டுகள் விழுந்தன. கணேசன் பாயை விரித்து படுத்தே விட்டான்.

ஐந்து விக்கெட்டுகள் விழுந்திருந்தது. வினோத் காம்ப்ளி களம் இறங்கினார். அவர் ஒரு இடதுகை ஆட்டக்காரர். பாட்டியை திரும்பிப்பார்த்தேன்.




"ம்ம்க்கும்..நேரா அடிக்கிறவனுகளே அவுட்டாயிட்டாய்ங்க..இந்த நொட்டங்கைக்காரன் கிழிக்கவா போறயான்..." என்றாள். எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.அன்றைய போட்டியில் இந்தியா தோற்று, வினோத் காம்ப்ளி தேம்பி அழுதது அடுத்த நாள் தலைப்பு செய்தியானது. இருபது வருடங்கள் கழித்து  இப்போதும் எப்போதாவது டிவியில் அந்த போட்டி காட்டப்படும் போதும் காம்ப்ளி அழுகையுடன் சேர்ந்து கணேசனின் அழுகையும் ஞாபகம் வருகிறது. 


                                                                                              -ஒருவேளை தொடரலாம் 

செவ்வாய், 22 டிசம்பர், 2015

டவுசர் காலங்கள் - பகுதி 2



காலையில் எழும்போது மிகப்பெரிய எரிச்சல் வந்தால் அது திங்கட்கிழமை. வீட்டுப்பாடம் முடித்தாகிவிட்டதா? மனப்பாட பாடல்கள் ஞாபகம் இருக்கிறதா என ஒரு பதட்டத்துடனே பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன். ட்ரவுசர் போடும் போது எரிச்சல் இன்னும் அதிகமானது. ட்ரவுசர் சிறியதாய் என்னுடைய பாதி தொடை தெரியும்படி ஏறியிருந்தது. நண்பர்கள் சிலர் "இப்படியே போச்சுனா இன்னும் கொஞ்ச நாள்ல ஒன்னோட "குஞ்சுமணி" வெளில தெரிஞ்சிடும்டோய்" என கேலி செய்தார்கள். "இப்போ தானே ஜூன்ல எடுத்தோம் அரைப்பரீட்சை முடியட்டும்.." என அப்பா சொல்லிவிட்டார். பல்லைக்கடித்துக்கொண்டு கிளம்பினேன். தட்டில் வைத்திருந்த இட்லியை கடித்துக்குதறிவிட்டு வெளியேறினேன்.அம்மா எதிர்வீட்டு ரமாக்காவுடன் பேசிக்கொண்டிருந்தாள். "ரமாக்கா"(ரமா+அக்கா) அம்மாவின் அன்றைய "கூகிள்". எல்லாக்கேள்விகளுக்கும் அக்காவிடம் பதில் இருப்பதாய் அம்மா நம்பினாள். எங்கள் ஏரியாவில் இருக்கும் எல்லா பெண்மணிகளின் சேலைகள் பற்றியும் அவற்றின் நிறம் முதற்கொண்டு ரமாக்கா ஞாபகம் வைத்திருந்தாள். எல்லா வீட்டுப்பிள்ளைகளின் மதிப்பெண்களும் தெரிந்திருந்தது. பெண்கள் கூட்டத்தின் அரட்டையின் போது அக்கா இது போன்ற புள்ளி விவரங்களை அள்ளித்தெளிப்பாள். இதனாலேயே தெருப்பெண்கள் மத்தியில் அக்காவிற்கு சிறப்பு இடம் அளிக்கப்பட்டிருந்தது.

பள்ளியை நெருங்கும்போது அடிவயிற்றில் ஒரு பயம் உருண்டுகொண்டிருந்தது. காரணமில்லாமல் பொதுவான பயம். தப்பே செய்யவில்லையென்றாலும் போலிஸ் ஸ்டேஷன் செல்கையில் ஏற்படும் உணர்வு. பள்ளியை மனதார வெறுத்தேன். பெரிய மழைகள் பெய்யும் போது பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள். அடுத்த நாளும் மழை வேண்டி பிரார்த்தனை செய்வேன். பள்ளி கேட்டின் அருகில் வந்த போது "அமுங்குனி" என கூப்பிடும் சத்தம் கேட்டது. ராஜாமணி பாட்டியின் குரல். கேட்காதது போல் உள்ளே போய் விடலாமாவென யோசித்தேன். பிறகு முறைத்துக்கொண்டே அவளருகில் சென்றேன். ராஜாமணிப்பாட்டி பள்ளிக்கு வெளியில் கடை வைத்திருக்கிறாள். கப்பக்கிழங்குகள், சூராம்பழம், தட்டு மிட்டாய்,கலாக்காய்கள்,கண்ணாடி பாட்டில்களில் வண்ண மிட்டாய்கள், மஞ்சள் நிற அப்பளங்கள் என பாட்டியின் கடை பள்ளிக்குழந்தைகளின் கனவுக்கொட்டடையாக திகழ்ந்தது. எனக்கும் பாட்டிக்கும் ஒரு பிசினஸ் டீலிங் இருந்து வந்தது. பாட்டியிடம் கணக்கு வைத்து வாங்கித்தின்று விட்டு ,காசு கொடுக்காமல் பலர் பள்ளியில் சுற்றிகொண்டிருப்பார்கள். அந்த மாணவர்களிடம் சென்று அந்த "வாராக்கடனை" வசூலித்துத்தந்தால், பாட்டி எனக்கு கொஞ்சம் சூராம்பழமும், நெல்லிக்காயும் கொடுப்பாள். 




"மூனு பி செல்வம் முக்கா ரூவா... டி கிளாஸ் சென்றாயன் ரெண்டார்ரூவா ..ம்ம்".

நெற்றியை குறுக்கி யோசித்தாள். ஏற்கனவே சுருக்கமான முகம் இன்னும் சுருக்கமாக தெரிந்தது. எப்போதும் கசங்கிய சேலைகள் தான் கட்டியிருப்பாள். வெள்ளைக்கலரில் பாசி மாலை அணிந்திருப்பாள். குரல் மட்டும் எப்போதும் அரட்டும் தொனியில் கட்டக்குரலாய் இருக்கும். பாட்டியை முறைத்துப்பார்த்தேன்.

"இனிமே அப்டி கூப்ட்டா நா கடைக்கு வர மாட்டேன்.."

பாட்டி சிரித்தாள். அவளுக்கு பற்கள் கூரியதாக, கண்டபடி எளிரில் கிடைக்கிற இடத்திலெல்லாம் முளைத்திருந்தது. அதனாலேயே அவளது சிரிப்பு கொஞ்சம் வசீகரமானதாய் இருக்கும்.

"என்னானு கூப்டேன்.." சிரித்துக்கொண்டே கேட்டாள்.நான் பேசவில்லை.

"அமுங்குனினா..?" . ஆம் என்பது போல் தலையாட்டினேன்.

"சரிடீக்கனி...இதுக்கலாமா கோவிக்கிறது...அந்த மூனாங்கிளாஸ் முண்டப்பயலுக கிட்ட பாட்டிக்கு காசு வாங்கியாடிக்கனி...பாட்டி ரேசன்ல சீமத்தண்ணி வாங்கப்போகணும்..". என சொல்லிக்கொண்டே கன்னத்தை கிள்ளினாள். பாசம் பொங்கினால் இது போல வார்த்தைக்கு வார்த்தை "கனி" போடுவாள். 

தலையாட்டிவிட்டு நடந்து பள்ளிக்குள் போனேன். கொய கொய வென குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். எங்கும் வெள்ளைச்சட்டைகள், ஊதா ட்ரவுசர்கள், மெரூன் பாவாடைகள். வகுப்பை நெருங்க நெருங்க எரிச்சல் அதிகமாகியது. என்னிடத்தில் போய் அமர்ந்தேன். பெஞ்சில் அமருகையில் ட்ரவுசர் கொஞ்சம் மேலேறியது. நிறைய பேர் சிரிப்பதைப்போல தோன்றியது. திரும்பிப் பார்த்து யாரும் சிரிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். பெண்கள் முந்தானையை சரி செய்வது போல நான் என் ட்ரவுசரை பிடித்துக்கொண்டு அழைந்தேன்.

பக்கத்துக்கிளாஸ் சந்திரிகா டீச்சர் திடீரென உள்ளே நுழைந்தார். "லேய் சத்தம் போடாம உட்கார்ந்திருக்கனும்...இன்னிக்கு உங்க டீச்சர் லீவு..கத்தாம உக்காந்து இங்க்லீஷ் போயத்த படி.. சத்தம் வந்துச்சு ஹெட் மாஸ்டர் ரூமுக்கு அனுப்பிருவேன்.." சொல்லிவிட்டுப்போனார். என் கண்ணுக்கு சந்திரிகா டீச்சர் தேவனின் தூதுவர் போல தெரிந்தார். ஒரே நொடியில் குதூகலமானேன். உலகம் இன்பமயமானதாய் தெரிந்தது. ஜன்னல் வழியாய் கல்லை விட்டு எறிவது, "அண்ணாமலை" படத்தின் வசனங்களை பேசுவது என பொழுது சிறப்பாய் கழிந்து கொண்டு இருந்தது. அருண் ஒரு சின்ன தூக்குச்சட்டியை கையில் பாதுகாப்பாய் வைத்திருந்தான். ஒரு வேளை அதற்குள் "திங்க" எதுவும் இருக்குமோ என்ற பேராசையில் அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அருண் கருப்பு ஃப்ரேமில் ஒரு கண்ணாடி போட்டிருப்பான். நோட்டுப்புத்தகங்களிலெல்லாம் சாமிப்படங்கள் ஒட்டி வைத்திருப்பான். 

"லே..தூக்குச்சட்டில என்னடா??"

அருண் என்னை ஒரு மாதிரி பார்த்தான். பிறகு சொன்னான்.




"விநாயகருக்கு பால்...இப்போ எல்லா கோயில்லயும் விநாயக சாமி பால் குடிக்கிறாராம்டோய்...நேத்துக்கூட பெத்தாச்சி விநாயகர் கோயில்ல ஒரு சட்டி குடிச்சாராம்.. எங்க மயினி சொல்லிச்சு...ஒரு கரண்டில பால் வச்சாங்களாம் சொர்ர்னு உறிஞ்சிட்டாராம்..அதான் பாலு கொண்டு வந்திருக்கேன்.."

நான் ராமநாராயணனின் துர்கா படத்தையே நாலு தடவை பார்த்தவன். எப்படியாவது கணேசன் பால் குடிப்பதை கண்டுவிட வேண்டுமென ,அன்று சாயங்காலம் அருணின் சைக்கிளில் தொத்திக்கொண்டேன். எல்லாக்கோவில்களும் கூட்டம் கொப்பளித்தது. கோவில்களிலிருந்து "ஜெய் கணேஷா" கோஷம் பலமாய் வந்து கொண்டிருந்தது. ஊர் முழுக்க விநாயகர் ஆக்ரமித்திருந்தார். எல்லாக்கோவில்களிலும் விநாயகர் சிலை இருந்ததால், ஒரு முருகன் கோவிலுக்கு வண்டியை விட்டோம். அங்கு ஒரு மரத்தின் கீழே விநாயகர் ஃப்ரீயாய் இருந்தார். நானும் அருணும் சாமியின் முன்னால் போய் நின்றோம். தூக்குச்சட்டியில் இருந்த பாலை ஒரு ஸ்பூனில் ஊற்றினோம். அருண் ஸ்வாமி சிலையின் தும்பிக்கை அருகே ஸ்பூனை கொண்டு சென்றான். எனக்கு பதட்டம் அதிகமானது. ரெண்டு மூன்று நிமிடமாகியும் பால் ஸ்பூனில் அப்படியே இருந்தது. இரண்டு பெரும் மாறி மாறி அரை மணி நேரம் முயற்சி செய்தோம். சாமி குடித்த பாடில்லை. சோகமாய் கோவிலிலிருந்து கிளம்பினோம். 

"ஏன்டா அருணு..சாமி பால குடிக்கல.."

"வயிறு நொம்பிருக்கும்டா... கருவேல்நாயக்கம்பட்டில குடிச்சிட்டு ஏப்பமே விட்டாராம்.."

"ஆமா பால்ல சீனி போட்டியா?.."

"இல்ல.."

"அட கேனயா....சீனி போடலேனா நானே குடிக்க மாட்டேன்...சாமி எப்டிடா குடிப்பாரு..."

சீனியை வாங்கி பாலில் போட்டு விட்டு ரெண்டு பேரும் மீண்டும் கோவிலை நோக்கி ஓடினோம். 
                      

வியாழன், 29 அக்டோபர், 2015

டவுசர் காலங்கள் - 1

                                  

தொண்ணூறுகளில் இதே உலகத்தில் தான் வளர்ந்தோமா என அடிக்கடி தலையை சொரிய வேண்டியிருக்கிறது. இந்த "வாட்ஸ் அப்" யுகத்திற்கு, அஞ்சல் அட்டையில் எச்சில் தொட்டு நாங்கள் ஸ்டாம்ப் ஒட்டிய காலத்தை விளக்க முடியாது.சந்திரகாந்தாவுக்கும் சக்திமானுக்கும் வாரம் முழுக்கக்காத்திருப்போம். "ஆசை" மிட்டாய்கள் எங்கள் பால்யத்தை இனிக்க வைத்தது. வாடகை சைக்கிள்கள், சீனி வெடிகள், ஜாமிட்ரி பாக்ஸ்கள்,ஒளியும் ஒலியும் என ஏக்கப்பெருமூச்சு ஏகமாய் வருகிறது. என் டவுசர் காலங்களில் வேகமாய் வளர்ந்து "பேண்ட்" போட்டு பெரியாளாகிவிட வேண்டுமென்பதே என் ஆகப்பெரிய லட்சியமாய் இருந்தது. பேருந்துகளில் அரை டிக்கெட் எடுக்கப்படுவது, அம்மாவின் மடியில் உட்கார்ந்துகொண்டு தியேட்டரில் படம் பார்ப்பது போன்றவையெல்லாம் எனக்கு பெருத்த அவமானத்தை கொடுத்தது. அந்த நாட்களில் "கொடிக்கா" பழங்களை பாக்கெட்டுகளில் போட்டுக்கொண்டு "ஆன் தி வே" யில் சாப்பிட்டுக்கொண்டே நடப்போம். "சா பூ த்ரீ" போட்டு ஆட்டங்களை ஆரம்பிப்போம். விருந்தினர்களுக்கு வாங்கி வரப்பட்ட "டொரினோ"க்கள் காலியாகி விடக்கூடாதென வேண்டிக்கொள்வோம்.
இப்படியாகவே எங்களின் டவுசர் காலங்கள் கிழிந்தது...மன்னிக்கவும் கழிந்தது.

எங்கள் தெருவின் பெயர் "ஒயிட்ஹவுஸ் தெரு". மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிமடியில் கிடக்கும் டவுன் தேனி. இந்த ஊரில் இருக்கும் ஒரு தெருவுக்கு இந்தப் பெயரா என பலர் குழம்புவார்கள். எங்கள் ஏரியாவிற்கு பக்கத்தில் ஒரு பெரிய வெள்ளை பங்களா இருந்தது. அது ஒரு முக்கியமான லேண்ட் மார்க், ஆகையால் "ஒயிட் ஹவுஸ்" தெரு என பெரும்பேரு பெற்றது எங்கள் தெரு. மணிரத்னம் ஒருவேளை அஞ்சலி படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுக்க நினைத்திருந்தால் எங்கள் தெருவிற்கு வந்திருப்பார். கூட்டமாய் எல்லா வயதிலும் குழந்தைகள் இருந்தார்கள். விசித்திரமான குணச்சித்திரங்கள் இருந்தார்கள். எல்லா நாட்களும் நிறைய சுவாரசியங்களை சுமந்து கொண்டே நகர்ந்தது. எங்கள் தெருவில் மொத்தம் நாற்பது வீடுகள். தெரு,மூன்று உபதெருக்களாக மானசீகமாய் பிரிக்கப் பட்டிருந்தது. அதை நாங்கள் "முன்னாடி லயன்" ,"நடு லயன்", "மூனாவது லயன்" என அழைத்து வந்தோம். நடு லயனுக்கு முன்னால் ஒரு பெரிய கிணறு இருந்தது. நிறைய கம்பிகள் போட்டு கிணற்றின் வாயை அடைத்திருந்தார்கள். அந்தக்கிணறு எண்பது சதவீதம் தண்ணீராலும், இருபது சதவீதம் ரப்பர் பந்துகளாலும் ‏நிரம்பியிருந்தது. உபயம் எங்களின் தெருக்கிரிக்கெட்.




நான் "மூனாவது லயன்" பிரஜை. அன்று நடு லயனில் கொஞ்சம் சத்தம் அதிகமாய் கேட்டுக்கொண்டிருந்தது. கண்டிப்பாய் "காக்காக்குஞ்சு"* விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். வேகமாய் கிளம்பினேன். கொய்யாவை ஒரு கடி கடித்து விட்டு மிச்சத்தை பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். எல்லோரும் கிணற்றை சுற்றியிருந்த தூணில் ஏறி இறங்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். "காக்காக்குஞ்சு" களை கட்டியிருந்தது. "ண்ணே..நானும் வரேன்.." யாரும் என்னைக்கண்டு கொள்ளவில்லை. பாலாவும், செல்வாவும் வெறியாய் திரும்பிப்பார்த்துவிட்டு விளையாட்டைத் தொடர்ந்தார்கள். அவர்கள் வெறியேறித்திரிவதற்கும் ஒரு காரணம் இருந்தது. முதல் நாள் எல்லோரும் "ஐஸ்பால்" விளையாடினோம். சாபூத்ரீயில் நான் தான் "பட்டு" ஆனேன். விதிப்படி கண்ணை மூடிக்கொண்டு மரத்தைத் தொட்டு நூறு எண்ண வேண்டும். எல்லோரும் ஒளிந்து கொள்வார்கள். பிற்பாடு ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும். நான் நூறு எண்ணி விட்டு எல்லோரையும் தேடக்கிளம்பினேன். தாகமாய் இருந்ததால் வீட்டில் போய் தண்ணீர் குடித்தேன். அங்கே டிவியில் வந்த ஒரு பாடலை பார்த்துகொண்டே அசந்து தூங்கிப்போனேன்.செடிகளின் நடுவிலும், கிணற்றின் கம்பி மேலும் ஒளிந்து கொண்டிருந்தவர்கள் "என்றாவது அவன் வருவான்" என முக்கால் மணி நேரமாய் காத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். பிற்பாடு பொறுமையிழந்து வீட்டிற்கு வந்து பார்த்திருக்கிறார்கள். நான் வாயை திறந்து கொண்டு தூங்கிக்கொண்டிருந்தது அவர்களுக்கு பெருங்கோபத்தை கொடுத்திருக்க வேண்டும்.எனக்கு அக்கனமே "ரெட் கார்டு" போடப்பட்டது. என்னை "ஆரும்" ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.என்னோடு "ஆரும்" அன்னந்தண்ணி புழங்க மாட்டார்கள்.

"ண்ணே..ப்ளீஸ்ண்ணே" கொஞ்சம் சத்தமாய் கத்தினேன். எல்லோரும் என்னைத்திரும்பிப் பார்த்தார்கள். செல்வா, பாலா, சேகர், சின்ன கார்த்தி எல்லோரும் என்னை விட ஒன்று இரண்டு வயது பெரியவர்கள். மாணிக்கம் என்னை விட நாலு வயது சீனியர்.இது போன்ற இக்கட்டான சூழலில் எல்லோரையும் "ண்ணே..." வென கூப்பிட்டு ஸ்கோர் செய்வது என்னுடைய வழக்கம், அன்று அது எடுபடுவது போலில்லை. மாணிக்கம் மட்டும் பக்கத்தில் வந்தார். முகத்தை கடுமையாய் வைத்திருந்தார். சம்பவத்தன்று சட்டையை கழட்டிவிட்டு புழுதி தரையில் அரை மணி நேரம் ஒளிந்து படுத்துக்கிடந்திருக்கிறார். அவருக்கு வகிடெடுத்து சீவிய தலை. சினிமா படங்களின் பாதிப்பால் கோபத்துடன் பேசும் போது முகத்தில் ஒன்றரை வண்டி ரியாக்சன்கள் காட்டுவார்.

"ரெண்டாவது படிக்கிறவெனெல்லாம் ஆட்டைல சேக்குறதில்லை...மரியாதையா ஓடிரு..."

இதற்கு மேல் அமாவாசையாய் இருந்து பயனில்லை. ராஜராஜ சோழனாய் மாறினேன். "போடா செரட்டைத்தலையா" என சொல்லிவிட்டு நாலாவது கியரில் ஓடத்தொடங்கினேன். மாணிக்கம் "டேய்" என கத்திக்கொண்டே விரட்டத்தொடங்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று தெருக்களை கடந்து ஓடிவிட்டேன். அந்தக்காலங்களில் நான் ஓடினால் ஒரு பய பிடிக்க முடியாது. மாட்டிக்கொள்வது போல இருந்தால் ஏதாவது வீட்டிற்குள் நுழைந்து விடுவேன். எதிராளிகள் உள்ளே நுழைய முடியாமல் திணறிப்போவார்கள். இப்படித்தான் ஒருமுறை ஒரு இக்கட்டான தருணத்தில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து விட்டேன். யார் வீடெனத் தெரியவில்லை. நிறைய பேர் கூட்டமாய் உட்கார்ந்து வி.சி.ஆரில் "நடிகன்" படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சேர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டேன். ஒரு மணி நேரம் கழித்து லைட்டை போட்டார்கள். ஒரு பெரியவர் மிரண்டு போய் "யார்றா நீ??" என்றார். நடந்ததை சொல்லி அந்த வீட்டில் ரெண்டு முறுக்கு சாப்பிட்டு கிளம்பி வந்தேன்.இந்த முறை அதற்குத் தேவையிருக்கவில்லை. மாணிக்கம் கொஞ்ச நேரத்தில் நின்று விட்டார்.



வேப்பமரத்தின் கீழே சோகமாய் நின்று கொண்டிருந்தேன். அங்கே குழி பறித்து ஒரு கூட்டம் 'குண்டு' விளையாடிக்கொண்டிருந்தது. மனம் அதில் ஒட்டவில்லை.  மூனாவது லயனில் ஒரு வீட்டிலிருந்து அதிகமாய் சத்தம் வந்தது. ஒலியை பின் தொடர்ந்து வீட்டை நோக்கி நடந்தேன். நிறைய பேர் உட்கார்ந்து தூர்தர்ஷன் செய்தி கேட்டுக்கொண்டிருந்தார்கள். ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார் என பேசிக்கொண்டார்கள். ஒரு பெரியவர் வீட்டின் வெளியே உட்கார்ந்து பொலம்பிக்கொண்டிருந்தார். 

"ரோசாப்பூ மாதிரி மொகம்..அதப் போய் கொல்ல அந்த பாவி பயலுகளுக்கு எப்படி மனசு வந்துச்சோ... நாட்டோட தூண சாச்சிட்டாய்ங்களே..."

கிட்டத்தட்ட அழுவது போல இருந்தார். கதர்சட்டை அணிந்து பாக்கெட்டில் வெள்ளைக்கலர் பேனா வைத்திருந்தார். திடீரென அந்த கேள்வி என் மனதில் உதித்தது. 

"அப்போ நாளைக்கு லீவா தாத்தா??.."

தாத்தா தலையில் அடித்துக்கொண்டார். அவருக்கு இன்னும் சோகம் குறையவில்லை போல என எண்ணிக்கொண்டேன்.