வெள்ளி, 15 ஜனவரி, 2021

ஒரு ஆரஞ்சுக்காவியம் -3




கண்களை திறந்தவுடன் தல்பீர் மங்களாய்த் தெரிந்தான். கொஞ்சம் கண்ணைக்கசக்கி பார்வையை சரி செய்தேன். ஹாலில் இருக்கும் ஷோபாவில் உட்கார்ந்துகொண்டு  "ஸ்க்ராம்பிள்டு எக்"கை தக்காளி சாஸ் உதவியுடன் மேய்ந்து கொண்டிருந்தான். என்னை பார்த்தவுடன் தட்டை கீழே வைத்துவிட்டு குறும்பாய் சிரித்து அருகில் வந்தான். பெட்டில் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான். அவனது தாடியை இரண்டு கைகளை வைத்து தடவினான். அவன் குஷியாய் இருக்கிறானென்று பொருள். 

"என்ன ஜி..கடுமையான உழைப்பு போல ..நைட்டு எத்தனை மணிக்கு வந்தீங்க.."

"மூனு ஆகிடுச்சு டா.."

"இப்படிலாம் கூட நடக்குமா..நீங்க நைட்டு மூனு மணி வரைக்கும் வேல பாத்துருக்கீங்க ...அதுவும் வேற டீமுக்கு ... பேசாம இவனுங்க எல்லா டீம்லயும்  ஒரு அழகான பொண்ண ரெக்ரூட் பண்ணி வச்சானுங்கன்னா கம்பெனி எங்கேயோ போயிருக்கும்..."

சிரித்தேன். அந்த ரம்யமான இரவில் நடந்த அத்தனை சம்பவங்களும் என் மனக்கண்களில் ஓடிக்கொண்டிருந்தன. நினைத்தது போலவே அது ஓ.எஸ் அப்டேட்டுகளால் வந்த பிரச்சனை தான். சி.எம்.எஸ் அணியில் எல்லோரும் அதை வெற்றி போலவே கொண்டாடினர். சம்பந்தப்பட்ட  சர்வர்களின் பராமரிப்பு "க்ளைன்ட்" பக்கம் இருந்தது. ரோஹன் போன்ற திறமைமிகு மேலாளர்கள் எல்லாம் சேர்ந்து "பிரச்சனை உங்கள் பக்கம் தான். இருந்தும் நாங்கள் உதவி செய்கிறோம்" என க்ளைன்ட்டுகளிடம் பேசி  பயங்கரமாய் ஸ்கோர் செய்தார்கள்.  நள்ளிரவு நடந்த முக்கியமான மீட்டிங்கில் ரோஹன் ஆற்றிய உரை பற்றி அலுவலகத்தில் எல்லோரும் சிலாகித்துப்  பேசினர். எனக்கு ஆச்சர்யமில்லை. வாய்ப்பு கிடைக்கும் இடத்திலெல்லாம் சிக்ஸ் பறக்க விட்டு மேலிடங்களை சிலிர்க்க வைப்பது என் தலைவனுக்கு புதிதல்ல.

"பாஸ்..நீங்க நம்பர்லாம் வாங்கிருப்பீங்களே இந்நேரம் ..கேடியாச்சே நீங்க.."

போனை எடுத்து வாட்ஸாப்பைத்திறந்து அவனிடம் நீட்டினேன். "மானஸ்" என்ற பெயரில் இருந்த காண்டக்ட்டை காட்டினேன். அவள் அதில் பேண்ட் ,டீ ஷர்ட் அணிந்திருந்த போட்டோ வைத்திருந்தாள். ஆம்ஸ்டர்டாம் பூக்களுக்கு நடுவே நின்றிருந்தாள். கண்கள் விரிந்து போனை பக்கத்தில் வைத்துப்பார்த்தான்.

"சிவ்..ஒரு நாள் நைட்டுக்குள்ள என்னல்லாம் நடந்திருது..சும்மா ஹீரோயினி மாதிரி இருக்காள்ல.."

"பாத்து மரியாதையா பேசு.. நாளைக்கு அவள நீ அண்ணினு கூப்பிட வேண்டிய சூழ்நிலை கூட வரலாம்.."

"அப்போ பியூச லாரி ஏத்தி கொல்லப்போறீங்களா??.. மூஞ்சு ஃப்புல்லா சிரிப்பா  இருக்கே...நீங்க எதுக்கும் நேத்து என்னெல்லாம் நடந்துச்சுன்னு சொல்லிருங்க..."

சிரித்தேன். அவளின் முகம் ஞாபகம் வந்தது. கூடவே அந்த பெர்ஃபியூம்  வாசனை. இரவு இரண்டு மணிக்கு கூட அவளை விட்டு செல்லாமல் அடம்பிடித்து அவள் மேலேயே படர்ந்து கிடந்தது,அந்த மணம். பேசிக்கொண்டிருக்கும் போதே இடது கை ஆட்காட்டி விரலால் காதோர முடியை சுருட்டுவது. எல்லாமே கனநொடியில் எனக்குள் வந்து போயின. தல்பீர் என் வார்த்தைக்காக காத்திருந்தான்.

"சைமன்..துருவ்..ப்ரியா எல்லாரும் பன்னெண்டு மணிக்கே டெஸ்க்ல  மல்லாந்துட்டாங்க.. ஓ.எஸ் சரிபண்ணி  சர்வர் ரெடி ஆகிறதுக்கு  ஒரு மணி ஆகிடும்னு சொல்லிட்டாங்க..அப்பறம் தான மத்த வேலைலாம் பண்ண முடியும்...இவ என்னடான்னா பிரிட்ஜ்ல வச்ச ஆப்பிள் மாதிரி பக்கத்துல உட்காந்திருக்கா..அந்த  கண்ண நேருக்கு நேரா பக்கத்துல பாத்தா  ஒரு மாதிரி உடம்பு முழுக்க ஜிவ்வுனு  இருக்கு... இடையிடையே ரெண்டு விரலையும் அந்த உதட்டுக்கு பக்கத்துல வச்சி  "தம் " போலாமா என சைகை செய்வாள் "

"என்னது தம்மா..."

"ஏ ..ஏன்டா ... பொண்ணுங்கலாம்  ராக்கெட்டே விடுறாங்க ..இத்துனூண்டு தம்மை இழுக்க கூடாதா ..சரி அத அப்புறம் விலாவாரியா பேசலாம் ...இது ஹைலைட்ஸ் பேக்கேஜ்..மெயினானது மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ..."

"ரைட் ..ரைட் ..மேல சொல்லுங்க .."  என டிராஃபிக் போலீஸ் வண்டியை போகச்சொல்லி சிக்னல் செய்வது போல செய்தான்.


"நா ..உன்கிட்ட சொன்னேன்ல ..அவள  விட நான் ஒரு நாலு இஞ்ச் ஹைட் கூட இருப்பேன்னு ..அது கரெக்ட் தான் ...நின்னே பார்த்துட்டேன்..என்னம்மா ஜோக் அடிக்கிறா தெரியுமா ..செம்ம ஜோவியல் ... என்ன இங்கிலீஸ் தான் டாப் ரகமா இருக்கு ..கொஞ்சம் கூர்மையா கேட்க வேண்டியிருக்கு.. பெர்லின்ல போஸ்ட் க்ராஜுவேஷன் படிச்சாளாம் .."

தல்பீர் கொஞ்சம் சீரியஸாய் முகத்தை வைத்துக் கொண்டிருந்திருந்தான். நான் தொடர்ந்தேன்.

"ஒரு தம்பியாம்..அப்பா ரயில்வேஸ்ல வேல பண்ணினாராம்..அடிக்கடி ஸ்கூல் மாற வேண்டியிருந்ததாம்..அவ்ளோ பேச்சு நேத்து..அவ பேசுற பேச்சும் அதுக்கு தகுந்த மாதிரி அந்த முழி சிறியதாவும் பெரியதாவும் அட்ஜஸ்ட்  ஆகுறதிருக்கே...ப்பா...எஸ்.பி.பி  குரலும் இளையராஜா இசையும் மாதிரி ஒரு டிவைன் சிங்க்.."

டர்பன் வைத்திருந்த நம்ம சர்தார் தம்பிக்கு இளையராஜா, எஸ்.பி.பி பற்றியெல்லாம் எவ்வளவு தெரியும் என்பது பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. என் உணர்ச்சிகளை காட்டாற்று வெள்ளம் போல வார்த்தைகளால் கடத்திக்கொண்டிருந்தேன். 

"ஒவ்வொரு தடவையும் அவ "சிவா..சிவா" னு கூப்பிடறப்போ..எனக்கு அவ்வளவு சந்தோசம்..நம்ம பேர் கூட கேட்க நல்லாருக்கேனு தோணிச்சு..."
  
தல்பீர் எழுந்துவிட்டான். ஒரு வேளை ரொம்ப மொக்கை போடுறோம்போலனு நானும் பேசுவதை நிறுத்தினேன். அப்படியே படுக்கையிலிருந்து பாத்ரூமிற்கு சென்று காலை கடமைகளை முடித்தேன். குழாயில் சூடு தண்ணீர் பிடித்து ஹாலுக்கு வந்து உட்கார்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் குடித்துக்கொண்டிருந்தேன். தல்பீர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு அசௌகர்யமான அமைதி அங்கிருந்தது.அவன் என் மீது தீவிர பாசம் கொண்டவன். பல நேரங்களில் அவனே மூத்தவன் போல செயல்படுவான். எவ்வளவு சேட்டைகள் செய்தாலும் என்னை எல்லை மீறாமல்    பார்ததுக்கொள்பவன்.

"சிவ்..கொஞ்சம் சீரியஸா போறீங்களோனு தோணுது...ஜாலியா சைட் அடிச்சோமா.. முடிஞ்ச அளவு வேல பாத்தோமானு போயிட்டிருக்கோம்..கண்ண திறந்து பாத்துக்கிட்டே போய் குழில விழுந்திராதீங்க..தவிர இது எத்திக்கலா சரி கிடையாது.." 

அவன் சொல்வதில் நிறைய உண்மை இருந்தது. மான்ஸ்வியும் பியூஷும் காதலிக்கிறார்கள் என மொத்த அலுவலகத்துக்கும் தெரிந்திருந்தது. தவிர பியூஷ் லட்சணமான,அறிவான, வசதியான ஆசாமி. என் போட்டோவையும் பியூஷ் போட்டோவையும் காட்டி இதில் யார் மானஸ்விக்கு பொருத்தம் எனக்கேட்டால் நூற்றில் தொன்னூற்று  ஒன்பது பேர் பியூஷைத் தான் காட்டுவார்கள். அந்த ஒரு ஓட்டுக்கூட என் குடும்பத்தினர் போட்டாத்தான் உண்டு.

"அதெல்லாம் அவளோ சீரியஸா கிடையாதுடா ..என்னப்பத்தி உனக்குத்தெரியாதா..சும்மா கல்ல விட்டு எறிவோம்ல..அந்த மாதிரி கிடைச்சா பழம்..இல்லனாலும்  நோ ப்ராப்ளம்..."

"சில நேரம் எறிஞ்ச கல்லு நேரா திரும்பி  வந்து தலைலயே விழுகும் தெரியும்ல.."

சிரித்தேன். இந்த நெருங்கிய நண்பர்களெல்லாம் எம்.ஆர்.ஐ ஸ்கேன் போல..நமக்குள் ஊடுருவி எல்லாவற்றையும் தெரிந்து கொள்வார்கள்.எனக்கு கொஞ்சம் கவலையாய் இருந்தது. திடீரென  மனது, பலூன் உடைந்தது போல ஆகிவிட்டது. நல்ல கனவின் போது திடீரென கண் முழித்தால் ஒரு உணர்வு வருமே அது போல இருந்தது. 
தல்பீர் பக்கத்தில் வந்து தோளில் சாய்ந்தான். 

"யோ..சிவா..நாமெல்லாம் எப்டி ஆளுங்க.. நாமெல்லாம் சீரியஸ் விசயத்துல இறங்குனா இந்த பூமி தாங்காது..உலக நலனுக்காக நா சொல்றத கேளு... இன்னைக்கு அயாக்ஸ்(Ajax)கூட மேட்ச் இருக்கு.. போன மாசம் பி.எஸ்.வி மேட்ச் போனோம்ல ஞாபகம் இருக்கா..பீர் அடிச்சிட்டு நடக்க முடியாம ரயில்வே ஸ்டேசன்லயே தூங்குனோமே..இன்னிக்கு அதகளம் பண்றோம்"  



தலையாட்டினேன். உற்சாகம் ஏற்படவில்லை. டச் ஃபுட் பால் லீக் எனப்படுவது நெதர்லாந்துக்குள் இருக்கும் கிளப்புகள் பங்கேற்கும்  உள்ளூர் லீக். நம்ம ஐ.பி.எல் போல. நாங்கள் இருக்கும் ஊரின் அணி எஃப்.சி டவெந்தே (F.C TWENTE). நாங்கள் இருவரும் சீசன் டிக்கெட் வைத்திருந்தோம். மாதத்தில் ஒரு சனிக்கிழமை போய் மேட்ச் பார்ப்போம். பெரும்பாலும் அதிகமாய் குடித்து விட்டு யாரிடமாவது சண்டை போடுவோம். ரெபெக்காவும் யோரிசும் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள். இருவரும் சேர்ந்து வாழும் காதலர்கள். ஆறு மாதத்துக்கு முன்னால் மேட்ச் பார்க்க வந்த போது தான் பழக்கமானார்கள்.

"யோரீஸ் மெசேஜ் பண்ணான்..இன்னைக்கு சுராஸ் இல்லையாம்..இஞ்சூரியாம்..அப்போ  அயாக்ஸ்ஸ ஜெயிக்க வாய்ப்பிருக்குல.. அவுங்க ஆறு மணிக்கு வந்திடுவாங்கலாம்.. "

சரியென்பது போல தலையாட்டினேன். ரூமிற்குள் வந்து போனை எடுத்துப்பார்த்தேன். மானஸியிடமிருந்து ஒரு வாட்சப் மெசேஜ் வந்திருந்தது. மனதில் திரும்பவும் ஒரு மின்காந்த அலை ஊடுருவியது.
ஒரு சூரியன்..நிறைய மரங்கள் எல்லாம் போட்டு ஒரு பொன்மொழி  எழுதிய குட்மார்னிங் மெசேஜ். எப்படியும் இதை நூறு பேருக்கு அனுப்பியிருப்பாள் என்று எண்ணிக்கொண்டேன். "டேய் அது தலைவர்கள் சொல்ற வாழ்த்து செய்தி மாதிரி..சந்தோசப்பட்டுறாத..கொஞ்சம் கூட சந்தோசப்பட்டுறாத" என என் மனத்திற்கு தெளிவுபடுத்திக்கொண்டிருந்தேன்.

ஸ்டேடியத்தின் வலது மூலையில் நின்றிருந்தோம். உள்ளுக்குள் ரசிகர்களை இன்னும் விடவில்லை. நானும் சர்தாரும் குளிருக்கு இதமாய் ரெண்டு பீரை இறக்கியிருந்தோம். ரெபெக்கா போனை நோண்டிக்கொண்டிருந்தாள். யோரீஸ் அவளை நோண்டிக்கொண்டிருந்தான். திடீரென ரெபெக்கா  எங்களை  கூப்பிட்டு "அங்கே பாருங்கள்" என்றாள். சில அயாக்ஸ் அணி ரசிகர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். "அந்த ஓரத்தில்..அவர்கள் தான் சரி " என்றாள். அந்த திசையை பார்த்தோம். மூன்று வயதான பெண்களும் ஒரு நடுத்தர வயது ஆணும் அயாக்ஸ்  கொடியுடன் நின்றிருந்தார்கள்.

"ரெடியா" என்றாள். தலையாட்டினோம். ரெபெக்கா அவர்களை நோக்கி "ஹேய்...." என கத்தி கை அசைத்தாள். அவர்கள் திரும்பினார்கள்.நாங்கள் எல்லோரும் சேர்ந்து "க்ளூட்சாக்" என கத்தினோம். அவர்கள் எங்களை குழப்பமாய் பார்த்தார்கள். பக்கத்தில் இருந்தவர்களெல்லாம்  சிரித்தார்கள். அவர்கள் நம்மைத்தான் சொல்கிறார்களா என யோசித்து பின்னாலெல்லாம் திரும்பி பார்த்தார்கள். அந்த ஆண் கோபத்தில் தல்பீரை நோக்கி "ஹே..யூ கண்ட் .  .யூ கோ பேக் டூ  யுவர் சைனா" .என்றான்.

தல்பீர் "அவனோட புவியியல் அறிவு என்னை மெய்சிலிர்க்க வைக்குது" என்றான். எனக்கு அடக்க முடியாத அளவு சிரிப்பு வந்தது. எல்லோருமே கொஞ்சம் நேரம் சிரித்தோம். என் போனில் "டொயிங்" கென  சத்தம் வந்தது. வாட்சப் மேசேஜ். மானஸியிடமிருந்து வந்திருந்தது.

"தொப்பி நல்லாருக்கே.."

தலையை தொட்டுப்பார்த்தேன். இங்கு தான் எங்கோ இருக்கிறாளோவென தேடினேன். எனக்கு நேராய் நூறடியில் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தாள். பியூஸ் பக்கத்தில் அவள் கையை பிடித்த படி நின்றிருந்தான்.  


                                                                                                                      --தொடரும் 
 

வெள்ளி, 1 ஜனவரி, 2021

ஒரு ஆரஞ்சுக்காவியம் -2

ம்பளைண்ட் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் எனப்படும் சி.ம்.எஸ்ஸில் தான்  அந்த ஆட்டோமொபைல் கம்பெனியின் வாடிக்கையாளர்கள் தங்களின் குறைகளை  பதிவு செய்வார்கள். அந்த விவரங்கள்  சம்பந்தபட்டவர்களுக்கு சேர்க்கப்படும். இருவழித்தொடர்பு ஏற்பட்டு வாடிக்கையாளர்களின் எல்லாக்குறைகளையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணியாக அந்த வலைப்பக்கம் செயல்பட்டு வந்தது. அப்படியாப்பட்ட பிரசித்திப்பெற்ற மாட்யூலைத் தான் நம்மாட்கள் கபளீகரம் செய்திருக்கிறார்கள். கிளைண்ட் சைடில் அக்கவுண்ட் மேனேஜர் எரிக் பயங்கர கோபத்தில் இருப்பதாய் பேசிக்கொண்டார்கள். முந்தைய நாள் மீட்டிங்கில் பேசிக்கொண்டிருக்கும் போதே டேபிளில் குத்திவிட்டு எழுந்து போய்விட்டாராம்.

அந்த அறையில் குளிர் கொஞ்சம் அதிகமாக இருந்தது.சுற்றி இருந்த வட்ட  டேபிளில் சுமார் ஏழெட்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ஆங்காங்கே சில லேப்டாப்கள் அனாதையாய் கிடந்தன. சுவற்றிலிருந்த வெள்ளை நிற போர்டில் ஏதேதோ கண்டபடி எழுதப்பட்டிருந்தது. ஸ்காட்லாந்து யார்டே வந்தாலும் அந்த போர்டை பார்த்து  என்ன விவாதம் செய்திருப்பார்கள் என கண்டுபிடிக்க முடியாது. நானும் ரோஹனும்  ஓரமாய் இருந்த ரெண்டு சேர்களில் அமர்ந்தோம். துருவ் பேனாவில் ஏதேதோ எழுதி பிரியாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அவள் பதிலேதும் சொல்லாமல் தலையாட்டிக்கொண்டிருந்தாள். தலையை சுற்றிப்பார்த்தேன்,அந்த அறையில் மானஸ்வியை காணவில்லை. "என்னடாயிது..திருப்பதிக்கு வந்து இன்னும் வெங்கடாசலபதி கண்ணுல படல" என எண்ணிக்கொண்டேன். சுதீப் எங்களை ஒரு மாதிரி ஆச்சர்யமாய் பார்த்து, 'வாங்க' என்பது போல தலையசைத்தார். சுதீப் தான் சி.ம்.எஸ்ஸின் மேனேஜர். கடந்த மூன்று நாட்களில் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார் என்பது கண்களில் தெரிந்தது.

சுதீப் நளினமாய் கைதட்டி "கை(ய் )ஸ் ..ஒன்  மொமெண்ட்" என்றார்.எல்லோரும் சேர்களை சரிப்படுத்தி நேராக உட்கார்ந்து கொண்டார்கள். அறையிலிருந்த எல்லோரும் தலையை உயர்த்தி அவரைப்  பார்த்தோம்.

"இங்க ..சி.எம் எஸ்ஸுக்கு உதவிக்கு வந்திருக்கிற நம்ம ப்ராஜெக்ட் நண்பர்களுக்கு நன்றி.உண்மையிலேயே இது அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை.."

பேசும்போது இடையிடையே கைகளை தேய்த்துக்கொண்டே பேசினார்.கொஞ்சம் தாழ்ந்த குரலில் "தேவையில்லாமல் இதை பெருசு செய்கிறார்கள் " என்றார்.

ரோஹன் என் காது பக்கத்தில் வந்து "எரிக்..தப்பு பண்ணிட்டார்..இவன் மூஞ்சுல அந்த குத்த விட்டுருக்கணும்.." என்றார். லேசாய் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன்.ரோஹன் கொஞ்சம் ஷார்ப்பான மனிதர் .கள நிலவரம் தெரியாமல் கலவர பூமிக்குள் இறங்கமாட்டார்.ஐரோப்பா முழுவதுமே வாடிக்கையாளர்கள் அந்த வலைப்பக்கத்தை உபயோகப்படுத்துவதால் மூன்று நாட்களில் சுமார் ஐம்பதாயிரம் யூரோ வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கணக்கிட்டுருக்கிறார்கள்.இது தவிர பிரச்சனை சார்ந்த பல புள்ளிவிவரங்களை கைக்குள் ரோஹன் வைத்திருந்தார். இன்னும் கொஞ்ச நேரம் அந்த ஸ்வெட்டர் ஆசாமியிடம் பேசியிருந்தால் அவரின் ஏ.டி .எம்  பின்னையும் வாங்கியிருப்பார்.சுதீப் தொடர்ந்து பேசினார். 

 "நாங்கள் ஞாயிறன்று  ஃபைல்களில்  சில மாற்றங்கள் செய்தோம் தான்..ஆனால் திங்கள்.. செவ்வாய்..வரை சிஸ்டம் நல்லாத்தானே வேலை செய்தது..டேட்டா ஸ்டோரேஜ்..நோட்டிஃபிகேசன் என எல்லாமே சரியாகத்தானே இருந்தது..இப்போதும் கூட பிரச்சனை சில ப்ரௌஷர்களில் தான் வருகிறது.."

"ஆனால் அந்த ப்ரௌசர்களைத்தானே தொண்ணூறு சதவீத வாடிக்கையாளர்கள் உபயோகிக்கிறார்களாம் .." என்றார் ரோஹன்.சட்டென அந்த இடம் சூடானது. எஜமான் படத்தில் ரேக்ளா ரேஸுக்கு முன்னாடி வானவராயனும் வல்லவராயனும் முறைத்துப்பார்த்துக்கொள்வது போல  சில வினாடிகள் சுதீப்பும் ரோஹனும் பார்த்துக்கொண்டார்கள். நான் ஏதேதோ கற்பனையில் வந்திருந்தேன். கடைசியில் இந்த அங்கிள்களின் ஆக்சன் காட்சிகளை பார்க்கும்படி ஆகிவிட்டதே என்று நொந்து கொண். தவிர அது என்னுடைய தம் டைம்..முந்தைய நாள் அதே நேர கணக்கின்படி  இரண்டு சிகரெட்கள்  பின் தங்கியிருந்தேன். கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ஸ்வெட்டர் ஆசாமி எனப்படும் சௌப்ஜித் சர்க்கார் உள்ளே வந்தார். பின்னாலேயே மானஸ்வியும் வந்தாள். எனக்கு இதயம் வேகமாய் துடித்தது.

 மானஸ்வி முகத்தில் சிரிப்பேதும் கொஞ்சமும் தெரியவில்லை. தேவதைகள் எப்படி முகத்தை வைத்துக்கொண்டாலும் அழகாகவே தெரிகிறார்கள்.அவள்  துருவுக்கும் பிரியாவுக்கும் அடுத்துப்போய் உட்கார்ந்து கொண்டாள். ஸ்வெட்டர் சுதீப்பையும் ரோஹனையும் கூப்பிட்டு காதில் ஏதோ சொன்னார். அவர்கள் சில நிமிடங்கள் குசுகுசுவென பேசிவிட்டு "இதோ வந்திடுறோம்." என சொல்லிவிட்டு அந்த ரூமில் இருந்த பெரிய தலைகளையெல்லாம் ஓட்டிக்கொண்டு போயினர். பெரும்பாலும் ஏதாவது மீட்டிங்காக இருக்கும்.ஐ.டி யில் பெரும் பிரச்சனையின் போது வேலை செய்வதை விட அதை பற்றி பேசவே அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். இப்போது ரூமில் துருவ்,பிரியா,சைமன்,நான்  மற்றும் மானஸ்வி மட்டுமே மிஞ்சியிருந்தோம். 

சைமன் ஒரு டச்சுக்காரன். எங்கள் அலுவலகத்தின் ஆம்ஸ்டர்டாம் கிளையில் வேலை செய்து வந்தவன். இப்போது ஒரு வருடமாய் எங்களுடன் இந்த ப்ராஜெக்ட்டில் பயணிக்கிறான். "இன்வென்ட்டரி" டீமில் இருப்பவன். ஏற்கனவே அவனுடன் சில பிரச்சனைகளில் சேர்ந்து வேலை செய்திருக்கிறேன். "ஹாய் சிவ்" என்றான். துருவும் பிரியாவும் அவரவர் லேப்டாப்பை வெறிக்க தொடங்கியிருந்தார்கள். மானஸ்வி பிரியாவின் தோளில் சாய்ந்திருந்தாள். ஒரு ரம்மியமான பெர்ஃப்யூம் வாசனை காற்றில் வந்ததை அப்போது தான் கவனித்தேன். எல்லோரும் மிக அருகாமையில் தான் உட்கார்ந்திருந்தோம். எப்படி பேச்சை தொடங்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன். ஆரம்பம் மிக முக்கியம். அது தான் நம்மைப்பற்றிய எண்ணங்களின் அச்சாணி.  

"சிவ்.." 

சைமன் கூப்பிட்டான். நிமிர்ந்து பார்த்தேன்.

"சிகரெட் இருக்கா..ஒன்னு போதும்.."

இந்த கடன்காரனுக்கு கடன் கேட்க நேரகாலம் இல்லையா என மனம் கொதித்தது.அவள் என்னைப்பற்றி என்ன நினைப்பாள் என மனம் பதறியது. "புகை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு" என ஏன் சொல்கிறார்கள் என புரிந்தது. பேண்ட் பாக்கெட்டில் "மார்ல்ப்ரோ"வை தேடினேன்.

"இன்னொன்னு இருக்குமா..எனக்கு " என சைடிலிருந்து சத்தம் வந்தது.மானஸ்வி அப்பாவியை முகத்தை வைத்து கையை நீட்டி என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு அதிர்ச்சி அலை என்னுள் கிளம்பி தலை முதல் கால் வரை பயணித்தது. சுதாரித்து இயல்பாய் முகத்தை வைத்துக்கொண்டு ஒரு சிகரெட்டை அவளுக்கும் இன்னொன்றை இவனுக்கும் கொடுத்தேன்.அவளின் ஆங்கிலம் ஐரோப்பிய ரகத்தில் இருந்தது. கொஞ்சம் கவனித்து கேட்க வேண்டியிருந்தது. 

"வாங்க நாம ஸ்மோக் பண்ணிட்டு வந்து ஸ்டார்ட் பண்ணலாம்..இவுங்க ரெண்டு பேரும் எப்படியும் வர மாட்டாங்க..ஐ நீட் சம்  ப்ரெஷ் ஏர் " என்றான் சைமன்.

அவளும் சிரித்துக்கொண்டே "எனக்கும் தான்" என்றாள். நானும் சரி என்பது போல தலையாட்டினேன். மூவரும் வெளியே வந்து ஒரு சாலையை கடந்து ஒரு பெரிய மரத்தின் கீழிருக்கும் பெஞ்சில் அமர்ந்து கொண்டோம். போட்டிருந்த ஜெர்க்கினையும் தாண்டி உடல் குளிரில் நடுங்கியது. மூச்சு விடும்போதும் பேசும்போதும் புகைபோல காற்று வெளியேறியது. சைமன் லோக்கல் பீஸ் என்பதால் அலட்டாமல்  இருந்தான். மூவரும் பற்ற வைத்தோம். மானஸ்விக்கு கொஞ்சம் சுருட்டை முடி என்பதை அப்போது தான் கவனித்தேன்.அவள் பேசத்தொண்டங்கினாள்.

"நான் எப்பயும் ஆபீஸ் டைம்ல  ஸ்மோக்  பண்ண மாட்டேன்..இன்னைக்கு செம்ம கடுப்பு..எல்லாரும் வந்து எங்களவே திட்டுறாங்க..நாங்க அப்படி என்ன தப்பு பண்ணினோம்..ரெண்டு நாள் வேலை செஞ்சதே..அதெப்படி?..ஒரு கிளமும் அத பத்தி பேசாதுங்க.."

சொல்லிவிட்டு சிகரெட்டை ஒரு இழு இழுத்தாள். நானும் சைமனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.  

"பெனால்ட்டி போட்டுட்டாங்கன்னா..வேலைக்கே பிரச்சனை வந்துடுமாம்...லேட்நைட் வேல பாத்தோமே அப்போல்லாம் இந்த நாய்ங்க எங்க போச்சுங்க.."

அவள் கண்கள் கலங்கியிருந்தது.

"துருவ்வெல்லாம் ரெண்டு நாள் தூங்கவேயில்லை..நேத்திக்கு மயங்கிட்டான். ப்ரியாவுக்கு அடுத்த மாசம் கல்யாணம்... சே ..எவ்வளோ ஜாலியா இருந்தோம் போன வாரம் வரைக்கும் .."

சைமன் ஒரு மாதிரியான ஜென் மன நிலை கொண்டவன்.அதிகம் பேச மாட்டான். சூழ்நிலையை ஆராய்ந்து தேவையான போது மட்டுமே பேசுவான்.

"மான்ஸ்..எங்க பாட்டி அடிக்கடி ஒரு பழமொழி  சொல்லுவாங்க..'சரி செய்து விட்டால் அந்த தவறின் அடர்த்தி பாதியாய் குறைந்து போகும்'னு..எதிர்மறை எண்ணங்களை சுமக்காதே" என்றான்.

அவள் கொஞ்சமாய் யோசித்து விட்டு சிகரெட்டை அணைத்து குப்பையில் போட்டாள். சைமன் அருகில் வந்து "தேங்க்ஸ்..சைம்..ஐ ஃ பீல் பெட்டர்" என்று  சொல்லி அவனை தோளுடன் அனைத்து மறுபடியும் "தேங்க்ஸ்" என்றாள். நான் சாக்லேட் கிடைக்காத சின்ன குழந்தை போல பரிதாபமாய் அங்கே நின்றிருந்தேன். எங்க பாட்டிகள் எல்லாம் "வெயில்ல விளையாடாத...நல்லா அள்ளி சாப்பிடு.."தவிர வேறெதுவும் சொல்லவில்லையே என காண்டாக இருந்தது.மூவரும் திரும்பவும் எங்களின் அறை நோக்கி நடந்தோம். 


துருவ் லேப்டாப்பில் தலைவைத்து படுத்திருந்தான். பிரியா தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தாள். அவர்களை பார்க்க வேர்ல்டுகப்பில் ஜிம்பாப்வே டீமை பார்ப்பது போல இருந்தது. அரைமணி நேரமாய் என் மனதிற்குள் ஏதோவொன்று ஓடிக்கொண்டிருந்தது. "செவ்வாய்க்கிழமை..ரெண்டு நாள் வேலை செய்தது" போன்ற வரிகளெல்லாம்   என்னை அரித்துக்கொண்டிருந்தது. இது சம்பந்தமாய் ஏதோ ஒரு தகவல் மூளைக்குள் இருப்பதாய் தோன்றியது.  இந்த நேரத்தில் என்னைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. நான் ஒரு மிடில் பெஞ்ச் ஆள். படிப்பு, வேலை  எல்லாவற்றிலுமே. கமல் போல மயத்திலேயே பயணப்பட்டுக்கொண்டிருப்பேன். சைமன் போல ஐ.டியில் உள்ள  புது தொழிநுட்பங்களின் அடிவரை சென்று அலச எனக்கு முடியாது. கொடுத்த வேலையை முடித்து விட்டு மேனேஜர்களை கண்கலங்காமல் பார்த்துக்கொள்வேன். தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் இந்த பிரச்சனைகூட கொஞ்சம் முரட்டு ரகமாய் இருந்தால் "சைமன்களுக்கு" வழிவிட்டுக்கிளம்பியிருப்பேன். ஆனால் இது ஒன்றும் பெரிய பிரிச்சனையாய் இருக்காது என என் மனம் சொல்லியது.

அப்போது தான் அந்த விஷயம் சரியாய் ஞாபகம் வந்தது. 

"சைமன்..ஓ.எஸ் அப்டேட் நடந்தா..இந்த ஃபைல்களெல்லாம் இம்பாக்ட் ஆக வாய்ப்பிருக்குல்ல.."

கொஞ்சம் யோசித்தான். மானஸ்வி என்னையும் சைமனையும் மாறி மாறி பார்த்தாள்.

"அம்பது சதவீத வாய்ப்பிருக்கு..இவுங்க யூஸ் பண்ற ஜாவா வெர்சன் கொஞ்சம் பழசு தான்.."

எனக்கு எந்த சதவீத கட்டுப்பாடுகளின்றி சந்தோசம் மனம் முழுக்க பரவியது. "என்ன" என்பது போல கையாட்டி என்னிடம் மானஸ்வி கேட்டாள்.அவளிடம் பதில் சொல்லாமல் தல்பீருக்கு இன்டெர்காமில் போன் போட்டேன். 

"தல்பீர் ஒரு ஹெல்ப் டா.."

"அப்புறம் நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணவா கால் பண்ணுவீங்க..என்னானு சொல்லுங்க.."

"டேய்  இந்த வாரத்துல ஒரு நாள் நைட்டு... சர்வர் முழுக்க  ஏதோ ஓ.ஸ் அப்டேட் ஆகியிருச்சுன்னு ரெண்டு மணி வரைக்கும் வேல பாத்தேலே.."

"ஆமா..சர்வர் மெயின்டெனன்ஸ் பண்றப்போ..ரெண்டு பேட்ச்ச தெரியாம ஓட்டிட்டாங்க..அப்புறம் அதுனால எதுவும் பிரச்சனை வராதுன்னு விட்டுடுங்கனு கிளைண்ட் சைடுல சொல்லிட்டாங்க.."

"அது செவ்வாய்க்கிழமை நைட் தான.."

"அது ஞாபகம் இல்ல...ஆனா அன்னைக்கு தான் நாம போதைல கார்டனுக்குள்ள  போய் ஒன்னுக்கடிச்சோம்"

"ஓகே டா"

போனை வைத்து விட்டேன் .நல்லவேளை போனை ஸ்பீக்கரில் போடவில்லை. யோசித்துப்பார்க்கையில் உறுதியாய் அது செவ்வாய்க்கிழமை தான். 

சைமனும்,மானஸ்வியும்  என் பக்கத்தில் வந்தார்கள். "செவ்வாய்க்கிழமை ராத்திரி சர்வர்ல ஓ.ஸ் அப்டேட் நடந்திருக்கு.." என்றேன்.

சைமன் தாடையைத்தடவி "எனக்குத்தெரிந்து நாம் திருடனை பிடித்து விட்டோம் என்றே நினைக்குறேன்" என்றான். மானஸ்வி என்னை முதல் முறையாய் சினேகமாய் பார்த்தாள். "யாருடா நீ " என்பது போல இருந்தது. என் ஹார்மோன்கள் எல்லாம் மொத்தமாய் எழுந்து கோரஸ் பாடத்தொடங்கியது. 

                                                                                                                            --தொடரும் 

  

வெள்ளி, 25 டிசம்பர், 2020

ஒரு ஆரஞ்சுக்காவியம்- 1

லாரம் அடிப்பதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னாடியே பெரும்பாலும் விழித்து விடுவேன். அலார சத்தத்தில் எழுந்திருப்பது, யாரோ அடித்து எழுப்பி விடுவது போல காலையில் எரிச்சலை  ஏற்படுத்தும். அன்றும் அப்படி காலத்தை வென்று, கடிகாரத்தின் தலையில் தட்டிவிட்டு எழுந்தேன். ஜன்னல் வழியே பனி விழுவது ஒன்றும் அழகாய்த்தெரியவில்லை.ஹாலுக்கு வந்து மூலையில் இருந்த ஹீட்டரில் ரெண்டு புள்ளிகள் கூட்டினேன்.  தல்பீர் ரூமிலிருந்து சத்தம் வந்தது.



  "சிவா  நீங்க குளிச்ச பிறகு என்னை மறக்காம எழுப்புங்களேன்.."

"டேய்..ட்ரெஸ் பண்ணிட்டு வந்து எழுப்பனுமா..இல்ல அப்பிடியே வந்து எழுப்பனுமா.."

 பதிலேதும் வரவில்லை. குளிர் உடம்பு முழுக்கக்குத்தியது. பல்லை விளக்கிக்கொண்டே ஜன்னல் பக்கம் போனேன். வானத்திலிருந்து மாவை சலித்து விட்டது போல பனி விழுந்துகொண்டிருந்தது.எங்கும் வெள்ளை மயம் ."என்ஸ்கடே" வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. "எஸ்கடே" நெதர்லாந்தின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு டவுன். ஜெர்மனிக்கு மிக அருகாமையில் இருக்கும் ஸ்தலம். சில உள்ளூர்க்காரர்கள்  இங்கிருந்து எச்சில் துப்பினால் ஜெர்மனியில் விழுந்து விடும் என சொல்வார்கள். துப்பி உறுதி செய்தார்களா தெரியவில்லை ஆனால் ஜெர்மனி பதிமூன்று கிலோமீட்டர் தூரம்.நாங்கள் வேலை செய்யும்  கார்ப்பரேட் கம்பெனி சார்பில் அங்குள்ள ஆட்டோ மொபைல் நிறுவனத்தில்  ஐ.டி மராமத்துப்பணிகள் நடந்து வருகின்றன.அந்த தெய்வீகப்பணியில் இந்தியாவிலிருந்து மொத்தம் அறுபது பேர் இடம் பெற்றிருந்தோம். அலுவலகத்திலிருந்து எங்கள் அறுபது பேருக்கும் தங்குவதற்காக ஒரு பெரிய ரெஸார்ட்டை புக் செய்திருந்தார்கள். அது ஊருக்கு வெளியில் ஆங்கில பேய்ப்பட பாணியில் அமைந்திருந்தது.சில வட இந்திய நண்பர்கள் இவ்விடத்தை "காலாப்பாணி" என கேலி செய்வார்கள். அதாவது சிறைச்சாலை. காலையிலிருந்து இரவு வரை கடுமையான வேலை எங்களுக்கு இருந்து வந்தது.

ரெஸார்ட்டிலிருந்து அலுவலுகத்திற்கு ஒரு பேருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். காலை சரியாய் ..இல்லை மிகச்சரியாய்  எட்டு மணிக்கு அது கிளம்பும். அதை விட்டு விட்டால் நாம் கேப் பிடித்தோ அல்லது சைக்கிளை அழுத்தியோ அலுவலகம் போய்ச்சேர வேண்டும். நானும் தல்பீரும்  இறைவனின் அருள் அதிகம் இருக்கிற நாட்களில்  மட்டும் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தோம்.

குளித்துவிட்டு வந்து என் ஈரமான கையை தல்பீர் கன்னத்தில் வைத்து "டைம் அப்" என்றேன். ஷாக் அடித்ததை போல எழுந்து.. கெட்ட வார்த்தையில் திட்டினான். நான் அவனை பார்த்து "டைம் ஆச்சு..இன்னைக்கு அப்புறம் "சன் ரைஸ்" பாக்க முடியாதுடா.." என்றேன்.அவன் சிரித்துக்கொண்டே பாத்ரூமை நோக்கிக்கிளம்பினான். அவன் வந்தவுடன் சில பல அவித்த முட்டைகளையும் ,டீயையும் குடித்து விட்டு வயிற்றை ஆறுதல் படுத்தினோம். பேருந்தை பிடிக்க ரூமை  பூட்டிவிட்டு  வேகமாய் நடக்கத்தொடங்கினோம். மேலே போட்டிருந்த ஜெர்க்கினையும் தாண்டி குளிர் உலுக்கியது. இந்த மாதிரி சூழ்நிலையில் எப்போதும் என்  பாக்கெட்டிலிருக்கும்   உற்ற நண்பன் "மால்ப்ரோ" உதவுவார். எடுத்து பற்ற வைத்தேன். முதல் இழுவையில் உடல் முழுக்க சூடு பரவி இதமாய் உணர்ந்தேன். இரண்டாம் முறைக்கு வாய்க்குப்பக்கத்தில் கொண்டுபோகையில் தல்பீர் பிடுங்கி விட்டான்.


"பாஸ்..விட்டா இழு இழுனு இழுத்திட்டு வெறும் சாம்பல மட்டும் தான் எனக்கு தருவீங்க.."
 
தல்பீரும் நானும் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொள்வோம். அவனுடன்  நெதர்லாந்து வந்து தான் பழக்கம். சீக்கியன் என்பதால் டர்பன் அணிந்திருப்பான். என்னைத்தவிர அலுவலகத்தில் வேறு யாரிடமும் அதிகம் பேசமாட்டான். மொத்த ப்ராஜெக்ட்டுக்கும் உண்டான சர்வர்களை பராமரிக்கும் டீமில் இவன் தான் முக்கிய புள்ளி. இப்போது பேருந்தை அடைந்து விட்டிருந்தோம். அவன் புட்டத்தில் தட்டி "நீ முதலில் போ" என்றேன். அவன் தலையை ஆட்டி "போன தடவை நான் தானே முதல்ல போனேன்..இன்னைக்கு நீ போ"என்றான். சில வினாடிகள் பஸ்ஸின் படிக்கட்டுக்கு முன்னாடி ரெண்டு பேரும்  முரண்டு செய்து கொண்டிருந்தோம். பின்னாலிருந்து லேசாய் கனைக்கும் சத்தம் கேட்டது. ரோஹன் நின்றிருந்தார். அவர் என்னுடைய மேனேஜர்.

"என்னப்பா எதாவது டாஸ் போட்டு பாத்து முடிவு பண்ணப்போறீங்களா.." என்றார்.

நான் உலகமகா ஜோக்கை கேட்டது போல மீட்டருக்கு மேலே சிரித்தேன். மேனேஜர்கள் வாழைப்பழ ஜோக் சொன்னால் கூட பலாப்பழ அளவுக்கு சிரிக்க வேண்டும் என்கிற ஐ.டி விதியை இந்த ஐந்து வருடத்தில்  உள்வாங்கியிருக்கிறேன் .தல்பீர் பஸ்ஸில் ஏறினான்.நாங்கள் எதிர்பார்த்தது போல கடைசி சீட்டின் வலது மூலை காலியாகவே இருந்தது.தல்பீர் ஜன்னல் ஓரத்திலும் நான் அவனுக்கு அடுத்தும் உட்கார்ந்து கொண்டோம். அவன் கோபமாகவே இருந்தான். நான் திரும்பி "சரி நீ  உட்கார்ந்துக்கோ  ..மாறிக்கலாம்..ஆனா கழுத்த ரொம்ப நீட்டி பாக்கக்கூடாது..நானும் "சன்ரைஸ்"  பாக்கணும்ல" என்றேன். அவன் சிரித்துக்கொண்டே மாறி உட்கார்ந்து கொண்டான்.

ரோஹன் எங்களுக்கு ரெண்டு சீட் முன்னாடி ஒரு ஸ்வெட்டர்  போட்ட பெரியவரிடம் உட்கார்ந்திருந்தார். இந்த  ஸ்வெட்டர்  பார்ட்டி எங்கள் கம்பெனியின் பெரிய தலை. மாதத்துக்கு ஒருமுறை இந்தியாவிலிருந்து வந்து எங்கள் ப்ராஜெக்ட்டின்அப்போதைய தலையெழுத்தை வாசித்து விட்டுப்போவார்.ரோஹன் தன் முழுத்திறமையும் காட்டி பிளேடைப்போட அவரும் இடையிடையே தலையாட்டி ஓத்துழைத்தார்.நான் பொறுமையிழந்த நிலையில் தான் அவர்கள் பேருந்தில் ஏறினார்கள்.முதலில் அவள் தான் வந்தாள்.

அவள் பெயர் மான்ஸ்வி. ஸ்கேர்ட்டும் கோர்ட்டும் போட்டுக்கொண்டு தேவதை போல வந்தாள்.இடது பக்கம் கடைசி சீட்டுக்கு முன்னாடி சீட்டில் ஜன்னலோரம் உட்கார்ந்தாள்.அவள் தலையிலிருந்த க்ளிப்பை எடுத்து கூந்தலுக்கு விடுதலை அளித்தாள்.பிற்பாடு அந்த பியூஸ் கடன்காரனும் வந்தான். அவன் அவள் பக்கத்தில் வந்து அமர்வதற்கும் பேருந்து கிளம்புவதற்கும் சரியாய் இருந்தது.முன்னால் பார்த்தேன் ரோஹன் அமைதியாய் உட்கார்ந்திருந்தார். ஸ்வெட்டர் ஆசாமி வலது பக்கம் குடைசாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.ரோஹனின் தாயுள்ளம் பற்றி எனக்கு தெரியுமாதலால் நான் வியக்கவில்லை.

பியூஸ் ஏதோ சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு ,மானஸ்வியின் தலையில் கொட்டினான். பக்கத்தில் தல்பீர் கடுப்பாகி "உச்" என சொல்லிவிட்டு பஞ்சாபியில் ஏதோ சொன்னான்.பழமொழி போல இருந்தது. பெரும்பாலும் "நாகூர் பிரியாணி..உளுந்தூர்பேட்ட நாய் " வகையறா சிலேடையாய் இருக்கும். என்னயிருந்தாலும் இந்த காதல் காட்சிகளை ரசித்து பார்ப்பதே எங்களின் மானங்கெட்ட பொழுது போக்கு அல்லது எங்களின் "சன்ரைஸ்". கொஞ்ச நேரத்தில் அவள் அவனை கிள்ளினாள்..அவன்,அவள் காதுக்குள் ஏதோ சொல்லி சிரித்தான்.

தல்பீர் என் பக்கத்தில் வந்து "என்னா கெமிஸ்ட்ரி..மத்தியானம் கூட அவன் வந்தப்புறம்  தான் அவ சாப்பிடுறா.."

"ஏன்.. அவ லஞ்ச் பேக் அவன் கிட்ட தான் இருக்குமா.."

தல்பீர் பதிலேதும் சொல்லவில்லை. நல்ல ஜோக் தான். நார்மலான நேரத்தில் கேட்டிருந்தால் லேசாவாவது சிரித்திருப்பான். இப்போது வாயைப்பிளந்து காதல் காட்சிகளை ரசிப்பதால் அவனது நகைச்சுவை உணர்வு மழுங்கி இருக்கலாம். இப்போது அவள் அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். அவன் அவளது விரலுக்கு சொடக்கெடுத்தபடி பேசிக்கொண்டிருந்தான்.மானஸ்வி விளம்பரப்பட ஹீரோயின் போல இருப்பாள். அலுவலக பேச்சிலர்களின் டாப் டார்கெட். பியூஷும் மெத்த படித்தவன், ஜிம் பாடி..எந்த நேரத்திலும் கிழிந்து விடலாம் என்கின்ற நிலையில் டைட்டான சட்டை அணிந்திருப்பான். 
 

தல்பீர் என் பக்கத்தில் வந்து "காலை இப்பிடி ஒரு டிராவல்ல தொடங்கிச்சுனா வேலை பாக்க ஆசையிருக்கும்..அதான் பியூஸ் அத்தனை அவார்ட் வாங்குறான்..எந்நிலைமைய பாரு ..உன் மூஞ்சவே எந்நேரமும் பாத்திட்டே  இருக்கேன்.."

சிரித்தேன். "அப்படி ரொம்ப காஞ்சிருந்தேனா என் விரலுக்கு வேணும்னா சொடக்கு எடுத்துக்கோ.." என என் கையை நீட்டினேன்.காலில் எத்தினான்.பேருந்து அலுவலகத்தை அடைந்திருந்தது. எல்லோரும் இறங்கத்தொடங்கினோம். ரோஹன் என்னைத்தேடியபடி காத்திருந்தார். பெரும்பாலும் அவர் அலுவலுகத்துக்குள் வந்தவுடன் என்னிடம் சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிரச்சனை" என்பதாகவேயிருக்கும். நான் என் லேப்டாப்பை திறப்பதற்குள்  கார்ப்பரேஷன் குப்பை லாரி போல எல்லாத்தையும் கொட்டுவார். நானும் முகத்தை சீரியஸாய் வைத்துக்கொண்டு கேட்டுவிட்டு ,"இந்தா ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்திடுறேன்" என சொல்லிவிட்டு தம்மை போட்டுவிட்டு அரைமணி நேரம் கழித்து வந்து தான் வேலையே தொடங்குவேன்.

ரோஹன் என் தோளில் கையை வைத்து ஓரமாய் கூட்டி வந்தார். தல்பீர் டாட்டா சொல்லிவிட்டு அவன் அறையை நோக்கி நடந்தான்.

"சிவா..கம்பளைண்ட் மாட்யூல் டீம்ல ஒரு பிரச்சனையாம்...பெரிய எஸ்கலேசன் ஆகிடுச்சாம்...நம்ம வேணும்னா  உள்ளே புகுந்து ஹெல்ப் பண்ண முடியுதானு பாப்போமா.."

"ஜி..நம்ம மாட்யூலே நட்டுகிட்டு நிக்குது..இதுல இதுவேறயா..போன வாரம் வீகென்ட் வேல பாத்தோமே ஞாபகம் இருக்கா..நீங்க எதுவும் கமிட் பண்ணிடாதீங்க.. "

இந்தாளு மேலிடத்துல ஸ்கோர் பண்ண, நாமெதுக்கு மெனெக்கெடனும்னு இருந்தது. எனக்கு வர வேண்டிய ப்ரமோஷன் வேறு தள்ளிபோய்க்கொண்டே இருந்தது.

"இல்லப்பா க்ளைன்ட்லாம் ரொம்ப அப்செட்டாம்..நம்ம ப்ராஜெக்ட்டுக்கு பெரிய ப்ரெஸ்ஸர்..நாம தானப்ப ஹெல்ப் பண்ணனும்..."

நான் மசிவதாய் இல்லை. "இந்த ப்ரெஸ்ஸர்..சுகரை எல்லாம் நான் நிறைய பார்த்துவிட்டேன் போங்கடா" என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

"யாரும் மூனு நாளா தூங்கலையாம்..துருவ் ..ப்ரியா ..மான்ஸ்வி..பாவம்ப்பா.."என்றார்.  

 நூறு கிலோமீட்டர் வேகத்தில் போய்க்கொண்டிருந்த கார் பிரேக் அடித்து நிற்பது போல மனசு நின்றது. மானஸ்வி  என்ற பெயர் மெதுவாய் காதுக்குள் ஒலித்தது. 

"சரி ரோஹன்..ப்ராஜெக்ட்டுக்கு ஒரு பிரச்சனைனா அது நமக்கும் தான் பிரச்சனை..நாம இறங்குவோம்.."

"எனக்குத்தெரியும்..நீ ஒரு டீம் மேன் யா" என தோளைத்தட்டினார்.

                                          
                                                                                                                        -தொடரும் 
 

புதன், 18 டிசம்பர், 2019

பிரதி புதன் பேசலாம் -7

ண்ணைத்திறக்க  நிறைய பிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது. இடது கையும்,தோள்பட்டையும்  சுளீரென்று வலித்தது. மயங்கிவிழுவது அவ்வளவு உன்னதமானதல்ல போல. வலது கையில்  ஒரு டுயூப் வழி  "ட்ரிப்ஸ்" ஏறிக்கொண்டிருப்பதையும், படுத்திருக்கும் கட்டிலின் மாடலையும்  பார்த்தவுடன் நான் எங்கிருக்கிறேன் என யூகிக்க முடிந்தது. தவிர மயங்கி விழுந்து கண் திறக்கையில்  ஷாப்பிங் மாலிலோ சரவணா ஸ்டோரிலோ இருக்க வாய்ப்பில்லை. கால் மாட்டில் சென்றாயன் உட்கார்ந்திருந்தான். மொபைலில் கேம் விளையாடிக்கொண்டிருந்தான்.

"இப்போ ஈன்னு சிரிச்சிட்டு உன்னைப் பாத்து  "ஜி" னு சொல்லுவான் பாரு...இந்த 'ஜி'..'ப்ரோ' னு கூப்பிடுறவனையெல்லாம் குண்டாஸ்ல  உள்ள போடணும் ...தமிழ்நாட்ல டெங்குவ  விட வேகமா இந்த நோய் பரவிட்டு இருக்கு  "

                              




எனக்கு பதிலேதும் சொல்லத்தோன்றவில்லை. ஏ.சி கொஞ்சம்  அதிகமாய் இருந்ததால் குளிரியது.தலையை திருப்பி நாலாபுறமும் பார்த்தேன்.

"Parani143$  இந்நேரம்  அவுங்க வீட்டுக்கு போயிருக்கும்...உனக்கு முறைவாசல்  பண்றது அது வேலையில்லை ...பாஸ்வர்டுகள் தள்ளியிருப்பதே யூஸருக்கு நன்று..."

அவர் சொல்லும்வரை உண்மையில் எனக்கு அவள் ஞாபகம் வரவில்லை. நெற்றிப்பொட்டில்  குங்குமம் வைத்த அவள் முகம் கண்முன் வந்தது.  நான் அன்று அந்த அசோக் லேலண்ட் வேலையை விடாமல் இருந்திருந்தால்..அவளின் அப்பாவை ஆண்களின் அந்தரங்க உறுப்பைக்குறிக்கும் கெட்ட வார்த்தை சொல்லித்திட்டாமல் இருந்திருந்தால்... காட்சிகள் ஒருவேளை மாறி இருந்திருக்கலாம். நானும் தினமும் பரணிக்கு டாட்டா சொல்லிவிட்டு, பிள்ளைகளை ஸ்கூலில் விட்டுவிட்டு ஆபீஸ் போய்க்கொண்டிருந்திருப்பேன்.


"ஜி.."

சென்றாயன் மொபைலை விலக்கி தலையை தூக்கி சிரித்துக்கொண்டே என்னைப்பார்த்தான். நானும் லேசாய் சிரிக்க முற்பட்டேன்.

"என்னடா..நீ எப்போ வந்தே.."

"உங்களோட போன்ல இருந்து கால் வந்துச்சு..அவுங்க தான் கூப்பிட்டாங்க..கீழ் வீட்டுக்காரங்க கொடுத்திருப்பாங்கன்னு நினைக்குறேன்... அப்புறம் வீட்டுக்கு வந்து உங்கள அள்ளிட்டு வந்து இங்க போட்ருக்கு..ஜி.. பாத்தா தெரில...ஆனா நீங்க செம்ம கனம்..Bone வெயிட் போல.."

பேசிக்கொண்டிருக்கும்போதே நர்ஸ் வந்து சொட்டு சொட்டாய் விழுந்து கொண்டிருக்கிற  "ட்ரிப்ஸ்" ஸை ஒரு முறை சரி பார்த்தாள். பின் என்னைப்பார்த்து "எழுந்தாச்சா..டீஹைட்ரேசன்...சரியா தூங்கலை போல ... சார் வந்து பார்ப்பார்.. இருங்க " .

சென்றாயன் அவள் பேசுவதை கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தான். அவள் போனவுடன் என் பக்கத்தில்  வந்தான். "ஜி..ஹார்ட் அட்டாக்னா கூட தப்பிச்சிடலாம்... தமிழ்நாட்ல  டீஹைட்ரேஷன்னு அட்மிட் ஆனா அவளோ தான்..எதுக்கும் இங்க சிசிடிவி இருக்கானு பாத்துக்கவா.."

"சென்று...முடிலடா..வாய குறைச்சிட்டு எப்போ டிஸ்சார்ஜ்னு கேளு.."

சிரித்துக்கொண்டே எழுந்து வெளியே சென்றான். எல்லோருக்கும் சிரமம் கொடுப்பதாய்  சங்கடமாய் இருந்தது. யாரேனும் பாலா சாருக்கு சொல்லியிருந்தால்...என் பிரச்சனைகள் அவருக்கு தெரிய வந்தால்...என்ன நினைப்பார்...சங்கடம் தற்சமயம் கொஞ்சம் உப்பி குண்டாகிக்கொண்டிருந்தது. எனக்கு ரகசியங்களை தூக்கிக்கொண்டு அலைவது அவஸ்தையாய்  இருந்தது. சென்றாயன் வந்து " டாக்டர பார்த்திட்டு..ஓகே னா சாயங்காலம் கிளம்பிடலாமாம்.."

"தம்பி இங்க வைப்ரேஷன் நல்லா இருக்கு.. குடியுரிமைச்சட்டம்.. வெங்காயம்..ஹைதராபாத் என்கவுன்டர்னு..இந்த வாரம் வலுவான லைன்அப்.. நாம வேணும்னா இங்கேயே ரெண்டு நாள்..."

பதிலேதும்  நான் பேசவில்லை.



ன்று சாயங்காலமே வீட்டுக்கு வந்துவிட்டோம்.  "Looking For Alaska"வை  கையில் எடுத்து இரண்டாவது முறையாக படித்தேன். பரணி  இரண்டு மூன்று வாட்ஸாப் மெசேஜுகள் அனுப்பியிருந்தாள். எதையும் படிக்கவில்லை. சென்றாயனிடம் என்னைப்பற்றி விசாரித்துக்கொள்வாள் எனத்தோன்றியது.

"இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு..எழுதலாமா..பாஸ்ஸ்...."

  கோபம் தலைக்கேறியது. கண்கள் கலங்கத்தொடங்கியது. ஹெட் போனை தலையில் மாட்டிக்கொண்டு  மொபைலில் பாட்டைப்போட்டேன். முப்பது நொடிகள் வெறும் இசை மட்டுமே வந்து கொண்டிருந்தது. ஏ.ஆர். ரகுமானுக்கு என் அவசரம் புரியவில்லை. ஒருவழியாய் ஸ்ரேயா கோஷல் தன் திருவாய் திறந்தாள்.

"முன்பே வா..என் அன்பே வா...ஊனே வா..உயிரே வா"

"லேப்டாப்பை எடு எழுதலாம்.."

சத்தத்தைக்கூட்டினேன். கோஷல் கிட்டத்தட்ட  காதிற்குள் கத்திக்கொண்டிருந்தாள்.


"நான் நானா
கேட்டேன் என்னை நானே"

லேப்டாப்பைத்திறந்தேன். ஈமெயிலைத்தேடி அதில் தமிழில் எழுதத்தொடங்கினேன்.

"பாலா சாருக்கு,
                                     பிரியமான வணக்கங்கள். உங்களிடம் இனியும் உண்மையை சொல்லாமல் இருப்பதில் நியாயம் இல்லை. உங்களை நான் சில வருடங்கள் முன்னமே பார்த்திருக்கிறேன். ஒரு முறை மலர் மருத்துவமனை வளாகத்தில்..மறுமுறை..செயின்ட் ஆண்டனிஸ் சர்ச்சுல..ஆம்..நானும் அந்த ஆசாமி தான்... உங்ககிட்ட நான் சொன்ன அந்த வாராகி கதையை தவிர்த்து எல்லாமே உண்மை தான்..அவர் தான் "பாலாட்ட போய் இப்பிடி சொல்லு..சாஃப்டான ஆளு..எம்மேல பிரியமான பையன்..நமக்கு சான்ஸ் இருக்குன்னு சொன்னார்..". நான் முதல்ல முடியாதுன்னுட்டேன். அவர் உடனே "இப்போ உன் காதலிய பாக்க திருட்டுத்தனமா தோப்புக்கு போறே..பாம்பு கடிச்சிருது..டாக்டர்ட்ட போயி என்ன சொல்லுவ?..கொல்லைக்கு போனேன் பாம்பு கடிச்சிட்டதுனு தான் சொல்லுவ..டாக்டருக்கு தெரிய வேண்டியது பாம்பு கடிச்சது மட்டும் தான்..நீ எதுக்கு அங்க போனேன்றதில்ல....நீ பொய் சொல்லல..உண்மைக்கு கொஞ்சம் மேக்கப் போட்டு அழகா காட்டுற..அவளோ தான்" னார். சரின்னு இறங்கிட்டேன். 

    ஆனால் எனக்கு குரல் கேட்பதில் எள்ளளவும் பொய்யில்லை. புத்தகங்கள் படித்துக்கொண்டே அவர் பேச்சை காதில் கேட்டுக்கொண்டு  நான் நிம்மதியாய் இருந்திருக்க வேண்டும். அதை விட்டுட்டு இதை வெளியே சொன்னவுடன் தான் என் சிக்கல்கள் அதிகமானது. ஒரு ஆயிர வருசத்துக்கு முன்னாடி எனக்கு குரல் கேக்குதுனு நான் சொல்லிருந்தா என்னை சாமியா கும்பிட்டுருப்பானுங்க..இப்போ அறிவியல் வளர்ந்திருச்சுல அதான் வாய்க்குள்ள ப்ரோலாக்சினை தினுச்சி.."உனக்கு பிரச்சனை..உனக்கு பிரச்சனை" டெய்லி ரெண்டு தடவ ஞாபக படுத்துறானுங்க...அவ்ளோ அறிவியல் புடுங்கிங்கன்னா என்னா மயித்துக்கு மங்கல்யான் விடுறப்போ பூஜை போடுறானுங்க?...செத்துப்போனவுங்களுக்கு திதி கொடுக்குறானுங்க?..திருப்பதில போய் மொட்டை போடுறானுங்க....நமக்கு மேல ஒரு சக்தி இருக்காம்..ஆனால் அது எப்படிப்பட்டதென்று இவர்களே வரையறுத்துக்கொள்வார்களாம்...

அப்பா போட்டோவை வைத்து மாலை போட்டு.. பலகாரங்கள் வைத்து  கண் நனைந்து..கை கூப்பி கும்பிட்டால் அது பாசம். அந்த அப்பா மனம் நெகிழ்ந்து பிள்ளையிடம் பேசினால் அது ஸ்கிட்ஸோஃபிர்னியா..
  
  எனக்கு உள்ளே கேட்கும் குரலை விட வெளியே கேட்கும் குரல்கள் தான் அசௌகர்யம் தருகின்றன. எனக்கு அவர் ஆசான். என் துயரங்களிலிருந்து என்னை வேற்று உலகத்துக்கு அழைத்துச்சென்றவர். நான் மரிக்கயிலேயே அவர் மரிப்பார்..

உங்களை நான் இனி அநேகமாய் சந்திக்கமாட்டேன். குழப்பங்களுக்கு மன்னிக்கவும். உங்களின் மனம் போல நீங்கள் செழுமையாய் வாழ அந்த அரங்கன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

                                                                                                    இப்படிக்கு
                                                                                                       சுந்தர் "



எழுதியதை மீண்டுமொருமுறை படித்துப்பார்த்தேன். இது அச்சுக்கு போவதில்லை என்பதால் மெனெக்கெட தேவையில்லை. அனுப்பினேன் .ஹெட் போனில் " கண்ணில் என்ன கார்காலம்..கன்னங்களில் நீர்க்கோலம்.." என எஸ்.பி.பி உருகிக்கொண்டிருந்தார். பாடலை நிப்பாட்டினேன்.கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. மணியை பார்த்தேன். ஒன்றரை. டாய்லெட் போய்விட்டு வந்தேன். சுடுதண்ணி வைத்து, ஷாம்பூ போட்டுக்குளித்தேன். வீட்டை சுத்தமாய் பெருக்கினேன். எனக்குப் பிடித்த ஸ்கை ப்ளூ சட்டை போட்டுக்கொண்டேன். ஒரு சின்ன பேப்பரில்  பேங்க் அக்கவுண்ட் நம்பரும்..ஏ.டி.ம் பின் நம்பரையும் எழுதினேன்..அதை ஒரு கவரில் போட்டேன்.என்னுடைய மோதிரத்தையும் கழட்டி அதில் போட்டேன். முகப்பில் "TO MY SENDRU" என எழுதினேன். சென்றாயன் ஞாபகம் வந்தான். நாளை எனக்காக அவன் அழுவான். கட்டிக்கொண்டு அழுவான்.அருவி போல அழுவான். எனக்கும் கலங்கியது. தலையை சீவிய பின் மாடிக்கு கிளம்பினேன்.

வாட்ஸாப்பில் பரணிக்கு "அப்பாவிடம் நான் மன்னிப்பு கேட்டதாய் சொல்லிவிடு" என அனுப்பினேன். மொட்டைமாடி ஜிலுஜிலுவென இருந்தது. இடிஇடித்துக்கொண்டிருந்தது. தாமதிக்க விரும்பவில்லை. தடுப்புச்சுவர் மேலே ஏறினேன். சென்னை இரவில் ரம்மியமாய் இருந்தது.முகத்தில் குளிர்ந்த காற்று மோதியது. ஒரு காலை தூக்கி...இதயம் படபடத்தது. கடவுளே வலிக்காமல் கூட்டிச்செல் என மனதிற்குள் நினைத்துக்கொண்டே தாவ தயாரானேன். 

"டேய்..அபஸ்வரம்..முதல்ல கீழ இறங்கு.."

குரல் பின்னாளில் இருந்து வந்தது. அதிர்ச்சியாய் திரும்பிப்பார்த்தேன். அவர் சிரித்தபடி  நின்று கொண்டிருந்தார். அவரே தான்.. சுஜாதா சார்..வகிடெடுத்து சீவிய தலை..டக் இன் பண்ணிய பேண்ட் சட்டை..கம்பீரமான கூன்.. 

இறங்கினேன். கண்ணிமைக்காமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். கும்பிட்டேன். மழை பெய்யத்தொடங்கியது.




                   ----------------முற்றும் ------------------------









புதன், 11 டிசம்பர், 2019

பிரதி புதன் பேசலாம் -6

யக்கமெனப்படுவது ஒரு உன்னத நிலை. நம் உடலின் மேல் மூளை செலுத்தும் ஆதிக்கம் விடுவிக்கப்படும். புவியீர்ப்பு விசையையெல்லாம் புறந்தள்ளி, நம் மனது ஒரு முடிவிலியை நோக்கிப்பயணம் செய்யும். கால்கள் இருப்பதாய் எனக்கு உணர்வில்லை.  பரணி ஏதோ சொல்லி கத்துகிறாள். எனக்கேதும் சரியாய் கேட்கவில்லை. "சுந்....பார்த்  ..கீ .."  ஏதோ கிணற்றுக்கடியிலிருந்து  பேசுவது போல இருந்தது.  நிறைய அழுக்கடைந்த ஃபேன், சுவற்றின் வலது ஓரத்தில் ஒட்டப்பட்டிருக்கும் சாமி படம் என என் வீட்டில் நானே கவனித்து பார்க்காதவையெல்லாம் கண்ணுக்குத்தெரிந்தது.  அதற்கப்புறம் ஓரிரு நொடியில் முழுமையாய்  மயங்கி கீழே விழுந்தேன். ஆனால் "விழு" விற்கும்  "ந்தேன்" னிற்கும்  நடுவே பழைய காட்சிகள் எனக்குள் ஓடியது. 

                           --------------------------------------------------- 




வெங்கடேசன் என சுவற்றின் ஓரத்தில் ஒரு  போர்ட்டில்  எழுதியிருந்தது. கீழே " M.B.B.S  M.D (Psychiatry)" என சின்ன எழுத்தில் போடப்பட்டிருந்தது. நானும் பரணியும் இரண்டாவது வரிசையில் உட்கார்ந்திருந்தோம். முதல் வரிசையில் ஒரு பதினாலுவயது பையன் குடும்பத்துடன் உட்கார்ந்திருந்தான். தலையில் கட்டுப்போட்டிருந்தான். லேசாய் திரும்பி என்னைப்பார்த்து சிரித்தான். நான் திரும்பிக்கொண்டேன். எனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. எல்லோரும் என்னையே பார்த்து சிரிப்பது போல இருந்தது. நான் பார்த்தவுடன் சிரிப்பை மறைத்துக்கொள்கிறார்கள்.
பரணி என் கையை அழுத்தி  "என்ன?" என்றாள். இல்லையென தலையசைத்தேன். என்னை சந்தேகமாய் பார்த்தாள். வாரத்துக்கு ஒரு முறை இந்த ஏ.சி போட்ட நரகத்துக்கு நான் வரக்காரணம் இவள் தான். ஒரு பெல் சத்தம் கேட்டது.  ரிசப்ஷனில் இருந்த பெண்  என்னைப் பார்த்து  "உள்ளே" என்பது போல விரலைக்காட்டினாள். அவள் சிரிப்பது போல இருந்தது ,திரும்ப பார்த்தேன். சிரிக்கவில்லை. நானும்  பரணியும்  உள்ளே போனோம் .

"சுந்தர்..அதற்குள்ளாட்டியும் ஒரு வாரம் போயிட்டதா.."

வெங்கட் சாருக்கு தாடி மட்டும் வெள்ளையாய் இருந்தது. சேரில் அவர் முன் உட்கார்ந்தோம்.அவர் டிகிரியையெல்லாம் காட்டத்தேவையில்லை, முகத்தை வைத்தே டாக்டர் என சொல்லிவிடலாம். நம் கண்களுக்குள் ஊடுருவுவது போல பார்ப்பார். எப்போதும் போல யதார்த்தமாய் அம்பை எய்தார்.

" கடைசியா எத்தினி  நாளா ப்ரோலாக்சின் சாப்பிடல.. ரெண்டு மூனு நாளா தூங்கல போலையே.."  

சொல்லிவிட்டு என்னையே பார்த்தார். அந்த கண்களை ஏமாற்ற முடியாது. முழியாங்கண்கள்.

"இல்ல சார்..வாமிட் வர மாதிரி இருந்தது..அதான் ரெண்டு நாள் மட்டும் ..."

பரணி என்னை அல்கொய்தா தீவிரவாதி போல முறைத்துப்பார்த்தாள். வெளியே போனபின் ஒரு மணி நேரம் பேசப்போகிறாள். இடையிடையே அழுவாள். அதுக்கு கசந்து கிடக்கும் ப்ரோலாக்சின் எவ்வளவோ பரவாயில்லை.

"சுந்தர்...நீ ஸ்கூல்  பையன் இல்லை..ஸ்கிட்ஸோஃபிர்னியா  பற்றி உன்கிட்ட நூறு தடவை சொல்லியாச்சு...அதுவும் மோசமான மெடிக்கல் டிஸிப்ளினும் சேர்ந்தா டெட்லி காம்பினேஷன்... "

வாத்தியார் திட்டும்போது ஸ்கூல் பையன் செய்வது போல குனிந்து கொண்டேன். பரணியின் கண்கள் அழுவதற்கு வார்ம் அப் ஆகிக்கொண்டிருந்தன. 

"சார்..இனிமே கரெக்ட்டா..."

சொல்லி முடிப்பதற்குள் "நம்ம ரொட்டீனுக்கு போவோம்.."

சரியென தலையாட்டினேன். "ரொட்டீன்"  என்றால் பிரச்சனையென சொல்லப்படுகிற விஷயத்திலிருந்து நான்  பேசத்தொடங்க வேண்டும்..இடையிடையே குறுக்கிட்டு வெங்கட் சார் பேசுவார். பேச பேசத்தான் எது உண்மை எது ஆடிட்டரி ஹெல்லோசினேஷன் என புரியவருமாம்.  எனக்கு மிகவும் சிரமம் கொடுக்கிற முப்பது நிமிடங்கள் அவை. வெங்கட் சார் என் மூளைக்குள் இறங்கி  சிவன் போல உடுக்கை அடித்து ருத்ர தாண்டவம் ஆடுவார். நான் ஆரம்பித்தேன்.



"வேர்ல்டு கப் ஜெயிச்ச  அன்னைக்கு  நைட்ல இருந்து தான் என் கூட பேச ஆரம்பிச்சார்.."

"குரல் கேட்க ஆரம்பிச்சது.."

"ம்..குரல் கேட்க ஆரம்பிச்சது...தோணி தான் அடுத்து வருவான்னு சொன்னார்..அப்படியே நடந்துச்சு..ஒரு அசரிரீ மாதிரி அப்போ தான் பேசத்தொடங்கினார்..நைட் தான் பேசுவார்...என்னால உறுதியா சொல்ல முடியும் அது சுஜாதா சார் தான்.."

"அதெப்படி சொல்றீங்க.."

"குரல்ல விடுங்க..பேசுற விஷயம் கேளுங்க..சயின்ஸ்..புத்தகங்கள் ..பத்திரிக்கை..அரசியல்..உளவியல்.."

"ஸ்லோ..ஸ்லோ..அவர எப்போலிருந்து இருந்து தெரியும்...ஐ மீன் எப்போலிருந்து படிச்சே.. " 

அதுவரை எல்லாம் யோசித்து பேசிக்கொண்டிருந்தேன். அந்த நொடி என் நாக்கும் ,மூளையும் சுதந்திரம் பெற்று சுயேட்சையாய் ஆகின.வெங்கட் சாரை கண்ணுக்கு நேராய் பார்த்தேன். அவருக்குத்தெரியும் அப்போது வாடி வாசல் திறக்கப்பட்டு விட்டதென்று. 

" 'கரையெல்லாம் செண்பகப்பூ' தான் முதல்ல படிச்சேன்..அப்போ எனக்கு பதினேழு வயசு..ஜிவ்வுனு இருந்துச்சு நேரேஷன்..ஏதோ நம்ம கண்ணு முன்னாடியே நடக்குற மாதிரி இருக்கும்...புக்க கீழ வைக்க முடில..அப்பிடியே என் இனிய இயந்திரா...கொலையுதிர் காலம்..பிரிவோம் சிந்திப்போம்..மீண்டும் ஜூனோ.. சொல்லிட்டே போகலாம் "

உதடு துடித்தது. நெஞ்சம் பட படவென இருந்தது. 

"லைப்ரரில இருந்து ரெண்டு புக்க எடுத்துட்டு வந்து வச்சுக்கிட்டா போதும் ,அந்த ஒரு நாள் எப்படி போகும்னே தெரியாது..சில நேரம் எப்படி ஒரு மனுஷ மூளை இப்படி யோசிக்க முடியுதுனு வியப்பா இருக்கும்.. "

"அவரோட புக்ஸ்  கிட்டத்தட்ட எல்லாம் படிச்சாச்சுல்ல.."

"ம்ம்.."

ஒரு பேப்பரை கையில் எடுத்து திருப்பி, எதையோ தேடினார்.பரணியையும் ஒரு முறை பார்த்துக்கொண்டார்.

" 'ஏன் எதற்கு எப்படி'ல ஒரு கேள்வி சொல்றேன்..ஞாபகம் வருதா பார்..'திருக்குறளில் காமத்துப்பால் பகுதியை பத்தாவதுக்கு மேலாவது பாடத்திட்டத்தில் சேர்க்கலாமே?'..இதுக்கு அவர் சொன்ன பதில் ஞாபகம் இருக்கா.. " 
 
சிரித்தேன். அவர் சொன்ன பதிலை நினைக்கையில் சிரிப்பு வந்தது. சொன்னேன்.

"சேர்க்கலாம் தான் . ஆனால்  'விளக்கற்றம் பார்க்கும் இருளே போல் ,கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு' போன்ற குறள்களை சொல்லிக்கொடுக்க டீச்சர் என்ன செய்வார்?..விளக்கை அனைத்து விட்டு இருளுக்கு காத்திருப்பது போல ..கணவனின் அணைப்புக்கு காத்திருக்கிறது பசலை..என்றால் வகுப்பு  சற்று டென்ஷன் ஆகிவிடாதா?.."

அவரும் சிரித்தார். கண்ணாடியை சுழற்றி டேபிள் மேலே வைத்தார்.

"சுந்தர்...இப்போ சிலது  யோசிப்போம்..உனக்கு கேக்குற சுஜாதா  சொல்ற விஷயம் ஏதும் உனக்கு ஏற்கனவே தெரியாததா இருக்கா...  உதாரணமா நீ அவர் சொன்னதா சொன்ன கர்னல் கதாபத்திரமும்..ஒன் ஹண்ட்ரேடு இயர்ஸ் ஆஃப் ஸால்டிடூட் புத்தகமும்..உனக்கு ஏற்கனவே பரிட்சயம் ஆனவை..உனக்கு தெரிந்தவையை  தான் அந்த குரல் உனக்கு சொல்லுது..இன் அதர் வேர்ட்ஸ் அந்த குரல் உன்னோடது...வீட்ல பெரியவுங்க யாரும் இல்லை..சின்ன வயசுலயே நிறைய சோகம்..உனக்கு ஒரு ஆதர்ச நாயகன் கிடைக்கிறார்..அவரே உன்னோட வாழ்க்கையோட மையப்புள்ளியா நினைக்கிற..அவர் இல்லாதத உன்னால ஏத்துக்க  முடில..நிறைய தனிமை..சோகம் .. தூக்கமின்மை..கிளாசிக் கேஸ் ஆஃப் ஸ்கிட்ஸோஃபிர்னியா..சிலருக்கு உருவம் தெரியும்..உனக்குக்குரல்...ஜஸ்ட் மேக் பீஸ் வித் ஹிஸ் ஆப்சென்ஸ் "



அந்த நொடியில் வெங்கட் சாரை தலையில் நாலு குத்து விட்டு, அண்டர்டேக்கர் தூக்கிப்போடுவது போல தூக்கிப்போட வேண்டும் போல இருந்தது. அதற்கு மேல் எதுவும் பேச எனக்குத் தோன்றவில்லை.நல்லவேளை அதை  சொல்லவில்லை என்று நினைத்துக் கொண்டேன். சுஜாதா சீரியஸாய் ஆஸ்பத்திரியில் இருந்த போது  அவரை பார்க்க ஒரு வாரம் லீவ் போட்டேன். வாசலிலேயே நின்று கொள்வேன். உள்ளே விட மாட்டார்கள் .கடைசியாய் ஐ.சி.யூ வில் பார்த்துக்கொள்ளும் ஒரு நர்ஸ் கிடைத்தாள். அவள் தினமும் அவரைப்பற்றி சொல்லுவாள். நான் கொடுக்கும் பிரசாதங்களை தலை மாட்டில் வைக்கச்சொல்லுவேன். டெய்லி அவர் புக்ல சொன்ன ஆழ்வார் பாசுரம் கூட சொல்லுவேன்..ம்ஹும்..ஒன்னும் காப்பாத்தல..பெசன்ட் நகர் சுடுகாடு வரைக்கும் போனேன்..தொண்டையெல்லாம் அடைக்குது..பைக்க எடுக்குறப்பவே கொஞ்சம் வெயிட்டா இருந்துச்சு..யாரோ பின்னாடி உட்கார்ந்த மாதிரி தான் இருந்தது.. அப்புறம் ஒரு வருஷம் இடையிடையே பேசுற மாதிரி கேக்கும்..நான் பெருசா எடுத்துக்கலை. எல்லாவற்றையும் சொல்லியிருந்தால் வெங்கட் சாரும் ,பரணியும் எனக்கு பச்சை சட்டை கொடுத்து பாண்டி மடத்தில் சேர்த்து விட்டிருப்பார்கள்.ஆனால் ஒன்று நிஜம் அவர் இறந்த அந்த நொடியில் என் உடலில் ஒரு அதிர்விருந்தது..யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் எனக்கு கவலையில்லை..


"சுந்தர்..இன்னைக்கு போதும்..மாத்திரை டோஸ் விடக்கூடாது..ஐ சீ சம் இம்ப்ரரூவ்மென்ட்..இங்க சென்னைல ஸ்கிட்ஸோஃபிர்னியா காரங்களுக்கு ஒரு கவுன்சலிங் சென்டர் இருக்கு...செயின்ட் ஆண்டனிஸ் சர்ச்சுல ஒவ்வொரு சனிக்கிழமை சாயங்காலமும் நடக்கும் ..ஃப்ரீ தான்... அதுல குணமானவங்க கூட வந்து லெக்ச்சர் தராங்களாம்..பிரைவசி  இருக்காம்..நீங்க வேணா ட்ரை பண்ணி பாருங்க..நான் ஸ்டிபனுக்கு சொல்லிடுறேன்.."

கையில் ஒரு கார்டை கொடுத்தார். வெளியே வந்தோம். எனக்கு விடுதலை அடைந்தது போல இருந்தது. இருந்தும் முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டேன். பரணி என்னை பார்த்து விட்டு துப்பட்டாவின் நுனியை கையில் வைத்து சுத்திக்கொண்டே நடந்து வந்தாள். எந்த நேரமும் தாக்குதல் வரலாமென காத்திருந்தேன். லிஃப்டில் ஏறினோம். எண் பூஜ்யத்தை  அழுத்தினேன். கதவு மூடுவதற்கும்  பரணி என்னைக்கட்டிபிடிப்பதற்கும்  சரியாய் இருந்தது. அவளின் கண்களும் பருக்களும் மிகப்பக்கத்தில் இருந்தது. ஒரே நொடியில் உடலின் அத்தனை நரம்புகளும் "ப்ரெசென்ட் சார்" சொன்னது. மேக்சி பெர்ஃப்யூம் வாடை என்னை கிறங்கடித்தது.   இவள் எப்போது அழுவாள்..எப்போது அணைப்பாள் என்பது என் சிற்றறிவுக்கு அப்பாற்பட்டது. ஏற்கனவே வேகமாய் துடித்துக்கொண்டிருந்த இதயம் சில இடி பாடுகளால்  இன்னும் வேகம் பிடித்தது. பக்கத்தில் வந்து  உதட்டில் முத்தமிட்டாள்.  லிஃப்ட்  சத்தமிட்டது. சட்டென இருவரும் தனி தனியாய் பிரிந்து நின்றோம். தரைத்தளம் வந்து விட்டது.  ஆஸ்பத்திரி  இன்னும் பெரிய பில்டிங்கில் இருந்திருக்கலாம் என தோன்றியது.

பைக்கில் பின்னால் உட்காருகையில் பரணி "சுந்தர்...மறக்காம இந்த சனிக்கிழமை கவுன்சிலிங் போ..ப்ளீஸ் எனக்காக.." என்றாள். அப்புறமும் நான் போகவில்லையென்றால் ஆதாம் என் கனவில் வந்து காரி துப்பியிருப்பார்.

                       ******************************



ர்ச் மிகவும் பழைய கட்டிடமாய் இருந்தது. வெங்கட் சார் கொடுத்த கார்டை காண்பித்தேன். உள்ளே விட்டார்கள்.வாசலில் ஒரு குல்லா கொடுத்தார்கள். அதை போட்டுக்கொண்டால் கண்ணைத்தவிர வேறேதும் முகத்தில் தெரியவில்லை. பிரைவசி போல என எண்ணிக்கொண்டேன்.மொத்தமாய் ஒரு இருபது பேர் வந்திருப்போம். ஸ்டீபன்  இளமையாய் இருந்தார். கையில் ஜெப மாலையும் பைபிளும்  வைத்திருந்தார். வட்டமாய் சேர்கள் போடப்பட்டு அதில் உட்கார்ந்திருந்தோம். ஸ்டீபன்  கையில் வைத்திருந்த மைக்கில் பேசத்தொடங்கினார். 

"ஸ்தோத்திரம் ஆண்டவரே..ஸ்தோத்திரம்..இறைவனின் ஜெபப்பாடலுடன் தொடங்குவோம்..."

ஸ்டீபனுடன் சேர்ந்து சில குல்லா போட்டவர்களும்  இயேசுவை துதித்து பாடினர். மதம் மாறினால் உங்களின் அத்துணை பிரச்சனைகளும் போய்விடும் என்று சொல்லிவிடுவார்களோ என பயந்தேன்.

"இறைவனின் இருப்பிடத்தில் நாமெல்லாம் பிள்ளைகளே..நோயாளிகள் இல்லை..நீங்கள் ஒவ்வொருவரும்  அதீத திறமைசாலிகள்..நல்ல கற்பனையாளனுக்கே காட்சிகள் புலப்படும் ...மென்மையான மனமே எளிதில் காயம் பெரும்..நீங்கள் ஒவ்வொருவரும் ரத்தினங்கள்.."

உண்மையோ பொய்யோ "ஒன்னும் பிரச்சனையில்லை" என யாராவது சொல்லவேண்டும் என மனம் ஏங்கித்தவிக்கிறது. மைக் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டு அவரவர் கதைகளைக்கூறினார்கள். ஒருத்தர் தன்னை சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பு கொள்ள முயல்வது போல இருந்ததாக கூறினார். ஒருத்தர் காக்காக்களெல்லாம் கூட்டம் சேர்ந்து தன்னை கொல்ல முயன்றது போல கற்பனை வந்தது பற்றி சொன்னார். எதற்கு முகத்தை மறைக்கும் குல்லாவென புரிந்தது. முகம் தெரியாத போது பேச தயக்கம் இல்லை. எனக்கு அடுத்திருந்த பெரியவரிடம் மைக் வந்தது.

"அம்மாளுக்கு தொண்ணூறு வயசு தான்..ஆனா தாங்க முடில..காலைல எழுந்த போது தான் பாத்தோம்..தூக்கத்துலயே உயிர் போயிருக்கு...தினமும் காலை தொட்டுக்கும்பிட்டு தான் ஆபீஸ்க்கு போவேன்..சின்னவனே..சின்னவனேனு கன்னத்த பிடிச்சு கொஞ்சுவா..சடங்குலாம் முடிச்சிட்டு ரெண்டு நாள் பொறுத்து மாடில ஒரு சத்தம்...போறேன்..அவ ரூம்ல அவ உட்கார்ந்திருக்கா..அச்சு அசலா அவளே தான்..சின்னவனே நேத்து ஏன்டா மேல வரலனு கேட்குறா... கார்ல கூட தெரிறா.."

பேச்சைத்தொடர முடியாமல் அழுதார். உடல் குலுங்கி குலுங்கி அழுதார். சேரில் இருந்து கீழே இறங்கி தரையில் உட்கார்ந்து அழுதார். நான் அவரை கைத்தாங்கலாய் பிடித்து வெளியே கூட்டி வந்தேன். வெளியே காற்று பலமாய் அடித்துக்கொண்டிருந்தது. இருவர் மட்டும் தான் அங்கிருந்தோம்.பேண்ட் பாக்கெட்டில் எதையோ  தேடினார். ஆஸ்த்மா இன்ஹலர் எடுத்தார். "வீஸிங் சார்" என்றார். தலையிலிருந்த குல்லாவை கழட்டி மிஷினை மூக்கில் வைத்து சுவாசித்தார். உயரமாய் இருந்தார். முன் வழுக்கை. முகத்தை அப்போது தான் பார்த்தேன். அவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன். ம்ம்..அப்பல்லோ ஆஸ்பத்தரியில் ..அவரே தான்..பாலகுரு.  
 


புதன், 4 டிசம்பர், 2019

பிரதி புதன் பேசலாம் -5

"அந்த நொடியில் அவளுக்கு அவளின் அப்பா தினமும் காலையில் நெற்றியில் கொடுக்கும் முத்தம் ஞாபகம் வந்திருக்கலாம் அல்லது தாங்கமுடியாத வலி எல்லாவற்றையும் கீழமுக்கி கருணையில்லாமல் அவளை இழுத்துக்கொண்டு போயிருக்கலாம். அந்தக்கொடிக்கம்பம் இரண்டு நொடி தள்ளி விழுந்திருந்தால் ஜெயஸ்ரீ இந்நேரம் யூடூபில் தான் மேற்படிப்புக்கு போகப்போகிற டொராண்டோ பற்றி பார்த்துக்கொண்டிருப்பாள். ஒரு லாரி தன்  மேலேறி தன்னை சிதைத்து உயிரைப்பறிக்கும் அளவுக்கு அவள் என்ன செய்தாள். மாதாமாதம் கொடுக்கிற சம்பளத்தில் வரி பிடித்துக்கொண்டார்கள். வரிசையில் நின்று ஆதார் கார்டு வாங்க  சொன்னார்கள். செய்தாள். லைசன்ஸ் வாங்கினாள். சாலை வரி கட்டினாள்.ஹெல்மெட் போட்டாள். அவள் வேறேதும் செய்திருக்க முடியாது. கழுவியபின் துடைக்கக் கூட வக்கில்லாத இந்த கட்சிக்கொடிகளை  ரோட்டின் நடுவில் வைக்காமல் இருந்திருக்கலாம். ரோடெல்லாம் விரவிக்கிடக்கும் பள்ளங்களில் அமைச்சர்களின் தலையிலிருக்கும் களிமண்களைப்போட்டு நொப்பியிருக்கலாம். குறிக்கோளில்லாமல் கட்டப்படும் பாலங்களை  நேரத்துக்கு கட்டி முடிந்திருக்கலாம். ஆக்கிரமிப்புகளை அகற்றும் நேர்மையும் ,துணிவும் ஆட்சியாளர்களுக்கு இருந்திருக்கலாம். ரிஸார்ட்டுகளில் ஆட்சியை தீர்மானிப்பவர்களையும், பரம்பரை பரம்பரையாய் கொள்ளை அடிப்பவர்களையும்  காரி துப்ப முடியாவிட்டாலும்   குறைந்த பட்சம் ஓட்டாவது போடாமல் நாம் இருந்திருக்கலாம். அந்த லாரி மட்டும் அவள் உயிரை பறிக்கவில்லை . நம் எல்லாருடைய மொத்த ஒழுங்கீனம் தான் அவளைக்கொன்றிருக்கிறது. செய்தியை படித்தவுடன் அரை மணி நேர கோபம், ரெண்டு நாள் அதன் தாக்கம், அதன் பின்  தல தளபதி சண்டை, டிவி சிறப்பு நிகழ்ச்சிகள், பேஸ்புக் கேலிகள்,  கிரிக்கெட் ..கடைசியாய் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய். அவர்களை மெரினாவில் புதைக்க ... நாம்  தினமும் சாவோம்."






இரண்டாவது முறையாய்  படித்துப்பார்த்துக்கொண்டேன். வடபழனி ஸ்டேஷனில் எனக்குத் தனியாய் ஒரு சேர் கொடுத்து உட்கார வைத்திருந்தார்கள். போலீஸ் ஸ்டேஷன் சினிமாவில் காட்டுவது போலில்லை. பெயிண்ட் புதிதாய் அடித்திருந்தார்கள். எல்லோரும் மரியாதையாய்  பேசினார்கள். அடிக்கடி "டீ" கொடுத்தார்கள். ஆயிரம் தான் இருந்தாலும் பேனாவின் நுனிக்கு துப்பாக்கியை விட வலு அதிகம் என எண்ணிக்கொண்டேன்.

"ஒரு டேஷும் கிடையாது..இந்நேரம் பாலா டிவிக்கு நியூஸ் கொடுத்திருப்பான்..  தமிழ்நாடு முழுக்க உன்னோட அந்த சுமாரான மூஞ்சி டிவியில் ஓடிட்டு இருக்கும்...தலை முடி கலஞ்சிருந்தாலும்  அத வச்சு மூனு மணி நேரம் கிழிப்பானுங்க.."


அவ்வளவு சத்தத்திலும் இவர் கனீரென காதுக்குள் ஒளித்தார்.

"சார் இப்போலாம் மைண்ட் வாய்ஸுக்கே பதில் பேசுறீங்க...விஷயம் வாஸ்தவம்னாலும்  எழுத்துல கொஞ்சம் வன்முறை ஒரு பாயிண்ட் கூடின மாதிரி இருக்குல்ல..நீங்களே யோசிச்சு பாருங்க.."

"இருக்கலாம்..நானே எழுதிருந்தா இப்படி எழுதியிருக்க மாட்டேனோ என்னவோ..ஆனா கண்டிப்பா தோணிருக்கும்..இப்போ நீ தான..அதான் ஃப்ரீ  ஹிட்ல அடிக்கிற மாதிரி இஷ்டத்துக்கு ஆடறேன்..தேங்க்ஸ்  டூ ரெங்கன்..


எனக்கு பெரிதாய் எதுவும் பயமாய் இல்லை. நேற்று வரை பரதேசியாய் சுத்திக்கொண்டிருந்தேன், இன்று என் போட்டோவை காட்டினால் நிறைய பேர் என்  பெயர் சொல்வார்கள். மக்களை கவனிக்க வைக்க ஒரு பப்ளிசிட்டி தேவைப்படுகிறது. இனிமேல் ரெண்டு நாளுக்கு ஒருக்க ஷேவ் செய்யனும்..வேண்டாம்..தாடி வச்சுக்கிட்டு..கண்டபடி முடிய வச்சுக்கிட்டாத்தான் ஒரு "போராளி" லுக் வரும். சென்ராயனை என் பெயரில் ஒரு ஃபேஸ்புக் க்ரூப் ஆரம்பிக்க சொல்லணும். மனம் காட்டாறு போல ஓடிக்கொண்டிருந்தது. 


இன்ஸ்பெக்டர் தன் மொபைலை இடது கையில் பிடித்துக்கொண்டு அதன் வாயை பொத்தியவாறே என்னை நோக்கி வந்தார். அவ்வளவு உயரம் இல்லை.ஷூவின் நிறத்தை கணிக்க முடியாத படி அழுக்காய் இருந்தது. சட்டையில் நாலாவது பட்டன் திறந்திருந்தது ,அதன் வழி வெள்ளைப்பனியன் தெரிந்தது."சார் ..பேசுறார்.." என்றார்.

"எந்த சார்ங்க.."

"ஸ்டேட் அட்டர்னி.."

"..ன்னாது..மார்க் ஆன்டனியா..அது யாரு.."

"சார் விளையாடாதீங்க..அரசு வக்கீல்..."

முதலில் சொன்னதே கேட்டது தான். எப்படியும் பாலா சார் வந்து விடுவார் என்று தோணியதாலோ என்னவோ கொஞ்சம் திண்ணக்கமாய் இருந்தேன். நானேதும் சொல்லாததால் இன்ஸ்பெக்டர் மீண்டும் பேசினார். 

"கோபத்துல இருக்கீங்க புரியுது.. அவர்ட்ட பேசி சால்வ் ஆவுங்க..சார் பக்கவா எல்லா சைடுக்கும் தோதா முடிப்பார்..பேசுங்க" 

"வாங்காதே..ஏதோ சிக்கல் இருக்கு...பாலாவும்  ..என் வக்கீலும் வந்தப்புறம் பேசுறேன்ன்னு சொல்லு.." 
  
அதற்குள் போனை கையில் திணித்தார். ஸ்டேட் அட்டார்னி சுப்ரமணிக்கு ஒரு பீங்கான்  வாய்ஸ்.  கவுதம் மேனன் பேசுவது போல இருந்தது. பாதி இங்கிலிஷ் பாதி தமிழ். தமிழும் இங்கிலிஷ் போலத்தான்  இருந்தது.




"மார்னிங்  ர..ரங்கன்.. உங்க பேரு வேற ஏதோ சொன்னாங்க ..ஐ கம்ப்ளீட்லி பஃர்காட்..  லெட்ஸ்  டாக் அபௌட்  த இஸ்ஸு இன் ஹேண்ட்..படிச்சேன்..உங்களுக்கே தெரியும் நீங்க அவுட் ஆஃப் லைன்ல எழுதிட்டீங்க..செடிஸன் லா 124 -ஏ  வ புடிச்சோம்னா உங்கள ஒன் இயர் வரைக்கும் உள்ள வைக்கலாம்...அஃரெஸ்ஸிவ் லாங்க்வேஜ்..Reputation ஐ டேமேஜ்  பண்ணினதுனு ..பெயிலே கொடுக்க முடியாத படி பண்ணலாம் .. இது ட்ரயலுக்கு போச்சுன்னா உங்களுக்கு தான் தலைவலி...ஆர் யூ வித் மி.."

"ஸோ.."

"ஒரு மன்னிப்பு கடிதம் முதல் பக்கத்துல போடச்சொல்லுங்க.."உணர்வுகளின் உந்துதலில்..." அப்படி..இப்படினு இன்டைரக்ட்டா மன்னிப்புக்கேட்டாலும் ஓகே தான்..இனி எந்த எபிசோடுலயும் கவர்மெண்ட்ட டார்கெட் பண்ணக்கூடாது...அவுட் ஆஃப் கோர்ட் முடிச்சிக்கலாம்..ஏன்னா இத பாத்திட்டு எல்லாதுக்கும் கொம்பு முளைச்சிடும்னு பெரியவர் யோசிக்கிறார்.."

"பேசாதே..பாலா வரட்டும்னு சொல்லு..இட்ஸ் எ  ட்ராப் "

"மன்னிக்கணும் உங்களுக்கு  இந்த வாரத்துலயே ஹை கோர்ட்ல இது மூனாவது கேசு தானே சுப்பு சார்.. ஸ்பெசல் பெஞ்ச்..ஜட்ஜ் ..யாருக்குமே உங்கள பிடிக்காது...ஊரே அந்த விஷயத்துல கோபமா இருக்கு..குற்றவாளிய பிடிக்க பத்து நாளாச்சு..எதிர்த்து எழுதுனவன உடனே பிடிச்சாச்சு...எனக்குத்தெரிஞ்சு உங்களுக்கு ஜட்ஜ் ஸ்பாட்லயே அவார்டு கொடுத்தாலும் கொடுப்பாரு ..குடும்பத்தோடு வந்துருங்க.."

போன் கட்டானது.  சுப்பிரமணிக்கு கண்டிப்பாய் என்னையேதும் செய்ய முடியாதென்று தெரியும். கமலம் ஏழு பத்திரிகைகள், ரெண்டு டி.வி சேனல்  என தமிழத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. பாலா இந்நேரம் கபில் சிபல், அபிஷேக் சிங்க்வி யுடன் பேசியிருப்பார். சுப்பிரமணி கவுதம் மேனனென்றால் , பாலா சாரிடம் கிறிஸ்டோபர் நோலன்கள் இருந்தார்கள்.

"புத்திசாலித்தனமா பேசினதா நினைக்காத..உள்ள போட்டு கக்கத்துல மிதிச்சா என்ன பண்ணுவ..மிஷன்ல இருந்து டீவியேட் ஆகாத...எழுதுறது நம்ம வேலை..அதுல எதுவும் தடைகள் வந்ததுனா..அதை பாத்துக்கிறது பாலா வேலை..நாம அவரவர் வேலய பாப்போம் .."

கொட்டாவி வருவது போல இருந்தது. ஆர்மபித்தால் நிப்பாட்ட மாட்டார். இதுக்கு ஒரு ம்யூட் பட்டன் இல்லாமல் போய்விட்டது.

"இரத்தம் ஒரே நிறம் எழுதறப்போ..ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரங்க பிரச்சனை பண்றாங்க..நான் ஆவணங்கள வச்சு எழுதுறேன்னு சொல்றேன் ..யாரும் கேட்கத்தயாரால்ல ...குமுதம் ஆபிச சூறையாடுறாங்க..கடைசி ஈகோ பாக்காம சில விஷயங்கள விட்டுக்கொடுத்தேன்..அதுனால தான் சிப்பாய் கலகத்த பத்தி அந்த நாவல்ல பதிவு செய்ய முடிஞ்சது.."   


அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் பாலகுரு சார்  இரண்டு மூன்று  நபர்களுடன் வந்தார். இன்ஸ்பெக்டருடன் பேசினார்கள். ஏதேதோ ஆவணங்களை நீட்டினார்கள்,பார்த்தார்கள். பாலகுரு என்னைப்பார்த்து கையாட்டினார். நான் வேகமாய் அவர் பக்கத்தில் போனேன். இரண்டு பேப்பர்களில் கையெழுத்து போடச்சொன்னார்கள், படித்து பார்த்தேன். அதற்குள் பாலகுரு கையை அழுத்தினார். கையெழுத்துப்போட்டேன்.   சார் கூட வந்த வக்கீல்களில் ஒருத்தர் என்னைப்பார்த்து "ஸ்டேஷன்ல யாரும் FOUL லாங்குவேஜ் பேசுனாங்களா.." என்றார்.

தலையாட்டினேன். "தலையாட்டுனா..மேக் எ ஸ்டேட்மென்ட் ப்ளீஸ்"

"இல்ல.."

"அடிச்சாங்களா.."

"இல்ல..சூடா டீ கொடுத்தாங்க ரெண்டு தடவ.."

அவர் திரும்பி பாலா சாரை பார்த்தார்.  அவர் என்னை முறைத்தார். ஸ்டேஷனிலிருந்து  கொஞ்ச நேரத்தில் வெளியே வந்தோம். நிறைய பிரஸ்காரர்கள் நின்றிருந்தார்கள். என்னை வெளியே நிற்கும் மீடியாவிடம்  பேசக்கூடாதென்றிருந்தார்கள். காரில் ஏறும் முன் அவர்களை பார்த்து ஒரு முறை கையசைத்தேன். இனி இந்த வாய்ப்பு எப்போது கிடைக்குமோ.  போனை எடுத்துப்பார்த்தேன். நிறைய மிஸ்டு கால்கள் இருந்தது . சென்றாயன் வாட்ஸாப்பில் ஏதோ அனுப்பியிருந்தான்.

"ஜி..ஒரு வாரம்  என்கூட இல்லேன்னதும் உங்க வாழ்க்கைல எவ்வளவு நல்லது நடந்திருச்சுனு பாருங்க..சாயங்காலம் வந்து பாக்குறேன்..அதுக்குள்ள ப்ரைம் மினிஸ்டரா ஆகித்தொலைஞ்சிறாதீங்க .."

சிரித்தேன்.வீடு வந்தது. எனக்குத்தலை லேசாய் வலித்தது.காரிலிருந்து  இறங்கி நடந்து மாடிப்படி ஏறினேன். பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலர் என்னை கைகாட்டி பேசிக்கொண்டிருந்தார்கள். பாக்கெட்டில் சாவியை தேடிய போது தான் கவனித்தேன், கதவு திறந்திருந்தது. உள்ளே பரணி உட்காந்திருந்தாள். இன்னமும் சாவியை வைத்திருக்கிறாள். பார்த்து சிரித்தாள்.கன்னம் கொஞ்சம் உப்பியிருந்தாலும் இந்த நாலு வருடங்களில் பெரிய மாற்றம் தெரியவில்லை. நான் நேராய் சேரில் போய் உட்கார்ந்தேன். கொஞ்சம் கிளர்ச்சியாய் இருந்தது. நாங்கள் சேர்ந்திருந்த சில அந்தரங்க நிமிடங்கள் ஞாபகம்  வந்தது.    தலையை அசைத்து வேகமாய் அதை போக்கினேன். அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். 



"மாத்திரை சாப்பிடுறாயா.."

"லேசாத்தான் தல வலிக்குது..மாத்திரைலாம் வேணாம்.."

அவள்  என்னையே ஆழமாய் பார்த்தாள், கண்கள் கலங்கியிருந்தது.

"தலை வலி மாத்திரைய சொல்லல சுந்தர்...உன்ன டி.வில 
பார்த்துட்டு வெங்கட் சார் கூப்பிட்டார்..நீ ரெண்டு வருஷமா ஆஸ்பிட்டல் போலையாமே.. டேபிளட்டாவது சாப்பிடுறயா.."

எனக்குத்தலை இப்போது சுற்றுவது போல இருந்தது. முகமெல்லாம் வேர்த்தது. அவள் பக்கத்தில் வந்தாள். அதே வாசனை. தலையை வருடினாள்.

"இன்னமும் குரல் கேக்குதா.."

இப்போது கண்கள் சொருகத்தொடங்கியது.

"அவ கிட்ட பேசாத...யூ வேர் ரைட்..ஷி ஐஸ் எ செல்ஃபிஸ் பிட்ச்.."   


புதன், 27 நவம்பர், 2019

பிரதி புதன் பேசலாம் -4

மூளைக்குள் ஓராயிரம் காட்சிகள் தரத்தரவென தறிகெட்டு ஓடியது. பதட்டத்தையும், உதறலையும்  மட்டுப்படுத்தி போனையெடுத்து திரையை ஆள்காட்டி விரலால் வலது பக்கம் வளித்தேன்.இதயம் எந்த நேரமும் வெடித்து விடக்கூடிய அபாயம் இருந்தது. 

"ஹலோ.."

ஐயோ அதே குரல்.  ஒரு காலத்தில் இரவெல்லாம் பேசி  என்னையும்  என் போனையும் சூடாக்கும் அதே குரல். பதட்டத்தைத்தணிக்க சில யதார்த்தங்களை  நினைவு கூர்ந்தேன். அவளுக்கு கல்யாணமாகி நாலு வருடமாகிறது. அவளது பையன் ஸ்கூல் போய்க்-
 கொண்டிருப்பான்.  அவள் தம்பதி சகிதமாய் அடிக்கடி ஃபேஸ்புக்கில்  போடும்  போட்டோவை பார்க்கையில் , என்னைப்பார்த்து  "நல்ல வேல..தப்பிச்சேன்" னு சொல்லுவது போலிருக்கும்.

"ஹலோ..சுந்தர்.."

"ம்ம்...ஹலோ..யாரு.."

"ஓ நம்பர்லாம் டெலீட் பண்ணிட்டியா..குரலாவது ஞாபகம் இருக்கா.."



கொஞ்சம் சந்தோசமாய் இருந்தது. இருந்தாலும் அவள் கேலியாய் கேட்பது போலிருந்தது. அந்த மூதேவிக்கு என்னைப்பற்றி எல்லாமும் தெரிந்திருந்தது.இன்னும் பத்து நிமிடம் என்னிடம் பேசினால் என்னுடைய பி.பி எவ்வளவு..சுகர் எவ்வளவு என்று கூட சொல்லிவிடுவாள்.

"இல்லங்க மேடம் ..உங்களோட இடைவிடாத நிகழ்ச்சிநிரலுக்கு மத்தியில என்ன மாதிரி பரதேசிக்கெல்லாம் கால் பண்ணுவீங்களோனு நினைச்சேன்..தவிர நாலு வருஷமா காலே பண்ணாத காண்டாக்ட் போன்ல இருந்தா என்ன..இல்லாட்டி என்ன.."

சில வாய்ப்புகள் எப்போதாவது தான் கிடைக்கும். பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நான் எத்தனையோ நள்ளிரவில் அழுதுகொண்டே அடித்த சரக்குக்கும்,மறுநாள் காலைகளில் எடுத்த வாந்திக்கும் பரிகாரமாய் கடவுள் இந்த வாய்ப்பை கொடுத்திருக்க வேண்டும்.ஆனால் அவள் அசராமல் விராட் கோலி போல நின்றாள்.

"பேசியாச்சா..எதுவும் பாக்கி இருக்கா..கோபத்தெல்லாம் இறக்கு.."

"ஆமா..உன் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்கலேல..அதான் கோபம்.."

"ஹாஹா..சுந்தர் ரொம்ப சந்தோசமா இருக்கு ...இப்போ தான் படிச்சேன்...Finally you are in a Place where you belong.. நிப்பாட்டாம ஏக் தம்ல படிச்சிட்டேன்...எனக்கென்னமோ படிக்கிறப்போ நீ பேசுற மாதிரியே இருந்தது.. "

கொஞ்சம் சிரிப்பாய் இருந்தது.இவளுக்கா  என்னைத்தெரியும்.  நானெதுவும் சொல்லாமல் இருந்தேன். தொடர்ந்தாள்.

"அவரும் படிச்சிட்டு ...சுஜாதா மாதிரி எழுதறார்னு சொன்னார் "

தூக்கி வாரிப்போட்டது. மேற்கொண்டு  "அவரும் " என சொன்ன அந்த நொடியில் மூளை சில ஃபேஸ்புக் போட்டோக்களை தேடி ,அந்த உருவத்தை கொண்டுவந்தது. யாரோ பெற்ற அந்த பிள்ளையின் மீது மனதிற்குள் சில கெட்ட வார்த்தைகளை பிரயோகித்தேன். அமைதியைத்தொடர்ந்தேன். அவள் விடுவதாயில்லை.

"அவருக்கு ஐ.டி வேல..ரொம்ப நல்ல டைப் ...படு பிசி..எப்பயும் ட்ராவெல்லயே தான் இருப்பார் .."

அப்போ பையனை என்ன பிளிப்கார்ட்ல வாங்குனீங்களானு கேட்க நினைத்தேன். அதற்குள் மூளை சூடாகி "அவள் புராணம் போதும்" என்றது. அவளை நிப்பாட்டினேன்.

"பரணி ..ஒரு நிமிஷம் ..எனக்கு இன்னொரு கால் வருது ..பேசிட்டு கூப்பிடட்டுமா .."

"ஓ..ஓகே ..நைஸ் டாக்கிங்  ட்டூ யூ .."


போனை ஓரமாய் வைத்துவிட்டு கட்டிலில் போய் விழுந்தேன். மனதிற்கு கவலைகள் மட்டும் அலுப்பதேயில்லை. இன்னமும் அவளுக்கு எப்போதும் அவளே பிரதானம். "நீ எப்படி இருக்க" னு கேக்க தோணல. இவ்வளவு நாளா  என்ன பண்ணினானு யோசிச்சிருப்பாளா தெரில. பத்து வார்த்த பேசுனா அதுல எட்டு வார்த்த அவளைப் பத்தி தான் இருக்கும். செல்ஃபிஸ் பிச்.
நாலு வருஷத்திற்கு முன் கடைசியாய்  என்ன பேசினாளென யோசித்தேன். அது  ஒரு சினிமா வசனம். "சுந்தர்...உனக்கு என்ன விட நல்ல பொண்ணு கிடைக்கும்". ஏன் அப்படி சொல்லியிருப்பாள்.

'ம்...'எனக்கு உன்ன விட நல்ல பையன் கிடைச்சுட்டான்னு' இன்டைரக்ட்டா சொல்லிருக்கா'

"சார்..இப்போ பேச சரியான நேரம் இல்ல..நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்.."



'தம்பி ..எனக்கு இந்த காதல் பிஸினஸூல  சுத்தமா அக்கறையில்லை ..அன்ட்ரொஜென்..ஈஸ்ட்ரோஜென் லாம் அடங்குனதுக்கப்றம்  அத்திவரதர பார்க்க பத்து மணி நேரம் லயன்ல நிப்பீங்க...வாழ்க்கைல கடைசி காலத்துல  'கடவுளே இன்னைக்கு நானே யாருக்கும் தொல்ல கொடுக்காம பாத்ரூம் போய்ட்டு வந்திரனும்னு தோணும்'. எழுதுன காதல் கவித..முத்தம் லாம் அப்போ ஞாபகம் வராது..சினிமால காட்றதெல்லாம் சுத்த ஹம்பக் நம்பாத ...நாம நெக்ஸ்ட் எபிசோட ஆரம்பிக்கலாம் '


விடாமல் பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே இருப்பார். தவிர தனியாய் இருப்பதைகாட்டிலும் வேறேதும் வேலை செய்வது நல்லதென தோன்றியது. லேப்டாப்பைஎடுத்து தமிழில் டைப் செய்யும் கூகிள் ட்ரான்ஸ்லேட்டரை திறந்தேன். 

'தேட்ஸ் மை பாய்..'

"ம் " 

'அய்ன்  ரேண்ட்டின்   'Fountain Head' ல்  ஹோவர்ட் ரோர்க்  தான்  பிரதான பாத்திரம் . இது ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து மூனில்  வெளிவந்த நாவல் . ரோர்க் ஒரு ஆர்க்கிடெக்ட் ,உலகின் சம்பிரதாய விதிகளை மதிக்க மாட்டான். எந்த காம்ப்ரமைஸுகளும் செய்து கொள்ளாமல் தன் வேலையை செய்கிறவன். அவன் கட்டும் கட்டிடங்கள் , புத்தகங்களில் சொல்லப்பட்ட கட்டுமான விதிகளை மீறும். நிபுணர்கள்  அவனை  "கோமாளி " என சிரிப்பார்கள் . அவனை  மட்டம் தட்டி கீழிறக்கி  தொழில் செய்ய விடாமல் தொல்லை கொடுப்பார்கள். எதற்கும் கலங்காமல்  கட்டிடத்துறையில்  புரட்சி செய்யக் காத்திருப்பான். ரேண்ட் இந்த பாத்திரத்தை  அந்த காலகட்டத்தில் அமெரிக்க கட்டிடத்துறையில்  அதிர்வலைகளை ஏற்படுத்திய  ஃ பிராங்க்  லாயிடை மனதில்  வைத்து எழுதியிருப்பதாய் சொல்வார்கள்.  நாவலில் வரும் எல்லாப்பாத்திரமுமே  யாரோ பிரபலமானவர்களை அடிப்படையாய் வைத்து எழுதப்பட்டதாய்  ஒரு  புரளி உண்டு. ரேண்ட் எதற்கும்  பதில் சொன்னதில்லை. படித்து முடித்து விட்டு புத்தகத்தை மூடியவுடன் தோன்றியது ஒன்று தான் . கதாப்பாத்திரங்களை அப்படியே வைத்துக்கொண்டு களத்தை மட்டும் மாற்றினாலும் கதை அப்படியே ஸ்திரமாய் நிற்கும் . ஒரு நல்ல கதைக்கு இதுவே ஆணிவேர் . காலம் கடந்து நிற்கும் கதாபாத்திரங்கள். முப்பது வருடத்திற்கு முன்னால்  இந்த நாவல் படித்திருந்தால் என் பையனுக்கு  "ரோர்க் " என பெயர் வைத்திருப்பேன் . இப்போது சொன்னால் மாற்றிப்பானா தெரியவில்லை...'

'சார்..எழுதுறது நான்..அதாவது 'ரெங்கன்'...பிரம்மச்சாரி...ஆனா அப்படியே ஆண் பிள்ள பிறந்தாலும் கோர்க்..கீர்க் னு வைக்கப்போறதில்லை...பிரபாகரன்...வேலுத்தம்பி பிரபாகரன்.."

'ஓ ..நீனு நாம் தமிழர் கேங்கா..கோத்தப்பய  செய்ச்சிட்டாரு..போய் அங்க அவருக்கு ஒரு 'ஹாய்' சொல்லிட்டு வாங்களேன் ..'

'நீங்க அவாள் தான..தீர்ப்பு வந்திருச்சுல..போயி கோயில் கட்டுங்க..கோமியம் எத்தன லிட்டர் வேணும்.."

'ஹே..ஹோல்டான் டைகர்...பாலிடிக்ஸ் போதும் ..சரி அந்த லாஸ்ட் லயினை தூக்கிரு ..'

அவரிடம் மனதிலிருக்கும் அந்த விஷயத்தை சொல்லத்தீர்மானித்தேன். கேட்பதும் கேட்காததும் ரெண்டாவது. 

"சார் நானும் எழுதுறதுக்கு இன்புட் கொடுக்கலாம்னு நினைக்குறேன்..சும்மாவே பணம் வாங்குறது கில்ட்டியா இருக்கு.."

'ஓ ..ஹோட்டல்ல  ஆயிரத்து நாலு ரூவா பில்லு வந்தா ஒருத்தன் ஆயிரம் எடுப்பான்..பக்கத்துல இருக்கவன் நாலு ரூபாய வேகமா கொடுத்திட்டு வெளில வந்து "பில்ல ஷேர் பண்ணிக்கிட்டோம்" னு சொல்லுவானே..அது மாதிரியா... மொதல்ல பரணிக்கி ரெண்டு சுழி ன வா .மூனு சுழி  ணா  வான்னு  சொல்லு ..அப்புறம் வாங்குறேன் உன் இன்புட் '

"சார்..உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்..நீங்க ஒரு Intellectual..நீங்க நீங்களா எழுதாதீங்க..நான் எழுதறமாதிரி  எழுதுங்க..கமலத்துல மூனாவது பக்கத்தில அயன் ரேண்ட் பத்தி எழுதுனீங்கன்னு வைங்க..தெறிச்சு நடு பக்கத்துல படம் பாக்க ஓடிருவான்..."சுஜாதா" னு பேர் போட்டு கீழ ஏதாவது மளிகை லிஸ்ட் போட்டாக்கூட படிப்பாங்க..ஆனா நான்  அதாவது நம்ம...விக்ரம் லேண்டர் எங்க இருக்குன்னு எழுதினாக்கூட "போடா வெண்ண" னு சொல்லிருவானுங்க"

"யூ ஹவ் எ பாயிண்ட்.."






அதற்குள் போன் அடித்தது. பாலகுரு மறுபடி கூப்பிட்டார்.

"சுந்தர் எங்கிருக்க.."

"வீட்ல "

"பயப்படாம சொல்றத கேளு..போன வாரம் அந்த பொண்ணு ரோட் ஆக்சிடெண்ட்ல  இறந்ததுக்கு  கவர்ன்மென்ட்ட விமர்சனம் பண்ணி ஒரு பத்தி எழுதிருந்தேல்ல "

"நானா.."

"ஆமா..மிஸ்டர் ரெங்கன் "  .அவர் "ன்" னை அழுத்தி சொன்னார்.

"ம்"

"அதுக்கு  கவர்ன்மென்ட் கேஸ் ஃபைல் பண்ணிருக்காங்க..வேகமா கிளம்பி எங்கயாச்சும்  பிரெண்ட்டு வீட்டுக்கு போயிடு..பெயில் மூவ் பண்ணிட்டிருக்கோம்...ஒன் டே அட்ஜஸ்ட் பண்ணு .."


போனை வைத்து விட்டு ,என்ன செய்ய வேண்டுமென யோசித்துக்கொண்டிருந்தேன்.

'தம்பி ..நான் சொல்றத கேளு...அரெஸ்ட் ஆவோம்..ஜெயில்ல டிஸ்டராக்சன் இருக்காது..செகண்ட் எபிசோடு நல்லா பண்ணலாம்..'