புதன், 19 அக்டோபர், 2011

அப்பாடாக்கர்





காலையிலிருந்து மூனாவது காபி. எரிச்சல் குறைந்த பாடில்லை. அவனுடைய அந்த சிரிச்ச மூஞ்சி அடிக்கடி நினைவுக்கு வந்து என் கடுப்பில் இன்னும் காரம் சேர்க்கிறது. அவன..அவன கண்டாலே எனக்கு பிடிக்காது. அவனுக்கும் அப்பிடித்தான். அவனை நான் நாயை பாக்குற மாதிரி பார்ப்பேன். அவன் என்னை நாய்க்கழிவை பாக்குற மாதிரி பார்ப்பான். ரொம்ப திமிர் பிடிச்ச பய.ஆளு பாக்க ஏதோ சல்மான்கான் பட வில்லன் மாதிரி இருப்பான். சொந்த ஊரு விழுப்புரம்னு நினைக்குறேன். கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், அவன் கொஞ்சம் அழகான ஆளு தான்கிறத ஒத்துக்கிற வேண்டியிருக்கு. எல்லாமே அன்னைக்கு தான் ஆரம்பிச்சுது. ஆபிஸ்ல அன்னைக்கு ஒரு பார்ட்டி. எல்லாரும் ஒரே குஷி மூட்ல இருந்தாங்க. நான் வழக்கம்போல மூஞ்சிய உம்முன்னு வச்சிக்கிட்டு "எப்படா..சாப்பாடு போடுவாய்ங்க" மனநிலைல இருந்தேன்.
                                          

இந்தப்பய என்னோட பக்கத்தில வந்தான். தூரத்தில் இருந்து நிறைய கண்களும்,பெண்களும் என்னையே பார்ப்பது தெரிந்தது. "பாஸ்..உங்களுக்கு பிளட் கேன்சரா..." என்று ரொம்ப சீரியசான முகபாவத்தோட கேட்டான். நான் குழப்பத்தில் "வாட்??" என்றேன். அப்புறம் என் தோளில் கைவைத்து "அப்போ...கிட்னி பெயிலியரா..." என்றான். நான் அவன் கையையெடுத்து விட்டு "என்ன சொல்ற" என்றேன். அவன் உடனே  சிரித்த படி சத்தமாய் "இல்லேல்ல...அப்புறமெதுக்கு பாஸ், எப்போ பாத்தாலும் எமர்ஜென்சி வார்ட்ல இருகிற மாதிரி சோகமா இருக்கீங்க..கொஞ்சம் கலகலன்னு இருக்கலாம்ல" என சொன்னான். மொத்தக்கூட்டமும் என்னை பார்த்து சிரித்தது. அதுவும் சில பெண்கள் வயிற்றை பிடித்துக்கொண்டெல்லாம் சிரித்தார்கள். அவனின் சில நண்பர்கள் "விக்கெட்" எடுத்தவுடன் கை தட்டுவது போல அவனிடம் கை தட்டிக்கொண்டார்கள். பருத்திவீரன் க்ளைமாக்ஸ் பிரியாமணியாய் உணர்ந்தேன். என் மொத்த கோபமும் அந்த வெண்ணை மேல் திரும்பியது. மனதிற்குள் சத்தமாய் சொல்லிக்கொண்டேன்.

                                         1-0

தர்மயுத்தம் அன்று முதல் ஆரம்பமானது.அவனை பதிலுக்கு பழிவாங்க துடித்துக்கொண்டிருந்தேன். ஆனால் உல்டாவாய் அவன் என்னை எப்போதாவுது பார்க்கும் போதெல்லாம் "ஹே.. ஐ.சி.யு.." என கூப்பிட்டுக்கொண்டிருந்தான். அவனது அடிப்பொடிகளெல்லாம் என்னை கடந்து போகையில் கொல்லென சிரித்தது. சொன்னால் அசிங்கம் அவனை எப்படியாவுது பழிதீர்க்கவேண்டுமேன சாமியை கூட தீவிரமாய் கும்பிட பார்த்தேன். பாரதத்தில் சொல்வது போல் பழி தீர்த்தல் ஒரு உன்னத உணர்ச்சி. நான் அந்த நிமிடத்திற்காக காத்திருந்தேன். கும்பிட்ட தெய்வம் என்னை கை விடவில்லை. அடுத்த ரெண்டாவுது மாதத்தில் ஆபிசில் "ரங்கோலி" கோலப்போட்டி வந்தது. பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் போட்டி. ஒரு குழு மெகா கோலம் ஒன்றை போட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் ஒரு மொத்தக்கூட்டம் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த நேரம் பார்த்து நம்ம பய வந்தான். "வாவ்..சூப்பர் ..." என்றான். எனக்கு அன்று என்னுடைய நாள் என புரிந்துபோனது.பய மேலும் பேச்சை தொடர்ந்தான். "நானும் இதுல Participate பண்ண முடியுமா.." என ஆர்வமாய் கேட்டான். நான் உடனே "கண்டிப்பாய் பண்ணலாம்.." என்றேன். அவன் பரபரப்புடன் "அதுக்கு நான் என்ன செய்யணும்.." என்றான். நான் ஒரு வினாடி இடைவெளி விட்டு அவன் கண்ணை பார்த்து "ஒரு ஆப்பரேசன் செய்யணும்" என்றேன். கூட்டம் கொடூரமாய் சிரித்தது. அவனுக்கு விசயம் புரிந்து போய் முகம் சுருங்கிப்போனது. சிலர் அவனை நோக்கி கை நீட்டி சிரித்தார்கள். எனக்கு பழிதீர்த்த சந்தோசம். அவன் முகம் ரோஸ் கலரானது.

                                                         1-1






அதற்கப்புறம் அவன் என்னை முறைத்து பார்க்க ஆரம்பித்தான். அவனது உதவியால் மறந்து போன பழைய தமிழ் கெட்டவார்த்தைகளை Renewal செய்து கொண்டேன். அவன் என்னை அட்டாக் செய்ய காத்திருப்பான் என்பதால் ரொம்ப ஜாக்கிரதையாய் இருந்தேன்.கூட்டங்களை தவிர்க்க ஆரம்பித்தேன். அந்தப்பையளும் வெறிகொண்ட வேங்கையாய் காத்திருந்தான் என்பது அன்று தான் தெரிந்தது. அன்னைக்கு சரியான மழை. வீட்டுக்கு போகும் நேரம் பார்த்து மழை பவர்ப்ளே விளையாடியது. சரி ஆபிஸ் வாசலில் இருந்து மெயின் ரோடுக்கு ஓடிப்போய் ஆட்டோவில் ஏறிவிடலாம் என ஐன்ஸ்டீன் போல கணக்குப்போட்டேன். அந்த மழையில் ஓடும்போது கால் வழுக்கி கீழே விழுந்தேன். கால்,கை,நெத்தி என எனக்கு கொஞ்சம் சேதாரம் அதிகம் தான். இறைவனால் அனுப்பப்பட்ட சில தேவ தூதர்கள் வந்து என்னை காப்பாற்றினார்கள். “பாத்து வரக்கூடாதாங்க..” என சிலர் வருத்தம் கொண்டார்கள். “ஆமாடா..எனக்கு மழைல அங்கபிரதட்சணம் செய்யணும்னு வேண்டுதல்” னு சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை. ஆனால் அந்த நிமிடம் உலகம் எவ்வளவு அன்பானது என புரிந்து கொண்டேன்.உதவியவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். நானும் இது போல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என அந்த ரண வேதனையிலும் கோல் செட் பண்ணினேன்.  

மறுநாள் காலை அலுவலகம் வந்தேன். மெயில் செக் பண்ணிய போது தான் அந்த அதிர்ச்சி. “நீச்சல் வீரன்” என்ற தலைப்பில் நான் விழுந்த காட்சி புகைப்படங்கள் இருந்தது. இலவச வேட்டி சட்டை போல் எல்லாருக்கும் அந்த மெயில் அனுப்பப்பட்டிருந்தது. உதவி செய்த எந்த நாயோ தான் இந்த நாச வேலையை செய்திருக்கிறது.  அதுவும் ஒரு போட்டோவில் எங்கெங்கே அடிபட்டிருக்கிறது என வட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த க்ரூப் மெயிலில் சிலர் ,”ஸ்னோல சரிக்கிட்டு போற மாதிரி போறாருப்பா..” ,”சிங்கம்டா ..”,“பாடிய எப்போ எடுக்குறாங்க...”,“மூஞ்சில என்னப்பா தக்காளி சட்னி...” போன்ற கமெண்ட்கள் வந்து என் எரிகிற புண்ணில் எரிச்சலை கிளப்பின. மெயில் அனுப்பியவன் வேற யார். அவனே தான்.  

                                                       2 -1

நான் எவ்வளவு வெறியாய் இருந்திருப்பேன் என இந்த இடத்தில் விலாவாரியாய் சொல்லத்தேவையில்லை. ரெண்டுநாள் இஞ்சி ஜூஸ் குடிச்ச தனுஷ் போல சுத்திக்கொண்டிருந்தேன். எவனாவுது எங்காவது சிரித்துக்கொண்டிருந்தால் நம்மள நெனச்சுத் தான் சிரிக்குறானோ என நினைத்துக்கொண்டேன். மனிதவெடிகுண்டுகள் எப்படி உருவாகிறார்கள் என்பது புரிந்தது. இந்த முறை நான் கொடுக்கிற தாக்குதலில் அவன் நிலை குலைந்து போக வேண்டும் என உக்கிரமாய் சிந்தித்தேன். என் அரைவேக்காட்டு மூளையில் ஏதும் ஐடியாக்கள் உதிக்கக்காணோம். அன்று டீம் மீட்டிங். டீம்மில் உள்ள எண்பது பேரும் அந்த பெரும் அறையில் கூடினோம். மீட்டிங் ஆரம்பிக்க கொஞ்ச நேரம் ஆகும் போல் இருந்தது. அதுவரை வந்து சேராத நபர்களை போன் செய்து அழையுங்கள் என்றார்கள். நம்ம பயலுக்கு போன் செய்தால் என்னவென்று எனக்கு தலையில் கொம்பு முளைத்தது. நண்பனின் மொபைலில் இருந்து அவனுக்கு கால் செய்தேன். போன் ஸ்பீக்கரில் இருந்தது.


   "ஹலோ..."


   "ஹலோ"


  "சார் நாங்க சிட்டி பேங்க்ல இருந்து பேசறோம். உங்களுக்கு நாங்க பதினஞ்சாயிரம் வரைக்கும் பெர்சனல் லோன் தரலாம்னு முடிவு பண்ணிருக்கோம். இனிமேலாச்சும் கிழிஞ்ச ஜீன்ஸ் போடாதீங்க சார் "


  "ஹெல்லோ...யாரு நீங்க ..தேவையில்லாமா லூசு மாதிரி................"


  "சார்..மிச்சம் இருக்குற பணத்துல ஜட்டி,பனியன் வாங்கிகோங்க. மறக்காம அந்த பில்லுல உங்க தாசில்தார்கிட்ட அட்டெஸ்ட் வாங்கி எங்க ஹெட் ஆபீஸ்க்கு கொரியர் பண்ணிருங்க..."


  "மரியாதைய யார் பேசுறதுனு சொல்லுங்க... நான் கால ரெகார்ட் பண்றேன்... அப்டியே சைபர் கிரைம்ல கொடுக்க போறேன்.."


  "ஆமா..இவரு பெரிய இளையராசா..ரெகார்டிங் பண்றாரு...நம்ம கூர்க்காவ பாத்தாலே கக்கா போவ...நீ சைபர் கிரைம் போறியா.." 


  " இவ் ...இவ்ளோ தான் உங்களுக்கு லிமிட்டு சொல்லிட்டேன்..."


  "மச்சி ஏர்டெல்லுக்கு மாறு அன் லிமிடெட் டாக் டைம்...ஒவ்வொரு பிரெண்டும் தேவ மச்சான்..."


 "எனக்கு வேல இருக்கு வெளாடாதீங்க...யாருன்னு சொல்லுங்க..."


 "டீம் மீட்டிங் கூட அட்டென்ட் பண்ண முடியாத அளவுக்கு அப்டி என்ன புடுங்கிற வேல.. Googleஐ க்ளோஸ் பண்ணிட்டு மீட்டிங் ஹாலுக்கு வா தம்பி "




கேட்டுக்கொண்டிருந்த எல்லோரும் சிரித்தார்கள். ஒருவர் படுகிற அவமானம் அடுத்தவர் சிரிக்கிற சிரிப்பிலே அளக்கப் படுகிறது போல. ஏதோ சாதித்த சந்தோசம் என் தலையில் வந்து ஏறியது. அவன் மீட்டிங் ஹாலுக்கு வந்து சேர்ந்ததும் சிரிப்பு சத்தம் அதிகமானது. அவன் விளையாட்டாய் எடுத்துக்கொண்டது போல் சிரித்தான்.


                                                           2-2


அன்று சாயங்காலம் அவனுடைய சீட்டுக்கு போனேன். சிரித்தேன். "டேய்..இன்னும் முடியல..உன்ன அழ வைக்குறேன் பாரு " என்றேன். அவன் அசால்டாய் "ஏன்..வந்து வெங்காயம் உரிப்பியோ.." ன்னான்.
நல்லவேளை அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் இது கணக்கில் வரவில்லை. அவனே பிற்பாடு கடுப்பில் "நீ என்ன பெரிய அப்பாடக்கரா.." என சொல்லிக்கொண்டே என் சட்டையை பிடித்தான். நானும் "நீ பெரிய அண்டர்டேக்கரா டா" என சொல்லி அவன் சட்டையை பிடித்தேன். ரெண்டு பேர் முகமும் அருகருகே. அவன் மேல் கொஞ்சம் சிகரெட் வாடை கூட அடித்தது. அவன் குபீரென சிரிக்க ஆரம்பித்தான். சட்டையை விட்டு விட்டு அழகாய் சிரித்தான். நானும் சிரித்தேன். சிரிப்பு அடங்க கொஞ்ச நேரம் ஆனது.






புதன், 28 செப்டம்பர், 2011

கல்லறை கவிதைகள்




 புகைப்படங்களில் அந்த உறைந்த நொடிகளில்
  இன்னும் உயிர் வாழ்கிறார்கள் 
   மரித்துப்போனோர்.


இறந்தவர் கடவுளை அடைகிறாரெனில் 
 இனி வெள்ளிக்கிழமைகளில் 
  கல்லறை செல்வோம்.


இந்தியாவில் ஊருக்குள் கல்லறை 
 ஈழத்தில் கல்லறைக்குள் ஊர்.





வயதான விதவை சாவுக்கு 
 நன்றி சொன்னாள்-இறுதி 
 ஊர்வலத்தில் அவ்வளவு பூவாம்.


பாதி ஆசையில் மறைந்தோரை
 பூமியில் புதைக்காதீர்-இன்னுமா 
  புரியவில்லை பூகம்ப காரணம்.


வேகமாக செல்லும் வண்டிகளில் 
 பயணிகளுடன் சேர்ந்து தானும் 
 ஏறிக்கொ(ல்)ள்கிறது-மரணம்.


இறந்தவுடன் மனிதனுக்கு
 பூமியின் நாற்றம் தாங்கவில்லை 
   மூக்கில் பஞ்சு.


சூடான காபியையே நான் 
 குடிப்பதில்லை என்னையா 
  எரிக்கபோகிறீர்கள்....


பிரியமானவர்களை இழந்தவனே 
 ஆவிகள் நம்பிக்கையை 
  உருவாக்கினான்.





உயர்திரு, திருவாளர் , திரு , திருமதி,
 எல்லாம் 'அது' வாகிப்போகிறார் 
  அந்த நொடியில்...


நல்லா கேட்டுட்டேன் மண்ணுக்கும் தீயுக்கும்
 நம் கண்களும்,உள் உறுப்புக்களும் 
  தேவையில்லையாம்...
  

வியாழன், 8 செப்டம்பர், 2011

தி FACEBOOK காரன்





"ஹே சிவா...எப்டி இருக்க..வா(ட்)ஸ்அப்...". ஒரு கீச்சு கீச்சு குரல் எனக்குப் பின்புறம் இருந்து வந்தது. மதுரையின் பெரியார் பேருந்து நிலையத்தின் ஒரு சனிக்கிழமை காலை நேரம். யாரென திரும்பி பார்த்தேன். முக்கால் டவுசர் ஒன்னு போட்டிருந்தான். மூஞ்சில் மீசை இல்லை, ஆனால் வாய்க்கு ஜட்டி போட்டது போல் தாடைக்கு அடியில் தாடி வைத்திருந்தான். அந்த மொகர கட்டையை  நான் அடிக்கடி பார்த்திருப்பது போல் இருந்தது. "டேய் நான் தான்டா ரகு" என சொல்லி அந்த கருமம் பிடித்த கூலிங்கிளாசை கழட்டினான்.

 'அட கோணயா...நீயா..' என்றேன். என்னுடைய பள்ளி நண்பன். ஒரு மூன்றெழுத்து கம்பெனியில் ஐந்து வருடமாய் வேலை பார்க்கிறான்.

'இன்னும் நீ நிக்நேம்ஸ்லாம்..மறக்கல..ஹி ஹி' என சொல்லிக்கொண்டே மொபைலை எடுத்து ஏதோ டைப் செய்து கொண்டிருந்தான்.

'என்னடா பண்ற...'

'இல்ல..உங்கூட பேசிக்கிட்டு இருக்கேன்னு Facebookல அப்டேட் பண்றேன்'

'அடங்... ஏன் மூச்சா போறதையும் அப்டேட் பண்ணேன்'

'அத one hour முன்னாடியே அப்டேட் பண்ணிட்டேன்.... அதுக்கு 18 'Likes'....'

'டேய் மூச்சா போனதுக்கு எதுக்குடா 18 Likes...'

'இதுக்கே இப்டி சொல்ற..போன வாரம் எங்க ஜிம்மி கக்கா போயிருச்சுன்னு ஒரு status மெசேஜ் போட்டேன்..அதுக்கு 27 likes...'

'அட கழிசடைகளா அந்த கண்றாவி facebookல அப்படி என்னதாண்டா இருக்குது...'







ரகு கண்ணாடியை கழட்டிவிட்டு என்னை மேலும் கீழுமாய் பார்த்தான். கொஞ்சம் பழைய காலத்து உவமையோடு சொல்லவேண்டுமென்றால் புழுவை பார்ப்பது போல பார்த்தான்.  கண்கள் நம் கேப்டனின் கண்கள் போல சிவப்பாயிருந்தது. கோபமாகிவிட்டானாம். அவன் குடும்பத்தையே திட்டி இருந்தாலும் இவ்வளவு கோபித்திருப்பானா தெரியவில்லை. இருந்தாலும் அவனை வெறியேற்றுவது அவ்வளவு நல்லதில்லை என்பதால் கொஞ்சம் அடக்கி வாசித்தேன்.


'இல்ல மச்சி... அந்த Facebook வென்ற எங்களுக்கும் சொல்லி குடுத்தேனா நானும் இந்த மாதிரி சீன் போடுவேன்ல....'

'அப்டி வா...மொத இந்த மச்சி..மாப்பு..பங்குனு கூப்பிடுறத நிறுத்து....buddy...Dude...bro..folks..னு கூப்டு'

'ஆமா அதென்ன மூனாவுது.. லேடீஸ் மேட்டரா இருக்கு'

'டேய் ஸ்டுப்பிட்..அது ப்ரோ டா'

'சாரிப்பா'

'அப்புறம் பேப்பர்,பென்சில்,சட்டை,பனியன் எது வாங்குனாலும் Facebookல அப்டேட் பண்ணிரு...முடிஞ்சா ஒன்னோட மொபைல்ல போட்டோ புடிச்சு போட்டிரு...'

'எனக்கு புரிஞ்சு போச்சு..அதுக்கப்புறம் அதுக்கு 'cho sweet'னு நாலு பிகருங்க கமென்ட் போடுவாங்க. 'Nice' னு நாலு Formalityக்கு பொறந்தவனுங்க கருத்து தெரிவிப்பாய்ங்க. 

'எக்ஸாக்ட்லி...'



'ஒரு டவுட்ப்பா... 'எனக்கு எங்க ஆயாவ பிடிக்கும்..அப்பத்தாவ பிடிக்கும்...ஒனக்கும் புடிச்சிருந்தா இத ஒன்னோட Status மெசேஜா வைன்னு ஒரு கூட்டம் சொல்லிக்கிட்டு அலையுதே அத follow 

பண்ணலாமா..'

'அது ஓல்ட் ஸ்டைலுடா... அந்த செண்டிமெண்ட் மேனியா இப்போ செட் ஆகாது...பேசாம நல்ல வீடியோவா பார்த்து upload பண்ணிவிடு'

'அஞ்சரைக்குள்ள வண்டி படத்தில இருந்து ரெண்டு செம்ம சீன Upload பண்ணிவிடவா...பசங்க மத்தில ரீச் ஆகிடலாம்..'

'பொண்ணுங்க செருப்பால அடிப்பாங்க...ஏற்கனவே ஒன்ன பாத்தா ஈவ் டீசிங் கேஸ்ல பெயில்ல வந்தவன் மாதிரி தான் இருக்கு..'

'ஹிஹி...ஒட்டு மொத்த கூட்டத்தையும் எம்.ஜி.ஆர் மாதிரி கவுத்த ஏதாவுது ஐடியா சொல்லுடா..'

'அண்ணா ஹசாரே..மங்காத்தா...கிரிக்கெட்ன்னு current affairs அடிச்சு விடு...உள்ள புகுந்து 'எஸ் யுவர் ஆனர்' னு ஆளாளுக்கு கருத்து சொல்லுவானுங்க..'

'வாவ்'

'பெறகு..ஆன்சைட்னு சொல்லிக்கிட்டு வெளிநாடு போனேனா..ஏர்போர்ட்ல இருந்து இறங்குனவுடனே "ஈ" னு சிரிச்சா மாறி போட்டோ எடுத்து ஒன்னோட Profile பிக்ச்சரா போட்டுரு..'

'டன்...அப்டியே தமிழுல கவிதை..ஹைக்கூனு பரிட்சார்த்த முயற்சிகள் செய்யவா...என்ன சொல்ற ??"

'ஆமா..இவர் பெரிய கமலு..Experiment பண்றாரு...தமிழுல கவிதை எழுதுறதுங்கறது பா.ம.க தனியா எலெக்சன்ல நிக்குற மாதிரி..கரையேற வாய்ப்பே இல்ல... அப்றம் முக்கியமான விஷயம் உங்க வீட்ல என்ன முக்கியமான விசேஷம் நடந்தாலும் உங்க சொந்தக்காரனுக்கு சொல்றியோ இல்லையோ Facebookல சொல்லிரனும். எவன் போட்டோ போட்டாலும் போயி "Like" பண்ணிரனும். பொண்ணுங்க போட்டோ போட்டாங்கன்னா போடுற மொத கமெண்ட் நம்மளோடதா தான் இருக்கும். எவனுக்காவுது பொறந்த நாள் வந்ததுன்னு வை...'

'கால் பண்ணி விஷ் பண்ணனும்...'

'யு இடியட்....அப்புறம் சாதா பப்ளிக்கும் நமக்கும் என்ன வித்யாசம். அவன் உன்னோட உயிர் நண்பனாவே இருந்தாலும் அவன் Wall ல போயி Happy Birthday எழுதணும். கால் பண்ணி விஷ் பண்றதெல்லாம் ஒரு Facebookகாரன் பண்ணக்கூடாது.'

'ஓகே'

'சிரிக்கிறது கூட கெக்கே பேக்கே னு சிரிக்கப்படாது. 'lol :)' னு தான் சிரிக்கணும். OMG,BRB மாதிரி வார்த்தைகளெல்லாம் யூஸ் பண்ணியே ஆகணும். தீபாவளி,பொங்கல் னா தலைவர்கள் மாதிரி வாழ்த்து செய்தி ஒன்ன போட்டு விட்ரு. எடேலே youTube போயி நாலு வீடியோவ upload பண்ணிவிடு. நீ ஓட்டுப் போடுறியோ இல்லையோ,டேக்ஸ் கட்டுவியோ மாட்டியோ, 'அவன் சரியில்லை இவன் சரி இல்லை..அய்யகோ நாடு எங்க போகுது னு' எந்நேரமும் பொங்கிக்கிட்டே இரு. உன்ன எல்லாரும் இவரு தாறுமாறான சிந்தனைவாதினு நம்பிருவாங்க.'

'டேய் பொறு...எனக்கு தல கிரு கிருனு சுத்துது..'

'சூப்பர்..இதான் சான்ஸ்.."Iam not doing well'னு ஒரு மெசேஜ் தட்டு.அப்புறம் பாரு...

'????????????????????'



புதன், 7 செப்டம்பர், 2011

குழந்தைகள் அல்லது கவிதைகள்



                     
                    
   ஆதாம் தவறு செய்தான் 
    இருந்தும் வரம் பெற்றான்- குழந்தைகள் 

  
  கடவுளும் குழந்தையும் ஒன்று தான் 
    என கேள்விப்பட்ட பின்னே தான் 
     கடவுளை நம்ப துவங்கியிருக்கிறேன்.

 
 "குழலினிது யாழினுது" குறள் படிக்கவில்லை போல
  தம் குழந்தையை தூங்க வைத்து விட்டு 
   "சூப்பர் சிங்கர்" பார்ப்போர்.


 ங்கா...அவ்வா...ப்ப்பா 
  வார்த்தைகளெல்லாம் தமிழகராதியில் 
   உடனடியாய் சேருங்களேன்.


"நிர்வாணம்"- ஒருமனதாய் 
  ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் 
   இவர்கள் உலகத்தில்..








இனி எந்தக்குழந்தைக்கும் முத்தம் கொடுப்பதில்லை 
         இப்போதே சேர்த்து வைக்குறேன் 
                இன்னும் பிறக்காத என் மகளுக்கு....


"பட்டாம்பூச்சிக்கு பெயிண்ட் அடிச்சது யாரு அங்கிள்??"
   போன்ற கேள்விகள் வளர்ந்த மூளைகளுக்கு 
         ஏன் தோன்றுவதில்லை...


பொம்மைகளுக்குள்ளும்,பலூன்களுக்குள்ளும் 
 இவ்வளவு சந்தோசம் ஒளிந்து கிடக்கிறதா...



ஒசாமா பின்லேடன் 
 குழந்தையாகவே இருந்திருந்தால் 
  செப்டம்பர் 11 வந்திருக்காது...


செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

Y




                                                            
"தலைய தூக்கி பாக்காத டா" ரஞ்சித்தை பார்த்து அந்த பரட்டைத்தலைக்காரர் சொன்னார். முழுவதும் இருட்டி இருந்தது. காஞ்சிவரம் அங்கிருந்து முப்பது கிலோமீட்டர் என்று சிலர் பேசிக்கொண்டார்கள்.பரட்டைத்தலைக்காரர் ரஞ்சித்தின் பக்கத்தில் வந்தார்.

 'சொரிப்பயலா இருப்ப போல...தலைய நீட்டி நீட்டி பாத்துக்கிட்டு கெடக்க.. யாராவுது பாத்துட்டா என்னய்யா செய்யுறது...உள்ள மண்டபத்துக்குள்ள இருக்குற முப்பது பேரு உசுரும்,வாழ்க்கையும் உன்கைல தாண்டா இருக்கு...சூதானமா இரு' என்றார்.

 "இனி கரக்டா இருந்துக்கிறேண்ணே" என்றான். அவன் ஒரு பாறையின் அருகில் மறைந்த படி நின்றிருந்தான். இரண்டு நாள் தூங்காத களைப்பு அவன் முகத்தில் தெரிந்தது. திடீரென தூரத்தில் ஒரு லாரி அருகே வருவது தெரிந்தது. அதன் விளக்குகள் வெளிச்சமாய் இவர்கள் அருகே வருவது போல் இருந்தது. ரஞ்சித் மிரண்டு போய் பின்னால் திரும்பி மெல்லிசாய் விசில் அடித்தான். 


மண்டபத்தின் உள்ளே இருந்த எல்லாரும் மெழுகுவர்த்தியை அணைத்தார்கள். வண்டி இடது பக்கம் திரும்பி மறைந்தது. இரண்டு நிமிடத்தில் உள்ளே இருந்து ஒருவன் ஆந்தை போல் ஒலி எழுப்பினான். முன்னால் இருந்து ரஞ்சித் 'இல்லை' என்பது போல் கை காட்டினான். எல்லோரும் பெருமூச்சி விட்டார்கள். எல்லாருடைய மூஞ்சிலும் மரண பயம் அப்பி இருந்தது.


***********************************************************************************************************

பெரிய கணினி திரைகள், மேசையில் இந்திய அரசின் முத்திரையுடன் கூடிய பதக்கங்கள் எல்லாம் இருந்தது. அலமாரியில் முறையாய் அடிக்க வைக்கப்பட்ட புத்தகங்கள். கணினி திரையையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார் ராம். இளமஞ்சள் நிறத்தில் சேலை அதன் மேல் ஸ்வெட்டர் அணிந்திருந்தாள் நிர்மலா. கையில் பாதி முடிந்திருந்த சிகரெட்.

"ராம்...அந்த பாஸ்டர்ட் நாளைக்கு பார்லிமென்ட்ல என்ன கிளிச்செடுக்கப் போறான்.. "What the Fuck our Honourable Fertility Minister did" னு கேப்பான். நா விரல சப்பிட்டு நிக்கணும்" என்றாள் கடுங்கோபமாக. பேசி விட்டு மூச்சி வாங்கினாள்.

"மேடம்..லேப்ல Foul Language பேசாதீங்க...நாம எவ்வளவு முயற்சி பண்ணோம்னு உங்களுக்கு தெரியாதா.."

"யு.எஸ்ல பண்ணிட்டாங்களாமே...முன்னூறு பேர ரெடி பண்ணிட்டாங்களாம்...காலைலயிருந்து பி.பி.சில போட்டு நாரடிக்குறான்..."

"Thats Absurd.. அந்த முன்னூறு பேருல யாரும் Y ஜெனரேட் பண்ண முடியாது..அவுங்கள வெறும் செக்ஸ்க்கு வச்சிக்கிரலாம். ஆனா நிரந்தர தீர்வு கெடயாது. அவுங்கள விட்டா இன்னும் பெர்டிலிட்டி Ratio மோசமா தான் போகும்.."

"அத விடுங்க.. நம்ம மிசன் லிங்கா எந்தளவுல இருக்கு...நாளைக்கு என்கிட்ட கேட்டா 75% முடிஞ்சிச்சுனு சொல்லிறவா... Fine தான.."

"Politically Correct" என்றார். நிர்மலா சிரித்தாள்.

************************************************************************************************************


"உங்க பேரு என்னங்க"

"ரஞ்சித்"

"பார்த்தா யங்கா இருக்கீங்க...வயசென்னா??"

"முப்பத்திஏழு.. நீங்க??"

"திவாகர்...இன்னைக்கு நான் தான் காவல். இன்னும் எத்தன நாளைக்கு தப்பிக்க முடியும்னு தெரில...சில நேரம் செத்துப்போயிரலாம்னு தோணுது". கண்ணாடியை கழட்டினான்

"சீ..தைரியமா இருங்க...காஞ்சிவரம்...செங்கல்பட்டு ..எச்சூர் கடந்துட்டோம்னு வைங்க..ஈசியா மகாபலிபுரம் போயிரலாம்..அங்க இருந்து கண்டிப்பா போட்ல ஏறி தப்பிச்சிரலாம்..."

திவாகர் உடல் குலுங்கி சத்தமில்லாமல் அழுதான். ரஞ்சித் அவன் தோள் தடவி "குழந்தை இருக்கா...?" என்றான்.

"ஆமா.."

************************************************************************************************************

டெல்லியில் கடுங்குளிரான நாள் அது. பாராளுமன்ற வளாகம் கூட்டமாய் இருந்தது. வெளியே லிப்ஸ்டிக் பெண்கள் மைக்கை பிடித்து நின்று கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே வேன்களும், அதி நவீன கார்களும் இருந்தன. பிரதமர் அஞ்சலிகாந்தியின் கார் வளாகத்துக்குள் வந்தது. வெளியே கூடியிருந்த காங்கிரஸ்காரர்கள் "அஞ்சலி மேடம் ஜிந்தாபாத்" என கோசமிட்டனர். பிரதமருடன் பேசிக்கொண்டே நிர்மலா கட்டிடத்துக்குள் நுழைந்தார். நிறைய காமிராக்கள் வெளிச்சம் காட்டின. உள்ளே அமளிகள் முடிந்து கதிரவன் பேச ஆரம்பித்தார்.

எல்லோரும் காதில் Translator பொருத்திக்கொண்டார்கள். தன் வழுக்கைத்தலையை ஒருமுறை தடவிக்கொண்டு பேசத்தொடங்கினார் கதிரவன்.

"இன்று எல்லோரும் இனிப்பு கொடுத்து கொண்டாடுங்கள். இதே ஜனவரி இருப்பத்தியொன்று ,2012ல் அதாவது சுமார் முப்பத்தைந்து வருடம் முன் உலகின் கடைசி ஆண்குழந்தை பிறந்தது. புவிச்சூடு,கதிர்வீச்சு னு என்னென்னமோ காரணம் சொன்னாங்க. பிறகு ஆண்களால் Y Chromosome உருவாக்க முடியலயாம். அதனால் அப்புறம் நடந்த எல்லா இனப்பெருக்கத்துலயும் பெண்ணே பிறக்கிறாள்...  இப்பிடி பழைய கதைய சொல்லியே அழுதுகிட்டு இருக்கனுமா...இந்த அரசு என்னத்த செஞ்சது..."

"மிசன் லிங்காவில் நாம் தற்சம....." பேச முயன்றார் நிர்மலா.

"எது ஆராய்ச்சின்னு சொல்லிக்கிட்டு DNA ல Chromosome மாத்துறேன்னு மூணு ஆண்கள கொன்றீங்களே அதுவா..பாத்து மேடம் இருக்கிறதே தொண்ணூறு லட்சம் பேரு தான்...."

எல்லோரும் சிரித்தார்கள். சிலர் மேஜையை தட்டினார்கள்.கதிரவன் ஆவேசமாய் மேலும் பேசத்தொடங்கினார்.

"இன்று தினமும் நாட்டில் நடக்கும் வன்முறையை பார்த்தீர்களா...எங்கே போய் கொண்டிருக்கிறது இந்த பூமி....எஞ்சி இருக்கும்......

***********************************************************************************************************

திவாகர் பாறையின் மறைவில் அமர்ந்திருந்தான். மணி காலை மூன்று. பாதி தூக்கத்தில் காவல் இருந்தான். ஒரு லாரி புயல் வேகத்தில் அங்கு வந்தது. அவன் விசில் அடிக்க போவதற்குள் அது மண்டபத்தின் அருகில் போய் விட்டது. திவாகர் பாறையின் இருட்டில் பதுங்கி விட்டான். அவனுக்கு கைகள் நடுங்கியது. சிறுநீர் வருவது போல் இருந்தது. அடக்கிக்கொண்டான். லாரியில் இருந்து சிகப்பு ஜீன்ஸ்,சிகப்பு டாப்ஸ் அணிந்த பெண்கள் இறங்கினார்கள். பிறகு இரண்டு லாரி அங்கு வந்து சேர்ந்து கொண்டது. அனைத்திலும் சிவப்பு உடுப்பில் பெண்கள். 

"உள்ள இருக்குதுக டீ.." என்றாள் கொஞ்சம் குண்டாய் இருந்த ஒருத்தி.

மண்டபத்தில் இருந்தவர்கள் உள்ளே பதற ஆரம்பித்தார்கள். தப்பிக்க வழி தேடினார்கள். ரஞ்சித் ஜன்னல் வழியாய் வெளியே பார்த்து நடுங்கினான். மண்டபத்தின் கதவு உடைக்கப்பட்டது. உள்ளே கர்ஜித்து கொண்டு பெண்கள் நுழைந்தார்கள். சிலர் விரகமாய் சிரித்தார்கள். ரஞ்சித் ஜன்னல் வழியாய் இறங்கி ஒரு புதரை நோக்கி ஓடினான். பின்னால் பத்து பெண்கள் ஓடினார்கள்.

திவாகர் வாயை மூடிக்கொண்டு அழுகையை அடக்கிக்கொண்டான். எதையோ யோசித்து விட்டு,தன் பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் கத்தியை ஒருமுறை தொட்டுப் பார்த்தான்.

*********************************************************************************

"எஞ்சி இருக்கும் ஆண்கள் என்ன செய்வான்.. சொல்லு அரசாங்கமே....ஆண்களின் பாஸ்போர்டை முடக்கி விட்டீர்கள்...இந்த பூமியில் ஆணுக்கு ஏது பாதுகாப்பு...உங்களை பொறுத்தவரை நாங்கள் ஒரு போகப்பொருள். நேற்று செய்தியை கேட்டீர்களா... காஞ்சிவரம் அருகே மறைந்து இருந்த முப்பத்தி நாலு ஆண்கள் கற்பழித்து சாகடிக்கப்பட்டுள்ளனர். உங்கள் ஆராய்ச்சியின் தாமதம் இன்னும் எத்தனை உயிர்களை காவுவாங்க போகிறதோ...."  எல்லோரும் அமைதியாய் இருந்தனர். கதிரவன் தொடர்ந்தார்.

"ஆண்களுக்கான மானியத்தொகை முப்பதாயிரத்தில் இருந்து நாற்பதாயிரமாக மாற்ற வேண்டும். ஆண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். திரைப்படங்களில்,விளம்பரங்களில் ஆண்களை இழிவு படுத்துவது போல் காட்சிகள் இருந்தால் தடை செய்ய வேண்டும்...." கதிரவன் உரத்த குரலில் பேச்சை தொடர்ந்து கொண்டு இருந்தார்.

நேரடி ஒளிபரப்பில் இதை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த ஆண்கள் கண் கலங்கி கை தட்டினார்கள்.

******************************************************************************

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

திருவள்ளுவரின் டைரி


                                                                                   
                                                                    


மணி காலை ஒன்பது ஆகியிருந்தது.கண்ணைத்திறக்க அறப்போராட்டம் நடத்திகொண்டிருந்தேன். சூரிய ஒளி ஜன்னல் வழியாக மூஞ்சில் அடித்தது. இனிமேலும் தூங்கினால் சூரியனே கீழே இறங்கி வந்து அடிக்கும் அபாயம் இருந்ததால் எழுந்தேன். மொபைலை எடுத்தேன். மூன்று மிஸ்டு கால். யாருன்னு பாத்தா சதீஷ். இந்தாளு எதுக்கு கூப்பிட்டார்னு யோசிச்சுகிட்டே பதிலுக்குக் கூப்பிட்டேன்.

"அன்பே..அன்பே...நீ எங்கே..." ன்னு ஒரு அழகான குரல் பாட ஆரம்பிக்க, அதுக்குள்ளேயே ஒரு கட்டைக்குரல் "ஹலோ" என்றது. நான் பேசினேன்.
"யோவ்... எத்தன மிஸ்டு கால்யா...இந்த மிஸ்டு கால் கொடுக்குறவனயெல்லாம் மிட்நைட்ல வித்அவுட்டா ஓட விட்டு சுடணும்"

"Balance இல்லைடா..."

"பக்கத்துல யாராய்ச்சும் பிடிச்சிக்கிட வேண்டியது தான..."

"வெளையாடாதப்பா...ஒரு முக்கியமான மேட்டர்... நாங்க மயிலாப்பூர்ல வீடு கட்டிக்கிட்டு இருக்கோம்ல.."

"ஆமா..பக்கத்துல கூட நெறய பிகர்ங்க இருக்காங்கன்னு சொல்லிட்டிருந்தீங்களே..."

"டேய்..பாத்துப்பேசு..ஸ்பீக்கர்ல போட்டிருக்கேன்..."

"யோவ்..இதென்ன குத்துப்பாட்டா..ஸ்பீக்கர்ல கேக்குறதுக்கு...எடுய்யா அத..."

"வீட்டுக்கு மண்ணைத்தோண்டுறப்போ ஒரு ஓலைச்சுவடி மாதிரி ஏதோ வந்துச்சுப்பா..உள்ள பாத்தா என்னென்னமோ எழுதிருக்கு..நீ வாயேன் இங்க"

"பாஸ்... நீங்க வர வர ராகுல்காந்தி மாதிரி பிரச்சனையக் கெளப்பிக்கிட்டே இருக்கீங்க...நீங்க வேணும்னா உங்க கண்டுபிடிப்ப தூக்கிக்கிட்டு இங்க வாங்க ..."

"சரிடா...வீட்லையே இரு... வந்திடுறேன்..."

வந்தார். கையில் ஒரு அட்டைப்பட்டி வைத்திருந்தார். அறையின் ஜன்னல்களெல்லாம் மூடினார்."இந்தாளு வர வர ஓவர் பில்ட்அப் கொடுக்கிறாரே"னு இருந்தது. அன்னைக்கு இப்படித்தான் ஏதோ ஒரு மொக்க படத்த பாத்துட்டு வந்து "இது ஒரு உலக சினிமா" னு பெனாத்துறார்.

"பாஸ் ..நாம என்ன சீன் படமா பாக்க போறோம். எதுக்கு இப்போ ஜன்னலெல்லாம் அடைக்குறீங்க". 

              

                                                                            


"பொறுடா..." என்றபடியே பைக்குள்ளேயிருந்த அதை எடுத்தார். பழுப்பு நிறத்தில் இருந்தது. முழுக்க மண்ணில் ஊறி இருந்த அடையாளம் தெரிகிறது. அத பார்த்தோனே கொஞ்சம் சீரியஸ்நெஸ் வருது.வேகமா அவர் பக்கத்துல போய் உட்கார்ந்தேன்.முதல் பக்கத்தை திருப்பினோம். "ஆதியானவன் அருட்சோதி என்னுள் எரியட்டும்- வள்ளுவக்கோமகன்" என்றிருந்தது.எழுத்துக்கள் ரொம்பவும் வித்யாசமாய் இருந்தது. அந்தக்காலத்து தமிழ்.

 "ஏங்க ஒருவேளை நம்ம திருவள்ளுவர் எழுதியதா இருக்குமோ" என்றேன். அவர் பேசாமல் அடுத்த பக்கம் திரும்பினார்.

"    ௧௨௨ - 0031
 பத்துவரியில் வெண்பா எழுவதாய் இருந்த முடிவை தற்சமயம் மாற்றி இரண்டுவரியில் எழுதச்சித்தம். வாசவிநறுமுகை கூட வெள்ளாமையை பார்த்துக் கொள்ளுங்கள் என வசைகிறாள்."

"நான் சொல்லல" ன்னேன். தாமதிக்காமல் அடுத்த பக்கத்தை திருப்பினோம்.

" ௧௨௨ - 0037
இன்று நீரிறய்க்கையில் நான் அழைப்பதை கேட்டு கோபம் கொண்டு அந்த தின்னமான குவளையை என் மேல் வாசவி வீசினாள். அவளது சினம் குறைய அந்த சித்தார்த்தனை வேண்டுகிறேன்."

"அடப்பாவிகளா..நம்ம கிட்ட வேற மாதிரி சொன்னாய்ங்களே " என்றார் சதீஷ். அடுத்த பக்கம் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

"௧௨௩ -0027
முன்பே சக்ரவர்த்தி இளமடற்கோ தன் சேந்தனபுற அரண்மனைக்கு அழைத்திருந்தார். முன்னூறு குந்தகை பயணஞ்செய்து வர ஒரு மாமாங்கம் ஆகும் என்பதால் மறுத்து விட்டேன். அரசன் என் உருவம் பார்ப்பதற்காக அரண்மனை ஓவியனை அனுப்பி இருந்தார். இன்று அவன் என்னை வரைந்து கொண்டு சென்றான். பார்ப்பதற்கு வாலிபன் போல் உள்ளீர் "தாடி மயிர்" இருப்பது போல் வரைந்து கொள்கிறேன்.என்றான். சரி என்று சொல்லிவிட்டேன்."

நானும் சதீஷும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டோம். 

" ௧௨௭ -0019
இன்று மெய்யம்மை அவள் வீட்டுக்கு வந்திருந்தாள். முதல் குழந்தையை பிரசவிக்க வந்திருக்கிறாள். அவள் பார்த்தாள். நான் அவளை பார்க்க முடியவில்லை. கண்கள் குளமானது. நான் கொடுத்த மயிலிறகுகளை வைத்திருப்பாளா தெரியவில்லை. குடில் வந்ததும் அதே கண்ணீருடன் அன்புடைமையில் ஒரு பா எழுதினேன்.
 
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும்"

'திருவள்ளுவருக்கும் ஒரு ஜெஸ்ஸி இருந்திருக்கா போல' என்றேன். நான் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை. "கவனிச்சீங்களா "சித்தார்த்தன்" ன்னு நடுவுல சொல்றாரு..அவரு பௌத்தர்னு ஒரு கூட்டம் சொல்றது உண்மையா இருக்குமோ..." என்றேன். "டேய் வாய மூடிட்டு இருடா..திருவள்ளுவர் சிலைக்கும் ஆப்பு வச்சிராதீங்கடா" என்றார் சதீஷ். நியாயம் தான்.

                                                 
"௧௨௭ -001
வானசாஸ்திரம் படிக்க லெமூரிய கண்டம் பயணப்படுகிறானாம் அருள்மடை. இங்கேயே காஞ்சிநாதரிடம் பன்மொழி பயிலலாமே என்றேன். மறுக்கிறான். கனியிருப்ப காய் கவர்ந்திற்று. மழலைகள் வளராமலே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்."

"௧௨௫ -041 
இன்று முழு வெண்பாமாலையும் முடித்து விட்டேன். வாசவி படித்து பார்த்து "பிடிக்கவில்லை" என்றாள். எனக்கு கவலையில்லை. மொத்தம் 1760 எழுதி விட்டேன். முதலில் 1330 பாக்களை அரண்மனைக்கு  அனுப்பி விட்டு, அவர்கள் விருப்பமறிந்து பின் மிச்சத்தை அனுப்ப உத்தேசம். கூட்டுத்தொகை ஏழு நல்லதென பொய்யாமொழி சொன்னார்."

நானும் சதீஷும் ஒருவரை ஒருவர் பார்த்தோம்."அப்போ மிச்சக்குறளும் இருக்குடா" என்றார். "ஒரு வேளை அதுவும் உங்க எடத்துல கெடச்சுதுனா..." என்றேன். சதீஷ் அவர் பைக்கை நோக்கி ஓடினார். நான் அவர் பின்னாலேயே ஓடினேன்.